திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37

சூழ்ச்சியும் ஆவரணமும்
இவை எல்லாம் திருமால் அகைப்பு -எழுச்சி
ஸ்ரீ ய பதியினுடைய பிரயத்னம் – சங்கல்பம் -என்கை

————————————————————————–

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38

அகைப்பில் மனிசரை –
எழுச்சி இல்லாத மனிசரை –
அளவில்லாதவர்களை -என்கை
ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன்
சூத்திர பதார்த்தங்களை அகபபடுத்த புகைக்குமா போலே
பாஹ்ய சமயங்களைக் காட்டி-அகப்படுத்தினான் சர்வேஸ்வரன் –
உகைக்குமே எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு -நெகிழ நிற்குமாகில் தேவதாந்தரங்கள்-
ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே
பண்ணும் அபிமானமும்
அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்
அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –

————————————————————————–

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
போக மோஷத்துக்கோ என்னில் –காண –
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
அரவு ஒடுங்கும் வெற்பு –மலையிலே பெரிய அருவிகள்
ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய-
ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும்
பயப்பட்டு ஒதுங்கும் திருமலை–
அன்றிக்கே
நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –
இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம்

————————————————————————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –
வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்
நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்
கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

————————————————————————–

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41

ஒலியை உடைய அருவிகளாலே முத்து உதிர –
திருவோண நஷத்ரம் ஆகிற மகா திவசத்திலே
அனுகூலர் உடைய மங்களா சாசனத்தாலே வந்த த்வனி
மிக பிராப்தயா வந்து ஆஸ்ரயிக்க படும் திருமலை யை உடைய
நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்

————————————————————————–

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
சென்னி யோங்கு தண் திரு வேங்கடம் -என்னும்படியே-புறப்பட்டவாறே
கண்டு கிலேசம் தீரும் படியாக-ஆகாச அவகாசம் அடங்க விழுங்கும்படி
உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையை சென்று வணங்குங்கோள்
நீர்மை யால் நின்று வினை கெடுக்கும்–
விரோதியான பாபத்தை திருமலை-தன் ஸ்வபாவத்தாலே நசிப்பிக்கும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு
பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-திரு நாபி கமலத்திலே அவயவ தானேன பிறந்த
சதுர முகனும் லலாட நேத்ரனும்-அவன் திருவடிகளை
புஷ்ப்யாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்தது-

————————————————————-

சதுர்  முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும் சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
மேக பதத்திலே செல்ல உயர்ந்த சிகரங்களை-உடைய திருமலையை உடையவனை –
காப்பணிவான் கங்குல் புகுந்தார்கள்-
திருவந்திக் காப்பெடுப்பான்-சமாராதான காலம் தோறும் புகுந்தார்கள் –
திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும் குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு -சந்த்ரனை சடையிலே தரித்த ருத்ரனும்-தாமரைப் பூவை ஜென்மமாக உடைய ப்ரஹ்மாவும்-திரு முத்துக் கொடை முதலானவற்றைத் தரித்துக் கொண்டு
கங்குல் புகுந்தார்கள் –

—————————————————————-

குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை
ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-
அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே கால்நடை யாடும் போதே
ஆச்ரயித்துப் போருங்கோள்-

——————————————————-

வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –
என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45

நிரதிசய போக்யமான திருவடிகளிலே-ஆதரித்து புஷ்பாதிகளை இட்டு
ச்நேஹித்து படுகாடு கிடக்கும் படியாக-விசத தமமாக எங்கும் குறைவற்றவனுடைய
ஸ்ரமஹரமான திரு மலையே-உபய விபூதிக்கும் பிராப்யம்-

————————————————————————–

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-
சந்தரன் அணியனாய் இருக்கையாலே-சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால்
மீள அறியாதே -எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை
புறம்புள்ள வேடர் சூழ-
திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே
அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-
ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திருமலையை ஊர் என்கிறது –
ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இ றே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளையபெருமாள்-அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –
ஆளியும் இத்யாதி –
திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது-

————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே
இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –
அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-பாபத்தைப் போக்குமதுவும் திருமலையே –
வேங்கடமே தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு வானவரைக் காப்பான் மலை –
அசூர ஜாதி தரைப் படும்படிக்கு ஈடாக-திரு ஆழியைப் பிடித்து தேவ ஜாதிக்கு
குடி இருப்பு கொடுத்தவனுக்கு ஊரும் திருமலையே-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: