உபதேச ரத்னமாலை –பாசுரம் -50/51/52- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

இனி ஸ்ரீ வகுள பூஷண திவ்ய பிரபந்த வியாக்யான அநந்தரம் அதில் தாத்பர்யமான
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டா க்ரமங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று அதுக்கு அடி கோலுகிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் பிரஸ்துதமான ஸ்ரீ நம் பெருமாள் தொடக்கமான அவர்களுக்கு அதிசயமான திரு நாமங்கள் வருகைக்கு ஹேதுவையும்
அந்தப் பிரசங்கத்திலே ஸ்ரீ நம்பிள்ளை என்று பிரஸ்துதரானவர்க்கு ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற திருநாமம் வருகைக்கு ஹேதுவையும்
அந்த திரு நாமமானது ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யருக்கு பிராப்தமாய்-அவரடியாக எங்கும் வந்து பரந்த படியையும்
ஓர் ஒரு பாட்டாக மூன்று பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அதில் இப்பாட்டில்
முன்பு சொன்ன ஸ்ரீ நம் பெருமாள் தொடக்க மானவர்க்கு அதிசயமான திரு நாமங்கள் வருகைக்கு
அடி இன்னது -என்கிறார் –

நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று——-50-

நம் பெருமாள் –
அதாவது-இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்னும் படி
ஆச்சார்யர்களுக்கு அனுபாவ்யரான ஸ்ரீ நம் பெருமாள் –

நம் ஆழ்வார் –
ஸ்ரீ முகில் வண்ணன் அடி இணையை அடைந்து அருள் சூடி உய்ந்த -ஸ்ரீ நம் ஆழ்வார் –

நஞ்சீயர்-
ஸ்ரீ நம் பெருமாள் திருக் குமாரரான ஸ்ரீ பட்டராலே விஷயீ க்ருதரான ஸ்ரீ நஞ்சீயர் –

நம்பிள்ளை –
ஸ்ரீ நஞ்சீயராலே விசேஷ அபிமானம் பண்ணப் பெற்றவராய்
ஸ்ரீ நம் பிள்ளை கோஷ்டியோ நம் பெருமாள் கோஷ்டியோ -என்று விகல்பிக்கும் படி அத்தலைக்கு
மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஆள் தேடுகையால் வந்த மகா சம்ருத்தியை யுடைய ஸ்ரீ நம்பிள்ளை –

என்பர் –
என்று சொல்வார்கள்-என்பர் அன்புடையோர் -என்று கூட்டக் கடவது-
அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் தான் என்று –
அவர் அவர்கள் உடைய ஆதிக்யத்தாலே அவர்கள் இடத்திலே அதி ஸ்நேஹத்தை யுடையவர்கள்
அவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து சாத்தின திரு நாமங்கள் –

தான் என்று –
இவையும் சில அதிசயமான திரு நாமங்கள் இருந்த படி
என் தான் என்று –
இன்று அதனைச் சொல்லி நீ ஏத்து -என்று மேலே அந்வயம் —

அன்புடையோர் சாத்துகை யாவது –
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்று அருளிச் செய்தார் இறே –
முன்பு ஒரு காலத்திலே ஒரு கலபையிலே க்ரூரராய் இருப்பார் சிலர்
ஸ்ரீ பெருமாளையும் அத்தேசத்தில் உண்டான ஸ்ரீ எம்பெருமான்களையும் கொண்டு போந்து –
கெட்டேன் -என்னும்படி -வாரி வடக்கே கொண்டு போக
அப்பொழுது ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு போர நல்லராய் இருக்கிற
ஸ்ரீ ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளைப் பிரிய ஷமர் அன்றிக்கே

இது நிலம் கை துழாவிக் கொண்டு போய்
அங்கே சென்று அவனைக் கண்டு தம்முடைய நுடங்கு கேள்வி இசை -என்னலாம் படியான பண்களாலே
அவனைப் பண்படுத்த -அவனும் அதி ப்ரீதனாய்
உமக்கு வேண்டுவது என் என்ன –
நம்முடைய ஸ்ரீ பெருமாள் இங்கே வந்தார் அவரைத் தர வேணும் -என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களையும் கொடு வந்து காட்ட -அப்பொழுது அவர்கள் நடுவே தேடிக் காணாமல்
சிந்திக்கும் திசைக்கும் இத்யாதிப் படியே கிலேசித்து இருக்க –
அப்பொழுது அவனுடைய பெண் பிள்ளை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளான இவரைத்
தம் அந்தப்புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்சேதியை அறிந்த அவன்
அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் -என்று காட்டிக் கொடுக்க
ஸ்ரீ ரெங்க நாத மம நாத -என்றும்
அரங்கமாளி என்னாளி -என்றும்
என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளை அதி ப்ரீதியுடன்
இவர் தாம் ஸ்ரீ நம் பெருமாள் -என்று அணைத்துக் கொண்டு
அதி த்வரையுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று பிரசித்தம் இறே
அப்போது அனைவரும் ஸ்ரீ பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
ஸ்ரீ ஆயி ஆழ்வார் பிள்ளையும் -இவர் நம்முடைய பெருமாளாம் -என்று மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அவருக்கு அதுவே நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் –

இனி ஸ்ரீ நம் ஆழ்வார் -என்ற திரு நாமம் ஆகைக்கு அடி முற்காலத்திலே ஸ்ரீ பெருமாள் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ நம் ஆழ்வார் என்று அபிமானித்து அருளி
பெரிய திரு அத்யயனத்துக்கும் அப்படியே திருமுகம் எழுதி
ஸ்ரீ திரு நகரிக்குப் போக விட்டு அருளுவர் என்றும் உண்டு இறே –
அதுவும் அன்றிக்கே –
ஒருகால் மலை நாட்டிலே ஸ்ரீ பெருமாள் வலசையாக எழுந்து அருளின போது
மற்றும் உண்டான ஸ்ரீ திருப்பதியில் எம்பெருமான்களும் ஸ்ரீ ஆழ்வாரும் அங்கே யாத்ருச்சிகமாக சங்கதராக
அப்போது ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை பலரடியார் முன்பு அருளிய -என்கிறபடியே மிகவும் கிருபை பண்ணி அருளி
நம்முடைய ஸ்ரீ ஆழ்வார் நம் அருகே வாரும் -என்று தம்முடைய திவ்ய சிம்ஹாசனத்திலே வைத்துக் கொண்டு
முத்தின் சட்டை வட்ட மனை முதலான வரிசைகளையும் பிரசாதித்து
தம்மையே ஒக்க அருள் செய்வார் -என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
அத்தைப் பற்ற
நம் சடகோபனை பாடினாயோ -என்று
ஸ்ரீ நம்பெருமாள் விஞ்சிய ஆதாரத்தால் கேட்ப -என்றாய்த்து அவனும் சொன்னது –

அதுவும் அன்றிக்கே
ஸ்ரீ பெரிய முதலியார் -மற்ற ஆழ்வார்களில் காட்டில் அங்கே விசேஷ பிரதிபத்தி பண்ணி –
த்வய புரஸ் சரமாக ஸ்ரீ திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களை எல்லாம் அவர் பிரசாதத்தாலே பெற்று
அந்த வ்யாவ்ருத்தி தோன்ற நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர் என்னுமோபாதி-நம்முடைய ஆழ்வார் -என்று ஆயத்து
அபிமானித்துக் கொண்டு போருவது –
அத்தைப் பற்றி இறே -ந குலபதேர் வகுளாபிராமம் -என்று அருளிச் செய்தது –

இனி நம் ஆழ்வார் உடைய திருவாய் மொழியில் அநவரத பரிசீல நத்தாலே அபிஷிக்தரான ஸ்ரீ நஞ்சீயருக்கு
இந்நாமம் ஆகைக்கு அடி இவர் ஸ்ரீ பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்த அநந்தரம்
மேல் நாட்டிலே சந்யசித்து-அங்குண்டான பரிக்ரஹங்களை அடைய ஸ்வவாசனமாக பரித்யஜித்து
ஸ்ரீ கோயில் ஏற வந்து ஸ்ரீ பட்டர் திருவடிகளிலே சேவித்து நிற்கக் கண்டு
போரவும் உகந்து -நம்முடைய ஜீயர் -வந்தார் -என்று கட்டி எடுத்துக் கொண்டு உபலாலித்த அன்று தொடங்கி
வேதாந்திகளுக்கு -ஸ்ரீ நஞ்சீயர் -என்ற திரு நாமம் ஆயத்து என்கை –

இனி இவருக்கு அத்யந்த அபிமதராய்ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திரு வவதாரம் என்னலாம் படி
ஸ்ரீ நம் பிள்ளைக்கு இந்த திரு நாமம் வந்தபடி –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ திரு வாய் மொழிக்கு ஒன்பதினாயிரம் கிரந்தம் சங்க்யையாக ஒரு வியாக்யானம் செய்து அருளி
அந்தப் பட்டோலையை நன்றாக எழுதிக் கொண்டு வரும்படிக்கு
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த ஸ்ரீ வரதராஜரான இவர் திருக் கையிலே கொடுத்தருள –
இவர் ஊர் ஏறப் போகிற போது ஆற்றிலே ஒழுகிப் போக பின்பு ஒரு அலேகத்திலே அதன்படி ஒன்றும் தப்பாதபடி
எழுதிக் கொண்டு வந்து–ஸ்ரீ நஞ்சீயர் சந்நிதியிலே வைக்க – அத்தை அவிழ்த்து திருக் கண் சாத்தி அருளி –
அது மிகவும் நன்றாய் இருக்கையாலே-இது ஏது என்று கேட்டு அருள
இவரும் தத் ஹேதுக்களை எல்லாம் விண்ணப்பம் செய்யக் கேட்டு
இது ஒரு புத்தி விசேஷம் இருந்த படி என் என்று மிகவும் உகந்து அருளி –
நம்முடைய பிள்ளை -ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் -என்று அருளிச் செய்ய –
அன்று தொடங்கி- ஸ்ரீ நம் பிள்ளை -என்று திரு நாமாமான இது லோக பிரசித்தம் இ றே –

அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் -இது வாய்த்து –

நன்னெஞ்சே –
இந்த திரு நாமங்களின் வாசி அறிந்து உகந்து இருக்கிற நெஞ்சே –

ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று –
இந்தத் திரு நாமங்களை அனுசந்திக்கைக்கு ப்ராப்த காலமான இன்று இதன் சுவடி அறிந்த நீ
இவையும் சில திரு நாமங்கள் இருந்த படியே என்று வாயாரச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணு –
அநாதி காலம் இத்தை அனுசந்தியாத இழவு தீர ருசி பிறந்த இன்று
பிரத்யஷே குரவஸ்துதயா -என்றும்
குரோர் நாம சதா ஜபேத் -என்றும்
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்றும்
என் மனம் ஏத்தி அன்றி ஆற்ற கில்லாது -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்துதி ரூபமான அனுகூல வ்ருத்தி பண்ணியே ஸ்வரூபம் பெறப் பார் –

—————————————————

இனி-இவர்களில் துர்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அதிலும் அத்யந்த விலஷணமான
ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற திரு நாமம் வருகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்—-51-

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் –
அவர் ஆகிறார் அபிஜன வித்யா வருத்தங்களால் யுண்டான யசஸ் சம்ருதியை யுடையராய்
ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் –
ஸ்ரீ முதலி யாண்டானுடைய திருப் பேரனாராய் – ஸ்ரீ கந்தாடை ஆண்டானுடைய திருக் குமாரராய்-
இருப்பார் ஒருவர் இறே –

ஏவம் பூதரானவர் செய்த படி சொல்லுகிறது மேல் –
தம்முகப்பால் -என்று
அதாவது ஸ்ரீ நம் பிள்ளையினுடைய ஞான வ்ருத்தியையும் சிஷ்ய சம்பத்தையும் கண்டு
அசஹிஷ்ணுவாய் அசூயை கொண்டாடி அவரை ஸ்ரீ பெருமாள் திரு ஓலக்கத்திலே பரிபவித்து
பின்பு திரு மாளிகையிலே எழுந்து அருள – அனுகூலையாய் இருக்கிற அவர் தேவிமார்
இத்தைக் கேட்டு அனுதாப ஹேதுவாய் சில வார்த்தை சொல்ல –
அப்படிச் சொன்ன அவளுடைய வார்த்தையைக் கேட்டு
பிரமாதாத் புத்தி தோவாபி யதாக கரிய தேசதா
அனுதப்தஸ் துதா நேவ ஷாம யேன் நான்ய தாசம -என்கிறபடியே அசூயையால் வந்த கலக்கம் தெளிந்து
அத்யந்தம் அனுதாபத்துடனே கெடுத்த விடத்திலே தேடும்படி அவரை ஷாமணம் பண்ணுவதாக
சஹாகாரிகள் உடனே புறப்பட்டு வர–அவ்வளவிலே –
அஹேதோர பிசக்ரோத மர்ச்சயன் நச்யுத ப்ரியம் ப்ரபோத்ய
விவிதைர் யத்னை ப்ராஜ்ஞ்ஞோதித ப்ரசாதயேத்-என்கிறபடியே
தம்மை உகப்பிப்பதாகத் தம் திரு மாளிகை வாசலிலே வந்து கைப்புடையிலே கிடக்கிற ஸ்ரீ நம் பிள்ளை யுடைய
அத்யந்த நைச்யமான உக்தி வருத்திகளைக் கண்டு-கேட்டு-மிகவும் ப்ரீதராய்
இது ஒரு பரிமாற்றம் இருந்த படி என் என்று
தம்முடைய ஆதர அதிசயத்தாலே இவரைப் பார்த்து
தேவரீர் இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யராய் இருந்தீர்
இப்போது லோகத்துக்கு எல்லாம் ஆச்சார்யராக ப்ராப்தராகா நின்றீர் -என்று –

என்ன உலகாரியரோ என்று உரைக்கப் —
என்ன லோகாச்சார்யாரோ -என்று அருளிச் செய்ய –
லோகாச்சாரியா பிதாம் தாது கவிஜித்தாச ஸூ ரயே
ச்யாமே பேசச்ய சரனௌ கரணை ஸ்த்ரிபி ராச்ரயே
தயாயாம் தேவ ராஜச்ய தாசரத்ரார்ய சந்ததே
அபிவருத்தி கரம்வந்தே ஹரிதத் விபதேசிகம் -என்னக் கடவது இறே –

பின்னை உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றது என்றும் மேல் –
அப்படி அவராலே பேர் பெற்ற பின்பு ஸ்ரீ லோகாச்சார்யர் என்னும் திரு நாமம்
உச்ச்ராயத்தை யுடைத்தாய்
சர்வ லோகத்திலும் ஸ்ரீ நம்பிள்ளைக்கு பேராமல் நின்றது –
ஆஸ்ரயம் போந்து இருக்கையாலே பேரானது பேராமல் இருக்கிற படி –

இத்தால் ‘-
இவர் லோகாச்சார்யத்வம் கூர குலத்திலவர்களும் வாதூல வம்ச்யரும்
அனுவர்த்தித்து ஆஸ்ரயித்த போதே
சர்வ லோக சம்பிரதிபன்னம் என்றது ஆய்த்து –

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தமும் இதன் கீழ் மேல் சொல்லுகிற அர்த்தங்களும்
எல்லாம் அந்திம உபாய நிஷ்டையிலே அஸ்மத் பரமாச்சார்யரான -ஸ்ரீ பெரிய பட்டர்பிரான் ஜீயர்
ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்து அருளினார் அதிலே கண்டு கொள்வது –

————————————————

இனி-இந்த லோகாச்சார்யர் என்னும் திரு நாமமானது லோகம் எங்கும் வந்து பரந்தது
இன்னத்தாலே என்று – தத் ஹேதுவை தர்சிப்பித்து அருளுகிறார் –

பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு —52-

பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அதாவது–ஸ்ரீ நம்பிள்ளைக்கு லோகாச்சார்யார் என்னும் திரு நாமம் நன்றாக நடந்து செல்லுகிற அக்காலத்திலே
அதி விரக்தராய் ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போருகிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு தந்நியோகம் அடியாக தத் சம்வத்சரத்திலே
ஒரு திருக் குமாரர் திரு வவதரிக்க – அநந்தரம் ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டரான அவர் –

யன்பால் அன்ன திரு நாமத்தை யாதரித்து –
அன்புடையோர் சாத்தப் பட்ட தாகையாலே தாமும் அப்படியே அன்பாலே
அவர் திருவடிகளிலே ஸ்நேஹத்தாலே அவாங் மனஸ் வைபவமான அந்தத் திரு நாமத்தை ஆதரித்து –

மன்னு புகழ் மைந்தர்க்குச் சாத்துகையால் –
திரு நாமம் சாத்துக்கைக்கு போரும்படியான பொருந்தின புகழை யுடைய
தம் குமாரருக்கு – அதாவது ஸ்ரீ நம்பூர் வரதர் யுடையவும்-ஸ்ரீ திரு வத்தியூர் வரதர் யுடையவும்
திரு வவதாரம் ஆகையால்
ஏற்கும் பெரும் புகழ் யுடைய தம் குமாரருக்கு – இப்படி மன்னு பெரும் புகழை யுடைய மஹாத்மாவான
மைந்தருக்கு அனுரூபமாகச் சாத்துகையாலே –

வந்து பரந்தது எங்கும் இந்தத் திரு நாமம் இங்கு –
இப்படி ஸ்ரீ கிருஷ்ண பாதராலே கீர்த்திக்கப் படுகையால் தத் ஸூநுவான இவருடைய இந்தத் திரு நாமமானது –
இங்கு எங்கும் வந்து பரந்தது – ஒரு பேர் வெள்ளம் இட்ட படி –
இவருடைய இந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் என்னும் திரு நாமம் ஆனது
இந்த லோகம் அடைய ஏறிப் பாய்ந்து பரந்து பலித்தது –
கிண்ணகம் உடை பட்ட வாறே-காடு மேடுகள் எங்கும் வெள்ளம் பாய்ந்து பரக்குமா போலே
இப்பேர் வெள்ளமானது
அஞ்ஞர் ஞானிகள் விபாகம் அற எல்லாரும் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படி
எங்கும் விஸ்தருதம் ஆய்த்து –

ஸ்ரீ ஜீயர் தாமும் -வாழி ஸ்ரீ உலகாரியன் -என்கிற திரு நாமத்தை பலகாலும்
அனுசந்தித்து அருளி
தமக்கு அந்தரங்கர் ஆனவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு உடலாக உபதேசித்து அருளியும்
இதில் விமுகராய் இருப்பாரையும் உட்பட இப்படி எளிதும் இனிதுமான திரு நாமம் இருக்க
இத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியாமல் அனர்த்தப் பட்டுப் போவதே – என்று வெறுத்து அருளுவாராம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: