திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
கூர்ம ரூபியான தன் மேலே-மலையை வைத்து-வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி –
ஆமையான தான் மேலே-கொந்தளியாத படிக்கு ஈடாக-மலையின் உச்சியை ஒரு கையாலே அமுக்கி –
அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –
நிரம்பின நீர் புறம் பொசியாமலும்-அமிர்தம் படும்படி உள்ளுடையவும் கடைந்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

————————————————————————–

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –
ம்ருத்யு அணையாமைக்கும் -ம்ருத்யு அணைகைக்கு ஹேதுவான மகா பாபம் அணையாமைக்கும்-அபவாதம் சேராமைக்கும்-உபாயம் அறிந்தேன் – –
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச்  செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
கூற்றம் -வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டரில் வ்யாவ்ருத்தி
கொடு வினை -த்ருஷ்ட அத்ருஷ்ட காம்ய பரரில் வ்யாவ்ருத்தி –
இவை இரண்டும் பிரபன்னனுக்கு இல்லை -என்றபடி
ஆயன் இத்யாதி –
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
அதாவது -தத் விஷய ஜ்ஞானம்
அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே-
எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற எனக்கு-ஒருத்தர் எதிர் உண்டோ –
எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் –
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு
ஒப்பு அன்று –
-புனக்காயா வண்ணனே யுன்னைப் பிறர் அறியார்
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீ-ரஷகன் அல்லை யாகிலும் விரும்பப்படும் உன்னை
அசலார் அறியார் –
என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

———————————————————–

என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்
என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-
விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்காட் பலி திரிவர் தக்கோர் –
ஈஸ்வர சேஷமாய்-அனன்யார்ஹமான வஸ்துவை வேறு சிலர்க்கு சேஷம் ஆக்கியும்
ஜீவனத்துக்காக பிறர் உடைய வியாதிகளை-நீர் வார்ப்பித்துக் கொண்டு
ஒருத்தன் பிழைத்தால் தலை யரிகிறேன் என்று-பிரார்த்தித்து பலி த்ரவ்யமாய்
திரிந்தும் அன்றோ படுகிறது
தக்கோர் -என்று ஷேபோக்தி
முலைக் கால் விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
இவர்கள் குறித்து செய்வது ஸ்வ விரோதியைப் போக்குமவனை ஏத்தாமை
கடமுண்டார் கல்லாதவர் –
தேத்வகம் புஞ்சதே பாபா -என்னும்படியேபாபத்தை புஜிக்கிறார்கள் –
அன்றிக்கே
கொடுக்க உடல் இன்றிக்கே இருக்க-தனிசு வாங்கி ஜீவிக்குமவர்கள் என்னவுமாம் –
கடமுண்டார்--கடன் பாபமாய் -அத்தை அனுபவித்தல்-

————————————————————————–

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –
கற்றான் ஒருத்தன் உளனாக-அவனைப் புறப்பட விட்ட ஜ்ஞான ஹீநருடையதான
சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்கிற திருவடியைப் போலே இவரும்
-பொல்லாத தேவரைத்
சுபாஸ்ரயமாக விருபாஷன் தொடக்கமானவரை-ஆஸ்ரயிக்கப் போமோ
தேவர் அல்லாரைத் –
அத்தை பொறுத்து ஆஸ்ரயித்தாலும் கட்டக்குடியன் அப்ராப்த ஸ்தலம் –
திரு இல்லாத் தேவரைத்
மோஷ பிரதானவன் ஸ்ரீ ய பதியன்றோ –
தேறேல்மின் தேவு –
ப்ராப்த ஸ்தலம் அல்லாமையே யன்று-ஆஸ்ரயித்தால் பிரயோஜனம் இல்லை என்கை –
தேறேல்மின் தேவு —
முகப்பிலே புத்திர பஸ்வாதிகளை தருமத்தைக் கண்டு-ஆஸ்ரயணீயராக புத்தி பண்ணாதே கொள்ளுங்கோள்

கட்டகுடியன் -ஆபாத தயா குடி போலே-தோற்றி வரி இறுக்க மாட்டாதவன்
எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-
கட்டம் –கஷ்டமாய் தரித்திரன் என்றபடி
குடி போலே இருக்கையாலே எடுக்கவுமாம்
தரித்திரன் ஆகையாலே கழிக்கவுமாய் இருக்கும் அங்கு
இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை
தேவு -அல்ப பல பரதன் என்றபடி

————————————————————————–

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-
ஆதித்ய இந்த்ராதிகளுக்கு நடுவே நிற்கிற நிலையும்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற-பிரதம அவதாரத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும்-சேதன த்வாரா ப்ரவேசித்து
அவற்றுக்கு வஸ்துத்வ நாம் பாக்த்வம்-உண்டாம்படி நிற்கிற நிலையும்
சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

————————————————————————–

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று சர்வேஸ்வரன்-பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை யவர்கள்-பக்கலிலே பண்ணும் சம்சார சுகமும் இன்றிக்கே-நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இறுக்க-ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –

————————————————————————–

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-
அவரிவர் இத்யாதி –
காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு
அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே
உவரி -இத்யாதி
ஒருத்தரும் இல்லை என்கிறது என் -ஒரு தேவர் இல்லையோ என்னில் –
அவரும் செய்தபடி இது அன்றோ என்கிறார் –
அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்
தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி-அவன் தானே சாஷியாகத் தோற்றான் –
ஒருங்கு –
ஒருப்படிப்பட வாணனோடு தன்னோடு வாசி யற-
கடன் என்று கடவன் நிர்வாஹகன் -என்று

————————————————————————–

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-
அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே –
குருந்தை அனாயாசேன ஒசித்தாற் போலே-நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-ஆசன்னரான தேவ-அசுர பூமி என் நெஞ்சகம் எல்லாம் அவனே -ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

—————————————————————–

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –
என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக
பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும்
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை
தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி
அத்தாலே தான் உளனான வனுக்கு-ச்நேஹத்தை உண்டாக்கினேன்-

————————————————————————–

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-
என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-நிரதிசய போக்யனுமாய்-எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ச்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசச்த கேசனாய்-கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு நான் அடிமை –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று -முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

————————————————————————–

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின் தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை
தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும் –
-கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் -என்னும்படியே
உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே-ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய்
நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-கோயிலிலே கண் வளருகிறவனே
உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –
என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –
விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: