ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -61-70–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது 

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப –
இரந்து நின்ற நிலையிலே பூமி எல்லாம்
ஓர் அடியாலே மறைக்கும் படிக்கு ஈடாக
நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
கையிலே நீர் விழுந்தவாறே
அலாப்ய லாபம் போலே
வளர்ந்த தோளானது
திக்குகள் எல்லாம் சென்று அளந்தது என்பர்
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –
உன்னைப் பேணாதே
உன்னுடைய விபூதியை எவன் தன்னது என்ன
அவன் பக்கலிலே இரந்தாயாய் -வஞ்சித்தாயாய் -செய்தது
இந்த்ரன் ஒருத்தனுக்கு செய்ததேயோ –
ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும்
தூது போம்
சாரத்தியம் பண்ணும்
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து
உறங்கும்படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே-நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

எருத்தம்  = ககுத்து / மாறு  = சத்ரு

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
பேறு ஓன்று உண்டாக முன்பு அறியேன்
அறியாமையே அன்று
பெற்றும் அறியேன் –
பெறாமைக்கு அடி அறிவு கேடு –
ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு-
எருத்தினுடைய பெருத்தக் குத்தும் கொம்புகளும்
ஒசியும்படிக்கு ஈடாக நப்பின்னைப் பிராட்டியை
பெறலாம் என்கிற நசையாலே எருத்து இறுத்த
நல் ஆயர் ஏறு
நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –
————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பாறு என்று பறைவையாய் பஷி என்றபடி –

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை
போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது
ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி
எரியினுடைய உருவை உடையனாய்
ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா
கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –
கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய
வாய் நிறையும்படிக்கு ஈடாக
அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில்
அது ஒரு மகா பாரதம்
ஏழு எருத்தை அடர்த்த விடத்தில்
அத்தால் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்க
ஒரு தலையை அறுத்ததுக்காக
பாதகியானவனுடைய சாபத்தை போக்கினவனோ
ஈஸ்வரன் பாதகி யானவனோ –
தலை அறுப்புண்டு சோக்யன் ஆனவனோ-
பார்த்துக் கொள்ளும் இத்தனை

———————————————————————

இதிகாச புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில்
நிர்ணீ தமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

இதிகாச புராணங்களிலே பிரதிபாதிக்கப் பட்ட
ஸ்ரீ ய பதியாய் இருந்துள்ள
உன்னை குறையற்ற சொல்லாலே ஏத்தி
அனுபவிக்கும்படி அருளிச் செய் –
அநவாப்தியான சொல் அன்றிக்கே
உன்னைக் கண்டு ஹிருஷ்டனாய் ஏத்தப் பணி

————————————————————————–

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பணிந்தேன் திரு மேனி –
கண்டேன் என்னும் சொல்லை
சேஷபூதர் ஆகையாலே
பணிந்தேன் -என்று சொல்லுகிறார்
பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன் –
உன் திருவடிகளிலே சிநேகத்தை
உடையேனாய்
அழகிய பூவை அணிந்தேன் –
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே-இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்-
உன்னை சேவித்து இருந்து பார்த்து ஏத்தி
பரமபதத்தில் இருக்கும்படியைப் பார்த்து
ஆங்கே இருந்து யேத்துகை தானே
வாழ்வாக இருக்கிற இத்தை
அத்யவசித்தேன்
பெருமாள் புக்கு அருளினால்
பின்னும் முன்னும் நின்று வைத்த
அனைத்தையும்
பின்பும் பிறகுவாளியையும்
கண்டு யேத்துகையில் துணிந்தேன்
புரிகை சுற்றும் பார்க்கை

————————————————————————–

பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை-
ஏத்துகையில் துணிகை அன்று –

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

நல் நெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் –
பாபத்தாலே நன்று என்று இருந்தது அன்று -பகவத் பிரசாதத்தாலே பொல்லாது என்று
தோற்றின இது கண்டாய் –
சம்சாரமாவது –
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
அங்குத்தைக்கு அசாதாரணமாய் இருக்கச் செய்தே
நாம் அனுபவித்தது எல்லாம் கண்டாய் இ றே-
இதுக்கு ஒரு பிரமாணம் வேண்டாம் இ றே –
இது கண்டாய் -இத்யாதி –
வகுத்தவனுடைய திரு நாமத்தை சொல்லி
நரக சமீபத்தில் செல்லாமைக்கு காரணம்
இதினுடைய தோஷ தர்சனமே –
வல்லையேல் காண் –
அனுபவித்து இருக்கச் செய்தே விடப் போகாது ஒழிகிறது பாபம்-
இல்லையேல் இதினுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணு-

————————————————————————–

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது
ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்
கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்
வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

————————————————————————–

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே உப்புச் சாறு கொள்ளுமவர்களை சொல்லுகிறது-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
மிடுக்கை உடையராய
சாயுதரான அசுரர் முடிய
வலிமிக்க வாள் வரை மத்தாக –
கடையப் புக்கால் பிதிர்ந்து போகாதபடி
மிடுக்கை உண்டாக்கி
மந்தரத்தை மத்தாகக் கொண்டு
வலி மிக்க வாணாகம் சுற்றி
நாற்கால் கடைந்தவாறே
அற்றுப் போகாதபடி வாசுகிக்கு மிடுக்கைக் கொடுத்து
மறுகக் கடல் கடைந்தான்–
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி
கடலைக் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ –
நம்மை முடிக்க வந்த குவலயா பீடத்தை கொன்று
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான்-

————————————————————————–

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

தேவர்களை ஒழிய சிலர்
வாழாதே இருக்கச் செய்தே
சிலர் வாழ்ந்தாராய் இருக்கிற ராஜாக்களும்
அழகிய தாமரைப் பூவை திரு நாபியில்
உடையவனானவனுடைய திருவடிகளிலே
குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த தமர்கள் இ றே
ராஜாக்களாக திரிகிறவர்கள் –

————————————————————————–

தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் –
அவற்றில் முற்பட்டது
ஆஸ்ரிதர் உடைய ஹிருதயம்
தஞ்சை
தஞ்சை மா மணிக் கோயில்
தலை யரங்கம்
திருப்பதிகளில் பிரதானமான கோயில்
தண் கால்
திருத் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வஸ்வமான திருமலை
வேலை
திருப் பாற் கடல்
தமருள்ளும் மா மல்லை கோவல்
மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம்
மதிள் குடந்தை
திரு மழிசைப் பிரான் உகந்த இடம்
என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் —
சக்கரவர்த்தி திருமகனுக்கு
இடம் என்று சொல்லுவார்கள்
ஏ வல்ல -எய்ய வல்ல-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: