ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –
நிகமத்தில் –
இவ்வளவும் ஜ்ஞான சாஷாத்காரம் –
மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –
———–
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை –
நிகமத்தில் -இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ்
ப்ரசுரராய் -சப்தாதி விஷய ப்ரவணராய் -அது தானும் நேர் கோடு நேர் கிடையாமையாலே
அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து -பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –
வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே -இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவன பூதர் என்னும்படியான
வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்
என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே -தம்முடைய
நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-
பெரிய பெருமாளும் –
ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரஸ்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே
என்று மனசிலே போர உகந்து –
நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம் பேராறு மண்டி –
நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய
திரு உள்ளத்திலே -என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக
ப்ரகாசிக்கும் படி வைக்க –
அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது
ஜ்ஞாநாஸ் பதமாகையாலே -அந்த திருவடிகளுக்கு மேலான் திருப் பீதாம்பரைத்தையும்
திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –
இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை
உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ அத்தை அனுபவித்து
மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று திரு வுதர பந்தனம்
தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-
அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள
அந்தத் திரு மார்பை அனுபவித்து –
அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும்
ஆச்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –
அதுக்கு மேலே –
வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –
இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து –
அபயம் ததாமி – என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –
பாலும் பழமும் கண்ட சர்க்கரையுமான ரசவஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும் ஸ்வா பாவிகமான
அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும்
அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –
இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –
த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க
வேண்டும்படி அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் –
க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –
என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை ஷண காலமும்
பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்-
இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசங்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால்
அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது –
ஆன பின்பு விபீஷண ஆழ்வானை மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –
அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிஸ்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக
அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-
இவரும் பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநிவாஹநராய்
வந்து புகுந்து பெரிய பெருமாளைத் திருவடி தொழ –
பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-
இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விஸ்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
என்றும் -விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேணும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித்தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று
பார்த்தருளி –
அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய
அபேஷை யறிந்து செய்ய வேணும் -இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து –
இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –
—————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –
—————-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–
பதவுரை
கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவை யுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.
—————————————————-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–வியாக்யானம்-
கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க் குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-
கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் –
களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-
என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ஸ்ரத்தையை
என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை -வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-
அண்டர் கோன் –
திருவாய்ப்பாடியில் இடைக் குலத்துக்கு நிர்வாஹகன் -என்னுதல்
அண்டாந்தர வ்ர்த்திகளான ஆத்ம வர்க்கத்துக்கு நிர்வாஹகன் என்னுதல்
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்களுடைய உப்புச் சாறு போல் அன்று இவருடைய அம்ருதம்
என் அமுதினை –
ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாய் இருக்கும்
எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாய் இருக்கும்
கண்ட கண்கள் –
சுவை அறிந்த கண்கள் -ஸ்ரவண இந்த்ரிய மாத்ரம் அன்றியே விடாய் தீரக் கண்ட கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும்
வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது
காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே
முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே
தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில் கரை மேலே நின்ற
அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் -அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்
நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை
அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –
இப் பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –
—————————————————–
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-
கொண்டல் வண்ணனை –
கண்களுக்கு விஷயம் இருந்தபடி –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -என்றும் –
ந சஷூஷா பஸ்யதி கச்சநைநம் -என்கிற இலச்சினையை அழித்துத் தன் வடிவைக் காணும்படி
பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து சொல்லுகிறார் –
அங்கன் இன்றிக்கே
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று
ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
அந்த மேகமானால் ஆகாசத்தே கடக்க நின்று நீரை வர்ஷித்துப் போம் இத்தனை இறே
அங்கன் இன்றிக்கே இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்து
தன் வடிவு அழகை அவர்களுக்கு சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
பர அவஸ்தனாய் வந்து வெண்ணெய் யமுது செய்யில் மாளிகைச் சாந்து நாறுமே –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே ராஜாவாக்கிச் சிலர்
சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் காண ஒண்ணாதே -அதுக்காக –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
சக்ரவர்த்தி தன்னுடைய ராஜ ஐஸ்வர்யத்தை புஜிக்கைக்கு -எனக்கொரு பிள்ளை வேணும் -என்று
மஹதா தபஸா -என்கிறபடியே நோற்றுப் பெருமாளைப் பெற்றாப் போலே
ஸ்ரீ நந்த கோபரும் -கானாயர் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் –
என்கிறபடியே திருவாய்ப்பாடியிலே கவ்ய ஸம்ருத்தி யடைய பாழ் போக ஒண்ணாது என்று
இத்தை புஜிக்கைகாக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து கிருஷ்ணன்-
வெண்ணெய் உண்ட வாயன் –
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் –
வெண்ணெய் உண்ட வாயன் —
ஆஸ்ரிதர் உடைமை யாகையாலே தத் ஸ்பர்சம் ஆகாதே என்று இன்றும் அகப்பட அந்தக் குணுங்கு
நாற்றம் வாயிலே தோன்றும்படி இறே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று சந்தேஹிக்க வேண்டாதபடி யாய்த்து
இன்றும் அகப்பட வாய் குணுங்கு நாறும்படி
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் –
அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய் பானைகளை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-
என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –
என் உள்ளம் கவர்ந்தானை —
தைவீம் சம்பதமபிஜாதரான -பெரியவர்கள் அகப்பட தம்தாமுடைய
மனஸை இவன் பக்கலிலே வைக்க வேணும் என்று பார்த்து -அது செய்யப் போகாமல்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண -என்றாப் போலே பெரும் காற்றைத் தாம் பிடிக்கலாம் –
என் மனஸை ஒரு அளவாக்கப் போகிறதில்லை -என்னும்படி இறே மனஸ்ஸினுடைய
சஞ்சலத்வமும் திமிரும்படியான மிடுக்கும் -அப்படி -நின்றவா நில்லாத மனஸ்சை
என் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்க -நானும் அறியாதபடி –
அபஹரிதுத்து தன் பக்கலிலே சேர்த்துக் கொண்டான் –
அண்டர் கோன்
இப்படி இடையரோடும் இடைச்சிகளோடும் தண்ணியரான உம்மோடும் வாசியற வந்து கலந்து
வெண்ணெயையும் மனசையும் அவன் களவு கண்டது -புறம்பு ஆள் இல்லாமையாலும்
தன் குறையிலுமாவோ என்ன –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி
அந்தூபந்தரா நிற்கச் செய்தே கிடீர் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அவதரித்தது என்கிறார் –
அன்றிக்கே –
அண்டர் -என்று
இடையர் என்னுதல் –
அண்டாந்தர்வர்த்திகள் என்னுதல்
அணி யரங்கன் –
என் நெஞ்சை அபஹரித்து -சேணுயர் வானத்திலே -போய் இருக்கை அன்றிக்கே
கண்ணிட்டு காணலாம்படி சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவன்
சம்சாரிகள் அறவைத்தனப் படாதபடி யாலே இறே இக்கிடை கிடக்கிறது
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்கள் அம்ருதம் போலே உப்புச் சாறாய் எட்டா நிலத்திலே இருக்குமதன்று இறே இவருடைய அம்ருதம்-
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை –
அளப்பரிய வாரமுதை அரங்க மேய வந்தணனை -என்கிற வம்ருதம் இறே –
அமுதினைக் கண்ட கண்கள் –
இந்தக் கண்கள் இவரைக் காணாது ஒழியப் பெற்றதாகிலும் புறம்பே போகலாய்த்து –
காட்சி தான் அரை வயிற்று யாகிலும் புறம்பே போகலாய்த்து
அங்கன் இன்றிக்கே -பூர்ண அனுபவம் பண்ணின கண்கள் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -போலே இந்தப் பெரிய பெருமாள் தம்மை கேசாதி பாதாந்தமாக
அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே
சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே
த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்
அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மை சொல்லிற்று இலர்
விஸஸ்மார ததாத்மாநம் -என்கிறபடியே தாம் போக ப்ரவணராய் தம்மை மறக்கையாலே –
பலம் -சதா பஸ்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம்
வேணுமோ என்று சொல்லிற்று இலர்
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
1-இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
2-வடிவில் பசை இல்லை என்று போகவோ –
3-சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
4-நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
5-மேன்மை இல்லை என்று போகவோ –
6-சௌலப்யம் இல்லை என்று போகவோ –
7-போக்யதை இல்லை என்று போகவோ –
8-அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –
————————————————————————–
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-
கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை -அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –
கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் அறியாத இடையரையும் இடைச்சிகளையும் ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய் -சூட்டு நன் மாலை -யில் படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-
என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய் போலே இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு
நவநீதம் ஆயிற்று -ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள்
வடிம்பிடுகிற என்னுடைய மனஸை -வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும்
வசீகரித்து -இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –
அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்
என்கிறார் ஆகவுமாம் –
அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை-
என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச் சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம்
போல் அன்றிக்கே -அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான
அம்ருதமானவனை என்னவுமாம்-
கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர் மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது
மற்று ஒன்றினைக் காணாவே
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் -அவற்றைக் கண்ட போது
ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை
அநுபவிக்கப் பெற்ற கண்கள்-
மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே ப்ரஹ்ம புத்ரர்களாய்
யூயம் ஜிஜ்ஞா சவோ பக்தா -என்னும் அளவான ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –
ப்ராப்ய ச்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று
ஸ்ரீ நாரத பகவான் அளவிலும் அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது
உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற
ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ ய பதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப்
போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-
ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே
இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்
முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .