சிறிய திருமடல்– 28-ஆராத தன்மையனாய் – 42-செற்று உகந்த செங்கண் மால் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள்  மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கிஅறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்
தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான்வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோளி ராவணனை ஈரைந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்-

————————————————————————–

ஆராத தன்மையனாய்
நோவு படுவிகோளும் நீங்களேயாய் –
வந்து அறிவிப்புதி கோளும் நீங்களே யாம்படி பிற்
பாடரானோம் என்பதாய்க் கொண்டு
லஜ்ஜை நம்மால் பொறுக்க ஒண்ணாது -என்றான் இ றே –
அப்படியே –ஆராத தன்மையனாய் –

ஆங்கு –
ரஷணம் இல்லாத தேசத்தில் பிறக்கும் பரிமாற்றம்

ஒரு நாள் –
காலக்ருத பரிணாமம் உள்ள தேசத்திலே பிறந்த படி கேட்கலாகாதோ-

ஆய்ப்பாடி –
பரம பதம் போலே காணும் திரு வாய்ப்பாடியும்
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தம் இலாதாப் போலே
இவர்களுக்கும் ஜன்ம வ்ருத்தம் இல்லாத படி –

சீரார் கலையல்குல்
யசோதைப் பிராட்டி சாத்தின பரியட்டத்துக்கு சம்பத்து எங்கனே வந்தது என்னில் –
பிள்ளை சீறாமைக்காக-அழுக்குக் கழித்து ஒப்பித்து இருக்கும் –
இவனுடைய பற்று மஞ்சளும் கண்ணும் மையுமாய் இருக்கும் அலங்காரம் –

அல்குலுக்கு சீர்மை யாவது –
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் – என்கிறபடியே கிருஷ்ணனை எடுத்து ஒசிந்த இடை –
முற்காலத்திலே பெரிய திரு நாள் சேவித்த முதலிகள்
திருநாள் சேவித்த இரட்டை -என்று
மேலைத் திருநாள் வரும் அளவும் அவ்விரட்டையை
மடித்துக் கொடியிலே இட்டு வைத்துப் பார்த்துப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் –

சீரடி –
மடியிலே இருந்து இவன் தீம்பு செய்தால் தள்ளும் இ றே இழிய
தள்ளினால் இவன் கட்டிக் கொள்ளும் கால் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி -என்னக் கடவது இ றே

செந்துவர் வாய்
காலைக் கட்டிக் கொண்டவாறே இவள் உதறுமே-
உதற உதற இவன் கட்டிக் கொள்ளும் இ றே
கட்டிக் கொண்ட வாறே ஸ்மிதம் பண்ணும் வாய்

வாரார் வனமுலையாள் –
ஸ்மிதம் பண்ணின வாறே
கோபம் மாறினால் என்று முலையிலே அபேஷை பண்ணும் இ றே
பசல்கள் அலையாமைக்கு ஔஷதம் இட்டு வைப்பாரைப் போலே கச்சை இட்டு ஆர்த்து வைக்கும் இ றே –
வல்லையாகில் விடுத்துக் கொள்ளு காண் -என்னும் முலை –

மத்தாரப் பற்றிக் கொண்டு –
இவனோடு அலை பொருது காலம் போக்க ஒண்ணாதே –
கார்ஹச்த்ய தர்மம் அனுஷ்டிக வேணும் இ றே –
கார்ஹச்த்ய தர்மம் இவள் தானே அனுஷ்டிக்கும் படி அளவு பட்டு இருக்குமோ என்னில் –
இவன் அமுது செய்யும் த்ரவ்யமான படியாலே தானே கை தொட்டுக் கடைய வேண்டி இருக்கும் –
ஜாத் யுசித தர்மம் ஆகையாலும் தானே செய்ய வேண்டி இருக்கும் –
ஐஸ்வர்யம் உண்டு என்றால் சந்த்யா வந்தநாதிகளுக்கு ஆளிடுவார் இல்லை இ றே –

மத்தாரப் பற்றிக் கொண்டு –
தயிர்த் தாழி யிலே மத்தை நாட்டி
இரண்டு இழுப்பு இழுத்த வாறே இளைத்து
சௌகுமார்யத்தாலே தன்னாலே கடைய ஒண்ணாமே
பிடித்துக் கொண்டு நிற்கும் நிலை –

ஏரார் இடை நோவ –
இவள் இடைக்கு அழகு
கிருஷ்ணன் எப்போதும் இருக்கும் இடை -என்று இ றே –

எத்தனையோர் போதுமாய் –
கிழக்கு வெளுத்தவாறே தயிர் கடைய என்று புக்கு
அஸ்தமித்தாலும் தலைக் கட்டாது காணும் இவள் சௌகுமார்யம்

சீரார் தயிர் கடைந்து –
தயிருக்குச் சீர்மை என் என்னில்
கடைவதற்கு முன்னே இவன் எச்சில் பட்டு
கடைகிற போது இவன் எச்சில் பட்டு
கடைந்து சமைந்தால் இவன் எச்சில் படுமது இ றே –

வெண்ணெய் திரண்டதனை –
கடைந்த தாகில் -வெண்ணெய் திரண்டதனை -என்ன வேணுமோ ஆயிருகச் செய்தே
திரண்டதனை -என்னும் போது –
தைவ  யோகத்தாலே இவன் நினைவைப் பார்த்துத் தானே திரண்டது போலே
ஈட்டிய வெண்ணெய் உண்டான் இ றே இவன் தானே-

வேரார் நுதல் மடவாள்
கடலைக் கடைய -என்று உபக்ரமித்து
தேவர்கள் இளைத்து இருந்தால் போலே காணும் இவள் ஆயாசத்தாலே வேர்த்த நெற்றியும் தானுமாய் இருந்தபடி –
சொல்லிச் சொல்லாத ஆத்ம குணங்களால் குறைவற்று இருக்கிறபடி –

வேரோர் கலத்திட்டு –
வெண்ணெய் பரிமாறும் கலத்திலே இட்டு வைக்கில்
நாற்றமே குறியாக அறியும் என்று
த்ரவ்யாந்த்ரம் பரிமாறும் கலத்திலே இட்டு வைத்தாள் காணும்

நாரார் உறி ஏற்றி –
விரலை நுழைக்க ஒண்ணாத உறி இ றே –

ஏற்றி –
முகவணைக்கல் எற்றுவாரைப் போலே
அருமைப்பட்டு ஏற்றின படி

நன்கமைய வைத்ததனை
வெண்ணெயை வைத்து
கள்ளக் கயிற்றை உருவிச் சேமப்பட வைத்த படி –
அழகியதாகச் சேமப்பட வைத்தால் இ றே -என்று ஷேபிக்கிறாள் கட்டுவிச்சி –

போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் –
எங்கேனும் வைக்கிற போது இவன் காண்கிறான் என்று
பறகு பறகு என்று இவள் பார்க்கும்படி

போந்தனையும் –
இவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கிறபடி –
வெண்ணெயில் சாபலம் இல்லாமல் கிடக்கிறான் அல்லன் –
களவின் மிகுதியாலே ஆறக் கிடக்கிற படி –

பொய்யுறக்கம்-
அவன் உறங்கினான் என்று இ றே இவள் இருப்பது –
யோக நித்தரை போலே

ஒராதவன் போல் உறங்கி
இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –

அறிவுற்று –
சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க
உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –
அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும்
உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி –
அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –

தாரார் தடம் தோள்கள்
மாலையோடே கூட வெண்ணெய் குடத்தில் கையை விட்டான் –

தாரார் தடம் தோள்கள்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –

உள்ளளவும் கை நீட்டி –
வெண்ணெயில் அழக கையிட்ட தனையும் வயிறு நிறையும்
என்று இருக்கிறான் காணும் மௌக்த்யத்தின் மிகுதியாலே
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டினான் -என்று இவள் அறிந்தபடி எங்கனே -என்று ஜீயர் பட்டரைக் கேட்க
கோயில் சாந்தைக் குடத்தின் விளிம்பிலே கண்டால் போலே காணும் -என்றார் –

ஆராத வெண்ணெய் –
முன்பு அமுது செய்த வெண்ணெய் பின்பு அமுது செய்யும் வெண்ணெய்க்கு கண்டீரமாய்க் காணும் இருப்பது –

விழுங்கி –
வெண்ணெயை நிஸ் சேஷமாக அமுது செய்து –

அருகிருந்த மோரார் குடமுருட்டி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு இ றே போவது –
பாகவதர் அருகே கழனிமிண்டரி இருந்தால் அசஹ்யமாய் இருக்குமா போலே
வெண்ணெய் குடத்தருகே மோர்க் குடம் இருந்தது இவனுக்கு அசஹ்யமாய்
இருக்கையாலே உருட்டினபடி –
பட்டர் -ஆழ்வார்கள் திரு மண்டபத்திலே இருந்து திருமடல் அருளிச் செய்யா நிற்கச் செய்தே
இவ்விடத்தே ப்ராஹ்மனர் தனத்தை எல்லாம் பாழே போக்கினான் -என்று அருளிச் செய்தார் –

முன் கிடந்த தானத்தே –
களவு கண்டான் என்று சொல்லிலும்
படுக்கையோடேயோ எழுந்து இருந்து களவு கண்டது -என்னும்படி
கால் போட்ட விடத்தே கால் போட்டுக் கை போட்ட விடத்தே கை போட்டுக் கிடந்த படி –

ஒராதவன் போல் கிடந்தானை –
வெண்ணெய் பிரசங்கம் இவன் நினைவிலும் இல்லையீ -என்னும்படி
இவ்வர்த்தம் முதலிலே அறியாதானாய்க் கிடந்தபடி –
தான் உருட்டின மோர் படுக்கையிலே வந்து தொங்கச் செய்தேயும் அறியாதவனாய்க் கிடந்தபடி –

கண்டவளும் –
இவனைப் பெற்றவள் இ றே அவளும்
இவன் கிடந்த கிடையிலே இவனையே சங்கித்தாள் –

வராத் தான் வைத்தது காணாள்-
வந்ததும் வாராததுமாக உறியிலே கையை யிட்டாள்-
யாதொரு படி வைத்தாள் – அக்குறிப் படியே கண்டிலள் –

வயிறு அடித்து –
வெண்ணெய் இழந்தேன் -என்று வயிறு அடிக்கிறாள் அன்று இ றே
இது இவனுக்கு சஹியாது ஒழிகிறதோ -என்னும் வயிறு எரித்தலே யாதல்
இன்று வெண்ணெய் ஆகிறது -நாளை பெண்கள் ஆகிறது -இது என்னாய் முடிகிறதோ -என்றாதல்

இங்கு ஆரார் புகுதுவார்-
இலங்கை போலே வெண்ணெயை அரண் செய்து வைத்தபடி

ஐயர் இவர் அல்லால் –
முதலியாரே இ றே இது செய்வார்

நீராம் இது செய்தீ தென்று
உம்முடைய கை வழியே போனவித்தனை இ றே வெண்ணெய்
வேறு சிலர் உண்டோ -என்று
கையைப் பிடித்து உறங்குகிறவனைத் தூக்கி எடுத்து

ஓர் நெடும் கயிற்றால் –
வெண்ணெய் களவு காண்பானாகவும்
தான் இவனை அடிப்பாளாகவும்
முன்பே கயிறு தேடி வைத்து இலள் இ றே
கைக்கு எட்டிற்று ஒரு கயிற்றாலே

நெடும் கயிற்றால்
வியாக்யானம் பன்னுமவர்கள் -கண்ணிக்  குறும் கயிறு -என்றார்கள் இ றே
நெடுமை விபரீத லஷணை –
அன்றியே
இவன் திருமேனி யோட்டை ஸ்பர்சத்தாலே –நெடும் கயிறு -என்றாள் ஆதல் –
திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கரும் கடலே என் நோற்றாய் –என்னக் கடவது இ றே –

ஊரார்கள் எல்லாரும் காண –
வெண்ணெய் களவு கொடுத்தாரும்
பெண் களவு கொடுத்தாரும் காண
எல்லாரும் காண மடல் எடுக்க இருந்தாள் இவள்
நான் அது உபதேசிக்க இருந்தேன்
எங்களை ஒழிய அடைய சர்வ சவதாநத்தே அகப்பட்டது காணும்
அதாவது -காணலுமாய்த் தவிரலுமாய் இருக்கும் மனிச்சர் காணும் கண்டது
காணும் அளவும் மடல் எடுத்து அல்லது தரிக்க மாட்டாத நாங்கள் காணப் பெற்றிலோம் –

உரலோடே-
இவன் இருந்த இடத்தே உரலை உருட்டாதே
உரல் இருந்த விடத்தே இவனை இழுத்துக் கொண்டு போனாள் –

தீரா வெகுளியாய் –
இவன் பக்கல் பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இ றே
சீற்றத்துக்கு அவதி யுண்டாவது –

சிக்கென ஆர்த்தடிப்ப
சிக்கெனக் கட்டுவதும் செய்தாள்
சிக்கென அடிப்பதும் செய்தாள்

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –
இவன் செய்தது என் என்னில்
பெரிய திரு நாளிலே சிறைப் பட்டு இருப்பாரைப் போலே
வெண்ணெயும் பெண்களும் ஆழ மோழையாய்ச் செல்லுகிற அமளியிலே நாம் புகுந்து இருப்பதே -என்று இருந்தான் –

ஆற்றாதான் –
ஆற்ற மாட்டாதே இருந்தான் –
என்னிய வென்னில்
எங்கே வெண்ணெயை ஒளிக்கிறார்கள்
எங்கே பெண்ணை ஒளிக்கிறார்கள் -என்று

அன்றியும்
அதற்கு மேலே பிறந்ததோர் அபாயம் கேட்கலாகாதோ-
ச்நேகினியான யசோதைப் பிராட்டி கையாலே கட்டுண்டு அடியுண்ட அடி படி இ றே கீழேச் சொல்லிற்று

பிரதி கூலனான காளியனாலே கட்டுண்டு படி சொல்கிறது மேல்
நியாமிகையுமாய் ச்நேகினியுமான அவள் கையாலே கட்டுண்டது பாடு ஆற்றலாம் இ றே -காளியன் செய்த செயலைக் கேளீர் –

நீரார் நெடும் கயத்தை –
இட்டமான பசுக்களை மறித்து நீரூட்டி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கிற பசுக்களுக்கு –
பசு மேய்க்கிற வ்யாஜத்தாலே அவ்வழியே பெண்களை அழைப்பது
அவற்றை மணல் குன்றுகளிலே விட்டுப் பெண்களும் தானுமாய் க்ரீடிப்பது –
இவற்றுக்கு ஹேதுவாகையாலே பசுக்கள் இவனுக்கு ஒதுங்க நிழல் -என்றபடி –
அப்படிப்பட்ட பசுக்களுக்கு நீரூட்ட வேண்டும் ஜல ஸம்ருத்தியை உடைய பொய்கையை
தூஷித்தான் ஆயிற்று காளியன் –
தன் ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு குறைவற வேண்டும் ஜல ஸம்ருத்தி காளியனாலே தூஷிதம் ஆயிற்று –

சென்று அலைக்க நின்று உரப்பி –
தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாய் பொய்கையைக்
காலாலே உலக்குவது கல்லை விட்டு எறிவதாய் ஆர்த்துக் கொள்வதானான் –
நால் வாயும் கரைக்கு மேலே நீர் வழியும் படி நின்று உரப்பினான் ஆயிற்று –
இலங்கையை அடை மதிள் படுத்தி ராஷசர் தாங்களே புறப்படும்படி பண்ணினால் போலே –
இதுக்கு முன் பண்ணின மௌக்த்யமே போந்திருக்க
அதுக்கு மேலே பண்ணின மௌக்த்யத்தைக் கேட்கலாகாதோ –

ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை –
காளியன் அன்று கிடீர்
பையல் ம்ருத்யு கிடீர்

ஓராயிரம் பணம் –
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து -என்னச் செய்தே
ஆயிரம் -என்கிறது என் என்னில்
முக்தனான அவன் மேலே காளியன் வந்தான் என்னும் காட்டில்
இவளுக்கு ஆயிரமாய்த் தோற்றின படி –

வெங்கோ வியல் நாகத்தை
இந்த யமனுக்கு வெம்மையை ஊட்டினான் கிடீர்

வெங்கோ இயல் –
வெவ்வியான் ஒரு யமனுடைய ஸ்வபாவத்தை உடைய நாகத்தை –

வாராய் எனக்கென்று –
முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்றால் போலே கிடீர்
தன்னேராயிரம் பிள்ளைகளும் காளியனை -எனக்கு எனக்கு -என்று நின்றபடி –
அவர்கள் நடுவே எனக்கு வாராய் என்றான் –

மற்றதன் மத்தகத்து –
அக்காளியன் பணத்திலே

சீரார் திருவடியால் பாய்ந்தான் –
பிராட்டி திரு முலைத் தடங்களில் வைத்துக் கொள்ளும்
கூச வேண்டும்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு
விஷத்ருஷ்டியான பணத்திலே பாய்ந்தான்
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலை மகள் பிடிக்கும் மெல்லடி இ றே –

தன் சீதைக்கு நேராவன் -இத்யாதி
பிராட்டியோடு சாம்யை -சத்ருசை -யாவன் என்று வந்த சூர்ப்பணகை விரூபை யாக்கி விட
அவள் போய் கரன் காலிலே விழ
சபரிகரனாய் வந்த கரனை நிரசித்த படியைச் சொல்லுகிறது –

தன் சீதை –
ராகவோமர்ஹதி வைதேஹீம் –
தனக்கு உயரம் சொல்லிலும் அவளைச் சொல்லித் தன்னைச் சொல்ல வேண்டும்படி இருக்கும்
பிராட்டிக்குக் காணும் சத்ருசையாவேன் என்று வந்தது –

நேராவன் என்று
சர்வ லஷணத்தாலும்-விலஷணை யான பிராட்டிக்கு
விரூபையாய் இருக்கிற தான் காணும் ஒப்பாவன் என்று வந்தாள் –

ஓர் நிசாசரி –
பெற்ற தாயோடு சீறு பாறு என்று வந்தவள் என்று
பிணம் தின்னி என்கிறாள் -காணும் இவள் –

தான் –
பெருமாளுக்கு மேலான பிராட்டிக்குப்
பெருமாளோடும் ஒவ்வாத தான் காணும் ஒப்பாவான் என்று வந்தாள் –

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை –

த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப்நுயாத் கலாம் -என்று
பெருமாள் தாமும் தம் விபூதியும் ஒரு தட்டுக்கும் கூட போராது இருக்கக் காணும்
தான் நேராவன் என்று வந்தது –

வந்தாளை
பெருமாள் பாடே வந்தவாறே
நான் ஏக தார வ்ரதனாய் இருப்பன் –
அக்ருத விவாஹராய் இருக்கிற இளைய பெருமாள் பாடே போ -என்ன
அங்கே  சென்றவாறே அவர் -நான் தாசனாய் இருப்பன்
எனக்கு நீ கடவை யானால் நீயும் தாசியாய் அன்வயிக்கும் அத்தனை அன்றோ
பெருமாள் பாடே சென்றால் அன்றோ
உனக்குப் பட்டம் கட்டி ஏக சிம்ஹாசனத்திலே இருக்கலாவது -என்ன
அங்கே போவது இங்கே வருவதாய்த் திரிந்தவாறே
இவள் அன்றோ இது எல்லாம் ஒட்டாது ஒழிகிறாள் -என்று
பிராட்டி யுடைய பாடே வந்து
உன்னைத் தின்னும் இத்தனை -என்று விழ

கூரார்ந்த வாளால் -இத்யாதி
தம்முடைய கையாலே இ றே தண்டிப்பது
ராமஸ்ய தஷிணோ பா ஹூ
-தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்து தண்டிப்பித்தார்-

கூரார்ந்த வாளால் –
கூர்மை மிக்கு இருக்கிற வாளாலே
முரட்டு உடம்பிலே வ்யாபரியா நின்றால் ரக்த ஸ்பர்சம் இல்லாதபடி
வ்யாபரிக்கலாம் வாள்

கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –
பிராட்டியோடு ஒப்பாக்கி
அங்க விசேஷங்களைப் பேணி வர
அவற்றைப் போக்கி விட்டார்

ஈரா விடுத்து –
வாளின் கூர்மை சொல்லுகைக்காக –கூரார்ந்த வாள் -என்றது அங்கு
ஈர்ந்தது என்கையாலே ஈருகைக்கு அரிதான உடம்பின் திண்மை சொல்லிற்று இங்கு

ஈரா விடுத்து –
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்திற்கு வந்தாள் போல் அன்றியே
புக்ககத்தில் நின்றும் பிறந்த கத்திற்கு போம் போது ஓர் ஆதிக்யம் பண்ணி விட வேணும் இ றே –
பெருமாளை ஆசைப் படச் செய்தேயும் பிராட்டி பக்கல் அபராதம் பண்ணுகையால்விரூபை யானாள் இ றே
ஆகையாலே இவ் விஷயத்தில் ஆசை உண்டானாலும் ததீயர் பக்கலிலே அபராதம் உண்டானால் பலிக்கும் பலம்
சூர்பணகை பலம் என்கை-
இவள் ஆசைப் பட்ட விஷயம் இ றே சிந்த யந்தியும் ஆசைப் பட்டது
இப்படி அபராதம் இல்லாமையாலே அவள் பெற்றுப் போனாள் இ றே

விடுத்து
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று கரன் காலிலே விழும்படி பண்ணி –

அவட்கு மூத்தோனை –
அனுகூலரானார் பக்கல் சம்பந்தி சம்பந்திகள் அளவும் ராகம் பலிக்குமா போலே காணும்
பிரதிகூலரானார் பக்கல் சம்பந்தி சம்பந்திகள் அளவும் த்வேஷம் பலிக்கும் படி

வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் –
வளைந்த வில்லும் கையுமாய் முஷ்டியிலே நின்ற பெருமாளைக் கண்ட கரன் மேலே போய்
ஒரு நரக அனுபவம் பண்ண வேண்டா -என்னும்படி
வயிறு எரித்தலோடே எல்லா அனுபவமும் இங்கே அனுபவிக்கும்படி பண்ணினான் –
பூர்வ ஆஸ்ரமத்திலே நஞ்சீயர் எழுந்து அருளி இருக்கச் செய்தே திருமடல் அருளிச் செய்கிற போது
பட்டர் இவ்விடத்துக்கு இவ்வார்த்தை அருளிச் செய்தார் -என்று சொல்ல
இவ்வார்த்தையை அருளிச் செய்தவரைக் காண வேணும் -என்று காணும்
பட்டர் ஸ்ரீ பாதத்தில் நஞ்சீயர் ஆஸ்ரயித்தது –

செந்துவர்வாய் இத்யாதி –
கரவதத்தின் அன்று -போய்ச் சொல்லுகைக்கு ஆள் இல்லாதபடி அகம்பனன் ஒருவன் தப்பிப் பெண் உடை யுடுத்துப் போய்
ராவணனுக்கு பிறந்த வ்ருத்தாந்தத்தை அறிவிக்க
அவன் மாரீசனையும் கூட்டிக் கொண்டு வந்து
பிராட்டியையும் பெருமாளையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாக
உடலையையும் உயிரையும் பிரித்தால் போல் பிரிக்க
அதுவே ஹேதுவாக ராவணனை நிரசித்த படி சொல்கிறது மேல் –

செந்துவர்வாய் –
ஜகத் ஸ சைலம் பரிவர்த்தயாமி –
நாட்டுக்குத் தண்ணீர்ப் பந்தல் போலே ரஷகராகக் கண்ட பெருமாள்
நாட்டை அழிப்பன்-எண்ணப் பண்ணின முறுவல் இ றே –
புரேவ மே சாருத தீம நிந்திதாம்
மானைக் கண்ட போது -பெருமாளே இம்மானைப் பிடித்துத் தர வேணும் -என்ற இரப்போடே கூடின
முறுவலோடே கூட காட்டார்கள் ஆகில்
லோகத்தை எல்லாம் கூட்டிக் குலையாக அறுத்துப் போக விடுவன் -என்றார் இ றே-

வாரார் வனமுலையாள் –
மலராள் தனத்துள்ளான் -என்று பெருமாள் கிடக்குமிடம் இ றே –

வைதேவி –
விதேஹ ஸூ தாம் -என்று பெருமாள் வாய் புலற்றும் குடிப் பிறப்பு இ றே

காரணமா
அவள் ஹேதுவாக

ஏரார் தடம் தோளி ராவணனை
ஒன்றுக்கும் விக்ருதனாகாத திருவடியும்
அஹோ ரூப மஹோ தைர்யம் -என்று விக்ருதனாம்படி வடிவு படைத்தவன் இ றே ராவணன் –

ஈரைந்து சீரார் சிரம் அறுத்து –
பத்துத் தலையையும் ஒரு காலே ஆறாதே ஐஐந்தாக அறுத்து லீலை கொண்டாடின படி –

சீரார் சிரம் அறுத்து –
அறுப்புண்டு விழுகிற தலைகளும்
ரஞ்ஜ நீயச்ய விக்ரமை -என்று பெருமாள் வீரப் பாட்டைக் கண்டு சிரித்துக் கொண்டு விழுகிறபடி.
அறுப்புண்டு விழுந்த தலைகளைக் கழுகும் பருந்தும் இசிக்கக் கண்டு நிற்கிற தலைகள் -நாம் முற்பாடராகப் பெற்றிலோம் -என்று ஆசைப்படுகிற படி

செற்று –
வந்தவனை ஓர் அம்பாலே கொல்லாதே
சதுரங்க பலத்தை கொன்று குதிரைகளைக் கொன்று சாரதியைக் கொன்று
தேரை அழித்துக் கொடியை யறுத்து தலையைச் சிரைத்துத் தோள்களைத் துணித்துத்
தலைகளை அறுத்து இவற்றை எல்லாம் கொண்டு அவன் நெஞ்சாறல் படும்படி பண்ணி பின்னை அவனைக் கொன்றபடி –

உகந்த செங்கண் மால் –
உகந்த
ருஷிகளுக்குக் களை அறுக்கப் பெற்றோம்
-என்றும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தலையிலே அபிஷேகம் பண்ணப் பெற்றோம் -என்றும் உகந்த

செங்கண் மால் –
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி அவர்களுக்கு உகப்பாகப் பெற்றோம் -என்று
வ்யாமோஹமும் வாத்சல்யமும் திருக் கண்ணிலே தோற்றின படி-

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: