பெரிய திருமடல் -9-பின்னைத் தன்னாபி வலயத்து-18-அது நிற்க -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

 

பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15
என்னவும் கேட்டு அறிவதில்லை உளது என்னில்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16
அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்
தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-

—————————————————————-

பின்னைத் தன்னாபி வலயத்துப் –
பூவலயம் என்னுமா போலே திரு நாபி   வலயம் என்று-அதனுடைய பெருமையைச் சொன்னபடி –

பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –
கார்ய ரூபமான ஜகத்தும் இதுக்கு போராது என்னும்படியான விலஷணமான ஒளியை உடைய -கார்யம் பிரவர்த்தமாகா நின்றாலும்
காரணம் நசியாதே -நித்யமாய்-
ஜகத் காரணமான தாமரைப் பூவை உண்டாக்கி –
அன்றியே
மிக்க ஒளி சேர்ந்து இருக்கையாய்  -அது தான்
நித்யமாய் இருந்துள்ள தாமரை -என்றுமாம் –

அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –
அச் செவ்விப் பூவிலே நாலு பூ தோன்றினால் போலே-சிருஷ்டி காலத்திலேயே சதுர்முகனைத் தான் உண்டாக்க –

மற்றவனும்-
இவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று
மசக்குப் பாலிடலாம் படி  பெருத்த அந்தச் சதுர முகனும் –
முன்னம் படைத்தனன் நான்மறைகள் –
அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது
சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று
வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க
இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இ றே-
இனித் தானே
யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இ றே
ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே
அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி-
பிறந்து படைத்தான் -என்னக் கடவது இ றே பெற்றத்தை –
அம்மறை தான் –
அந்த வேதங்கள் தான்

மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்  நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே 
தர்மார்த்த காம மோஷங்கள் என்று லோகத்திலே நன்றான வழியாலே மேற்பட்ட நாலு புருஷார்த்தத்தோடே அடங்கப் பெற்றோம் இ றே –
முந்துற முன்னம் –அறம் என்கிறது தர்மத்தை –
மன்னு மறம்-என்கிறது சாத்திய ரூபத்தாலும் சாதனா ரூபத்தாலும்
ஒக்க கொண்டு நிற்பதொரு நிலை உண்டு இ றே
பொருள் என்கிறது -அர்த்த புருஷார்த்தத்தை
இன்பம் என்கிறது -தாம் ஆதரித்த காம புருஷார்த்தத்தை
வீடு என்கிறது நாலாவதாகச் சொல்லுகிற மோஷ புருஷார்த்தத்தை –

அந்நாலிலும்-பின்னையது பின்னைப் –
பின்னையது உண்டு -பிற்படச் சொல்லுகிற மோஷம்-அது பின்னையது-பின்னை-
அது பின்னை பின்னை என்றே போமித்தனை-இச் சரீரத்துடன் பெற்று அறிவார் இல்லை -அத்தைக் காற்கடைக் கொள்ளுகையாலும் சொல்லுகிற வார்த்தை இ றே
ஆசைப் பட்ட இச் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பரிஹரித்து-ஒரு தேச விசேஷத்திலே போய்க்-காலாந்தரே அனுபவிக்குமது ஒரு அனுபவமாயற்றதோ
அது ஓன்று அல்ல வி றே-அது தான் அவ்வசனங்கள் சொல்லக் கேட்கும் இத்தனை –
கண்டு வந்தார் ஒருவரும் இல்லை –

பெயர் தரும் என்பது –
பெற்றியத் தரும்-இஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தை பெற்று அனுபவிக்க வேண்டியதாய் இருக்கும் –
இஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பெற்று அனுபவிக்கை  யாவது-ஒருவன் தபஸ்ஸூ பண்ணி-அந்த தப பலம் வேறு ஒருவன் புஜிக்கும் மாத்ரம் அன்றோ-அன்றியே
பின்னைப் பெயர் தரும் -என்றாய் அதுக்கும் பொருள் அதுவே –

ஓர் தொன்னெறியை வேண்டுவார் –
சம்சாரத்தை ஒழித்து நிரதிசய ஸூ கமான மோஷத்தை வேண்டுவார் –
இப்படிச் சொல்லப் படா நின்றுள்ள பழையதான மோஷத்தை பெற வேண்டி இருப்பார் –
அத்தேசம் பிராப்யமானால் அங்குத்தைக்குப் போம் வழியும் ப்ராப்யாந்தர்க்கதமாகக் கடவது இ றே-
வேண்டுவார் –
அத்தையும் ஒன்றாக நினைத்து அபேஷிப்பார் என்று தமக்கு அதில் உண்டான அனாதாரத்தை சொல்லுகிறார் –

இனி இப் புருஷார்த்தத்தை அனுஷ்டிக்கும் சாதனத்தின் உடைய பொல்லாங்கை உபபாதிக்கிறார் -மேல் –

வீழ் கனியும் –
தானே விழுந்து பசை அற்ற கனியும்

ஊழிலையும் –
முளையிலே விழுந்த இலையும் –
முற்றிப் பழுத்த சருகான இலையும் –

என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்-
அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது
அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்
ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது
நுகர்ந்து –
அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-
உடலம் தாம் வருந்தி
அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து
தாம் வருந்தி
இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல்
தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய
தாமே கிலேசிப்பித்து-

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –
இலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் –
அதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும்
நித்ரை மரணத்தோடு  பர்யாயம்  ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –

வெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும்  –
உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய
வெய்யிலை பஷித்தும்-
மன்னு மழல் நுகர்ந்தும்-என்கிறது
உள்ளுப் புக்கால் அழல் மாறாதே இருக்கையும் -இதுவே தண்ணீராக நுகருகையும் –
காற்றை பஷித்தும் வெய்யிலை பஷித்தும் இ றே சரீரத்தை ரஷிப்பது –

வண் தடத்தினுள் கிடந்தும்-
அழகியதாக ஜலக்ரீடை பண்ணிப் போது போக்கலான தடாகங்களிலே சீத காலத்திலே
புக்கு நீர்க்காக்கை போலே முழுகிப் பாசி ஏறக் கிடந்தும் –

இன்னதோர் தன்மையராய் –
தப பலம் பெற்று அதிலே வ்யுத்புத்தி பண்ணினாலும் அதுக்கு ஆளாகாதபடி
துக்கமே ஸ்வ பாவம் ஆனபடி –

ஈங்கு உடலம் விட்டு எழுந்து –
நினைத்த படி அனுபவிக்கலான இங்கே தானாக அபிமானித்து
நெடுநாள் முகம் பழகின சரீரத்தை விட்டு எழுந்து போய்-

தொன்னெறிக்   கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
மோஷத்து ஏறப் போனார்கள் என்கிற உக்தி அல்லது –

இன்னதோர் காலத்து –
ஏதேனும் ஒரு காலத்திலே –

இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –
ஆரேனும் ஒருவர் இப் புருஷார்த்தத்தைப் பெற்றார் என்று கேட்டு அறிவது இல்லை –
பிரமாணங்கள் சொல்லக் கேட்கும் அத்தனை –
ஸூ கோ முக்தோ  வாமதேவோ முக்த -என்று வசனங்களைப் படிக்கும் இத்தனை அல்லது-கண்டு போந்தார் உண்டாகச் சொல்லுவார் இல்லை –
இன்னார் பெற்றார் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –
ஸூ க வாம தேவாதிகள் முக்தர் என்று சொல்லா நின்றதே
கேட்டு அறியத் தட்டென் என் என்னில் -நான் போனேன் இன்னபடி அனுபவித்தேன் என்று அங்குத்தை  யாவர் படியைக்-கண்டு வந்தார் சொல்லக் கேட்டு அறிவது இல்லை –

உளது என்னில்-
முதலிலே அங்கன் இருப்பதொரு புருஷார்த்தம் இல்லை –
அக்னிநா சிஞ்சேத்-அக்னியால் நனைக்கக் கடவன் -என்னுமா போலே
அது உண்டாக வேனுமாகில் அது இருக்கிற படி கேட்கலாகாதோ –

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் –
நித்யமாய் அனைய ஒண்ணாத படி கொடிதான கிரணங்களை யுடைய
ஸூ ர்ய மண்டலத்துள் இட்டுப் போக வேணுமாம் –
அவன் நூறாயிரம் யோஜனைக்கு அவ்வருகே சஞ்சரிக்க
இங்கே அவன் வெய்யில் பொறு க்க மாட்டாத இவன்
அவனை அணையப் போகையும் அன்றியே
அவனுடைய உள்ளே போக வேணுமாம்   –
அன்னதோர் இல்லியினூடு போய் 
அவன்தான் அப்படிப் போமிடத்து ஒரு பெரு வழி பண்ணிப் போகையும் அன்றியே
அப்படிப் பட்டதோர் இல்லியின் உள்ளிட்டாம் போவது-

வீடு என்னும்தொன்னெறி க் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் –
இவன் தான் ராஜ குலம் தோற்றப் போகக் கடவனாம் –
அவன் இவனுடைய சரீர விச்லேஷத்தளவும் அவசரம் பார்த்து நின்று முகம் காட்டக் கடவனாம் –
ஹார்த்தா நுக் ருஹீத  -பிரம்மா ஸூ தரம் -4-2-16-பரமாத்வால் அனுக்ரஹிக்கப் பட்டவனாய் வழி அறிந்து செல்லுகிறான் இந்த முக்தன் –
என்கிறபடியே ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுக்குமாம் –
தான் முன்னே கைவிளக்கு பிடித்துக் கொண்டு போமாம் –
இப்படி அந்த மோஷம் ஆகிற -பழையதாய் இருக்கிற தேசத்திலே
நான் போனேன் இன்னது கண்டேன் இன்னது அனுபவித்தேன் -என்று
வந்தார் ஒருவரைக் காட்டிச் சொல்லிக் காணுங்கோள்-
இப்படி அங்கே போய் வந்தான் ஒருவன் சொல்லுமாகில் அதுவும் ஒன்றாகக் கடவது –
சொல்லாதே-
இப்படி தான் பிரமாண ஸ்ரேஷ்டமான ப்ரத்யஷ அநுமா நாதிகளாலே இத்தை சாதிக்க
இதுக்கு ஒரு உப பத்தியை இட்டு ஏத்த மாட்டாதே –

அன்னதே பேசும் –
பின்னையும் இதுக்கு உத்தரமாக மேன் மேல் என
ஸூ கோ முக்த வாம தேவோ முக்த -என்று வசனம் படிக்கிற இத்தால் என்ன லாபம் உண்டு –

அறிவில் –
அவர்கள் ஆகிறார் –
தந்தாமுக்கு என்ன ஒரு விவேகம் இல்லாத அறிவு கேடர்

அறிவில்சிறு மனத்து –
இப்போது அறிவில்லை யாகிலும் மேல் அறிவு உண்டாகைக்கு ஈடான நெஞ்சில் அகலமும் இல்லை

ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே –
அவ் அவஸ்தா பன்னர் ஆனவர்களை கற்பிக்கை நமக்கு பரமாவதே –
கையிலே மடலை எடுத்துக் கொண்டு-இரண்டு அருகு உள்ளாறும் மலைக்க
பெரிய திரு நாளில் போலே உலாவித் திரியலாய் இருக்க-அவ்வறிவு கேடரை அறிவிக்கை நமக்கு பரமாவதே –

அது நிற்க –
இப்போது அத்தை விடுக-

————————————————————————–

பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –
சர்வ ஸ்ரஷ்டாவான தன்னுடைய நபி யாகிற குழலிலே மிக்க ஒளி சேர்ந்து இருப்பதாய்
ஏக ரூபமாய்ப் பெருத்து இருந்துள்ள தாமரை யாகிற பூவைப் பூப்பித்து –
தன் -என்கையாலே -ஜகத்காரண பூதன் -என்னும் இடம் தோற்றுகிறது-
நாபி வலயம் -என்கையாலே கார்ய ரூப பிரபஞ்சத்தின் உடைய  அகலத்துக்கு எல்லாம்
போரும்படியாக காரண பூதமான அதினுடைய அகலத்தைச் சொல்லுகிறது –
பேரொளி சேர் -என்கையாலே -ஸ்வேதர சமஸ்த வஸ்து வுக்கும் இது காரணம் என்றால்
அப்படிக்குப் போரும்படி காரணத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸில் ஒன்றும் குறையாது இருக்கை –
மன்னிய தாமரை -என்கையாலே -அப்போது உண்டான நன்மையைச் சொல்லுகிறது
அன்றிக்கே-இக் கட்டளை தான் ப்ரவாஹ ரூபேண நித்யமாய்ப் போரும் இ றே –
அத்தைப் பற்றச் சொல்லுகிறது –
மா மலர் –
நாநா வான தேவாதி கார்யங்களுக்கு எல்லாம் இது காரணம் என்றால் போரும்படியான
பெருமையை யுடைத்தாய் இருக்கை –
பூத்து -என்றது -பூப்பித்து -என்றபடி
மா மலர் பூத்துதான் கிடந்து-என்று கீழோடு அந்வயம் –

அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –
அந்தப் பூவிலே  நாலு பூ பூத்தால் போல் இருக்கை-
முன்னம் –
ப்ரஹ்ம சிருஷ்டிக்கு முன்புள்ள எல்லாம் தானே கை தொட்டுச் செய்கையாலே
நம்மோட்டைப் பரிமாற்றமும் கூடப் போறாத படியான சௌகுமார்யத்தை உடையவனுக்கு  –
ஓர் வித்தைக் கொண்டு கார்யம் கொள்ளுகையும் மிகையாய் இருக்க
இவனைப் படைக்கிற இது எதுக்கு என்று அவர்கள் நினைத்து இருக்க
அவனுக்கு அவ்வருகு உண்டானவற்றை இவனைக் கொண்டாகிலும் கொள்வோம் என்று-முந்துற முன்னம் சதுர்முகனை சிருஷ்டித்தான் –
ப்ரதமஜன் -என்னக் கடவது இ றே-
தான் படைக்க –
அவயவ தா நேன தானே உண்டாக்கினான் –
-மற்றவனும்-
சிருஷ்டித்து விட்ட அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று சொல்லலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் –

முன்னம் படைத்தனன் நான்மறைகள் –
தனக்குப் பிதாவான சர்வேஸ்வரன் பக்கல் இவன் பெற்றுப் படைத்தது நாலு வகைப் பட்ட வேதங்கள் –
பிதாவின் பக்கல் பெற்றுப் பரிபாலித்தது-இன்னது என்னக் கடவது இ றே –
அல்லது போக்கி வேதங்களுக்கு இவன் ஸ்ரஷ்டா வல்லன் –
ஸ்ரஷ்டா வாகாமைக்கு சர்வேஸ்வரன் தானும் ஒக்கும் இ றே –
ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லுமதுக்கு மேற்பட ஸ்ரஷ்டா வல்லாமைக்கு ஜீவ ஸ்ருஷ்டியோபாதி இ றே  வேத சிருஷ்டியும் –
ஆனால் இவற்றை உண்டாக்குகை யாவது என் என்னில்
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே
சக்த்ய வஸத ப்ரபை போலே அவன் பக்கலில் லயித்துக் கிடக்குமத்தை
சிருஷ்டி காலம் வந்த வாறே ஸ்மரித்துச் சொல்லும் அத்தனை இ றே –
பூர்வ பூர்வ உச்சாரணத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம் ஆகையாலே
ஆநு பூர்வீ க்ரமத்தை ஸ்மரித்துச் சொல்லும் இத்தனை –

அம்மறை தான் –
அந்த வேதங்கள் தான் புருஷார்த்தமாகச் சொல்லுகிறது –

மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று –
இங்கனே நன்றான புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –
ஜீவ பேதங்கள் ஒவ் ஒரு புருஷார்த்தங்கள் உண்டாய்
அவை  முந்துற முன்னம் எடுத்துக் கழிக்க வேண்டுவது இல்லையே
அறம் -தர்மம்
பொருள் -அர்த்தம்
இன்பம் -ஸ்வ பிரயோசனமான காமம்
வீடு -மோஷம்
மன்னுகை
சாத்திய சாதனா ரூபத்தாலே நிலை நிற்கும் ஆகாரம் உண்டு இ றே -அத்தைப் பற்ற –
அன்றிக்கே
அல்லாத அர்த்த காம மோஷங்கள் இதிலே பிறந்தது ஆகையாலே
அத்தைப் பற்ற என்றதாகவுமாம் –
அன்றிக்கே
இம்மன்னுகை தான் மற்றும் உள்ளவைற்றிலே யும் ஏற்றிச் சொல்லவுமாம்-
அது இவருடைய அபிப்ராயத்தால் அல்ல –
வாதி பிரதிகள் உடைய புத்தி பேதத்தாலே
ஏவம் விதமான தர்மமும் காம  சேஷம்  –
காமமே புருஷார்த்தம்
இனி பகவத் புருஷார்த்தம் ஓன்று உண்டு என்று சொல்லுவார்கள் –
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே –
என்று இங்கனே லோகத்திலே நன்றான வழியாலே பொருந்தப் பட்ட புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –
நான்கினிலும் –
அந் நாலிலும்-பின்னையது பின்னைப்-
அது பின்னையுமாய் இருக்கும்
அப்போது இப்போது என்று சொல்லிப் போரும் இத்தனை அல்லது பெற்று அறிவார் இல்லை-பின்னையும் அது நானா விதமாகச் சொல்லப் பட்ட புருஷார்த்தம் –

பெயர் தரும்-
பேற்றிலே தரும் என்பர்கள்
அந்த பிரகிருதி சமனந்தரம் காணப் பெறுவது என்பர்கள்
அதவா
பின்னையது பின்னை –
பின்னையது கடை வழி சொன்ன மோஷமானது
பின்னை
காலாந்தரே தேஹாந்தரே தேசாந்தரே பெயர் தரும் -பேற்றைத் தரும்

எனபது –
என்று சொல்லுகிறார்கள் -என்னவுமாம் –

ஓர் தொன்னெறியை வேண்டுவார் –
இப்படிச் சொல்லப் படுகிறனவாய்
அத்விதீயமாய்
பழையதாய்
இருக்கிற ப்ராப்யத்தை வேண்டுவோர்
அர்ச்சிராதி மார்க்கத்தை வேண்டுவோர் -என்னவுமாம்
ஜ்ஞானம் பிறந்த அநந்தரம்
கதி சிந்தையோடு
வழியில் போக்கோடு
தேச விசேஷ பிராப்தியோடு
வாசி அற ஜ்ஞான பலமாய்  வருகிறது ஆகையாலே ப்ராப்ய அந்தர்கதமாகக் கடவது –
இத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து பெற வேண்டி இருப்பார்க்கும்
இத்தால் ஸ்வ அபிமதம் அன்று என்னும் இடம் தோற்றுகிறது –
இப்பேறு  பெற வேணும் என்று இருப்பார் பண்ணும் சாதன அனுஷ்டாத்தின் உடைய
அருமை இருக்கும் படியை சொல்லுகிறது மேல் –
வீழ்  கனியும் ஊழிலையும் என்னும் இவையே –
இனிய வஸ்துவை புஜிக்கைக்கு இட்டுப் பிறந்த இவன் புஜிக்கிற த்ரவ்யங்கள் உடைய
அசாரத்தை நினைத்து  -இவற்றை தாம் வாய் விட்டுச் சொல்ல மாட்டாமே
இப்புடையிலே -என்னும் இவையே -என்கிறார் –

நுகர்ந்து –
இவற்றை புஜிக்கும் போது அம்ருத பானம் பண்ணுவாரைப் போலே போக்ய புத்தி கொண்டு  புஜிக்க வேணும் –
தனுடைய ஹேயதை நெஞ்சில் படில் புருஷார்த்த சித்தி இல்லை –

உடலம் தாம் வருந்தித்-
ச்தூலோஹம் க்ருசோஹம்-என்கிறபடி
நான் பொறுத்தேன் நான் இளைத்தேன் என்னலாம் படி தான் அபிமானித்த சரீரத்தை ஒறுத்து-அபிமத விஷயத்தை அனுபவிக்கைக்கு பரிகரமான சரீரத்தை ஒறுத்து   –

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –
நெருங்கத் தொடுத்த பர்ண சாலைகளிலே நித்ரை பண்ணியும்
நித்ரைக்கும் வினாசத்துக்கும் சாராதன சப்தமான துஞ்சுதலை சொல்லுகிறது
நித்ரை மரண கல்பமாகையாலே –

வெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும் –
சர்வ பதார்த்தங்களையும் தபிப்பிக்கும் உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய பொருந்தின உஷ்ணத்தை புஜித்தும்-
பதார்த்தங்கள் உள்ள விடம் எங்கும் புக்கு வ்யாபிக்கக் கடவதே புறப்பட்ட
போதொடு உள்ளே போய் புக்க போதொடு வாசி அற சுடக் கடவதாய் இருக்கிற அழலை நுகர்ந்தும்
சந்த்யா காலத்தில் ஆதித்ய கிரணன்களே யாயிற்று புஜிப்பது
தாஹகமான கிரணங்களை போகய பூதமாய் இருப்பதொரு பலம் போலே புஜித்து –

வண் தடத்தினுள் கிடந்தும்-
அபிமதைகளான ஸ்திரீகளுக்கும் நினைத்த படி ஜலக்ரீடாதிகள் பண்ணி அனுபவிக்கைக்கு யோக்யமான
அழகிய தடாகத்திலே அகமர்ஷணம் பண்ணியும் –
உட்கிடந்தும் –
மேலே கிளம்புதல்
இல்லே வர்த்திக்கிற ஜலசர சத்வங்களில் கண் வைத்தல் செய்ய ஒண்ணாது –
கிடந்தும்
அநேகம் ஆயிரம் வஸ்த்ரம் கிடக்கும் ஆயிற்று –
இன்னதோர் தன்மையராய்
ஏவம் வித ஸ்வபாவத்தை யுடையராய்

ஈங்கு –
இங்கு இருக்கும் நான் –

உடலம் விட்டு எழுந்து
அநந்தரம்தானாக அபிமானித்த சரீரத்தை பொகட்டு
தேசாந்தரே கை கழியப் போய்-

தொன்னெறிக்   கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்-
பழையதான மோஷத்து ஏறப் போனார்கள் என்று சொல்லப் படுகிற சொல்லே உள்ளது –
சொல்லால் அல்லால்-
உக்தி மாத்ரமேயாய்
ஒழியக் கண்டார் இல்லை-

இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –
இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –
மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை –
நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –
உளது என்னில்-
உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்-அன்னதோர் இல்லியினூடு போய்  வீடு என்னும்
நிலை நின்ற கொடிய கிரணங்களை உடைய ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டுப் போக வேணும் –
இங்கே நின்று ஆதித்யனைக்  காண  ஒண்ணாதே வெறியோடும்படி கொடிதான ஆதித்யன் உடைய அப்படிப் பட்ட-அதி ஸூ ஷ்மமான வழியே போய்-

தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதே பேசும்-அன்னதே பேசும் அறிவில் –
மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே
இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள்
அதுக்கு அடி அறிவு கேடராகை –

சிறு மனத்து
மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி
அல்ப மனாக்கள்
ஆங்கு
அவ்விடத்தில்
அன்னவரை
அப்படிப் பட்டுள்ளாரை
கற்பிப்போம்  யாமே
அறிவிப்போம் நாமே
உகந்த விஷயத்தில் மடல் எடுத்து பெறலான காலத்திலே
பிறர்க்கு அறிவிக்கை நமக்கு பணியோ-
கையும் மடலுமாக நாடறிய திரியா நின்றால்-இதுவே புருஷார்ர்த்தம் என்று அறியும்படி நாட்டில் உலவா நிற்க
ஓர் இடத்திலே இருந்து உபதேசிக்கி நமக்கு பணியோ –
அது நிற்க –
அது கிடக்க கிடீர்
அது ஒரு புருஷார்த்தம் என்று நினைத்து இருப்பார்க்கு அன்றோ அது வேண்டுவது என்று அத்தை உபேஷிக்கிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: