திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க
இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-
பொழுது இத்யாதி
நாங்களும் எல்லா கார்யம் செய்து-பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது
கழி சினத்த -இத்யாதி –
மிக்க சினத்தை உடையவனாய்-வானர ராஜாவான வாலி உடைய
செருக்கை வாட்டின-சக்கரவர்த்தி திருமகன் என் நெஞ்சிலே சந்நிஹிதன் –
மதன் -மதம் -செருக்கு -என்றபடி-

————————————————————–

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல்  நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய்
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

———————————————————————

தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்-

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

சமய விருந்து
சமயம் பண்ணின விருந்து
ஆர் காப்பார் –
இந்த்ரன் பாதகனே வர்ஷிக்கிற போது-எம்பெருமான் அன்றோ காத்தார்-இடையரோ –
சமய இத்யாதி –
வைதிக சமயத்தைக் கண்டானும்-அவற்றை ரஷிப்பானும்-நீல கண்டன் சதுர்முகன் முதலானவர்கள் துரிதங்களைப்-போக்குமவனும்-இவ்வாத்மாக்களையும் வயிற்றிலே எம்பெருமானை ஒழிய அற்று யார்-

————————————————————

இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது
இவ்வாத்மா சரீரத்தைப் பொகட்டு-பிராணனைக் கொண்டு எம படராலே ப்ரேரிதமாகப் போம் போது
ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்
ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி -இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை
எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது-துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
பந்தகமாய்-ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப்-பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை –

————————————————————————–

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுதாகது ஓன்று அறிந்தேன்
பழுதாகாத உபாயங்களில்-உத்க்ருஷ்டமான உபாயம்
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி வாழ்வார்-
பாகவத சமாஸ்ரயணம் என்று இருந்தேன் –
கலந்த வினை கெடுத்து விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு
ஆத்மாவோடு அவிநாபூதமான பாபத்தைப் போக்கி-ஸ்ரீ வைகுண்டத்தில் வாசல் திறந்து -விண் திறந்து –
அங்கே அதி சம்ருத்தமான ஜ்ஞான பக்திகளை உடையராய்-பகவத் கைங்கர்யத்தில் தலைவரான-நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-

————————————————————————–

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————————————————————————–

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி –
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று-
தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்-அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்-என்று அந்வயம்
மால் வண்ணன் -கிருஷ்ணன்
தாள் தாமரை -தாளை உடைய தாமரை
ஆடு அரவத்தார்க்கும் -ஆடுகிற பாம்பை ஆபரணமாக உடைய
ருத்ரனுக்கும்
அமரர்கள் -நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி

————————————————————————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று
வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க
நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் –
என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

எம்பெருமானுடைய ரஷையை மறந்தறியேன்-கிருஷ்ணனே பிராப்ய ப்ராபகங்கள் என்று இருப்பன்
சர்வ ஆத்மாக்களும் கரண களேபரங்கள் இழந்தால்-அத்தை மீளவும் கொடுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான
சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்
ஆப்பு -பந்தமாய் அத்தால் கரண களேபரங்களை சொல்லுகிறது-

——————————————————–

அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்
என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-
ஒன்றாய் வாழாதே வேறான துர் யோநாதிகள் பஸ்மாமாம்படி-பர ஹிம்சை என்று கலங்காதே-ஆஸ்ரித விரோதிகள் ஆகையாலே-திரு உள்ளம் தெளிந்து அணி வகுத்து
யுத்த களத்திலே கொண்டு விழ விட்டு-பின்னும் படுக்கையிலே சாய்ந்தவனே
பை தெளிந்த
எம்பெருமானோட்டை ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்கள்-அவர்கள் தக்கவைவர்
நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

————————————————————————–

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

ஏன்றேன் அடிமை –
அடிமை என்றால் மருந்து போலே இராதே-அதிலே பொருந்தினேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான-அஹங்காரம் மமகாரம் ஆகிற பர்வதத்தில் நின்றும் இழிந்தேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன் கடனாடும்மண்ணாடும்
கை விட்டு மேலை இடநாடு காண வினி –
ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து
அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி
இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்-

————————————————————————–

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம்  என்று எனக்கு
கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு
நற்கிரிசை –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
நன்கு அறிந்தேன் நான்
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: