திருச்சந்த விருத்தம் -41-50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

41 பாட்டு –அவதாரிகை –
நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்
படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே கர்ம அநுகூலமாக ரஷிக்கும்
படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் 

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

வியாக்யானம் –

ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –
இடை ஜன்மத்திலே அவதரித்து நவ யௌவன ஸ்வபாவையான நப்பின்னை பிராட்டி உடைய
சுற்றுடைமையாலும் -பசுமையாலும் -செவ்வையாலும் -வேய் போலே
ஸ்பர்ஹணீ யமான திருத் தோள் உடன் சம்ச்லேஷித்தாய்
நித்ய மங்கள விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து
அத்யாதரத்தை பண்ணினாய் -ஆனை அன்று சென்று அடர்த்த -என்று கீழ்ப் பாட்டிலும்
இவ் வபதானத்தைச் சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் –
விரோதி நிரசனத்தில் நோக்குஅது -ஸூ ரி போக்யமான விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கி
வந்து அவதரித்த படியைச் சொல்லுகிறது -இது -அநந்ய பிரயோஜனமான ஆஸ்ரிதர்கள்
உடைய ரஷணத்துக்கும் உப லஷணம்-

ஆய நின்னை  யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் –
உபரிதந லோகங்களில் உண்டான ப்ரஹ்மாதிகளிலும் -பூமியில் விசேஷஜ்ஞ்ஞரான
மனுஷ்யாதிகளிலும் சர்வ சக்தி உக்தனான உன்னை யார் ஆராய வல்லர் –
அப்ராக்ர்த விக்ரஹத்தை ப்ராக்ர்த்த சஜாதீயம் ஆக்கின இத்தை பரிச்சேதிக்க வல்லார்
ஒருவரும் இல்லை என்கை –
மாய –
ஆச்சர்ய சக்தி உக்தனே
மாய மாயை கொல் –
மம மாயா துரத்தயா -என்கிறபடி பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த அக்ஞானத்தாலேயோ
அன்று இ றே -கிம் ஷேபே -மாயாவயு நம் ஜ்ஞானம் -என்கிறபடி மாயா சப்தம்
ஞான வாசி ஆகிறதே -அஞ்ஞானமும் ஞான விசேஷம் இ றே
அச்ப்ர்ஷ்ட கந்தனான தான் -அப்ராக்ர்தமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை
ப்ராக்ர்த்த சஜாதீயமாக்கி சஷூர் விஷயமாக்கின இத்தை அறியலாமோ –
அவாக்ய அநாதர -என்கிறபடியே ஸ்வயம் பூர்ணனானவான் ஒரு கோப ஸ்த்ரி உடைய
வடிவு அழகில் அத்யாதாரத்தை பண்ணின இத்தை தான் எவர் பரிச்சேதிக்க

அதன்றி
அந்த அவதார வைபவத்தை ஒழிய -சகல ஜகத் ஸ்ர்ஸ்டியாதிகளால் பண்ணின
உபகாரங்களை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கிறது மேல் –
நீ வகுத்தலும் –
சம்சாரிகள் உடைய இழவிலே -தயமான மனவாய் இருந்துள்ள நீ -உன்னை லபிக்கைக்கு
ஹேதுவான ஜ்ஞானம் உண்டாய் -நல் வழி போகைக்கு கரண களேபரங்களைக்
கொடுக்கச் செய்தேயும் -மஹதாதி விசேஷாந்தமான வகுப்பு -தத் கார்யமான
அண்டங்கள் ஆகிற வகுப்பு -அண்டாந்தர்கதமான சதுர்தச புவனாத்மகமான வகுப்பு –
தத் அந்தர்கத தேவாதிகள் ஆகிற வகுப்பு –
மாய –
நசிக்க
அந்த சரீரங்களைக் கொண்டு தம் தாம் ஹிதம் பார்க்க மாட்டாதே விஷயாந்தர
ப்ரவணராய் நசிப்பார்கள்
மாய மாக்கினாய்
அவ்வளவிலும் உபேஷியாதே இவற்றுக்கு இனி சம்சாரமே ஹிதம் என்று ஸ்வ சரீரமான
ப்ரக்ர்த் யாவஸ்தம் ஆக்கினாய்
உன் மாயம் முற்றும் மாயமே –
உன்னுடைய மானஸ வியாபாரரூபமான சங்கல்ப ஞானம் அடங்கலும்
ஆச்சர்ய அவஹமாக நின்றதீ –

———————————————————————————-

42-பாட்டு –அவதாரிகை

நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்
ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று சுருதி பிரசித்தராய் இருப்பாரும்
உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று
பகவத் அபிப்ராயமாக –அந்த ருத்னனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று
அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே –42-

வியாக்யானம் –
வேறு இசைந்த செக்கர் மேனி-
வேறாக தன்னுடைய சம்ஹாரத்வதுக்கு சேர்ந்த க்ருத்தமான வேஷத்தை உடையவனே –
செக்கர் -சிவப்பு -சிவத்தல் -கோபித்தல் –
ஸ்ர்ஷ்டியாதி த்ரயத்துக்கும் தேவரீருக்கு தயை இ றே ஸ்வபாவம் –
நீறணிந்த புன் சடை-
பஸ்மோத் தூளித சர்வாங்கனாய் க்ர்பணமான ஜடையை உடையவனாய்
புன்மை -பொல்லாமை
இத்தால் -பிரயாச்சித்ததுக்கும் பாதகித்வத்துக்கும் ஏகாந்தமான லிங்கத்தை உடையவன் -என்கை
கீறு திங்கள் வைத்தவன் –
அந்த ஜடையிலே கலா மாத்ரமான சந்திரனை வைத்தவன் –
ஆக -சம்ஹர்த்வமே தொழில் என்றும் -சாஸ்திரவஸ்யதையை  ஸூசிப்பிக்கிற
ஜடாதிகளை உடையவன் என்றும் –
சந்திர தாரணத்தாலே போக ப்ரதானன் என்றும் சொலிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இ றே இப்பாதகம் உண்டாவது

கை வைத்தவன் கபால மிசை –
கையில் வைத்த வலிய கபாலத்தாலே –
பாதகத்வ பிரகாசகமான கபால தாரணம் -பாதகம் போனால் அல்லது போகாத பிராபல்யத்தை
உடைத்தான கபாலம் என்றும் சொல்லிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இ றே இப்பாதகம் உண்டாவது –
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை –
உன் திருமேனியிலே ஊறா நின்றுள்ள ரக்த ஜலத்தாலே நிறைத்த ஹேதுவை
பேசு –
உன்னுடைய ஈஸ்வரத்வமும் அவனுடைய -ஈசிதவ்யமும் ஒழிய வேறு ஹேது உண்டாகில்
அருளிச் செய்ய வேணும் -உன்னுடைய ரஷகத்வமும் அவனுடைய ரஷ்யத்வமும் ஒழிய ஹேது உண்டோ
இங்கே செங்குருதி -என்றும் -மேலே –அலங்கல் மார்வில் வாசநீர் கொடுத்தவன் –என்றும்
அருளிச் செய்யா நின்றார் இரண்டுக்கும் பேதம் என் என்னில் –
அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கின மெய்ப்பாட்டைச் சொல்லுகிறது –
இங்கு -சர்வ கந்த -என்ற அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆகிற்று என்று-தோற்றுகைகாக வந்த வைலஷண்யத்தை சொல்லுகிறது -அங்கு –
ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே —
கூசம் இன்றியே-ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு-
ரிஷபங்களுடைய க்ரௌர்யத்தையும் தன் சௌகுமார்யத்தையும் பார்த்து கூசாதே
மேல் விழுந்து அடர்த்து உன் ஈச்வரத்வம் நிறம் பெறும்படி நின்றவனே எனக்கு அருளிச் செய்ய வேணும் –
சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ -ருத்ரன் ஈச்வரத்தால் வந்த மேன்மை குலையாதே
நிற்கிற அளவிலே பாதகி யானான் -அப்பதகத்தை அவதரித்து தாழ நின்ற நிலையிலே
போக்கி அருளினாய்
இந் நெடுவாசியை தேவர்களே எதிரிகளாய் அழியப் புக்கால் தான் அழியுமோ
கூசமின்றியே பேசு என்னவுமாம்
அஹம்வோ பாந்தவோ ஜாத -என்று சிலருக்கு தேவரீர் உடைய மேன்மையை மறைத்து
பரிமாறுகிற படியை நினைத்து கூசாதே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்கிறபடியே
அவதாரத்தின் உடைய அப்ராக்ர்த்வத்தை உள்ளபடி அறிகிற எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்

———————————————————————————————
43 பாட்டு –அவதாரிகை-

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே –க்ருஷ்ணனாய்  வந்து அவதரித்த
பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் -அந்த ருத்ராதிகளோடு
க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்து உன் சேவை சேஷித்வத்தை பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே
என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43

வியாக்யானம் –

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து –
வெவ்விய சினத்தை உடைய குவலயாபீடத்தினுடைய வெளுத்த கொம்பை அநாயாசேந
முறித்து -வெவ்விய சினம் -அதி கோபம் -அதினுடைய சினமும் ஹிம்சா பரிகரமான
கொம்பும் பய ஹேதுவானபாதி கொம்பினுடைய வர்ணமும் பய ஹேதுவாய் இருக்கிறது
ஆய்த்து இவர்க்கு –
உருத்த மா கஞ்சனைக் கடிந்து –
அது கேட்டு க்ருத்தனாய் ப்ரக்ர்த்யா பலோத்தரனான கம்சனனுடைய நினைவைக் கடிந்து –
அவன் நினைத்த நினைவை அவன் தன்னோடே போக்கி

காலநேமிர் ஹதோயோ சௌ –
வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி –பாலுள் வாங்கினாய் –மண்ணளந்து கொண்ட காலனே –
என்று அந்வயம்
குவலயாபீடத்தை போலேயும் கம்சனை போலேயும் எதிரியாக தோன்றுகை
அன்றிக்கே –தாய் வடிவு கொண்டு -வஞ்சனையால் வந்த பூதனை உடைய ப்ராணனை
பாலோடு கூட வாங்கினாய் -அவளும் தாயாய் முலை கொடுக்க வந்தாள் -இவனும்
பிள்ளையாய் ஆதாரத்தோடு அம்முலைப் பாலை அமுது செய்தான் -துஷ் ப்ரக்ர்திகளுக்கு
நாசகரமான தர்மி ஸ்வபாவத்தால் அவள் நினைவு அவள் தன்னோடே போன வித்தனை –
முலை வழியே ப்ராணனை வாங்கின ஆச்சர்யத்தாலும் துர்வர்க்கத்துக்கு ஜ்ஞாததயா
அன்றிக்கே சத்தையா நாசகன் ஆகையாலும் சர்வாதிகன் நீயே என்கை –
ஸ்த்நயம் தத் விஷ சம்மிச்சம் ரஸ்ய மாஸீஜ் ஜகத் குரோ -என்னக்  கடவது இ றே

உருத்து -என்ற பாடமான போது
குவலயாபீட நிரசநத்தாலும் திரு உள்ளத்திலே சினம் மாறாமையைச் சொல்லிற்று
ஆக கடவது –
மண்ணளந்து கொண்ட காலனே –
பூ பாரமான கம்ச நிரசனம் அன்றிக்கே தன் சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைகாக
ப்ரஹ்மாதி சகலஜந்துக்கள்  தலைகள் வாய்த்த திருவடிகளை உடையவனே
காலனே -என்று பிரதிகூலர்க்கு மர்த்யு யானவனே என்றுமாம் –
அஞ்சனத்து வண்ணனாய ஆதி தேவன் அல்லையே –
நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகஉபாஸ்வரா -என்கிறபடியே விலஷண
விக்ரஹ உக்தனாய் ஜகத்துக்கு உத்பாதகனாய் அத்தாலே உஜ்வலன் ஆனவன்
அல்லையோ –ஜகத் காரணவத்தோபாதி அப்ராக்ர்த திவ்ய விக்ரஹ யோகமும்
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம் என்கை –
————————————————————————————————–

44 பாட்டு -அவதாரிகை –

மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்
அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்
க்ருத்யாதி  யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை
விரும்புகையாலே அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு
வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா  பலம் -என்கிறார் –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44

வியாக்யானம் –

பாலின் நீர்மை –
க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே
அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் –
வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் -சங்க வண்ண மன்ன மேனி -என்றும் –
சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது -இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம்
சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –
செம்பொன் நீர்மை –
த்ரேதா யுகத்திலே வந்தால் -ருக்மாபம் -என்றும் –
கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே
சிவந்த நிறத்தை கொள்ளும் -சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே –
செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –

பாசியின் பசும்புறம் போலும்  நீர்மை –
த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான
திரு நிறத்தை உடையவனாய் –
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –
கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –
நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இ றே –
கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை
பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப்
பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய்
செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –
பொற்பு-அழகு
விண்டல்-அலர்தல்
யென்றிவை நிறைந்த கால நான்குமாய் –
ஆஸ்ரித அர்த்தமாகக் கொள்ளும் அந் நிறங்கள் குறைவற்று இருந்துள்ள சதுர் யுகமாய் –
இந் நிறங்கள் நாலு யுகங்களிலும் குறைவற்று இருக்கை
மாலின் நீர்மை –
இப்படி இருக்கிற சர்வேஸ்வரனுடைய நீர்மையை -இஸ் சௌலப்யத்தை –
வையகம் மறைந்ததென்ன நீர்மையே –
பூமியில் உள்ளார் ஆஸ்ரயியாதே காற்கடைக் கொண்டது என்ன துர் வாசனையாலே தான்
மஞ்சா க்ரோசந்தி -என்னுமாபோலே தத் அந்தர்பூதரை சொல்லுகிறது –
மறைத்தது -என்கிறது -குண மாயா சமா வ்ர்த -என்னுமா போலே பகவத்
அனுக்ரஹத்தையும் அதிசயித்து இருப்பதே -அநாதி கால துர்வாசனை என்கை –

———————————————————————————

45 பாட்டு –அவதாரிகை –
பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்
வந்த இழவைச் சொன்னார் கீழ் –
இதில் அவர்களில் அந்யதமனான எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் –
ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

வியாக்யானம் –

மண்ணுளாய் கொல் –
அவாக்ய அநாதர -என்கிறபடியே பூரணரான தேவரீர் -சர்வ சமாஸ்ரயணீயர் ஆகைக்காக
-சாபேஷமாய் -அப்ராக்ர்தமாய் -அதீந்த்ரியமான விக்ரஹத்தை ப்ராக்ர்த சஜாதீயம்
ஆக்கிக் கொண்டு அவதரித்து சஷூர் விஷயமானாய் –
கொல் -என்று ஏகாஸ்ரயத்தில் விருத்த கருமங்கள் காண்கையாலே இது என்னாய்
இருக்கிறது என்கிறார் -அதாகிறது -ஸீதா வியோகத்தில் கலக்கமும் -ஒரு திரயக்குக்கு
மோஷ ப்ரதானமும் -ப்ர்ச்சாமி கிஞ்சந –
விண்ணுளாய் கொல் –
அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை
உடையையாய்
கொல் –
நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாஹகனாய் இருக்கையும் குஹ சபரீ சுக்ரீவாதிகளுக்கு
நிர்வாஹகனாய் இருக்கையும் ஆகிற இது என்னாய் இருக்கிறதோ என்கிறார் –

மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல் –
இப் பரத்வ சௌலப்யங்கள் ப்ரக்ர்தி ஸ்பர்சத்தால் வந்த விபரீத ஜ்ஞாநத்தை உடையராய்
பிரயோஜநாந்த பரரான சம்சாரிகள் மநோரதிக்கும் மநோரதத்துககும் அவ்வருகாம்படிஇருத்தி
என்ன மாயை –
என்ன மாயை -என்கிற இது இப்பாட்டின் முடிவிலே கிரியையாகக் கடவது –
நின்தமர் கண்ணுளாய் கொல்-
உன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு -பரித்ராணாய ஸாதுநாம் –
என்கிறபடியே உள்ளபடியை சாஷாத் கரிப்பியா நிற்றி –
சேயை கொல் –
ஆஸ்ரித விரோதிகளுக்கு உன்னை அறிய ஒண்ணாதே எதிரிட்டு முடிந்து போம் படி
தூரச்தனாய் இருப்புதி
விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்னக் கடவது இ றே
கொல் –
சம்பந்தம் சமாநமாய் இருக்க அநந்ய பிரயோஜனர் பக்கலிலும் தத் விரோதிகள் பக்கலிலும்
உண்டான இஸ் ஸ்வபாவங்கள் என்னாய் இருக்கிறதோ
இவ் விருத்த தர்ம ஆஸ்ரயமாகிற தேவரீருடைய பிரபாவம் பிரமாண சித்தம் ஆகையாலே
பொய் என்ன ஒண்ணாது -விருத்த ஸ்வபாவங்கள் ஆகையாலே மெய் என்ன ஒண்ணாது –
அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா –
அது எல்லாம் கிடக்க -திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி
தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ
சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –
பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும்
பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே
புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம
அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே
என்ன மாயை
இது என்ன ஆச்சர்யம்
என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை
என்கிறார் –

————————————————————————————————

46 பாட்டு –அவதாரிகை
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே
சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் -பெரிய திருவடி தோளிலே ஏறி
ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு
அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46

வியாக்யானம் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய் –
உன் திருமேனியின் ஸ்பர்சத்தால் தழைத்து குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையை
உடையையாய் -ப்ரணதஜனங்கள் பக்கல் முகப்ப்ரதானத்தாலே அசைந்து வருகிற
திரு முடியை உடையையாய் –
சர்வேஸ்வர ஸ்பர்சம் இ றே -சேதனருக்கு அசங்கோசத்தக்கும் தாப சாந்திக்கும் ஹேது –
இத்தால் கண்ட போதே ருசி பிறக்கும்படியான ஒப்பனை அழகையும்
ஆபிமுக்யம் பண்ணினார் பக்கலில் முகப்ப்ரதானம் பண்ணும் நீர்மையும் சொல்லிற்று
தோடு –பூவிதழ்
கோடு பற்றி யாழி யேந்தி –
ஆஸ்ரிதர் விரோதிகளை த்வநியாலே மண் உண்ணும்படி பண்ணுகைக்கு
ஸ்ரீ பாஞ்சஜந்யதைப் பற்றி -கருதுமிடம் பொருது -என்னும்படி எதிரிகளை சென்று
அழிக்கைக்கு திருவாழியை ஏந்தி -ஆஸ்ரிதருக்கு முகம் கொடுக்கும் அளவு
அன்றிக்கே -அவர்கள விரோதிகளையும் அழியச் செய்யும் பரிகரங்களை உடையவன்
என்கை
யஞ்சிறைப் புள்ளூர்தியால் –
ஸ்பர்சத்தாலே அழகு பெற்ற திரு சிறகுகளை உடைய பெரிய திருவடியை நடத்தா நிற்றி –
அவனை மேற்கொண்டால் ஈஸ்வரனுக்கு அலங்காரமாய் இருக்கும்படியைச் சொல்லிற்று
ஆகவுமாம் -இத்தால் ஆஸ்ரிதர் இருந்த சம்சாரத்தில் ஆபத் தசைகளில் சென்று
முகம் காட்டி ரஷிக்கும் நீர்மையைச் சொல்லிற்று -இப்படி தன்னை தூளிதானம் பண்ணின
காலம் எல்லாம் இழந்தேன் என்கிறார் –ஆல்-என்று விஷாத அதிசய ஸூசகம்
நாடு பெற்ற நன்மை நண்மை யில்லை யேனும் –
இருந்ததே குடியாக காணலாம்படி திருவடியை மேற் கொண்டு சஞ்சரித்த இந் நன்மையை
நான் கிட்டப் பெற்றிலேன் ஆகிலும் –
நான் விமுகனான காலம் எல்லாம் இழநதாலும் -எனக்கு ருசி பிறந்த இன்றும் தேவரீர்
உள்ளீராய் இருக்க இழக்க வேணுமோ என்கை-

நாயினேன் வீடு பெற்று  –
நாயினேன் –
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்
வீடு பெற்று –
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று
இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
இச் சரீரத்தினுடைய விமோசனத்தோ டே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும்
விரகு அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————

47- பாட்டு –அவதாரிகை

பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ –
அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல –இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி
ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே –47-

வியாக்யானம் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண –
காளமேகத்தோடு ஸதர்சமாய் ஆகர்ஷமான வடிவை உடையையாய் -அத்தை
ஆஸ்ரிதருக்கு ஸ்வம்மாக்கி வாய்த்த கிருஷ்ணனே -இத்தால்
கால விப்ர கர்ஷத்தால் எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கிறார் –
அந்த கால விபர கர்ஷமாகிற குற்றம் இன்றிக்கே நித்தியமாய் இருக்கிற பரமபதத்தில்
வடிவைப் பற்றி ஆச்ரயிக்க மாட்டீரோ -என்ன
விண்ணின் நாதனே –
அவ்வடிவை நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை ஒழிய
தேச விபர கர்ஷத்தாலே எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கை
நீரிடத்து அரவணைக் கிடத்தி –
தேச கால விபர கர்ஷன்கள் ஆகிற குற்றங்கள் இன்றிக்கே ஷீராப்தியிலே நித்ய
சந்நிஹிதர் அல்லோமோ என்ன –
அவ்விடமும் ஸ்வேத த்வீபவாசிகளுக்கு காதாசித்கமாக காணலாம் இத்தனை அல்லது
அஸ்மதாதிகளுக்கு வரவு ஒண்ணாது-

என்பர் –
இவ்வர்த்தம் வேதங்களும் ஜ்ஞானாதிகரான வைதிகர்களும் சொல்லக் கேட்டோம் இத்தனை –
அஜாயமாநோ  பஹூதா விஜாயதே -என்றும் -யாத்ரா வதீர்ண க்ருஷ்ணாக்ய பரப்ரஹ்ம நராக்ர்தி –
என்று க்ருஷ்ணாவதாரமும் கேட்டு போம் இத்தனை –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பச்யந்தி ஸூ ரயே -என்று பரம பதத்தில் இருப்பும் ஸ்ருதிகள்
சொல்லக் கேட்ட இத்தனை –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன -என்று ஷீராப்தியில் வாசமும்-ஜ்ஞானாதிகர் சொல்லக் கேட்ட வித்தனை
நீரிடத்து –கடல் இடத்து
அராவணை -அரவணை
அன்றியும் -அது ஒழியவும்
ஓர் இடத்தை அல்லை
ஓர் இடத்தில் வர்த்திகிறாய் இல்லை –சர்வகதன் -என்கை -இதுவும் –
மாம் உபாஸ்வ -என்றும் -மாமேவ விஜாநீஹி -என்றும் இத்யாதிகளிலே சுபாஸ்ரயமாக
உபாசனத்ரைவித்யத்தில் சொல்லப்பட்டது இறே

தஹர சாண்டில்ய வித்யை -வைஸ்வா நரோபகோசலாதி வித்யைகளிலே
ஆஸ்ரயணீய ஸ்தலங்களுக்கு எல்லை இல்லை இறே -அவையும் –
யமாத்மா நவேத -என்று பிரதிபத்தி விஷயம் அல்லாமையாலும் -த்ரைவர்ணிக
அதிகாரம் ஆகையாலும் நிலம் இல்லை
ஆதலால் –
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்
அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்
அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் -த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் –
நிலம் அல்ல –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே —
அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி ஆஸ்ரயிக்கலாம் படி ஆச்ரயணீய
ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————-

48 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்
அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய  பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை
விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –
ஆஸ்ரிதர் நாஸ்ரிதர் விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே
செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ -என்கிறார்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

வியாக்யானம் –

குன்றில் நின்று –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தாருக்கு முகம்
கொடுக்கைகாக சிலர் அபேஷியாது இருக்க திருமலையிலே நின்ற நிலை
வான் இருந்து –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபவம் பண்ணுகைகாக
பரம பதத்திலே இருக்கிற பெரிய மேன்மையாய் உடையையாய் இருக்கச் செய்தே
யன்றோ திரு மலையில் வந்து நின்றது
நீள் கடல் கிடந்தது –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே
அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று

மண் ஓன்று சென்று –
இந்த்ரன் இழந்ததும் மகா பலி அபஹரிததும் த்ரை லோகத்து அளவாய் இருக்க
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக -ஒருத்தர் அபேஷியாது இருக்க எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்திலையோ -பிரதான பூமியை அளந்து –
சென்று -என்று பத விஷேபமாய் அளந்து என்றபடி
பூமியிலே ஓர் ஓர் இடங்களிலே சென்று அவதரித்தது என்னவுமாம்
அ து  ஒன்றை உண்டு –
அந்த பிரதானமான பூமியை பிரளயம் கொள்ளப் புக அர்தித்வ நிரபேஷமாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது இல்லையோ

அது ஓன்று இடந்து பன்றியாய் –
மஹா வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை உத்தரித்து

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து –
நன்றாகச் சென்ற நாள்களிலே மனுஷ்யர்களை ஸ்ர்ஷ்டித்து –நன்று சென்ற நாள் –என்று
மஹா வராஹ வேஷத்தைக் காணலாம் காலம் என்னுமத்தாலே வராஹ கல்பத்தைக்
கொண்டாடுகிறார் –நல்லுயிர் என்று சாஸ்திர அதிகாரத்தாலே ஸ்ரேஷ்டரான
மனுஷ்யர்களைச் சொல்லுகிறது -துர்லபோ மானுஷோ தேஹ -என்னக்  இ றே –
அவர்க்கன்று தேவமைத்தளித்த –
அம்  மனுஷ்யர்களுக்கு ரஜஸ் தமஸ் ஸூக்கள் மேலிட்டு பகவத் விமுகரான அன்று –
ஆஸ்ரயணீயராக தேவ ஜாதியை ஸ்ர்ஷ்டித்து அளித்த
ஆதி தேவன் அல்லையே
இப்படி நின்ற நின்ற நிலைகளில் பரஹிதங்களை ப்ரவர்த்திப்பிக்கிற ஜகத் காரண பூதனான
சர்வேஸ்வரன் அல்லையோ –
ஆராதகரான மனுஷ்யர்களையும் ஆராத்யரான தேவர்களையும் ஸ்ர்ஷ்டிக்கையாலே
ஜகத் காரண பூதனான நிரூபாதிக தேவன் ஆகையாலே சர்வ சமாஸ்ரயணீயன் அல்லையோ –
ஸஹஸ்ரசீர்ஷம் தேவம் -என்றும் -சாஷாத் தேவ புராணோ சௌ -என்றும் சொல்லக் கடவது இ றே –

———————————————————————————————————-

49 பாட்டு –அவதாரிகை –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த
பூமியிலே சஷூர் விஷயமாய் -அவதாரங்களில் உண்டான நீர்மைகளும் இழக்க
வேண்டாதபடி –குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

வியாக்யானம் –

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீ ய வேஷை யான கூனி –
இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –
கூனி கூன் –
கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்
உண்டை கொண்டு அரங்கவோட்டி-
லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித்
தெறித்து -அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-

உள் மகிழ்ந்த நாதனூர் –
ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி
உகப்பானும் தானே என்கை –
ஆக –சக்கரவத்தி திருமகனுடைய நீர்மையும் நம்பெருமாள் பக்கலிலே காணலாம்
என்கிறார் –
நண்டை உண்டு நாரை போர –
நண்டை விழுங்கின நாரை யானது விழுங்கின கனத்தாலே மலை பேர்ந்தால் போலே பேர
இத்தால் -பாதக பதார்த்தத்தின் உடைய கணம் சொல்லிற்று –
வாளை பாய –
அந் நாரைக்கு தன் மேலே நோக்கு என்று நினைத்து பயப்பட்டு வாளை யானது துள்ள –

நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற
பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு -அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப்
பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –
இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்
உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு இவை இரண்டும் பய ஸ்தானம் என்று
சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய்
இருக்கிறது ஆய்த்து -கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-
அம் தண் நீர் அரங்கமே –
அழகியதாய் -ஸ்ரமஹரமான ஜல சம்ர்தியை உடைத்தான கோயில்
தாபத்த்ரயாதூரருக்கு தாபஹரமான தேசம் என்கை –
நீலமே அண்டை கொண்டு -என்று ச்யாமமாய் ஸூகுமாரமான நீலத்தை
அண்டை கொண்டு என்கையாலே –
பெருமாளுடைய சௌந்தர்யமே அபாஸ்ரயமும்
அத்தை ஆஸ்ரயித்து இருப்பாருக்கு போக்யமும் அதுவே என்று கருத்து –
இப்பாட்டில் சொன்ன ஸ்வாபதேசங்கள் இவர்க்கு நிலம் இல்லாத போது
தேசத்தை ஆஸ்ரயித்து அனுபவிக்க இழிந்தவர்க்கு இப்பாட்டால் ஒரு பிரயோஜனம் இல்லை –

————————————————————————————————

50- பாட்டு –அவதாரிகை –
ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த
சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார் -கீழில் பாட்டில் –
இதில் –பாஹ்ய விரோதத்தைப் போக்க வல்ல அவதார வைபவத்தையும்
சர்வ சமாஸ்ரயணீ யமான தேச வைபவத்தையும் – அருளிச் செய்கிறார் –

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50

வியாக்யானம்-

வெண் திரைக் கரும் கடல் –
வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –
திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –
சிவந்து வேவ-
கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே
நிறமாய் மறுகும்படி தக்தமான படி –
இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான
கடலை அழியச் செய்தபடி
முன்னொரு நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர் –
இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை சேருமூர் –
உள் மகிழ்ந்த நாதனூர் -என்று ஆஸ்ரித ரஷணம் ஸ்வயம் பிரயோஜனமாக பண்ணும்
நீர்மையைச் சொல்லிற்று -கீழில் பாட்டில் –
இதில் -விரோதி நிரசன சக்தியைச் சொல்லுகிறது
இத்தால் -அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான
சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக கோயிலிலே நித்ய வாஸம்
பண்ணுகிறபடி -என்கை-
திண்மை என்றும் திறல் என்றும் வலியைச் சொல்லுகையாலே மிக்க வலிமை  என்றபடி

எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர் –
எட்டு திக்குகளிலும் உள்ள சமூஹங்கள் வந்து பெருமாளைத் திருவடி தொழுது
தீர்த்தமாடி -தங்கள் அபிமத விரோதியான சர்வ பாபங்களையும் போக்கும் சுத்தியை
உடைய நீரை உடைத்தாய் –
சர்வ சக்தி மயந்தாம சர்வ தீர்த்த மயம் சர -சர்வ புண்ய மயோ தேச -சர்வ தேவ மயோ ஹரி
என்னக் கடவது இ றே

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: