உபதேச ரத்னமாலை –பாசுரம் -34/35/36/37/38- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

அடியிலே ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி -என்றும்
அந் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் -என்றும் இத்யாதிகளிலே உபக்ரமித்து அருளின படியே
உத்தரோத்தரம் அவர்களுடைய அவதரண க்ரமங்களை பரக்க அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இனி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி -என்றும்
அருளிச் செய்த அம்சத்தை விஸ்தரேண பிரதிபாதித்து அருளுகிறார் மேல் எல்லாம் –
இதில்
சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக அருளிச் செயல்களுக்கு ஆசார்யர்களால் அருளிச் செய்யப் பட்ட
வியாக்யான விசேஷங்கள் எல்லாம் தர்சிப்பித்து அருளுகிறோம் -என்கிறார் –

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும்
உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —34-

ஆழ்வார்கள் ஏற்றம் –
அவர்களுக்கு ஏற்றம் ஆவது -ஸ்வ யத்ன சாத்ய ஜ்ஞானரான ருஷ்யாதிகளைப் போல் அன்றிக்கே
அவனுடைய ஆகஸ்மிக கிருபையாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற -மகாத்ம்யத்தை யுடையவர்களாய்
அத்தாலே
பிராப்ய சித்தியை பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருந்து
லோக யாத்ரையிலும் கண் வைத்து இருக்கை அன்றிக்கே –
எல்லாம் கண்ணன் -என்றும்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி -என்றும் –
உண்டறியாள் உறக்கம் பேணாள் பந்தோடு கழல் மருவாள் -என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிற படியே
ததேக தாரகாதிகளை யுடையராய்
அவனை விச்லேஷிக்கில் அரை ஷணமும் தரியாத தன்மையை யுடையராய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -என்றும் –
வானுலகம் தெளிந்தே என்று எய்துவன் -என்றும் பேசும் படியான மநோ ரதத்தை யுடையராய் –
அத்தைப் பெறுகைக்கு தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படியான பரம பக்தியை யுடையராய் இருக்கை –
இது இறே அல்லாதாரைக் காட்டில் இவர்களுக்கு ஏற்றம்-

அருளிச் செயல் ஏற்றம் –
அதாவது
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -என்னும்படி-அந்த பகவத் பிரசாதம் அடியாக உண்டான
திவ்ய சஷூர் மூலமாக–அவாவில் அந்தாதி -என்னும்படி–பக்தி பலாத்காரத்தாலே திரு வவதரித்ததாய்
அது தானே
பகவத் ஏக பரமாய்–விலஷமுமாய் —போக்யமுமாய்–ஸூ சகமாய்–ஜ்ஞாதவ்ய சகலார்த்த பிரதி பாதகமுமாய்
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவுமாய்–சம்சார விச்சேதகமுமாய்–சீக்ர பல பிரதமுமாய் இருக்கை –
இது இறே அல்லாதவற்றில் காட்டில் இதுக்கு யுண்டான ஏற்றம் —

இனி
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்க்கை-யாவது –
இப்படி விலஷணரான ஆழ்வார்கள் யுடையவும்-விலஷண பிரமாணங்களான அருளிச் செயல்களின் யுடையவும் –
வைபவத்தை அவத்ய லேசமும் இன்றிக்கே இருப்பதொரு படித்தானத்தை வர்ப்பித்துக் கொண்டு போருகை –
அதாவது
வக்த்ரு வைலஷ்ண்யத்திலே யாதல்
பிரபந்த வைலஷண்யத்திலே யாதல் –
பிரதி பாத்ய வைலஷண்யத்திலே யாதல் –
உள்ளது ஒன்றையும் சங்கோசியாமல் ஓன்று பத்தாக்கி வர்ப்பித்துக் கொண்டு ததேக பரராய் போருகை யாய்த்து –
அவர்கள்
தாழ்வாதுமில் குரவர்கள் -ஆகையாலே யாய்த்து இவற்றையும் தாழ்வாதும் இன்றிக்கே வளர்த்தார்கள் –
வளர்த்தார்கள் -என்று ஏதத் வர்த்தகர் ஆனவர்கள் யுடைய பாஹூள்யம் இருக்கும் படி –

இனி அவர்கள் வளர்த்தாராய் இருக்கிறவர்கள் தாம்
சவஸ்ய வியாக்யான முகேன வாய்த்து இவற்றை வர்ப்பித்துக் கொண்டு போந்தது –
ஆகையாலே
ஏழ்பாரும் உய்ய வவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —
என்று அத்தை அருளிச் செய்கிறார் –
இத்தாலே ஏழ் பாரும் உய்கை யாவது –
இவற்றால் உய்யலாம் என்றும் –
உலகு உய்ய உம்பர்களும் கேட்டு உய்ய -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ லோகத்தில் உள்ளவர்களுக்கும் செவிக்கு இனிய செஞ்சொல்லைக் கேட்டு –
உஜ்ஜீவிக்கும் படி இறே அவற்றுக்கு மூல பிரமாணங்களான அருளிச் செயல் தான் இருப்பது –

அப்படியே அத்தை அடி ஒத்தி-க்யாதி லாபாதி நிரபேஷத்வாத் யாகார யுக்தராய் இருக்கிற இவர்களும்
அதின் சீரிய அர்த்தங்களை எல்லாம் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பரம பிரயோஜன ஏக பரதையாலே
ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்று
அடியிலே அருளிச் செய்த படியே ஆப்திக்கு உடலாக
வேத தாத்பர்யங்களையும் அநு விதானம் பண்ணிக் கொண்டு அர்த்த பிரதிபாதனம் பண்ணுகையாலே
முக்ய தமமான பிரமாணமுமாய்-அத்தாலே சர்வ லோக பரிக்ரஹத்தையும் யுடைத்தாய்
சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுமாயும் இருக்கும் –
அவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் – என்று அவர்கள் தான் அநேகராய் இருக்கையாலே
வ்யாக்கியைகள் என்றதும் அப்படியேயாய் இருக்கிறது-
அது எல்லாம் மந்த மதிகளுக்கு அவிச்வாச ஹேதுவாய் இறே இருப்பது –
அவர்கள் செய்த வ்யாக்கியைகள் இன்னவைகள் என்கிறதை
இவர் தாமே பிள்ளான் -என்று தொடங்கி மேலே பரக்க அருளிச் செய்கிறார் –

உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து –
அதாவது
அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த –என்னுமா போலே
இவர்கள் துர்க்கதி கண்டு ஓன்று அல்லா ஒன்றிலே யாகிலும் ருசி விச்வாசங்கள் பிறக்கக் கூடும் என்று
அகிலார்த்தங்களையும் அகில சேதனரும் அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லக் கடவோம் என்று சங்கல்பித்து அருளிச் செய்கிறார்
இவருடைய அமோக சங்கல்பம் இருக்கும் படி இது வாய்த்து —

அன்றிக்கே –
இன்னார் இன்னபடி இந்த பிரபந்தத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்று
சம்ப்ராதாயங்கள் தான் சங்குசிதம் ஆகாமல் அவற்றை எல்லாம் அறிந்தவர்களை ஆதரித்து உஜ்ஜீவிக்கும் படி
அருளிச் செய்கிறார் ஆக்கவுமாம் –

பகர்வோம் வாய்ந்து –
என்று -அவர்கள் அருளிச் செய்த வியாக்யான விசேஷங்களை ஆபாத ப்ரதீதியாக அன்றிக்கே
அதில் அர்த்தத்தில் பாவ பந்தம் அடியாக பொருத்தம் உடையாராய்த்து இவர் செய்து அருளுவது –
பண்டுவலவாரியரும் -என்று தொடங்கி பிறருக்கு காதலுடன் கற்பித்து -என்று இறே இவற்றில்
இவர்க்கு உண்டான ஆதார அதிசயம் இருப்பது-

————————————————–

கீழ்
ஆழ்வார்கள் ஏற்றம்-அருளிச் செயல் ஏற்றம்-தாழ்வாதும் இன்றி யவை தாம் வளர்த்தோர் –
என்று அருளிச் செய்து –
அவர்களுக்கும்-அவர்கள் திவ்ய பிரபந்தகங்களுக்கும் அதிசய அவஹாராக வேண்டி இருக்க
அத்தைச் செய்யாதே தங்கள் அல்ப புத்தியாலே அவமதி பண்ணுமவர்கள் -அத பதிப்பார்கள் ஆகையால்
அவர்கள் பரித்யாஜ்யம் என்னுமத்தை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

ஆழ்வார்களையும் –
நிமக்னரை உயர்த்தத் தாழ இழிந்து உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் -என்கிறபடியே
சர்வ யோநிகளிலும் அவதரித்தவர்கள் –
யோகினஸ் சர்வ யோ நிஷூ -என்னக் கடவது இறே –
இங்கு யோனி என்று ப்ரஹ்மணாதி ஜாதிகளை எல்லா வற்றையும் நினைக்கிறது –
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் -என்று இறே அருளிச் செய்தது –

அருளிச் செயல்களையும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திவ்ய சங்கல்பத்தாலே சாய் கரகம் போலே சர்வ உபஜீவ்யமாம் படி
சர்வ ஸூலபமான திராவிட பாஷையிலே
பண்ணிய தமிழ் மாலை -என்னும் படி-ஸ்ரீ ஆழ்வார்கள் முகேன திரு வவதரித்ததாய்
சர்வ ஸூலபனாய் -அர்ச்சா ரூபத்தோடு அகில திவ்ய தேசங்களிலும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணங்களோடு-அகில சேதனர்க்கும் ஆஸ்ரயணீயனாய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை பிரதிபாதிக்கக் கடவதாய்
செந்தமிழ் வேதம் -என்னலாம் படியான
திராவிட வேத–தத் அங்க–உபாங்களான திவ்ய பிரபந்தங்கள் -என்கை-

தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள் –
இவற்றை தாழ்வாக நினைக்கை யாவது –
ஏவம் வித மகாத்ம்ய அனபிஞ்ஞாராய்-ஜன்ம மாத்ரத்தையும்–பாஷா மாத்ரத்தையும் விசாரித்து
நிகர்ஷ்ய புத்யா எண்ணுகின்ற நீசர் -என்னும்படி -சத்ய சண்டாளரான-தாங்கள்
மானஸை ரந்த்ய ஜாதி தாம் -என்னக் கடவது இறே
த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சியும் -என்று இறே துல்ய தோஷமாக அருளிச் செய்தது
எண்ணிக் கொண்டு-பிறர் அறிய வாய் விட்டு சொல்லுகை அன்றிக்கே
ஸ்வகதமாக மனசாலே சிந்தித்தார்கள் ஆகில்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –என்கிறபடியே
அது தான் மகா அனர்த்தமாய் பர்யவசிக்கும் படி யாய் இறே இருப்பது –
நினைப்பவர்கள் தாம் -அனுதாப ஹேதுவான மனசாலே-அனுதாப சூன்யமான அபராதத்தை
ஆர்ஜித்துக் கொள்ளா நிற்கும்-சாஹசிகளாய் இருக்கிற தாங்கள் —

நரகில் வீழ்வார்கள் என்று –
அவர்கள்-ந ஷமாமிக்கு லஷ்யம் ஆகையாலே-ஷிபாமிக்கு விஷயமாய்
ரௌரவாதி நரகங்களிலே பதிவர்கள் என்று புத்தி பண்ணி –

நெஞ்சே எப்பொழுதும் –
ஆழ்வார்கள் இடங்களிலும்-அவர்கள் திவ்ய ஸூக்திகளிடங்களிலும்
அதிசயமான ப்ராவன்யத்தை உடைத்தான மனசே சர்வ காலத்திலும் நீ அவர் பால் –

சென்று அணுகக் கூசித் திரி –
நமக்கு சேஷிகள் ஆனவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கிற நீ
உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கிறவர்கள் விஷயத்திலே அபசாரத்தாலே
தங்களுக்கு அனர்த்தத்தை ஆர்ஜித்துக் கொள்ளும் அவர்கள் இடங்களிலே சென்று கிட்ட பயத்தோடு வர்த்தி –
ஸ்வரூப நாசகரோடு சஹாவாசம் பண்ணுகை அனர்த்தம் ஆகையாலே அவர்களை
உபசத்தி பண்ணிக் கூசித் திரி –
ஸ்வரூப வர்த்தகரோடு சேர்ந்து போந்த நீ இவர்கள் படியை அறிந்து
தத் சஹாவாசம் துஸ் சஹம் என்று தூரே வர்த்தித்துப் போர்
அவர்களை அறியும் படி எங்கனே என்னில் –
ததாபி விபரீதாதே புத்தி ராசார வர்ஜிதா -என்கிறபடியே
அவர்கள் துரனுஷ்டானத்தாலே அவர்கள் துர் புத்தியை அனுசந்தித்து
அவர்களைக் கண்டால் -சர்ப்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்தித்துப் போரு-
அவைகள் தேக நாசகங்கள் இவர்கள் ஸ்வரூப நாசகர் இறே-

இத்தால் -ஆநுகூல்ய ஸுய சங்கல்ப்பத்தோ பாதி –
ப்ராதி கூல்யச்ய வர்ஜனமும் வேணும் -என்றது ஆய்த்து
வ்யாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் ஆரியப் பகர்வோம் -என்று இறே அருளிச் செய்தது –

——————————————————-

கீழ்ப் பாட்டில் விலஷண பிரமாண பிரமாத்ரு வைபவ அனபிஞ்ஞர் பரித்யாஜ்யர் என்று அருளிச் செய்த இத்தாலே
தத் வைபவ அபிஞ்ஞரே ஆதரணீயர் என்றது ஆய்த்து –
அப்படி ஆதரணீயராய் இருக்குமவர்கள் தான் ஆர் என்ன வேறு உண்டோ –
ஸ்ரீ மன் நாதாதிகளான நம் ஆச்சார்யர்களை ஒழிய -என்கிறார் –
கீழ்ப் பாட்டில் அவர்க்களும் ‘இப்பாட்டில் இவர்களும் நிந்திப்பாரையும் வந்திப்பாரையும் போல்வார் –

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு —36-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவை எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் -என்பதே நிரூபகமாய் இருக்கிறபடி –
ஜ்ஞானானந்த மயஸ்தவாத்மா சேஷோஹி பரமாத்மன -என்னுமா போலே –
அவன் பிரசாதத்தாலே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் உணர்வைப் பெற்று
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து -என்றும்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
உணர்ந்த மெய்ஞ் ஞானியர் -என்றும் –
ஜ்ஞாநினஸ் தத்வ தர்சன -என்றும் -சொல்லுகிறபடியே-தத்வ யாதாம்ய தர்சிகளாய்-
அத்தால் –
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -என்றும்
அறிவார் உயிரானாய் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு தாரகராய் ஜ்ஞாநினாம் அக்ரேசராய் இருக்குமவர்கள் –
அல்லாதாரடைய அர்த்த காம அபிபூதராய் உன்மத்தரைப் போலே –
இருள் தரும் மா ஞாலத்திலே மருள் கொண்டு ஓடித் திரியா நிற்க
இவர்கள் மருளில் வண் சடகோபன் -என்னும்படி
அஞ்ஞான கந்த ரஹிதராய் -அந்த ஜ்ஞான பலமாக ஒளிக் கொண்ட மோஷம் தேடி
வீடு பெற்றவர்களாய் இருப்பார்கள் ஆய்த்து –
ஜ்ஞாதவ்ய பஞ்சக ஞானம் விஞ்சி இறே இவர்கள் விஷயத்தில் இருப்பது –

தெருள் உற்று இருக்கை யாவது –
அதிலே ஊன்றி இருக்கை -என்றபடி –
இப்படி – நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்குமவர்கள் –

சீர்மை யாவது –
ஆத்ம ஞானம் கை வந்து இருக்குமவர்களில் காட்டில் பர்வத பரமாணுவோட்டை வாசியை யுடையருமாய்
விலஷணமான ஜன்ம வ்ருத்த ஞானங்களை யுடையராய் இருக்கிற வைபவம் ஆய்த்து –
அதாவது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் -என்ற இடத்தில் சொன்ன பிரபாவம்
சீர்மை -பெருமை –
திரு மந்த்ரத்தின் உடைய சீரமைக்கு போரும்படி -என்கிற இடத்துக்கு
கௌரவம் -என்று இறே அருளிச் செய்தது –
இதுக்கு மூலம் என்று தொடங்கி
பட்ட போது எழு போது அறியாது இருந்த பிரபாவம் -என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –
விண்ணுளாரிலும் சீரியர் -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோர் -என்றும் –
மிக்க சீர்த் தொண்டர் -என்றும் –
சொல்லுகிற படி இறே இவர்கள் சீர்மை இருப்பது –

அன்றிக்கே –
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை —
என்று தெருள் உற்று இருக்கை தானே இவர்களுக்கு சீர்மை -என்னவுமாம் –
இப்படியாக இவர்கள் பிரபாவத்தை தாம் அருளிச் செய்யப் புகுகிறவர்கள் ஒழிய
அறிவார் ஆர் -என்கிறார் –
ஸ்ரீ ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் -என்று முதலடியிலே பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ண
மாட்டாதவர்களோ அவர்கள் ‘
ஜ்ஞான வைபவம் அறிந்தவர்கள் அளவும் சென்று அவர்கள் சீர்மையை அறியப் புகுகிறார்கள் –

அறிவார் ஆர் –
தேகாத்மா அபிமானிகள் தொடக்கமான பிரதி கூலர் ஆனாரோ
அனுகூலராய் இருக்கிற ஆழ்வார்கள்-வைபவத்தை அறிந்து போருவர்
ஆகையாலே -அறிவார் ஆர் -என்று அருமை தோற்ற அருளிச் செய்கிறார்-

அதுக்கு மேலே
அவர்களால் பிரணீதங்களாய் பிரபத்யர்த்த பிரதிபாதகங்களான
அருளிச் செயலை அறிவார் ஆர் –
அவர்கள் திவ்ய ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்களை
பிரதிபாத்ய அர்த்த கௌரவத்தை அறிந்து பிரதிபத்தி பண்ணி அப்யசிப்பது ஆர் –
இவ்விடத்திலும் அருளிச் செயலின் சீர்மையை அறிவார் ஆர்-என்று கூட்டி நிர்வஹிப்பது –

கீழிலும் ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயலின் ஏற்றம் -என்று அன்றோ அருளிச் செய்தது –
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம் தொடக்க மானவற்றின் வாசி அறிந்து ஆதரிக்கும் போது
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்றவர்கள் ஆக வேண்டாவோ –
தங்கள் ஸ்வாதந்த்ர்யாதிகளுக்கு அனுகுணமான ஹர்ஷ வசநாதிகளை ஆதரித்துப் போருமவர்கள் –
பாலோடு அமுதம் என்ற வாயிரம் -என்றும்
தொண்டர்க்கு அமுது -என்றும் –
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலை -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய போக்யமான திவ்ய பிரபந்தங்களை
பத்தராகக் கூடும் பயிலுமின் -உரிய தொண்டராக்கும் -என்று
இத்தை ஸ்வரூப லாபத்துக்கு உறுப்பாக அறிந்து ஆதரித்து போருவார்களோ –

அவற்றில் ஸ்ரீ ஆழ்வார்கள் பொருளையும் அறிந்து உரைக்குமவர் ஆய்த்து இவர் தாம் –
இனி இவ் வைபவ அபிஞ்ஞர் தான் ஆர் -என்கிறார் –
அருள் பெற்ற நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால் –
அவர்கள் ஆகிறார் –
அருள் மாறன் அருளைப் பெற்ற ஸ்ரீ நாதமுனி தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆச்சார்ய பதஸ்தராய்
அருளிச் செயலை ஆதரித்து ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருமவர்கள் தான்
நாதம் பங்கஜ நேத்ர -என்று தொடங்கி
தேவாதிபான் -என்னும் அளவும் தர்சிப்பிக்கப் பட்ட தேசிகர்கள் –
ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் இறே நம்முடைய தேசிகர் –
இவர்களை -நம் தேசிகர் -என்கிறது –
இவர்களே நாதர் என்று இருக்கும் தம்முடைய பிரதி பத்தி விசேஷத்தாலே –

அருள் பெற்ற நாதமுனி –
ஆழ்வார் அருளை யாதல் –
அதுக்கடியான மன்னாருடைய அருளை யாதல் – பெற்றவர் -என்னவுமாம் –
இப்படி பகவத் பாகவதர்கள் உடைய கிருபைக்கு இலக்கான வவர்கள் இறே
ஆழ்வார்களின் சீர்மையையும்
அருளிச் செயலின் சீர்மையையும் அறிந்து போருவர் – அல்லாதார்களுக்கு இத்தை அறியத் தரமோ –

பேதை மனமே யுண்டோ பேசு –
முக்தமான மனசே – இப்படி விதக்தரான இவர்களை ஒழிய யுண்டோ -சொல்லிக் காண்-
இவ்வர்த்தம் இல்லையோ -என்றபடி
ஆகையால் திரு உள்ளம் அறிய ஒருவரும் இல்லை -என்கிறார்
இத்தால்
ஸ்வ யத்னத்தாலே அறிய ஒண்ணாதது-அயத்னத்தாலே அறியலாய் இருக்கும்
அருள் பெற்றவர்களுக்கு -என்றது ஆய்த்து –

—————————————————-

இனி ஸ்ரீ மன் நாத முனிகள் தொடக்கமானாராலே அறிந்து ஆதரிக்கப் படுமதான
அருளிச் செயலில் தாத்பர்யமான பிரபத்யர்த்தமானது ஓராண் வழியாக நடந்து செல்ல
அத்தை ஸ்ரீ எம்பெருமானார்
தம்முடைய நிரவதிக கிருபையாலே பேசி வரம்பு அறுத்து வழி யாக்கி நடத்தி அருளின படியை
அருளிச் செய்கிறார் –

ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் –37-

ஓராண் வழியாய் யுபதேசித்தார் –
பிரபத்யர்த்தம் -என்ன –திருவாய் மொழியினுடைய அர்த்தம் -என்ன
பேதம் இல்லாமலே திருவாய் மொழியை ப்ரவர்த்திப்பாராக
பிரபத்யர்த்தத்தை முந்துற அருளிச் செய்த படி சொல்லுகிறது –
த்வயார்த்தம் தீர்க்க சரணா கதி என்றது சங்க்ரஹத்திலே -என்று இறே அருளிச் செய்தது –
த்வயத்தையும் திருவாய் மொழியையும் யாவன் ஒருவன் உபதேசிக்கிறான்
அவனுக்கு இறே ஆச்சார்ய பூர்த்தி உள்ளது என்று அருளிச் செய்வார்கள் –
ஸ்ரீ பெரிய முதலியாருக்கு -சமந்தர ராஜ த்வய மாஹ யஸ்ய -என்று
த்வய பூர்வகமாய் இறே ஆழ்வார் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை பிரசாதித்து அருளினதும் –
அப்படியே உபயத்தையும் வர்த்திப்பித்து அருளுமவர் இறே ஸ்ரீ எம்பெருமானார் –
ஆகையால் இத்தை முந்துற ப்ரவர்ப்பித்து அருளினார்
த்வய அதிகாரிகளான பின்பு இறே திருவாய் மொழியை அதிகரித்துப் போருவது –

ஓராண் வழியாய் –
ஓர் ஒரு மகா புருஷர்களைக் குறித்து உபதேசித்து இறே
முன்புள்ளார் இந்த மார்க்கத்தை நடத்திப் போந்தது –

முன்னோர் –
அவர்கள் தான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு அவ்வருகு உண்டான
அருள் பெற்ற ஸ்ரீ நாதமுனி முதலான ஆச்சார்யர்கள் –
அவர்கள் தாம் அர்த்த கௌரவத்தை பார்த்து இறே மறைத்து உபதேசித்து ரஷித்து வந்தது –
நம்பி தாமும் சூழரவு கொண்டு இறே இவருக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்து அருளினார் –

ஏரார் எதிராசர் இன்னருளால் –
அப்படி அன்றிக்கே எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
அர்த்தத்தின் சீர்மையைப் பாராதே இவர்கள் அனர்த்தத்தையே பார்த்து
அனுஹ்ரக ஏக சீலமான அருளாலே யாய்த்து இப்படி வெளி இட்டது —

ஏரார் எதிராசர் –
அதாவது
ரூபமே வாஸ்யை தன்மஹி மாநம் வ்யாசஷ்டே -என்றும்
ஏராரும் செய்ய வடிவு -என்றும் – சொல்லும் படியான தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தில்
பிரகாசிக்கிற சௌந்தர்ய பூர்த்தியாலே சர்வரையும் வசீகரிக்கும் படியான ஸ்ரீ எம்பெருமானார்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே யாய்த்து இப்படி உபதேசித்து அருளிற்று –
இவர் தம் ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் ஆய்த்து ஜகத்தை திருத்தி ரஷித்துப் போந்தது –

இது தான் ஆர் அதிகாரிகளாக என்னில் –
பாருலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் –
இந்த பூமியிலே இருந்ததே குடியாக-ஆசாலேசம் யுடையவர்களுக்கு எல்லாம் –

ஆசை யுடையோர் –
நிதி யுடையோர் -என்னுமா போலே-பத்துடை அடியவர்க்கு -என்னக் கடவது இறே

பாருலகில்
ஆசை யுடையோர் தான் அரிதாய் இறே இருப்பது –
ஆகையால்-அவர்கள் யுடைய ஜன்ம வ்ருத்த ஞானங்களால் யுண்டான உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே
ஆபிமுக்ய ஸூசகமான ருசியையே பார்த்து
நான் உங்களுக்கு சொன்ன பரமார்த்தத்தை நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கோள்-
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும் –
என்னும் அவருடைய அடி பணிந்த ஆகாரத்தாலே –
பார் யுலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அருளிச் செய்கிறது –

ஆரியர்காள்-
கார்யம் கருணம் ஆர்யேண-என்கிறபடியே
நீங்களும் கேவல கிருபையாலே உபதேசித்துப் போருங்கோள்-
தாம் இன்னருளாலே இறே பேசி வரம்பு அறுக்கிறது –
அப்படியே அவர்களையும் உபதேசிக்கும் படி அருளிச் செய்கிறார் –

ஆரியர்காள் –
ஆரியர்காள் என்று அப்போது தம்முடைய சந்நிதியிலே ஸ்ரீ தெற்கு ஆழ்வான் திரு முன்பே
தம் உபதேசம் பெற்று இருக்குமவர்கள் எல்லாரையும் பார்த்து
நம்மைப் போலே நீங்களும் ஆசா லேசா மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு
சர்வர்க்கும் உபதேசியுங்கோள் என்று தடை விடுகிறார் –
அன்றிக்கே –
ஆரியர்காள் -என்று
ஆச்சார்யா பதஸ்தராகத் தான் அபிமானித்து அருளின ஸ்ரீ ஆழ்வான் முதலான எழுபத்து நாலு ஸ்ரீ முதலிகளை ஆகவுமாம் –

இத்தால்
ஒரு பெரு மதிப்பனான ஆச்சார்யன் உடனே கேட்டார் அடைய உபதேஷ்டாக்களாகவும்
ஸ்ரத்தை யுடையவர்கள் உத்தேச்யராகவும்-கடவர்கள் என்னும் அர்த்தம் சொல்லிற்று –

ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
முன்புள்ளார் இத்தை-இதந்தே நாதபஸ்காய-இத்யாதிப் படியே
ஒருவருக்கும் உபதேசியாதே உங்கள் அளவுகளிலே அனுசந்தித்துப் போருங்கோள் என்று மறைத்துப் போந்தார்கள் –
பின்பு இவர் பர சம்ருத்த ஏக பரதையாலே இத்தை பிரசித்தமாம் படி சொல்லுங்கோள் என்று
முக்த கண்டமாக அருளிச் செய்கிறார் –

முன்னோர் வரம்பு அறுத்தார் பின் –
முன்பு ஸ்ரீ முதலிகளாலே கட்டின வரம்பைப் பெருமாள் அடைத்து துடைத்தால் போலே
இவரும் அவர்களாலே கட்டின மரியாதையையும் அமர்யாதமாகப் பண்ணி அருளினார் –
மர்யாதா ஸ்தாபகர் இ றே -இப்படிச் செய்தது –
ராமா நுஜச்ய கருணா வரணாலச்ய -என்னும்படியாக கிருபைக் கடல் கரை வழியப் பெருகின படி –
அதாவது
ஓரடிப்பாடாய் இருக்கிற வழிகளை பெரு வழி யாக்கி நடத்தும் ராஜாக்களைப் போலே –

ஓராண் வழியாய் —
நடந்த அடிப்பாட்டை
ஸ்ரீ எதி ராஜரான இவரும் தம்முடைய இன்னருளாலே ஆசை யுடையோர்க்கு எல்லாம் கூறும் என்று
பெரு வழி யாக்கித் தடை யறும்படி நடத்தி அருளினார் –
ஸ்ரீ மான் ராஜ பதஞ்ச காரதயயா ராமா நுஜார்யோ முனி -என்னக் கடவது இறே
தாம் -ராமா நுஜப் பெரு வழி வெட்டி – என்னும் படி நடத்தினால் போலே ஆய்த்து இதுவும்
இவர் தாம் ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி -இறே –

————————————————-

பிரபத்தி மார்க்கத்தை ப்ரவர்த்திப்பித்து அருளியும்
தத் ரஷண அர்த்தமாக ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணி அருளியும்
அத்தாலே நிரபாயமாக இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வர்த்திப்பித்தமையும்
சர்வரும் அறியும்படி ஸ்ரீ எம்பெருமான் அவருடைய தர்சனம் என்று அபிதானமாக்கி
ஸ்தாபித்த படியையும் அருளிச் செய்கிறார்

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா –38-

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகளும் தர்சன ப்ரவர்தகராய் இருக்க
இவருடைய பர சம்ருத்தி ஏக பிரயோஜனத்தையே பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம் -என்று ஆய்த்து
ஸ்ரீ நம் பெருமாள் நாம நிர்த்தேசம் பண்ணி ஸ்தாபித்து அருளின படி –
மர்யாதா நாமச லோகஸ்ய கர்த்தா காரயிதாசசா -என்னக் கடவது இறே –
அதாவது
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பாடே பலகால் நடந்து பெற்ற பரமார்த்தத்தை தம்மை அழிய மாறி –
பூரிதானம் பண்ணி மீண்டு எழுந்து அருளின அநந்தரம்-
நமக்காவாரை நாமே தேடிக் கொள்வோம் -என்று அதுக்கு விஷயமான இவரை –
ஸ்ரீ நம் பெருமாள் இவரை மிகவும் விசேஷ அபிதானம் பண்ணி அருளி –
இன்று தொடங்கி
ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று ஜகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் -என்கை-
அன்றிக்கே
நாட்டுவித்தார் -என்ற பாடமான போது இவர் ஆஜ்ஞ்ஞாதி லங்கணம் பண்ணி
அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின பிரபாவத்தைக் கண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் அப்படியே ஸ்ரீ எம்பெருமானார் -என்ற திரு நாமம் சாத்தி –
இன்று முதல் ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று அருளிச் செய்து -ஆதரித்துப் போருகையாலே
அந்த ஸ்ரீ நம்பியுடனே இத்தை வெளியிடும்படி அருளிச் செய்த ஸ்ரீ நம்பெருமாள்
தாமே தத்வாரா இத்தை ஸ்தாபித்து அருளினார் -என்னவுமாம் –
இவர் தாம் ஆளுமாளார் என்று இவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கும்
சம்சாரிகள் தனிமையை தீர்க்கைக்கும் இறே இப்படி உபதேசித்துப் போந்தது –

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் தர்சன ஸ்தாபனம் பண்ணுகைக்கு அடி என் என்னில் –
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலை அறிகைக்கா -என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமானார் அபிதான விசேஷத்தாலே
அழகியதாய் இருக்கிற பூமியில் உண்டான வர்கள் எல்லாம் பரம வைதிகமுமாய்
அத ஏவ நிரவத்யமுமான இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த –
தம் உபதேச முகத்தாலே வர்திப்பித்துக் கொண்டு போந்த அந்தச் செயல் அறிகைக்கா –
அதாவது
ஜகத் உபகாரகமாகச் செய்த அந்த க்ருத்யத்தை ஜகத்தில் உண்டானவர்கள் எல்லாரும்
அறிந்து உஜ்ஜீவிக்கும் படி – ஸ்ரீ நம் பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -என்கை –

இத்தால்
இவருடைய தர்சன ப்ரவர்த்தகத்வம் பிரபத்தி சாஸ்திர முகேன-என்னுமது
பிரசித்தமாக ஸ்தாபிக்கப் பட்டது ஆய்த்து –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: