திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.

    பொ-ரை : ‘சரீர பலத்தில் குறைவில்லாத அசுரர் கூட்டங்கள், உயிர் நீங்கிய மலைத்துண்டுகள் கிடந்தன போலத் துண்டங்கள் பலவாகத் துணித்து மகிழ்ந்த, மிகப் பெரிய கங்கையைத் தரித்த சடையாகிய முடியையுடைய சிவபிரான் ஒரு பக்கத்திலே ஒப்பில்லாதபடி விரும்பி வசிக்கின்ற திருமேனியையுடைய சர்வேசுவரன் விரும்பாத என்னுடைய இந்த உயிரால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : ‘உடம்பினால் குறையில்லா அசுரர்’ என்க. ‘துணித்து உகந்த உடம்புடையான்’ எனக் கூட்டுக. புனல – அகரம் சாரியை; ஆறாம் வேற்றுமை உருபுமாம்.

    ஈடு : பத்தாம் பாட்டு. முதற்பாசுரத்தில் சொன்ன சீலகுணத்தையும் விரோதிகளை அழித்தலையும் சொல்லி, ‘அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற்பாசுரத்தில் தொடங்கியதற்குச் சேர முடிக்கிறாள். ‘உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து’ என்றதனால், ‘நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச் சொல்லுகிறது. ‘தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால், ‘கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.

    2உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் – உயிரைத் தேய்த்து உடம்பை வளர்த்திருந்தவர் பிறப்பு இறப்புகளிலே எப்பொழுதும் உழன்று திரிகின்றவர்களாய்ப்

போருவர் இத்தனை அன்றோ?’ என்றது. ‘உயிரிலே ஆயிற்றுக் குறை உண்டாகில் உள்ளது,’ என்றபடி. உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து உகந்த – உயிரோடு கூடிச் சஞ்சரிக்கின்ற மலைகள் இந்திரன் கையில் வச்சிராயுதத்தாலே பல கூறு ஆகும்படி துணியுண்டு கிடந்தாற்போலே, அசுரர் கூட்டத்தைத் துணித்து உகந்தான் ஆயிற்று. ‘உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் உடம்பினால் குறை இல்லா அசுரர்குழாம் துணித்து உகந்த’ என்று கூட்டுக. 1‘திருமகள் கேள்வன் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, சம்பந்தம் எல்லார் பக்கலிலும் உண்டாய் இருக்க, ‘இவர்கள் அடியார்கட்கு விரோதிகள்,’ என்னும் தன்மையாலே இவர்களை அழித்து, ‘அடியார்கட்குப் பகைவர்கள் அழியப் பெற்றோமே அன்றோ!’ என்றத்தாலே உகந்தானாயிற்று.

    தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான் – மிக்க நீர் வெள்ளத்தையுடைத்தான கங்கையைத் தன் சடையில் ஒரு பக்கத்திலே தரிக்கையால் வந்த செருக்கையுடைய சிவபிரான் ஆனவன், 2பிராட்டி திருமார்வைப் பற்றி, ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானித்திருக்குமாறுபோலே, ஒரு பக்கத்தைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்துக்கொண்டிருக்கிற திருமேனியையுடையவன். 3திருமேனியில் இடங்கொடுக்கச்செய்தே, இது தன்னைக் குணமாக விரித்துக்

கூற வேண்டும்படியாயிற்று அவர்களுடைய அகங்காரம். என்றது, ‘அகங்காரம் இல்லாதவர்கள் அணையக்கூடிய உடம்பிலே ஆயிற்று அகங்காரம் கொண்டவர்களுக்கும் இடங்கொடுக்கிறான்’ என்றபடி.

    கவராத உயிரினால் குறை இலம் – ‘இப்படிப் பொதுவான உடம்பு படைத்தவன் ஆசைப்பட்ட எனக்கு உதவானாகில், இவ்வாத்தும வஸ்துவைக்கொண்டு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள். 1இதற்கு முன்னர் எல்லாம் சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது? அவைதாம் அழியக்கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ? அதற்காக நித்தியமான ஆத்துமவஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப்பாசுரத்தால். ‘இதனை வேண்டா என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப் 2பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய் இருக்கும் ஆதலால், அதனைப் பற்ற’ என்க. 3இனித்தான், அவனுடைய நித்திய இச்சையாலே அன்றோ இவ்வாத்துமாவினுடைய நித்தியமாய் இருக்குந் தன்மையும் உளது? அவனுக்கு இச்சை இல்லாத போது பின்னை இவ்வாத்துமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.       

முதல் பாட்டில் சீல குணம் -விரோதி நிரசன -சொல்லியது போலே
இதிலும் பராக்ராமம் சீலம் குணம் சொல்லி -முடிக்கிறார்
உபக்ரமதுடன் சேர உப சம்காரம்
நீராகும் படியாக படை தொட்ட சொல்லி
மலை போல் கிடந்த அசுரர் குழாம் முடித்து
உடம்பு பெரியதாக அசுரர் உயிர் ஞானம் குறை
உயிர் -பேணாமல் உடம்பு பேணி –
ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைத்து -நித்ய சம்சாரிகள்
உயிர் பிரிந்த மலைத் துண்டம் போலே
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு சிறகுகளை வெட்டி –
துணித்து உகந்த
தேவர் தானவர் இருவருக்கும் பொது -ஆஸ்ரித விரோதி என்பதால்
திருமேனியில் இடம் கொடுத்தான் துர் அபிமானம்
அபிமான சூன்யர்
மிக நீர் வெள்ளத்தை -தனது சடையில் தரிப்பதால் அபிமானம் கொண்டு
இவ்விடம் என்னிடம் என்று அபிமானித்து
பொதுவான உடம்பு அனைவருக்கும்
ஆஸ்ரித எனக்கு உதவாமல் ஆத்மாவால் என்ன பலன்
முன்பு தேகம் வேண்டாம்
அவை தன்னடையே கழியுமே -வேண்டாம் சோழ வேண்டுமோ
நித்தியமான ஆத்மாவும் வேண்டாம்
இது கிடக்குமாகில் இன்னொரு ஜன்மம் உண்டாகி நோவு பட உடலாக இருக்கும்
அவனுடைய நித்ய இச்சையாலே ஆத்மா நித்யமாக இருக்க
அவன் இச்சை இன்றி இருக்க இதனால் என்ன பலன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: