உபதேச ரத்னமாலை –பாசுரம் -71/72/73– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

நாத்திகரும் -என்கிற பாட்டிலே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச் சொன்னவரை நாளும் தொடர் -என்று
அவர்களை விட்டு பற்றும்படியை அருளிச் செய்து
நல்ல மணம் -தீய கந்தம் -என்கிற இரண்டு பாட்டாலும்
அவர்கள் சேர்த்தியால் சேருமத்தை அருளிச் செய்து
இனி மேல்
முன்னோர் -பூர்வாச்சார்யர்கள் -இரண்டு பாட்டாலும்
அனுகூல பிரதிகூலரான அவர்கள் உபதேச பேதங்களும்
அவர்களில் ஸ்வரூப நாசகரான மூர்க்கருடைய ஸ்வரூப கதனத்தையும்
ஸ்வரூப வர்த்தகராய் இருப்பவராலே யுண்டான ஸ்வரூப லாபத்தையும் சொல்லித் தலைக் கட்டுகிறது –

அதில் இப் பாட்டில் –
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு -என்று சொன்ன
மூர்க்கர் ஆவார் இன்னார் என்று சொல்லுகிறார் ஆதல்
அன்றிக்கே –
ஆந்தர விரோதிகளாய் இருக்கிற இவர்கள் படியையும் தனித்து அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அத்தையும் அருளிச் செய்கிறார் ஆதலாகவுமாம்-

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்–71-

முன்னோர் மொழிந்த –
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் -என்கிறபடியே நமக்கு எல்லாம் பிரதமஜராய் இருக்கிற
ஸ்ரீ பெரிய முதலியார் தொடக்கமான ஆச்சார்யர்கள் ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அருளிச் செய்த
திவ்ய ஸூக்திகளை-
மொழிந்த என்றது மொழிந்தவை -என்றபடி

முறை -தப்பாமல் கேட்டுப் –
அப்படி ஹித ரூபமான வசனங்களை சிஷ்ய ஆச்சார்ய க்ரமங்களிலும் -சம்பிரதாய க்ரமங்களிலும்
ஒன்றும் தப்பாதபடி -சதாச்சார்யர்கள் சந்நிதியிலே கேட்டு -என்னுதல் –
அன்றிக்கே –
முன்னோர் மொழிந்த -முறை -தப்பாமல் கேட்டு –
என்று அவர்கள் தம் தாம் ஆச்சார்ய விஷயங்களை
உத்தாரயதி சம்சாராத் தத் உபாய ப்லவே நது-என்று உத்தாரகராகவும்
குருமூர்த்தி ஸ்திதி சாஷாத் பகவான் புருஷோத்தம -என்று அவதார விசேஷமாகவும் பிரதிபத்தி பண்ணி
தங்கள் சிஷ்யர்களுக்கும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போரும்
க்ரமங்களிலே ஒன்றும் தப்பாதபடி கேட்டு -என்னுதல்-

பின்னோர்ந்து –
சரவண அநந்தரம்-சாபேஷமான மனனத்தைப் பண்ணி –

தாமதனைப் பேசாதே —
உபதேச கர்த்தாக்களாய் வேண்டி இருக்கும் தாங்கள்
அப்படியே ஸ்ரவணாதி களாலே வைசத்யம் பிறந்து இருப்பதான அர்த்தங்களை
ஸ்ரோதுகாமர் ஆனவர்களுக்கு சொல்லாதே –

இவர்கள் உபதேசிக்கும் படி சொல்லுகிறது –
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி –
பிரமாண அநுசாரி அன்றிக்கே-ஏதத் விபரீதமாக தங்கள் யுடைய வக்கிர ஹ்ருதய உதிதமாய் இருக்கும்
அர்த்தத்தையே வாக்காலே சொல்லி -என்னுதல் –
அன்றிக்கே
ஆச்சார்ய விஷயத்தில் ஊற்றம் அற்று கேவலம் உபகார மாத்ரத்தையே அங்கீ கரித்து இருக்கிற தங்கள் யுடைய
சுஷ்க ஹிருதயத்துக்கு பிரதிபாசித்தத்தையே அர்த்தம் என்று சொல்லி -என்னுதலாகவுமாம் –
இப்படி துஷ்ட ஹிருதய தூஷிதமாய் இருக்கும் அத்தையே
உக்த்ய ஆபாசத்தாலே-உபதேசித்த மாதரம் அன்றிக்கே –

இது சுத்த யுபதேச பர வார்த்தை என்பார் –
ஆப்திக்கு யுடலாக இந்த அர்த்தமானது சுத்தமான யுபதேச மார்க்கத்தை யுடையது என்பார்கள் –
தாங்கள் சொல்லுகிற அர்த்தம் அசம்ப்ரதாயமாய் இருக்கச் செய்தேயும்-அத்தை விச்வசிக்கைக்கு ஈடாக
இன்னருளால் வந்த யுபதேச மார்க்கத்தை -என்னுமா போலே யாய்த்து
இவர்கள் தாங்கள் யுபதேசித்துப் போருவ்து-
இவர்கள் சர்வார்த்தங்களுக்கும் இப்படியே இறே விபரீதங்களைக் கல்ப்பிப்பது –
இவர்கள் ஆபாச உக்திகள் தான் பயிருக்குக் களை போலவும்
ஆதித்யனுக்கு மந்தேஹர் போலவும் பிரதிபாசித்து பிரணஷ்டமாய்ப் போமதாய் இருக்கும்
ஆகையால் தோற்றமாயுமது ஒழிய-நிலை நிற்பது ஓன்று அன்று என்று தோற்றுகிறது –
இது தான் தோற்றின போதே சொல்லிப் போந்தது இறே

இப்படி துர் உபதேஷ்டாக்கள் தான் ஆர் என்ன-ஸ்வ உபதேசாதிகளாலே முடித்து விடும்
மூர்க்கராவார் –
என்கிறார் –
முன் பின் பாராதவர்கள் இறே மூர்க்கர் ஆவார் –
இவர்கள் தங்கள் ஸ்வரூப அனுரூபமான நாமம் இது வாய்த்து –
இப்படி துர் உபதேசம் பண்ணுவார் மூர்க்கராவார் -என்னுதல்
மூர்க்கராவார் இப்படி துர் யுபதேசம் பண்ணிப் போருமவர்கள் -என்னுதல்

முன்னோர் மொழிந்த -இத்யாதிக்கு
நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளக் கருத்தை நன்றாக அறிந்து அதுக்குத் தகுதியாய் இருந்துள்ள
உக்தி அனுஷ்டானங்களை ஆசாரியாமல்
தங்கள் மனசுக்கு தோற்றினதே சொல்லும்-துஸ் ஸ்வ தந்திர பிரக்ருதிகளாய்
ஸ்வ ஆச்சார்யா விஷயத்தில் ஊற்றம் அற்று இருக்கும் கர்ப்ப நிர்பாக்யரான சுஷ்க ஹிருதயர்க்கு
நம் தர்சனத்தில் தாத்பர்யார்தமும்-தத் அனுரூபமான அனுஷ்டானமும் தெரியாது ஆகையாலே
மேல் எழுந்த வாரியான சிகப்பு போலே
இவ்வர்த்தம் நெஞ்சிலே நிலை நில்லாது -என்று இறே
அந்திம உபாய நிஷ்டையிலே அஸ்மத் பரமாச்சார்யரும் அருளிச் செய்திற்று-

—————————————————–

கீழே
தன் குருவின் தாளிணைகள் -என்று தொடங்கி
சரம சேஷி சரணங்களிலே சங்கம் இன்றியிலே இருக்குமவர்களுக்கு
பிரதம சேஷியான ஈஸ்வரன் ப்ராப்ய சித்தியை பண்ணானான் ஆகையாலே அத்தை அவர்கள் பிராபியார்கள் -என்றும்
இனி
ஞான அனுஷ்டான பூர்ணனான சதாச்சார்யன் யுடைய சமாஸ்ரயணத்தாலே
ஸ்ரீ யபதியானவன் தானே ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் என்றும்
இப்படியான பின்பு
உஜ்ஜீவன அபேஷை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் ஆச்சார்யர்கள் பாதத்தில் பக்தியைப் பண்ணுங்கோள்
கரதலாமலகம் போலே யுங்களுக்கு பரமபத பிராப்தி யுண்டாம் என்றும்
இப்படி ஆச்சார்யன் செய்த உபகாரத்தை அனுசந்தித்தால் அவனை விச்லேஷிக்க விரகு இல்லை என்றும்
அவ்வளவும் அன்றிக்கே –
அவனுடைய அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதனான இவனுக்கு பிரிய பிரசங்கம் இல்லை என்றும்
இப்படி சிஷ்ய ஆச்சார்யர்களான இருவரும் ஆத்மா தேஹங்களை ரஷித்துக் கொண்டு போரும் படியையும்
அதிலும் சிஷ்யனானவன் பிராப்ய தேசத்தில் விருப்பம் அற்று
அவன் திருவடிகளில் கைங்கர்யமே நிரதிசய புருஷார்த்தம் என்று ஆதரித்துப் போரும்படியையும்
அதுக்கு நிதர்சன பூதரான அனுஷ்டாதாக்களையும் –
இப்படி ஆச்சார்யர்கள் ஆதரித்துப் போரும் அனுஷ்டானத்தில் அஜ்ஞராய் இருக்குமவர்களுடைய உக்தி
பிரமஹேதுவாய் இருக்குமதாகையாலே
தன் நிவர்த்தகமான பூர்வர்கள் யுடைய அனுஷ்டானமே ஆதரணீயம் என்னுமத்தையும்
இப்படி அனுகூல பிரதிகூலரான உக்தரான இவர்கள் நிரூபண முகேன பரிக்ராஹ்யர் பரித்யாஜ்யர் என்னுமத்தையும்
இவர்கள் சஹவாசத்தால் பலிக்கும் சத் குண அசத் குணங்களையும்
ஏவம் பூதரான பிரதிகூலர் துர் உபதேஷ்டாக்களான மூர்க்கர் என்னுமத்தையும் அருளிச் செய்து-

இதில்
அனுகூலரான ஆச்சார்ய பரதந்த்ரருடைய உபதேசத்தாலே-ஆச்சார்ய அபிமானம் ஆகிற
மகா பலம் சித்தித்து வாழும்படியையும்–அருளிச் செய்யா நின்று கொண்டு
ஸ்ரீ வசன பூஷன தாத்பர்யார்த்தங்களை சங்க்ரஹித்து அருளிச் செய்கிற இவர்
அடியிலே
பின்னவரும் கற்க உபதேசமாகப் பேசுகின்றேன் -என்று உபக்ரமித்து
அந்த பரோபதேசத்தை இவ்வளவுமாக நடத்தி-அத்தை உபசம்ஹரித்து அருளுவாராய்
உஜ்ஜீவன அபேஷை யுடையவர்களைக் குறித்து
பூர்வாச்சார்யர்கள் யுடைய ஞான அனுஷ்டான பிரதிபாதகங்களான
ஆப்த வசனத்தால் விச்வசித்தவராய்
ஞான பிரதானாதி முகேன ரஷித்துப் போரும் பெரு மதிப்பனான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து
அஞ்ஞானவஹமான சம்சாரத்திலே ஆனந்தத்தை யுடையவராய்
நீங்கள் வாழுங்கோள் என்று தலைக் கட்டி அருளுகிறார் –

பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து—72-

வாழுகைக்கு அடி சொல்லுகிறது –
பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு -என்று
அதாவது
தத்வ யாதாம்ய வித்தமரான ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடக்கமாக
இவ்வருகு உள்ள பூர்வாச்சார்யர்கள் யுடைய
நிர்மலமாய் இருப்பதான யாதாம்ய ஞானம் என்ன –
தத் அனுரூபமான மறுவற்ற அவர்கள் அனுஷ்டானங்கள் என்ன
இவற்றை ஆச்சார்ய ப்ராப்திக்கு ஹேதுவாக ஹிதம் சொல்லுமவர்கள் யுடைய வார்த்தைகளைக் கொண்டு

நீர் -தேறி –
சாஸ்திர ஞானம் போலே புத்தேஸ் சலன காரணமாய் இராதே-சித்த நைர்மல்யத்தைப் பண்ணுமதாய்
ஸூகரமாய் இருப்பதொரு வார்த்தைகளைக் கொண்டு
அதாவது
கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் போது சுள்ளிக் கால் வேண்டுமா போலே
ஆச்சார்ய அந்வயத்துக்கும் இது வேண்டும் என்று அறிந்து-இத்தை ஹித ரூபமாய் கொண்டு -என்கை –

போதம் அனுட்டானம் -என்றது
ஞானம் அனுஷ்டானம் -என்றபடி – போதத்தை போதம் என்கிறது –

கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி –
சாஸ்த்ரங்களை எல்லாம் வரை அடைவே கற்றாலும் அதில் ஆஸ்திகராய் தெளிவு பிறந்து
உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கும் –
அந்த சாஸ்த்ர அர்த்தங்களை அனுஷ்டிப்பாரை பின் சென்று இருக்குமவர்கள் யுடைய வார்த்தை
ருசி விச்வாசங்களை யுடையராய் தெளிவு பிறந்து உஜ்ஜீவிக்கைக்கு யுடலாய் இருக்கும்
ஆகையால் உஜ்ஜீவிக்க வேணும் என்கிற நீங்கள் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு
அத ராம பிரசன்னாத்மா ஸ்ருத்வா வாயு ஸூ தஸ் யஹா -என்கிறபடியே
ஆஸ்ரயணதுக்கு முன்பே சத்தை யுடையராய்
அந்த சத்தா சம்ருத்திகளுக்கு உறுப்பாக சதாச்சார்யா சமாஸ்ரயணத்தை பண்ணி
தத் ஆஸ்ரயண பலத்தையும் இங்கேயே அனுபவியுங்கோள்-

நீர் தேறி –
கலங்கின நீர் தெளியுமா போலே
அசித் சம்சர்க்கத்தாலே கலுஷமநாக்களாய் இருக்கிற நீங்கள் மந்த்ராக்ராயமான அவர்கள் வார்த்தை யாகிற
தேற்றாம் விரையாலே தேற்றப் பட்ட தெளிவை யுடையராய்
அந்தத் தெளிவுக்கு அனுகுணமாக ஆச்சார்ய சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அத்தால் வரக் கடவ பலத்தையும் ப்ரத்யஷமாக புஜியுங்கோள்-
நீங்கள் அவர்கள் போதத்தால் தேறி-அனுஷ்டானத்தாலே தேசிகனைச் சேருங்கோள் –
தமேவ குரு மாப் நுயாத்-என்னுமா போலே –
ஆகையால் அவர்கள் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானத்தையும் அதடியாக
ஆச்சார்ய அனுவர்த்த நாதிகளையும் பண்ணிப் போந்தவர்கள் அனுஷ்டானத்தையும் கேட்டால்
மன பிரசாதம் யுண்டாய்
அதடியாக ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் பண்ணி
தத் பிராப்தி பலத்தை லபிக்கலாமாய் இருக்குமே இவர்களுக்கு-

இனி இப்படி ஆப்த வசன அபிஞ்ஞராய்க் கொண்டு -ஆச்சார்ய சமாஸ்ரயணம் பண்ணுமவர்கள்
பெரும் பேற்றைச் சொல்லுகிறது –
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து இருள் தரும் மா ஞாலத்தே நீர் இன்புற்று வாழும் –என்று
அதாவது –
ஞாநாதி பரி பூரணன் ஆகையாலே
ஞான பிரதாநாதிகளைப் பண்ணி ரஷிக்கும் மஹா உபாகாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து –
அந்த ராஜ குல மகாத்ம்யத்தாலே அஜ்ஞாநாவஹாமுமாய்
இல்லை கண்டீர் இன்பம் என்னும் படி
ஸூக லேசா ரஹிதமான சம்சாரத்தில்
தெளி விசும்பு திரு நாடு ஆன-நலமந்த மில்லதோர் நாட்டில் யுண்டான அந்தமில் பேரின்பம் ஆகிற
நிரதிசய ஸூக ரூபமான ஆனந்தத்தை யுடையராய் வாழுங்கோள் என்கை –

நீர் வாழும்
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறே -என்கிறபடியே
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற பெறுதற்கு அறிய பேற்றை

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் செய்து –
அந்த கைங்கர்ய ரூப சம்பத்தைப் பெற்று அதில் ரசிகராய் வாழுங்கோள்-
சம்பத் அடியாக இறே வாழ்வது –

இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் –
தேசாந்தரே-தேகாந்தரே வாக அன்றிக்கே-இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -என்னும் படி
இந்த தேசத்திலே-இந்த தேஹத்தோடே இருந்து
ஆச்சார்ய அபிமானம் ஆகிய நிலை நின்ற சம்பத்தைப் பெற்று வாழுங்கோள் –
மோதத்வம் -என்னக் கடவது இறே-

பின்னவரும் கற்க யுபதேசமாகப் பேசுகின்றேன் -என்கிற இவருடைய வார்த்தையை
நீர் வாழும் -என்கிற வாழ்வோடு தலைக் காட்டிற்று –

ஆகையால்
ஆச்சார்ய சமாஸ்ரயணம் -என்றும்
வாழ்வு -என்றும்
இரண்டு இல்லை இறே –

இத்தால்
ஆசார்யச்ய பிரசாதேன மம சர்வே மபீப்சிதம் ப்ராப்னுயா மீதி விச்வாசோ
யச் யாஸ்தி சஸூ கீபவேத் -என்கிற பிரமாண அர்த்தம் சொல்லப் பட்டது ஆய்த்து-

—————————————————-

நிகமத்தில்
சத் சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான சகலார்த்தங்களையும் சர்வருக்கும் உபதேசிக்கக் கடவோம் -என்று
உபக்ரமித்து அப்படியே அது அடையவும் நடந்து போந்த இப் பிரபந்தத்தை நிகமித்து அருளி
இப் பிரபந்த அந்வயம் யுடையவர்கள் யுடைய பலத்தையும் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

சகல பிரபந்த வ்யாவ்ருத்தமான இந்த ஸ்ரீ உபதேச ரத்ன மாலை யாகிற பிரபந்தம் தன்னை
மனசிலே சர்வ காலமும் மனனம் பண்ணுகிறவர்கள்
நமக்கு சேஷியான ஸ்ரீ எம்பெருமானார் யுடைய நிர்ஹேதுக கிருபைக்கு சர்வ காலத்திலும் விஷயமாய்
வ்யாவ்ருத்தமாக ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யாதிகளைப் பெற்று ஸூகிக்கப் பெறுவார் என்கிறார் –

இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் –73-

இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச் –
கீழ் அடங்கலும் சிம்ஹாவா லோகன நியாயமாக கடாஷித்து –
இந்த -என்கிறார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்து மாலை போலே இதுவும் ஒரு ரத்ன மாலை இருந்த படியே
என்று தமக்கு ஆதரணீயமாய் இருக்கிற படி –
இது தான்
உபதேச அர்த்தங்களான ரத்னங்களாலே செய்யப் பட்டதாய் இருக்கை-
மாணிக்க மாலை –
நவ ரத்னமாலை – என்னுமா போலே உபதேச ரத்ன மாலை -என்று இதுவே நிரூபகமாய் இருக்கும்படி –

உபதேச ரத்ன மாலை -என்கையாலே
உபதேச பரம்பரா பிராப்தங்களாய் வந்த அர்த்த விசேஷங்கள் ஆகையாலே
தொடை யுண்டு இருப்பதாய் இருக்கை-
மாலை தான் தொடை யுண்கிறவற்றில் ஓன்று குறைந்தாலும் பேர் இழவாக இருக்கும் –
அப்படியே இதுவும் குரு மா மணி யான புருஷ ரத்னங்களாலே கோப்புண்டதாய் இருக்கும் –
அதாவது
ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை அளவாக
சத் சம்ப்ரதாயத்தில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே
நன்றாக நடந்து போந்ததாய் இருக்கை –
ஸ்ரீ திருவருள் மால் -என்று தொடங்கி
ஸ்ரீ திருமலை யாழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே -என்றும்
ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பாம் -என்று தொடங்கி
ஸ்ரீ அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் சொல்லக் கடவது இ றே –
இது தான்
மாலா லஷணங்களை யுடைத்தாய் இருக்கும் என்னுமது
இவர் சேர்த்து அருளின சேர்வையிலே காணலாய் இருக்கும் இறே –
அதுதான்
ஆழ்வார்கள் பதின்மரையும் ஒருகையாகவும்
ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்களை நடு நாயகமாயும்
நாதமுனி முதலான நம் தேசிகர் -என்று தமக்கு முன்பு யுண்டான ஆச்சார்யர்கள் எல்லாரையும் ஒரு கையாகவும்
இப்படி எல்லாரையும் சேர்த்துப் பிடித்து ஒரு மாலையாம் படி செய்து அருளிற்று-

ஏவம் வித லஷணத்தை யுடைய இந்த மாலையை –
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –
மாலையானது மார்புக்கு அலங்காரமாய்-தரிக்கப் படுமதாய் இருக்கும்
மார்வத்து மாலை -என்னக் கடவது இ றே
உபதேச ரத்ன மாலை தன்னை தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் -என்றும்
உபதேச ரத்ன மாலாமிமாம் தததியோஹ்ருதயேன நித்யம் -என்றும் சொல்லுகிறபடியே
இதுவும் மனசுக்கு அலங்காராய்-தரிக்கப் படுமதாய் இருக்கும் –
மார்பும் மனசும் சேர்ந்து இறே இருப்பது –

மாலை தன்னை -சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –
இது தான்
பெரு விலையனான-மதிக்கப்படுமதான ஸ்ரீ ரத்ன மாலை யாகையாலே
இத்தை வாடா பூ மாலை போலே நாடொறும் பூண்டு இருக்கலாய் இருக்கும் –
இப்படி விலஷண ஜனஹ்ருத்மான இவ்வர்த்தம் மநோ ஹரமாய் இருக்கையாலே
இத்தை சர்வ காலத்திலும் மனனம் பண்ணும் படியாய் இறே இருப்பது –
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்னக் கடவது இறே –

இப்படி மனனம் பண்ணுவார்க்கு ஒரு பலம் வேணுமே
அந்த பலத்தை இன்னது என்று உப பாதிக்கிறது மேல் –
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
அதாவது
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் பிராப்தி சொல்லும் படியான ஆப்தியை யுடையரான ஸ்ரீ எம்பெருமானாருடைய
அஹேதுகமான அபார காருண்யத்துக்கு பாத்திர பூதராய் வாழப் பெறுவார்கள் –
வளர்த்த இதத் தாய் -என்னும்படி
இந்த தரிசனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்து -அருளினவர் ஆகையால்
தர்சன தாத்பர்யங்களை எல்லாம் பிரதிபாதிக்குமதான
இப் பிரபந்த அந்வயம் யுடையவர்களுக்கும் பல ப்ரதர் இவர் -என்கை-
இது தான் ஸ்ரீ ஆழ்வார்கள் அடியாய் இருக்கையாலே இதன் வாசி அறிந்து பரிபாலிப்பார் இவர் இறே
இத்தை இவர்கள் நாளும் சிந்திக்கையாலே அருளும் இவர் பக்கல் என்றும் உண்டாய் இருக்கிறபடி –

எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி –
ஸ்ரீ அருளாழி யம்மான் -ஸ்ரீ ஈஸ்வரன் அருள் மறுத்த காலத்திலும்
உன் அருளின் கண் இன்றி புகல் ஒன்றும் இல்லை -என்றும்
எதிராஜ தயாம்புராசே தஸ்மாத் அநந்ய சரணம் -என்றும் ஒதுங்கும் படி புலகாய் இருக்கிற அருளுக்கு –

என்றும் இலக்காகி –
எந்தையான முறையாலே மாறாதே இருக்கிற அவருடைய கருணா கடாஷத்துக்கு
நித்ய லஷ்ய பூதராய்-

சதிராக வாழ்ந்திடுவர் –
மாசதிரான -ஸ்ரீ பகவத் நிர்ஹேதுக கிருபையை பெற்று வாழும் அதிலும் சதிராக வாழ்ந்திடுவர்
ஆளுரியனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று இறே
அபிமான நிஷ்டர் வார்த்தை இருப்பது –

சதிராக வாழுகை யாவது –
ஸ்வ தந்த்ரனான ஸ்ரீ ஈஸ்வரனுடைய கிருபைக்கு விஷயம் ஆனவர்களைப் போலே
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே யடைய யருளாய் -என்றும்
பயாபயங்களோடே வர்த்திக்கை அன்றிக்கே
இவருடைய அபிமானத்து விஷயம் ஆனவர்கள் த்ருஷ்டாத்ருஷ்டங்கள் இரண்டிலும்
ஒரு கரைசல் அற்று மார்விலே கை வைத்துக் கொண்டு
நிர்ப்பரோ நிரபயோச்மி-என்கிறபடி நிர்பரராய்
வையம் மன்னி வீற்று இருந்து -என்றபடி -வ்யாவ்ருத்தராய்
ஞாலம் புகழும் படி இருள் தரும் மா ஞாலத்திலே இன்பம் உற்று வாழும் பேறு பெறுவார்கள் –
அதாவது
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமனசன் அடிப் பூ மன்னவே -என்கிறபடியே
ஸ்ரீ ஜீயராலே ஸ்ரீ ரத்ன மாலை பூட்டப் பட்டவர்கள்
ஸ்ரீ எம்பெருமானாராலே பூ முடி சூட்டப் பெற்று வாழப் பெறுவார்கள்
வாழ்வுக்கு அடியாவது முடியும் மாலையும் இறே –
அடி சூடும் அரசு -என்னுமா போலே
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீடு -என்று இறே தந் நிஷ்டர் யுடைய பிராப்ய வேஷம் இருப்பது —

ஸ்ரீ மத பாதார விந்த யுகளம் சிரஸி க்ருதம் த்யாத்வாம்ருத
சாகராந்தர் நிமக்னச் சர்வாவயவஸ் ஸூ கமாசீத்-என்று இறே அவருடைய பிராப்யம் இருப்பது –
அதன் எல்லை நிலம் இறே இது –
ராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ-1-என்றும்-
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது
இராமானுச இவை ஈந்து இருளே -75 -என்னக் கடவது இ றே –
இத்தால்
எம்பெருமான் யுடைய கிருபைக்கு இலக்கு ஆனவர்கள்
உந்தன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி 107-என்கிறபடியே
இவர்க்கு பாதச்சாயாதிகள் போலே பரதந்த்ரர் ஆகையாலே அவருடைய திருவடிகளான
தன்னாரியனுக்கு இந்நாடு தனில் இருக்கும் நாள் -ஆனவடிமைகள் செய்து வாழப் பெறுவார்கள் -என்றபடி –

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை
உற்றாட் செய்ய விராமானுசன் தன் தகவால் என்னை உற்றான் 97–என்னக் கடவது இறே –
அல்லாத போது பிராப்ய பிராபகங்களுக்கு ஐக்யமில்லை -என்று இறே அருளிச் செய்தது –
த்வத் தாஸ தாஸ கண நா சரமாவதௌ யஸ் தத்தாஸ் சதைகரசதா விரதா மமாஸ்து -என்று இறே
ஸ்ரீ ஜீயர் தாமும் பிரார்த்தித்து அருளிற்று –
இவர் தாம் -ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை மாதகவால் வாழும் மணவாள மாமுனி -இறே

அன்றிக்கே
பரம் தாமம் என்னும் திவம் தரும் -என்றும்
தன்னை எய்தினர்க்குத் தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரணம் கொடுத்தே -என்றும்
சொல்லுகிறபடியே -அவர் யுடைய பிரசாதம் அடியாக
பிராப்ய பூமியான பரம பதத்திலே பகவத் அனுபவ கைங்கர்யங்களைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழப் பெறுவார்கள் -என்றுமாம் –

பாவளரும் தமிழ் மாலை பண்ணிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் திருமகளால் அருள் பெற்று பொன்னுலகில் பொலிவர் தாமே -என்னுமா போலே

ஞானம் அனுட்டானம் என்று தொடங்கி –தானே வைகுந்தம் தரும் -என்றும்
உய்ய நினைவு யுன்டாகில் -என்று தொடங்கி–பரமபதம் உங்களுக்காம்-என்று இறே
ஆச்சார்ய அபிமான நிஷ்டர் யுடைய பிராப்ய வேஷத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ததும் –

மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும் வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே -என்று
தாமும் மநோ ரதித்து அருளினார் இறே –

வாழ்ந்திடுவர் தாமே –
பகவத் அபிமான நிஷ்டராய் இருக்குமவர்களில் வ்யாவ்ருத்தராய் இருக்கும் தாங்கள் –

எந்தை எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி என்றும் வாழ்ந்திடுவர் –
இங்கு ஒரு கால் ஸ்ரீ எம்பெருமானார் யுடைய அருளுக்கு இலக்கானவர்கள் அங்கே நித்ய கைங்கர்ய
நிரதராய் வாழப் பெறுவார்கள் –

அருளாலே அடியேனை அபிமானித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள -என்னக் கடவது இறே –

என்றும் சதிராக வாழ்ந்திடுவர் –
அதர பரத்ர சாபி -பிப்படியே அங்கே போனாலும்
அவர் உகந்த விஷயம் என்று அவனை அனுபவிக்குமது ஒழிய தங்கள் உகப்புக்கு ஈடாக அனுபவிக்கிற இன்பம்
இன்றிக்கே இருப்பார்கள் –

வாழ்ந்திடுவர் –
வாழ்கையில் சம்சயம் இல்லை –
நிஸ் சமயமஸ்து தத் பக்த பரிசர்யார தாத்மானம் -என்னக் கடவது இறே –

என்றும் சதிராக வாழ்ந்திடுவர் –
இவர் கிருபா பலமாக பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும் ஸ்வரூப அனுரூபமான மங்களா சாசன ரூப கைங்கர்யத்திலே அந்வயித்து வாழப் பெறுவார்கள் –

ஆளுமாளார் -என்று இருக்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கா வாய்த்து
ஸ்ரீ பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது -என்று இறே அருளிச் செய்தது
ஆகையால்
திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்குகை-இவருக்கு பணி இறே –
இது இறே சாஷாத் பலமாயிருப்பது –

ஆக
இப் பிரபந்த ஆரம்பத்திலே
எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் -என்று உபக்ரமித்ததற்குச் சேர
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி -என்று பல வேளையிலும்
அப்படியே அருளிச் செய்து தலைக் கட்டினார் ஆய்த்து –

————————————————————

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் –

————————————————————-

சடரிபு பாத பத்ம ப்ருங்கோ வரவர யோகி கதாம் ருதாந்தரங்க
அகதய துபதேச ரத்ன மாலா விவ்ருதி ஸூதாம் ஜனதார்ய யோகி வர்யா-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: