ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -181-192….

நூற்று எண்பத் தோராம் வார்த்தை

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தை உடைத்தாய் இருப்பர் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பட்டணங்களில் நின்றும் திருமலையைத் திருவடி தொழ போகா நிற்கச் செய்தே –
வளத்தான் மங்கல முடையான் திண்ணையிலே கிடந்த அளவிலே —

அவன் எங்கேறப் போகிறி கோள் -என்ன –

இவர்களும் திருவேங்கடமுடையானை திருவடி தொழப் போகிறோம் -என்ன –

இவனும் -நானும் போகிறேன் -என்று சொல்லி -இவனும் கூடப் போய்
அவர்களும் இரண்டு மூன்று பயணம் போன அளவிலே –
இவனுடன் உறவற்று தங்களிலே கூடிப் போக புக்க படியால் –

இவனும் என்னை -ஸ்ரீ வைஷ்ணவனாக்கி கொண்டு போக வேணும் -என்று இவர்களை
பலகாலும் வேண்டிக் கொள்ள –

இவர்களும் பேசாதே போய் திருமலை யிலே வந்தவாறே
அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து தண்டன் இட்டு நிற்க –

அவரும் இவர்களை காரியங்கள் கேட்டு
இவர்களுக்கு சில வார்த்தைகளும் அருளிச் செய்து -திருவேம்கடமுடையான் பாடேறப் போகலாகாதோ –
என்று அருளிச் செய்த அளவிலே –

இவனும் என்னை ஸ்ரீ பாதத்திலே காட்டிக் கொடுக்க வேணும்-என்ன –

அவரும் அத்தைக் கேட்டு –
அவன் சொல்லுகிறது ஏது -என்று கேட்டருள –

ஆஸ்ரயிக்க வேணும் -என்கிறான் என்று விண்ணப்பம் செய்ய –

அனந்தாழ்வானும் வாராய் என்று அழைத்து -உனக்கு என் பாடே ஹிதம் கேட்க வேணுமோ –
என்று கேட்டருள –

வேணும் -என்னை ரஷித்து அருள வேணும் -என்ன –

ஆனால் என் பக்கலில் ஹிதம் கேட்கில் உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் -என்று அருளிச் செய்ய –

அவனும் -இவை போக அமையும் -என்று

நெல்லுக்கு பால் வற்ற வற்ற தலை வணங்குமா போலே –
சரணாகதி நெஞ்சிலே பற்ற  பற்ற
தன் மேல் கிடக்கிற பொன்னடங்க வாங்கி ஆசார்ய தஷிணையாக கொடுத்து –
ஊரிலே வந்தவாறே –

இவர் ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார் என்று பல ஸ்ரீ வைஷ்ணவர்களும் வந்து காண –
அவர்களுக்கு வேண்டுமவை கிஞ்சித்கரிக்கப் புக்கவாறே –

இவருடைய மாதா பிதாக்கள் இவரை அழைத்து –
ரிஷிகளைப் போலே இருக்கிற பிராமணர் வந்து புகுந்து பிரசாதித்து போகா நின்றார்கள் –
செய்கிற தர்மத்தை விலக்கல் ஆகாது –
உம்மை விச்வசித்து இருக்கிற எங்களுக்கும் ஏதேனும் தர வல்லீரோ -என்று கேட்க –

அப்படியே செய்கிறேன் -என்று தான் தேடிய த்ரவ்யத்தை ஆள் விழுக்காட்டிலே
இட்டு இவர்களுக்கும் கொடுத்து
தாமும் தம்மோபாதியைப் பற்றி -அருளிச் செயலும் ஓதி -ஸ்வரூப ஞானம்
பிறந்து பிற்றை யாண்டு திருமலை ஏற வர –

அனந்தாழ்வான் -கண்டீரே -அப்போதே இவை உம்மை விட்டு அகலும்
என்று சொன்னேன் -என்று அருளிச் செய்ய –

அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –
என் பக்கலிலே ஹிதம் கேட்டால் நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று –
அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று –
அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே –
ஸ்ரீ பாதத்துக்கு அடிமை என்னும் இடம் கண்டேன் -என்று
விண்ணப்பம் செய்ய –

இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————-

நூற்று எண்பத் திரண்டாம் வார்த்தை

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து –
நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக

நாயந்தே அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –

இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன –

ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் பரம பதம் பெற வேணும் -என்ன –

தந்தோம் -என்று திரு உள்ளமாக –

இத்தை உடையவர் கேட்டருளி -காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள –

இது என் -என்ன –

நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று எண்பத்து மூன்றாம் வார்த்தை

உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு –
ஸ்ரீ விபீஷணப்  பெருமாள் ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக –
சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட –

உடையவர் அருளிச் செய்த படி –
கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்கு பெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————–

நூற்று எண்பத்து நாலாம் வார்த்தை

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று
ஆழ்வானை முதலிகள் கேட்க –

ஓர் இரவெல்லாம் விசாரித்து –
பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் –

ந த்யஜேயம் -என்றார் பெருமாள் –
ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் –

நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை –
இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –

——————————————————————

நூற்று எண்பத்து ஐஞ்சாம்  வார்த்தை

ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க –
பெரிய நம்பி தண்டன் இட –
உடையவர் அஞ்சலி பண்ணிப் போக –
உடையவரை இது என் என்று கேட்க –
அப்போது –
அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ நமக்கு ஸ்வரூபம் –
என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————

நூற்று எண்பத்து ஆறாம் வார்த்தை

அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –
ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது –
அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன –

இது ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய

ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது –
வேறு ஒருவருக்கும் இல்லை –
ஒருவரை தண்டன் இடக் கடவதாய்
அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————-

நூற்று எண்பத்து ஏழாம் வார்த்தை

எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக –

என் பரமாச்சார்யர் வார்த்தையை கேட்டு சொன்னேன் இத்தனை –
அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் –
பரம பதத்தில் அளவும் சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று
ஆள வந்தார் அருளிச் செய்வர் —

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –

———————————————————————————————

நூற்று எண்பத்து ஒன்பதாம் வார்த்தை

திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க –
ஆளவந்தார் அருளிச் செய்தாராக
திருமாலை யாண்டான் நிர்வஹிததது ஒழிய –
பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து –
இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய –

இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று
திருமாலை யாண்டான் அருளிச் செய்து –
இங்கனே நடவா நிற்கச் செய்தே –

அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை
அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழவாலே அருளிச் செய்கிறார் –
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய –

இத்தை எம்பெருமானார் கேட்டருளி –
முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே  நடவா நிற்க –
நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது –
இங்கனே யாம் இத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை -அறியாக் காலத்துள்ளே –
அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார்
என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய –

இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி –
ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று
திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் –

———————————————————–

நூற்று தொண்ணூறாம் வார்த்தை

ஸ்ரீ எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க –
அம் மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள –

இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக –
நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறேன் -என்ன –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே –
பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க –

என்ன எம்பெருமானாரும் என்ன திருச் – செல்வமும்  –
எம்பெருமானார் வெள்ளை   எழுந்து அருளினார் –
இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய –

அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் –

ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும் இடியுமாய் குளிரிலே ஈடுபட்டு –
இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் –
என்று அருளிச் செய்ய –

முதலிகளும் அங்கே எழுந்து அருளி –
வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க –

பிராமணக் குரலாய் இருந்தது -பெரு விடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து –
வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து –
சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய –

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க –

நீங்கள் ஸ்ரீ எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –

நாங்கள் ஸ்ரீ நல்லான் அடிமைகள் -எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் –
அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன –

ஆகில் அவர் இறே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட –

இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க –

உடையவரும் -நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள –

பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே (பானையோடு ) சமர்ப்பித்து –
இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய –

அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் –

மற்றை நாள் விடிந்த வாறே –
அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் –
ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட –

அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் –
அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய்
ஒரு வேடன் அகத்திலே விட்டு வர –

அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-
ராத்ரி உண்ணப் புக்க வாறே –
பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று –
அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து –
இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் –

அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் – உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன –

வேண்டா -என்றார்கள் –

உங்களுக்கு பயப்பட வேண்டா –
நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –

நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க –

நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே  கோயிலிலே வந்து இருந்தோம் –
என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய்  இருக்கும் –
அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் –
திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும்
இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் –
இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் –
நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் —

இது என் பெண்ணே என்றார் –

உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் –
நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே –

அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகையாலே காண் என்று அருளிச் செய்ய –

அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும்  -என்ன –
அப்போது அருளிச் செய்து அருளினார்–

பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது –
அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே –
அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே –
அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று விண்ணப்பம் செய்தேன் –
அப்போது சாத்தி இருந்த பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார் –
நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் -என்றவாறே –

திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து –
இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –

அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து –
உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி –
திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு தண்டன் சமர்ப்பித்து –
முதலிகளை -ஸ்ரீ பாதம் விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –

முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள –

இவளும் திருப் போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து –
திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் –
கறுத்து நீண்டு இருந்தது எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே

அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –

முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாத ரஷையை ஏறி அருளப் பண்ணி திருவடி விளக்கி –
அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய –

அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே –
எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் –
அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன –

அவளும் விண்ணப்பம் செய்தாள் –

வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன –

அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் –
எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து –
எம்பெருமானார் திருவடிகள் போலே இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே –

நான் காண் -என்ன –

அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே –

கண்ண நீரைத் துடைத்து –
விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது –
முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய –

அவர்களும் அமுது செய்து கண் வளர –

(உடையவர் மட்டும் அமுது செய்ய வில்லையே
பெருமாளுக்கு அமுது செய்யாமல் தனது திருவடிகளுக்குத் தானே பிரசாதம் என்பதால்
கொங்கில் பிராட்டி என்பவளே இவள் )

இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து –
மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி –
பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி
தான் பிரசாதப் படாதே கிடக்க –

இது என் -என்று கேட்க –

கோயில் நின்றும் எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம்
என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே –

நான் இதுக்கு என் செய்ய  வேணும்-என்ன –

நீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன –

இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க –

இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி –

விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு –
இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் –
இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய –

எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி –
அந்த க்ராமத்திலெ நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து
தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே
அவற்றை உடையவர் தரித்து அருளினார் –

———————————————————————————————

நூற்று தொண் நூற்றோராம் வார்த்தை

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாத்ரம் –

ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –

ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை –

குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய – ஸ்ருதி பிரமாண பிரதிபண்ண வ்ருத்தய –
அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று இரண்டாம் வார்த்தை

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் –

ஞானப் பிரதானமும் –
ஞான வர்த்தகத்வமும்- ஆசார்ய  க்ருத்யம் –

புருஷகாரத்வமும் –
கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் –

விரோதி நிவர்தகத்வமும் –
பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: