திருச்சந்த விருத்தம் -91-100-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

91-பாட்டு-அவதாரிகை

சாஸ்திரபலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு
நீரே கடவர் ஆக வேண்டாவோ –நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் –
அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி  தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்
பண்ணுவது -ஆனபின்பு
அநந்ய கதியாய்
அகிஞ்சனான என்னை
ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

வியாக்யானம் –

பண்ணுலாவு மென் மொழி –
பண்ணோடு சேர்ந்த ம்ர்துவான பேச்சை உடையவள்
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமி நீ -என்று சக்ரவர்த்தி திருமகன் வாய்
புலத்தும்படியான வார்த்தைப்பாடு உடையவள் -என்கை
பண்ணை வென்ற இன்சொல் மங்கை -என்றவள் இ றே

படைத் தடம் கணாள் பொருட்டு –
வாள் போல் ஒளியையும் இடமும் உடைத்தான திருக் கண்களை உடைய ஸ்ரீ ஜனக ராஜன்
திருமகள் பொருட்டு –
நஜீவேயம் ஷணம்பிவி நாதா மஸி தேஷணம் -என்று அவர் வ்யதிரேகத்தில் தரிக்க
மாட்டாத கண்கள் இ றே
ஆக -எதிர்தலையை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் பேச்சு அழகையும் கண் அழகையும்
உடையவள் -என்கை
தம்முடைய வெறுமையை சொல்ல இழிந்தவர் பிராட்டிஉடைய ஏற்றங்களை சொல்லுகிறது –
நிஷ்க்ர்ஷ்டமான இவ்வாத்ம ஸ்வரூபம் –
பிராட்டியோபாதியும்
ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதியும்
விலஷணம் என்கைக்காக-

ஜ்ஞானம் பிறந்த பின்பு -பிராட்டி அசோகவநிகையில் இருந்தால் போலே
அசஹ்யமாக  இ றே சேதனனுக்கு சரீர வாசம்
எண்ணிலா வரக்கரை –
அவளைப் போலே விரோதிகள் அசந்க்யதராக வேணுமோ -அஞ்ஞன் ஆனால் ஆகாதோ நெருப்பினால் நெருக்கினாய் கண் –சர அக்நியால் அழியச் செய்த நீ -எனக்கு நிர்வாஹகன் என்னுதல் –
எதா ராகவ நிர்முக்தச்சர -என்கிறபடியே சரஸ்தா நீயனான திருவடியை இட்டு
இலங்கையை தஹித்து -ராஷசரை கண் கலங்கும்படி பண்ணின நீ
எனக்கு நிர்வாஹகன் என்னுதல் -இத்தால் –என்னுடைய விரோதி வர்க்கத்தையும்
பஸ்மமாக பண்ண வேணும் என்கை-

அலாலோர் கண் இலேன் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்கிற தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் –
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சம் -என்கிறார் –
நத்வா குர்மி தசக்ரவ பச்ம  -என்று பிராட்டிக்கு சக்தி உண்டாய் இருக்க ப்ராப்தி இல்லாதே-தவிர்ந்தாள் -எனக்கு சக்தியும் இல்லை என்கிறார்

கலந்த சுற்றம் மற்றிலேன் –
நெஞ்சுக்கு பொருந்தின பந்து வர்க்கத்தை வேறு உடையேன் அல்லேன் –
உத்பாதகரான மாதா பிதாக்கள் தைவம் ரஷிக்கிறது என்று காட்டில் விட்டுப் போனார்கள்-வளர்த்தவர்களை -பிதரம் மாதரம் தாரான் -என்கிறபடியே நான் விட்டேன் –
ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதாச மம ராகவ -என்கிறபடியே சர்வ பந்தும் தேவரீரே என்கிறார் –
பிராட்டிக்கு தனி இருப்பிலே திருவடி வந்து முகம் காட்டினார்
அப்படியே இருப்பதொரு  குளிர்ந்த  விழியும் தேவரீரை ஒழிய எனக்கு இல்லை என்கிறார்-
ஜனக குலத்தில் பிறந்த ஆபி சாத்தியம் உண்டு அவளுக்கு-குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றீர் இ றே நீர் என்ன
எண்ணிலாத மாய –
அசங்யேயமான ஆச்சர்ய சக்தியை உடையவன் அல்லையோ –
இத்தால் –
நிஹீந ஜன்மாவாய்
சாஸ்திர அதிகாரியுமாயும் அன்றிக்கே இருந்துள்ள
பஷிக்கு மோஷம் கொடுத்த சக்தி யன்றோ தேவரீருடைய சக்தி –என்கை
ராவணன் குறி யழியாதே இருக்க -இக்கரையில் அவன் தம்பிக்கு லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம்
பண்ணிற்று அவன் ஜன்மம் பார்த்தோ -அபிஜ்ஞோ ராஜ தர்மாணாம் -என்கிறபடியே
அவன் ஜ்ஞானாதிகன் அன்றோ என்ன –
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றிற்று ஜ்ஞான அஜ்ஞானங்களில் உள்மானம்-புறமானம் பார்த்தோ
நின்னை என்னுள் நீக்கல் –
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –
அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்
ஷூதரமான உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றாது ஒழிய வேணும்
என்றுமே -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –

——————————————————————————————

92 -பாட்டு -அவதாரிகை –

நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்
நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
நிருபாதிக சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை
உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட  வேண்டாம் -என்று
பயம் தீர -மாசுச -என்ன வேணும் -என்கிறார் –

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –92

வியாக்யானம்-

விடைக்குலம் -இத்யாதி –
முன் வேலை நீர் படைத்து -அதில் கிடந்து -கடைந்து -அடைத்து –
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து -வென்றி வேல் கண் மாதரார் –
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாய் -நின்றனக்கடைக்கலம் புகுந்த என்னை
அஞ்சல் என்ன வேண்டும் -என்று அந்வயம்
முன் வேலை நீர் படைத்தது –
அப ஏவஸஸர்ஜா தௌ -என்கிறபடியே -ஏகார்ணவ ஸ்ர்ஷ்டியைப் பண்ணி
வேலை நீர் -என்றது எல்லையான கடல் -என்னுதல்
திரைக் கிளர்தியை உடைய கடல் -என்னுதல்
வேலை -என்று எல்லையும் -திரையும் –
நீர் -என்று -கடல் –

அதில் கிடந்து –
அதிலே கிடந்து
ஸ்ரஷ்டமான ஜகத்திலே சேதனருக்கு ஆஸ்ரயண ருசி பிறந்தவன்று சரண்யரான நாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி
கடைந்து –
அக்கிடை பலித்து தேவர்கள் ஐஸ்வர்யத்தை இழக்க
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா -என்கிறபடி சரணம் புக
அவர்கள் இழந்தவற்றை –கடலைக் கடைந்து -அக்கடலிலே உண்டாக்கிக் கொடுத்தவன் -என்கை

அடைத்து –
அந்த தேவதைகளை குடி இருப்பு அழியும்படி அதிக்ரமத்திலே நடந்த ராவணாதி
கண்டக நிரசன அர்த்தமாக -தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து லவணார்ணவத்தை யடைத்து –
விடைக்குலம் -இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சரண்யனாய் அவர்கள் ஆபத்திலே உதவின வளவு அன்றிக்கே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக கோப சஜாதீயனாய் வந்து அவதரித்து
ரஷித்த படி சொல்லுகிறது மேல்

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து –
விடை ஏழு அடர்த்து -என்னுதல்
விடைக்குலம் -அடர்த்து என்னுதல் செய்யாதே இப்படி சொல்லுகிறது –
சாதூர் வர்ண்யம் மயா ஸ்ர்ஷ்டம் -என்கிறபடியே  கோப ஜாதியிலும் வர்ண பேதம் உண்டாகையாலே
நாநா ஸ்வபாவங்களான விடை ஏழையும் மூட்டியாக நெரித்து
குலம் -வர்ணம்
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும்  பிறந்திலேன் -என்றார் இ றே

வென்றி வேற் கண் மாதரார் கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா-
ஜிதந்தே புண்டரீகாஷ -என்றும் -தூது செய் கண்கள் -என்றும் -என்கிறபடியே
சர்வரையும் கண்களாலே தோற்பிக்கும் –
தேவரீரையும் தோற்பிக்க வல்ல நோக்கை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
பரிமிளிதமான தோளை அநுபவித்து -அவளுக்கு பிரியமாக ரஷகாபேஷை உடைய
பசுக்கள் உடைய ரஷணமே பிரயோஜனமாய் இருக்குமவனே –
சர்வ கந்த -என்கிற அவன் திருமேனியையும் பரிமிளிதமாக்கும் தோள் -என்கை
யுவதிச்ச குமாரிணீ -என்கிறபடி ஸ்வ ஸத்ர்சமான பருவத்தை உடையவள் ஆகையாலே
செவ்வியை உடைய தோள் -என்னவுமாம்
வென்றி வேல் கண் –
வென்றியை விளைக்கும் வேல் போலே நோக்கை உடைய கண் –
கடி -என்று செவ்வியும் நாற்றமும் –

நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
முமுஷு ர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும் –
ஜகத்காரண வஸ்து சரண்யன் என்னும் இடம் சுருதி ஸித்தம்
சரணம் த்வா அநு ப்ராப்தா -என்றும் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்றும்
வியூஹ விபவங்களில் சரண்யதை ஆப்த வாக்ய ஸித்தம்
அங்கன் இன்றிக்கே
மாமேகம் சரணம் வ்ரஜ –
தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை
என்னை –
அநந்ய சரண்யனான என்னை
அடைக்கலம் புகுருகையாவது -என்  கார்யம் தேவரீர்க்கே  பரம் என்று இருக்கை
தவை வாஸ் மிஹி பர -என்னக் கடவது இ றே
யஞ்சல் என்ன வேண்டுமே-
தேவரீர் பெருமையும்
என் சிறுமையும்
இடைச் சுவரான விரோதியின் கநத்தையும் பார்த்து
நான் அஞ்சாத படி -மாசுச -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மாமேகம் சரணம் வ்ரஜ -என்ற தேவரீருக்கு
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கை அரிதோ –

—————————————————————————————-

93 பாட்டு –அவதாரிகை –

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட –மாசுசா -என்ன
வேணும் என்றீர் கீழ்-
இவ்வளவே  அமையுமே என்ன –
உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது
தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு
விஷயாந்தர நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி
என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்
அனுபவத்தை அபேஷிக்கிறார் –

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

வியாக்யானம்-

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே –
வண்டு படிந்த ஸ்ரமஹரமான திருத் துழாய் தாரானது அலர்ந்து வருகிற திருவடிகளையே –
இத்தால் –
திருத் துழாயோட்டை சம்பந்தத்தாலே சர்வாதிக வஸ்து என்னும் இடத்தையும்
திருவடிகளோட்டை சேர்த்தியாலே திருத் துழாய்க்கு செவ்வியும் விகாசமும் உண்டாகையாலே-திருவடிகளோடே சேர்ந்தாருக்கு செவ்வியும் விகாசமும் உண்டாகும் என்னும் இடத்தையும் –
திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் இருக்கையாலே நிரதிசய போக்யம் என்னும் இடத்தையும் சொல்லிற்று –

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு-இரங்கு –
அனுபவ ருசி பிறந்து அனுபவிக்கையிலே இழிந்த எனக்கு இரங்கு -இவன் நாசகரமான விஷயாந்தரங்களில் நின்றும் மீளுவான் –
நிரதிசய போக்யமான தம்மை அனுபவிப்பான் -என்று க்ர்பை பண்ணி அருள  வேணும் –
தேவரீருக்கு ஒரு இரக்கம் மாதரம் -அது இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம்
ஆனபின்பு இத்தனையும் செய்து அருள வேணும்

அரங்க வாணனே –
கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு
தேவரீர் அழகாலே -விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து –
அனுபவிக்கைக்காக  அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –
என்னக் கடவது இ றே

கரும்பு இருந்த கட்டியே –
இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச்   சொல்லுகிறது –
கோதுண்டாதல் -கழிக்கும் அம்சம் உண்டாதல் இன்றிக்கே
சர்வதோ முகமாய் சாரஸ் யத்தை உடைத்தாய் –
பாக விசேஷத்தால் வந்த சாரஸ்யம் யன்றிக்கே –
ஸ்வா பாவிகமான சாரஸ்யத்தை உடைத்தாய் இருப்பது ஒரு கன்னல் போலே
நிரதிசய போக்யன் ஆனவனே

கடல் கிடந்த கண்ணனே
பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –
திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே
அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இ றே இருப்பது –

இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே –
எதிரிகள் சரீரத்திலே அழுந்தும்படி -தீப்த பாவக சங்காசமான அம்புகளை விட்ட
வில்லை உடைய தசரதாத் மஜனே -இத்தால் –
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே சக்ரவர்த்தி திருமகனுடைய-வீரமும் அபிராமதையும் -பெரிய பெருமாள் பக்கலிலே அனுபவிக்கலாய் இருக்கை –
மேகச்யாயமம் மஹா பாஹூம் சர்வ சத்வ மநோ ஹரம் -என்னக் கடவது இ றே
1-ப்ராப்தராய் -2–சந்நிஹிதராய் -3–நிரதிசய போக்ய பூதராய்-4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க -5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –
நான் இழக்க வேண்டுகிறது என் –இரங்கி யருள வேணும் என்கை –
கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே -இரும்பரங்க வெஞ்சரம் துரந்த
வில்லி ராமனே -அரங்க வாணனே -சுரும்பரங்கு தண் துழாய் துதைத்து அலர்ந்த
பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு -என்று அந்வயம்-

————————————————————————————-

94 -பாட்டு –அவதாரிகை –

த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் –
அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் –
அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க
இரங்கு -என்று
இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன
உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய் இருப்பதொரு பதார்த்தம்
இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் –என்கிறார் –

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

வியாக்யானம்-

உறக்கமோடு உணர்ச்சி நீ -வளம் கடல் பயனும் நீ-ஆனில்  மேய ஐந்தும் நீ-
யவற்றின் நின்ற தூய்மை நீ -ஊனின் மேய வாவி நீ-வானினொடு மண்ணும் நீ-
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –என்று அந்வயம்
உறக்கமோடு உணர்ச்சி நீ-
தமோ குண அனுபவத்தால் வந்த நித்ரையும் –சத்வ குண கார்யமான
உணர்த்தியும் உன் ஆதீனம் -இத்தால்-
சேதனருக்கு விஷயப்ராவண்ய ஹேதுவான அஞ்ஞானமும் –
பகவத் ப்ராவண்ய ஹேதுவான ஜ்ஞானமும் -நீ இட்ட வழக்கு -என்கை
அநாதி மாயயா ஸூ ப்த -என்று அஞ்ஞானத்தை நித்ரையாக சொல்லக் கடவது இ றே

வளம் கடல் பயனும் நீ-
கண்டார்க்கு ஆகர்ஷமான கடலிலே அம்ர்தமும் ரத்நாதிகளும் உன் சங்கல்ப அதீனம்-இது பிரயோஜனாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இத்தால் -உன் ப்ராவண்யத்துக்கு விரோதியாய் -அஞ்ஞான கார்யமான பந்தக
பதார்த்தங்கள் எல்லாம் நீ இட்ட வழக்கு -என்கை
ஆனில்  மேய ஐந்தும் நீ-
பசுக்களில் சுத்திகரமாய் சொல்லுகிற பஞ்சகவ்யமும் உன் அதீனம்
யவற்றின் நின்ற தூய்மை நீ –
அந்த பஞ்சகவ்யங்களுக்கு உண்டான சுத்தியும் உன் சங்கல்ப அதீனம்
பரம  பாவநரான தேவேரோட்டை ப்ரத்யா சத்தி இ றே பதார்த்தங்களுக்கு சுத்தி ஹேது
கோ ப்ராஹ்மணர்க்கு பகவத் சமநராதன உபகரணங்கள் ஆகையால் இ றே சுத்தி ஹேதுத்வம் –

ப்ரஹ்மணா நாம் கவாஞ்சைவ குலமே கந்த் விதாக்ர்தம்
அந்யத்ர மந்த்ராஸ் திஷ்டந்தி ஹவீரன் யத்ர திஷ்டதி -என்னக் கடவது இ றே
கர்மத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் சமாராதானம் ஆகையாலே –
ஜ்ஞானத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் விஷயம் ஆகையாலே
ஷேத்ரஞ்ஞஸ் யே ச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமாமதா -என்னக் கடவது இ றே
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே –என்றும் –
இத்தால் அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யத்தால் வந்த அசுத்தி பரிஹாரமான
பாவந பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு -என்கை

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் தாரகமாக வர்த்திக்கிற பஞ்ச வ்ர்த்தி ப்ராணனும் நீ இட்ட வழக்கு -இத்தால் –
சரீர ஸ்திதியும் சரீர விநியோகமும் நீ இட்ட வழக்கு என்கை
வானினொடு மண்ணும் நீ-
நிராலம்பனமான ஆகாசத்தில் வாய்வாதிகள் சஞ்சரிக்கிறதும்
நீரிலே கிடக்கிற பூமி கரையாதே சகல ஆதார பூதை யாகிறதும் உன்னாலே –
அதவா –
பந்தகமான சம்சாரமும்
முக்த ப்ராப்யமான நித்ய விபூதியும்
நீ இட்ட வழக்கு -என்றுமாம்

யானும் நீ –
பக்தனான நானும் உனக்கு பிரகார பூதன் -இத்தால் –
எனக்கு ருசி இல்லாத வன்றும் -ததாமி புத்தி யோகந்தம் -என்கிறபடியே
என்னுடைய ருசி நீ இட்ட வழக்கு
யதன்றி –
அது ஒழிய
எம்பிரானும் நீ யிராமனே-
நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல என்கைக்கு உதாஹரணம் சொல்லுகிறது
சக்கரவர்த்தி திருமகனரான  நீயே அகிஞ்சனரான எங்களுக்கு ஸ்வாமி

அபி வ்ர்ஷா பரிம்லாநா -என்கிறபடியே ஸ்தாவர பர்யந்தமாக
அழகாலும் சீலத்தாலும் பிரிந்து தரிக்க மாட்டாதபடி பண்ணின நீயே எங்களுக்கு
நிர்வாஹகன்
அலமத்ய ஹி புக்தேந பரமார்த்தை ர லஞ்சன
தாபச்யாமி நிர்யாந்தம் ராமம் ராஜ்யே  பிரதிஷ்டிதம் -என்றும் –
புற் பா முதலா இத்யாதி –
யாகாதிர் யஜ்ஞ சீலாநாம் -என்று ஒரு பஷிக்கு மோஷம் கொடுத்தவனே
எங்களுக்கு நிர்வாஹகன் –
அன்று சராசரங்களை வைகுந்தத்து எற்றினவனே எங்களுக்கு நிர்வாஹகன் –

————————————————————————————–

95 பாட்டு –அவதாரிகை –

எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்
ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –
இதில் –உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –
பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து
உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி
புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று
தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

வியாக்யானம் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி –
ஆச்சார்ய உபதேசத்தாலும் சாஸ்திர வாசனையாலும் இந்த்ரியங்களை நியமிக்க
இழிந்தால் நியமிக்க வரிய ச்ரோத்ராதிகள் ஐந்தையும் -ஆகர்ஷமான
தன் வடிவைக் காட்டி -விஷயங்களில் போகாதபடி மீட்டு -அவற்றுக்கு தானே விஷயமாம்படி=நியமித்து -ஈஸ்வரன் வடிவழகைக் காட்டி மீட்டான் என்கைக்கு இங்கே சப்தம் உண்டோ -என்னில் –
கீழே –புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறி இலேன் -என்றவர் ஆகையாலே
இங்குச் சொன்ன இந்த்ரிய நியமனம் ஈச்வரனாலே என்னும் இடம் அர்த்தாத் சித்தம் -தபோ பங்கம் பண்ண வந்த ஊர்வசியை மாத்ர்புத்தியால் நமஸ்கரித்து நின்ற அர்ஜுனனும் –
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -என்னும்படி இ றே
இந்திரிய நியமன அருமை இருப்பது
ஆசையாமாவை துடக்கறுத்து –
அவ்வடிவிலே பாவநத்வத்தாலே விஷயங்களில் ருசியை  வாசனையை தவிர்த்து
விஷயாந்தர ருசிக்கடி பாபமே இ றே

வந்து உன் தொழில் கண் நின்ற என்னை –
புருஷார்த்தின் மேல் எல்லையில் வந்து-உன் திருவடிகளிலே கைங்கர்யத்தை அர்த்தித்து நின்ற என்னை –
நீ விடக் கருதி –
இந்த்ரிய ஜெயமே தொடங்கி -இவ்வளவும் புகுர நிறுத்தின நீ –
உபேஷிப்பாயாக நினைத்து
மெய் செயாது
ஆரம்பித்த கார்யத்தை முடிய நடத்தாதே –
மெய் செய்யாது ஒழிகையாவது -ஆத்ம உஜ்ஜீவனத்தை ஆரம்பித்து-தத் விபரீதமாக ஆசரிக்கும் மித்யா வியாபாரம் –

அந்யதா சங்கல்ப்யா ந்ய தாசரதீ தி மித்யா சாரஸ் ஸ உச்யதே -என்னக் கடவது இ றே –
மிக்கோராசை யாக்கிலும் –
விஷயாந்தரங்களில் ருசியைப் பிறப்பித்தாய் ஆகிலும் –
ஸ்வ விஷயத்தில்  கர்ஷி பண்ணினவன் -சப்தாதி விஷயங்களில் ருசிக்கு
உத்பாதகனாகக் கூடாது -அப்படிக் கூடினாலும் –
கடல் கிடந்த நின்னலலார் ஓர் கண் இலேன் –
நான் அபேஷியாது இருக்க -என்னுடைய ஹித அர்த்தமாக
த்ரிபாத் விபூதியில் இருப்பை விட்டு –
சம்சார விஸத்ர்சமான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற உன்னை ஒழிய-வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன்

எம் அண்ணலே –
அபேஷா நிரபேஷமாக என்னுடைய ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு அடி
என்னுடைய நிருபாதிக ஸ்வாமி யாகையாலே -என்கிறார்
உபேஷித்தாலும் விட மாட்டாமைக்கடி நிருபாதிக ஸ்வாமித்வம்
அண்ணல்-ஸ்வாமி

———————————————————————————–

96 -பாட்டு -அவதாரிகை –

தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் –
இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும் இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா  நின்றீர் -உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் -என்ன
நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில் பொருந்தும்படியாக பிரசாதத்தைப்
பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

வியாக்யானம்-

வரம்பிலாத மாயமாயா –
அளவிறந்த ஸ்வரூபத்தையும் அளவிறந்த மஹதாதி பரிணாமங்களையும்
உடைத்தான ப்ர்க்ர்தி தத்தவத்தை -ஸ்வ அதீனமாக உடையவனே –
மாயை -ப்ரக்ர்தி
அநந்தஸ்யந தச்யாந்தம் சங்க்யா நாம் வாபி வித்யதே -என்னக் கடவது இ றே
இத்தால் –பந்தகமான ப்ரகர்தி நீ இட்ட வழக்கு என்கை
மாயம் -ஆச்சர்யம்
இத்தால் -கீழ் சொன்ன ப்ரக்ர்தியில் பக்தராய் -தன்நிவ்ர்த்தி அர்த்தமாக தேவரீரை
ஆஸ்ரயித்த சேதனருக்கு தத் சம்பந்தத்தை அறுத்து கொடுக்கைக்கு அடியான
ஜ்ஞான சக்தியாதி குணங்களை உடையவனே -என்கை

வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் –
சப்த லோகங்களும் ஸ்தோத்தாக்களாக –
தம்தாமுடைய சேஷத்வத்தை உணர்ந்து –
ஸ்வரூப அநுரூபமாக அநந்ய பரராய் கொண்டு –
அசந்க்யாதமான கல்பங்கள் எல்லாம் ஏத்தினாலும் எல்லை காண ஒண்ணாத ரஷகத்வ-ப்ரதையை உடையவனே –
இத்தால் –அசித் சம்சர்க்கத்தை அறுத்து -திருவடிகளோடே சேர்த்து ரஷித்து போந்த
ரஷகத்வ ப்ரதையை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-

வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி சர்வ லோகை
சதுர்முகா யுர்யதி கோடிவக்த்ர

வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து-
நம்மைப் புகழாதே அபேஷிதத்தை சொல்லீர் -என்ன
அசந்யேயமான பல வகைப்பட்ட பிறப்பை யறுத்து
பல வகை -யாவது தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள்
அசந்க்யாதம் ஆவது -ஒரு ஜாதியில் பிறக்கும் ஜன்மத்துக்கும் தொகை யற்று இருக்கை
காலம் -அநாதி
ஆத்மா-நித்யன்
பண்ணி வைக்க வல்ல கர்மங்களுக்கு அவதி யில்லாமையாலே
கர்ம அநு குணமாகப் பிறக்கஇருக்கிற பிறவிக்குத் தொகை இல்லை
ஜன்மங்களை யறுத்து

வந்து நின் கழல் பொருந்துமாறு –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே வந்து –
ஸூ ரி போக்யமான திருவடிகளில்
சாயாவா சத்வம் அநு கச்சேத் -என்கிறபடி -ப்ரதக் ஸ்தித்யநர்ஹமாக -பொருந்தும்படியாக-

திருந்த –
நோபஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே திருவடிகளுக்கு புறம்பானவற்றை
ஸ்மரியாதே -கைங்கர்ய சுகமே சுகமாம் படி
நீ வரம் செய் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாக -ஆள் பார்த்து உழி தருகிற நீ –
பிரசாதத்தை பண்ணி யருள வேணும்
புண்டரீகனே-புண்டரீக அவயவனே
புண்டரீகாஷனே
திருக்கண்களே ப்ரசுரமாய் இருக்கையாலே –புண்டரீகன் -என்கிறார்
விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்னக் கடவது இ றே

இத்தால் -பிரசாதத்தை பண்ணுகை யாவது -ஒரு விசேஷ கடாஷம் என்கிறார்

———————————————————————————

97-பாட்டு –அவதாரிகை –

வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் –
நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன
திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க –
திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க
ஒரு முதல் வேணுமோ
அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்
என் விரோதியைப் போக்கி
உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்

அகிஞ்சனனாய்
தேவரீர் கை பார்த்து இருக்கிற எனக்கு
ப்ராப்யமான கைங்கர்யத்தோடு
தத் உபாயத்தோடு
வாசியற தேவரீரே தந்து அருள வேணும் எத்தனை யன்றோ -என்கிறார் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே –97-

வியாக்யானம் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய ! –
காணவே எதிரிகள் தறைப் படும்படியான ஸ்ரீ பஞ்சாயுதங்களும் -அவர் தம் வாத்ஸல்யத்தாலே-திருக்கையிலே ஏந்தினவனே –
வெறும் புலத்திலே ஆலத்தி வழிக்கும்படி இருக்கிற கையிலே திவ்ய ஆயுதங்களை
ஏந்தினவனே -என்றுமாம் –
திவ்ய ஆயுதங்களை ஏந்திய படியாயே இருக்கிறது -தேவரீருக்கு ஒரு விரோதி உண்டாயோ -என் விரோதியை போக்குகைக்கு அன்றோ -என்கை-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்னக் கடவது இறே

செய்ய போதில் மாது சேரு மார்பா !-
சிவந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையாளாய் இருக்கையாலே ஸூகுமாரியாய்
திரு மேனிக்கு பரபாக ரூபத்தாலே ஆபரண பூதையான பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்று சொல்லப்படும் திரு மார்பை உடையவனே -இத்தால்
ஆஸ்ரயண விரோதி பாபத்தை பொறுப்பிக்கைக்கு பிராட்டி சந்நிதி உண்டாய் இருக்க –
மாத்ர்பித்ர் சந்நிதியிலே நோவு படுவாரைப் போலே -சரீர சம்பந்தத்தாலே நோவு படுவேனோ -என்கை
நாதனே !-
சர்வ ஸ்வாமி யானவனே –
இத்தால் -இவள் புருஷகாரம் ஆகாதே -கையில் பரிகாரமும் இல்லாது ஒழிந்த அன்று-தான் ஆருடைமை நோவு படுகிறது
இப்படி இருக்க புருஷார்த்த ஸித்திக்கு என் தலையிலும் ஒரு உபாயம் வேணும் என்று-தேவரீருக்கு ஒரு நிர்பந்தம் உண்டாகில் அத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார் -மேல்

ஐயிலாய வாக்கை நோய் அறுத்து –
ச்லேஷ்மத்தை பிரக்ர்தியாக உடைய சரீரமாகிற நோயை அறுத்து –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ப்ரார்த்த நீயமான சரீரம் ஜ்ஞானம் பிறந்தால் வ்யாதியாய்-இறே இருப்பது –
ஏய்ந்த தம் மெய்குந்தமாக விரும்புவர் -என்னக் கடவது இறே
வந்து நின்னடைந்து –
ஒரு தேச விசேஷத்திலே வந்து
நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து
உய்வதோர் உபாயம் –
அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு நல்க வேண்டுமே –
1-ஸ்ரீ ய பதியாய் –
2-திவ்ய ஆயுத உபேதனாய் –
3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –
நல்குதல்-கொடுத்தல் –அதாகிறது தருதல் –

————————————————————————————-

98-பாட்டு –அவதாரிகை –

நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே
என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே
ஆலம்பந மாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98

வியாக்யானம் –

மறம் துறந்து –
மறம் ஆகிறது -கோபம்
அதின் எல்லை -பர ஸ்ம்ர்ரத்தி பொறாது ஒழிகையும் -பர அநர்த்த சிந்தையும் -அத்தை விட்டு
வஞ்சம் மாற்றி –
க்ர்த்ரிமத்தை தவிர்த்து -அதாகிறது –
அனுகூலனாய்த் தோற்றி பிரதிகூலனாய் தலைக் கட்டுகை  –
வஞ்சம் -பொய்
ஐம் புலன்கள் ஆசையும் துறந்து –
இந்திரியங்களுக்கு இதர விஷயங்களில் உண்டான-யும்- ச-உம்மைத் தொகை –
இதில் கீழ் சொன்ன கோப க்ர்த்ரிமங்களுக்கு ஹேதுவான விஷயாந்தர சங்கத்தையும் விட்டு-அவை தான் புருஷார்த்த ருசி பிறந்தாருக்கு அசம்பாவிதங்கள்-

நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற –
உன் பக்கல் ஆசையையே ஆதரித்து நின்ற -அதாவது பகவத் ப்ரேமம் வேணும் என்று இருக்கிற ஆதரம்
தொடர்வு -உறவு
நாயினேன் –
பிரதிகூல்ய நிவர்த்தியும் புருஷார்த்த ருசியும் ஒழிய -புருஷார்த்த சித்திக்கு
முதல் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற அநந்ய கதி
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா –
பிறப்பது சாவதான மகா துக்க சக்கரத்தின் நின்றும் நீங்கும் படி –
பிறந்து -என்கிற இது ஷட்பாவ விகாரத்துக்கும் உப லஷணம்
இறந்து -என்கிற இது நரகாதிகளுக்கும் உப லஷணம்

மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே –
சம்சாரத்தில் நான் பட்ட துக்கத்தையும்
என்னுடைய பூர்வ வ்ர்த்தத்தையும்
தேவரீருடைய ஸ்வா தந்த்ர்யத்தையும்
பார்த்து விஸ்மரியாதே –
அபேஷா மாத்ரத்தையும் சம்பந்தத்தையும் பார்த்து –
விரோதி நிரசனத்திலே அசக்தனான எனக்கு -தன்நிவ்ர்த்தி பூர்வகமாக
புருஷார்த்தத்தை தந்து அருள வேணும் –
மற்று -என்கிறது விரோதி நிவ்ர்த்தி சமநந்தரத்தில் லபிக்குமது ஆகையாலே
மாய –
மமமாயா -என்கிறபடியே
சம்சார சக்கரத்தை அறுத்து -நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக்க வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனே-

————————————————————————————-

99-பாட்டு –அவதாரிகை

புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் –
அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக
நீர் நினைந்து இருந்தது என் -என்ன –
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ -ஆனபின்பு
கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99

வியாக்யானம் –

காட்டி நான் செய் வல் வினைப் –
நான் செய்த பிரபலமான பாபங்களை எமபடர் எனக்கு காட்டி –
வாசிகமாயும் மானசமாயும் உள்ள பாபங்களை ஒழிய —செய்தவையே நரக ப்ரவேசம்-பண்ணி அனுபவிக்கும் படி பிரபல பாபங்களை –
இத்தால் -இவர்கள் என்னை நலிகிறார்கள் என்று நான் நினையாதபடி பண்ணுமவர்கள் என்கை –
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து –
இந்த பாப பலம் நமக்கு இவ்வளவும் அனுபவிக்க ப்ராப்தம் என்று
பலத்திலேயும் என் மனசைப் பூட்டி வைத்து
நல்ல வல்ல செய்ய எண்ணினார் –
கொடிய செயல்களை செய்ய எண்ணினார்
இவனுக்கு முதலிலே பண்ணின பாபத்தை அறிவித்து
இப்பாப பலம் நாம் இவ்வளவும் அனுபவிக்க வேணும் ஆகாதே -என்று நெஞ்சைப் பிறப்பித்து-பின்னை யாய்த்து குரூரமான செயல்களை அவர்கள் செய்ய நினைப்பது –

எனக் கேட்டதன்றி –
என்று கேட்டுப் போந்தவற்றை அகற்றி –
இப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போந்த எம வச்யதையை தவிர்த்து –
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை-
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆகையாலே வந்த நீர்மையை உடைய க்ர்ஷ்ணனே –
பாப ப்ரசுரனாய் அகிஞ்சனான என்னுடைய ஆத்மாவை உன் பக்கலிலே சமர்ப்பித்த என்னை –
காலியாய நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை -என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –
பூட்டி வைக்கை யாவது
நீ விடக் கருதி -மெய் செய்யாது மிக்கோர் யாசை யாக்கிலும் –நின் அலாலோர் கண் அலேன்–என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே –
பூவை பூ போல் நிறத்தையும் சௌகுமார்யத்தையும் உடைய வடிவு உடையவனே
நின் பக்கல் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –
புஷ்பஹாச சுகுமாரமான வடிவழகை சர்வ காலமும் விச்சேதியாதே அனுபவிக்கும்படி-பண்ணி யருள வேணும் –
பின்னை கேள்வ -என்னதாவி நின்னொடும் பூட்டி வைத்த வென்னை -காட்டி நான் செய்-வல்வினை பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து -நல்ல வல்ல செய்ய எண்ணினார் -எனக் கேட்டதன்றி -பூவை வண்ணனே -நின்னுள் நீக்கல் -என்று அந்வயம் –

—————————————————————————————–

100-பாட்டு -அவதாரிகை –

இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –
அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100

வியாக்யானம் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த-
ஜன்மத்தோடே கூடின தாபத்ரய ரூபேண மஹா துக்கத்தை விளைக்கக் கடவதான
சம்சார சக்கரத்தில் நின்றும் நீங்குகைக்கு உறுப்பான தத்வ ஹிதங்களை மறைத்து
-வைத்தவர்கள்-
தத்வ ஹிதங்களை -அஃது -என்றது சுருதி ப்ரசித்தி யாலே
அதாவது -ஸ்வர்க்க -தத் சாதனங்களை வேதார்தம் என்று இருக்கை –
வேதவா தரதா  பார்த்த நான்ய தஸ்தீ திவா தி ந -என்று இ றே அவர்கள் நிர்ணயம்
இறக்கையாவது-நசிக்கை
அதாகிறது -ணச் -அதர்சநே -என்கிறபடியே மறைக்கை –

ஞான நீசரைக் –
சர்வஞ்ஞாராக தங்களை  அபிமானித்து இருக்கும் நீசரை –
யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டு நீசர் -என்றவர்கள் கேவல நீசர்
இவர்கள் ஜ்ஞான நீசர்
கரைக்கொடு ஏற்றமா –
இவர்களை கரையிலே கொண்டு ஏற்று கைக்கு உபாயமாக
சோத்வந பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
சம்சாரத்துக்கு கரையாவது பகவத் விஷயம் இ றே -அத்தை லபிக்கைக்கு உபாயமாக-வேதாந்தந்களிலே சொல்லி வைத்த
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம் –
பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற
பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இ றே

யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் –
முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே
பாசனம் -மரக்கலம்
அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே
யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –
ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த -என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –

பெறற்கு அரிய மாயனே –
உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –
லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே
எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக்
கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –
அநந்ய சாதனனாய் –
இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: