ஸ்ரீ பெரிய திருமொழி -10-2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

இரக்கம் – பிரவேசம் –

திருப்பதிகளை அனுபவித்தார் கீழ் –
அது தலைக் கட்டி
அவதாரங்களிலே போந்து அனுபவிக்கிறார் –

(ராஜகுமாரர்க்கு பிடி தோறும் நெய் சேர்க்குமா போல் இவருக்கு அடி தோறும் அர்ச்சை –
அவதாரமும் அர்ச்சையும் ஒன்றாகவே தோற்றும் இவருக்கு )

இதிலே –
தமக்கு அபிமதமான -ராம விஜயத்தை
எதிரிகள் மேல் எழுத்திட்ட பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
அங்குத்தை விஜயம் தமக்கு இஷ்டம் ஆகையாலே
அந்த விஜயத்துக்கு இலக்காய்த்-தோற்ற ராஷசர் தசை பிறந்து-
பிராட்டிமார் தசை பிறந்து பேசுமா போலே
தாமான தன்மை தோற்றாதே-
தோற்ற ராஷசர் பாசுரத்தாலே
ஸ்ரீ ராம விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் –

(தசரதர் யசோதை தேவகி கோபிமார் போல் மற்றவர் அனுபவிக்க இவர் –
காளியன் போல் அநுகரித்த கோபிகள் போல்
ராக்ஷசர் பாசுரமாகவே அருளிச் செய்கிறார் )

—————————————

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

(இராவணன் பட்டனன்–நாங்கள் பட்டதைப் பார்த்தால் அவனும் சீக்கிரம் படுவான் -மாள்வான்
ம்ருத்யு பரன் இறந்தது சமம் -இருந்தும் இல்லாதது
பாடும் ஆழ்வார் அறிவாரே -இப்படி மூன்றும் –
(ஏழாம் பாட்டில் -இலங்கைக்கு இறை தன்னை எங்களை  யொழியக் கொலையவனை- சொல்வதால்
இவ்வாறு மூன்று நிர்வாகங்கள் )
தடம்-ஒத்தது
பொங்கத்தம் பொங்கம் -ஜெய ஸூசக வாசக கோஷம் )

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை
பெருமாளையும்  பிராட்டியையும் சேரக் கண்டால்
வடிவாய் நின்  வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே
மங்களா சாசனம் பண்ணப் பிராப்தமாய் இருக்க
மிதுனத்தைப் பிரித்த நிர்த் தயனான ராவணன் செய்த தீமை –

யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்-
இஹைவ பலம் அஸ்நுதே -என்கிறபடியே
இஹ லோகத்திலே எங்களுக்கு பலித்தது –

பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் –
பல சொல்லி என்-
தான் செய்த தப்பின் பலம் தானே அனுபவித்தான் –
அன்றிக்கே
இன்னார் பட்டார் என்று அறியாமையாலே ராவணன் பட்டான் -என்னவுமாம் –
பிற்பட்ட காலத்திலே சொல்லுகிறார் ஆகையால் இவருக்கு
அவன் பட்டான் என்று சொல்லவுமாம்-

இனி யாவர்க்கு உரைக்கோம் –
இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லுவோம்  –

குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
வானரயூத பதிகாள்
இளைய பெருமாளே
தர்ச நீயமான வலியை உடைத்தான  வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகனே –

அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை-
ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று
பட்டர் அருளிச் செய்தார் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஒரு நொண்டி ஆடு -ஏக சிம்ஹம் ந பஷ்யாமி -லௌகிக கதை உண்டே
இது ஓர்  அர்த்தமாய் இராமையாலே இங்கனே இது சொன்னாலோ -என்று நான் கேட்டேன் –
சொல்லல் ஆகாதோ -என்ன –
ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று பிள்ளை அருளிச் செய்தார் –

நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –
எதிரிகளை வென்று அவ் வெற்றியாலே
தூரய கோஷத்தைப் பண்ணுவித்து
அதுக்கீடாக ஆடும் கூத்துப் போலே –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு
கூத்துண்டு –
அந்த சப்த அநுகாரம் -பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-

பொங்கத் தம் பொங்கம்-என்ன தொடங்கின வாய்
அஞ்சினபடிக்கு ஸூசகமாய் பொங்கோ என்று குறைத்து நிர்த்தேசித்தார்-

———————————————————–

(எச் சீலோ தத் தாசர் -தலைவர் போல் தொண்டர்கள் அன்றோ என்ன
அவன் தலை பத்து உடையவன் என்று தீமைகள் செய்தான்
எங்களுக்கு அப்படி இல்லையே -விட்டு விடும் என்கிறார்கள் )

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

அத்த-தந்தை -அத்தனாய் அன்னையாய் -ஸ்ருஷ்டித்த ஆதி முதல்வன் என்றவாறு

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான்-
வாக்யம் உக்தம்  தசாநன-என்கிறபடியே
உனக்கு அவர் காலிலே விழ பத்துத் தலை உண்டு
அஞ்சலி பண்ணுகைக்கு இருபது கைகள் உண்டு
அவரைச் சரணம் புக வல்லையே -என்றான் இறே விபீஷண ஆழ்வான்
பத்துத் தலையையும் -வலியையும் -பெருமையும் உடையனாய்
இருபது தோளையும் உடையனானவன் விஷய பிரவணனாய் தன் சம்பத்தை அழித்தான் –
செய்வதொன்று அறியா வடியோங்கள்-
ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் –
அறிவு கேடரான நாங்கள் –

ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் –
இரண்டு தோளும் ஒரு முடியும் விக்ருத வேஷர் அல்லாத
பெருமாளை பெறாமையாலே கெட்டோம்
வாழ்ந்தோம் -என்று ஷேப பரம் –

அன்றிக்கே
இரண்டு தோளும் ஒரு முடியுமே இருக்கிற நாங்கள்
விஷய ப்ரவண்யர்   அல்லாமையாலே வாழ்ந்தோம்  –

அன்றிக்கே –
ஒத்த -பரஸ்பரஸ்ய   சத்ருசௌ-என்கிறபடியே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும்
ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே
எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
கண்டு என்கிற இடம் அத்தனையும் அத்த்யாஹரித்துக் கொள்வது –

அத்த-
எமக்கு ஜனகன் ஆனவனே –

யெம்பெருமான் –
எங்கள் நாதனே –

எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-
எங்களைக் கொல்லாது ஒழிய வேணும் –
அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-

——————————————————————

(கீழே மங்கையர் பால் -தேவதா ஸ்த்ரீகள் பக்கல் ப்ராவண்யம்
இதில் பெருமாள் இடம் நேராக தீரக் கழிந்த அபசாரம் )

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

(குல வேந்தே-தாசரதீ-குற்றம் இல்லாதாரைக் கொல்லாத இஷுவாஹு வம்சம் அன்றோ )

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான் கொண்டு போந்து கெட்டான்
தான் இருந்த இடத்திலே அவர் வந்து
அடை மதிள் படுத்த அபகாரம் பண்ணினான் அன்று –
காட்டிலே தாபச வேஷத்தோடு திரியா நிற்க
அங்கே வந்து பிராட்டியைப் பிரித்து
நிர்க் க்ருணனான   பையல் கேட்டுப் போனான் –

எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே
நாங்கள் செய்ததொரு குற்றமும் இல்லை
எங்களைக் கொல்லாது ஒழிய வேணும்
நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்
(வாய்மையையும் மரபையும் காத்த குலம் -தாசரதீ -வாலியும் சொல்வான் அன்றோ )

பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய்-
விஷய ப்ரவணராய் கெடக் கடவ இஜ் ஜாதியை
எத்தைச் சொல்லுவது-
ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன்  மகனே
(சம்பராசூரனைக் கொன்று தேவர்களுக்கு உதவிய சக்ரவர்த்தி )
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் –
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –

——————————————————–

(எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை என்று சொன்னீர்களே
அவன் தையலைக் கொண்டு போக
நீங்கள் ஹிதம் சொல்லாமல்
எதிர் அம்பு கோத்து வந்தீர்களே என்ன
தம்பி -ஹிதம் -நல்லது -சொல்லியும் கேளாதவன் எங்கள் வார்த்தை கேட்ப்பானோ )

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
எஞ்சல்-என்று சங்கோசம் –
பிராட்டியைக் கொண்டு புகுந்தானாய்
இவ்வூரிலே வந்து இவளை மீட்க வல்லார் உண்டோ -என்று குறைவற்றவனாய் இருந்த ராவணனை
நாங்கள் அடைய ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க
எங்கள் முன்னே அவன் காலிலே விழுந்து

நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை
ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –

விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன –
விஞ்சி வானவர் -என்று வித்யாதரராய் -அத்தாலே தேவ ஜாதிக்கு உப லஷணம்
(தேவர்கள் பிரார்த்தித்த படியே அன்றோ ராமர் திரு அவதாரம் )
பரிமளத்தை உடைத்தாய்
பரந்த பொழிலிலே
தன் நிலத்தில் மயில் போலே இருக்கிற –

அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-
சுருண்டு நெய்த்து பரிமளிதமாய் என்றாப் போலே
அஞ்சு வகைப் பட்டிருப்பதாய்த்
(இருட்சி நீட்சி சுருட்ச்சி குளிர்ச்சி அழகு ஐந்தும் -அல்லும் -இருட்டு -கறுத்து )
இருண்டு இருந்துள்ள மயிர் முடியை உடைய பிராட்டியை
கொடு போங்கோள்-

அஞ்சு -என்று அஞ்சு வகைப் பட்டிருக்கை –
அல் -என்று இராத்திரி-அத்தால் இருட்சியை நினைக்கிறது –
ஓதி -என்று மயிர் முடி –

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

———————————–

(கீழே ராவணன் ம்ருதப்பிராயன் என்று பிராட்டியைக் கூட்டிச் செல்ல சொல்லி
அவன் ம்ருதப்பிராயனாக -உடலாக – பிரபல வீரர்கள் பட்ட வற்றைச் சொல்லி
முதலிகளைப் பிரார்த்திக்கிறார்கள் )

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

(கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி-ராவணன் இடம் முன்பு தோற்ற
யமதர்ம ராஜனே ராமனாக மானுஷ உருவத்தால் வந்து என்றபடி )

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
ஸ்லாக்கியமான-திக் விஜயம் பண்ணிக்  கவித்த  முடியை உடையனான
எங்கள் ராவணன் பிராட்டிஎன்ற ஒரு தேவதையை கொண்டு வந்து –

வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
புதுமை மாறாதே இருப்பதாய்
பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம்
தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து
அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்

கும்பனொடு நிகும்பனும் பட்டான் –
அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் –

கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து
ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-
அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –

அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

————————————————-

(கூற்றம் மானிடராய் வந்து என்று சொன்னீர்
திருவடியே நெருப்பு வைத்த போதே அஞ்சி அஞ்சலி பண்ண வேண்டி இருக்க
கதே ஜலே சேது பந்தம் போல் இப்போது கூப்பிடுவான் என்ன
அத்தனை விவேகம் இருந்தகால் இவ்வாறு படுவோமோ )

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

ஓத மா கடலைக் கடந்தேறி –
அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே
யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –

யுயர் கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
ஒக்கத்தை உடைத்தாய்
பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –

காதல் மக்களும் சுற்றமும் கொன்று –
ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும்
அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –
(ஸப்த மந்திரி ஸூதான் -வால்மீகி -ஏழு மந்திரி குமாரர்கள் )

கடி யிலங்கை மலங்க எரித்துத் –
அரணை உடைத்தாய்
அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர்
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
(வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)

தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –
நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

ஆதர் நின்று படுகின்றது  அந்தோ –
ஆதர் -என்று இளிம்பர் என்றபடி
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-
அச்சம் அல்லாத அன்று பட்டத்தை
இன்று பட வேணுமோ

———————————————-

(தோன்றலின் தேவியை விட்டுக் கொடாதே கெட்டோம் என்று கீழே சொல்லி
ராமர் சார வர்ஷம் -சார்ங்கம் உதைத்த சார மழைக்கு அஞ்சி
பெருமாள் முன்னே ராவணன் உடைய மதி கேட்டைச் சொல்லி
அவனை அன்றோ வதம் செய்ய வேண்டியது என்கிறார்கள் )

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை  யொழியக் கொலை யவனைச்
சூழு மா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம்  பொங்கோ —10-2-7-

தாழமின்றி முந்நீரை –
அக் கரை படுக்கைக்கு ஒரு கடல் இடைச் சுவராய் கிடந்தது என்னா
விளம்பம் இன்றிக்கே –

யஞ்ஞான்று தகைந்ததே கண்டு-
கடலை அணை செய்தது ஒன்றுமே கண்டு
இத்தைக் கண்டால் இவன் நம்மை அழிக்க வல்லன் என்று இருக்க வேண்டாவோ –

வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை –
இவள் வடிவு அழகுக்கு அவன் வேணும் அத்தனை அல்லது
நமக்குத் தகாள் என்று பார்த்து
இவளை விட்டு வாழ மாட்டாத மதி கேடனை –

ஏழையை-
அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –

இலங்கைக்கு இறை தன்னை –
இது ஒன்றுமே ஆயிற்று புத்தி பண்ணி இருந்தது –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று
இது ஒன்றுமையே நினைத்து  இருந்தான் –

எங்களை  யொழியக் கொலையவனைச்-
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –

சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம்-
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் –
தடம் பொங்கத்தம்  பொங்கோ

——————————————–

(ஸாஷாத் மன்மத மன்மதன் -காமனுக்கும் தாதையான
பெருமாள் சந்நிதியில் ராவணனைக் கொல் என்ற
அனந்தரம் ராவணனைக் கொன்றதைப் பார்த்து அஞ்சி
முதலிகள் இடம் விண்ணப்பம் செய்கிறார்கள் )

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-8-

(அனங்கன்-அங்கம் இல்லாத மன்மதன் -ருத்ரன் சாபத்தால் உடல் எரி
எம் கோன் -எங்கள் இராவணன் -மாறி எம்மிராமற்கு )

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனக்கு யோக்யமான விஷயம் இல்லாமை கெட்டான் அல்லேன்
ஹிருதயத்தை ஹரிக்க வல்லவர்களாய்
நெஞ்சுக்கு பொருந்துவர்களுமான
மண்டோதரி தொடக்கமான அழகிய கயல் போலே இருக்கிற
கண் அழகை உடையவர்கள் இருக்க –

தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம் கொள்
மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் –
தனக்கு தனமாய்
சர்வஸ்வமாய் இருக்கிற அவர்கள் முலைகளைப் பாராதே
இவளுக்கு தஞ்சமே வருவார் சில தாபசர் அன்றோ
அவர்களில் சரக்கு என் -என்று
பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –

புக வெய்த
உறைக்க எய்ய வல்லனாய்

அனங்கன் அன்ன திண் தோள் எம்மிராமற்கு -அஞ்சினோம் –
அழகிய வடிவையும்
திண்ணிய தோளையும்
உடைய பெருமாளுக்கு அஞ்சினோம் –

————————————————

(ஸூர்யன் மைந்தன் ஸூக்ரீவன்
மஹா பாரதம் – சூர்யன் மைந்தன்-கர்ணன்
இந்திரன் பிள்ளை வாலி அர்ஜுனன் இங்கும் அங்கும்
இதில் ஜாம்பவானைப் புருஷகாரம் முன்னிட்டு
பட்ட அடி -அம்பு கோரம் அறிந்தவர்கள் என்பதால் அம்பி விடாத பொழுதும்
பெருமாள் உடைய அம்பின் தீஷிதயைச் சொல்லி ஸூக்ரீவ மஹா ராஜர் இடம்
ஆன யேனம் ஹரி சிரேஷ்டர் -இவர் கூட்டிச் சென்றது உண்டே
அங்கதன் போல்வார் இருக்க ஜாம்பவானைப் புருஷகாரம் மூத்தவர் என்பதால் )

புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு  எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம்  தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில் சரங்களே கொடிதாய் அடுகின்ற –
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன்
அம்புகளில் காட்டில் கொடிதாய் இருக்கிற
ராம சரங்கள் எங்களை முடியா நின்றன –

சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
வ்ருத்தராய் நன்மை தீமைக்களுக்கு கடவராய் ஸ்ரீ ஜாம்பவான் –

இரங்கு நீ எமக்கு  எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா குரங்குகட்கு அரசே –
மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் –
எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே –
லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர்
சர்வ நிர்வாககர் அன்றோ –

எம்மைக் கொல்லேல் கூறினோம் –
நாங்கள் சொல்லச் செய்தே
எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் –
தடம் பொங்கத்தம் பொங்கோ-

————————————————–

(மஹா ராஜர் சந்நிதியில் கூடினோம் என்று சொன்னாலும்
இவர்கள் கூத்து கண்டு வாய் சொல்லாமல் இருக்க
முதலிகள் அனைவர் இடம் பிரார்த்திக்கிறார்கள்
பலத்தையும் தானான தன்மையில் அருளிச் செய்கிறார் )

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
தேவ ஜாதி குடி கிடக்கும்படி
தர்ச நீயமான இலங்கையை அழித்த
சக்கரவர்த்தி திரு மகனைக் கவி பாடிற்று –

பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு-
அவரைப் போலே ஆண் பிள்ளை ஆனவர் ஆயிற்று
கவி பாடினார்
புகன்ற -சொன்ன –

இவ்வுலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது
ஜிதந்தே -என்றால் –
எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-

இம்மையே இடரில்லை இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் –
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் பரம பதம் –
அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –
தடம் பொங்கத்தம் பொங்கோ   –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

இரக்கமில் அரக்கன் சொல் கொள்ளாமல் சீதை
சிறை வைத்தும் வாயு மைந்தன் ஆற்றல் முறைப் பெண்டிர்
சேது பந்தம் பாரா பட்டான் எனத்தான் பொங்கத்தம்
ஓதும் கலியனை ஏத்து –92-

வாயு மைந்தன் ஆற்றல் பாரா -முறைப்பெண்டிர் பாரா -சேது பந்தம் பாரா -என்று அன்வயம் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: