ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -69 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

உணர்வார் ஆர் என்று
பிறர் விஷயமாகச் சொல்லிற்று
அது கிடக்க
உன்னாலே தான் உன்னை அறியப் போமோ
என்கிறார் –

—————————-

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உரு ஆய்–நீ சிறு குழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தளிரின் மேல்
அன்று–பிரளய காலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக் காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதிலுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

————————————————————————

வியாக்யானம் –

பாலன்  றனதுருவாய்-இத்யாதி
அக் குறட்டிலே தெறித்தால் இக் குறட்டிலே பால் பெருகும் படியான
பருவத்தை யுடையனாய்
ஏழு   உலகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பாவனான ஆலந் தளிரிலே நீ பண்டு கண் வளர்ந்து அருளின இதுவே
ஐந்தர ஜாலிகர் உடைய வ்யாபாரமாய்ப் போகை யன்றிக்கே
ப்ரமாணிகர் இத்தை சத்யம் என்னா நின்றார்கள் –

பாலன்  றனதுருவாய்-
தனக்கு ரஷகர் வேண்டும் தசையிலே தான் ரஷகனாய்
அப்ராக்ருதமான திரு மேனியைச் சிறுக்கி
சஜாதீயம் ஆக்குகை-

யேழுலகுண்டு -ஆலிலையின் மேலே
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே ஸ்வ வ்திரிக்த சகல பதார்த்தத்தையும் ரஷித்த படி –
சிறு வடிவுக்கும் கூடக் கண் வளரப் போகாத ஆலிலையின் மேலே –

அன்று நீ வளர்ந்த மெய் என்பர் –
லோகம் எல்லாம் அழிந்த அன்று
நீ கண் வளர்ந்ததை மெய் என்பர்
ஆப்த தமரான ரிஷிகள்

மெய் என்பர் -ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
பிரமாணிகருக்கு மெய் என்னலாய்
அல்லாதர்க்குப் பொய் என்னலாய் இருக்கும்

அந்த ஆலானது
தான் கண்ணுக்கிட ஒரு துரும்பும் கூட இல்லாத வன்று
கண்ட இடம் எங்கும் வெள்ளம் கோ த்துக் கிடக்கிற சமுத்ரத்தில் உள்ளதோ

அன்றிக்கே
நிராலம்பமான ஆகாசத்திலே உள்ளதோ

இல்லை யாகில்
பிரளயத்தில் கரைந்து போன பூமியில் உள்ளதோ

பின்னை இது தான் செய்தது என் என்னில் –
அவனும் இவரைக் கொண்டு நிச்சயிக்க நினைத்து இருந்தான்-

சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு –
நீ ஏழு பிராயத்திலே மலையை எடுத்து நீயே சர்வத்துக்கு
ஆதாரனுமாய் நின்ற ஆச்சரியமும் சொல்ல வேணும்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து-
உன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியம் கண்ணால் கண்டு போம் இத்தனை போக்கி
ஓரடி ஆராயப் போமோ
இவ்வாதார ஆதேய பாவம் புறம்பு கண்டிலோம் -என்கிறார்

இத்தால்
அவன் தன்னாலும் அவன் படி சொல்லப் போகாது -என்றபடி

இந்த ஆலுக்கு ஆதார பூமி தான்
நீருக்கு உள்ளே கரையாதே கிடந்தது
ஆரைப் பற்றி  –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: