ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -81-90–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார்

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –
நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –
மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும்சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்
மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

————————————————————————–

கீழே நாரணனைக் கண்டேன் என்றார்–இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

படிக்கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் கழித்தார் ஆரோ என்னில்
வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
செவ்வியை உடைத்தாய்
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
காலம் எல்லாம் அகலாள்
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும்
கால் வாங்க மாட்டாமையும்
அடிக்கோலிஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
விஷயம் என்று அறிந்த பின்பும்
ச்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
இவளுக்கு விசிஷ்டம் –
இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது
தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –
கோல இத்யாதி –
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
குறைவற்று இருக்கையாலே –
இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
பரப்பு உண்டாகையாலே
இவ்விஷயத்தை அனுபவிப்பா ருக்கு பிரியமே உள்ளது –

————————————————————————–

முன்பு சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன்
பெரிய நல்லேன் என்று சொன்னார் –
இப்போது அவ்வஸ்து தன்னை லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு
விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார்

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

ஆங்கென உரைத்த-எல்லாரும் அது அது என வேதத்தால் உரைக்கப்பட்ட வன் என்னுதல்
அது என்று போகிறது ஒழிய இதம் இத்தம் என்று-பரிச்சேதித்து சொல்லப் படாதவன் என்னுதல்-

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி மறை யாங்கு என உரைத்த மாலை –
அபரிபூர்ண மாம்படியாகவும்
திரு உள்ளம் நோம் படியாகவும் வார்த்தை சொன்னேன்
வாக் விவ்ரு தாச்ச வேதா -என்று
சொல்லப் படுகிற சர்வாதிகனை
வேதம் -ஈத்ருசம் இதம் -என்று
சொல்லப் போகாதவனை -என்றுமாம் –
இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்மாயன் கண் சென்ற வரம் 
விசத்ருசமாக சொன்ன அளவேயோ –
ஓன்று சொன்னேனாய்
அதுக்கு பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன்

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

தேவதைகள் பக்கலிலே வரம் பெற்றவனாய்
தேவதைகளுக்கும் அடியாய் இருந்துள்ள உன்னை வணங்காத
துர் அபிமானத்தை உடையனான ஹிரண்யனை
இதுக்கு முன்புள்ளதால் ஒன்றாலும் படாப்பேன் என்று
வேண்டிக் கொள்ள
முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய்
அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய
சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத
அமிர்தம்
திருவன் -என்றது அழகியான் தானே அரி வுருவன் தானே –
நார சிம்ஹவபு ஸ் ஸ்ரீ மான் -என்னும் வடிவு-

————————————————————————–

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது என்று பர்யாய சப்தம் போலே
காணும் ஆழியான் என்கை
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
தன்னை வேண்டாதே
உப்புச் சாறு வேண்டுமவர்களுக்கு
அது கொடுக்குமவன்
அமுதன்ன சொன்மாலை எத்தித் தொழுதேன்
அவனையும்
தேவர்கள் அமுதத்தையும் ஒழிய
இவருடைய அமிர்தம்
அவனைப் பேசும் சொல்லும் –
சொலப்பட்ட
யஸ்மின் ந ச்ருத்ரிம கிராம் கதி ரேக கண்டா – என்று
பிரமாணங்களாலே சொல்லப்பட்ட –
நன்மாலை ஏத்தி நவின்று –
அமுதான சொன்மாலை ஏத்தித் தொழுதேன்-

————————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-சாதனா அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

நவின்று இத்யாதி –
நாவலர்களானவர்கள் செவ்விப் பூவைக் கொண்டு
சாதரமாக உரைப்பர்கள்
பயின்ற இத்யாதி –
பெற்றால் தான் சாதன் அனுஷ்டானம் பண்ணிப் பெற்ற பேறு என்
பயின்றார் இத்யாதி –
ஆஸ்ரயித்தர்களுடைய உடம்பு நோவப் பண்ணின
தபச்சாலே காண வரிய
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை
இன்று என்ன தபஸ் பண்ணிக் கண்டேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இ றே –
யாவர் நிகர் அகல் வானத்தே
வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே-

————————————————————————–

சாதனா அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார்

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இன்றாக அறிகிறேனோ
அவன் அளக்கிற இடத்தில் பூமி சென்றதோ
பூமி கிடந்த இடம் எல்லாம் சென்று
அளந்தான் இத்தனை அன்றோ –
என் ஸ்வாமி இடையாட்டம்
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்தே கண்டேன்-

————————————————————————–
அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

திறம்பிற்று -புக ஒண்ணாதபடி சாத்திக் கொண்டது
தென்னரங்கம் இத்யாதி
மாம் ஏகம்-என்று அருளிச் செய்தபடியே
அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கு –
மாம் ஏகம் -என்றதிலும் சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
திறம்பா இத்யாதி –
தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை
நீக்கிச் செல்லுமவர்களுக்கு
நித்ய சூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள
கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் –
தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே
திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-

————————————————————————-

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

கதஞ்சிறந்த கஞ்சனை
நெஞ்சில் அகற்றுதல் ஞானம்
சீற்றத்தை உடையனாய் இருந்துள்ள கம்சனை
கதவி முன் காய்ந்து –
சீறி முற் காய்ந்து
தலை மயிரைப் பற்றி முன்னே பிடித்து என்னவுமாம்
அதவிப் போர் யானை ஒசித்துப
யானையை வ்யாபரியாத
படிக்கு ஈடாக அடர்த்து கொம்பை ஒசித்து
பதவியாய் மூலை யடி அன்றிக்கே
நீர்மையை உடையவனாய்
கம்சனைக் கொன்றாற் போலே
வழி கொடு வழியே என்றுமாம்
பாணியால் நீரேற்றுப-குடங்கையால் நீரேற்று-பண்டு ஒரு நாள் மாவலியை -மாணியாய் கொண்டிலையே மண்
ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற மாணியாய் அன்றோ கொண்டது

———————————————————————

கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம்
என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ –
உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

மண்ணுலகம் ஆளேனே
ஓரடி வர நின்ற பூமியை ஆளுகை
எனக்கு ஒரு பணியோ –
வானவர்க்கும் வானவனாய்விண்ணுலகம் தன்னகத்து மேவேனே
நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்
பரம பதத்தில் இருக்கை
எனக்கு ஒரு பணி உண்டோ –
நண்ணித் திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கை தொழுத பின் 
ஸ்ரீ ய பதியாய்
சமாஸ்ரயணீயனான
எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக்
கை தொழுத பின்
போக மோஷங்களில் எனக்கு ஒரு குறை உண்டோ –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: