திருச்சந்த விருத்தம் -அவதாரிகை /1-10 பாசுரங்கள் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

அவதாரிகை –
ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலே ஆய்த்து பிறந்த படியும் வளர்ந்த படியும் –
யது குலத்தில் பிறந்து கோபால குலத்தில் வளர்ந்தாப் போலே
ரிஷி புத்ரராய்ப் பிறந்து -தாழ்ந்த குலத்திலே யாய்த்து வளர்ந்தது –
ஸ்ரீ கிருஷ்ணனாய் யது குலத்திலே பிறந்தாப் போலே அங்கே வளர்ந்து அருளினான் ஆகில்
ராமோவவதாரத்தோபாதி யாம் இத்தனை என்று பார்த்தருளி -இடையரும் இடைசிகளும் பசுக்களும் –
நம்மிலே ஒருத்தன் -என்னும் படி தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக வாய்த்து கோப
சஜாதீயனாய் வளர்ந்து அருளிற்று -அப்படியே ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து

இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக -மயர்வற மதி நலம் அருளி
தன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும் –
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் –
உபயத்துக்கும் பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
அதுக்கு அலங்காரமான கிரீடாதி பூஷண வர்க்கத்தையும் –
அதோடு விகல்ப்பிகலாம் படியான சங்கு சக்ர திவ்ய  ஆயுதங்களையும் –
இது அடங்க காட்டில் எறிந்த நிலா ஆகாமே அநுபவிக்கிற லஷ்மீ ப்ரப்ர்தி மஹிஷீ வர்க்கத்தையும்
அச் சேர்த்தியே தங்களுக்கு தாரகாதிகளாக உடையரான பரிஜன பரிபர்ஹத்தையும்
இப் போகத்துக்கு வர்த்தகமான பரமபததையும் சாஷாத் கரிப்பித்து
ப்ரகர்தி புருஷாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ர்ஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை
லீலையாய் உடையனாய் இருக்கிற படியும் காட்டிக் கொடுத்து -இப்படி உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்

நோ பஜனம் ஸ்மரந நிதம் சரீரம் -என்கிறபடியே சம்சார தோஷத்தை அனுசந்திக்க
இடம் இல்லாதபடி -ஈஸ்வரன் தம்மை அனுபவிக்கையாலே -மார்கண்டேயாதிகளைப்
போலே சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த  இவர்
ப்ராப்தமுமாய் –ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்

தாம் பகவத் விஷயத்திலே ப்ரவணராய் இருக்கிறாப் போலே
ரஜஸ் தமஸ்ஸு க்களால் பிறந்த அந்யதா ஞான விபரீத ஞானங்களாலே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
யுக கோடி சஹஸ்ரேஷு விஷ்ணும் ஆராத்ய பத்மபூஸ் புநஸ் த்ரைலோக்ய தாத்ர்வம்
ப்ராப்தவாநி தி சுஸ்ருமே -என்றும் –
வேதாமே பரமம் சஷூர் வேதாமே பரமம் தனம் -என்றும் –
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா -என்றும் –
ஏக ஏவ ருத்ரச -என்றும் –
ஹிரண்ய கர்பஸ் சம வர்த்ததாக்ரே -என்று

இத்யாதி ப்ரசம்சா வாக்யங்களாலும் -தாமஸ புராணங்களாலும் பரதவ புத்தியைப் பண்ணி –
சேதனர் பகவத் விமுகராய் அனர்த்தப் படுகிறதை கண்டு –பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே
நிர்தோஷ பிரமாணங்களாலும் சம்யன் நியாயங்களாலும் -பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் –பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப்  பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை  யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்துஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————

முதல் பாட்டு –
அவதாரிகை –
அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்
நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் -இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பத உரை

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி-சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்- ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள-சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்- நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள சப்த ஸ்பர்சங்கள்
இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும்-அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண —கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்–நீ நிற்கிற படியையும்
நின்னை -சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

பொழிப்புரை:
பூமியின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தும்,
நீரின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம் என்ற நான்கும்,
தீயின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம் என்ற மூன்றும்,
காற்றின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் என்ற இரண்டும்,
வானத்தின் குணமான சப்தம் என்ற ஒன்றும்,
ஆகிய எல்லா வகை குணங்களின் உள்ளிருந்து அவற்றின் பொதுத் தன்மையாய் நிற்கும்
உன்னை அறிய வல்லவர் யாரோ?

வியாக்யானம்-

பூநிலாயஐந்துமாய்
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான்
என் என்னில்
சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –
புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது

தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே -என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –

சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம்
இரண்டுமாய் -பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது

மீநிலாயதொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது
உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –

அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்
குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும்
சொல்லுவான் என் என்னில் -தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத -என்கிற
ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது
இவ்வளவாக பரகத  ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து

வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும்
ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால்
வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற

நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரி யான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை

நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை
ஆர் நினைக்க வல்லர்

நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –

————————————————————————————————-

இரண்டாம் பாட்டு -அவதாரிகை
சஹ யஜ்ஞ்ஞைஸ் பரஜாஸ் ஸ்ரஷ்ட்வா -என்கிறபடியே காரண பூதனான உன்னாலே
ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்
சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும் –அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித
போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க
வல்லர் -என்கிறார்-

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

பொழிப்புரை:

ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறப்பட்டுள்ள பல வஸ்துக்களைக் குறிப்பிட்டு
இந்த பாசுரம் அவற்றின் காரணகர்த்தா நாராயணனே என்று ஸ்தாபிக்கிறது .

ஆறு வகை நியமனங்களான (1) அத்யயனம் (2)அத்யாபனம் (3) யஜனம் (4) யாஜனம் (5) தானம் (6) பிரதிக்கிரஹம் ,
மற்றும் ஆறு வகை காலங்களான (1) வசந்தம் (2) கிரீஷ்மம் (3) வர்ஷம் (4) ஸரத் (5) ஹேமந்தம் (6) ஸிஸிரம் ,
மற்றும் ஆறுவகை யஞ்ஞங்களான (1) ஆக்ஞேயம் (2) அக்நீஷோமியம் (3) உபாம்சுஜாயம் (4) ஐந்த்ரம் ததி,
(5) ஐந்த்ரம் பய (6) ஐந்த்ரோஞ்ஞயம் என்றவாறு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாவையும் நீயாக இருக்கிறாய் .

ஐவகை ப்ரீதிவஸ்துக்களாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ள (1) தேவ (2) பித்ரு (3) பூத (4) மானுஷ்ய (5) பிரம்மம் ஆகியவைகளாயும் ,
மற்றும் மனித உடலினில் காணப்படும் ஐவகை வாயுக்களான (1) பிராண (2) அபான (3) வ்யான (4) உதான (5) சமான வாயுக்களாயும்
மற்றும் யாகங்களில் இருக்கவேண்டிய ஐவகை தீ ஜ்வாலைகளான (1) கார்ஹபத்யம் (2) ஆஹாவநீயம் (3) தக்ஷினாக்னி (4) ஸப்யம் (5) ஆவஸ்த்யம் என்ற இப் பொருள்களுக்கேல்லாம் உள்ளுறைபவனாக நீயே இருக்கின்றாய் .

சிறந்த குணங்களாக கூறப்பட்டுள்ள (1) இறையறிவு (2) விஷய வைராக்கியம் என்ற இரண்டையும் உன்னை அடையும்
உபாயமான (1) பர பக்தி (2) பரஞ்ஞான பக்தி (3) பரம பக்தி என்ற மூன்றையும் அளிப்பவனாக இருக்கிறாய் .

இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான
(1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம்
என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.

இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குனாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்
ஆகியவைகளையும் இவர்களது பேற்றின் பிரதி பலன்களாக
(1 & 2)பாவபுண்ணிய மின்மை, (3)சாவின்மை (4) துக்கமின்மை (5) பசியின்மை (6) தாகமின்மை (7) வேட்கையின்மை (8) தோல்வியின்மை
ஆகியவற்றையும் நீயே அளிக்கின்றாய்.

இவ்வகை பேற்றை பெற முடியாத யாவர்க்கும் நீயே பொய்ஞ் ஞானமாகவும் மெய்ஞ் ஞானமாகவும் விதவிதமாக அருளுகிறாய்.

இவ்வாறு கண்டு, கேட்டு, உற்று முகர்ந்தது, உண்டு அறியப்படும் எல்லாவித ரசங்களாகவும் இருக்கும் மாயனே நீ!

வியாக்யானம்
ஆறும் -அத்யயநாதி ஷட் கர்மங்களும்

முதல் ஆறு அந்தணர்களின் ஆறு கர்மங்கள்
அத்யயனம் தானே ஓதுதல்
அத்யாபனம் -ஓதுவித்தல்
யஜனம்-தான் வேள்வி செய்தல்
யாஜனம் -வேள்வி செய்வித்தல்
தானம் -தான் கொடுப்பது
ப்ரதிக்ரஹம் -பிறர் கொடுப்பதை தான் வாங்கி கொள்வது .
ஆறும் -அத்யயநத்தால் ஜ்ஞாதவ்யமான கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான வசந்தாதி ருதுக்கள் ஆறும்
ஆறுமாய் -அனுஷ்டேயமான ஆக்நேயாதி ஷட் யாகங்களும்

ஆக்நேயம் -அக்நி ஷோமேயம்-வுபாம்ஸு யாஜம் -ஐந்த்ரம் -இரண்டு ஐந்த்ராஞ்ஞம் –
இது சர்வ கர்மங்களுக்கும் உப லஷணம்
இவை ஆறு -என்றது -இவற்றோடு ஈஸ்வரனை சமாநாதிகரித்து –
அத்யயநாதிகளிலே -ததாமி புத்தியோதந்தம் -என்கிறபடியே சேதனரை மூட்டியும்
அவற்றுக்கு ஏக அங்கங்களான காலத்துக்கு நிர்வாஹனாகவும்
அனுஷ்டேய கர்மங்களுக்கு ஆராத்யானும் இருக்கையாலே சமாநாதிகரித்து சொல்லுகிறது

ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
கீழ் சொன்ன கர்மத்துக்கு அதிகார சம்பத்துக்கு உடலாய்
பிரதானமான பஞ்ச மஹா யஞ்ஞத்துக்கும் -பஞ்ச ஆஹூதிக்கும் ஆராத்யனாய் –
பஞ்ச அக்நிக்கும் அந்தராத்மாவாய் இருக்குமவன்
பஞ்ச மஹா யஞ்ஞம் ஆவது –

தேவ யஞ்ஞம் -பித்ரு யஞ்ஞாம் -பூத யஞ்ஞம் -மனுஷ்ய யஞ்ஞம் -ப்ரஹ்ம யஞ்ஞம் –என்கிறவை

பஞ்ச ஆஹூதிகள் -ஆவன ப்ராணாத்யாதி ஆஹூதிகள்-.பிராண அபான வ்யான வுதான சமான-
பஞ்ச அக்நிகள் ஆவன -கார்ஹ பத்யாஹவநீய தஷிண அக்நிகளும் சப்யாவசத்யங்களும்

-கார்கபத்யம் -ஆகவநீயம் –தஷிணாக்னி-சப்யம் -ஆவஸ்த்யம் –
ஏறு சீர் இரண்டும் –
தர்மேண பாபமப நுததி -என்னும்படியே -விஹித கர்ம அனுஷ்டானத்தாலே -மோஷ விரோதி பாபம் போனால்
இவன் பக்கலில் பிறக்கும் உபாசன ரூப பகவஜ்ஞ்ஞாநமும்
தத் கார்யமான இதர விஷய வைராக்யம் என்கிற இரண்டு -குணமும்
மாற்பால் மனம் சுழிக்கையும் -மங்கையர் தோள் கை விடுகையும்
மூன்றும் -உபாசன பலமான ஐஸ்வர்ய -கைவல்ய -பகவத் ப்ராப்திகள் –
அன்றிக்கே
ஜ்ஞான வைராக்ய சாத்யமான -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் மூன்றும் –
ஏழும்
உக்தமான கர்ம யோகாதி பரபக்தி பர்யந்தமான அளவுகளை பலிக்கக் கடவ மநோநை மல்யத்துக்கு
அடியான விவேகாதி சப்தகமும்
-அதாகிறது விவேக -விமோக -அப்யாச க்ரியா கல்யாணா நவசா தா நுத் தர்ஷங்கள்
அதாகிறது -மநோநை மல்ய ஹேதுவான விவேகாதி சப்தக உக்தமாகிய -க்ரியா சப்த
வாசியமான விஹித கர்ம அனுஷ்டானத்தாலே உபாசன நிஷ்பத்தியை சொல்லுகிறது

விவேகம் -கார்ய சுதி
விமோகம் -காமம் குரோதம் இல்லாமை
அப்யாசம்
க்ரியை
க்ல்யாணம்
அநவசதம் -சோக நிமித்தம் -மனஸை மழுங்காது இருப்பது
அனுதர்ஷம் -சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் பொங்காது இருப்பது
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மனசுக்கு இவை எல்லாம் தேவை

ஆறும்

உக்த பக்தி வர்த்தகமாய் ஸ்வயம் ப்ராப்யமான ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆறும்
எட்டுமாய் –
அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகமுமாய் -ஸ்வேன ரூபேண பி நிஷ்பத்யதே -என்கிறபடியே

அபகதபாப்மா -பாப சம்பந்தம் அற்று இருப்பவன்
விஜரக -கிழத் தன்மை அற்று நித்ய யுவாவாக இருப்பவன்
விம்ருத்யக -மரணம் அற்றவன்
விசோக -சோகம் அற்றவன் –
விஜிகத்சக -பசி அற்றவன்
அபிபாசாக -தாகம் அற்றவன் –
சத்ய காம
சத்ய சங்கல்ப
தம்மை தொழும் அடியாருக்கு தம்மையே ஒக்கும் அருள் தருவானே
இது ப்ராப்ய அந்தர்கதம் இறே

வேறு வேறு ஞாநமாகி
நிர்மல அந்தகரணர் அல்லாத பாக்ய ஹீநருக்கும் பாக்ய குத்ருஷ்டி ச்ம்ர்திகளுக்கும்ப்ரவர்தகனாய்-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு புறம் புக்க வாறும்-
மெய்யினோடு பொய்யுமாய்
கீழ் சொன்ன முமுஷுக்களுக்கு மெய்யனாய்
பிரயோஜனாந்த பரரான ஷூத்ரர்களுக்கு பிரயோஜனங்களைக் கொடுத்து தான் அகல
நிற்கையாலே பொய்யனாய்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புள் கொடி உடைய கோமான்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்

ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்

கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக்  கடவது இறே

ஆய மாயனே

கோப சஜாதீயனாய் அவதரித்த ஆச்சர்ய பூதனே -அதாவது
தான் நின்ற நிலையிலே நின்று ஆஸ்ரிதருக்கு உபகரிக்கை அன்றிக்கே
திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்து
உபாசகருக்கு சுபாஸ்ரயமாய் –
ஸித்த உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கு விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு தானே போக்யமாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்கும் பரம பக்தி உக்தருக்கு
சர்வவித போக்யமும்
ஆனவன் என்கை
அவதாரம் தான் சாது பரித்ராணத்துக்கும் தர்ம ஸம்ஸ்தாபநத்துக்கும் ஆக விறே

——————————————————————————————————

மூன்றாம் பாட்டு -அவதாரிகை –
முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன –
இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே –3-

பதம் பிரித்தது:
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவோடு ஆயுமாகி
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அந்தரத்தை அணைந்து நின்ற
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர காண வல்லரே?

வியாக்யானம்-
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும் -வாகாதி கர்ம
இந்த்ரியங்கள் ஐந்தும் ஆகி –

ஐந்தும் மூன்றும் –
ஆகாசாதி  பூதங்கள் ஐந்துக்கும் காரணமான தந் மாத்ரைகள் ஐந்தும்
ஒன்றுக்கு ஓன்று காரணமான அஹங்காரம் என்ன மஹான் என்ன சூஷ்ம மூல பிரகிருதி என்ன -இவை மூன்றும் –

ஒன்றுமாகி –
மன ஏவ -என்கிறபடியே உக்தமான சகல பதார்த்தங்களுக்கும் பந்த ஹேது வாகைக்கும்
மோஷ ஹேது வாகைக்கும் ஹேதுவான மனஸ் ஸூ மாய்

அல்லவற்றுள் ஆயமாய் –
இப்படி சதுர் விம்சதியாக விபக்தமான பிரக்ருதியிலே சம்ச்ர்ஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய்
அல்லவற்றுள் –
அசித் வ்யாவ்ர்த்தரான சேதனர் பக்கலிலே

நின்ற வாதி தேவனே –
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாய் நின்றாப் போலே -இவை அழிந்த காலத்திலும்
சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு நின்ற காரண பூதன் ஆனவனே

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –

இதுக்கு கீழே லீலா விபூதி யோகத்தை காட்டித் தந்த படியைச் சொன்னாராய் –
மேல் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நித்ய விபூதி யோகத்தையும் காட்டித் தந்த படியைச் சொல்லுகிறார்
அப்ராக்ருதமாய் பஞ்ச சக்தி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
தத் ஆஸ்ரயமான ஜ்ஞான இந்திரியங்கள் ஐந்தும்
கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
என்கிற இவற்றுக்கு நிர்வாஹனாய்
இத்தால் திவ்ய விக்ரஹ யோகம் சொல்லிற்று

யந்தரத்து யணைந்து நின்று ஐந்தும் ஐந்துமாய –
சப்தாதி போக்யங்கள் ஐந்தும் -போக ஸ்தானம் என்ன போக உபகரணம் என்ன –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியும் முத்தரும் என்று அஞ்சு கோடியுமாய்

யந்தரத்து யணைந்து நின்று-
பரம வ்யோம -என்றும்
பரமாகாசம் -என்றும்
ஸ்ருதி பிரசித்தமான பரம பதத்தில் பொருந்தி நின்று -இப்படி உபய விபூதி உக்தனான

நின்னை யாவர் காண வல்லரே
ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் ஆர் –
மனுஷ்யரில் காட்டில் ஞாநாதிகரான தேவர்கள் காணவோ
உபய பாவ நிஷ்டர் என்னா ப்ரஹ்மாதிகள் காணவோ
ப்ரஹ்ம பாவ நிஷ்டர் என்னா சநகாதிகள் காணவோ –

——————————————————————————————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4

“மூன்று முப்பதாறினோடு “..33 ஹல் எழ்த்து “மூன்று முப்பது “/.16 அச்சு எழுத்துகள்
“ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் /”ஐந்து ள்ள கராதி பஞ்சாட்ஷரம் ..

Threesome (3) + a score of trios (12 * 3) + triplet of penta (5 *3 ) gives a total of 3+36+15=54.
This number represents the 54 alphabets of Sanskrit Language
which consists of 33 consonants 16 vowels and 5 special letters (which do not belong to the other categories).

மூன்று மூர்த்தி யாகி நின்று –
ரிக் யஜுர் சாம வேத -வேத த்ரயம் ஸ்வரூபமாய்

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் –

த்வாதச அஷரீ பிரதிபாடனாய் -ஓம் நமோ பகவதே வாசுதேவ
தோன்று சோதி மூன்றுமாய்
இத்தை மூன்று தோன்று சோதியாய் -என்று கொண்டு –
மூன்று அஷரம் –பிரணவம் -அதில்
தோன்றும் ஜோதி

துளக்கமில் விளக்கமாய் –
அழிவு அற்ற விளக்காகிய -அ காரம் -ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்
ஒம்காரோ பகவான் விஷ்ணு -சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு
காரணம் அற்றவன் -அதனால்  துளக்கமில் விளக்கம் என்கிறார்

வெம் மீசனே-எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என்று -எனது காரியங்களை
நீயே ஏறிட்டுக் கொண்டு
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை

———————————————————————————————-

ஐந்தாம் பாட்டு -அவதாரிகை-

ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-

பதவுரை:

நின்று-ஸ்தாவரமாயும் –
இயங்கும் ஜங்கமமாயுமிருக்கிற –
ஒன்று அலா ருக்கள் தோறும்-பலவகையான சரீரங்கள் தோறும் –
ஆவி ஆய்-ஆத்மாவாய் –
ஒன்றி உள் கலந்து நின்ற-பொருந்தி பரிஸமாப்ய வர்த்தியா நின்ற –
நின்ன தன்மை இன்னது என்று-உன்னுடைய ஸ்வபாவம் இத்தகையதென்று –
என்றும்-எக்காலத்திலும் –
யார்க்கும்-எப்படிப்பட்ட ஞானிகட்கும் –
எண் இறந்த ஆதியாய்= சிந்திக்க முடியாதிருக்கிற ஆதி காரண பூதனனான எம்பெருமானே! (நீ) –
அன்று -முற்காலத்திலே
நின் உந்திவாய்-உனது திருநாபியில் –
நான் முகன்-சதுர்முகப்ரஹ்மாவை –
பயந்த-படைத்த –
ஆதிதேவன் அல்லையே-முழு முதற் கடவுளல்லையோர். –

வியாக்யானம் –
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும்
ஸ்தாவரமாய் நின்றும் -ஜங்கமமாய் சஞ்சரித்தும்
தம் தாமுடைய உஜ்ஜீவன பிரகாரங்களிலே ஒன்றுக்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கிற
சகல சரீரங்கள் தோறும்

ஆவியாய் ஒன்றி உள் கலந்து நின்ற –

ஆத்மாவாய் –எதிர்தலையில் ஹேயதையை பாராதே பொருந்தி -சமாப்ய உள் புகுந்து –
ஏக த்ரவ்யம் என்னும்படி கலந்து நிற்கிற

நின்ன தன்மை –
உன்னுடைய ஸ்வபாவம் -அதாகிறது தத்கத தோஷங்கள் தட்டாதே நிற்கையும்
விபுவான தான் இவற்றில் சமாப்ய வ்யாபரிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யம்

இன்னதென்று –

ஏவம் விதம் என்று -திருஷ்டாந்த முகத்தாலே உபபன்னம் என்று

என்றும் யார்க்கும் –
வர்த்தமான காலத்தோடு பவிஷ்ய காலத்தோடு வாசி யற அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும்

எண்ணிறந்த –
மநோ ரததுக்கும் அவ்வருகாய் நின்ற

வாதியாய் –
ப்ரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் ப்ரதானன் ஆனவனே

சாஷாத் கரிக்கும் போது -நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடியே விசேஷ்யமான தேவரீர்
பிரதானமாய் -சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும்
வ்யவஹாரத்தில் வந்தால் -வசசாம் வாச்யமுத்தமம் -என்கிறபடியே சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்

அன்று-நின்னுந்தி வாய்  நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –
இது கிடக்க -ஜகத் ஏக காரணனாய் நிற்கிற நிலை தான் ஒருவருக்கும் அறிய நிலமோ –
ஒன்றும் தேவில் -படியே தேவாதி சகல பதார்த்தங்களும் அழிந்து கிடந்த அன்று
உன்னுடைய திரு நாபீ கமலத்திலே -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்கிறபடியே
ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த ஜகத் ஏக காரணன் அல்லையோ
திரு நாபி கமல உத்பத்தியைப் பார்த்தால் ப்ராக்ர்தம் என்ன ஒண்ணாது
ஷேத்ரஞ்ஞனான ப்ரஹ்மாவுக்கு உத்பாதகம் ஆகையாலே அப்ராக்ருதம் என்ன ஒண்ணாது
இவ் வாச்சர்யத்தை ஏவம் விதம் என்று கர்மவச்யராய் பரிமித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகள் அறியவோ

நின்று இயங்கும் ஓன்று இல்லா உருக்கள் தோறும் –
வேதங்களும் மந்திர ரகஸ்யங்களும் இருக்க யாவர் காண வல்லரே
தேவரீர் எனக்கு காட்ட -அலகு அலகாக நான் கண்டது போலே ஒருவருக்கும் காண முடியாது என்கிறார்

———————————————————————————————-

ஆறாம் பாட்டு -அவதாரிகை –
சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று தாரகமாயும் தார்யமாயும் போருகிறது இல்லையோ என்று
பகவத் அபிப்ராயமாக
அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவஸ்திதம் அன்றோ
இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்து மேரு வெற்பை–சாஸ்திரங்களின் படி சுவர்க்கத்தை மேரு பர்வதம் தாங்கி நிற்பதாக கூறப்படுகிறது. இந்த மேரு பர்வதத்தையும் …
நாகம் ஏந்து மண்ணினை–வடமொழியில் “நாஹா” என்பது யானையும் குறிக்குமாம். எனவே திக்கஜங்களால் தாங்கப்படுகின்ற இந்த பூமியையும் …
நாகம் ஏந்தும் ஆகம் ஆகி -திருவனதாழ்வானால் தரிக்கப்படும் திருமேனியை உடையவனே –
மற்றொரு நிர்வாஹம்
நாகமேந்தும் மாகம் ஆகி–மாகம் – பெரிய வீடு (அகம்) – கம் – சுகம் – அ கம் துக்கம் –
ந அகம் – தூக்கமற்ற -நாகமேந்தும் மாகம் – துக்கமற்ற வைகுந்தத்தையும் …
மாகம் ஏந்தும் வார்ப்புனல்–விண்ணிலிருந்து பாய்ந்து வரும் கங்கை நதியையும் …
மாகம் ஏந்தும் அல்குல்–விண்ணினால் தாங்கப்படும் மேகங்களையும் —
தீ ஓர்–வைச்வாராக்நியையும்
வாயு ஐந்தும்–ஐவகை காற்றுக்களையும் –பிராண அபான வியான உதான சமான –
அமைந்து காத்து–உருவாக்கி போஷித்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை–ஓராளாய் தாங்கி நிற்கும் உன் தன்மை..
நின்கணே இயன்றதே–உன் பக்கலிலேயே உள்ளது.

வியாக்யானம் –

நாகம் ஏந்து மேரு வெற்பை –
ஸ்வர்க்கத்தை தரிக்கிற மேரு வாகிற பர்வதத்தை -மேருவுக்கு ஸ்வர்க்க ஆதாரத்வம்
மேரு சிகரத்தில் தேஜோ த்வாரத்தாலே –

நாகம் ஏந்து மண்ணினை –
திக் கஜங்களால் தரிக்கப் படும் பூமி என்னுதல்
பாதாள கதனாய் இருந்துள்ள திருவநந்த வாழ்வானாலே தரிக்கப் படுகிற பூமி என்னுதல்

நாகம் ஏந்து மாகம் –
துக்க கந்த ரஹிதமான சுகத்தாலே பூரணமான பரம வ்யோமம்
ஏந்தல் –என்று தேங்கலாய் ஆநந்த நிர்பரமான தேசம் என்கை
நாகம் –என்றது துக்க கந்த ரஹிதமான  சுகத்துக்கு வாசகமாம் படி என் என்னில் –
கம் =சுகம் –அகம் =-துக்கம் நாகம் -துக்க ரஹிதம் இத்யர்த்தம் –
நாகமேந்தும் ஆக -திருவநந்த வாழ்வானாலே தரிக்கப்பட்ட திருமேனியை உடையவனே

இத்தால் கீழ் சொன்ன தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன என்றது ஆய்த்து

மாகம் ஏந்து வார் புனல் –
பரமபதம் என்ன -ஆகாசத்திலே தரிக்கப் படுகிற ப்ரவாஹ ரூபமான கங்கை என்ன இவையும் –

மாகம் ஏந்து மங்குல் –
ஆகாசம் தரிக்கிற மேகத்தையும்

தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்தும் –
வைஸ்வானர அக்நியையும் -பஞ்ச வ்ர்த்தி பிராணன் களையும் ரஷண தர்மத்திலே
சமைந்து நின்று ரஷித்து
ஒய் வாயு ஐந்து அமைந்து காத்தும் –-என்று பாடமான போது
தசதா விபக்தமான வாயுவைச் சொல்லுகிறது
மேகோ  தயஸ் ஸாகர சந்நிவ்ர்த்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
நிராலம்பனமான ஆகாசத்தில் சஞ்சரிக்கிற சகல பதார்த்தமும் ஈஸ்வர சங்கல்ப்பத்தாலே
சஞ்சரிப்பதாக சொல்லிற்று ஆய்த்து
யதாகாகச்தி தோ நித்யம் -இத்யாதி

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை –
ஒரு வஸ்து தரிக்கின்றது என்று ஸ்ருதி சொல்லுகிற ஸ்வபாவம்
நின் கணேயியன்றதே —
தேவரீர் பக்கலிலே வர்த்திக்கிறது
இயத்தல் -நடத்தலும் வளர்த்தலும்

யாவர் காண வல்லர் என்று கீழோடு அந்வயம்
இஸ் சர்வ ஆதாரத்வத்தை தேவரீர் காட்ட நான் கண்டாப் போலே வேறு காண வல்லார் ஆர் என்கிறார்

அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்

—————————————————————————————-

ஏழாம் பாட்டு -அவதாரிகை –
நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது
ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்
அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

வியாக்யானம்
ஓன்று இரண்டு மூர்த்தியாய்
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய்
ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா –
உறக்கமோடு உணர்ச்சியாய் –
ஜ்ஞான அஞ்ஞானங்களுக்கு நிர்வாஹனாய் –
அநாதி மாயயா ஸூப்தச் -என்கிறபடியே உறங்கினார் கணக்காய் விழுகையாலே
உறக்கத்தை அஜ்ஞ்ஞானம் என்கிறது

அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் உறக்கம் போலே தானே
இத்தால் மூன்றும் ஏகாத்மாதிஷ்டிதம் என்றும் -அநேகாத்மா திஷ்டிதம் என்றும் –
அந்யோந்யம் சமர் என்றும் அஜ்ஞ்ஞானத்துக்கும் -மத்யஸ்தன் ரஷகன் -ப்ரஹ்ம ருத்ராதிகள்
ரஷ்ய பூதர் என்கிற யாதாத்ம்யஜ்ஞானத்துக்கும் நிர்வாஹனாய் – என்கை

ஓன்று இரண்டு காலமாகி –
ஞான ஹேதுவான சத்வோத்தர காலத்துக்கும்
அந்யதா ஞான விபரீத ஜ்ஞானங்களுக்கு ஹேதுவான ரஜஸ் தமோத்ரிக்த கால
த்வ்யத்துக்கும் நிர்வாஹகனாய் -த்ரேதாயாம் ஜ்ஞானமுச்யதே -கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் -என்னக் கடவது இறே

வேலை ஞாலமாயினாய் –
கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகனாய் -யாதாவஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு
ஆவாஸஸ்தானமான கர்ம விபூதிக்கு நிர்வாஹகனாய்
அய்ந்து நவமஸ் தேஷாம் தீவபஸ் ஸாகர சம்வர்த்த -என்கிறபடியே
.

ஓன்று இரண்டு தீயுமாகி
ஆகவநீயம் -கார்தபத்யம் தஷிணாக்நி -என்ற மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹகனாய்

ஆயனாய மாயனே –
கோபால சஜாதீயனாய் அவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் -என்கிறார்

—————————————————————————————–

எட்டாம் பாட்டு -அவதாரிகை
ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

ஆதியான வானவர்க்கும்
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் சப்த ரிஷிகள் த்வாதச ஆதித்யர்கள்
ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள் ருத்ரன் அக்நி
யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்
நித்ய சூரிகள்

அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற
ஜகத் காரண பூதரான நித்ய சூரிகளுக்கும் -அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே
நித்ய சூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இ றே
அதவா
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ -என்றும்

யத்ரர்ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா -என்றும் சொல்லுகிற ஆதி தேவர்கள் என்றுமாம்

ஆதியான வாதி நீ –
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –

இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி –
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய்

இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது –
ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற
ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய்

நீ உரைத்தி – என்கிறது
சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே
ஆதியான கால நின்னை
ஆதி காலம் ஆன நின்னை -என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை

கார்ய ரூபமான ஜகத்தடைய சக்த்ய வஸ்த ப்ரபை போலே லீநமாய்
சதேவ சோம்யே தமக்ரே -என்கிறபடியே ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை
யாவர் காண வல்லரே -என்கிறார்

தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்

—————————————————————————————

ஒன்பதாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான
ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான சாத்விக ஜனங்களும் உன்னையே
ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

வியாக்யானம் –
தாதுலாவித்யாதி –
தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்
கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் –
தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை
உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –
இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது

நீதியால் வணங்கு பாத –
தேவரீரை ஐஸ்வர்ய விசிஷ்டனாக ஆஸ்ரயிக்க சொல்லுகிற வேதோக்த ப்ரகாரத்தாலே
அவன் உபாசிக்கிற திருவடிகளை உடையவனே

நின்மலா –
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்கிறது -ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மானி
ஆஸ்ரயித்தான் என்று -இத் தோஷங்களை நினையாதே -நம் பக்கலிலே சாபேஷனாய்
வந்தான் என்கிற குணத்தையே நினைத்து -அநந்ய பிரயோஜநருக்கு முகம் கொடுக்குமா
போலே முகம் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இப்படி விஷயீ கரித்து அவனுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ஏது என்னில்
மஹா தேவஸ் சர்வ மேதே மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ –
என்கிறபடியே தேவ தேவத்வத்தை கொடுத்தவனே –
இது பிரயோஜநாந்தர பரர் எல்லாருக்கும் உப லஷணம்

நிலாயா சீர் –
வர்த்திக்கிற குணங்கள் –
அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்மகுணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை
அங்கன் அன்றியே –
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ
நிர் தோஷத்வங்களாலே  -காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண
குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர்
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்

கீத வேள்வி –
அந்த வேதார்த்த அனுஷ்டானமாய் சாம கான பிரதானமான யாகங்களிலே ப்ரவர்த்தர் ஆனவர்கள்
அதாவது -ஆத்ம யாதாம்ய ஞான பூர்வகமாக த்ரிவித பரித்யாக உக்தராய் பகவத் சமாராதான
புத்தியாலே அனுஷ்டிக்கும் யஞ்ஞங்கள்

நீதியான கேள்வியார் –க்ரமப்படி ஸ்ரவண மனனங்களை செய்பவர்கள் –
உக்தமான வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகைக்கும் தத் கார்யமான கர்ம யோகாத்யா
அனுஷ்டானங்களுக்கும் அடியான கேள்வியை உடையவர்கள் –
நீதியான கேள்வி யாகிறது -ப்ரீஷ்ய லோகான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நிர் வேதா வ்ர்த்தி பிறந்து ப்ரஹ்ம நிஷ்டரான ஆசார்யன் பக்கலில் உபசன்னராய்
ச்ரோதவ்யோ மந்தவ்ய -என்கிறபடியே சரவண மனனங்களை பண்ணுகை

நீதியால் வணங்குகின்ற நீர்மை –
நிதித்யாஸிதவ்ய -என்கிறபடியே கர்ம அங்கமான அநவரத பாவனை பண்ணுகைக்கு
உபாச்யனாய் நிற்கிற ஸ்வபாவம்

நின் கண் நின்றதே –
உன் பக்கலிலே வர்த்திக்கிறது இத்தனை –
அவதாரணத்தாலே வேறு ஆஸ்ரயணீயர் இல்லை -என்கிறார்

—————————————————————————————-

பத்தாம் பாட்டு -அவதாரிகை –
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே –
காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது
என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

வியாக்யானம் –
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி –
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிஷித்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்
தன்னுளே
-என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும்
-ஸ்வரூப அந்தர்பூதம் என்கை –

திரைத்து எழும் தரங்கம் –
நிஸ்தரங்க ஜலதி யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள
திரைகளை உடைத்தாகை –
த்ருஷ்டாந்திகத்திலே வாயு ஸ்தாநீய பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே
பிறந்த குண வைஷம்யம்

வெண் தடம் கடல் –
சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் –

இது மேலே –நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம்

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் –
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து
உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று –
கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான
காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே
கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -இது எத்தாலே அறிவது என்னில் –
ந கர்மா விபாகாத் -என்கிற ஸூத்ரத்தாலே
சதேவ -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே
கர்மம் இல்லை என்று பூர்வ பஷித்து -ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ –என்றும்
நித்யோ நித்யாநாம் -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம்
உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே
சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே
திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று –

யதா சோம்யை கேந  ம்ர்த்பிண்டேந -என்று உபநிஷத்து
கடகமகுட கர்ணிகாதி பேதைஸ் -என்று ஸ்ரீ பராசுர பகவான்
இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் –
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் –
ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே
அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே –
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: