ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -20-28–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட்செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல் நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு
இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத்கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-20-

இதில் அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே –
போம் வழியைத் தரும் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே
போய் புகுகிற தேச விசேஷத்தில்-சத்காரம் எல்லாம் ஒரு சிறாங்காய் என்னும்படி
அபரிச்சேத்யமான மார்க்க சத்கார ஸூகத்தை எல்லாம் அனுபவித்து
கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-அவன் முன்னே வழி நடத்த பின்னே போய்
விரஜ அம்ருதாகாரம் மாம் பிராப்ய மகா நதீம் -என்கிறபடியே
அம்ருத வாஹினியாய்-விரஜை என்னும் பேரை யுடைய சன்னதியிலே
தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர-நாம் அவஹாகித்து
அநந்தரம்
ஸ்வரூபத்துக்கு திரோதாயகமான பிராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பு திரு நாடு என்கிற பிராப்ய தேசத்தைக் கிட்டி
ஸ்வரூப ரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி
ஸூத்த சத்வமான அப்ராக்ருத விக்ரஹத்தை லபித்து
பஹூமந்தவ்யரான நித்ய சூரிகள் தாங்கள் பிரத்புக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து சத்கரிக்க-அவர்கள் உடனே கூட
திவ்ய மா மணி மண்டபத்திலே சென்று ஸ்ரீ யபதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -என்கிறபடியே
மடியிலே வைத்து-உச்சி முகர்ந்து உகந்து அணைக்கும் சம்பத்தை எதிராசரான ஸ்ரீ எம்பெருமானார்
இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

————————————————–

எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றேர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக
நம்முடைய ஆச்சார்யமான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –
பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் -ஆகையால் இது விஷயமாக –
நிர்ப்பயோ நிர்ப்பரோச்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே —21

ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று நிரூபகத்தை யுடையவராய் பின்பு ஸ்ரீ திருவாய்மொழியில் அவகாஹநத்தாலே
ததேக நிரூபணீயராய் இருக்கிற ஸ்ரீ பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே பிரசாதித்து அருளும்
பொருவில் மதி -என்னும்படியான தத் விஷய ஞானத்தை சாதனமாகக் கொண்டு
அந்த ஜ்ஞான பலமாக இப்படி மகோ உபகாரகராய் இருக்கிற
அந்த ஸ்ரீ பிள்ளையை-உத்தாரயதி சம்சாராத்தது பாயப்லேவே நது-என்கிறபடியே
சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமவராக-மனசே அத்யவசித்து இரு
இப்படி-நம் ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைக்காக எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
தாமே
ஸ்வ ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -என்று இருக்கிற நம்மை யேன்று கொண்டு
சீக்ரமாக ஏற்ற அரும் ஸ்ரீ வைகுந்தம் -யேன்று துஷ் பிராபகமாய் சொல்லப்படுகிற பரம பதத்திலே ஏற்றி அருளுவர்
மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –

மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து
அசிந்த்யஸ்த்வா பூமௌ-இத்யாதி
ப்ரபத்ய த்வாமத்ய -இத்யாதி-

—————————————————————-

என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாய தயதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –

தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22

ஸ்ரீ விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ கப்பல் ஏறி – விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் –
துயர் அறு சுடர் அடி -அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்-பரம பிராப்யம் –
தத் ஞானம் அஞ்ஞானம் அதோன்ய துக்கம் -என்றும்
வித்யான்ய அசிலபநை புணம்-என்றும் சொல்லுகிறபடியே-பகவத் அந்ய பரமாம் குற்றம் -அன்றிக்கே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே ஸ்ரீ யபதி விஷயமாக யுடைத்தாய்
அது தான் ததீய பர்யந்தமாக இருக்கிற ஞானத்தை யுடையராய்
அதுக்கு மேலே
வறை முருகலான ஆர்ஷ வசனங்களை த்ருணவக்கரித்து-ஸ்ரீ திருமால் அவன் கவியான ஸ்ரீ திருவாய் மொழியில்
அவகஹா நத்தை யுடையவர் ஆகையாலே அத்தை இட்டு நிரூபிக்கும்படியான ஆதிக்யத்தை யுடையரான
ஸ்ரீ பிள்ளையினுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
காமாதி தோஷ ஹரராய்-எதிகளுக்கு நாதராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய அபிமான ரூபமாய் இருப்பதாய்
இதம் ஹி வைஷ்ணவம் போதம் சமய தாஸ்தே பவார்ணவே-என்கிறபடியே
நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ போதத்தை ஆரோஹித்து
சம்சார சாகரம் கோரம் -என்று சொல்லப்படுமதான சம்சாரம் ஆகிற சமுத்ரத்தைக் கடந்து –
விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் – துயர் அறு சுடர் அடி –
அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்
வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

ஸ்ரீ பிராட்டி கடாஷத்துக்கு விஷயமான பின்பு ஸ்ரீ திருவடி
ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்ரீ பாத கூலம் மனஸா ஜகாம-என்று அடைந்ததாக அத்யவசித்தான் இறே-
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா -என்று தொடங்கி
உன் தேனே மலரும் திருப் பாதம் வினையேன் சேருமாறு நீ அருளாய் -என்று அர்த்திக்க வேண்டிற்று இறே
கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் என்னவுமாம்
ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

———————————————————-

கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –

அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒலி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை
மண் மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு எனக்கு எதிராசா —23

மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் போலே —

அடியேனுக்கு ஸ்வாமியாய்-எதிகளுக்கு நாதர் ஆனவரே
அடியார்கள் குழாங்கள் -என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த
ஸ்ரீ கருட
ஸ்ரீ விஷ்வக்சேன
பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச
ஸ்ரீ பரகால
ஸ்ரீ யதிவராதிகள்
தொடக்கமான முக்த வர்க்கமும்
மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே சேவித்து இருக்கிற
ஆனந்த மயாய மண்டபாத் நாயநம-என்கிறபடியே நிரஸ்த அதிசய ஆனந்த ஜனகமான
திரு மா மணி மண்டபத்திலே-அசேஷ சேஷ வ்ருத்திகளுக்கும்
சைத்ய மார்த்வாதிகளுக்கும் உபமானம் அன்றியிலே இருப்பதான திவ்ய பர்யங்கம் ஆகிற
ஆயிரம் பைந்தலைய அனந்தன் -என்றும்
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழும் மணிகள் விட்டு எரிக்கும் -என்றும்
தெய்வச் சுடர் நடுவுள் -என்றும் சொல்லுபடியான பணா மண்டலங்களின் ஜோதிர் மண்டலத்தின் நடுவே-

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்றும்
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் -என்றும் சொல்லுகிறபடியே
சௌந்தர்யத்தாலே மிக்கு சௌகுமார்யத்தை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் வலவட்டத்திலும்-
ஏவம் பூதைகளாய்
அவளுக்கு நிழல் போல்வனரான மற்றை ஸ்ரீ நாய்ச்சிமார் இடவட்டத்திலும் சேவித்து இருக்க
இவர்களுக்கு நடுவே
மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரைப் பூத்த தொரு காளமேகம்
வெள்ளி மலைக்கு இனியப் படிந்து இருக்குமா போலே
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற வாழ் புகழ் நாரணனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கால விளம்பம் இன்றிக்கே கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம்
இவன் இத்தைப் பெற்றிடுவான் என்று ஸ ஸ்நேஹமாக உபகரித்து அருள வேணும் –

என் எதிராச நல்கு -என்று இவ்விடத்தில் சம்போதிக்கவுமாம் -அடியிலே ஆகவுமாம்-

————————————————————————

இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

அடியேனுக்கு ஸ்வாமியாய் -எதிகளுக்கு நாதரானவரே –
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற இந்த ஸ்தூல சரீரத்தை
உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய் -என்கிறபடியே
அவன் மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
மற்றும் ஆதிவாஹிக புருஷர்களாய் யுன்டானவர்கள் லோகங்கள் எல்லாம் கடந்து
இமையோர் வாழ தனி முட்டை கோட்டையாய்
கோடி யோஜனமான வளப்பத்தை யுதைத்தான அண்ட கபாலத்தை பேதித்து-அத்தை ஒரு படி கழித்து
மத்யே யுண்டான தசோத்தரமான ஆவரண சப்தத்தையும் கடந்து
அவ்வருகே போய்
முடிவில் பெரும் பாழான மூல பிரக்ருதியையும் கடந்து அத்யந்த ரமணீயமாய் இருப்பதொரு விரஜை என்று
பிரசித்தமான அந்நதியிலே ஸ்நானம் பண்ணி-அவ்விடத்தில் அவமானவன் கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியுமாய்-என்கிறபடியே
பஞ்ச உபநிஷண் மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு வழி நடத்திப் போய்

ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திவ்ய நகரத்தை பிரவேசித்து பெரும் தெருவாலே உள்ளே போய்
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி சென்று
அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
மத தேவதை பரிஜனைஸ் தவ சங்கிஷீய-என்கிறபடியே நமக்கு சுவாமிகளாய் ஸ்ரீ யபதியுடைய திருவடிகளிலே
ந்யஸ்த பரராய் அதுவே நிரூபகமாய் இருக்கிற சூரி சங்கங்கள் உடன் கூடுகிற அந்த திவசமானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ -என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற எனக்கு
அது சமீபமாம் பிரகாரம் உபகரித்து அருள வேணும்
இவ்விடத்தில் நல்கல் -கொடுத்தல் –

———————————————————-

நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–

எதிகளுக்கு நாதரான தேவரீர் இவ்வாத்மாவை என்று நிர்ஹேதுகமாக இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி –
அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து தேவர்க்கே அனன்யார்ஹமாம் படி செய்து அருளிற்று
அப்படியே அபிமானித்து அருளின அன்று தொடங்கி தேவரீர் திருவடிகளை பிராபிக்க இருக்கிற இன்றளவும்
நிரந்தரம் அபராதமே இடைவிடாமல் செய்து
இப்படி அக்ருதயமானவற்றிச் செய்தோம் என்று அனுதவிப்பது –
இனி இப்படிப் பட்ட அபராதங்களைச் செய்யேன் என்று தேவரை அர்த்திப்பதாகிய
என்னுடைய க்ரூர கர்மம் கண்டு உபேஷியாமல்
இங்கும் திவா ராத்திரி விபாகம் அற தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம் கொண்டு அருளினீர்
அவ்வளவும் அன்றிக்கே
இன்று சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான ஸ் ரீதிரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு
பிரசாதிப்பதாக இச்சித்து அருளா நிற்கிறீர்
இப்படி செய்ய வேண்டியற்ற பின்பு காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

————————————————–

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –
இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ
இவர்கள் தான்-ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ
மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ
அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விவிபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனுஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ்வுலகை யலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் அதனை அவர்கள் அனுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-

பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான மனசே –
அத தேக அவதாநேச த்யக்த சர்வ இதர ச்ப்ருஹ-என்கிறபடியே இந்த கொடு வுலகில் ஹேயமாய் இருப்பதான
பிரகிருதி பிராக்ருதங்கள் எல்லாம் த்யாஜ்யம் என்று நேரே அறிந்த பின்பு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான அவற்றில் ஏக தேசமும் அங்கீகார போக்யமாக விசாரியாதே
ஸ்ரீ எம்பெருமானார்
நமக்கு பிராப்ய ருசியையும் உண்டாக்கி அருளி
இனி மேல் அருளகொடையாக அருளும் வானுலகமான அந்த லோகத்தையும்
அந்த லோகம் எல்லாம் நிறம் பெறும் படி
எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து -என்கிறபடியே
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
வல்லபனான வ்யாவ்ருத்தி தோற்ற அங்கே
திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் –

அச் சேர்த்தியில் அடிமை செய்கிற அடியார்கள் குழாங்கள் -என்கிற பிராப்யமானவவர்கள் சமூஹம் தன்னையும்
அவர்கள் ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ்வாத்மாவும் அதுக்கு பிராப்யனாய் வைத்து அத்தை இழந்து கிடந்தது என்கிறவற்றையும்
அத்யாபி அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய் கிடக்கும்-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே
க்ரூர கர்மத்தால் யுண்டான தேக விமோசனமாம் காலத்தையும்
தேக விமோசன அநந்தரம் பலிக்கும் நிரதிசய ஆனந்தத்தையும்-இப்படி உக்தங்களாய்
ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே
உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ்வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு
மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற அந்திமதசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

————————————————

செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28

நல்லடிக் காலமான பூர்வ காலத்திலே ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டமாய் இந்த பூ லோகத்தில் உண்டான சமஸ்த சேதனரும் உஜ்ஜீவிக்க
இவர்கள் இடத்தில் ஸ ஸ்நேஹமாக செய்து அருளும் பல பிரபந்தங்கள் தன்னை
தெரித்து எழுதி -வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63–
இத்யாதிப் படியே–ஆதார அதிசயத்தாலே
தேடி-கண்டவைகள் எல்லா வற்றையும் லிகித்து-அத்தை ஆச்சார்யா முகத்தாலே அப்யசித்து
தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ்விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –

திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே அஷ்ட திக்குகளில் உண்டானவர்களும்
தன் வைபவத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே
விலஷணமான பரம ஆகாசத்தையே ஒழிய இப்போது என்னுடைய மனசானது ஸ்மரியாது –

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –
இவ்விடத்தில் ஏகாரம் தேற்றத்தில் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: