அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

—————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து
மெலிந்து இராமே -சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே -வந்த -இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –
குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தேவர்களுக்கு உத்பாதகனான மாத்ரமே -கையாளனாய் நிற்பது ஆஸ்ரிதர்க்கு
சிருக்கனுக்கு உதவி நிற்கிற நிலை தன்னிலே ப்ரஹ்மாதிகளுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாதபடி நிற்கிற ப்ரதாநன் –
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத –
ஆதிப்பிரான் –
தான் முற்கோலி உபகரிக்குமவன்
பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது-

அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த சுத்தி –ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்
முகத்து –
அவனுடைய முகத்து
கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை
மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை
செவ்வரி யோடி –
ஸ்ரீயபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை
நீண்ட –
செவி யளவும் அலை எறிகை
அப் பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண
வேண்டும்படி இருக்கை –
என்னை –
பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்த்யத்தைப் பறித்துப் பொகட்டு
மௌக்த்யத்தைத் தந்தன -ஒருவன் எய்தத்தை மற்றவனும் எய்யுமா போலே –
பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –

இத்தால் நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில்  பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற
திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ –

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ
அது கிடக்க -அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே
அன்றிக்கே -மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விச்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே

புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் -புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று
தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி  நிகர்ஷம் பாராதே -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தாம் அநாதி கால்ம் அர்ஜித்த பாபங்களை அடைய போக்கினபடியைச் சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் -அநந்தரம்
விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல –
அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில் அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே
அந்த கர்மத்துக்கு ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது –
அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே
விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –
அப்படியே தன்னோடு அனுபந்தித பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்கத் தேடின
ஹிரண்யனை தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே
தமோ குணம் ஹிரண்யன் என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது
அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே
சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை-

ஆத்மா வஸ்து என்று ஓன்று உள்ளது -அதுக்கு அவன் சேஷியாய் இருக்கையாலே
அந்த சேஷியானவனை நம்முடைய சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தின் சித்திக்காகப் பெற வேணும் என்று –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி உடம்பை இளைக்கப் பண்ணுகிறான் இறே
அங்கன் அன்றியிலே பரமாத்மாவை அநுபவிக்க ஆசைப்பட்டு பெறாமையாலே பக்தி தலை மண்டை இட்டு –
நின்பால் அன்பையே அடியேன் உடலம் நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே – என்கிறபடியே
சரீரத்தை இளைப்பித்து மெலிந்து இருக்கிறான் அன்றே –
பரமேஸ்வர சம்ஜ்ஜோஸ் ஜ்ஞ கிமந்யோ மய்ய வஸ்திதே -என்கிறபடியே தன்னுடைய
அஹங்கார மமகாரங்களாலே பூண் கட்டி -பலவான் ப்ரஹ்ம ராஷஸ -என்னுமா போலே
பருக்கப் பண்ணின சரீரம் இறே
ராஜாக்களுக்கு சிலர் ஊட்டி இட்டு சில  காவல் பன்றி வளர்த்து வைக்குமா போலே
நரசிம்ஹத்தின் உகிருக்கு இரை போரும்படி தேவர்கள் வரங்களால் யூட்டி யிட்டு வளர்த்து வைத்தார்கள் –
மேல் இத்தால் வரும் அநர்த்தமும் அறியாமையாலே வரம் கொடுத்து பருக்க வளர்த்தார்கள் –
இது தானே தாம் அழிக்கைக்கு உறுப்பாய்த்து –
வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார் -இன்றும் வருகிறானாகக் காணும் இவர்க்கு தோற்றுகிறது
அனுகூலனாய் வருகை அன்றிக்கே -பகவத் தத்வம் இல்லை என்றும் -உண்டு என்கிறவனை
நலிகைக்கு என்றும் வந்த க்ரௌர்யத்தை நினைத்து பயப்படுகிறார்-

அவுணன் –
இப்படி பகவத் பாகவத விஷயம் என்றால் அவன் சிவட்க்கு என்கைக்கு
ஹேது என் என்னில் -ஆசூரீம் யோ நிமா பன்னனாய் மூடன் ஆகையாலே -என்கிறார் –
உடல் கீண்ட –
திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி
மோடி பருத்து இருக்கிறபடி -அப்படி இருக்கிற ஹிரண்ய சரீரமானது நர சிம்ஹத்தின் உடைய
மொறாந்த முகமும் -நா மடிக்கொண்ட வுதடும் -இறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின
கையும் கண்ட போதே பொசுக்கு என பன்றி போலே உலர்ந்த தாழை நாரைக் கிழித்தாப் போலே கிழித்த படி
உடல் கீண்ட –
தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே
அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

அமரர்க்கு அரிய –
இப்படி ப்ரஹ்லாதனுக்கு எளியனாய் நிற்கிற அவ்வளவு தன்னிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கிட்ட அரியனாய் இருக்கும்
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத -ஸ்வ சாமர்த்தியம்
கொண்டு கிட்ட நினைப்பார்க்கு தயை பண்ணும் அளவிலும் கிட்ட வரிதாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனர்க்குச் சீற்றத்திலும் கிட்டலாய் இருக்கும் -அங்கன் இன்றியிலே –
தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் தமக்கு எளியனாய் இருக்கறபடியைச் சொல்லுகிறார்
அதாவது -தம்முடைய நிகர்ஷம் பாராதே தம்மையே விஷயீ கரித்து தம்முடைய
துஷ்கர்மங்களை யடைய ஸ வாசனமாகப் போக்கி தம்மை முழுக்க அனுபவித்துக் கொண்டு
இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –

ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்
ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –
அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடைய ப்ரதிஜ்ஞா வாக்யத்தை
க்ரயம் செலுத்தி தன்னுடைய காரணத்வத்தையும்
ஈச்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –

அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

அரங்கத்தமலன் –
ப்ரஹ்லாதன் ஆகிறான் பகவத் சந்நிதி உண்டான வளவிலே –
யா ப்ரீதிர விவேகாநாம் -என்று பகவத் விஷய பிரேமத்தை யபேஷிக்கை யாகையாலும் –
மலைகளாலே கடலிலே யமுக்கு உண்டு போது ஸ்தோத்ரங்களைப் பண்ணுகை யாலும்
மயி பக்திஸ் தவாஸ் த்யேவ -என்கிற அனந்தரமே ஜ்ஞான பக்திகளை உடையவன் ஆகையாலே
அவன் அளவில் பண்ணின உபகாரம் அப்படி யாகையாலே வருவதொரு மாலின்யம் உண்டு அங்கு –
இங்கு –
ஏழை யேதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்கிறபடியே நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
பிற்காலிப்பார் அளவிலும் அந்த நிகர்ஷம் பாராதே மேல் விழுந்து விஷயீ கரித்து விரோதிகளையும்
போக்கிப் பரம புருஷார்த்தத்தை கொடுக்கையாலே கீழ்ச் சொன்ன மாலின்யம்
பெரிய பெருமாளுக்கு இல்லை என்று இட்டு -அரங்கத்தமலன் -என்கிறார் –

அஸ்மத் தாதிகளும் திரு முகத்திலே விழித்து அவித்யா சௌசம போய் சுத்தராம் படியான அமலத்வம்
என்னையும் ஆளாம்படி லோக சாரங்க மஹா முநி களோடே கூட்டின அமலத்வம்
எல்லார்க்கும் உதவும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகையால் வந்த ஸூத்தி –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்னக் கடவது இறே
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்தல் -செய்யாமையால் வந்த ஸூத்தியுமாம்
விரோத்யம்சம் கழித்து ஸூத்தரானால் அநுபவ விஷயம் சொல்லுகிறது மேல் –
அரங்கத்தமலன் இத்யாதி –
இவை ஓர் ஒன்றே யமையும் என்னைப் பேதைமை செய்ய -என்கிறார்
வண்டினம் குரலும் இத்யாதிப் படியே -அண்டர்கோனும் பரமபதம் முதலான வாஸ ஸ்தானங்களையும் விட்டுப்
படுகாடு கிடக்கும்படியாய் யாய்த்து -இவ் வூரின் போக்யதை இருப்பது –
அதுக்கு மேலே கண் வளருகிறவருடைய அமலத்வம் –
மித்ர பாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந –
என்று விபீஷண விஷயமான வார்த்தையை க்ரயம் செலுத்துகைக்காக –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானாய்
சர்வ பிரகார நிக்ருஷ்டனான என் போல்வாரையும் ஸூத்தராக்குகைக்கு ஆகவாகையால்
கிடக்கிற சௌலப்யம் -அதுக்கு மேலே ஓன்று இறே திரு முகம் –

முகத்து –
சக்ய பச்யத க்ருஷ்ணச்ய முகம் -என்றும் –
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ -என்றும்
சொல்லுகிறபடியே வெறும் முகம் தானே ஆகர்ஷகமாய் யிறே இருப்பது –
கீழ் -தாம்
அநுபவித்த திருப் பவளத்தின் வைலஷண்யம் பின்னாட்டுகையாலே அந்த திரு வதரத்தை உடைத்தான
திரு முகத்தைப் பிரித்துச் சொல்கிறார் –
அதுக்கு மேலே –
அத்யருனேஷணம்  -என்கிறபடியே
இரண்டு ஆழங்காலாய்த்து -சந்திர மண்டலத்திலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும்-
ஒரு தாமரையிலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும் இருக்கிற திருக் கண்கள்

கரியவாகி –
புண்டரீகம் போலே வெளுத்து இருக்கிற திருக் கண்களுக்கு பரபாகமாம்படி
இரண்டு கரு விழியை வுடைத்தாய் -அங்கன் அன்றிக்கே -அஞ்சனத்தாலே கறுத்து இருத்தல் –
கண்களைக் கண்ட போதே தாபத் த்ரயம் அடைய சகல தாபங்களும் போம்படி குளிர்ந்து
இருக்கும் என்னுதல் -விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை –

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடமுடைத்தாய் இருக்கை -ஸ்வதஸ்
காண்கிற அளவுக்கு அவ்வருகே இரண்டு பார்ச்வமும் இடுங்கி யிராதே -பரந்து -இடம் உடைத்தாய்
அவித்யாதிகளைப் போக்கி அனுபவிப்பிக்கும் கார்யங்களைப் பற்றி வருகிற பரப்பு-

மிளிர்ந்து –
க்ருபா பரிதமாய் இருக்கையாலே கரை யருகும் வழி போக ஒண்ணாத படி
அலை எறிந்து திரை வீசுகை –
காண வேணும் என்கிற இவருடைய த்வரையில் காட்டிலும்
இவரை விஷயீ கரிக்கையில் உண்டான கண்களின் த்வரையைச் சொல்லுகிறது

செவ்வரி யோடி –
ஸ்ரீ யபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும் என்னவுமாம் –

நீண்ட –
ஒழுகு நீண்டு இருக்கையும் தம்மளவும் கடாஷம் வந்து விஷயீ கரித்த படியும் –
க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ச்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –
பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் -அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண்
இரண்டாய்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –

அப் பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப்பெரியவாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி யிருக்கை –

கீழ் பரந்து நீண்டு –
என்று ஆயாம விச்தாரங்களை சொல்லுகையாலே இங்கு போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுகிறது –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே
முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

என்னை –
அறப் பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்யத்தை பறித்துப் பொகட்டு மௌக்யத்தைத் தந்தன –
ஒருவன் எய்ய அதனை மற்றை யவனும் எய்யுமா போலே –
பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க ஒட்டுகிறன வில்லை-
என்னைப் பேதைமை செய்தனவே –
கீழ்ப் பாட்டில் என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -என்று
ஜ்ஞான ப்ரரைத்வாரத்தை அபஹரித்த படியைச் சொல்லிற்று –
இங்கு ஞானத்தை அபகரித்த படியைச் சொல்லுகிறது -ஜ்ஞான அபஹாரம் ஆவது -அழகிலே அலமருகை –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை தன் பக்கலிலே ஆதரத்தைப் பிறப்பித்து –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –
என்னைப் பேதைமை செய்தனவே –
அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்-

இப் பாட்டில் -நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்த புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே
விழப் பண்ணி மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு
தாம் அற்றுத் தீர்ந்த படியை -ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு
ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆழம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா
போலே இரண்டு கூறு செய்தவனாய்
அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய்  உபக்ருதருமான தேவர்கள் -தான் காரண பூதனாய்  -உபாகாரகனாய் நிற்கிற நிலை
அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு ப்ரஹ்லாதன்
அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான
பெரிய பெருமாள் உடைய கோள் இழைத் தாமரை -இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –
அப்பெரிய -என்றதுக்கு
இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்
என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: