திருப்பல்லாண்டு -3–வாழாட் பட்டு உள்ளீரேல்—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்
இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள்
மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து -அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் -ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம்
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

வாழ் ஆள்-கைங்கர்ய ரூபமான போகத்துக்கு
பட்டு -பொருந்தி
உள்ளீரேல்  -இருப்பீர்கள் ஆனால்
வந்து -விரைவாக வந்து
மண்ணும் -திரு முளைத் திரு நாளுக்குப் புழுதி மண் சுமக்கையும்
மணமும்  -அந்தக் கல்யாணத்துக்கு அபிமாநியாய் இருக்கையும்
கொண்மின் -நீங்கள் ச்வீகரியும் கோள்
கூழ் -சோற்றுக்காக
ஆள் பட்டு -அடிமை ஓலை எழுதிக் கொடுத்து
நின்றீர்களை -கண்ட இடம் எங்கும் நிற்கிற உங்களை
எங்கள் குழுவினில் -அநந்ய ப்ரயோஜனரான எங்கள் திரளிலே
புகுதல் ஓட்டோம் -சேர ஓட்டோம்
உங்கள் திரளுக்கு வாசி என் என்ன –
ஏழாட் காலும்-முன் ஏழ் பின் ஏழ் நடு ஏழ் ஆகிய இருப்பதொரு தலைமுறையிலும்
பழிப்பிலோம் -ப்ரயோஜன பரர் என்றும் -சாதனாந்த பரர் என்றும் -பழிக்கப் படாதவர்கள் என்ன
நாங்கள்
அது உங்கள் தொழில் கண்டு அறிய வேணும் என்ன
இராக்கதர் வாழ் -இராட்ஷசர் வர்த்திக்கிற
இலங்கை -இலங்கையானது
பாழாளாகப் -ஆள் பாழாம் படியாக
படை -யுத்தத்திலே
பொருதானுக்கு-அன்று எதிரிகள் அம்பு மார்விலே தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே -இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணிப் போருவோம்
சிலர் நாங்கள் என்கிறார் –

வியாக்யானம்-

வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இ றே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -என்பது-
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-

நின்றீர்-
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –

உள்ளீரேல்-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்
தேட்டமாய் இ றே இருப்பது –
இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது
மண்ணும் மணமும் கொண்மின் -என்கிறார் –
மண்ணுக்கும் மணத்துக்கும் உரியார் அந்தரங்கரான அடியார் இ றே
அடிமை விலையோலை எழுதும் பொழுதும் -மண்ணுக்கும் மணத்துக்கும் உரியனாக வேணும்
என்று இ றே எழுதுவது –
மண்ணாவது -ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால் அங்குரார்ப் பணத்துக்கு புழுதி மண் சுமக்கை
அந்த ந்யாயத்தாலே இ றே நம் ஆழ்வார்களுக்கு அது க்ர்த்யம் ஆகிறது
மணமாவது -அந்த கல்யாணத்துக்கு தான் அபிமாநியாய் இருக்கை
இவ்விரண்டும் சர்வ கைங்கர்யத்துக்கும் உப லஷணம்
கொண்மின் -என்ற இடத்தால் -வாங்குமின் என்னாது கொள்மின் என்றது –
அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானை கண்டேறுகை-ஸ்வ தந்த்ரனாகை -யன்றிக்கே  சிலர் தரக் கொள்ள
வேணும் யென்கையும் -தருமவர்களும் -உங்களதான அடிமையை நீங்கள் ச்வீகரியும் கோள்
என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர்கள் யென்கையும் ஆகிற சாஸ்த்ரார்த்தையும் வெளியிடுகிறது

கூழ் ஆள் இத்யாதி-
இவர் அழைத்த வாசி அறியாதே பிரயோஜனாந்தபரர் அடையப் புகுர தொடங்கிற்று –
அவர்களை நிஷேதிக்கிறார் –கூழ் ஆள் -என்று சோற்றுக்காக யாரேனுக்கும் தன்னை
எழுதிக் கொடுக்கை -இது பிரயோஜனாந்த பரருக்கும் உப லஷணம் -தன்னை பகவத் தாஸ்ய
ஏக போகன் -என்னுமிடம் அறியாதே பிரயோஜனாந்தரங்களைக் குறித்து அவன் தன்னையே
ஆஸ்ரயிக்கிறார்கள் இ றே –
கூழ் ஆள் -என்று அநந்ய பிரயோஜனராய் இழிந்து பிரயோஜநாந்தரங்களை வேண்டிக் கொள்ளும்
இரு கரையரைச் சொல்லுகிறது -என்றுமாம் –
பட்டு -என்றது
அகப்பட்டேன்  -என்றபடி –
அதாவது பந்தகம் ஆகையாலே -ஸ்வரூப விரோதியாய் அனர்த்தததை பண்ணும் என்னுமத்தாலே சொல்லுகிறது –
நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த
இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

எங்கள் குழு -என்று
இத் திரளுக்கு உண்டான வ்யாவ்ர்த்தி தோற்ற அருளிச் செய்கிறார் –
தேகாத்ம அபிமாநிகள் -தேவதாந்திர ப்ரவணர் -இவ்விஷயம் தன்னிலே புகுந்து
பிரயோஜநாந்தரங்களை அபேஷிப்பார் -அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தரங்களிலே
அநந்ய பரராய் இருப்பார் ஆகிற திரள்கள் எல்லாவற்றிலும் வ்யாவர்த்தமாய் அன்றோ
எங்கள் திரள் இருப்பது என்கிறார் –
புகுதல் ஓட்டோம் –
ஆரே புகுவார் -என்று ப்ரார்த்திக்கிற இவர் -நிர்த்தயரைப் போலே புகுதல் ஒட்டோம்
என்பான் என் என்னில் -வசிஷ்டன் பரம தயாளன் ஆனாலும் சண்டாளனை அக்நி
கார்யத்திலே கூட்டிக் கொள்ளான் இ றே
இத்தால் அநந்ய பிரயோஜனருக்கு பிரயோஜன பரரோட்டை சஹ வாஸம் அசஹ்யமாய்
இருக்கும் என்றது ஆய்த்து
எங்கள் திரளில் காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என் என்னில் –
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது

தசபூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது
பழிப்பிலோம் –
விஷயாந்தர ப்ராவண்யம் என்ன -தேவதா ந்தர பஜனம் என்ன -இவை தூரதோ நிரச்தம்
ஆகையாலே பதர் கூட்டித் தூற்ற வேண்டா
இனி அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருப்பாருக்கு பழிப்பு ஆவது
பிரயோஜனாந்தர பரதையும் சாதநாந்தர பரதையும் இ றே
அவற்றை உடையோம் அல்லோம் என்கிறார்
நாங்கள்
எங்கள் குழுவு -என்ற போதை செருக்குப் போலே பகவத் விஷயீ காரத்தால் வந்த செருக்கு
தோற்ற சொல்லுகிறார் –
உங்கள் ஸ்வரூபம் நீங்கள் சொன்ன அளவில் விஸ்வசித்து இருக்குமத்தனை யளவு
யடியோம் அல்லோம் -உங்கள் வ்ர்த்தி விசேஷத்தைக் கொண்டு உங்களை அறிய வேணும் என்ன –
அது நீங்கள் அறியும் புடை யல்ல -எங்கனே என்னில் -ஒரு கார்யப்பாடாக உள்ள அமங்களங்கள்
போக மங்களா சாசனம் பண்ணும்படி யாதல் -இல்லாத மங்களங்கள் உண்டாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணுதல் செய்யும் அளவு இ றே நீங்கள் அறிவது -முன்பு வ்ய்ர்த்தமாய்
கழிந்த செயலுக்கு இன்று இருந்து வயிறு பிடிக்கும் திரள் காண் எங்களது
இராக்கதர் வாழ் இலங்கை –
துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்
புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும்
மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
இலங்கை தான் விபீஷண விதேயம்  இ றே -இலங்கை பாழ் ஆக என்னாதே –இலங்கை ஆள் பாழ் ஆக என்றது –
இனி ந நமேயம் என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்கு துணையான ராஷசரையும்
அழியச் செய்து -ஸ்ம ஸா ந சத்ரு ஸீ பவேத் -என்று பிராட்டி அருளிச் செய்த படியே
அவ் ஊரை மூலையடியே போம் படி பண்ணினான்
படை பொருதானுக்கு –
இப்படி செய்தது ஈஸ்வரத் பெடாரான சங்கல்ப்பத்தால் அன்றிக்கே எதிரிகள் அம்பு மார்விலே
தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே
அப்போதை கையும் வில்லுமாய் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வியாபாரிக்கும் போதை
ஆகர்ஷகமான வடவு அழகுக்கு மங்களா சாசனம் பண்ணிப் போருவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார்

ராகவார்த்தே பராக்ராந்தாந ப்ரானே குருதே தயாம் -என்கிறபடியே அக்காலத்தில்
முதலிகளுக்கு அம்புக்கு இறாய்க்கப் பணி போருகையாலே அக்காலத்திலே
மங்களா சாசனம் பண்ணுவாரைப் பெற்றது இல்லை -பிராட்டி பிரிந்த போதே நம்
குடி இருப்பு பெற்றோம் என்ற ப்ரீதியாலே பிரமாதிகள் அந்ய பரர் ஆனார்கள் –
அக்காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: