ஸ்ரீ பெரிய திருமொழி-3-4–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் —

ஸ்ரீ ராம் பூர்-தக்ஷிண சித்தாஸ்ரமம் இது
ஐந்து விண்ணகரம் திவ்ய தேசங்கள்
ராமனுக்கு பூர்வாஸ்ரமம் வாமனாஸ்ரமம்
பாடலிக வனம்
இடது திருவடி மேலே நீட்டி சேவை இங்கு

ஒரு குறள் –பிரவேசம் –

நீங்கள் அவனைப் பெறுகைக்கு உறுப்பாக பண்ணும்
சாதனா அனுஷ்டானத்தை
அவன் தான் உங்களைப் பெறுகைக்கு உறுப்பாக
அவதாராதி முகங்களாலே பண்ணிக் கொடு
இங்கே வந்து நின்றான் -என்றார்

அவன் படி இதுவான பின்பு
அர்த்தித்வம் துடக்கமாக மேல் உள்ளவற்றை எல்லாம்
அவன் கையிலே ஏறிட்டு
நீங்கள் அவன் உகந்த சீராம விண்ணகரை ஆஸ்ரயியுங்கோள்
என்கிறார் –

இவன் பரம பக்தி பர்யந்தமாகப் பண்ணினாலும்
அதடைய பிரதிகூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே
நிற்கும்படி இறே பேற்றின் உடைய வைலஷண்யத்தைப் பார்த்தால் இருப்பது –

(கீழ் இரண்டு திரு மொழிகளால் -சாதனா அனுஷ்டானம் பண்ண வேண்டாம்
சித்ர கூட பெருமாளை ஆஸ்ரயிக்க அருளிச் செய்து
பேற்றின் கனத்தைப் பார்த்தால் இது கிட்டுமோ என்று சங்கை வர
வகுத்த ஸ்வாமி இவன் -லௌகிகம் போல் அன்றே
ப்ராப்தாவும் பிராப்பகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
சாதனா அனுஷ்டானம் பண்ணுபவனும் அவனே
உங்களுக்கு விஸ்சிவசிக்கத் தட்டு இல்லை
அவனை விட அவன் உகந்து அருளின திவ்ய தேசமே ப்ராப்யம் என்கிறார்

அர்தித்வம்-பிரார்த்தனை கூட வேண்டாவோ என்னில்
அர்த்தித்வமும் அவனே செய்பவனாய் இருக்க
இத்தையும் அவன் தலையில் ஏறிட்டு நிர்ப்பரராய் இருக்கலாம்
அபிரதி ஷேதமுமே வேண்டும் விலக்காமையே போதும் )

——————————————————-

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

காழிச் சீராம விண்ணகரே-காழி என்னும் பிரதேசம்-அதில் ஸ்ரீ ராம விண்ணகரம்

ஒரு குறளாய் –
வடிவைக் கண்ட போதே
சொல்லிற்று அடையக் கொடுக்க வேண்டும்படியான
அத்விதீய வாமனனாய்

இரு நிலம் –
பரப்பை உடைத்தான பூமியை

மூவடி மண் வேண்டி-
தனக்கு என கால் பாவுக்கைக்கு
ஓர் இடம் இல்லாதாரைப் போலே
இத்தை அவனுக்காகி -அவன் பக்கலிலே இரந்து

உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வென –
இந்த லோகங்கள் அடைய இரண்டு அடியாலே அடக்கி
மூன்றடி தருகிறோம் என்றாய்
மற்றை ஓரடியும் தாராயோ -என்று
(இதே திருக்கோலம் இன்றும் நாம் அங்கே சேவிக்கிறோம் )

மாவலியைச் சிறையில் வைத்த-
அநந்தரம் இந்திர பதம் அவன் பெறக் கடவனாக
அவனைப் பாதாளத்தில் வைத்த

தாடாளன் தாள் அணைவீர் –
ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும்
மேன்மையை உடையவன் திருவடிகளை
கிட்ட வேண்டி இருப்பீர் –

தக்க கீர்த்தி -இத்யாதி
(புருஷோத்தமனுக்குத் தக்க கீர்த்தி )
அபௌருஷேயத்வ நிபந்தனமான
கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய
திரள்கள் நாலும்
பஞ்ச மகா யஞ்ஞங்களும்-( ப்ரஹ்ம மனுஷ்ய தேவ பித்ரு பூத )
ஆறு அங்கங்களும்
ஏழு இசைகளும்
தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான
காழியிலே
சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்

———————————————————–

தன்னை அர்த்தியாக்கி ஆஸ்ரிதருக்கு -என்ன அருளிச் செய்தாலும் ஆறி இருக்க
இதுக்கு அடி உங்களுடைய ஸ்திர புத்தியும் பெருமையை எண்ணியும் இருக்கிறீர்கள்
ப்ரஹ்மாதிகளை பாருங்கோள்
ரோமச முனிவர் ஸ்தல புராணமும் இதில் அருளி
இது சில இடங்களிலே தான் அருளிச் செயல்களில் இருக்கும்

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-2-

இருக்கு வாய்மை நலமிகு சீர்-வேதம் சொல்லி நல்ல ஆசாரம் மிக்கு உள்ள சீர்மை
உழுசேயோட-உழுகிற எருதுகள் செருக்கால் ஓட
அதிர்வால் சங்குகள் பிரசவிக்க
முத்துக்கள் -குருகு தங்கள் சினைகள் என்று நினைத்து பறக்க
தாமரை விகசிக்க
தேனைப் பருக சேல் மீன்கள் பாய

நான்முகன் இத்யாதி-
ரோமச பகவான் ப்ரஹ்மாக்கள் என்று சிலர்
நீர் குமிழி போலே தோற்றுவது மறைவதாய்ப் போகக் கடவது
எத்தனை பேர் -என்றான் ஆயிற்று
சதுர் முகனின் ஆயிஸின் மிகுதியால் உண்டான துர்மானத்தை
வேதங்களை உச்சரியா நிற்பானாய்
ஆசார பிரதான்யத்தால் வந்த ஏற்றதை உடையனான
ரோமச பகவானாலே –
சதுர்தச புவனங்களுக்கும் கடவேன்
என்னோபாதி ஆயுஸு உடையார் உண்டோ -என்கிற
துர்மானத்தை தவிர்த்து-

நக்னன் இத்யாதி –
ருத்ரன் உடைய பிதாவுமாய்
லோக குருவுமாய் இருக்கிறவனை
தலையை அறுத்து -அத்தாலே பாதகியாய்
மாம்ஸ பிரசுரமான தலை யோட்டிலே இரந்து
அதிலே ஜீவித்து திரிகிற எளிவரவைத் தவிர்த்த ஸ்வாமி

ஜகத்துக்கு ஈஸ்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே
அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-

உழுசே-இத்யாதி
ஆனை போலேயாய் பெரிய மிடுக்கை உடைய
சேக்களை இறே பூட்டி உழுவது
அதை ஒட்டிட்டவாறே
அப்போது பிரசவித்தது இப்போது பிரசவித்தது என்று தோன்றும்படி
தொட்டார் மேலே தோஷமாம்படி இருக்கிற சங்குகள்
தான் கிடக்கற வங்குகளின் உடைய வாசலிலே
முத்துக்களை ஈன்றன

அவற்றை தொல் குருகுண்டு என்றும் ஒக்க பழகச் செய்தேயும்
இது முத்து இது முட்டை அன்று -என்ற வாசி அறிய மாட்டாதபடி
மூத்த குருகுகள் அவை தன்னுடைய முட்டையாக
கொண்டு விட்டுப் போக மாட்டாதே சுற்றும் பரவா நிற்கும் ஆயிற்று

அவை பறக்கிற காற்றாலே பார்த்த பார்த்த இடம் எல்லாம்
பக்வமாய்
தலையிலே மிக்க தேனை உடைத்தாய் இருக்கிற
தாமரைப் பூக்கள் அலரா நிற்கும் ஆயிற்று

அந்த மதுவை பானம் பண்ணின கயல்கள் ஆனவை
பாயா நிற்கும் ஆயிற்று-

ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈஸ்வரோஹம் என்று கை ஒழிய ஓட
பக்தி உழவன்- ஸ்ருஷ்டியாதிகள் பண்ணுவிக்க –
நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க
சூல் கொண்டு எப்பொழுது உபதேசிப்போம் சங்கு வெளுத்த ஸ்வபாவம்
மூத்த குருகு-ஆதி மூர்த்தி -ஆதி மூலம் -வ்யாமுக்தனாய் இருக்க
கமலமலர் பாவை முகம் விகசித்து
அனுராக அதிசயம் வெள்ளம் இட
அதிலே துள்ளா நிற்பர் நித்ய ஸூரிகள்-

(ரோமச முனிவர் –
நான்முகன் கர்வம் அடக்க –
தபஸை மெச்சி -ரோமம் விழ பிரமன் ஆயுசு முடியும்
தொட்டாச்சார்யார் -ஆதீனம்
தாடாளன் இடது திருவடி மேல்
இடது கையால் ஒன்றைக் கொடு
வலது கையால் தானம் வாங்கும் வாமனனன்
வைகுண்ட ஏகாதசி மட்டும் வாமனன் சேவை உண்டு
லோக நாயகி தாயார் மட்டவிழ் குழலி
சங்க சக்கர தீர்த்தம்
புஷ்கலா விமானம்
தவிட்டுப் பானை தாடாளன் -மூதாட்டி
சிதம்பரம் படையாச்சிக்கு மரியாதை
ஆற்காடு நவாப் பெண்ணின் உப்பரிகை விளையாட
தாடாளா வா வெண்ணெய் உண்ட தாடாளா வா
குதித்து பாய்ந்து கைகளில் சேர மீண்டும் பிரதிஷ்டை
ஞான சம்பந்தர் -விருத்தூத -வாதப்போர்
குறள் சொல்லச் சொல்ல
சித்திர கவி சாமர்த்தியம் காட்டி
நீரே சதுஷ் கவிப் பெருமாள் வேலைக் கொடுத்து
விருதுகள் அனைத்தையடும் சொல்லி நிகமிக்கிறார் )

——————————————————–

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மையணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய்யணைந்து களை களையாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-3-

திவ்ய தேசம் அடைமினே -இதுவே ப்ராப்யம்

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
கூர்மை மிக்கு இருந்துள்ள முனையை உடைய கொம்பை உடைத்தான
அத்விதீய மகா வராஹமாய்
பூமிப்பரப்பு அடைய இடந்து எடுத்துக் கொண்டு
ஈஸ்வரத்தால் வந்த செருக்காலே மத கார்யமான வ்யாபாரங்களைப் பண்ணி
(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)

நெய் -கூர்மை
கூர்மையை உடைய திருவாழி
அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர்-
கடைந்து நெய் இட்டு இருந்த உள்ள திரு ஆழியாலே
தேவதாந்தர பஜனத்தைப் பண்ணி
அத்தாலே தன்னை மிடுக்கனாக நினைத்து இருந்த
வாணன் உடைய திண்ணிய தோள்களை
நேர்த்தவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –

நெய்தலோடு மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும்
நெய்தல் பூவோடே கூட கறுப்பு மிக்கு இருந்துள்ள குவளைகளை தம் கண்கள் என்றும்

மலர்க் குமுதம் வாய் என்றும்-
மலரை உடைத்தான அரக்காம்பலை
தம் தாமுடைய வாய் என்றும்

கடைசிமார்கள் செய்யணைந்து களை களையாதேறும்
கடைசிமார் களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து
கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான
சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே
போந்து ஏறுகிற
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே
காழியில்-

—————————————————————–

பாணாசுரன் பட்டது மட்டும் இல்லை
ஹிரண்யாசூரன் பட்டதும் படுவீர்
இங்கே சேரா விடில்

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4-

செம் பஞ்சு போலே மிருதுவான திருவடிகளை உடைய
நப்பின்னை பிராட்டிக்காக
(பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் )
பண்டு ஒரு நாள் கண்டார் மேல் விழுகிற
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்து –

ஹிரண்யன் உடைய ஆபரணங்களாலே அலங்க்ருதமான
நெஞ்சை அநாயாசேன கிழித்துப் பொகட்டு
ரக்தமானது கொழித்துப் புறப்ப்படும்படியாக –
ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் – செய்கை அன்றிக்கே
ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு
திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து
அத்தாலே வந்த சுத்தியை உடையவன்
திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்

நீலம் இத்யாதி
அவ் ஊரில் மாடங்களில் அழுத்தின நீல ரத்ன மாலையை
தனக்கு தஞ்சமாக உடைய
அதாவது
ராத்ரியை தனக்கு அபாஸ்ரயமாக உடைத்தாய் இருக்கிற
இருளை தழைப்ப
நடுவே அழுத்தின முத்தானது குளிர்ந்த சந்தரன் உடைய
நிலாவைக் காட்ட
இடை இடையே அழுத்தின பவளமானது புகரை உடைய
ஆதித்யன் உடைய
பிரகாசத்தை காட்டா நின்றது –

ஆக ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்
ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று –
(கோபமும் அருளும் ஓக்கக் காட்டி அருளிய ஸ்ரீ நரசிம்மன் போல் )

——————————————–

தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-5-

திருத்தி -திருப்தி -பித்ருக்களுக்கு திருப்தி –

சத்ருக்களாய் மறத்தை உடையராய் இருக்கிற
ராஜாக்களை அழியச் செய்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்தைக் கொண்டு
வம்சத்திலே முடிந்து போனார்க்கு உதக கிரியைகளைப் பண்ணி
இவ்வளவாலே ஸ்ரீ பரசுராம ஆழ்வானை நினைக்கிறது –

வெவ்விதான வாயை உடைத்தாய் கொண்டு
பயாவஹமாம் படி தோற்றின ஆஸ்ரித விரோதியான
கேசி வாயை அநா யாசேன கிழித்து
குவலயா பீடத்தை முடித்து

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
இப்படி ஆஸ்ரித விரோதிகளை
கை தொட்டு போக்குமவன்
திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்

விசஜாதீய ஸ்வ பாவைகளாய் இருந்துள்ள
ஸ்திரீகள் உடைய அப்படிப் பட்ட ஒளியை உடைத்தான
பரந்த கண்களை குவளைகள் ஆனவை காட்ட
தாமரைப் பூவானது முகத்திலே தேஜசைக் காட்ட
அருகே அலர்ந்து நின்ற அரக்கலாம்பல் ஆனது
சிவந்த அதரத்தின் உடைய திரளைக் காட்டுகிற

————————————————-

ஸ்ரீ ராமாவதாரம் -இதிலும் அடுத்ததிலும் –
வாலி கபந்தன் விராதன் -மூவரையும் முடித்த விருத்தாந்தம் இதில் –

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-

ஆயம் கூறும்   =  தோழைமை சொல்லி அழைக்கிற
பனி படைக்கும்   = துக்கத்தால் உண்டான கண்ணீரை இடை விடாமல் கொட்டிக் கொண்டு இருக்கும்

பைம் கண் இத்யாதி –
ஜாதி பிரயுக்தமான கண்ணில்
பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய
வாலி முடியும்படியாக

பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி
பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட

படையார் திண் கை –
திண்ணிய படையார்ந்த கை
வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய
விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த
(ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம்
வில் என்றது உப லக்ஷணம் )

விண்ணவர் கோன் தாள் அணைவீர்
விரோதியைப் போக்கி
தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த
சகரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்

வெற்பு இத்யாதி
மலை போலே ஓங்கின முகத்தை உடைத்தாய் இருக்கிற
மாளிகையின் மேல் புறத்திலே நின்று
தோழமையை சொல்லி அழைத்து விளையாடுகிற
துடி போன்ற இடையை உடையரான
ஸ்திரீகள் உடைய முகம் ஆகிற
கமலத்தில் உண்டான தேஜஸ்ஸாலே
சந்த்ரனுடைய முகமானது துக்கத்தை பிரபியா நிற்கும் –

நாம் என்ன ஜீவனம் ஜீவிக்கிறோம்
இவர்களோடு ஒப்பு சொல்லா நிற்கச் செய்தே
ஒப்பு போராதபடி இருப்பதே -என்று
துக்கப் படா நிற்கும் ஆயிற்று

சந்த்ரனுக்கு சந்தரன் இவர்கள்
தேஜஸ்சை சந்த்ரனுக்கு உண்டாக்குமவர்கள் -என்னவுமாம்-
(அதீவ பிரிய தர்சனம் -சந்த்ர காந்தம் )

—————————————————-

ராவண வதம் செய்து அருளிய ராமச்சந்திரன் இதில் –

பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த
செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே–3-4-7-

முதல் வலம்புரி = -பலத்தைக் கொண்ட
அடுத்த வலம்புரி = வெற்றியைத் தரத் தக்க
அடுத்த வலம்புரி = சங்கங்கள்
அடுத்த வலம்புரி = சங்கங்களையும்

ஒப்பில்லாத பலத்தைப் பண்ணா நின்றுள்ள
ராவணனுடைய தலைகள் பத்தும்
புற்று மறிந்து கிடைக்குமா போலே
தேவதைகள் உடைய வரத்தாலே பூண் கட்டினவை
பூமியிலே சிதறும் படியாக
அவனைப் போலே வஞ்சனத்தால் அன்றிக்கே
யுத்தத்தில் பலத்தை பண்ணா நின்றுள்ள
வில்லை உடையனாய்
சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய
சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி
அவன் விரோதியைப் போக்க
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க
வேண்டி இருப்பீர்-

திரை நீர் இத்யாதி –
கடல் நீரிலே தேங்கி போந்து ஏறின என்னுதல்
அன்றிக்கே
திரை நீத்து -விட்டு -கடலை விட்டு
வலம்புரியானது போந்தேறி சற்றிருந்து
தாழையை உடைத்தாய் இருக்கிற கழியிலே போய் புக்கு
அங்கே இதஸ்த சஞ்சரித்து அந்த கழி தான் கயல்கள் அளவும்
வர
வெள்ளம் கோத்த படியால் வயலிலே வந்து கிட்டி
அவ்விடம் தன்னிலே வர்ஷ ஜலம் தேங்கி நின்று
அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர
அவ்வழியாலே தெருவிலே வந்து ஏறி
அந்நீர் வடிந்தவாறே பின்னை போக மாட்டாதே
அவ்விடம் தன்னிலே கிடைந்து
வலம்புரியையும் முத்தையும் ஈனா நிற்கும் ஆயிற்று
வலம்புரி வயிற்றிலே வலம்புரி பிறக்கத் தட்டில்லை இறே-

————————————-

மட்டவிழும் குழலி–திருத் தாயார் திரு நாமம் இதில் –
மட்டு-தேன் -என்றும் பரிமளம் என்றும் –

பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ
நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-8-

பட்டை உடைத்தாய்
அரவு போலேயதாய்
அழகியதாய்
அகன்று இருந்துள்ள
நிதம்ப பிரதேசத்தை உடையவளுமாய்
பவளம் போலே சிவந்த அதரத்தை உடையவளுமாய் –
மூங்கில் போலே நெடிய தோள்களை உடையவளுமாய்
மான் போலே இருந்துள்ள நோக்கை உடையவளுமாய்
பால் என்று சொல்லலாம் படி இனிய பேச்சை உடையவளுமாய்
இருந்துள்ள
மது வெள்ளம் விடா நின்றுள்ள குழலை உடைய
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக
என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான
வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய
இத்தால் –
அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை-

அணில் இத்யாதி –
அணில்கள் ஆனவை ஸ்வைரமாகத் தாவ
நெடிதான இலையை உடைத்தாய்
கறுத்த நிறத்தை உடைத்தான கமுகுகளில் சிவந்த காயானது
தொட்டார் மேலே தோஷமாக விழ
ஓங்கின பலாவின் தாழ்ந்த பனைகளிலே நெருங்கி வசிப்பதாய்
தசைந்து பக்வமாய்
தொட்டார் மேலே தோஷமாய் இருக்கிற பழமானது
தேங்கி நிற்கிறதுக்கு ஒரு போக்கு கண்டு விட்டாப் போலே
மது வெள்ளம் இடா நிற்கும் ஆயிற்று-

——————————————————-

ஈஸ்வர அபிமானிகளுக்கும் இடம் கொடுப்பவன்
நாம் ஆஸ்ரயிக்கத் தடை என் என்கிறார் –

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-

கைதைத் தோடாரும் -கைதை ஆரும் தோடு -பெரிய மடலை உடைய தாழம் பூவிலே –
பொதி -அதனுள் நிறைந்த
சோற்றுச் -தாதுக்களின்
சுண்ணம் -பொடிகளில்
பொதி சோறு -மடலிலே பொதிந்து கிடந்த சோறு

சாதகனுமாய் போக பிரதானனுமாய் இருக்கிற ருத்ரனை
தன் திருமேனியில் வலவருகு வைத்து

ப்ரஹ்மாவை தன் உந்திக் கமலத்தில் உத்பாதித்து

கறை கழுவ அவசரம் இல்லாதபடியான வேல் போலே இருக்கிற
பரந்து இருக்கிற திருக் கண்களை உடைய
பெரிய பிராட்டியாரை தன் திரு மார்பிலே சேர்த்து
( அவனையும் ஜிதந்தே என்று சொல்லச் செய்யும் திருக்கண்கள் அன்றோ இவளது )
அவளோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகிறவன்
திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர்

அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு
அநந்ய பரையான பிராட்டியோடு வாசி அற
திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற
சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-

கழு நீர் இத்யாதி
செங்கழு நீரிலே போய் புக்கு நித்ய சம்ச்லேஷத்தைப் பண்ணி
அத்தாலே வந்த ஸ்ரமம் ஆறும்படி
துறையிலே உண்டான தாமரைப் பூவிலே புகுந்து
மது பானம் பண்ணிப் பள்ளி கொண்டு

அநந்தரம்
தாழை உடைய பெரிய மடலை உடைத்தான
பூவிலே போய் புக்கு
அதிகைதையால் உண்டான தாதும் சுண்ணமும் பரிமளமும் எல்லாம்
தன் உடம்பிலே ஆம்படி அதிலே கிடந்தது புரண்டு
சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மதுபானத்தாலும் பரிமளத்தாலும் களித்து பாடா நின்றுள்ள –

———————————————————-

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-

அரட்டு அமுக்கி -சத்ருக்கள் தலை எழாதபடி அமுக்க செய்பவராய்
அடையார் சீயம் -சத்ருக்களுக்கு சிம்ஹம்

வால்மீகிர் பகவான் ருஷி -என்பானைப் போலே
பெருமாளுக்கு வல்லபனாய் இருப்பான் ஒரு
திரு விளக்கு பிச்சன் பலரையும் திரு முன்பே
ஷேபிக்கிற பிரகரணத்தில் ஆழ்வார்களை திரு உள்ளமாய்
நம் பக்தர்களுக்கு ஒரு குறை சொல்லிக் காணாய் -என்று
திரு உள்ளம் ஆனாராய்
இப்பாட்டை விண்ணப்பம் செய்து
நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி
தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –
அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்
(தம்மை அனுபவித்ததால் வந்த கீர்த்தியை அன்றோ சொல்லிக் கொள்கிறார்
எம்பார் தம்மைக் கொண்டாட ஒத்துக் கொண்டு அருளியது போல் )

சதுர்முக சமரான பிராமணர் திரண்ட தேசத்திலே
சீராம விண்ணகரிலே நித்யவாசம் பண்ணுகிற புண்டரீ காஷனை கவி பாடிற்று –

அழகிய தாமரைகளாலே அலங்க்ருதமான தடாகங்களை
உடைத்தான வயலாலே சூழப்பட்ட
திருவாலி நாட்டுக்கு பிரதானர் ஆனவர் –

அனுகூல வர்க்கத்துக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுமவர்

எதிரிட்ட சத்ருக்கள் தலை எடாதே அமுங்கும்படி பண்ணுமவர் –

சத்ருக்களை வந்து அணுக ஒண்ணாதபடி சிம்ஹம் போலே அநபிபவ நீயர் ஆனவர் –

எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயனரானவர்

திருமங்கைக்கு பிரதானராய் உள்ளவர்

சர்வேஸ்வரன் ஆயுதம் பிடித்தார் போலே ஆஸ்ரித
ரஷணத்துக்காக பிடித்த வேலை உடையராய்

பிரதிபஷத்துக்கு மிருத்யுவான ஆழ்வார் அருளிச் செய்த

தமிழுக்கு கடவார் திரள இருந்தால் இத்தையே எப்போதும்
ஒக்க கொண்டாட வேண்டும்படி இருக்கிற
இத்தொடையல் பத்தும் வல்லார்
தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே –
(ஞான சம்பந்தரும் கொண்டாடி வேலை சமர்ப்பித்தார் அன்றோ )

சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும்
தாங்களே ஆஸ்ரயணீயராவார்-

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஒருவன் அயன் வாலி வாணன் இந்திரன் பொன்னன்
அரன் பெருக்கெடுத்து மலர் மங்கைக்கு -அருளுமா
போல் அருள் சீராம விண்ணகர் உள்ளான் என்னும்
வேல் கலியன் ஏத்தும் உவந்து -24-

ஒருவன் -அத்விதீயன் /
ப்ரஹ்மாவின் செருக்கை அளிக்க உரோமசர் முனிவர் விருத்தாந்தம் -வாணன் –
கற்பகாக்காவை சத்யா பாமை பிராட்டிக்கு -இவ்வாறு அஹங்காரங்கள் அழித்து
குரு மா மணிப் பூணாய்ப் பூணுதற்கு வேடிக்கை கொண்ண்டு திவ்யதேசங்களில் உகந்து எழுந்து அருளி –
வேல் கலியன் -ஞான சம்பந்தர் செருக்கு அழித்தமை –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: