ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்
————-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-
முதல் பாட்டில்
ஜகத் காரண பூதனானவன் -தம்முடைய அபேஷா நிரபேஷமாக தம்மை விஷயீ கரித்து –
தம்முடைய திரு உள்ளத்தில் திருவடிகள் தானே வந்து பிரகாசித்த படியை சொன்னாராய் –
நிரபேஷமாக செய்யக் கூடுமோ என்கிற அபேஷையிலே சோதாஹரணமாகச் சொல்லா நின்று கொண்டு
தம் திரு உள்ளம் திரு வரையும் திரு பீதாம்பரமுமான சேர்த்தியிலே மேல் விழுந்து நசை
பண்ணுகிற படியைச் சொன்னார் இரண்டாம் பாட்டில்
அவ் விரண்டாம் பாட்டில் சொன்ன த்ரைவிக்ர அபதானம் பிரமாண உபபத்திகளாலே
திருவேங்கடமுடையானுக்கே சேருமதன்றோ என்கிற அபேஷையிலே திருமலையில் நின்றும்
திரு உலகு அளந்தருளினாரும் பெரிய பெருமாளே -என்று கொண்டு -முதல் பாட்டில் -ஆதி -என்று
சொன்ன அவனுடைய காரணத்வத்தை -திரு நாபீ -கமலத்திலே ப்ரஹ்மாவை உண்டாக்கி
அம் முகத்தாலே வெளி இடா நின்று கொண்டு -அந்த திரு நாபீ கமலம் தானே
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற தம் திரு உள்ளத்தை -ப்ரஹ்ம உத்பாதகமான
தன்மையையும் அழகையும் காட்டி தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள -அதிலே சுழி யாறு
படுகிற படிடை யிறே மூன்றாம் பாட்டில் சொல்லி நின்றது-
தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழியாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆஸ்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆஸ்ரயமான நம்மைப் பார்த்தால் –
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் கணயதி தவைஸ்வர்யம் வ்யாக்யாதி
ரங்கமஹே ஸிது
ப்ரணதவசதாம் ப்ரூதே தாமோத மத்வக்ர கிணஸ் ததுபய குணாவிஷ்டம் பட்டம் கிலோதர பந்தநம் –
என்கிறபடியே -பகத் முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாத்மகமாயும் -சத்வ ஸூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆஸ்ரயமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி –
திரு நாபீ கமலத்தில் ஆழங்கால் படுகிற் என் நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க –
அத் திரு வயிற்றை ஆஸ்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ஸ்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்
———
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் அவதாரிகை –
இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
நாலாம் பாட்டாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள்
வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும்
அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீமத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –
கீழ் மூன்று பாட்டாலும் -ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து -தசேந்த்ரியா நநம் கோரம் -என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு -நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்
—————–
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
பதவுரை
சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலை பத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது-
———————————————
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —
சதுர மா மதிள் -இத்யாதி
கட்டளைப் பட்டு இருக்கை
மா மதிள் –
துர்க்க த்ரயம்
ஈஸ்வரன் என்று அறியச் செய்தே எதிர்க்கப் பண்ணின மதிள்
இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே -லங்காம் ராவண பாலிதாம் –
இலங்கைக்கு இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி
விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே
யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே
இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –
தலை பத்து உதிர –
பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு
ஒட்டி –
அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய
ஓர் வெங்கணை வுய்த்தவன் –
பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –
ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருத க்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை
மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-
வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய ஸூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-
———————————————————–
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம் –
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்-
இரண்டாம் பாட்டில் உக்தமான அபதானங்கள் இரண்டில் பூர்வ அபதானதைப் பற்ற
ஓர் அபேஷையோடே -அதுக்கு உத்தரம் சொல்லிற்றாய் நின்றது மூன்றாம் பாட்டில் முற் கூறு
அதிலே அநந்தர அபதானதைப் பற்ற ஓர் அபேஷையோடே அதுக்கு உத்தரமாய் இருக்கிறது இதில் முற் கூறு
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று ஜன ஸ்தானத்திலே
பெருமாளும் பிராட்டியும் இளைய பெருமாளுமாய் போய் புக்கு -அங்குத்தை ரிஷிகளை
ஆவா சந்த்வஹம் இச்சாமி -என்று அபேஷித்து -அவர்கள் அனுமதியோடே இருக்கிற காலத்தில்
அவ்விருப்புக்கு விரோதிகளாய் வந்த ஜனஸ்தான வாசிகளான கராதிகளை நிரசித்தாப் போலே
உம்முடைய ஹ்ருதயத்திலே இருப்பேன் என்று அநுமதி பெற்று வந்து புகுந்து
அங்கு விரோதிகளான ராகாதிகளை நிரசித்தான் என்று சொன்னீர்
அந்த ராகாதிகள் ஆகிறன சப்தாதி விஷய ப்ராவண்யம் அடியாக வருவது ஓன்று
அந்த ப்ராவண்யம் -தனக்கடி -அஹங்கார மமகாரங்கள் ஆகிற மதிளை இட்டுக் கொண்டு
நவ த்வாரமான புரத்திலே வர்த்திக்கிற -இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன் மநோ நுவிதீயதே –
என்கிறபடியே சஷூராதி கரணங்களோடு கூடின மனஸ் அன்றோ –
இந்த தீ மனம் கெட்டால் அன்றோ ராகாதிகள் போவது
அவை போனால் அன்றோ அவன் பேரேன் என்று இருப்பது
அது கிடக்கிடீர் –
அவன் தானே வந்து மேல் விழுந்து கிடக்கச் செய்தே –
சென்றதாம் என் சிந்தனை -என்றும் –
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிர் -என்றும் உம்முடைய
திரு உள்ளம் தானே மேல் விழா நின்றது என்று சொன்னீர் -இது இப்படி மேல் விழும் போது
அவ்வரண் அழிந்தாக வேணும் -அழித்தார் யார் என்ன –
அந்த ஜன ஸ்தான வாசிகளான கராதிகளுக்கு குடி இருப்பாய் -அரணோடு கூடின இலங்கையை
ராவணனை அழிப்பதற்கு முன்னே -நேய மஸ்தி புரீ லங்கா -என்கிறபடியே அசத் கல்ப்பமாக்கி
இவர்களுக்கு அதிஷ்டான பூதனான ராவணனையும் சபரிகரமாக ஓர் அம்பாலே உருட்டின
சக்கரவர்த்தி திருமகனே இவ் வரணை அழித்தது –
மநோ ரஜ நீசரனை விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்தான் என்கிறார் –
சதுர மா மதிள் சூழ் –
சதுர ஸ்ரமாய் கட்டளைப்பட்டு அரணாகப் போரும்படி ஒக்கத்தை வுடைத்தான மதிள்களாலே
சூழப் பட்டு இருக்கும் -கட்டளைப் பட்டு இருக்கை யாகிறது –
வேலை சூழ் வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை – என்கிறபடியே கடலை அகழாக உடைத்தாய் அநந்தரம்
காடாய் பர்வதமாய் அதின் மேலே மதிளாய் இறே இருப்பது
(வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே திருச்சந்த விருத்தம் -39-)
மா மதிள்
சந்த்ராதித்யர்களும் பின்னாட்டியே வரும்படியான ஒக்கத்தை வுடைத்து
பீஷோ தேதி -என்னும்படி இறே இருப்பது –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு
உடல் ஆய்த்து -அவ் வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-
இலங்கை-
குளவிக் கூடு போலே பிறரை நலிந்து புக்கு ஒதுங்குமிடம் -சத்துக்களுக்கு பிரவேசிக்க
ஒண்ணாதபடி இருக்கும் அரணும் மதிளும் -என்கை
இஹ சந்தோ ந வா ஸந்தி சதோ வா நாநு வர்த்தசே
ததாஹி விபரீதா தே புத்திரா சார வர்ஜிதா -என்றும் –
சதோ வா நாநு வர்த்தசே-என்னவே –
இஹ சந்தோ ந வா ஸந்தி-என்னும் அர்த்தம் சொல்லிற்றாய் இறே இருப்பது
ஆனால் இது சொல்லிற்று என் என்னில் -மனைக் கேடர் இல்லாமையோ
நீ உனக்கு இல்லாமையோ -என்கை -நல் வார்த்தை சொல்லுவான் ஒருவன் உண்டாக –
த்வாந்துதிக் குல பாம்ஸநம் -என்று புறப்பட விட்டான் இறே -கல்லாதவர் இலங்கை இறே
திருவடி வர -ராஷசர் வருவதற்கு முன்னே இலங்கை இறே கண்டு எதிர்த்தது
ஒரு கைம் பெண்டாட்டிக்கும் அடைத்துக் கொண்டு இருக்கலாம்படி இறே ஊரும் அரணும் இருப்பது –
இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே
அதுக்கு மேலே -லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடி புலி கிடந்த தூறு என்று அஞ்சுமா போலே
அஞ்ச வேண்டும் படி இறே இதுக்கு நிர்வாஹகனான ராவணன் படி
இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா –
இறைவன் –
துர் வர்க்கங்கள் அடைய ஒதுங்க நிழலாய் இருக்குமவன் –
ஒருவன் சாத்விகன் ஆனால் அவன் பக்கலில் சத்துக்கள் அடைய ஒதுங்கும் இறே
அப்படி இறே எதிர்தலையும் -யாவன் ஒருவனைக் கொலை செய்ய நினைக்கிறார்
அவன் தன்னையே அவ் வரணுக்கு காவலாக வைப்பார் கிடீர் அல்பம் அனுகூலித்தான் ஆகில்
தாயையும் தகப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த பையல் இறே இவன் –
தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடா யுஷம் -ஹரணத்துக்கு பரிஹாரம் உண்டு
ஹநநத்துக்கு பரிஹாரம் இல்லை இறே
இவர் திரு உள்ளமும் பரிஹாரம் இல்லை என்று புண் பட்டு இருக்கும் இறே யிது
தலை பத்து உதிர ஒட்டி –
இப்படி பகவத அபசார பாகவத அபசார அசஹ்யா அபசாரங்களுக்கு எல்லை நிலமான பையலுடைய –
வர பலத்தாலே பூண் கட்டின தலைகளை பனம் பழங்களை காற்று உதிர்க்குமா போலே –
முளைக்கிற தலைகள் விழுகிற தலைகளைக் காணும்படி
நெடும் போது லீலா ரசம் அநுபவிக்க –
இத்தைக் கண்ட தேவர்கள் -இங்கனே முடிய நடத்துமாகில் செய்வது என் -என்று அஞ்ச –
இவனைக் கொல்ல வென்று வைத்த அம்பு தன்னை வாங்கி உதிரும்படியாக ஒட்டி –
அனுகூலிக்குமவன் ப்ரதிகூலித்தால் சொல்ல வேண்டா விறே
பூசலிலே இளைப்பித்து வைத்து ஓட வடிந்தபடி -கச்சா நு ஜா நாமி -என்கிறபடியே –
ஓர் வெங்கணை வுய்த்தவன்
அமோகமாய் இருக்கையும் -நிரசித்து அல்லது மீளாது இருக்கையும்
உய்த்தவன் -பிரயோகித்தவன்
பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதிகூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –
ஓத வண்ணன் –
ராவண வத அநந்தரம் -மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய யுத்த ஸ்ரமம் அடையப் போம் படி
ஒரு கடல் கரையிலே நின்றாப் போலே இருக்கை -ராவணனை நிரசித்தான் இத்தனை போக்கி
இலங்கையில் ஒன்றும் குறி அழியாமல் இலங்கை ஐஸ்வர்யம் அடைய தன்ன தாக்கினான் இறே
அத்தை விபீஷண விதேயமாக்கின ஔதார்யத்துக்கு உதார ஸ்வபாவமான கடல் போலே இருந்துள்ள
ஸ்வபாவத்தை உடையவன் என்று -ஓத வண்ணன் -என்கிறார் ஆகவுமாம் –
அன்றிக்கே -ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –
இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் –
அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-
மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள –
தொடுத்த தலைவன் வர வெங்கும் காணேன் -என்று
என்னோட்டையாள் ஒருத்தி உடைய விரோதியான ராவணனுடையதாய் தலை யற்று யற்று
விழும்படி சர வர்ஷத்தை உண்டாக்கின அந்த வீரன் என்னுடைய விரோதியையும் போக்கி
கொடு வரக் காண்கிறிலேன் என்று கண் மறையப் பார்த்து கொண்டு இருந்தாள் இறே ஒருத்தி
அப்படி இருக்க வேண்டாதபடி –
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் –
என்கிறபடியே அந்த சேவகனார் தாமே ராவண வத அநந்தரம் -அந்த யுத்த சரமம் ஆறும்படி –
தெற்கு திரு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினார்
கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவே கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக வண்டுகள் ஆனவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னா தெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்
இவ் ஊரில் வர்த்திக்குமவர்களுக்கு சாரஸ்யமும் செருக்குமேயாய் யிருக்கும் யத்தனை-
பராவஸ்தனான போது நித்ய முக்தரும் தன்னை அனுபவித்து ஹாவு ஹாவு ஹாவு என்று களிப்பார்கள்
அவதீர்ணன் ஆனபோது காயந்தி கேசித் க்ருத்யந்தி கேசித் -என்று முதலிகள் ஆடுவது பாடுவது ஆவார்கள்
அர்ச்சா ரூபியாக கோயிலிலே கண் வளர்ந்து அருளப் புக்கவாறே வண்டுகளும் மயில்களும்
பாடுவது ஆடுவதாக நிற்கும்
ராஜா வெள்ளைச் சட்டை யிட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே
அரங்கதம்மான் –
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி -தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய
அங்கன் அன்றிக்கே -அம்மான் -என்று சௌலப்ய காஷ்டையால் வந்த மஹத்தை
சொல்லுகிறார் ஆகவுமாம்-
திரு வயிற்று உதர பந்தம் –
பண்டே திரு வயிறு தான் –
சிற்றிடையும் என்கிறபடியே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி யாய்த்து இருப்பது –
அதுக்கு மேலே இறே ஆபரண ஸ்யாபரணமான திரு உதர பந்தம்
பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டின படி
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆஸ்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –
விஸ்வ ஸ்யாயதனம் மஹத் -என்றும் -நெஞ்ச நாடு -என்றும் சொல்லுகிற படியே என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது
———————————————————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் வியாக்யானம் –
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக் பாலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈஸ்வரனாய்
துர்க்க பல வர பல புஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாகப் பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கேட்டான் படியே -தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி என்ற தாய் வாய் சொல்லும் கேளாதே
அராஷசமிமம் லோகம் கர்த்தாஸ்மி நிசிதைசரை
ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் -என்று பெருமாள் அருளிச் செய்து விட்ட
பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அச்தரனான பின்பும் சினம் தீராதே சேவகப் பிச்சேறி நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி
ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –
அத்விதீயமாய் இருப்பதொரு திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு
பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்
ராவணனுடைய தைர்யத்தாலும் தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே
சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது
தலை பத்து உதிர ஒட்டி -என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜா நாமி -என்று துரத்தி விட்ட படியாய்
ஓர் வெங்கணை வுய்த்தவன் -என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை
விட்டவன் என்னவுமாம்
ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய
திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது
இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply