உபதேச ரத்னமாலை-அவதாரிகை -பாசுரம் -1- –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ சைலேச  தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யெதீந்த்ரப் பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த தனியன் –

முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி
தன்னன்புடனே செய்த யுபதேச ரத்ன மாலை தன்னைத்
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே –

———————————————

அவதாரிகை –

ஸ்ரீ பெரிய ஜீயர் ஆகிறார் -பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
பின்புள்ளாரும் ஆஸ்ரயிக்கும் படி  –
அக்கரையராய் -நித்ய ஸூரிகளில் ஒருவர் வந்து அவதரித்தார் என்னும்படியான தரத்தை யுடையராய்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளில் ஆஸ்ரயித்து
தேவு மற்று அறியேன் -என்னும்படி ததேக நிஷ்டராய்
அவர் உபதேசத்தாலே
திருவாய்மொழி தொடக்கமான அசேஷ திவ்யப் பிரபந்தங்களின் உடையவும் –
அதின் தாத்பர்யமான அசேஷ ரஹஸ்யங்களின் உடையவும்
அர்த்தத்தை அதிகரித்து
க்ருதார்த்தராய் இருப்பாராய்-
அந்த பிள்ளை தாமே
குருபரம்பரையாகிற ஹாரத்துக்கு நடுவே நாயக ரத்னம் என்னும்படி –
ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும்படியான ஸ்ரீ யுடையவர் திருவடிகளையே
யுமக்கு  ஒரு துணையாகப் பெற்றிரும் என்று உகப்பின் மிகுதியாலே காட்டிக் கொடுக்க –
அத்தாலே
அவர் திருவடிகளிலே அதி ப்ராவண்யத்தை யுடையராய் –
ஆழ்வார்கள் உடையவும்
ஆச்சார்யர்கள் உடையவும் அருளே தமக்கு விளை நீராகும்படியாக வர்த்தித்து போருமவராய்
அதஏவ
பராங்குச பரகால பட்டநாதாதிகள் உடையவும்
நாத யாமுன யதிவராதிகள் யுடையவும்
பாவத்தை தமக்கு ஓர் ஆகாரத்தாலே உடையராம்படி இருப்பாராய் –
சகல ஜீவ லோக சமுஜ்ஜீவநைக தத் பரராய் –
தம்முடைய பர சம்ருத்யைக பிரயோஜனதையாலே
பரம ரஹஸ்யார்த்தங்களை எல்லாம்
ஸ்வ பிரபந்தங்களிலே பிரகாசிப்பித்தது அருளின பெருமையை யுடையராய்
ஸ்ரீ மணவாள மாமுனியை இனி ஒப்பார்கள் இல்லை
யுலகு  ஏழிலும் உம்பரூரிலும் -என்னும்படி உபய விபூதியிலும்
தம்முடைய சேஷத்வாதி குணங்களுக்கு   உபமானம் இன்றியிலே இருக்கிற
உச்ச்ராயத்தை யுடையாராய் இருப்பாராய்
ஸ்ரீ ரங்க மங்கள சம்பத்தாய்க் கொண்டு ஸ்ரீ திருவரங்கம் திருப்பதியே இருப்பாக -எழுந்து அருளி இருப்பாராய்
அத்தாலே
ஸ்ரீ கோயில் மணவாள மா முனி -என்று நிரூபகமாம்படி இருப்பார் ஒருவர் இ றே-

ஏவம்வித மகாத்ம்யத்தை யுடையவராய் இருக்கும் ஸ்ரீ வரவர முனிவர்யான  ஜீயர்
தம்முடைய பரம கிருபையாலே
ஆழ்வார்கள் யுடையவும் ஆச்சார்யர்கள் யுடையவும்
அவதாரங்கள் அதீத காலம் ஆகையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -என்னும்படி
அவர்கள் உடைய அவதார வைபவமும்
உக்த்ய அனுஷ்டானங்களையும்
ஒருவருக்கும் தெரியாதபடி சங்குசிதமாயும் வருகிறபடியும்
தத் காலத்திலே சேதனருடைய ஜ்ஞான மாந்த்யத்தையும்-தர்சித்து அருளி
இனி இவர்கள் விஷயமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய அவதார ரஹஸ்யாதிகள் என்ன –
தத் ஸூக்திகள் என்ன
தத் உபய அபி ஜ்ஞ்ஞரான ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடைய உக்தி அனுஷ்டானங்கள் என்ன
இவை தொடக்கமான அர்த்த  விசேஷங்களை எல்லாம் பிரகாசம் ஆக்கி
தத் அந்வய முகத்தாலே இவர்களை உஜ்ஜீவிப்போம் என்று அறுதி இட்டு
இவ்வர்த்த விசேஷங்களை கேவலம் உபதேச மார்க்கத்தால் பிரகாசிப்பித்தால்
தத் காலத்தில் அவர்களுக்கு ஒழிய
பிற்காலத்திலவர்களுக்கும் உப ஜீவ்யமாகை யரிது என்று
தத் காலத்தில் அவர்களோடு பிற்காலத்தில் அவர்களோடு வாசி அற
எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்தமாம் படி பண்ண வேணும் என்று
திரு உள்ளம் பற்றி அதன் பின்பு
ஆச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தங்களை
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை யாகிற இப்பிரபந்த முகேன-பிரதி பாதித்து அருளுகிறார் –
ஆகை இறே இதற்கு ஸ்ரீ உபதேச ரத்ன மாலை  -என்று திரு நாமம் ஆயிற்று –

இது தான் ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும் ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடையவும்
தத் ஸூக்திகளின்  உடையவும் வைபவத்தை பிரதிபாதிக்குமதாகையாலே சகல பிரபந்த விலஷணமாயும் இருக்கும் –
இதில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் திரு மந்த்ரத்தில் பிரதிபாதிக்கிற-அனன்யார்க சேஷத்வாத்வாதிகளை
பிரகாசிப்பித்து அருளுவதால் -இதுக்கடி திரு மந்த்ரமாய் இருக்கும் –
திரு மந்த்ரார்த்த நிஷ்டருடைய
பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையிலே பரக்கவும் உபபாதித்தது –
அத்தை அடி ஒற்றி இறே -ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -இருப்பது
அதன் படி இறே ஸ்ரீ நூற்றந்தாதி –
அவை இரண்டின் படியையும் பிரதிபாதித்த பிரபந்தம் ஆயிற்று –
ஸ்ரீ ஆழ்வார்கள் வைபவத்தையும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தையும் உபபாதிக்கையாலே –
ஆகையால் இது சரமத்தில் சரமமாய் இருக்கும் –

இனி
இப்பிரபந்த்த உக்தர் ஆனவர்களில் பிரதானரான ஸ்ரீ ஆழ்வார்கள்
திரு நஷத்ராதிகளை ஆசரிக்கைக்கு அடிஎன் -என்னில் –
ஆச்சார்யத்வத்தை   ஆசைப் பட்டு ஸ்ரீ கீதையும் அபயப் பிரதானமும் அருளிச் செய்த
பிரதம குருவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாய் வந்து
அவதரித்த ரோஹிணீ  புனர்வசு ஸ்வாதி நஷத்ரங்கள் என்ன
சைத்ர ப்ரோஷ்டபதாதி மாசங்கள் -என்ன –
யமுனா சரயூ தீரங்களான ஸ்ரீ மயூரா ஸ்ரீ அயோத்யாதி நகரங்கள் -என்ன
இவை தொடக்கமான உக்தி அனுஷ்டயங்களாலே   உபதேசித்து உஜ்ஜீவிப்பைக்காக வந்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஆகஸ்மிக கிருபையாலே –
அவதரித்த இவர்கள் உடைய திரு நஷத்ர  மாசங்களில்
ஸ்ரவணாதி நஷத்ரங்கள் -என்ன –
ஆச்வயுஜாதி மாசங்கள் என்ன
ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ மதுராதிகளோடே-சஹபடிதமான
ஸ்ரீ காஞ்ச்யாதி நகரங்கள் என்ன
அவற்றோடு சேர்ந்த ஸ்ரீ காவேரியாதி நதிகள் -என்ன
இவை எல்லா வற்றையும் அந்த இதிஹாசாதிகளிலே
கலௌ கலு பவிஷ்யந்தி -என்றும்
க்வசித் க்வசித் -என்றும்
இப்படி ஸூசிப்பிக்கையாலும்

அதுக்கு மேலே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற மகாத்ம்யத்தாலே
பக்தி பாரவச்ய பிரபன்னர் என்று பேர் பெற்று இருக்கையாலும்
அவனுடைய பற்றினால் தோற்றும் பதின்மராய்
பகவத் அவதார விசேஷமாக பக்தாத்மனா அவதரித்தவர்கள் ஆகையாலும்
அவன் உகந்து வர்த்திக்கிற அர்ச்சா ஸ்தலங்களான அகில திவ்ய தேசங்களிலும்
தாங்களும் அதுக்கு அனுரூபமான அர்ச்சா ரூபங்களை பரிக்ரஹித்து சேவித்துக் கொண்டு
அல்லாதார்க்குத் சேவ்யராய்  தங்களோட்டை  சம்பந்தத்தால் சர்வாத்மாக்களையும்
உஜ்ஜீவிப்பிக்க வல்லராய் இருக்கையாலும்
இவர்கள் திரு நஷத்ராதிகளும்  அவற்றோபாதி ஆதரித்து உபலாலிக்கக் குறை இல்லை –

இனி ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஸ்ரீ ஆண்டாள் -தொடக்கமான மற்றை மூவரும்
இவர்களுக்குப் பரதந்த்ரராய்ப் போருகையாலும்
அவர்களில் அதிசயிதமான வைபவத்தை உடையார் ஆகையாலும்
அவர்கள் அவதார கணநையில் இவர்கள் அவதாராதி  க்ரமங்களும் சஹபடிதமாய்த்து  –
இவர்களுடையவும் ஏற்றத்தையும் அறிந்து
ஆதரித்து போருமவர்கள் ஆகையாலே
ஆச்சார்யர்களும் ஆதரணீயர் ஆனார்கள் –

இனி
வேறாக ஏத்தி இருப்பாரான பிரதம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் –
மற்றவரைச் சாற்றி யிருப்பாரான-சரம பர்வ நிஷ்டர் உடைய வைபவத்தையும் –
தத் ஸூக்திகளின் உடைய வைபவத்தையும் –
தத் உபய சாரார்த்த சங்க்ரஹமான ரஹஸ்யத்தின் உடைய க்ருத்யத்தையும்  –
தத் பிரதிபாத்ய அனுஷ்டான சரம பர்வ நிஷ்டா க்ரமங்களையுமே
தத் பிரபந்த அந்வயம் உடையவர்களுக்கு
ப்ரபன்ன ஜன கூடஸ்த பிரசாதம் அடியாக
ப்ராப்ய சித்தி உண்டாம்படியையும் சொல்லித்  தலைக் கட்டுவதான
அர்த்த விசேஷங்களை
ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும்
பரோபதேச  ரூபேணவும்
அருளிச் செய்யா நின்று கொண்டு
இந்த குருபரம்பரா வைபவ கதன முகத்தாலே
குருகுல துர்யரான தாம்
சர்வர்க்கும் குருபரம்பர அந்வயம் உண்டாய்
உஜ்ஜீவிக்கும் படி பண்ணி உபகரித்து அருளுகிறார் –

———————————————————–

தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளையுடைய பிரசாதத்தாலே க்ரமாகதமாய் வந்த அர்த்த விசேஷங்களை
பின்புள்ளாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த ரூபேண உபதேசித்து பிரகாசிப்பிக்கிறோம் என்று
ஸ்ரோத்ரு புத்தி சமானார்த்தமாக பிரதிஞ்ஞை பண்ணி அருளுகிறார் –

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து ———–1-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை –
அதாவது -ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று திரு நாமமான இவர்க்கு
திருவாய்மொழியில் உண்டான அத்யந்த  அபி நிவேசம் அடியாக
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை என்று தேசம் திகழும் படியான திரு நாமம் ஆய்த்து -என்கை –
அது தோன்ற திருமலை யாழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை -என்று தாமே
திரு உள்ளம் பற்றி அருளினார் இறே –
இவர் அருளிச் செய்யும் அர்த்தங்களுக்கு எல்லாம் ஆப்தி இருக்கிறபடி –

இன்னருளால் –
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு
போரும்படியான பந்த விசேஷத்தை யுடையரான ஸ்ரீ பிள்ளை –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே –

வந்த வுபதேச மார்க்கத்தைச் –
யுபதேசிக்க வந்த அந்த யுபதேசத்தின் உடைய வரலாற்றை –
உபதேசமாய்ப் பேசுகின்றேன் -என்று மேலே கிரியை –
இத்தால்
தன் நெஞ்சில் தோற்றினதையே சொல்லி
இது சுத்த  உபதேச வார்த்தை என்பர் -என்றதுக்கு
எதிர்தட்டான சுத்த  சம்ப்ரதாயம் இருக்கிறபடி –
ஆக
கீழ்ச் சொன்ன பதத் த்ரயத்தாலும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியான சம்பந்தமும் –
ஜ்ஞான   பூர்த்தியும் –
தயா பூர்த்தியும்
தமக்குத் தஞ்சமாய் இருக்கிறபடி –

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த –
தாயாய் தந்தையாய் அன்னையாய் அத்தனாய் என்னுமா போலே
எனக்கு அன்னையும் அத்தனுமாய் இருக்கிறவர் –
எந்தையான முறையாலே
முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே
எனக்கு இன்னருள் பிறந்தது –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை -என்னுமா போலே
இப்படி தமக்கு நிருபாதிக பிதாவான பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
க்ரமாகதமாய் வந்த வழியை
பிரதிபத்தி பண்ணி யாய்த்து
இவர் உபதேசித்து அருளுவது –

அதாவது
விவஸ்வான் மனவே ப்ராஹ மானூர் இஷ்வாஹே பிரவீத் ஏவம் பரம்பரா ப்ராப்தா -என்கிறபடியே
பரம்பரையாய் வந்த அந்த பரிசுத்த ஜ்ஞான மார்க்கத்தை மனனம் பனி -என்கை   –

மார்க்கத்தைச் -சிந்தை செய்து-
மார்க்கத்தைச் -சிந்தை பண்ணி -என்றபடி –

பின்னவரும் கற்க –
தன் வழியைப் பின் சென்று பிழைக்க இருக்கும் பின்னவர்களும்
சந்மார்க்கவாதிகளாம் படி அப்யசிக்க –
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து
பின்னவரும் கற்க யுபதேசமாகப் பேசுகிறபடி –
அதாவது -நெறி யுள்ளி உரைத்த -என்னுமா போலே
சர்வஞ்ஞரான தாம் அருளிச் செய்தது எல்லாம்
சொல்லுமது விடு சுருதியாம் -என்கிறபடியே பிரமாண தமமாய் இருக்க
பின்புள்ளவர்க்கு பிரதிபத்தி ஹேதுவாய்
அப்யசிக்கைக்கு உடலாக
ஆராய்ந்து அருளிச் செய்த படி -என்கை –

வுபதேசமாய்ப் பேசுகின்றேன்-
இவ்வர்த்தத்தின் சீர்மை இருக்கிறபடி –
இது தான்
பிரபத்தி நிஷ்டர் வைபவம் தொடங்கி
ஆச்சார்யா அபிமான நிஷ்டர் வைபவம் இறுதியாக
உண்டான அர்த்த விசேஷங்களை இறே உபதேசமாகப் பேசுகிறது –
இப்படி கௌரவமான அர்த்த விசேஷங்களை பின்னவரும் கற்க
யுபதேசமாகப் பேசுகிறேன் என்று யுபதேசிக்கும் இடத்தில்
தமக்கு ஸ்ரீ பிள்ளை ரஹஸ்யமாக ஓராண் வழியாக உபதேசித்தால் போல் அன்றிக்கே
அகில சேதனரும் அப்யசித்து அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி பிரபந்த முகேன பிரகாசிப்பிக்கிறோம்-என்கிறார் –

சிந்தை செய்து பேசுகின்றேன் –
இவருடைய
யத்தி மனசாத்யாயாதி தத் வாசாவததி -இது வாய்த்து –

பேசுகின்றேன் -மன்னிய சீர் வெண்பாவில் வைத்து-
அது செய்யும் இடத்து வெண்பாவில் வைத்து யாய்த்து இவர் அருளிச் செய்தது
அதாவது தமிழுக்கு வெண்பா கலித்துறை என்னுமா போலே அநேகம் பாக்கள் உண்டே –
அதிலே கலித்துறையாலே ப்ரவர்த்தம் ஆய்த்து சரம பிரபந்தமான நூற்றந்தாதி
அதிலும், அப்யசிக்க எளிதாய் இருக்கிற வெண்பா என்கிற சந்தஸ் சிலே வைத்தாய்த்து
சதிருடைய தமிழ் விரகரான -தாம் அருளிச் செய்தது
கற்க இறே தாம் உபதேசிப்பது
வெண்பா இருகாலில்  கல்லானை -என்று இறே இதன் எளிமை இருப்பது –
அதுக்கு சீர் மன்னுகையாவது முச்சீர் நாற்சீர் என்று சொல்லப் படுகிற சீரோடு பொருந்தி இருக்கை –
அன்றிக்கே
புகழ் மலிந்த பா -என்னுமா போலே
இதுவும் சீர் மன்னி இருக்கிறது -என்னவுமாம் –
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் உடைய சீர் இறே இதில் பொருந்தி இருக்கிறது –
அதுக்கு அனுகுணமாக மன்னிய சீர் வெண்பாவில் வைத்து யோஜிக்கக் கடவது –

பேசுகின்றேன் –
பேசும் அளவன்று இது -என்னும் அர்த்தத்தை
எல்லாருடையவும் துர்கதியை கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூ வ்யக்தமாம் படி -முக்த கண்டமாகச் சொல்லா நின்றேன் –
நீங்கள் கேட்கிலும்   தவிரலுமாம் – நான் சொல்லி அல்லது தவிரேன் –
உபசன்னரானவர்களுக்கு –
ப்ரோவாசதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று சொல்லக் கடவ அர்த்தத்தை
பேசுகிறேன் என்று அபேஷா நிரபேஷமாக உபதேசிக்கை க்ருபாதிக்யம் இறே-

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார்   ஒருவருக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன்   மயர்வற மதி நலம் அருள
தாம் ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல்வார் ஆகும்படி
மயர்வற மதி நலம் அருளி வாழ்வித்தால் போலே
இவரும் –
தமக்கு ஸ்ரீ பிள்ளை அருளால் வந்த அர்த்தத்தை அடைய
உபதேசித்து அருளி
வாழ்வித்து அருளுகிறார் -ஆய்த்து –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: