முந்துற -பிரவேசம் –
திரு வல்ல வாழைச் சேரப் பாராய் -என்றார் தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அது தம்முடைய த்வரைக்கு ஈடாக ப்ரவர்த்திதது இல்லை –
சர்வ ரஷகனாய் -(1 பாசுரார்த்தம் )
அர்த்தித்தார் உடைய சர்வ பலங்களையும் கொடுக்க கடவனாய்-(3 பாசுரார்த்தம் )-
சர்வாதிகனாய்-(4 பாசுரார்த்தம் )
விரோதி நிரசன சீலனாய்-(5 பாசுரார்த்தம் )
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையனாய் -(6-7-8 பாசுரார்த்தம் )
சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு-(2 பாசுரார்த்தம் )
திருமலையிலே வந்து நின்றான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் –
அதிலே ஒருப்படு-என்று
பிதாவானவன் முந்துற நமஸ்கரித்துக் காட்டி
பின்னை
காட்சியிலே முற்பட்டு
தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –
(கீழே மருவு நெஞ்சே ‘பலகாலம்
இங்கு வணங்குதும் வா மட நெஞ்சே
சொன்ன வேகத்துக்கு நெஞ்சு வரவில்லை
பண்ணிக் காட்டிக் கூட்டிச் செல்கிறார் -சங்கதி )
——————————–
பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய்
தவிரிலும் தவிருகிராய் –
இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு
நிற்கப் பாராய் -என்கிறார் –
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-
விசிஷ்ட அத்வைதம் -சரீராத்மா பாவம் -அசாதாரணம் நம் சித்தாந்தத்துக்கு –
சர்வாத்மாவாய் இருந்து சர்வ ரக்ஷகன் –
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு –
உனக்கு செய்ய வேண்டுமதில் நான் முந்துறச் சொல்லுகிறது –
பரிமளத்தை உடைத்தான குழலை உடையரான ஸ்த்ரீகளோட்டை சம்ஸ்லேஷத்தை நன்று என்று
அது குவாலாக நினைத்து இருக்கும் அத்தை விட்டு –
தடுமாறல்-
அலாபத்தால் வரும் வ்யசனம் பொறுக்க ஒண்ணாது என்று அத்தை விடு –
தடுமாற்றத்தை பண்ணுவது ஓன்று -என்னுதல்
அன்றிக்கே
கலவி யாகிற தடுமாற்றம் -என்னுதல் –
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில் –
சப்த த்வீபங்களும்
சப்த சமுத்ரங்க ளுமாய்
நிற்கிற சர்வ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து –
நல்ல சந்தனத்தோடே கூட பெரு விலையனான ரத்னங்களையும்
அந்த சந்தன மரங்களையும்
வேரோடு பறித்து விழ விட்டு
பெரிய ரத்னங்களையும் கூடக் கொண்டு –
தர்ச நீயமான மயில் தழையையும் உருட்டிக் கொண்டு
அருவிகள் ஆனவை நெருங்கி –
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே-
வந்து -இழியா நின்றுள்ள பர்யந்தத்தை உடைத்தான
திருமலையை வணங்குவோம்
வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே –
—————————————-
கீழே சர்வாத்மதயா சர்வ ரக்ஷகத்வம் அனுசந்தித்தார்
இதில் சர்வ சமாஸ்ரயணீயத்வத்தை அனுசந்தித்து நெஞ்சைக் கூட்டுகிறார்
இமையோர்-அண்டரும் பரவ வரவணைத் துயின்ற-சர்வ சமாஸ்ரயணீயத்வம்-
இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-2-
கடவுள்-ப்ரதானர்-ஸர்வேஸ்வரன் -ஈஸ்வரேஸ்வரன் –
கடவுள் பத பிரயோகம் அருளிச் செயல்களில் மிக குறைவாகவே இருக்கும் –
இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று
நல்ல பூ மாலையும்
சமாராதானத்துக்கு பிரதான உபகரணமான ஜலமும்
இவற்றைத் தரித்துக் கொண்டு இடைவிடாதே ஒருப்படுங்கோள்-நாம் ஆஸ்ரயிக்கும் படியாக என்று –
இமையோர் அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்-
நித்ய ஸூரிகளும்
அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க
திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடைய
ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
விட்டு அலரா நிற்பதாய்
தூளி உண்டு -சுண்ணம் -அத்தை உடைத்தாய்
மூங்கில் வளரா நின்றுள்ள பர்யந்தத்திலே
பரிமள பிரசுரமான
குறிஞ்சியினுடைய செவ்வித் தேனை –
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
வண்டுகள் ஆனவை
பானம் பண்ணா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைய –திரு மால் இரும் சோலையை வணங்குதும் –
—————————————–
(கீழே சர்வ சமாஸ்ரணீயம்
இங்கு சகல பல பிரதத்வம்
ஆஸ்ரயண பலன்களைக் கொடுக்க வல்லவன்
சமஸ்தருக்கும் ஸமஸ்த பல பிரதத்வம் -தன்னைக் கேட்டாலும் தன்னையே தருமவன் அன்றோ )
பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-
த்ருஷ்டும் காமானி -கண்களுக்கும் மனத்துக்கும் – வாம ஸூ கம் கொடுக்கும் வாமனன்
கணி-கணன-எண்ணும் ஜ்யோதிஷன் போல் வேங்கை
பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி –
துக்கத்தை வளரா நின்றுள்ள சரீரத்தை கழிக்க வேணும் என்று ஆஸ்ரயிக்க –
அதுக்காக பரந்த பூமியை நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளி –
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில் –
அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன்
பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –
(பின்னானார் வணங்கும் சோதி -காலத்தாலும் ஞானத்தாலும் பின்னானார் )
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த-மணி வளர் சாரல் –
அங்குத்தைக்கு வேறு நாள் சொல்லுவார் இல்லாமையாலே
கணியாகக் கொண்டு வளரா நின்றுள்ள
வேங்கையை உடைத்தாய் -பரப்பை உடைத்தான பூமியிலே
ஆண்டுக்கு ( ஆட்டைக்கு ) ஒரு கால் இது பூக்கக் கடவதாய்
அத்தை இட்டு ஆண்டு என்று அறியும் இத்தனை ஆயிற்று –
இந்த வேங்கையை உடைத்தான வெளி நிலத்திலே
அங்கு உள்ள குறவர் ஆனவர்கள் தம்தாமுடைய
எறி கவனையிலே வைத்து எறிந்த மணி யினுடைய ஒளி
எங்கும் ஒக்க பரம்பா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —
————————————————
(இஷ்ட ப்ராபகத்வம் கீழே அருளிச் செய்து
அநிஷ்ட நிவ்ருத்தி உபயுக்தமாக செய்து அருள வேண்டுமே
ரக்ஷகத்வம் -முதல் பாசுரம் -என்றாலே அநிஷ்ட நிவ்ருத்தமும் இஷ்ட பிராப்தியும் வேண்டுமே –
விரோதி நிரஸனம் இதில் )
சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார் மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-
தேன்-இங்கு மகரந்தத்தைச் சொல்லும் –
நீர்மை -பெண்ணுக்கு வேண்டிய மென்மை –
நினைந்தவர்-அன்று ரக்ஷிக்க சங்கல்பமும் –
பிற்பாடார் ரக்ஷணத்துக்கு உறுப்பாக இங்கு நித்ய வாசம் செய்த சங்கல்பமும்
சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
க்ரௌர்யத்தை வடிவாக உடைய பூதனை முலையைச் சுவைத்திட்டு –
இவன் முகத்தில் விழித்து வைத்து பின்னையும் இரங்காத படி இறே க்ரௌர்யம்-
எதிரிகள் மேலே நெருப்பைத் தூவிக் கொண்டு சென்று
விழுகிற அம்புகளை முடிக்க வற்றான வில்லிலே தொடுத்து விட்டு –
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் –
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மென்மை இல்லாத தாடகை முடியும்படியாக
ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு
ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு
ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று
விரும்பி -வர்த்திக்கிற கோயில் –
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வார் புனல் சூழ் தண் –
மேக பதத்தளவும் செல்ல ஓங்கின வேங்கை என்னுதல்-
நீல வேங்கைகள் என்னுதல் –
கோங்கு ஆகிற வ்ருஷம்-
இவை அலரா நின்றுள்ள பர்யந்தத்திலே
பரிமள பிரசுரமான குறிஞ்சியினுடைய செவித் தேனானது வெள்ளம் இடா நின்றுள்ள
ஸ்ரமஹரமான திருமலை – மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
—————————————————-
(ராவண வத அனுபவம் இதில்
கீழ்ப் பெண்களான விரோதிகள் பூதனையும் தாடகையும்-கண்ணனையும் ராமநாயும் நிரசித்த அனுபவம்
ஆண் பிள்ளையாய் வீர வாசி அனுபவம் இதில் )
வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழி தரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5-
வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமேயம் -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் வணங்கேன் -என்று இருந்த ராவணன் யுத்த பூமியிலே மடிய –
தேவதைகள் உடைய வரத்தாலே திண்ணியதாய் ரத்ன மயமான முடி பத்தும்
புற்று மறிந்தால் போலே கிடந்தது துடிக்க –
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில் –
தைவா விசிஷ்டம் போலே இருக்க அவனுடைய சரீரமானது நின்றாட –
சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற
பூசலிலே பொறுத்த ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழி தரப் பெருந்தேன் மணம் கமழ் சாரல்-
ஒன்றோடு ஓன்று பிணைந்து
பெரிய ஒக்கத்தை உடைத்தான மூங்கிலானது
மலை முழைஞ்சிலே வைத்த தேன் கூட்டளவும் வர வளர்ந்து
தன்னுடைய நுனியாலே அதனுடைய வாயைக் கிழிக்க
தேன் வைத்த நாலு வகைப் பட்ட ஈக்களும் வந்து இழிய
தேனினுடைய கந்தமானது எங்கும் ஒக்க பரம்பா நின்றுள்ள
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
———————————–
(கீழே கிருஷ்ண அவதாரம் பிரஸ்த்துதம்
அத்தை விசதமாக திரு அவதாரம் தொடங்கி மேலே மூன்று பாடல்களாலே அனுபவிக்கிறார் )
விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6-
விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி-
மது கைடபர்கள் தொடக்கமான உகவாதவர் மேலே விஷத்தை உமிழா நிற்பானாய்-
(திரு மெய்யத்தில் இந்தத் திருக்கோலம் இன்றும் சேவிக்கிறோமே )
அவனுக்கு எப்போதும் விடாதே மருவ வேண்டும்படி திரு மேனிக்கு அனுரூபமான
சௌகுமார்யத்தை உடையனான திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –
அங்கு நின்றும் போந்து
அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
(ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஷீராப்தி நிகேதன –ஆகதோ மதுரா புரீம் )
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்-
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி –
பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
கடல் மணலே சேஷிக்கும்படி ஜலாம்சத்தை முகந்து
மேகங்கள் போய் ஆகாசத்தே ஏறி
உள்ளுப் புக்க த்ரவ்யத்தின் கனத்தாலே அங்கே நின்று பிளிற
அதனுடைய த்வநியைக் கேட்டு –
மடங்கல் நின்ற –
மடங்கல் உண்டு -சிம்ஹம்
அது மலையிலே வர்த்திக்கிற ஆனையாக புத்தி பண்ணி
நாம் வர்த்திக்கிற தேசத்திலே வேறேயும் ஓன்று வர்த்திக்கை யாவது என்-என்று
சீறி அதிரா நின்றுள்ள –
திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
—————————————————
(கீழ் பாட்டில் விளங்கனிக்காக இளம் கன்று
இதில் பனங்கனிக்காக -தேனுகாசுரன் -கழுதை வடிவாக நம்பி மூத்த பிரானைக் கொண்டு நிரசித்த அனுபவம்
பாற் கடல் போல் பலராமன்
தடம் கடல் வண்ணர் கண்ணபிரான்
அவர் செய்ததும் இவர் செய்தது போலே அன்றோ –
பிருந்தாவனம் -12 பிரதான ஆரண்யங்கள் உண்டே )
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர –
தேனுகன் உடைய பிராணன் முடியும்படி
அங்கே அடியே பிடித்து தலை அளவும் செல்ல தர்ச நீயமாம் படி
பழுத்துக் கிடக்கிற பனம் பழங்கள் உதிரும்படி –
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –
ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று
திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற கோயில் –
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து –
மரகதத்தின் உடைய ஒளியை யுடைத்தாய் கொண்டு
ஆகாச அவகாசம் அடையும் படி ஓங்கி இருந்துள்ள சோலையில் உள்ளில்
நீலப் பாறைகளில் உண்டான வழியே போய்ப் புக்கு –
மானுகர் சாரல் –
மான்கள் ஆனவை
அங்கு உள்ள தேன்களைப் பருகா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய –
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
—————————————————-
(கழுதையை முடித்தது கீழே
குதிரையை முடித்தது இதில் -கேசி வத அனுபவம்
பூதனை தொடக்கம் கேசி பர்யந்தம் அனுபவம் இங்கு உண்டே )
புத மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பத மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கத மிகு சினத் தகட தடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-
(சினம் தவிர்த்த-கோபம் போக்கவே-த்வேஷம் போக்கவே – கேசியை முடித்தான் என்றவாறு )
புத மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று –
அம்புதத்தை குறைத்து புதம் -என்று கிடக்கிறது –
மேகங்களாலே நெருங்கின ஆகாசத்திலே -கிளர்ந்த திரைகள் சென்று ஸ்பர்சிக்க –
தன்னில் தான் பொரா நின்றுள்ள திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –
பத மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற கோயில் –
கத மிகு சினத் தகட தடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக-
மிக்க கோபத்தை உடைத்தாய்
அதுக்கடியான அகவாயில் த்வேஷத்தை யுடைத்தாய்
மத முதிதமாய் –
பெரிய வடிவை யுடைத்தாய் இருந்துள்ள –
ஆனையினுடைய கபோலத்தின் வழியே அந்த மத ஜலத்தை
வண்டுகள் ஆனவை பானம் பண்ண –
கொசுகு ஒரு மூலையிலே இருந்து அழித்தது என்னாக் கடல் வற்றாது இறே-
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
பின்னையும் மதம் பாய்ந்து வெள்ளம் இடா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைய –
—————————————————–
(பாஹ்யர் குத்ருஷ்டிகள் எத்தனை குழப்பினாலும்
அவி சால்யமாக நிலை பெற்று உள்ள
கீழே பஹு முக தத்வ விரோதி நிராசனம்
இங்கு தத்வ ஞானத்துக்கு விரோதி -துர் மதத்தர் -நிரஸனம் )
புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-
(எந்தை பெம்மனார் இமையவர் தலைவர்-அரங்கம் ஆளி என் ஆளி -ஸ்ரீ ரெங்க நாத மம நாத )
புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு –
வேதத்துக்கு அப்ராமண்யம் சொல்லும்படி
ஜ்ஞான ஹீனராய் இருக்கிற சமணர் ( சப்த பந்தி வாதிகள் )
அப்படியே இருக்கிற புத்தர் ( சர்வ ஸூந்ய வாதிகள் ) என்று சொல்லப் படுகிற இவர்கள்
தாங்கள் அதிகரித்த சித்தாந்தங்களுக்கு ஏகாந்தமான வற்றைச் சொல்லச் செய்தேயும்
இவர்கள் நம்மை அறிந்திலர்களே –
இவர்களுக்கு நாம் வேண்டாம் ஆகில்
நாம் என்றால் உகந்து இருக்கும் ஆஸ்ரிதருக்கு உதவப் பெற்றோமே என்று
அத்தாலே ஹ்ருஷ்டராய் –
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –
என் குல நாதனாய்
அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று
திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும் மந்திரத் திறைஞ்சும்-
சந்தனச் சோலையில் உண்டான
தாழ்ந்த பணைகளில் உண்டான நிழலின் கீழே போய்
வரை மகளிர்கள் ஆனவர்கள் நாள் தோறும் தங்கள் வர பலத்துக்கு ஈடான
மந்த்ரத்தைக் கொண்டு ஆஸ்ரயா நின்றுள்ள –
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
——————————————–
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே –9-8-10-
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும் –
பரிமளம் படிந்தாப் போலே வண்டுகள் மது பானம் பண்ணா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைத்தான திருமலையிலே
ஸ்ரமஹரமான வடிவை உடையராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற அழகரை –
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன் –
அவ்வடிவு அழகிலே துவக்குண்டு ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
அடைவு கெட ஏத்தும் ஸ்வ பாவராய்
அதின் எல்லையிலே நின்றால் போலே
சத்ரு நிரசனத்தால் வந்த கரை கழற்ற அவசரம் இல்லாத
சுடர் ஒளி நெடு வேலை கையிலே உடையராய்
சூழ் வயலை உடைத்தான திருவாலி நாட்டை உடையராய் –
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
தாழைகளை வேலியாக உடைத்தாய் இருந்துள்ள திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த பனுவலை –
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே –
ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு
பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக் கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –
——–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
முந்துற ஆசை முற்ற விட்டு பற்றாய்த் தான் எவர்க்கும்
சிந்தித்தந்து துயர் சிந்துவிக்கும் எந்தை சேர்
மாலிரும் சோலை வணங்கு என்னும் மங்கை வேந்தன்
மால் ஆக்கும் மூவர் முதல் -88-
மங்கை வேந்தன் மால் -ஆழ்வார் பால் நமது பக்தியும் -நம்பால் ஆழ்வாருடைய வ்யாமோஹமும் –
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply