அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-64-பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
அறுபத்து நாலாம் பாட்டு -அவதாரிகை
அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று
பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை யனுசந்தித்தார்
கீழில் பாட்டில் .அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்
பார்த்து –இராமானுச முனி யாகிற யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே
வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் .
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64-
வியாக்யானம்
எங்களுக்கு விதேயமாய் இருக்கும் இராமானுச முனி யாகிற யானை –
பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஆழ்வார் பண்ணிலே
உபகரித்து அருளின செவ்வித் தமிழான திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –
ஒழுகா நின்றுள்ள -மாதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக -வேத நூலோதுகின்றதுண்மை –  என்னும்படி
யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷன வேதமாகிற எழில்
தண்டையும் ஏந்திக் கொண்டு –நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும்
நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த
உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
லோகம் பிழைத்ததே -என்று கருத்து .
ஏகாரம் ஈற்றசையாய் உங்கள் வாழ்வு முடிந்தது என்று தலைக் கட்டவுமாம் .
பண்டரு மாறன் பசும் தமிழ் -என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –
இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில் -அது ஒண்ணாது .
பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி
யல்லாததினாலே.
பசுமை -செவ்வி
விள்ளுதல் -விரிதலாய் விஸ்ருதயைச் சொல்லுகிறது
மண்டுதல்-தள்ளுதல் -விரிதலுமாம்–
அனுகூலருக்கு பிடி -பிரதிகூலருக்கு வேழம்–எங்கள் வேழம் -முனி வேழம் –பக்தி அங்குசம் அடங்கி எங்கள் இராமானுச முனி வேழம் -இந்த நூற்றந்தாதியே அங்குசம் – -திரு வாயமொழி கரும்பு சாறை பருகிய மதம் கொண்டு
முனி மனனம் –நினைத்து விஷ்ணு லோக மார்க்கம் அருளி -/இராமானுசன்/ -உபதேசித்து சன்மார்க்கத்தில் நிறுத்தி /வேழம் புறச்சமயங்கள் அழித்து மூன்றையும் -பட்டாபிஷேகத்துக்கு மாலை போதுமே நம்மை -அடி சூடும் அரசுக்கு –
பண் தரும் -தானே வந்து அமர்ந்தது ஆழ்வார் இடம் –
பண்டு அரு-பழமையான அருமையான
அவன் சங்கோடு சக்கரம் ஏந்தி -இவர் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத
நிரசன அர்த்தமாக எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ் -அந்த ப்ரீத்தி
பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள்  ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப்  போயிற்று என்கிறார் –
வியாக்யானம்எங்கள் இராமானுச முனி வேழம் -எங்கள் இராமானுசன் -எம் இராமானுசன் –என்னை ஆள-வந்து இப்படியில் பிறந்தது –என்று பாட்டுத் தோறும் இப்படி அருளிச் செய்தது —அவருடைய விக்ரக விஷய-பிரேம அதிசயம் காணும் -எங்களுக்காக வவதரித்த எம்பெருமானாராகிற மத்த கஜம் -லோகத்தில் பிராக்ர்த்த கஜம் போலே –
ஞான சந்கோசமாய் -இருக்கை அன்றிக்கே -சர்வதா அபதே ப்ரவர்த்தான ஹீனரை நிரசிக்கைக்கும் -அவர்களுக்கு
உபதேசித்து சன் மார்க்கத்தில் நிறுத்துகைக்கும் -அனுகூலரை ரஷிக்கைக்கும் -மனனம் பண்ணுக்கைக்கும் உடலான
ஞான விகாசத்தோடே இருக்கும் ஆனை -இப்படி அப்ராக்ருதமான ஆனைக்கு உண்டான  ஞானம் அதுக்குத் தக்கதாய்
இருக்கும் இறே -கஜமாக உத்ப்ரேஷிக்கிறது -விபஷிகளை சித்ரவதம் பண்ணவும் -தாம் பரிக்கிரகித்தவர்களை
பட்டாபிஷேக யோக்யராம்படி  செய்யவும் வல்லவர் ஆகையாலே -பண்டரு மாறன்  பசும் தமிழ் -எழுத்து அசை சீர்
பந்தம் அடி தொடை நிரை நிறை ஓசை தளை இனம் யாப்பு பா துறை பண் இசை தாளம் முதலான செய் சொல்லும்
 இதுக்கு உண்டாகையாலே -யாழினிசை வேதத்தியல் -என்று காநோ பலிஷிதங்களான -சகல லஷனங்களும்
அனுசந்தாக்களுக்கு தெளிந்து -அனுபவிக்கும்படியாய் இருக்கிற -அன்றிக்கே பண்டு அரு என்ற பதச் சேதமாகில்
பண்டு என்கிற பதம் காலபரமே யானாலும் -கங்கா யாகோஷம்  – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து  வாசகம் என்று சொல்லலாம் இறே -அந்த பஷத்தில் -பிரதித்வாபராந்தரத்திலும்
வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும்
ஜ்ஞான யோகியாய் அவதரித்து த்ரமிட வேதங்களை சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று -பிரம்ம பார்க்கவா
வ்ர்த்தபாத்மாதி புராணங்களிலே சூபிரசித்தமாக சொல்லுகையாலே –நித்தியமாய் -அ பௌ ருஷேயமாய் இருந்துள்ள
திருவாய் மொழி -பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி –

மாறன் –நம் ஆழ்வாருக்கு பிரதம உபாத்தமான திரு நாமம் –

பசும் தமிழ் -அவராலே கட்டப்பட்டு -அசந்கலிதமான-சுத்த திராவிட பாஷையாய் விளங்குகிற திருவாய்மொழி –
மாறன் பணித்த தமிழ் மறை -என்றும் -ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றும் -சொல்லுகிறபடியே
நம் ஆழ்வார் சம்பந்தியான திருவாய் மொழி என்றபடி -ஆனந்தம் பாய் மதமாய் -லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா   சஷூர் ஜ்ஜ்ராப்யாம் –
கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர  பிரமௌநை  –    என்கிறபடியே -ஸ்ரீ ய பதி யாகிற கடலில் நின்றும் –ஆழ்வார் ஆகிற முகில் –
பெரும் கருணை யாகிற நீரை முகந்து –பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க -அக் கருணை யானது
மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் -பரம ஆசார்யரான ஆள வந்தார் -ஆகிற
ஆற்றிலே சென்று –எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து –பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே
தடையறப் பெருகி –சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி -ரஷித்தது என்று சொல்லுகையாலே –
கவியமுதம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும் ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும்
அமுதமயம் ஆகையாலே -ஆனந்தாவஹமான திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது –
இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு –விண்டிட -எல்லா காலத்திலும்

எல்லா இடத்திலும் விஸ்த்ரமாய் இருக்க  -விள்ளுதல்-விரிதலாய் -விஸ்த்ரியை சொல்லுகிறது –

மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி -மெய்ம்மை -சத்யம் -அதாவது
வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்னும்படியான யதாபூதவாதித்வம் -இப்படிப்பட்ட
மெய்ப்பாட்டை உடைத்தாய் இருக்கையாலே சகல பிரமாண வி லஷணமான வேதம் -நன்மை வை லஷண்யம் –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் -என்கிற பரத்வத்தை பிரகாசிக்குமதான வேதம் -என்றபடி -பராவர தத்வா நியாதாவத்
வேதய தீதி வேத -என்று இறே இதுக்கு வுயுத்பத்தி இருப்பது -மெய்ம்மை கொண்ட -என்ற விசே ஷணத்துக்கு தாத்பர்யம்
ரஜ்ஜாவயம்சர்ப்ப -என்கிற ப்ரமத்துக்கு-இயம் ரஜ்ஜு ரேவ ந சர்ப்ப -என்கிற ஞானம் நிவர்த்தகமாம் போலே –
அநாதி அஞ்ஞான மூலங்களாய் ஸ்வ கபோல கல்பிதங்களாய்-பாஹ்ய குத்ர்ஷ்டி சமயங்களுக்கு -யதா பூதார்த்த வாதியான
வேதம் நிவர்த்தகமாய் இருக்கும் என்று -ஆகையாலே பிரதிவாதிகளுடைய நிரசனத்துக்கு உறுப்பான –வேதமாகிற
அழகிய தண்டையும் ஏந்திக் கொண்டு -கொழுமை -பெருமை -அன்றிக்கே -இங்கு சொன்னது சம்ஸ்க்ருத வேதமானாலும் –
கீழ் அருளிச் செய்த த்ரமிட வேதத்தோடு கூடின வேதம் என்றுமாம் -அப்படிப்பட்ட வேத ரூபமாய் -மகத்தாய் -அழகிதான –
கதையை -கையிலே எடுத்துக் கொண்டு -என்றபடி -ச காரத்தாலே கையிலே தண்டத்தை ஏந்திக் கொண்டு நின்ற

மாத்ரம் அன்றிக்கே –  அத்தால் பர்யாப்தி பிறவாமல் -காலாலே மிதித்தும் –

கொம்பாலே குத்தியும் பிரதிவாதிகளை சித்ரவதம் பண்ணுகைக்கு வந்தபடியை அருளிச் செய்கிறார் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்கிறபடி சர்வேஸ்வரன் -எப்போதும் திரு வாழியையும்-திருச் சங்கையும் ஏந்திக் கொண்டு இருக்கிறாப் போலே -இவரும் வேத ரூபமான பெரும் தண்டை
ஏந்திக் கொண்டு இருந்தார் காணும் –குவலயத்தே மண்டி வந்து ஏன்றது -நீங்கள் தன்னரசு நாடாக எண்ணி நடத்துகிற
ஆசேது ஹிமாசலமாக -வேங்கடாசல -யாதவாசல -சாரதாபீடாதி திவ்ய ஸ்தலங்களிலே எதிர்கொண்டு -பிரத்யவச்த்தானம்
பண்ணின வாதிகளை கட்டடங்க நிரசித்துக் கொண்டு வந்து -உங்கள் மேலே எதிர்த்தது -மண்டுதல்-தள்ளுதல்-
யேன்றுதல்-எதிர்த்தல் -வாதியர்காள்-பாஹ்ய குத்ர்ஷ்டி சமய நிஷ்டராய் கொண்டு வாதியர்களாய் உள்ளீர் –
உங்கள் வாழ்வு அற்றதே  -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
சிஷ்ய பிரசிஷ்ய பர்யந்தமாகக்  கொண்டு வர்த்திக்க வேணும் என்று நீங்கள் நினைத்து இருந்த உங்களுடைய
துர்மதங்கள் அடங்கலும் விநஷ்டமாய் போயின என்றபடி –சங்கர  பாஸ்கர யாதவ பாட்ட பிராபகர் தங்கள் மதம்-சாய்வுற வாதியர் மாய்குவர் என்னச் சதுர்மறை வாழ்ந்திடும் நாள் -என்று இவ்வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
கணதா பரி  பாடிபி -என்கிற ஸ்லோகமும் -காதா தாதா கதானாம் -என்கிற ஸ்லோகமும் இவ் வர்த்தத்துக்கு பிரமாணமாக-அனுசந்தேயம் –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று புறச் சமயத்தோர்களை
தொலைப்பதற்காக எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ்ப் பாசுரத்தில் .
அக்களிப்பு மீதூர்ந்து புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து
இராமானுச முனி யாகிய யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார் இந்தப் பாசுரத்திலே .
பத உரை –
எங்கள் இராமானுச முனி வேழம் -எங்களுக்கு நெருங்கிப் பழகலாம் படி வசப்பட்டு
இருக்கும் இராமானுச முனி யாகிற யானை
மாறன்-நம் ஆழ்வார்
பண்-பண்ணிலே -சேர்ந்ததாக
தரு -தந்து உதவிய
பசும் தமிழ் -பச்சைத் தமிழ் ஆகிய திருவாய் மொழியினால் விளைந்த
ஆனந்தம் -இன்பமானது
பாய் மதமாய் -பாய்ந்து ஒழுகா நின்ற மத நீராக
விண்டிட -பெருக
மெய்ம்மை கொண்ட -உண்மையே வாய்ந்த
நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி -சிறப்பு வாய்ந்த வேதமாகிற எழில் தண்டை எடுத்துக் கொண்டு
குவலயத்தே -பூமியிலே
மண்டி -எதிர் நிற்க ஒண்ணாது தள்ளி
வந்து என்றது -வந்து எதிர்ந்தது
வாதியர்காள்-வாதம் செய்யுமவர்களே
உங்கள் வாழ்வு அற்றதே -இனி உங்களுடைய வாழ்வு தொலைந்தது
வியாக்யானம்
பண்டரு மாறன் தமிழ்
மாறன் பண்ணிலே தருகிற பசும் தமிழ் என்று இயைக்க –
மாறன்-நம் ஆழ்வார்
பண்-ஸ்வரம்
அதனிலே தருதலாவது -அப்பண்ணிலே அமைவுறும்படிதருகை
பண்ணார் பாடல் இன் கவிகள்-திருவாய் மொழி -10 7-5 – –  என்று தாமே அருளிச் செய்தது காண்க .
இனி தருதல்-உண்டு பண்ணுதலாய் -மணம் தரு மலர் -என்பது போல –பண் தரு பசும் தமிழ் -என்று
இயைதலுமாம் -புஷ்பம் பரிமளத்தொடே அலறுமா போலே திருவாய் மொழி அவதரித்த போதே
பண் மினுங்கி யாயிற்று இருப்பது -என்று பண்ணார் பாடல் வ்யாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை
அருளிச் செய்தது-இங்கு நினைக்கத் தகும் .
மாறன் பண்டரு பசும் தமிழ் என்னும் இடத்தில் கபிலர் பாட்டு என்னும் இடத்தில் போலே –
செய்யுட் கிழமைக் கண் ஆறாம் வேற்றுமை தொக்க தென்று கொள்க .
பசும் தமிழ்-பசுமையான தமிழ் -பண்புத் தொகை -பசுமையாவது -செம்மை-செவ்விய தமிழ் என்றபடி .
பொருள் விளங்கு நடையில் உள்ள தமிழ் செவ்விய தமிழ் -என்க .
இனி —பசுமை   என்றும் மாறாத இளமையாய்க் கன்னித் தமிழ் என்னலுமாம் .
இனி —பசும் தமிழாவது -பிற மொழி கலப்பற்ற தூய தமிழ் என்று உரைத்தலுமாம் .
திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்
அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் -என்பது காண்க .
இனி தமிழில் முதல் நூல் எனத்தக்கது இது ஒன்றே என்பது கருதி தமிழ் நூல்களுக்கு தாயான
திருவாய் மொழியை பசும் தமிழ் -என்றார் ஆகவுமாம்-
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –
ஆனந்தம் –இராமானுச முனி வேழம்
பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார் க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –
எதனையும் லஷ்யம் செய்யாது -பெரிய மேனானிப்புடன் பரம பதத்தில் எழுந்து அருளி இருப்பவன்
தைர்ய பங்கம் பிறந்து பண்ணார் பாடலினால் வந்த ஆனந்தத்தால் மால் இரும் சோலையில்
மழ களிறாய் மதத்துடன் திரிவானாயின் -எம்பெருமானார் தந்து ஆழ்ந்த இதயத்தினிலே ஆனந்தம்
உள் அடங்காது வெளியே மத நீராய் வழிந்தோட பெருகு மத வேழமாய் -குவலயம் எங்கும்
வாதியரை நாடி மண்டி வந்து என்று நிற்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே –
தமிழ் -அதற்கு மேலே பசும் தமிழ் –அதற்கு மேலே பண் தரு பசும் தமிழ் -எல்லா வற்றிற்கும் மேலே மாறன்
பண் தரு பசும் தமிழ் -எம்பெருமானாரை மதம் பிடித்த பெரு வேழம் ஆக ஆக்குவதற்கு

இதற்கு மேல் என்ன வேண்டும் .திருவாய் மொழி அனுபவம் உள் அடங்காது வெளியே கண்களிலே ஆனந்த பாஷ்பமாய்ப் பெருக்கெடுத்த படி

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய  பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் -ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .
வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை –பாய் மதம் -வினைத்தொகை பாய்கின்ற மதம் என்று விரியும்

விண்டிட -விள்ளுதல் விரிதல் விரிவுடைய அதாவது பெருகி வர -என்ற படி .

இராமானுச முனி வேழம்
இரு பெயரொட்டுப் பண்புத்  தொகை  தொகை .இராமானுச முனி யாகிற வேழம் எங்க
முனி –மனனம் பண்ணுமவர்-அதாவது விடாமல் நினைந்து நைந்து உள் கரைந்து உருகிக்-கண்ணீர் மத நீராகப் பெருகுதற்கு இந்த மனனமே ஹேது என்க.இனிமுனி வேழம்-என்பதை முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
கோபிக்கிற யானை -என்று உரைத்தலுமாம் .ஆக எங்கள் வேழம் என்பதால் திருவாய் மொழி ஓதும்
வைணவர் கிட்டிக் கட்டி அணைக்கலாம் படியான கனிவும் –
முனி வேழம் என்பதால் இவ் வேழம் வாதியரை திறத்து நெருங்க ஒண்ணாத முனிவும் கொண்டது-என்றும் காட்டப்பட்டன .
இங்கே ஒரு கேள்வி எழுகிறது .எம்பெருமானாரை பற்றினவர்களே –துயரங்கள்  முந்திலும் முனியார் -என்றும்
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
பற்றப்படும் எம்பெருமானாரே முனிவும் கனிவும் உள்ளவராக இங்கே காட்டுவது எங்கனம் பொருந்தும் –
என்பதே அந்தக் கேள்வி –
இதனுக்கு விடை இது –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க .
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி
வேத நூல் ஓதுகின்றது உண்மை -திருச்சந்த விருத்தம்-என்றும்
யதா பூதவாதி ஹி சாஸ்திரம் -உள்ளபடியே பேசும் இயல்புடையது சாஸ்திரம் -என்றும் சொல்வதற்கு ஏற்ப –
மெய்ம்மை கொண்ட வேதம் -என்றார் .பிரத்யஷம் அனுமானம் என்னும் ஏனைய பிரமாணங்களை விட –
வேத பிரமாணத்திற்கு உள்ள தனி சிறப்பு பற்றி -அதனை நல் வேதம் -என்றும் விசேடித்தார் .
விளக்கின் ஒளி -ஜ்வாலை -ஒன்றே என்று தோன்றும் ப்ரத்யஷ பிரமாணம் -எறியும் திரியின் பகுதியும்
எண்ணையின் பகுதியும் -ஆன வெவேறு சாதனங்களால் சாத்தியம் ஆதலின் ஒளி வேறு பட்டே யாதல்
வேண்டும் -என்னும் யுக்தியினால் பாதிக்கப் படுவது போலேவும்
நெருப்பு சுடாது -அதுவும் ஒரு பொருள் ஆதலின் -குடம் என்னும் பொருள் போலே -என்னும்
அனுமான பிரமாணமும் நேர் அனுபவத்தால் பாதிக்கப் படுவது போலவும் –
வேத பிரமாணம் மற்று எதனாலும் பாதிக்கப் படாமை வேத பிரமாணத்தின் தனிச் சிறப்பாகும் .
சுடர் மிகு சுருதி -என்று நம் ஆழ்வார் அருளிச் செய்து இருப்பது அறியத் தக்கது .
இவ் விஷயம் -தாழ்வு ஓன்று இல்லா -16- பாசுர உரையில் முன்னரே விளக்கப் பட்டு உள்ளது .

அது இங்கே நினைவுறுத்தப் படுகின்றது .பிரத்யஷ பிரமாணம் போலே

இந்திரியங்களுக்கு புலனாகும் விஷயத்தையோ
அனுமான பிரமாணம் போலே இந்திரியங்களுக்கு புலனானதைக் கொண்டு புலனாகாத விஷயத்தை அன்றி
எவ்வகையிலும் புலனாகாத அதாவது -நேரிலோ -நேரில் கண்டதன் மூலமோ அறிந்து கொள்ள இயலாத

அல்வ்கிகமான வற்றை உள்ளவாறு உணர்த்தும் வேதத்திற்கு உரிய தனிச் சிறப்பாகவுமாம் .

 இராமானுச முனி வேழம் ஏந்திய தண்டு மெய்ம்மை கொண்ட வேதமாய் இருந்தமையால்
பொய் நூலை மெய் நூல் என்று   ஓதும் -வாதியர் வாழ்வு அற வேண்டியது ஆயிற்று .-மெய்க்கு எதிரே பொய் நிற்க இயலாது அன்றோ –
வேழம் பிடித்த தண்டு கொழுமை வாய்ந்தது .
பண்டையதாயினும் வேதம் வேழம் கொண்டதும் கொழும் தண்டம் ஆயிற்று –
எம்பெருமானார் கைப்பட்டதும் கிளவியான சுருதி அணங்கு பருவ மங்கையாய்
களிப்புருகிறாள்.
இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ் .
மதம் பிடித்த யானை வேதக் கொழும் தண்டத்தை ஏந்திக் கொண்டு வாதியர்களை நாடி
வாழ்வு அறுக்க முற்பட்டு விட்டது .மதம் கொண்ட வேழம் –அது தன கையில் தாண்டும் கொண்டது —
இனி வாதியர் வாழ்வது எங்கனம் .
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து .
மாறன் -அருள் என்னும் தண்டத்தால் அடித்து -தன விரோதியான வல்வினையை
கானும் மலையும் புகக் கடிந்ததாகக் கூறுகிறார் .
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் -தானோர்
இருளன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26- என்பது அவர் திரு வாக்கு .
எம்பெருமானாரோ அவர் திருவாய் மொழியை அனுபவித்த ஆனந்தத்தால் தெளிவுறக் கைக் கொண்ட
வேதக் கொழும் தண்டால் வைதிகர்கள் உடைய விரோதிகளான வாதியர் அனைவரையும் மீண்டும்-தலை தூக்க ஒட்டாது வாழ்வு அறச் செய்கிறார் ..
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார் .மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து .
எந்த வேதங்கள் -அற்ப ஸ்ருதர்கள் இடம் இருந்து -அற்பமே கேள்வி யறிவு உள்ளவர்கள் இடம் இருந்து –
பயந்தனவோ -அந்த வேதங்களைக் கொண்டே அவர்களை அஞ்சி அழிவு உற செய்கிறார் எம்பெருமானார் .
வைதிகர் அல்லாத வாதியர்களுக்கு த்ரி தண்டம் வஜ்ர தண்டமாய் அமைகிறது .
எம்பெருமானார் தரிசனம் -த்ரி தண்டி மதம் -என்று பிரசித்தம் அன்றோ –
குவலயத்தே மண்டி வந்தேன்றது
கேட்பார் அற்று தம் நெஞ்சில் தொன்றினதையே மதமாகக் கற்பித்து வாதியர்கள் தம்
இஷ்டப்படி நடாத்தின நிலத்திலே -இனி ஒதுங்கிப் பிழைக்க வழி இல்லாமல் –
இமவந்தம் தொடங்கி-இரும் கடல் அளவும் -இராமானுச முனி வேழம் மண்டி வந்து
வாதியர்களாகிய உங்களை நாடி எதிர்ந்தது -என்றபடி .
மண்டி-தள்ளி -விரிந்து என்னவுமாம் .
என்றது -கிளர்ந்து எதிர்ந்தது
தான் போலும் என்று எழுந்தான் தாரணி யாளன் -பெரிய திரு மொழி -4 4-6 – – என்னும்
திரு மங்கை மன்னன் ஸ்ரீ சூக்தி காண்க .
வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே –
வாதியர்களுக்கு வாழ்வு ஆவது சீடர்களும் அவர்களை பின் பற்றுவார் பலருமாக நாடு எங்கும்
மல்கி நின்றல் ..அவரவர் மதம் பரவிக் காலூன்றி நிற்கும் வாதியர் களுடைய வாழ்வு முடிந்ததே
பயன் அற்று போயதே என்றபடி
மாறன் பசும் தமிழினால் விளைந்த ஆனந்தம் மத நீராக பெருக –
அம்மதத்தோடேவேதக் கொழும் தண்டைக் கொண்டு எம்பெருமானார் வாதியரை வாழ்வு அறுத்ததாக-இங்குக் கூறப்பட்டு இருப்பது குறிக் கொள்ளத் தக்கது .திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து
அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார் என்பது இதன் கருத்தாகும் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

பிடி என்றார் முன்பு/ இங்கு களிறு என்கிறார்-எதிர்த்து  வரும் முட்டி தள்ளி விடும்–மத ஜலம் வழியும் ஆனந்த கண்ணீர்/வேத வேதாந்தம் தண்டங்களாக கொண்டு-த்ரி தண்டம்-//ப்ரீதி பிரகர்ஷத்தல் ,பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற வாதிகளை பார்த்து

–ராமனுஷ முனி ஆகிற யானை -உங்களை நாடி கொண்டு இந்த  பூமியிலே வந்து எதிர்ந்தது–உங்கள் வாழ்வு போயிற்று/ சாஸ்திர கை கொண்டு வந்தார்/மெய்ம்மை கொண்ட- பொய்யை ஒழிக்க-  மெய்ம்மை கொண்ட நல் வேதம் என்கிற கொழும் தண்டம்…./நல்லோருக்கு அடங்கி ஸ்ரீ ரெங்கத்தில் இருக்கும் அப் பொழுது

அப் பொழுது ஆனந்தம் பாய்ந்து வர-மதம் பிடித்து திரு நாரயண புரம் திருமலை காஷ்மீர் போய்- பண் தரு-ராகம் இன் இசை- இளமை பசகு படைத்த தமிழ்/உண்டார் களித்தே மயக்கம் மதம் பிடித்த யானை போல ஓடி வந்தார் ../எங்கள்-சம்பந்தம்-ஆனந்தம் ஏற பாடுகிறார்../யானை-வேகம்- தண்டு- குடித்த- இசை நாலையும் பார்த்து பயப் படணும்/ மாறனின் -நான்கு பிர பந்தங்களையும் சேர்த்து சொல்கிறார் –/எங்கள்-அடங்கிய ஆண் யானை என்கிறார்/இதில் /மண்டி வந்து என்றது உங்களுக்கு/கட்டவும் அடிக்கவும் கண்ணன் போல/கூடாரை வெல்லும் சீர் கூடியவர் இடம் தோர்ப்பான்/ஆறும் ஓர் நிலைமையென அறிவரிய எம்பெருமான்.-.ஆறும் ஓர் நிலைமையென அறிவு எளிய எம்பெருமான்/ராமானுச முனி வேழம் -மூன்று அர்த்தம்/மாறன் பண்ணாலே தரும் -இன் இசையே உற்பத்தி கொடுக்கும்-..திரு துழாய் அங்குரிக்கும் பொழுதே பரி மளிக்கும் போல-சாம வேதமும்  இசையும் பிரிக்க முடியாது

/பாய் மதம்-ஒழுகா நின்று உள்ள மதம்/விண்டிட -விஸ்தாரம் அடைய -வளர -அவிகாராய  என்று இருப்பவனும் தென்னா தென்ன ஆடுவானே-ஸ்வாமி  இருக்கும் நிலை கேட்கணுமா ../சத்தியமே -வேத நூல் ஓதுகின்றது உண்மை –பொய்மை அறுக்க-இருப்பதை இருப்பதாக-இருப்பதை இல்லை அத்வைதம் இல்லாததை இருக்கு என்பர்-அபூர்வம் தோற்றி மகா பூர்வம்  என்பர்–மீமாம்சன் வாதம்/கயிறு-சர்ப்பம்- பார்த்தவன் அபிப்ராயத்தாலே இதுவும் உண்மை என்பார் ஸ்வாமி-சிதைந்து ஓடினரே -பிடித்து வாதியர்காள் என்கிறார் அவர்களை பார்த்து.-.வேரோடு உங்கள் வாழ்வு அற்று போனது என்கிறார்–எண்ணம் மாறும் வரை அந்த எண்ணம் மெய் தானே/விலக்ஷணமான வேதம்-பிரமாணங்களில் நல்லதுஉளன் சுடர் மிகு சுருதியுள்/

கொழும் தண்டம் –கொழுமை எழில்– இரண்டும் சங்கோடு சக்கரம் ஏந்தி தட கையன் போலே -அழகும் வீசினால் ஆயுதம் /அது போல தண்டம்– வஜ்ர தண்டம் வாதியருக்கு முக்கோல் தன் அழகு-வேகம் கண்டு பயந்து.. சாஸ்திரம் கை வைத்த இடம் தோறும்..வாழ்வு-வாழை அடியாக சிஷ்யர்கள் இல்லாமல் போனதே அவர்களுக்கு-லோகம் பிழைத்ததே -ஏகாரம் ஈற்று அசை யாய் தலை கட்டுமாம்/பண்டே உள்ளதாய்-பண் தரு-பண்டு அருமையான மாறன் பசும் தமிழ்-12000 தடவை சொல்லி தான் நாத முனிகள் பெற்றார்-அருமை-அது ஒண்ணாது…பூர்வ கால வாசி தான் குறிக்கும் காலத்தில் இருந்த  வஸ்து குறிக்காது/பண்டு காமனவாரும்-போல/விண்டிட -விள்ளுதல்-விரிதல்/மண்டுதல்-தள்ளுதல்-ஒரு சாஸ்திர வாக்கியம் கொண்டு பல வற்றை தள்ளினாரே /

எங்கள் ராமானுசன் வேழம்-என் எம் எங்கள் பாட்டு தோறும் விக்ரக திருமேனி- விஷய பிரேமத்தால்அங்குசம்– முன் வைக்கிறார்-மத்த கஜம் -அப்ராக்ருத கஜம்..ஞான சங்கோசம் இன்றி-/தவாறன வழியில் போவாரை உபதேசித்து,-நிரசித்து , நல் வழிக்கு போவோரை ரஷித்து-முனி மனன சீல யானை/விரோதிகளை சித்ரவதை -வெட்கி ஓட வைப்பார்– பண்ணவும் பரிகிரவர்களை பட்டாபிஷேகம் பண்ணியும்–மாலை விழுந்தால் ராஜா /கண்ட பேரை- ஸ்வாமி கடாஷித்த பேரை/ராமானுச முனி வேழம்/ ராமானுசர் முனிகின்ற வேழம் /இரு பெயர் ஒட்டு பண் தொகை/எங்கள் வேழம்-அனுகூலர் வேழம் மண்டி -பிரதிகூலம். முனியார் துயரங்கள்- நடு நிலை யாளர் என்பாரே/செற்றாருக்கு  வெப்பம் கொடுப்பாய் துயில் எழாய்/செற்றார் திறல் அழியும் கோவலன்/ அறுப்பதே கருமம் கண்டாய்/பராங்குச பராசரர் -ஹிம்சிகிறார்-வேதவிருதமாய் பேசுவோரை /பகவத் பாகவத விரோதி என்பதால்.-வைஷண்யம்  இல்லை/எங்கள்-திரு வாய்  மொழி அறிய கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ்  கடல் ஞாலத்து உள்ளே--அனைவருக்கும் எங்கள்

/மாறன் தமிழ்– ஆறாம் வேற்றுமை தொக்கி இருக்கும்/எழுத்து அசைசீர்பந்தம்  அடி தொகை ஓசை  நிரை  .. இனம் யாப்பு  பண் இசை தாளம்-யாழின் இசை வேதத்தின் இயல் -இது எல்லாம் இதுக்கும் உண்டு/அமையும் படி பாடினார் /பாட்டினால் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்/துருவன் பகவத் அனுக்ரகத்தால் பாடினது போல/ஆனந்த  மதம்  வழிந்து -தனி கேள்வி இல்லை துணை கேள்வி /வியாசர் துவாபர யுகம் தோறும் வெளி இடுவது போலமாறனும் கலி யுகம்  தோறும் வெளி இடுவார்- தத்தாத்தார்யன்-பிராமணன் /முதல் யுகம்/ராமன்-சத்ரியன் /கண்ணன்-வைஸ்ய/மாறன் -கலி யுகம்

/புராணம் பண்டு/ அருமை-/மால் தனில்-மாறனில்  மிக்கு ஓர் தெய்வம் உளதோ/பசுமை செவ்வி இளமை தூய்மை இயற்கையாக தாயை போன்ற-தமிழ் நங்கை சிறு  முனிவர் வாய் மொழியின் செய்–வள்ளுவர் அகஸ்தியர் ஒவ்வையார்/கன்னி தமிழ் தாய் தமிழ் இரண்டும்/ஆனந்தம் பாய் மதம்-

லஷ்மி நாதன்-கடல்-கருணை நீர் ஆழ்வார் பருகி நாதமுனி- பெரிய முதலியார் குன்று/மணக்கால் நம்பு உய்ய கொண்டார் அருவி —ஆளவந்தார் ஆறு —ஐந்து சிற்றாறுகள்-மூலம் ராமானுஜர் ஆகிய பொய்கையை-ஏரி பூரித்து 74  மதகு கள் வழியே சம்சாரிகளை ரஷித்ததாம்-அழகிய தண்ணீர் /அடி பணிந்தோரை  அவரே தேர்ந்து எடுத்து இருக்கிறார்

அந்த  ஸ்வாதந்த்ர்யம் /கவி அமுதம்/தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலை/அமுதம் உண்டு விளைந்த ஆனந்த மதம் வழிய-விண்டிட எக் காலத்திலும் எவ் இடத்திலும்-பரத்வம் காட்டி கொடுக்கும் நல் வேதம்-/தண்ணீர் அக்நி பஞ்ச பூதம் அதனால் குளிர்ந்து இருக்கும் தண்ணீர் போல-/மெய்ம்மை -சர்ப்பம்-கயிறு பிரமம் /ஞானம் நிவர்தகம் /பாக்ய குதிருஷ்டிகள் பிரமம் போக்குவது போல-சேதன அசேதன விசிஷ்ட பூதன் -தண்டாக   ஏந்தி  கொண்டு தீப வஜ்ர /அருள் என்னும் தண்டால்/திரு வாய் மொழியே தண்டாக கொண்டு/சகாரத்தாலே -தண்டமும் ஏந்தி-தண்டு + உம் =தண்டும்/கதையை கையில் எடுத்து கொண்டு நின்ற மாதரம் அன்றிகே-அலங்காரமாக கொண்டு வந்தது போல அன்றி-சங்கோடு சக்காராம் ஏந்தும் தட கையன்–காலாலே மிதித்தும் -வேத ரூபமான தண்டை ஏந்தி வைத்து கொண்டு எதிர்த்தது–தன் அரசாக எண்ணி சேது ஹிமாசலம்-வெங்கடாசலம் சரஸ்வதி யாதவாசலம்-திவ்ய தேசங்களில் பிரதி வாதங்களை நிரசனம் பண்ணி/சிஷ்ய பிர சிஷ்யர்  கூட்டம் அழிய -முடித்தார்

/சங்கரர் பாஸ்கரர் யாதவர்–சாய்வுறு வாதியர் மாய்குவர் சதுர் மறை வாழ்ந்திடும் நாள் /தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன்-அது கண்டு பொறுத்து இருப்பான் -கோன்/எதிகளுக்கு கோனாகி-–தன்னை தான் பாடி-பாசுரங்களின் பலத்தால் /கலி மிக்க -வலி மிக்க சீயம்மேல் சொல்ல போகிறார்-கஜ -கதி இன்று சிம்க-கதி பின்பு /ஆழ்வார் பாசுரம் கொண்டு  ஸ்வாமி பண்ணியதும் பார்க்கணும்-மதம்-நான்கு–விதம் உண்டே – அழகன்  பிறப்பு தனம் வித்யா போல /-ஆனால் இங்கோதமிழ்– பசும் தமிழ் –பண் தரு தமிழ் –மாறன் தந்த  பண் தரு தமிழ் போன்ற நான்கும்-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: