திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

இப்பாட்டையும் பட்டர் அருளிச் செய்தார்
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் தன் பெருமையை –
சகல லோகத்தையும் வயிற்றிலே வைத்து-வெளிநாடு காண உமிழ்ந்த பெரியவனுடைய
நைரபேஷ்யத்தை யார் அறிவர் –
இவனுடைய பெருமையை பரிச்சேதிக்க வல்லார் யார் என்றுமாம் –
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன்வைத்த பண்டைத் தானத்தின் பதி –
அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-

—————————————————————-

ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –
ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாகதிருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து -அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ள பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதிப்பகைஞற்கு ஆற்றாது –
சஹஜ சத்ருவான திருவடிக்கு அஞ்சி-அவர் பலம் பொறுக்க மாட்டாது
பாய் திரை நீர்ப் பாழி –
பரந்த திரையை உடைத்தான கடல் போலே-திருப் பள்ளிக் கட்டில் –
ஒரோ யுகத்தில் ஒரு இடங்களில் எல்லாம் பிறக்கக்-கூடுகையாலே திருப் பாற் கடல் தன்னிலே ஆகவுமாம் –
மதித்தடைந்த-
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன் என்றும் நிச்சயித்து அடைந்த
வாளரவம் -தன்னை –
சரண்யன் அங்கீ கரிப்பதுக்கு முன்னே-அவனுடைய சீலவத்தையாலே தன் கார்யம் தலைக் கட்டிற்று-பிறந்த ஒளி – என்று-அந்தரிஷிகதஸ் ஸ்ரீ மான் -என்னும் படியே
-மதித்து –
நெஞ்சில் கொண்டு என்னும்படியாக-சரணாகதனாக நினைத்து
அவன் தன் வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனைஅல்லாது ஓன்று ஏத்தாது என் நா
திருவடி தானே பிரசன்னனாய்-தன் தோளில் தரிக்கும்படி பண்ணி-அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-
வேறு ஓன்று –என்றது -தேவதாந்தரங்கள் பக்கல் அநாதரம்-

—————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

————————————————————————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

இப்படி புராணங்களில் பரக்கச் சொல்லப்பட்ட அர்த்தங்கள்
காரணமான அக்நி -வியாபகமான ஆகாசம்-
யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -என்று
ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம் ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடைய –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

ஆழக் கடவ கல்லைக் கொண்டு-நீரிலே அணை கட்டினவன் –
எற் கொண்ட வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம்வைத்தான் எவ்வினையும் மாய்மால் கண்டு
நான் உரு மாயும்படி என்னை க்ரசித்த மகா பாபமும்-நசிக்கும்படி -வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

————————————————————————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

கண்டு இத்யாதி –
அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்
தவத்தாற்கு –
தபச்சுக்கு பலம் ஒருத்தனுடைய ஹிம்சை யாம்படி-நெஞ்சு திண்ணியன் ஆனவனுக்கு
உமை உணர்த்த –
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு
வண்டு இத்யாதி –
மது வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்ற-திருத் துழாய் மாலையையும்
ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து
ஆர் அலங்கல் ஆனமையால் –
அலங்கல் என்று அசைவாய்-பாரவச்யதையைச் சொன்ன படி

————————————————————————–

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

ஆய்ந்து -இத்யாதி
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –
சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்
ஆய்ந்த இத்யாதி –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்திக் கொண்டு
இருத்துகைக்கு யோக்யமான நெஞ்சிலே வைக்க வல்லவர்கள்
ஏய்ந்த தம் மெய் –
ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை
குந்தமாக -நோயாக-

———————————————————–

பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த
கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

உலகம் -என்று உத்க்ருஷ்டரைச் சொல்லுகிறது
-பரந்து உலகம் பாடின வாடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு –
பரந்து உத்க்ருஷ்டராய் ஆடினவர்கள் பாடின-திரு நாமங்களைக் கேட்ட
நரகத்து வாசல்களில் கதவு வாங்கிப் பொகட்டன-
அன்றிக்கே
நரகத்து வாசல்களிலே பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி -முனியாது மூரித்தாள் கோமின் -என்னும்படி-விரைந்து அடையுங்கோள் -என்றுமாம்
கண்ணன் -என்றது கண்ணனை -என்றபடி
நரகம் பாழ்ந்தது
போக்குவரத்து இல்லாத படி கதவை அடையுங்கோள்-என்று இரண்டு தாத்பர்யம்-

————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி
பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –
குதை இத்யாதி
தடுமாற்றமான தொழில்  தவிர்ந்தேன்
விதை இத்யாதி
தடுமாற்றம் தீருகைக்கு சொல்லுகிறது

————————————————————————–

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் –
எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –
ஈது ஒப்பது உண்டே –
அவன் தான் காட்டக் கண்ட இதுக்கு-கதிர் பொறுக்கிக்கண்ட நலன்கள் சத்ருசமோ –
அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்றுஇவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து –
செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத-சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-

———————————————————————–

-இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் –
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான மனுஷ்யராய்
அழகாய் -என்னவுமாம்
சஹஸ்ரம் ஹி பிதுர் மாதா -என்னவுமாம்
அனுக்தமான எல்லாவுமாய்
சார்ந்தவர்க்குத் –
இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் –
எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
அவன் குமிழ் நீர் உண்டிட-இவன் குமிழ் நீர் உண்ண
காணும் அத்தனை
ஆற்றான் -த்ருப்தன் ஆகான்
பிதிர் -அதிசயம் -மிச்சம் என்றபடி-

——————————————————————

அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன்-ஏக ரூபம் இன்றிக்கே இருக்கிற மனஸை உடையேன் அல்லேன்பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் –ஈஸ்வராத் ஜ்ஞானமன்விச்சேத்-என்கிற தேவனோடு ஒப்பான் –அவன் எனக்கு நேரான் -சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழும் காதல்  பூண்டேன் தொழில் -த்வனியா நின்ற வீரக் கழலைதிருவடிகளிலே உடைய சர்வாதிகனான கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: