அவதாரிகை –
நயவேன் நள்ளேன் என்று இங்கனே துணியலாமோ
எல்லாம் செய்தாலும் அவை வந்து மேலிடில் செய்வது என் என்னில்
நான் நின்ற நிலை இதுவான பின்பு
எங்கனே அவை வந்து என்னை மேலிடும்படி
என்கிறார் –
ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கையும்
அபாகவத ஜனங்களோட்டை சஹாவாசம் பண்ணுகையும்
பாகவதர்களோடு சஹவாசம் அற்று இருக்கையும்
ஈஸ்வரன் பக்கல் பிரதிபத்தியில் குறைந்து இருக்கையும்
புருஷகாரத்தில் அத்யவசாயக் குறை யுண்டாகையும்
இவை இறே தான் வினை வருகைக்கு அடி
அவை பின்னை எனக்கு உண்டோ –
என்கிறார் –
———————————————————————–
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–64–
—————————————————————————–
வியாக்யானம் –
நயவேன் பிறர் பொருளை –
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்னக் கடவது இ றே
த்ரவ்யமும் நன்றாய்
உடையவனும் ப்ராஹ்மணன் ஆனால்
அவ்வளவிலேயாய் இருக்கும் இ றே பாபமும் –
வஸ்து தான் ஆத்மாவுமாய்
உடையவனும் ஈஸ்வரனுமானால்
இனி அவ்வளவிலே யாம் இத்தனை இ றே பாபமும் –
பகவத் அதீய வஸ்துவை ஸ்வகீய புத்தி பண்ணேன் –
நள்ளேன் கீழரோடு –
பிறர் உடைய தான பொருளை
என்னது என்று இருப்பாரோடு செறியேன் –
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –
உத்க்ருஷ்ட வஸ்து உத்க்ருஷ்டம் என்று இருப்பாரோடு அல்லது
போத யந்த பரஸ்பரம் பண்ணேன் –
இவர்கள் பேர் சொல்லும் போது உயர்ந்தவர் என்று சொல்லுவர்கள்
இவர்களை உயர்ந்தவர்கள் என்றது -அவர்களைக் கீழோர் என்றது இதுவே யாகாதே
ஏற்றத் தாழ்வுகளுக்கு பிரயோஜனம்
உயவேன் -என்றது உசாவேன் -என்றபடி –
வியவேன் திரு மாலை யல்லது –
அவனை யல்லது தைவம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யம் ஒழிய வேறு சிலரது கண்டால் விஸ்மயப் படேன்-
இனி அவனை யொழிய வேறே சிலரை ஆஸ்ரயணீயர் என்று கொண்டு
அவர்களை ஸ்தோத்ரம் பண்ணேன் –
இங்கனே இருக்கிற என் மேல் வினை வருமாறு என் –
அனுபவ சேஷமாம் படிக்கு ஈடாகச் செய்தற்று நிற்கிற பாபங்கள் தாமே நம் பக்கலிலே வந்து கிட்ட வற்றோ
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற விதுக்கும் பிரயோஜனம் அனுபவிக்கை இறே
அதாகிறது இவன் பண்ணிற்று ஓர் அசத்க்ரியை அவன் திரு வுள்ளத்திலே கிடந்தது
நிக்ரஹ ரூபத்தாலே இறே பல பிரதமாவது
இதுக்குத் தனித்து ஓர் அழற்றி இல்லை
இனி அவன் ஏதேனும் ஒரு வழியாலே பிரசன்னனாம் அன்று பின்னை இவற்றுக்கு இடம் இல்லை
ஹேத்வந்த ராபாவத்தாலே இவற்றுக்கும் வந்து கிட்டப் போகாது இறே –
வருமாறு என் என் மேல் வினை –
ஔஷத சேவை பண்ணினவன் கூசாதே பாம்பின் வாயிலே கையிடா நின்றான் இறே
அம்மாத்ரம் போராமை இல்லை இறே இந்த ஜ்ஞானம் உடையவர் இவற்றுக்கு அஞ்சாதே இருக்கைக்கு –
என் மேல் வினை –
ஒரு சர்வ சக்தியைப் பற்றி இருக்கிற என் மேலேயோ ஓர் அசேதன க்ரியை வந்து கிட்டப் புகுகிறது
பிறர்க்கும் தன்னோடு ப்ராப்தி யுள்ள வன்று தனக்கும் தன்னோடு ப்ராப்தி யுள்ளது
ஆகை யன்றோ அந்ய சேஷத்வத்தோடு ஒக்க
ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் விலக்குகிறது
எம்பெருமான் மறக்க பூர்வாகங்கள் நசிக்கும்
அவன் அவிஜ்ஞாதாவாய் இருக்க
உத்தராகம் ஸ்லேஷியாது
இது திருவாய்க் குலத் தாழ்வானுக்கு ஜீயர் அருளிச் செய்த வார்த்தை-
———————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply