பெரிய திருமடல் -19-முன்ன நான் சொன்ன-39-அதனை யாம் தெளியோம் — -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட  கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க  நெரிந்துக்க வாணீலச்——31
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல்  ——33
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம்  மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39

————————————————————————–

முன்ன நான்  சொன்ன -இத்யாதி
முன்பு நான் இந்த நாலு புருஷார்த்தைத்தையும் சொல்லுகிற இடத்தில்
தர்மத்தில் வந்தவாறே -சாத்திய ரூபத்தாலும் சாதன ரூபத்தாலும் நிர்ப்பதோர் ஆகாரத்தைக் கொண்டு
மன்னும் அறம் -என்றேன் –
இஹ லோக போகத்தை வ்யாவர்த்திக்கைக்காகச் சொன்னேன் அத்தனை
அதில் நான் நினைத்த அம்சம் அறியாதே குவால் உண்டாக நினைத்து இருக்கக் கூடும் அறிவு கேடராய் இருப்பார் ஆயிற்று –
ச்வர்க்கே அபி பாத பீதச்ய ஷபிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50
அதுக்காக அவ்விடத்தை ஸ்பஷ்டமாக சொல்லா நின்றேன் -கேளுங்கோள்-

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்ற   –
முன்பு நான் சொன்ன அறத்தை சாஸ்திர உக்தமாக அனுஷ்டித்தவர்கள்
அறத்தின் வழி என்கையாலே அந்த உபாய அனுஷ்டானத்தின் உடைய மிறுக்குத் தோற்றுகிறது-
அது அனுஷ்டிக்கும் இடத்தில் கரணம் தப்பினால் மரணம்
அதில் ஏதேனும் ஒரு  ஸ்வரத்திலே அங்கத்திலே வைகல்யம் பிறக்கில் பின்னை
ப்ரஹ்ம ரஜஸ்  சாயப் பிறக்கும் இத்தனை –

அன்னவர் தாம் கண்டீர்கள்-
அத்தை அருமைப் பட்டு அனுஷ்டித்த அப்படிப்பட்ட அவர்கள் –

ஆயிரக் கண் வானவர் கோன்-
இங்கு நின்றும் போகிறவனுக்கு நிர்வாஹகனாய் இருக்கிறவன் ஆயிரம் கண் கொண்டாயிற்று
அவ்விஷயத்தை அனுபவிப்பது –

பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –

பொங்கொளி சேர்-
காலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை  அன்றிக்கே
புண்ய  பலம் ஆகையாலே
மிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –

கொன்னவிலும் கோளரி மா –
கொலையைச் செய்யா  நிற்பதுமாய்
எழுந்து இருந்து பாயுமா போலே -என்று சொல்லலாம் படியாய்
பெரிய மிடுக்கை யுடைத்தாய் இருந்துள்ள சிம்ஹங்கள் ஆனவை –

தான் சுமந்த –
ஹிருதயத்திலே பரிவோடு சுமந்தால் போலே யாயிற்று தரிக்கும் படி –

கோலஞ்சேர்-
நாநா வான வகுப்புக்கள் சஹஜமானால் போலே பொருந்தி இருக்கும் ஆயிற்று –

மன்னிய சிங்காசனத்தின் மேல் –
சம்சாரிகமான போகங்களில் காட்டில் நாலு நாள் எழ இருந்து எழுந்து
இருக்கலாம் படியான சிம்ஹாசனத்தின் மேலே –

வாணெடுங்கண்கன்னியரால் இட்ட  கவரிப் பொதிய விழ்ந்தாங்கு-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்களை உடையராய்
கால தத்வம் உள்ளதனையும் புஜியா நின்றாலும் அபூர்வைகளாய் இருக்கும் ஸ்த்ரீகளாலே இடப்பட்ட-கவரித் திரள் கட்டவிழ்ந்து -அவ்விடத்திலே –

இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த-
இனியதாய் மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல் சஞ்சரிக்கக்
கிண்ணகத்தை எதிரிட ஒண்ணாதா  போலே -போக்யதையின் மிகுதியாலே நேருக்க ஒண்ணாத
அருகே இருக்க வேண்டியவராய் –

மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –
விழேல் எண்ணப் பண்ணும் மின்னைப் போலி எண்ணப் படும் நுண்ணுய மருங்கை யுடையருமாய்
மிருது ஸ்வ பாவைகளுமாய் இருக்கிறவர்கள் உடைய ஹிருதயத்தில் கிடக்கிற பூக் கொய்கை யாகிற கார்யத்தைக் காட்டுகிற வெளுத்த முறுவல் ஆகிற –

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-
இள நிலா வந்து அரும்ப –

அன்னவர் தம் மானோக்கம் உண்டு-
அப்படிப் பட்டவர்கள் மான் போலே நோக்கை புஜித்து –

ஆங்கு அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம் மன்னிய மந்தாராம் பூத்த –
புண்ய பலத்தாலே நினைத்த போதே முன்பு தோன்றுகிற
சோலையிலே
முறுவலால் தோற்றுவித்த பூக் கொய்கையைப் பேசுகிறது

மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்-
நிலை நிற்கும் கற்பகங்கள் -குடியா வண்டு கள் உண்ணச்
சிறகு ஓசையிலே   அறியும் இத்தனை –

மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத்  தடம் கண்
மின்னிடை யாரோடும் –
அங்கு இவர்கள் ஒப்பனை இருக்கும் படி –

விளையாடி –

இனி ஓலக்கம் இருக்கும் படி சொல்லுகிறது –
வேண்டிடத்து-
அபேஷையின் படியே –

மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-
மாணிக்கங்களைக் கொத்துப்-பூம் கொத்தாகத்த் தூக்கி

மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய –
ஆடுவார் சாய்ந்து இருக்கை-

அரம்பையர் –
தேவ ஸ்திரீகள் –

தம் கை வளர்ந்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு-
நீரூட்டி வளர்த்தால் போலே கையாலே தடவி வளர்த்த

இன்புற்று –
அந்த போக்யதையை அனுபவித்து –

இனி சம்போக அனுபவம் பேசுகிறது
இரு விசும்பில் மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்மின்னொளி சேர் –
மேகம் இளைப்பாறும்-போக்யனான சந்திரனும் அப்படியே –

விசும்பூரும் –
பள்ளப் பாறை யுள்ள ஸ்தலம்

மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-
மாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –

மழைக் கண்ணார் –
அடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்

பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல்-
படுக்கை படுத்த படி கண்டு வாய் புலர்த்த –
விசித்ரம் -நாநா வர்ணமாகப் பரப்பப் படுத்த படுக்கையிலே –

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-
துன்னிய -காற்றைப் பிடித்து புகுரவிட வற்றாய் இருக்கை-
தாள் திறப்ப -வேண்டின போதே தானே திறப்ப –

அவ்வழியே புகும் தென்றலைப் பேசுகிறது
அன்ன முழக்க  நேரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்-
அன்னங்கள் புக்கு அள்ளல் சேற்றை உழக்குமா போலே-தேனும் சுண்ணமும் தாதும் ஒன்றாக உழக்க –

துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர-
அத்தாலே அது துகளாய்
ஒளி மிக்க நீலப் பாவின் சின்ன நறும் தாதை
ராஜாக்கள் வளையம் வைக்குமா போலே வைத்து
மந்தாரப் பூவைத் தோளில் தோள் மாலையாக ஏறிட்டு
கற்பகத்துக்கு எழுதிக் கொடுத்த வண்டுகள் தன்னைக் கொண்டு எழுந்து போகும் படியாய் –

இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலை  மேல்  -நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத்-மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல்
நாலடி இட்டுப் புகுந்து
அல்லோம் என்பாரும் விழ வற்றான போக்யதையை உடைத்தான சந்தனச் சேற்றை
சிற்றாள வட்டம் போலே முறையிலே உலர்த்த –

தாங்க அருஞ்சீர்மின்னிடை  மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்-
தாங்க அரியதாய் சீருடைய மின் போன்ற இடை மேலே கையை வைத்துக்
காந்தனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ண இருந்து –

பொன்னரும் பாரம் புலம்ப –
சம்ச்லேஷத்தைப் பேசின படி –

வகம் குழைந்து ஆங்கு-
உடன் பட்ட படி –

இன்ன வுருவின் –
இட்டு மாற்றினால் போலே இருக்கை –

இமையாத் தடம் கண்ணார் அன்னவர் தம்-
வைத்த கண் வாங்க இன்னாத போக்யதையை உடையவர்கள் –

மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் இன்னமுதம் மாந்தி
நோக்குப் பொறுத்த வாறே-முறுவல் பண்ண
அதுவும் உண்டு அறுக்க வல்லராம் படியாய் யாயிற்று  இருப்பது –

இருப்பர் –
போக்யாதிசயத்தாலே போக மாட்டாமை –

இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –
ஒரு சிறாங்கை என்கிறது –
கிருஷிக்கு தக்க பலம் போராமை-

ஒண் பொருளும் அன்ன திறத்தே யாதலால் காமத்தின்
ஒண் பொருளும் அத்தனையே
ஒண் பொருள் -ஆச்சார்யர்களையும் விட்டுப் பற்றுமவன் பஷத்தாலே –

மன்னும் வழி முறையே நிற்று –
ஆபாச காமத்தை ஒழிய நிலை நின்ற
பகவத் காமத்தின் வழியே-

நாம் –
காமத்தை ஒழிய சர்வத்தையும் விட்ட நாம்

மான் நோக்கின் அன்ன  நடையார் –
நோக்குக்கும் நடைக்கும்
தனித் தனியே மடலூர வேண்டும்படி இருக்கை –

அலரேச –
பிறர் பழி சொல்ல –

ஆடவர் –
தலைமகன் பேர்
மேல் –

மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
பிராணனை தரிப்பிக்கும் மடல் -மன்னு மடல் –

தென்னுரை
மிலேச்ச ஜாதி பிதற்றும் தமிழ்
உக்தி மாத்ரமே
அர்த்த யுக்தம் அன்று-

 

————————————————————————–

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்றஅன்னவர் தாம் கண்டீர்கள் –
வ்யவஸா யாத்மிகா புத்திரேகேஹ -அத்யாவஸா யாத்மிகையான புத்தியை உடையவனுக்கு
சாதன சாத்யங்கள் ஒன்றாய் இருக்கும் –
பஹூ சாகா ஹ்ய நந்தாச்ச புத்த யோ அவ்யவசாயி நாம் –
அவயவசாயிகள்   உடைய புத்தி பஹூ சாயையாய் இருக்கும்
பல தலையாய் இருக்கும்
சாதனங்களும் அநேகமாய்
சாத்யங்களும் அநேகமாய் இருக்கும் –
அப்படியே காம்ய ரூபமான கர்மம் தன்னையே
கர்மண்யே வாதி காரச்தே -என்கிறபடியே -அகர்த்ருகமாக பாலாபி சந்தி ரஹிதையான அனுஷ்டானத்தை அனுஷ்டித்தால்
மோஷ சாதனமாக கடவது என்கிற நியாயத்தைப் பற்ற பகவத் புருஷார்தத்துக்கு சாதனமாக சொன்ன முகத்தாலே தூஷித்தது கீழ் –
அந்த கர்மம் தனக்கு ஸ்வர்க்க போகத்தை புருஷார்த்தமாக  பிரதிபத்தி பண்ணி
அதுக்கு சாதனமாம் ஆகாரத்தாலே காம்யார்த்த பிரசுரமாய் இருக்கும் என்னும் இடத்தை காட்டுகிறது
கீழே நான் சொன்ன தர்ம மார்க்கத்திலே உத்சாகித்தவர்கள் கிடக்கிடி கோள்
அன்னவர் -என்கிறது
நேருவது எல்லாம் நேர்ந்து படுவது எல்லாம் படச் செய்தே
அல்பமேயாய் இருக்கிற
ஸ்வர்க்க புருஷார்த்தத்தை பலமாகக் கொள்ளுகிற ஹேயரை அநாதரிக்கிறார் –

அவர்கள் பலம் இருக்கும் படியைச் சொல்லுகிறது மேல்
ஆயிரக் கண்-
இப்படி நேருவது எல்லாம் நேர்ந்தவன் -விஷய தர்சனத்துக்கு ஆயிரம் கண் உடையவன் -விடத்தவாய் ஓராயிரம் இராயிரம் கண்   -என்று அவனுக்குப் பல கண் உண்டு இ றே -பகவத் அனுபவத்துக்கு –
புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றும்
அடைவுடையார் தோற்று அடைவு கெட நின்று ஏத்தும் படியான
கண் அழகை உடையவன் முகத்திலே போய் விழிக்கிறது அன்றே –
பீறின சீலை போலே கண்ட விடம் எங்கும் துளையாம் படி இருக்கிறவன் முகத்திலே இ றே விழிப்பது-
என்றும் விஷய ப்ரவணரில் நேத்ர பூதனை இங்கனே இ றே இவர்கள் சொல்லுவது –

வானவர் கோன்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியோ -என்பார்கள்
மனுஷ்யனில் காட்டில் நாலு நாள் எழ இருந்து சாம்
இவ்வளவைக் கொண்டு போரப் பொலியத் தங்களையும் அவர்களாக அபிமானித்து இருக்கும் ஆக்கரான
அமரர்களுக்கு நிர்வாஹகனான முகத்திலே யாயிற்று விழிப்பது    –

பொன்னகரம் –
திகழ் பொன்னுலகு ஆள்வார்-என்கிற தேசத்திலேயோ –
நரகாதிகளில் வ்யாவ்ருத்தி
அல்பமான தேசத்திலே யன்றே புகுகிறது –

புக்கு –
புகுகை தானே உத்தேச்யமாய்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் சத்கரித்து கொண்டாடப் போகிறதோ –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளப் புகுகிறதோ
அமரராய்த் திரிகின்றார்கள் -என்று ஆக்கறன தேவதைகள்
சம்சார பூமியிலே இருந்து
ஸ்வர்க்க அனுபவத்திலே ஸ்ரத்தை பிறந்து
இதுக்கு உறுப்பாக சாதன அனுஷ்டானம் பண்ணி
இவ்வளவு வருவானைக் கிடைக்குமே -இவனும் ஒருவனே -என்று கொண்டாடா நிற்பார்கள் –

பொங்கொளி சேர்-
சிம்ஹாசனத் தொழில் வகுப்பைக் கண்டு கொண்டு இருக்கும் படி
கிளர்ந்த ஒளி சேர்ந்து இருப்பதாய்
கோப்புடைய –

கொன்னவிலும் –
கொல் நவிலும் -கிட்டின அப்போதே முடிக்கும் என்று
கொலையை வ்யவஹாரியா நிற்பதாய் –

கோளரி மாத் தான் சுமந்த –
விநாசத்தை தரிக்கைக்கு -மிடுக்கை உடைத்தாய் இருப்பதொரு சிம்ஹமானது
தானே சுமந்து நிற்கிறதோ -என்று சங்கிக்கும் படி –

கோலஞ்சேர் –
நாட்டில் உள்ள தொழில் எல்லாம் இதிலேயோ -என்னும் படி அழகு சேர்ந்து இருப்பதாய் –

மன்னிய சிங்காசனத்தின் மேல் –
சம்சாரிகமான போகத்தில் காட்டில் நாலு நாள் எழ இருந்து பொகட்டுப் போகிறவர்களைப் போலே அன்றியே
வருவார்க்கு எல்லாம் தானேயாம் படி இருக்கையாலே -மன்னிய -என்கிறது
அரிமா -சிம்ஹம்
பாய்மா -கைம்மா -என்னுமா போலே
கோள் -மிடுக்கு
தான் சுமந்த -சிலர் சுமத்தச் சுமக்கை அன்றிக்கே ஆதாரத்தோடு தானே சுமக்கை –

வாணெடுங்கண்-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம்படியான கூர்மையை யுடைத்தாய்
புஜிக்கிறவன் அளவு அன்றிக்கே  விஞ்சின போக்யதையை யுடைத்தான கண் அழகை யுடைய –

கன்னியரால் இட்ட –
ஒரு கல்பம் எல்லாம் புஜியா நின்றாலும் பின்னையும் புதுமை மாறாதே இருக்கிற
ஸ்திரீகளால் இடப்பட்ட

கவரிப் பொதிய விழ்ந்து
அவர்கள் வீசின வாறே கட்டவிழ்ந்து எல்லாம் கூடத் தள்ளக் கடவது –
அத்தைப் பிரித்து வாங்கினவாறே விடக் கடவது
அத்தைப் பொதிகையும் விழுகையுமாகச் சொல்லுகிறது –

ஆங்கு –
அவ்வஸ்தையில் –
இன்னிளம் பூந்தென்றல் இயங்க –
ஆச்சா மரம் வீசுகையினாலே இனியதாய் இளையதாய் நன்றான தென்றல் வந்து சஞ்சரிக்க -என்னுதல்-
அன்றிக்கே
மந்த மாருதமாய் நாநா விதமான  பூக்களிலே போய் பிரவேசிக்கும் இடத்து
ஆவி எழுந்து வெக்கை தட்டி இருக்கிறபடி பிசுகி வருகை அன்றிக்கே
செவ்விப் பரிமளத்தை கொய்து கொடு வந்து –
தென்றலானது இயங்க என்று தோன்றல் தானாகவுமாம் –
ஒரு சேதனன் புகுந்தானாய் சம்போகத்துக்கு துணுக்குப் பிறக்கும் படி இருக்கை அன்றிக்கே
சம்போக வர்த்தகமுமாய் ஸ்பர்ச வேத்யமுமாய் இருக்கை –
கவரியான போது தன் பக்கல் நின்றும்  வேறு ஒன்றில் போகாதபடி நெஞ்சும் இனியதாய்
உடம்பிலே பட்டவாறே துணுக்குப் பிறக்கும் படி இருக்கை –

மருங்கிருந்த-
போக்யைகளான ஸ்திரீகளை ஒழிய தரிக்க மாட்டாமையாலே கூட வைத்துக் கொண்டு இருப்பார்கள்
அதின் முன்னே இருக்கிற கிண்ணகப் பெருக்குப் போலே
எதிர்ச் செறிக்க ஒண்ணாத படி ஆழம் காலாய் அருகே வைத்துக் கொண்டு இருப்பார்கள்  -மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –
போக்தாவானுக்கும் இவள் இவ்விடையைக் கொண்டு எங்கனே தான் தரிக்கும் படி -என்று கண்ட போதெல்லாம்  துணுக்கு என்னும் படி –
மின்னொத்த நுண்ணிய இடையை யுடைய ராகையாலே கலக்கவும் பொறாதே கை வாங்கி இருக்கவும் பொறாத
மார்தவத்தை யுடையரான ஸ்திரீகள் உடைய
வெண் முறுவல் உண்டு -தந்த பங்க்தி -அதனுடைய –

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-
முன்னம் என்கிறது அபிப்ராயம் –
அந்த அபிப்ராயம் ஆனது போய் பக்வமாய் ஆரம்பித்தால்   போலே இருக்கிற இரு நிலாவானது வந்தரும்ப –

அன்னவர் தம் மானோக்கம் –
இன்ன விடத்தே போய் விளையாடக் கடவோம் என்கிற நினைவை
நோக்காலே ஸ்மரிப்பிபாள்  யாயிற்று –

உண்டு –
அப்படிப் பட்ட மிருதுவான நோக்கை யுடைய அவர்கள் நோக்கிப் பருகி
இது காணும் அவர்களுக்கு உஜ்ஜீவனம்
இவன் ஒன்றாக ஸ்மரித்து அத்தை உண்டு அறுக்க மாட்டாதே கிடந்து அலையா நிற்க -அதுக்கு மேலே குளிர்ந்து நோக்குவார்கள்

ஆங்கு
அவ்வளவிலே –

இவர்கள் லீலா ரசம் அனுபவிக்கும் படி சொல்லுகிறது மேல்
அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-
செறியப் பூத்த பூக்கள் பரப்பு மாறி இருப்பதாய் பொன்னாலே செய்யப் பட்டதாய்
கற்பகக் காடாய் தரிசு கிடக்கும் இடம் எல்லாம்
மாடெல்லாம் மன்னிய –
உண்டாய் உள்ள –

மந்தாராம் பூத்த –
பூவாய்க் கிடக்கும் –

மதுத் திவலை –
அப்பூவில் உண்டான மது வெள்ளத்தின் உடைய திவலையிலே-

இன்னிசை வண்டு –
அத்தைப் பானம் பண்ணுகைக்காக வண்டுகள் படிந்து கிடக்கும் –
அவற்றுள் வண்டு உண்டு என்று அறிவது அவற்றின் இன்னிசை  கேட்டவாறே யாயிற்று

அமரும் சோலை வாய்
பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று சோலை இடத்திலே –

மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் –
ஒரு கொம்பில் நின்றும் பறித்துப் போந்து மாலையாக்கிக் சேர்க்கிற விளம்பத்தாலே வரும்-செவ்வி யழியுமது அன்றிக்கே-குழலிலே மாலையாய்ப் பூத்தால் போலே இருப்பதாய் –
நாயகன் முன்பே மயிரை ஒரு கால் குலைத்தால் அவனுக்கு சகல தாபங்களும் ஆறும்படியாய் –
பெரிய மயில் தோகை விரித்தால் போலே இருக்கிற அளக பாரத்தை யுடையருமாய்
கால தத்வம் உள்ளதனையும் துவக்குகைக்கும் மயிர் முடியே போந்து இருக்க
அதுக்கு மேலே கண்ணாலே ஒரு கால் கடாஷித்தால் ஒரு பாட்டம் வர்ஷித்தால் போலே இருக்கும் படி குளிர்ந்த  கண்களை யுடையருமாய் இருந்துள்ள –

மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
ஸ்திரீகளோடே போக உபோகாதத்திலே கால ஷேபத்தைப் பண்ணி
வேண்டிடத்து விளையாடுதல் -என்னுதல்-
வேண்டிடத்து மன்னும் மணித்தலத்து என்று மேலே கூட்டுதல்  –
நெடும் போது விளையாடி ஆயாசிக்கையால் உண்டான ஸ்ரமம் ஓர் இடத்திலே இருந்து ஆற வேண்டி இருக்கும் இ றே-
இவனுடைய புண்ய பலம் பக்வமாய் இருக்கையாலே இவன் இருக்க அபேஷிதமான விடத்தே  அப்போதே அது உண்டாய் இருக்கும் –

மன்னு மணித்தலத்து –
உண்டான நீல ரத்னங்களாலே சேர்த்துச் சமைக்கப் பட்டு இருந்துள்ள நிலத்திலே

மாணிக்க மஞ்சரியின்-
மாணிக்கக் கொத்துக்களை இடையிடையே அழுத்துவார்கள்
ஒரு பிரதேசத்திலே பொன் அரிதாய் இருக்குமா போலே
அங்குத்தையார்க்கு ஆச்சர்யமாய் இருப்பது பளிங்கு யாயிற்று –

மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-
மின்னொளி போலே இருக்கிற ஒளியை யுடைத்தான பளிங்கைக் கொண்டு
வந்து -விளிம்பிலே குறடு கட்டுவார்கள்  –

மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் –
சாய்ந்து நிற்கிற ஸ்திரீகளுக்கு ஓரடி போகில் தரிக்க வரிதாம் படியான பவளத் தூணை யுடைத்தாய்-மாற்றற்ற செம் பொன்னால் செய்யப் பட்ட மண்டபத்திலே

அன்ன நடைய வரம்பையர் தம் –
அன்னத்தோடு ஒத்த நடையை யுடையராய் இருக்கிற அப்சரஸ் ஸூ க்களுடைய –

கை வளர்த்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு –
நீர் வரத்து வளர்ப்பாரைப் போலே இவர்களுடைய கர ச்பர்சமே நீராக
வளர்ந்த இனிய இசையை யுடைத்தான யாழில் உண்டான பாட்டைச் செவியாலே அனுபவித்து-சாம க்ரியால் குறைவற்று இருக்கிற யாழைத் தட்டி பின்பு அது பண் பட்ட வாறே மிடற்றிலே மாற்றிப் பாட அத்தைக் கேட்டு –

இன்புற்று –
ஆனந்த நிர்பரனாய்-

இனி ஒரு வெளி ஒலக்கமும் சம்போகார்த்தமாய் இருப்பதொரு இருப்பும்
ஒரு தென்றலும் அபேஷிதமாய் இருக்கும் இ றே -அத்தைச் சொல்லுகிறது –

இரு விசும்பில் –
பரப்பு உடைத்தான ஆகாசத்திலே –

மன்னு மழை தவழும் –
கங்கை கடக்கிற போது ஒரு மழையும் துளியும் மின்னும் உதவினால் போலே
போகத்திலே அந்வயித்த போது ஒரு இருட்சியும் பிரகாசமும் அபேஷிதமாய் இருக்கும் இ றே –

வாணிலா நீண் மதி தோய் மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-
ஆகாசத்திலே சஞ்சரிக்கிற மாளிகைகளிலே பெரு விலையனான ரத்னன்களை
அவித்து ஏற்ற வேண்டாத படி விளக்காக ஏற்றி பிரகாச அபேஷை இல்லாமை  யாலே
மங்கள தீபமாய் இருக்கும் அத்தனை இ றே –

மழைக் கண்ணார்-
படுக்கை படுப்பார் என்று சில பெண்கள் உண்டு –
அவர்கள் படுக்கையை குளிரப் பார்த்தால் சேதன சமாதியாலே படுக்கையாய் இருக்கும் அத்தனை –

பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் —
படுக்கையிலே போய் இவன் சாய்ந்தால் -படுக்கை வாய்ப்பு இருந்த படியே -என்று
வாய் புலர்த்தும் படியாய் நாநா வர்ணமாய் முடங்கலற்று
படுக்கப் பட்ட படுக்கையிலே யாயிற்று சாய்வது –
அப்போது காற்று அபேஷிதமாய் இருக்கும் இ றே –

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் –
அவ்விடம் தான் சுற்றும் ஜாலகமுமாய் இருக்கும் இ றே
வேண்டின போது வேண்டின வடிவு கொள்ளலாய் இருக்கும் இ றே –

சூழ் கதவம் தாள் திறப்ப –
விரல் நுழையாத படியாய்க் காற்றுக்கு சீரை வடியிட்டுப் புகுர வேண்டும்படி நெருங்கி
இருந்துள்ள ஜாலகங்களில் சுற்றும் உண்டான கதவுகள் தாள் நீங்க –

தாள் திறப்ப –
தென்றல் புகுந்து -கருத சங்கேதிகள் சதவு திறக்குமா போலே
புண்யமடியாக வருகிறதாகையாலே சிலர்  அடைக்கவும் திறக்கவும் வேண்டா வி றே  –

அன்ன முழக்க –
அப்போது புகுரும் காற்று இருக்கும் படி சொல்லுகிறது
பெடையோடு செங்கால அன்னம் துகைப்ப -பெரிய திரு மொழி -3-8-9–என்னுமா போலே-அன்னமானது மிதுன சம்போகார்த்த மாகவும்-மதுபானார்த்த மாகவும் சென்று இழியும்-இவை சஞ்சரிக்கையாலே பூவும் தாதுவும் தேனும் சுண்ணமும் ஒன்றாகக் குழம்பும் –

நெரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடி-
பின்னைப் போய் நெரிந்து உகுந்து ஒளியை யுடைத்தாய்-இவை துவக்கையாலே முகம் கர்கிச் சிதறி-பரிமளம் அதிசயமாய் இருந்துள்ள தாதைச் சூடி-இத்தை யாயிற்று வளையமாக வைப்பது –

யோர் மந்தாரம்துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் –
ஒரு மந்தார மரத்தின் உடைய நெருங்கப் பூத்துப் பரிமள பிரசுரமாய் இருக்கிற பூக்களை
ஹர்ஷத்தாலே தோளிலே கொட்டிக் கொண்டு –

கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
ஒரு காலும் பிரியக் கடவோம் அல்லோம் என்று சூழ்த்துக் கொடுத்து –
ஒரு விஷயத்திலே தொடர்ந்து போவாரைப் போலே
கல்பக தருவிலே ஏக ரூபமாய் இருந்துள்ள புஷ்பத்திலே
மதுபானத்தாலும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலும் நரை திரை மூப்பு அற்று இருக்கிற வண்டுகளானவை பின் தொடர
இக்காற்றைக் கண்டவாறே இதுக்கு முன்பு இக்காற்றைக் கண்டறியோம் என்று தன்னை அநாதரித்துப் போகச் செய்தேயும்
ஒரு தலைக் காமமாகத் தானே காற்றை பின் தொடரா நிற்கும்
இது பின் தொடர் வேண்டும் படி –

இன்னிளம் பூந்தென்றல் புகுந்து
இனியதாய் இளையதாய் பரிமளிதமாய் இருந்துள்ள தென்றலானது
போக வர்த்தகமாய் கொண்டு புகுந்து

ஈங்கு இள முலைமேல் நன்னறும் சந்தனச் சேறு –
இவ்வளவிலே எப்போதும் ஒக்க ஷோடஸ வார்ஷிகைகளாய் இருக்கையாலே முலையும் இளையதாய் இருக்கும் இ றே –
அதின் மேலே போக யோக்யமாக அலங்கரிக்கப் பட்டு இருந்துள்ள
நன்றாய் பரிமள பிரசுரமான சந்தனக் குழம்பை –

உள் புலர்த்தத் –
மேல் எழ அன்றியிலே அந்தப் பணிக்குக் கடவார்  சிற்றால வட்டம் கொண்டு ஆற்றுமா போலே புலர்த்த –

போக்தாவும் ஈடுபடியான வைதக்த்யம் சொல்லுகிறது
தாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து –
இத்தை எங்கனே தான் கொண்டு தரிக்கும் படி -என்று கூச வேண்டும்படியான அழகை யுடைத்தாய் –
தாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து —
முலையைத் தாங்க அரிதாய்
அழகிய மின் போலே இருந்துள்ள இடையின் மேலே கையை வைத்து கொண்டு இருந்து

ஏந்து இள முலை மேல் பொன்னரும் பாரம் புலம்ப –
ஏந்தப் பட்டு சமைய வளர்ந்து இருந்துள்ள முலை மேலில்
சம்போக சமயத்திலும் கழற்றிப் பூனை வேண்டாத படி சஹாஜமாய் இருக்கிற
முத்துக்களும் பொன்னுமாய் அரும்பி
உட்கழுத்தாரம் சம்போகத்தில் உண்டான வ்யாகுலதையாலே அங்கே இங்கே அலச
இவளுக்கு நாம் ஆபரணமாகப் பட்டதே -என்று கூப்பிடுகிறாப் போலே யாயிற்று இருப்பது –
த்ரிசரம் பஞ்ச சரம் தனியாரம் இவை தன்னிலே அலசின ஓசையைச்  சொல்லுகிறது -புலம்பிற்றாக-இதாயிற்று புறம்பு படுகிறபடி –

வகம் குழைந்து –
அகவாயில் ஆட்டம் பேச்சுக்கு நிலம் அல்லவே
முலை மேல் பொன்னரும்பாரம் -என்று ஆரம் பூண்டதாய் இருக்கை அன்றிக்கே
முலை தான் ஆரமாய்க் கொண்டு அரும்பினால் போலே யாயிற்று ஆரம் பூண்டு இருக்கும் படி -என்றுமாம் –

ஆங்கு-
ஹிருதயம் அழிந்த அவ்வஸ்தையிலே-

இன்ன வுருவின் –
ஏவம் விதமான ஸ்வரூப வை லஷ்ண்யத்தை யுடையராய் –

இமையாத் –
கண் இமையோடு இமை பொருந்தில் ஜகத் உபசம்ஹாரம் என்னும்படி இருக்கையாலே
இமையோடு இமை பொருந்தாதே
இமையா -என்று ஸ்வரூப கதனம் அன்று
விஷய தர்சனத்தால் இமையாமை –

தடம் கண்ணார் –
கண்ணின் பரப்பு அடங்கிலும் இமையாமைக்கு உறுப்பு –

அன்னவர் தம் மாநோக்கம் உண்டு –
அப்படிப் பட்டவர் உடைய விலஷணமான நோக்கை யாயிற்று புஜிப்பது –

ஆங்கு அணி முறுவல்இன்னமுதம் மாந்தி இருப்பர்-
அந்நோக்கை பருகி அது சத்மியா நின்றவாறே முறுவல் பண்ண
அத்தாலே அழகிதான முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணி
அதினாலே தங்களை அழிந்து இருப்பார்கள் –

இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –
இது வி றே அப்படிப் பட்ட தர்மத்தின் உடைய பிரயோஜனம் ஆயிற்று
ஆகையாலே தர்மமும் காம சேஷம்
மோஷம் தானே தள்ளுண்டது
இனி சேஷிப்பது அர்த்தம் இ றே –

ஒண் பொருளும் அன்ன திறத்தே –
சிறியார் பெரியார் இன்னார் என்று வாசி இன்றிக்கே எல்லாரும் ஒக்க நன்று நன்று என்று-விரும்புகிற அர்த்தமும் காம சேஷம் –

யாதலால் காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் 
ஆதலால் -அர்த்த ஸ்திதி இப்படியே இருக்கையாலே
பிரதான புருஷார்த்தமான காமத்தின் உடைய நிலை நின்ற வழியிலே
முறை கெடாத படி நின்றோம் நாம் –
இப்படி ஒழிய அபிமத விஷயத்தை பிரிந்த ஆற்றாமை கரை புரளச் செய்தேயும் எதிர்தலை வரக் கண்டு இருக்கைக்கு மேற்படத்-தாம்தாம் அர்த்திக்கக் கடவது அல்ல வென்று விவஷிதர் அல்லாதார் சொல்லுவது ஒரு பாசுரம் உண்டு
அது சாஸ்திரமே யாகிலும் நமக்கு அது பாஷம் அல்ல –

மானோக்கின்அன்ன நடையார் அலரேச –
அபிமத விஷயத்திலும் கண்ணிலும் மௌக்த்யத்திலும் குறி அழியாதே
நடையிலும் தோற்ற தோல்வி இன்றிக்கே  இருக்குமவர்கள்
இரண்டு மருங்கும் இருந்து பலி சொல்லா நிற்க-

ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு –
அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான
மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –

அதனை யாம் தெளியோம் —
அப்படிப் பட்ட அது தன்னை நாங்கள் இகழ்ந்த மிலேச்ச ஜாதிகளிலே
அப்பாஷையிலே கேட்டுப் போருவது உண்டு
அத்தை  அபிமத விஷயத்தைப் பெற்று அல்லது தரியாத நாம்
அனுஷ்டேயமாகத் தேறோம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: