அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் –

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

——————————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இத்யாதி –
பெரிய ஆல  மரத்தினுடைய சிற்றிலையிலே யசோதாள் தநந்தயமும் பெரியது என்னும்படி அத்விதீயனான பாலனாய் –
ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்
ஞாலம் இத்யாதி –
சிறு பிரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலீடுமா போலே
பூமிப் பரப்படைய வாயிலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம் –
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப்ப்டித்தன படியும்

அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்
அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-

கோல மா மணி யாரமும் –
அழகியதாய் பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களாலே செய்யப்பட ஆரமும்
முத்துத் தாமமும் –
முத்து மாலையும்
கோலம் –
இது பெருமாளைச் சொல்லுகிறது
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண வொண்ணாத அழகை உடைய நெய்தத திருமேனி
ஐயோ –
பச்சை சட்டை உடுத்து -இட்டு -தனக்கு உள்ளத்தை அடையக் காட்டி எனக்கு உள்ளத்தை
யடையக் கொண்டான்
நிறை கொண்டது என் நெஞ்சினையே -எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது

இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –

——————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-கீழ்ப் பாட்டில் –
கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே -என்று –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம் -ஸ்மரன் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேஸ்வர –
என்கிறபடியே ராம சரம் போலே இருக்கிற அந்த கடாஷ பாதங்களாலே –
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ் சூடுருவவே வுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –
என்றாப் போலே இவர் படுகிற பாட்டக் கண்ட திரு மேனியானது –
தனிப் பூ சூடுவாரைப் போலே நம்முடைய அவயவ சௌந்தர்யத்தை தனித் தனியே அனுபவித்தார்
இத்தனை யன்றோ –
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்கப் பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க  வேணும் என்று பார்த்து –
ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு
அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி –
உய்விட மேழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள
தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கீழ் ஐந்தாம் பாட்டாலே –
தம்முடைய துஷ் கர்மங்களை சவாசநமாகப் போக்கின படியைச்சொல்லி
எட்டாம் பாட்டாலே -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட -என்று பிறந்த கர்மங்களுக்கு அடியான
அவித்யையை தமோ ரூபமான ஹிரண்யனை கிழித்து பொகட்டாப் போலே
ஞானக் கையால் நிரசித்தான் என்றும் இறே இவர் சொல்லி நின்றது -இத்தைக் கேட்டவர்கள்
இந்த தேசமாகிறது -இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே -தெளி விசும்பின் நின்றும்
சர்வேஸ்வரன் தானே அவதரிக்கிலும் அவனுக்கும் சோக மோகங்களை உண்டாக்குமதாய் இருக்கும்
காலத்தைப் பார்த்தவாறே அப்ரஜ்ஞா தண்ட லிங்காநி -என்கிறபடியே உள்ள அறிவையும் அழித்து
விபரீத அனுஷ்டானத்துக்கு உடலான லிங்கங்களையும் உதித்தாய் இருக்கும்
தேகத்தைப் பார்த்தால் -பகவத் ஸ்வரூப தீரோதா நகரீம் -என்கிறபடி பகவத் ஸ்வரூபத்தை
மறைத்து விபரீத ஜ்ஞானத்தை பிறப்பிக்குமதாய் இருக்கும்
வேதாந்த ஞானத்தால் அல்லது அஞ்ஞானம் போகாது -உமக்கு அந்த வேதாந்த ஸ்ரவணத்துக்கு
அதிகாரமே பிடித்தில்லை -வேதாந்த விஜ்ஞான ஸூ நிச்சிதார்த்தா -என்றாப் போலே சொல்லுகிற
வேதாந்த ஞானம் உடைய பெரியவர்கள் பாடே சென்று உபசத்தி பண்ணி அவர்களுக்கு
அந்தே வாசியாய் இருந்து இவ்வர்தங்களைக் கேட்டு அறிய ஒண்ணாதபடி நிஹீந ஜன்மத்திலே
பிறந்தவராய் இருந்தீர் –
ஆக தேசம் இது காலம் இது தேகம் இது உம்முடைய ஜன்மம் இது -இப்படி இருக்க

பகவானான கீதோப நிஷ தாசார்யன் கீதை பதினெட்டோத்திலும் -நெறி எல்லாம் எடுத்து உரைக்க –
தைவீம் சம்பதமவிஜாதனான அர்ஜுனன் இத்தைக் கேட்டு -நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா –
என்றும் சொன்னாப் போலே நீர் உம்முடைய அஞ்ஞாநாதிகள் அடைய போய் ஜ்ஞானம் பிறந்ததாகச்
சொல்லா  நின்றீர் -இது அகடிதமாய் இருந்ததீ -என்ன -பிரளய காலத்திலே இந்த ஜகத்தாக
நோவு படப்புக இத்தை யடையத் தான் அதி சிசுவாய் இருக்கத் தன் சிறிய வயிற்றிலே வைத்து –
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு –
என்னும் படி யிருக்கிற ஓர் ஆலிலை ஓட்டைக் கோட்டை போராதாய் இருப்பதோர்
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-

ஆல மா  மரத்தின் இலை மேல் –
பாலாலிலை -என்கிறபடியே ஆல மா மரத்திலே
நெரியில் பால் பாயும்படி யிருக்கிற இளம் தளிரிலே
மா மரம் -என்று
விபரீத லஷணை யாய்ச் சிறிய மரம் என்றபடி –
இலை மேல் -என்கையாலே
இந்த இலைக்குள்ள அடங்கும்படி யாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது –
ஒரு பாலகனாய் –
யசோதா ஸ்த நந்த்யம் ப்ரௌட தசை என்னும்படி அத்விதீயனான பாலனாய் –
யசோதா ஸ்தநந்யமான கிருஷ்ணனும் முரணித்து இருக்கும்படி இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும் –
இந்த பால்யத்தை உபபாதிக்கிறார் மேல் –

ஞாலம் ஏழும் உண்டான் –
சிறுப் பிள்ளைகளாய் இருப்பார் -புரோ வர்த்தி பதார்த்தங்கள் அடைய எடுத்து
வாயிலே இடுமா போலே -மஞ்சாடு வரை ஏழும் ஈசன் -என்கிறபடியே -சப்த லோகங்களையும் இவற்றைச் சூழ்ந்த
கடல்கள் ஏழையும் குல பர்வதங்கள் ஏழையும் மற்றும் உள்ளவையும் அடைய எடுத்து அமுது செய்தான் –

தேவ திர்யக் மநுஷ்ய ஸ்தாவர ரூபமான ஜகத்தை யடைய வமுது செய்யா நிற்க
ஒரு ஸ்தாவரம் உண்டாய் -அதின் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து அருளுகை
யாகிற விந்த அகடிதங்களைச் செய்தவனுக்கு
அந்த தேச கால தேக ஜன்மங்களால் உண்டான
நிகர்ஷம் பாராதே எனக்கு ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -இதுக்கு விரோதிகளான அஜ்ஞாநாதிகளைப்
போக்கி சால அகடிதமாய் இருந்ததோ –
என்னால் போக்கிக் கொள்வது அன்றோ அரிது
அவனுக்கு அரியது உண்டோ -பிரளயத்தில் அகடிதகட நத்தொடு ஒக்கும் என்னை அகப்படுத்தின படி

அரங்கத் தரவின் அணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்க கிடக்கிற படி
அவ்வாலிலை நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை –
இப் ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான்
என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்  படி கிடக்கிற இடம்-

அரவின் அணையான் –
அந்தப் பிரளய ஜலதியிலே இந்த ஜகத்தை யடைய தன் திரு
வயிற்றுக்கு உள்ளே வைத்து -தான் அத்யந்த சிசுவாய் -ஆலிலை என்று பேர் மாத்ரமான
ஓர் இளம் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளரா நின்றான் -இப்படி பெரிய ஜகத்தை
எல்லாம் அமுது செய்தால் அறாது ஒழித்தல் -அமுது செய்த அண்டத்தின் பெருமையாலும்
இவற்றின் சிறுமையாலும் வயிறு விரிதல் -ஆலம் தளிரிலே இடம் வலம் கொள்ளப் புக்கால்
கடலிலே புக்குப் போதல் செய்யில் செய்வது என் -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி –
திருவரங்கப் பெரு நகராகிற பெரிய கோயிலிலே –
இருள் இரியச் சுடர் -அனந்தன் என்னும் அணை என்கிற
பெரிய படுக்கையிலே மொசு மொசு என்று வளர்ந்த பெரிய வடிவும் தாமுமாய்ப் பெரிய
பெருமாள் கண் வளர்ந்து அருளின படி –

அங்குப் பரிவர் இல்லை என்கிற குறையும் இல்லை இறே
படுக்கையான இவன் தான் -சிந்தாமணி மிவோத் வாந்த முத் சங்கே நந்த போகிந –
என்கிறபடியே ஜகத் உபாதாநமாய் இருப்பதொரு சிந்தாமணியை உமிழ்ந்து இத்தை யாரேனும் ஒருவர்
இறாய்ஞ்சிக் கொள்ளில் செய்வது என் என்று தன் மடியில் வைத்து -படியிலோ வைத்து –
கரண்டகம் இட்டு கொண்டு கிடக்கிறாப் போலே இருக்கிற –
தீ முகத்து நாகணை -என்றும் –
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணை -என்றும் சொல்லுகிறபடியே
இவ் வஸ்துவுக்கு என் வருகிறதோ என்று தன்னுடைய பணா மண்டலங்களாலே விஷ அக்நியை
உமிழ்ந்து கொண்டு -நோக்கிக் கொண்டு -போருகையாலே அவாந்தர பிரளயத்திலே அகப்பட்டவர்களை
தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் –
சம்சாரம் ஆகிற மஹா பிரளயத்திலே புக்கவர்களை
ஸ்ரீமான் ஸூக ஸூப்த -என்றும் –
கிடந்ததோர் கிடக்கை -என்றும் சொல்லுகிற தன் கிடை யழகைக் காட்டி ரஷித்தான் –
இப்படி கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் வடிவு இருக்கிறபடியைச் சொல்லுகிறார் மேல்

கோல மா மணி யாரமும் –
ஸ்ரீ கௌஸ்துபம் போலே மஹார்க்கமாய்ப் பெரு விலையனான
மாணிக்கங்களாலே அழுத்தப் பட்டு திரு மேனிக்கு அலங்காரமான ஹாரத்தையும்
முத்துத் தாமமும் –
த்ரி சரம் பஞ்ச சரம் சப்த சரம் என்றாப் போலே சொல்லுகிற திருமேனியின்
மார்த்த்வத்துக்கு அநு ரூபமான குளிர்த்தியை உடைய முத்து வடங்களையும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண ஒண்ணாத அழகை வுடைய நெய்தத திருமேனி –
அபரிச்சித்தமாய் அத்விதீயமான சமுதாய சோபையை உடையதுமாய்
நீல மேனி –
இந்த ஆபரணங்களாலும் சமுதாய சோபையாலும் ஓர் அழகு வேண்டாதபடி
இவை தனக்கு நிறம் கொடுக்கும் படி -மங்கு நீலச் சுடர் தழைப்ப -என்கிறபடியே
நீல தோயதா மத் யஸ்தா வித் யுல்லேகா -கல்பமான வடிவு –
த்ருதகந கஜ கிரி பரிமிள துததி ப்ரச லித லஹரி வத் –
என்கிறபடியே அந்தத் திருமேனி தன்னை பார்த்தாலும் அறப் பளபளத்து அத்தை நீக்கி
உள் வாயிலே கண்ணை யோட்டிப் பார்த்தால் காண்கிறவன் கண்களிலே குளிர அஞ்சனத்தை
எழிதினால் போலே யாய்த்து –அவனுக்கு ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே ஒழிகிறதும்
வடிவின் வைலஷண்யத்தாலே இறே

நிறை கொண்டது என் நெஞ்சினையே –
என்னுடைய ஹ்ருதயத்தில் உண்டான பூர்த்தியை அவஹரித்தது –
என் அகவாயில் காம்பீர்யத்தையும் போகவடித்தது -இந்த ஜகத்துக்கு கரண களேபரங்களை இழவாமல்
தன் திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாய் இருக்க அவனுக்கு அபிமதமான அவ்வடிவு
என்னுடைய கரணத்தை யழித்தது-

ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை
அடைய கொண்டான் -நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் -நித்ய அநுபவ
ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்
ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான
திருவனந்தாழ்வான் மேலே -உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான
ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு வாசியறக்
காரணத்வ ரஷகத் வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –
முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும்
உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமாய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும்படியான நீலமேனி என்னவுமாம்

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப்பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: