ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -13-19–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீ எம்பெருமானார் யுடைய
சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
தாம் மங்களா சாசனம் பண்ணி

அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-

அவர் தாம் திருப் பல்லாண்டு முகேன
பஹூ பிரகாரமாக பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுவது எல்லாம்
தாம் இவ்விஷயத்திலே
எதிராசன் வாழி -என்று தொடங்கி
அத்தையே பலகாலும் சொல்லி-ஸ்துதித்து

அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்னுபடி சரம பர்வத்தில் நிஷ்டராய்
அத்தாலே
சாமர்த்தியமாக வாழுமவர்களுடைய திருவடிகளின் கீழே
தாய் நிழலிலே ஒதுங்குமா போலே ஒதுங்கி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னும்படி
அதுவே வாழ்வாக வாழுமவர்கள்

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களாய்-
அத்தாலே
அருள் கொண்டாடும் அடியவராய்-
அதிலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தராய்-
இருக்கிற ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும் பத்தும் பத்தாக பெற்று விடுவார்கள்-
தசமாம் தயோன-(ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -ஸ்ரீ பட்டர் பிரார்த்தித்த படி ) -என்னக் கடவது இறே

இத்தால்
இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே
மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை
அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

இதில்
அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

—————————————

தேசம் திகழும் -என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –

உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக

அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-

தண் அம் துழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் -(திரு விருத்தம் )-என்றத்தை
அர்த்தித்தவர்களுக்கு-
அருள் சூடி உய்ந்தவன் -(7-2-11 )-என்னும்படி
தாத்ருச அதிகாரம் உண்டானவர்களுக்கு அன்றோ
ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்கி அருளுவது

அப்படிப் பட்ட அதிகாரம் இல்லாத மாத்ருசர்க்கு அன்றோ எதிகளுக்கு நாதரானவரே
தேவரீர் இரங்கி ரஷித்து அருள வேண்டுவது

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும்
அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள்
எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

—————————————————–

ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி—–15-

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

இப்படி நிஸ் ஸ்நேஹியாக திருநாமம் சொல்லுகிற இத்தால்
சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது -என்கிறபடியே
விஷய அனுகுணமாக என்னுடைய ஸ்நேஹமானது
அவர் விஷயத்திலே சரம தசா பன்னமான இக்காலத்து அளவும்
பிரேம லேசமும் அற்று இருக்கிற நான் காண்கின்றிலேன் –
இனி இப்போது இல்லாது எப்போது யுண்டாகப் போகிறது –

(இந்த ப்ரபந்தமே மா முனிகள் சரம தசையில் சரம ப்ரபந்தமாக அருளிச் செய்தார் என்பர் )

இத்தால் என் என்று –
நிஸ் ஸ்நேஹியாய்த் திரு நாமம் சொல்லுகிற இத்தால்
என்ன பிரயோஜனம் -என்னவுமாம்

அடியிலே
ஸ்ரீ இராமானுசாய நம -என்று
உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று
பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்
வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

———————————————————-

நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன

அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –

ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16

மோகாந்தன் – மோஹத்தால் அந்தகன்-மயக்கத்தால் குருடன்

ஆகாதது ஈது என்று அறிந்தும்
சாதுக்களால் பரித்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம் இன்னது என்று தெளிய அறிந்தும்

பிறர்க்கு உரைத்தும் ஆகாததே செய்வனாதலால்
இப்படி அறிந்த அளவு அன்றிக்கே பரோபதேசம் பண்ணியும்
அந்த நிஷித்த கர்மம் தன்னையே நித்ய அனுஷ்டானமாக நடத்தா நிற்பன் –
இப்படி
சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே

மோகாந்தன் என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
மோஹாந்தகன் என்று திரு உள்ளம் பற்றி
உபேஷியாமல் ரஷித்து அருளுகிறவரே

இனி இஸ் சாதன அனுஷ்டானம் பண்ணின நான்
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -என்கிறபடியே
என்று தான் தேவர் திருவடிகளை அடையக் கடவேன்
இனி இழந்தே போம் அத்தனை அன்றோ

அன்றிக்கே
இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற
அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர்
ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

——————————————–

கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –17-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும்
அக்ருத ஸூக்ருதக–( வரதராஜ ஸ்தவம் ) இத்யாதிப் படியே அநாத்ம குண பரி பூர்ணனாய்
ஆத்ம குண லேச கந்த ரஹிதனாய்
அத்யந்த நிக்ருஷ்டனாய் இருக்கும் எனக்கும்

பிராப்யம் அர்ச்சி பதா சத்பிஸ் தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
சத்துக்களால் பிராபிக்குமதாய் இருக்கும் திருநாட்டை
நம்மோடு யுண்டான சம்பந்தம் அடியாக
நாமே தருகிறோம் என்று அருளிச் செய்த தேவரீர்

இப்போது தாழ்த்து இருக்கைக்கு ஹேது தான் என்ன –
வேறு சிலர் ரஷகர் யுண்டோ-
தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –
எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு
சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

—————————————————————-

இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-

எனக்கு ஜனகராய்-எதிகளுக்கு நாதரானவரே
தன்னுடைய ஆகாரத்தில் சற்றும் குறைதல் இன்றிக்கே
ஏவம் வித ரூபேண இந்த ஆத்மாவுக்கு
சர்வ காலத்திலும் ஞானோதய லேசமும் இன்றிக்கே
அஜ்ஞ்ஞான அந்தகாரத்தையே விளைப்பதான
பவ துர்தினம் -என்னும்படி-சம்சாரம் ஆகிற பெரிய நீள் இரவானது
அவிவிவேகக அநந்த திக்முகே (ஸ்தோத்ர ரத்னம் )-இத்யாதிப் படியே
பதச் கலிதனாய்-வழி திகைத்து-அலமருகின்ற எனக்கு
எந்த காலம் ஸ்வ தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதம் யுண்டாகுவது

அஜ்ஞ்ஞான திமிராந்தனான நான் –
ஏதத் விஷயமான பிரதிகிரியை ஒன்றும் அறிகிறிலேன்-

நிகில குமதி மாயா ஸர்வரீ பால ஸூர்ய–(யதிராஜ சப்ததி )என்னும்படி சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஸூ ப்ரபாதாத்ய ரஜநீ -என்னும்படி-
இதுக்கு ஒரு விடிவு கண்டு அருளிச் செய்ய வேணும் –

குன்றுதல் -குறைதல்
பவம் -சம்சாரம் –

——————————————————————-

கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது என் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-

உன் நாமம் எல்லாம் என் தன நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு -என்கிறபடியே
தேவரீர் உடைய திருநாம சங்கீர்த்த நாதி அனுபவ கைங்கர்யங்களுக்கு யோக்யமான காலம் எல்லாம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே
தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

அது எப்படி எனில்
ப்ரஹ்ம வித அக்ரேசராய் இருக்கிற சத்துக்கள் தங்கள் புத்ராதிகளை
அத்யந்த நிஹீநரான நீசருக்கு நிஹீன வ்ருத்திகள் செய்ய ஷமிப்பரோ –

இசை –
எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரானவரே
இத்தை தேவரீர் தாமே சம்மதித்து அருளீர் –

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே
அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: