71 -பாட்டு –அவதாரிகை –
பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு
ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து
க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்
க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்
ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ -என்கிறார் –
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-
வியாக்யானம் –
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் –
வண்டு மாறாத மாலையாலே அலங்க்ர்தையான உஷை நிமித்தமாக –
ஸ்வப்ன த்ர்ஷ்டனான அநிருத்தனை சித்ரலேகை கொண்டு வரக் கூடும் என்று
அவள் வரவு பார்த்து செவ்விப் பூவாலே ஒப்பித்து இருந்தபடியைச் சொல்கிறது
வெகுண்டு இண்ட வாணன் –
எதிர்தலை சர்வேஸ்வரன் என்று பாராதே யுத்த க்ருத்தனாய் மேல் விழுந்த பாணன்
வெகுளி -கோபம்
இண்டல் -நெருங்குதல்
பிதரம் மாதரம் தாரான் -என்று ரக்த ஸ்பர்சங்களை விட்டுப் பற்ற வேண்டும் விஷயத்தில்
உஷை நிமித்தமாக பகைக்கிறான் இ றே துஷ் ப்ரக்ர்தை யாகை யாலே
காந்தர்வ பஷத்தாலே சம்ச்லேஷம் பிறந்த பின்பு க்ர்ஷ்ணன் உடன் சம்பந்தி யாய்க் கொண்டு
ப்ரீதமாக ப்ராப்தமாய் இருக்க -தன பாஹூ பலத்தாலே வந்த துர்மாநத்தாலே
சீறி அந்தரப்பட்டான் என்கை
ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள் –
இவன் எதிர் இடுகைக்கு ஹேது பஹூ பலம் ஆகையாலே பஹூ வனத்தை சேதித்த வன்று –
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட கண்டு நாணி –
ரஷிக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணினவன் செய்தது என் என்னில் –
பாணனை க்ருஷ்ணன் கையிலே காட்டிக் கொடுத்து ப்ரதானனான தன்னோடு
பரிகரத்தோடு வாசியற முது காட்டி ஓடின இத்தனை –
முண்டன் நீறன் –
முண்டிதனாய் பச்மச்சன்ன சரீரமான ருத்ரன் -இத்தால்-
க்ருஷ்ணனைக் குறித்து தன் அபிமத சித்தியைக் குறித்து சாதகனான அவன்
தன்னளவும் பாராதே -எதிர் தலையும் பாராதே -சாதக வேஷத்தோடு துர்மானம்
கொண்டாடின படி –
தேவ சேநாதிபதியான சுப்ரஹமண்யன் முதலான புத்ரர்கள்
ஜ்வரம் மோடி -பிடரி -49 அக்நிக்கும் கூடஸ்தனான அக்நி இவர்களோடு
தன்னோடு வாசியற முதுகிட்டு போகக் கண்டு லஜ்ஜித்து
மோடி -காளிகள் என்றுமாம்
லஜ்ஜிக்கையாவது -யுத்தோன் முகனாய் தான் படுதல் -எதிர் தலையை ஜயித்தல்
செய்ய ப்ராப்தமாய் இருக்க முதுகிடுகையாலே தரம் போராத இவற்றின் மேலே
யாகாதே நாம் சீறிற்று என்று லஜ்ஜிக்கை
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய -என்கிறபடியே ஆஸ்ரிதனை ப்ராணாவதியாக
ரஷிக்க ப்ராப்தமாய் இருக்க -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று
லஜ்ஜித்து என்னவுமாம்
வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இப்படிப்பட்ட ருத்ரனை தனக்கு தஞ்சமாக நினைத்து இருக்கையாலே
தய நீயனான பாணனுக்கு -ஆபத்தே ஹேதுவாக க்ர்பை பண்ணி -இரண்டு தோள்களைக்
கொடுத்து ரஷித்தான் -என் ஆயனான க்ருஷ்ணன் அல்லனோ -இத்தால்
தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து
கர்பயா பர்ய பாலயத் –
———————————————————————————–
72-பாட்டு –அவதாரிகை-
ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்
ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்
நிர்தோஷ ஸ்ருதியில் அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக
பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார் –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72
வியாக்யானம்-
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி-
தாமரையில் பிறப்பை உடைய பிராட்டியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் மகிஷிகள் –
ஹ்ரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் -பத்மேஸ்திதாம் பத்ம வர்ணாம் -என்றும்
சொல்லக் கடவது இ றே
அன்றியே –
ஸ்ரீ ய பதித்வமே போரும் சர்வாதிகன் சர்வ சமாஸ்ரயணீயன் என்கைக்கு –
ஸ்ரீ ய பதித்வத்துக்கு மேல் எல்லை இல்லை இ றே
யன்றியும் –
அதுக்கு மேலும் –
போது தங்கு நான்முகன் மகன்-
திரு நாபீ கமலத்திலே பிறக்கையாலே -கமலாஸநனான சதுர்முகன் புத்திரன்
அஜச்ய நா பாவத் யே கமர்ப்பிதம் யஸ்மின் நிதம் விச்வம் புவன மதிச் ரிதம்
ஸ ப்ரஜாபதி ரேக புஷ்கர பர்னேஸம பவத் -என்னக் கடவது இ றே
அவன் மகன் சொல்லில் மாது தங்கு கூறன் ஏறு அது ஊர்தி –
ஏக ஏவ ருத்ர சர்வோஹ் ஏஷ ருத்ர -என்கிற ப்ரசம்சா வாக்யங்களையும்
ஆகமாதி தந்த்ரங்களையும் ஒழிய -அவன் ஸ்வரூபத்தை உள்ளபடியே –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய -இத்யாதி நிர்தோஷ சுருதி ப்ரக்ரியையாலே
சொல்லப் பார்க்கில் அவன் ப்ரஹ்ம புத்ரன் –
மாது தங்கு கூறன் -என்கிறது
ப்ரஹ்மாவினுடைய மானஸ ஸ்ர்ஷ்டி ஒழிய யோஷித் புருஷ சம்யோகத்தாலே
பிறக்கும் ஸ்ர்ஷ்டிக்கு ப்ரதம கண்யன் என்று இவனுடைய ஷேத்ரஞ்ஞத்வம்
தோற்றுகைக்காக
ப்ருகுடீ குடிலா தஸ்ய லலாடாத் க்ரோத தீபிதாத்
சமுத்பன்னஸ் ததா ருத்ரோ மத்யாஹ் நார்க்க சம ப்ரப
அர்த்த நாரீ நரவபு பிரசண்டோதி சரீர வான் -என்று
ப்ரஹ்மாவினுடைய ஸ்ர்ஷ்டி பிரகரணத்திலே சொல்லக் கடவது இ றே
ஏறு அது ஊர்தி -என்று
வேதமயனான பெரிய திருவடிக்கு எதிராக ரிஷபத்தை வாகனமாகக் கொண்டு இருக்கிற
துர்மானம் தோற்றுகைகாக
என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை –
ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன்
ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று
வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்
யல்லது இல்லை மற்றுரைக்கிலே —
அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –
ஸூபர்ண வைகுண்ட சம்வாதே –
யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே
ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம்
சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –
———————————————————————————
73 -பாட்டு –அவதாரிகை –
ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் –
இதில் –
அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை
தாழ விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே
ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு மோஷ ப்ரதன் என்று கொண்டு –
தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-
வியாக்யானம் –
மரம் பொதச் சரம் துரந்து –
மகாராஜர் உடைய விஸ்வாச அர்த்தமாக மராமரங்களை மாறுபாடுருவ திருச் சரத்தை ஏவி
இத்தால் -தன்னுடைய ரஷணத்தில் அதிசங்கை பண்ணினாருக்கும் அவ்வதி சங்கையைத்
தீர்த்து -தன் பக்கலில் விஸ்வாசத்தை பிறப்பித்து -ரஷிக்கும் சீலவான்-என்கை
வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரம் துரந்த –
ராவணனை வாலிலே கட்டிக் கொண்டு திரியும் பெரு மிடுக்கனான வாலியை –
முன் போன சதுர் யுகங்களிலே ஒரு த்ரேதா யுகத்திலே இவன் தறைப் படும்படியாக
மராமரங்களையும் -திண்ணிய அவன் மார்வு மாறுபாடுருவும்படி அம்பை விட்டு –
அதிகாரிகளுமாய் -நிவர்த்த விரோதருமாய் இருக்குமவர்களுக்கு ஸ்வரூப
அநுரூபமான அபிமதத்தை கொடுக்கை யன்றிக்கே
தத் விரோதியான -அவித்யாதி ப்ரபல விரோதிகளையும் போக்கி
அதுக்கு அடியான அதிகாரத்தையும் கொடுக்கும் சீலவான் என்கைக்கு உதாஹரணம் இது
என்கை –
வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அபிமத பிரதானத்திலும் அசக்தர் என்றது இ றே
ப்ரஹ்மாதிகளை
வும்பர் ஆளி –
நித்ய சூரிகளை அடிமை கொள்ளுகிறவன் கிடீர் தாழ்ந்தாருக்கு இப்படி உபகரிக்கிறான் -என்கை
ரஷணத்திலே அதி சங்கை பண்ணினவனுடைய அதி சங்கையை தீர்த்து
அவன் விரோதியைப் போக்கின அந்த சீலம் அறிய வுரியார் நித்யசூரிகள் இ றே
எம்பிரான் –
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன்
அதவா
உம்பராளி எம்பிரான் -என்று
அச் செயலாலே பிரயோஜநாந்த பரரான தேவர்களையும் –
அநந்ய பிரயோஜனரான அஸ்மாத்தாதிகளையும் எழுதிக் கொண்டவன் என்றுமாம்
உரம் பொதச் சரம் துரந்த –எம்பிரான் -என்று முன்பு மகாரஜருக்கு உதவினதும் தமக்கு
உதவிற்றாக நினைத்து இருக்கிறார் –
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது –
இப்படிப்பட்ட தசரதாத்மஜநுடைய ஸ்ரேஷ்டமான திரு உள்ளத்தாலே விஷயீ கரிக்கப்பட்ட
வர்களுக்கு அல்லது -ஸ்ரேஷ்டம் ஆகையாவது பர ஸம்ர்த்த்யேக பிரயோஜனமாய் இருக்கை –
வானம் ஆளிலும் –
ஜ்ஞாநாதிகராய் -சதுர்தச புவநன்களுக்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாக இருந்தாலும்
நிரம்பு நீடு போகம் –
குறைவற்று -நித்தியமான போகம்
அதாவது -பரம பக்தி க்ர்தமாய் -பரிபூரணமாய் -விசத தமமான-நித்ய அநுபவம் –
எத்திறத்தும் யார்க்கும் இல்லையே —
அநந்ய பிரயோஜனர்க்கும் இல்லை –
கர்மாதி உபாயங்களை அனுஷ்டிக்கவுமாம் -சித்த உபாய பரிக்ரஹம் பண்ணவுமாம்
அவன் பிரசாதம் ஒழிய மோஷ சித்தி இல்லை-
ஜ்ஞாநாதிகராய் அநந்ய ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அகிஞ்சநராய் அநந்ய ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அவன் ப்ரசாதமே மோஷ சாதனம் என்கை –
விரோதி நிரசந சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை
ப்ராபிக்க விரகு இல்லை என்றது ஆய்த்து –
———————————————————————————————-
74 -பாட்டு –அவதாரிகை –
ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு
பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் –
ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில் தலை சாய்த்தல் –
ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே
புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-
வியாக்யானம் –
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்-
தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –
ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து -அத்திருவடிகளில்
ந்யஸ்தபரன் ஆதல் –
வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை
வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –
அறிந்து அறிந்து -என்று
சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் -என்றுமாம் –
இது -அன்று பாரளந்த பாத போதை யொன்றி -என்று கீழ்ச் சொன்னதினுடைய விவரணம் –
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் –
ப்ரத்யக் ப்ரவணமாய் -சாஷாத்கார பர்யந்தமான சர்வேஸ்வரனுக்கே அனந்யார்ஹ
சேஷபூதன் -இவ்வாத்மா என்கிற ஜ்ஞானமும் –
அது அடியாக கைங்கர்ய உபகரணமான பக்தியும் குறைவற உண்டாம் –
சிறப்பு -மிகுதி
அது கைங்கர்யத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் உப லஷணம்
நிர்தோஷனுக்கு இ றே கைங்கர்ய உபகரணமான பக்தி உண்டாவது –
ப்ரீதி காரிதம் இ றே கைங்கர்யம் –
தனமாய தானே கைகூடும் -என்று வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யம் பக்தி யாகையாலே
அந்த பக்தியை இங்கு –செல்வம் -என்கிறது –
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் –
பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம்
பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால் -மறிதல் -விரிதல்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் –
பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய் மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை
பான்மையே —
அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை
இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –
———————————————————————————————
75 -பாட்டு –அவதாரிகை –
இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன
பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய –
உபாயாந்தரஙககளிலே இழிந்து ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் –
மேல் ஏழு பாட்டுக்களாலே –
இதில் முதல் பாட்டில் –
கர்ம யோகமே தொடங்கி -பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-
வியாக்யானம் –
ஒன்றி நின்று –
சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும்
மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –
அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –
நல் தவம் செய்து-
தபஸ் என்று -யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் –
யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற
கர்மங்களுக்கும் உபலஷணம் –
நல் தவம் என்று –
ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும்
த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் –
அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –
ஊழி ஊழி தோறேலாம் –
புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம்
போகும் இடத்தில் -ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை
சொல்லுகிறது
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-
க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்-
விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –
க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –
உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும்
மநஸா விசுத்தேந -என்றும் -மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே
பரிசுத்த அந்த கரணராய்
சென்று சென்று-
த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே
அநவரத பாவனை அளவும் சென்று –
தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய் அன்றி –
சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய
எங்கள் செங்கண் மாலை –
சரணாகத வத்ஸலனான புண்டரீகாஷனை
எங்கள்-என்று மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார் என்னுதல் –
தம்மையே பற்றி வர்த்திக்கும் சரணாகத சமூஹத்தை கூட்டிக் கொள்கிறார் -என்னுதல்
செங்கண் மால் என்றது -ஜிதந்தே புண்டரீகாஷ-என்கிறபடியே
ருசியே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக -அத்தலையிலே விசேஷ கடாஷத்தாலே
சித்தி என்று தோற்றுகைக்காக
யாவர் காண வல்லரே —
நிர்ஹேதுக கடாஷத்தாலே எங்களுக்கு அவன் காட்ட நாங்கள் கண்டாப் போலே
யாவர் காண வல்லர்
உம்பர் உம்பர் உம்பராய் -மேலே மேலே போய் அல்லது -தேவதேவர் -எங்கள் செங்கண் மால் -என்று கூட்டுவது –
—————————————————————————————-
76-பாட்டு –அவதாரிகை –
த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன –
பர ஹிம்சாதி துரிதம் என்ன –
இவற்றை உடைத்தாய் -இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-
வியாக்யானம் –
புன்புல வழி அடைத்து –
ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –
விஷயங்களுக்கு புல்லிமை யாவது -அல்பமாய் -அஸ்த்ரிமாய் -அபோக்யமாய் -இருக்கையும்
வகுத்த விஷயத்திலே வைமுக்யத்தை பண்ணுகையும் –
தத் விஷயமான இந்த்ரிய பதத்தை நிரோதிக்கை யாவது –
விஷயங்களில் சாபலத்தை பண்ணி -சேதனனையும் தன் வழியில் ஆகர்ஷிக்கும்
இந்த்ரியங்களை ப்ரத்யாஹாரத்தாலே மீட்கை –
அரக்கு இலச்சினை செய்து –
சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத
படி -பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி -என்று ஜ்ஞானாதிகர்களையும்
வாசனை நலியும் இ றே -அதுவும் பிரவாதபடி பண்ணி –
நன் புல வழி திறந்து –
விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது
இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் -ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே
தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை
ஞான நற் சுடர் கொளீ இ –
நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –
என்பில் எள்கி –
எலும்பிலே தட்ட சரீரம் சிதிலமாய்
நெஞ்சு உருகி –
மனஸ் தத்வம் த்ரவீபூதமாய்
கீழ்ச் சொன்ன ஜ்ஞானம் பரபக்தி அவஸ்தாம் படி வாசனை பண்ணி
உள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி –
உள்ளே பக்வமாய் -பரம பக்தி ரூபேண ஆவிர்ப்பூதமான பிரேமத்தால் அல்லது பெற
விரகு இல்லை –
ஆழி யானை யாவர் காண வல்லரே —
எங்கள் செங்கண் மால் -என்று -கீழ்ச் சொன்ன ஸ்தானத்திலே –ஆழியானே –என்கிறார்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்கிறபடியே விஷயாந்தர
ப்ராவ்ண்ய ஹேதுவான பாவத்தையும் –
பகவத் வைமுக்ய ஹேதுவாய் இருந்துள்ள பாபங்களையும்
கையில் திருவாழி யாலே இரு துண்டமாக வெட்டி –
கையும் திரு ஆழியும் ஆன சேர்த்தியைக் காட்டி
ஸ்வ விஷயமான பக்தியை வர்த்திப்பித்தவனை நான் கண்டாப் போலே யாவர் காண வல்லர்
இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
பகவத் விஷயமே விஷயமாக்கி –
தத் விஷய ஜ்ஞானம் பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய்
அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க
விரகு இல்லை -ஆய்த்து –
—————————————————————————————
77-பாட்டு –அவதாரிகை –
கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே
பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் –
சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம்
முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –
இப்பாட்டு முதலாக இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார் –
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-
வியாக்யானம்-
எட்டும் எட்டும் எட்டுமாய் –
சதுர் விம்சதி தத்வங்களுக்கும் ஆத்மாவாய் நின்று சத்தையை நோக்குமவன் –
இந்த சாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம பாவத்தாலே சொல்லுகிறது –
ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய் –
சப்த த்வீபங்களும் -அவற்றுக்கு தாரகமான சப்த குல பர்வந்தகளும்
அந்த த்வீபங்களுக்கு அவச் சேதகங்களான சப்த சமுத்ரங்களுமாய் –
அண்டாந்த வர்த்திகளான சகல லோகங்களுக்கும் உப லஷணம் –
ஸ்தல சரராயும் -ஜல சரராயும் -பர்வதேயருமான சேதனரை நினைக்கிறது –
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற –
த்வாதச ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாவாய் நின்ற இது -ஆராத்ய தேவதைகளுக்கும் உப லஷணம் –
அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக்
வாதி தேவனை –
சூஷ்ம சித் அசித் வஸ்து சரீரனாயும்
ஸ்தூல சித் அசித் சரீர வஸ்து சரீரனாயும்
கார்ய காரணம் இரண்டுமாய்க் கொண்டு சர்வ சமாஸ்ரயணீயனானவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி
அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –
பக்ன அபிமாநியாய் விழுகையும்
மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்
பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-மநோ புத்த்ய அபிமாநேன ஸஹநயஸ்ய தராதல-
அவன் பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் –
கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில்
திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –
வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –
வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை
ஆபோ நாரா இதி ப்ராக்தோ -என்றும்
நராஜ் ஜாதா நிதத்வாநி -என்றும் –
ஜகத் காரண வஸ்துவை நாராயணன் என்னக் கடவது இ றே –
———————————————————————————-
78 -பாட்டு –அவதாரிகை –
உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன –
கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி
நாதனை சுபாஸ்ரயமாகப் பற்றி –
மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து –
ஆஸ்ரயித்து –
இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்
பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-
வியாக்யானம் –
சோர்விலாத காதலால்-
சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர்
ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே
தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –
தொடக்கறா மனத்தராய் –
பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –
சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் –
ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –
நீர் அராவணைக்கிடந்த –
ஷீராப்தியில் திரு வநந்த வாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிற
இத்தால் -நீர் உறுத்தாமைக்கு அதன் மேல் திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக
உடையவன் ஆகையாலே -சௌகுமார்யமும் -ஆஸ்ரித சம்ச்லேஷைக ஸ்வபாவத்வமும்
அர்தித்வ நிரபேஷமாக ஆஸ்ரித அனுக்ரஹத்தாலே கண் வளர்ந்து அருளுகையாலே
சௌலப்யாதிகளையும் சொல்லுகிறது –
நின்மலன் நலம் கழல் –
பஜன விரோதி பாபங்களைப் போக்கும் ஹேய ப்ரத்யநீகனுடைய ருசி ஜநகமான திருவடிகளை-
ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
பிரேமயுக்தராய்க் கொண்டு ஆஸ்ரயித்து நின்று -இத்தால்-
நாஸ்த்ய க்ர்தா க்ர்தேந -என்கிறபடியே -சம்ஸாரம் அநித்யம் -ஈஸ்வரன் நித்யன் -என்று-
ஆஸ்ரயிக்கும் அளவு அன்றிக்கே -நிரதிசய போக்யன் -என்கிற பிரேமத்தால் ஆஸ்ரயிக்கை –
அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –
ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –
பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை-
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –
நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் -என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் –
பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –
நீர் அராவணைக் கிடந்த -நின்மலன் நலம் கழல் -ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
சோர்விலாத காதலால் -துடக்கறா மனத்தராய் -அவன் பெயர் எட்டு எழுத்தும் –
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்று அந்வயம் –
———————————————————————————–
79 பாடு –அவதாரிகை –
ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன –
அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே
தச ப்ராதுர்பாவத்தை பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே
அவதார ரஹச்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது
முக்தராக விரகு உண்டோ –என்கிறார்
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-
வியாக்யானம்-
பத்தினோடு பத்துமாய் –
தச திக்குகளுக்கும் -அத் திக்குகளிலே வ்யவஸ்திதரான தசாத் யஷருக்கும் -நிர்வாஹகராய்
அவர்கள் ஆகிறார் –
இந்த்ராதி திக்பாலர்கள் என்றுமாம்
ஊர்த்தவ லோகங்களுக்கு மேல் எல்லையான சத்ய லோகத்துக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவும்
அதோ லோகத்துக்கு கீழ் எல்லையிலே தாரகனான அனந்தனும்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
அத்வதீயனான சப்த ஸ்வரமும்
நாட்ய ரசம் ஒன்பதும் –
அவை யாகிறன -இசைகள் ஏழும்
நிஷா தர்ஷப காந்தார ஷட்ஜ மத்யம தைவதா -பஞ்சமச் சேத்ய மீ சப்த -என்கிறபடியே-ச்ர்ங்கார ஹாஸ்ய கருணா வீர ரௌத்ர பயா நகா
பீபத்சாத் புத சாந்தாச்ச நவ நாட்ய ரசாஸ் ச்ம்ர்தா -என்கிறபடியே நாட்ய ரசங்களும்
இவை சப்தாதி விஷயங்களுக்கும் உப லஷணம்
இத்தால் -கீழ் சொன்ன தசாத் யஷரோடு
அவர்களுக்கு நிர்வாஹகரான சேதனரோடு வாசியற
எல்லார்க்கும் போக்யமான சப்தாதிகளுக்கும் நிர்வாஹகன் என்கை –
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் –
பதினாலு வகைப்பட்டு இருந்த லோகங்களுக்கு பிரயோசனமான சப்தாதி விஷயங்கள்
எல்லாம் தானே யாகைக்காக -ஏஷா திக் -என்கிறபடியே –திசை -என்று பிரகார வாசி –
பத்து நான்கு திசைக் கண் நின்ற நாடு -என்று –பத்தினோடு பத்துமாய் –என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –பெற்ற நன்மை -என்று –ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –ஆய் –என்று ஆகைக்காக -என்றபடி –உயிர் முதலா முற்றுமாய் –என்னக்-கடவது இ றே -சர்வ ரச -என்கிற தானே சேதனர்க்கு போக்யனாகைகாக என்கை
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதியாய் –
தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து
ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே
தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை
ஆற்றல்-பொறை
பூர்வஜன் ஆகையாவது -சம்சாரிகளுக்கு ருசி பிறந்த வன்று -ஆஸ்ரயணீயரான தாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஏற்கவே அவதரித்து நிற்கை –
பத்தர் ஆமவர்க்கு அலாது-
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத -என்கிறபடியே அவன் பண்ணின
உபகாரத்தை உள்ளபடி அறிந்து அதிலே சக்தராய் இருக்குமவர்களுக்கு அல்லது –
முக்தி முற்றல் ஆகுமே —
மோஷ பலம் பக்குவமாகைக்கு விரகு இல்லை-
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி -என்கிறபடி
விரோதி நிவர்த்தி பூர்வகமான பகவல் லாப முண்டாக விரகு இல்லை -என்கிறார் –
——————————————————————————————-
80 பாட்டு –அவதாரிகை –
அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் –
இதில் அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து –அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை -என்கிறார் –
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே –80-
வியாக்யானம் –
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் –
கால்யவநாதிகளைப் போலே ஸ்வரூபேண வந்து தோற்றாமே
வாஜி வேஷத்திலே வந்து தோற்றினான் ஆய்த்து -க்ருஷ்ணன் அவதாநம் பண்ணி
மேல் விழுகைக்காக –
நேசமின்றி வருகை யாவது –
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர -என்று
கிருஷ்ண சேஷ்டிதங்களாலே திர்யக்குகளும் ப்ரேம பரவசமாய் செல்லா நிற்க –
துஷ்ப்ரக்ர்தி யாகையாலே அத்துறையிலே இழியாது ஒழிகை –
எதிர்ந்து வருகை யாவது –
ஆதரம் இல்லையானாலும் உபேஷகன் ஆகலாம் இ றே -அதுவும் இன்றிக்கே பாதகனாய் வருகை
நாசமாகி நாளுலப்ப-
இப்படிப்பட்ட தேனுகனை ம்ர்த ப்ராயனாக்கி ஆயுஸ்ஸை முடிக்கைக்காக
நாசம் –துன்பம்
நன்மை சேர் பனம் கனிக்கு வீசி –
தர்சநீயமாய் பழுத்து நின்ற பனம் பழம் உதிரும்படி -பனைத் தலையிலே சுழற்றி எறிந்து –
க்ர்ஹீத்வா ப்ரமனே நைவ சோம்ப ரேகத ஜீவிதம்
தஸ்மின் நேவஸசி ஷேப தேனு கந்த்ர்ண ராஜ நி
ததா பலான்ய நேகா நிதா லாக்ரான் நிபதன்கர –
ப்ர்தி வ்யாம் பாதயாமாச மஹாவாதோகநாநிவ -என்னக் கடவது இ றே
மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு –
எதிரி அளவு அன்றிக்கே விஞ்சின தோள் வலியாலே அவனை அழியச் செய்த உன் திருவடிகளுக்கு
சங்கல்ப்பத்தாலே அழித்தல்
ஆயுதத்தாலே அழித்தல்
அன்றிக்கே-
கை தொட்டு தோள் வலியாலே அழியச் செய்தபடி
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே —
உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து
உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .