திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு –61

கேதம்– துக்கம் ஏதம் -பொல்லாங்கு
மனசுக்கு ஏதம் சாரா என்றுமாம்
தஞ்சமான செயலை செய்யுமவனை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில்
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று
தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
அது தானும் இன்று-

—————————————————————————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62

-திரு நின்ற பக்கம்-
அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே
இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்
அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
திறவிது என்று ஓரார்
திறவிதாவது
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய்
வேறு ஒன்றால் அறியாதது –
ஒரு சேதனர் ஆகில் அறியலாம் என்கை –
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர்-
தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்
கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரய ணீ யராக தங்களோடு ஒத்த
அறிவு கேடருக்கு உபதேசிப்பார்கள் –
திருவிருந்த மார்பில் சிரீதரன் தண் வண்டுலவு தண்டுழாய் தார் தன்னைச் சூடித் தரித்து
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச்
சொல்லும்படி அன்றிக்கே
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்தருளி இருக்கையாலே
ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை உடையவன் ஆனவனுடைய
மது வெள்ளத்தாலே வண்டுகள் திரியா நின்றுள்ள
செவ்வியை உடைய திருத் துழாயை
சூடிக் களைந்தன சூடும் -என்னும்படியே
தலையால் தரித்து திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-

—————————————————————————————————————————————–

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63

கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை –
இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

தாரா கணப் போர் விரித்துரைத்த வென்னாகத்துன்னை-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை
விஸ்த்ருதமாகச் சொன்ன
திரு வனந்த ஆழ்வானுக்கு
ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை
தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
அனுசந்தித்தும் லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும்
நிர்மமனாய் வணங்கி
அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன்
தரித்து இருந்தேனாகவே —
ஆகவே தரித்து இருந்தேன் –
தரித்து இருந்தேனாகவே –
தரித்து இருந்தேன் ஆகைக்காக
பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-

—————————————————————————————————————————————–

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏ ழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ
இன்ன புஷ்பம் என்ற நியதி இல்லை –
பூவானதை எல்லாவற்றையும் கொண்டு
திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கி
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்
பொன் மகரக் காதானை –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி
ஸ்ப்ருஹணீ யனானவனை –
ஆதிப் பெருமானை –நாதானை நல்லானை நாரணனை-நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே
நமக்கு உத்பாதகனானவன் –
ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய்
நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

—————————————————————————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன்
உறுவதாவது என்னெஞ்சிலே மநோ ரதித்தேன்
சொன்மாலை -இத்யாதி
அழகு தான் வடிவு கொண்டாற் போலேயாய்
வ்யாமுக்தனாய் இருந்துள்ள
ஸ்ரீ ய பதியைச் சொல்லப்பட்ட பிரபந்தத்தை ஏதேனும் ஒருபடி
அனுசந்திக்கிற எனக்கு பரமபதத்தில்
இடம் இல்லையோ –
ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும்
பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்
மாதாய -அழகாய –மாது -அழகு-

—————————————————————————————————————————————–

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம்
என்னோடு சம்ச்லேஷிப்பதுக்கு முன்பு எல்லாம்
தன்னோடு சம்ச்லேஷத்தாலே விஸ்த்ருமான பணத்தை உடைய திரு வநந்த ஆழ்வான் –
இப்போது எல்லாம் என்னுடைய ஹிருதயம் –
திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் –
சந்த்ரனை தரித்தானாய் இருக்கிற ருத்ரனையும் –
திரு நாபீ கமலத்திலே உத்பன்னன் ஆகையாலே
அஜன் என்று இருக்கிற ப்ரஹ்மாவையும்
திருட பதார்த்தங்களாக நினையேன் –
வையேன் ஆட்செய்யேன் வலம் –
அதுக்கடி கூரியேனாய்
சார அசார விவேகஞ்ஞனாய் ஆகை
பிரதிபுத்தா ந சே வந்தே -என்று
கூரியர் ஆனவர்கள் தேவதாந்தர பஜனம்
பண்ணார்கள் இ றே-என்கை-
வலம் –
இதுக்கு எல்லாவற்றுக்கும் அடி
பகவத் பரிக்ரகமான பலம்
வையேன் -மனசிலே வையேன் -நினையேன் என்றும்
வையேனான நான் -கூரியனான நான் -என்றும் இரண்டு நிர்வாஹம் -கூர்மை -ஜ்ஞானக் கூர்மை-

—————————————————————————————————————————————–

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67

நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச சீரணனை ஏத்தும் திறம் –
நன்றாக சர்வ ஸ்வாமியாய்
என் நாவுக்கு நிர்வாஹனாய்
ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
இருக்கிறவனை நன்றாக ஏத்தும் பிரகாரம் –
வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக
பலமாகவுமாம் –
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –
அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்
அவனை ஏத்துகையே உத்தேச்யம்
சீரணன் -குணங்களை உடையவன்

—————————————————————————————————————————————–

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68

பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை
ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்
படியே விவரிக்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது
நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்தரந்தர பரிக்ரகம் இ றே அவனுக்கு ஆகாமைக்கு அடி
மாந்தரை –
மனுஷ்யரை –
-இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது
பாச ஹஸ்தம் -என்கிற க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய்
அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும்கோள்-என்கிறார் –
நமனும் –
சம இதி -என்று சொல்லப் படுகிறவனும்-ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
தன் தூதுவரை
ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு
கர்ண மூலே -என்றபடி
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-

—————————————————————————————————————————————–

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69

பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
-யம வஸ்யதையை தவிர்க்கும் அளவு அன்று
செவிக்கு இனியதுவும் புண்டரீகாஷனுடைய திருநாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் –
எனக்கு ஒருத்தனுக்குமேயோ
பூமியில் உள்ளாருக்கு எல்லாம் ஸ்தானம் திருநாமம்
கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே
ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்
குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக
லபித்தேன் –
பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –
யாத்ருச்சிகமாக அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்
அத்தனையே –

—————————————————————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70

வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி
எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ
பிரசித்தம் அன்றோ -என்கிறார் –
– தான் ஒருவனாகித் –
வாமனனாய்
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் –
வாமனனாய் பரப்பான பூமியை
வியாபித்து தன் திருவடிக்குள்ளே அடங்கும்படி
இட்டுக் கொண்டு
அச் செயலாலே அத்விதீயனாய் –
தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்
–பிரளயம் கொண்ட பூமியை
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடும்படி
இடந்து எடுத்து
மகா வராக ரூபியாய் பெரிய பூமியை
திரு எய்ற்றில் ஏக தேசத்திலே தரித்ததும்
யானொருவன் இன்றா வறிகின்றேன் அல்லேன்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ –

—————————————————————————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

—————————————————————————————————————————————–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72

நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்
என்னச் சொல்லுகிறார் –

இல்லறம் இல்லேல்-
கர்ம யோகம் அன்றாகில்
பிரவ்ருத்தி தர்மம் அன்றாகில் -என்னவுமாம்
துறவறம் இல் என்னும் சொல் –
நிவ்ருத்தி தர்மம் ஸ்தானம்  பிரமாணம் –
ஜ்ஞான யோகம் என்னவுமாம்
அறம் அல்லனவும் சொல்லல்ல –
அல்லாத தர்மங்களை விதிக்கிறவை
பிரமாணங்களும் அன்று
அல்லாத தர்மங்கள் என்கிறதும் கர்த்ருத்வ பலாபிசந்தி
ரஹீதமாக அனுஷ்டிக்கும் கர்மங்கள் அன்றிக்கே
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தநாதிகள் ஆகவுமாம்
சொல்லறம் அல்லன -என்று
பதச்சேதமான போது பிரமேய பரம்
இல் என்னும் சொல் -என்ற போது பிரமாண பரம் –
நல்லறம் ஆவனவும் -நாரணனே ஆவது
பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள்
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தனங்கள்
நால் வேத மாத்தவமும் –
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம்
இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
இதர தர்மங்களைச் சொல்லுகிறது பிரமாணங்கள் அன்று என்று நீர்
சொல்லுகிறது எத்தாலே என்னில்
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –
பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
ஈதன்று என்பார் ஆர் –
அல்லாதவை போல் அன்றிக்கே
உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: