ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -169-180….

நூற்று அறுபத்து ஒன்பதாம் வார்த்தை

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு
ஹித காமனாய் இருக்குமவன் –

சிஷ்யனாவான் -ச
ர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –

———————————————-

நூற்று எழுபதாம் வார்த்தை

உடையவர் -சந்யசித்து அருளுகிற போது –
சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க –
முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –

இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –

———————————————–

நூற்று எழுபத் தோராம் வார்த்தை

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் –
எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன –

பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –

வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி -தஸ்யா மன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற
ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –

உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன –
அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து –
அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை

——————————————————————-

நூற்று எழுபத் திரண்டாம் வார்த்தை

ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் இரண்டுக்கும் தலை –
ஆத்ம சமர்ப்பணமும் –
ஆத்ம அபஹாரமும் –

இவற்றிலும் விஞ்சின ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் –
ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே
க்ருதஜ்ஞதையும் –
க்ருதக்நதையும் –

———————————————————–

நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –

அவரும் தண்டன் சமர்ப்பிக்க –

அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –

ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன

அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –

அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –

அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –
நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று
அருளிச் செய்து அருளினார் –

———————————————————————

நூற்று எழுபத்து நாலாம் வார்த்தை –

பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு ஒருகால் திரு மேனி பாங்கு இன்றியிலே கண்
வளர்ந்து அருளும் போது
தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து –
நான் இப்போது திருவடி சாராமல் -ஆலச்யம் -காலதாமதம் -பொறுத்து
இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி –
ஏழை ஏதலன் –
ஆழி எழச் சங்கு -இவற்றை பெருமாள் திருவடிகளில் விண்ணப்பம் செய்து –
பிரபத்தி பண்ணும் கோள் -என்ன –  

அவர்களும் அப்படியே செய்து
ஜீயருக்கு திரு மேனி பண்டு போலே பாங்காய்த்து –

இதைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை
ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு –
ஜ்ஞான வ்ருத்தருமாய் வயோ வ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செய்தார் –
இது இவருடைய ஸ்வரூபத்துக்கு சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –

பிள்ளையும் –
அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம் –
சகல வேத சாஸ்திரங்களும் போவது பிள்ளை எங்கள் ஆழ்வாருக்கு ஆய்த்து –
அவரைச் சென்று கேளும் கோள் என்ன –

அவர்களும் எங்கள் ஆழ்வாரைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யிலே சங்கம் போலே காணும் -என்ன –

பிள்ளை இதைக் கேட்டு அருளி -அழகிது
பிள்ளை திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளும்கோள் -என்ன –

அவரும் -துவக்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும் -என்ன –

இதையும் கேட்டருளி -ஆகிறது
அம்மங்கி யம்மாளைக் கேளும்கோள் -என்ன –

அவரும் -பிள்ளை கோஷ்டியில் இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயம்
கேட்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –

மீளவும் பிள்ளை இத்தையும் கேட்டருளி –
பெரிய முதலியாரைக் கேளும்கோள்  என்ன –அம்மங்கி அம்மாள் தகப்பனாராக இருக்கலாம் –

அவரும் –
பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் –
கஸ்தூரி திரு நாமமும் -பரமபதத்தில் கண்டேன் இல்லையாகில் –
மூலையடியே முறித்துக் கொண்டு மீண்டு வருவேன் என்று அன்றோ பட்டர் அருளிச் செய்தார் –
அப்படியே இவரும் பெருமாள் திருமுக மண்டலத்தையும் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் -என்றார்

பிள்ளை -இவை  கேட்டருளி -ஜீயர் திருமுக மண்டலத்தை பார்த்து சிரித்து –
இவை எல்லாம் உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ -என்ன –

இவை இத்தனையும் அன்று -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்ய –

ஆனாலும்
உம்முடைய அபிப்ராயத்தை சொல்லும் என்ன –

பிள்ளை தேவரீர் சர்வஞஞர் ஆகையாலே அறிந்து அருளாதது  இல்லை –
ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளி இட்டருள திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன் –
தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி –
தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி -உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் –
சுழற்றிப் பணி மாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார் –

இதைக் கேட்டருளி பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் –
இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற
சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

—————————————————————————

நூற்று எழுபத்து ஐந்தாம் வார்த்தை

நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே
கையிலே இருந்த சில பொன்னை வாங்கி பட்டர் ஸ்ரீ பாதத்திலே இட்டு தண்டன் இட்டவாறே –

பட்டர் அத்தை எடுத்து இவரைப் பார்த்து –
நான் கொடுத்த த்ரவ்யத்தில் சாபேஷராய் இருக்கிற இவர் உபதேசித்த ஜ்ஞானம்
நமக்கு உத்தாரக  ஹேதுவாக புகுகிறதோ என்று -உனக்கோடுகிறது -என்று கேட்டருளி –

இவரைப் பார்த்து -சர்ப்பதஷ்டனாய் ம்ருதனான ராஜகுமாரனுடைய சம்ஸ்கார தசையிலே –
மந்திர ஔ ஷத சக்தி உடையனாய்  இருப்பான் ஒருவன் வந்து –
உன் மகனைப் பிழைப்பிக்க இந்த ராஜ்யத்தை தா என்னிலும்
கொடுக்கும் படியான புத்திர வாத்சல்யத்தை உடைய ராஜாவின் பக்கலிலே –
ஒரு பிடி சோறு வேண்டி உண்டு ம்ருதனான ராஜ புத்ரனைப் பிழைப்பிக்கும் பிரக்ருதிமான்கள் எல்லாரும்
உண்கிற சோற்றிலே இவனுக்கு இச்சை உண்டாய்த்து என்னா –
அந்த விஷ ஹரண சக்தியில் ஏதேனும் குறைந்தது இல்லை இறே –

அப்படியே எல்லாரும் ஸ்ப்ருஹை  அர்த்த காமங்களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும்
நாங்கள்  உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி
உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் –

இத்தால் –
ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் –
இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா –
இவர்களையும் பிரக்ருதி மான்களோ பாதி யாக நினைக்கல் ஆகாது –
எங்கனே என்னில் –

காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள்
புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் –
ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் –
சத்ருசம் சேஷ்டதே  ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே
வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று அருளிச் செய்தார் –

————————————————————

நூற்று எழுபத்து ஆறாம் வார்த்தை

நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை –
காஞ்சோரிச்  சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது –

முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று –
பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு –
தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளின வாறே
இத்தை ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ –
நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய –

அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

இத்தால்
ஆசார்ய புத்ர பௌத்ராதிகளும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்
என்று கருத்து –

————————————————

நூற்று எழுபத்து ஏழாம் வார்த்தை

பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே –
திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா –

திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று
பெரிய ஜீயர்-கூர  நாராயண ஜீயர் -அவர்களை அழைத்து –
நான் பெருமாள் திருக்குழல் சிக்கு நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது –
பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக
திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ –
என்று அருளிச் செய்தார் –

இத்தால் –
சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து

————————————————–

நூற்று எழுபத்து எட்டாம் வார்த்தை

தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று -பட்டர் திரு வம்சத்தில் –
நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய –

அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து –
எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் –
என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –

———————————————

நூற்று எழுபத்து ஒன்பதாம் வார்த்தை

நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில்
சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ –

கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் –
ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் –
என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –

———————————————————–

நூற்று எண்பதாம் வார்த்தை

பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை –
அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து –
அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து –
பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆச்சர்யத்தை காண்கைகாக
எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க –

அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன –

அங்கே விசேஷம் என் என்று கேட்க –

சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று
சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –

யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின்
ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க –

யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று
சொல்லிப் போக விட –

அவன் தன்னை அங்கு நின்று போகச் சொன்னேன் -என்று
ப்ரஹ்ம ரஷஸூ சொல்ல –

யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு –
மஹா மந்தரத்தையும் ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸூ முன்னே போய் நிற்க –

ரஷஸூம் முடக்கின காலை பின்னையும் நீட்டி –
வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று
அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ
நீ உன் ஜன்மமும் அறியாய் –
என் ஜன்மமும் அறியாய் -என்ன –

ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில்
உன்னுடைய ஜன்மம் ஏது –
என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –

உன்னுடைய ஜன்மம்
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய்
அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி -திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து –
அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் –
அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் –

இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் –
யாகம் பண்ணினேன் -மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம  ராஷஸ் ஆனேன் -என்ன –

ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன

உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –
அந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவர் -என்று
உடையவரைக் காட்டி –
அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார் ஆகில் போகிறேன் -என்ன –

ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன –

ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன –

இவ்வரசு முறிந்து விழும் -என்று
அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று –

யாதவ பிரகாசனும் -இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் -என்று மிகவும் உபஸ்லோகித்து
மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: