உபதேச ரத்னமாலை –பாசுரம் -62/63/64/65- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-ஆச்சார்ய சமபந்தத்தாலும் அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய நிஷ்டராய் ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில்
நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –

உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-

உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே -என்கிறபடியே உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாதரம் யுண்டாகில்
மனஸ் சஹாகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ய பிரசங்கம் இல்லை-
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-

இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –
உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –

அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூச்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்பாதித்து அருளுகிறார் ஆகவுமாம்-
நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன

மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –
பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –

மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷகண சன்னிதௌ -என்று
அந்த மகா பரிஷத்திலே சத்யா வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –

இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-அடியிலே அன்பு யுண்டாகையாலே
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் -என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –

மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -என்றும் –
தயா சஹா ஸீ நமனந்த போகி நீ-என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீ நம் -என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை -என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிற வனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோக தர்மாப் நோதி-என்கிறபடியே சித்திக்கும் –
இது தான்
ஏவம் வித் பாதேனா த்யாரோஹதி -என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக லபிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –

பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம் –
ஸ்வசம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று

அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும் -என்றும்
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -என்றும்
இவர்களுக்கு கரதலாமலகம் போலே
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –

கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்

பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -என்னும் படியான மைப்படி மேனி இறே –

பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ்வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –

உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா -அவன் தானே தரவும் வேண்டா –
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களைதாயே இருக்கும் –
புன்க்தேபோகா நவிதித நிருபஸ் சேவை கச்யார்ப்பகாதி -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்மதன்றோ தாயமுறை தான் -என்றும் சொல்லக் கடவது இறே –

உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –

பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பத்தி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —

——————————————————————————-

கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில் இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யன் யுடைய மனஸ் தான்
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே அது -என்னும் அத்தனை –

தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –

உபகாரமானது –
ஆத்ம நோஹ்யதி நீ சஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தார மாசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்
உனக்கென் செய்கேன் -என்றும் இப்படி ஈடுபடும்படி
பெரு நல உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –
ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –

இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –
தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து -என்றும்
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –

இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –
தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்யா சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல் க்ருதஞ தாபல பிரத்யுபகார
சாபேஷமான மனஸ் ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது
இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ் சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு -என்னும்படி பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
ஆகையால்-உபகார ச்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -என்கிறபடி
சஹவசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விச்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே
அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-

இனி
விச்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விச்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத பாபம்-என்னும் படியான
கருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விச்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –

இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஞராய் இருக்குமவர் ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –

நித்யம் குரும் உபாசீத -என்கிற சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்யா வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –

அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்யா பதச் சாயையிலே இருந்து-பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய்
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –

இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –

————————————————

கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால் அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய பிரசங்கம் இல்லை என்கிறார் –

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-

தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய் தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது
அந்நாட்டிலே போனால் எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –

நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -என்றும்
குருக்களுக்கு அனுகூலராய் -என்றும் சொல்லக் கடவது இறே –
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-

அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும் சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் பாடலாய் இருக்க –

அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –
ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான சத்தை யுடையராய் இருக்கிற
ஆச்சார்ய பர தந்த்ரரில்–அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –
அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில்
அத்தனை போக்கி –அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும் ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது
அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது – சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –

மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உந்தனக்கே யாட்கொள்ளு உகந்து -என்று ஆதரித்து போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –
இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே
தம் திரு உள்ளத்திலே பரிவு தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –
அந்த அனந்தரத்திலே–எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் -என்றும் அருளிச் செய்தாராம் –

ஆக இத்தால்
தத் பதேச வைக தாரகராய் இருக்கும் ஆச்சார்யா பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விச்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-

————————————————————–

கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும் கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை
அருளிச் செய்து–அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான ஸ்வரூப தேக சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும் அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும் அருளிச் செய்கிறார்
இதில் –

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதான முகத்தாலே
நல வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –

தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் -அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களா வஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –

ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும் இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –

ஆசை யுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்தோ ந ஸூ யா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன் தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–ஸ்நிக்தோஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –

ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய் இப்படி ஊணும் பூணுமாய் இருக்கும் என்னுமது தோற்றுகிறது

சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
ஷணேபி தேயத் விர ஹோதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விச்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –

என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள் சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த சூஷ்ம ஞானத்தை சாஸ்திர முகத்தாலும் சதாச்சார்யா வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –

ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –

கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில் நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –

ஆகையால்
ஆச்சார்யா பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: