திரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

நம் பக்கல் விமுகரான சம்சாரிகளுக்கும் கூட ஆகாத படி
வர்த்தித்த நீர் நம் பக்கலில் வந்த படி என் -என்ன
பிரதிபன்னகாரிகளாய் இருப்பார் செய்யும் அவற்றுக்கு ஒரு அடைவு உண்டோ
என் மௌர்க்யத்தாலே வந்தேன் –
என்கிறார்

—————————————————————————————————————————————————-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே

———————————————————————————————————————————————————-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை –
திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து
கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –
பகவத் அனுபவத்தாலே
முக்தருக்கு பிறக்கும் விகாசம்
திர்யக்குகளுக்கும் பிறக்கும் படி யாய்த்து
கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இ றே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –

வண்டு அலம்பும் சோலை –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும்
அலையா நிற்கும் யாய்த்து –

அணி திருவரங்கம் தன்னுள் –
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து கோயில் இருப்பது
லீலா விபூதிக்கு நாயகன் ஒருவன் உண்டே ஆகிலும்
கோயிலிலே வந்து சந்நிஹிதன் இல்லாத போது
தாலி கட்டா ஸ்திரீகள் போலே ஆயத்து லீலா விபூதி இருப்பது –

சோலை அணி அரங்கம் –
சோலையை ஆபரணமாக உடைய கோயில் என்னவுமாம் –
கார்த்திரள் அனைய மேனிக் –
மது வெள்ளத்தைக் கண்டு கடல் என்று பிரமித்து
மேக சமூஹங்கள் கழுத்தே கட்டளையாகப் பருகி
நெகிழ்ந்து போக மாட்டாதே அவை உள்ளே புகுந்து சாய்ந்தால் போலே யாய்த்து
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
வடிவில் கறுப்பாலும்-குளிர்த்தியாலும் -பர உபகாரமே ஸ்வபாவமாய் இருக்கையாலும் –
தனக்கு என ஓன்று வையாமையாலும் –
மேகத்தை ஒருவருக்கு போலியாகச் சொல்லும்படி யாய்த்து இருப்பது –
தொக்க மேக பல் குழாங்கள் -என்று
வடிவுக்கு ஸ்மாரகமாக மேக சமூஹங்களைச் சொல்லக் கடவது இ றே –

கண்ணனே –
மேகத்தில் காட்டிலும் வ்யாவ்ர்த்தி சொல்லுகிறது –
கடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இ றே மேகங்கள் –
சஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –
பெரிய பெருமாளை கண்டதும் -யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து
மூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இ றே –
உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா –
உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக
நீர் உபதேசித்து வைத்த
மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –
அவை யாகிறன –
கர்ம யோகம் –
தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்
உபயசாத்யமான பக்தி யோகம்
அவதார ரஹச்யம்
புருஷோத்தம வித்யை
அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்
புண்ய ஷேத்திர வாஸம்
இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இ றே உபாய பேதமும் –
இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே
ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

மனிசரில் –
அறிவுக்கு அடைவு இல்லா திர்யக் யோனியுமாய் இழக்கவுமாம் இ றே
அறிவுக்கு யோக்யமான மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும் வைத்து இ றே இழக்கிறது –

துரிசனாய –
அவர்கள் தாங்கள் நித்ய சூரிகள் கோடியிலே யாம்படி
அவர்களுக்கும் த்யாஜ்யமான க்ரித்ரிமன் –
திர்யக் ஜென்மமாய் -அயோக்யன் -என்று ஆறி இருக்கிறேன் அல்லேன் –
மனுஷ்ய ஜன்மத்தால் உள்ள பிரயோஜனம் பெற்றிலேன் –
மானுஷ்யம் பிராப்ய –
உபய விலஷணன் ஆனேனே –
என்கிறார் –
இப்படி இருக்கிற நீர் என் பக்கலில் வருவான் என் என்ன –
மூர்க்கனேன் வந்து நின்றேன்-
என் தண்மை பாராதே மூர்க்கன் ஆகையாலே வந்து கொடு நின்றேன்
என் தண்மையும் அறிந்து
உன் வை லஷண்யத்தையும் அறிந்து வைத்து
அயோக்யன் -என்று அகல இ றே அடுப்பது –
அத்தைச் செய்யாதே வந்து கொடு நின்றேன்
தண்ணீர் குடிக்கிற ஊற்றிலே நஞ்சை இடுவாரைப் போலே
விலஷண போக்யமான விஷயத்தை கிட்டி அழித்தேன் என்கிறார் -துரிசு -களவு

கண்ணனே -என்றது அங்குத்தைக்கு ஆகாதார் இல்லை இ றே
அத்தையே பற்றி வந்து நின்றேன்
மூர்க்கனேன் மூர்க்கனேனே –
இது ஒரு மௌர்க்யமே என்கிறார்
வீப்சையால் இரண்டு தரம் அனுசந்தித்து
அத்தலைக்கு வந்த அவத்யத்தைப் பார்த்தும்
தம்முடைய தண்மையைப் பார்த்தும்
அருளிச் செய்கிறார் –

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: