அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-49-ஆனது செம்மை யற நெறி -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

நாற்பத்தொன்பதாம் பாட்டு –அவதாரிகை –
எம்பெருமானார் விரோதிகளை நிரசித்துக் கொண்டு தம் திரு உள்ளத்தின் உள்ளே நிரந்தர வாசம்-பண்ணி அருளுகிற மகா உபகார அனுசந்தானத்தால் வந்த ப்ரீதியையும் -அந்த ப்ரீதியினுடைய அஸ்த்தையர் ஹேது வில்லாமையையும் -அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இதில் –
அவர் திருவவதரித்து அருளின பின்பு-லோகத்துக்கு உண்டான சம்ருத்தியை அனுசந்தித்து-இனியராகிறார் .
ஆனது செம்மை யற நெறி  பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –
அழகிய தாமரைப் பூக்களில் உண்டான தேனாகிற ஆறு நீராகப் பாயா நின்று உள்ள
வயல்களை உடைத்தாய் -திருச் சோலைகளும் திரு மதில்களும் -திருக் கோபுரங்களும் -திரு மாளிகைகளும் ஆன சமுதாய சோபையாலே தர்சநீயமாய் இருக்கிற
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய திருவடிகளை
சிரசா வஹித்துக் கொண்டு -தாம் அதிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணா நின்றுள்ள –
எம்பெருமானார் இந்த ஸ்தலத்திலே அவதரித்து அருளி –
வைதிகம் ஆகையாலே செவ்வியதாய் உள்ள தர்ம மார்க்கம் முன்பு அழிந்து கிடந்தது
மீண்டும் உண்டானது -வேத பாஹ்யம் ஆகையாலே அயதாவான ஷட் சமயமும் முடிந்து போயிற்று -வைதிக தர்மம் தலை சாய்ந்து -பாஹ்ய சமயம் மேலிடுகைக்கு உடலான க்ரூரமான கலி யுகமானது –
கலியும் கெடும் -திரு வாய் மொழி – -5 2-1 –  என்கிறபடியே நசித்தது –
இவர் அவதரித்து அருளின பின் லோகத்துக்கு உண்டான சம்ருத்தி இருந்தபடி ஏன் என்று கருத்து –
பொன்றுதல்-முடிதல்
பொன்மை யறு சமயம் -என்று பாடமான போது -வேத பாஹ்யத்வேன பொல்லாதாய் இருக்கிற-ஷட் சமயம் என்றபடி –
திருவடித் தாமரை இவருக்கு தாரகம்-வயல் திவ்ய தேசத்துக்கும் தாரகம் தாமரை -அதில் பெருகும் தெனாலி வளரும் வயல் –
யதிராஜருக்கு ஏற்ற கிரீடம் -அரசு அமர்ந்தான் ஆதி சூடும் அரசு -உபய விபூதி நாதத்வம் ஸூ சகம் அத்தாட்சி தென்னரங்கன் கழல் –
ஆக்குவது -ஆனது -தானே ஆனதே ஸ்ரேஷ்டம்-தலத்தில் உதித்ததுமே இவை தானாக ஆனது என்றபடி/ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை யறு சமயம் போனது பொன்றி யிறந்த்து
வயலில் -ஜீவனுக்கு நெல் -ஜீவனத்துக்கு -வேதாந்தம் உஜ்ஜீவனத்துக்கு -எம்பெருமானார் நியமித்த சிம்ஹாசனாதிபதிகள் வயல் ஸ்தானம்
கோயிலைச் சுற்றி வாழ்பவர்கள் -தாமரைப் பூக்கள் மலிந்து இருப்பது போலே
-தஹரம் விபாப்மம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்யஸமஸ்தம்-என்றும் போதில் கமல வன்னெஞ்சம் -என்றும்
பக்தா நாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -என்றும்
சொல்லப்படும் ஹிருதய புண்டரீகம் மலர்ந்து திவ்யார்த்தங்கள் என்னும் தேன் அமுத வெள்ளம் பெருகா நிற்கும்
நம் போன்ற சிஷ்யர்கள் -கமலத்தேன் வெள்ளத்தை வண்டுகள் பருகிக் களிக்கும்-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –
-திவ்யார்த்த அமிருத பிரவாஹத்தை ஆச்வாதனம் பண்ணி ஆனந்திக்க குறை இல்லை –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த உரை –

அவதாரிகை -எம்பெருமானார் தம்முடைய பிராப்தி பிரதிபந்தங்களை எல்லாம் -போக்கி தம் திரு உள்ளத்திலே-நிரந்தர வாசம் பண்ணுகிற மகோ உபகாரத்தால் வந்த ப்ரீதி பிரகர்ஷத்தையும் -அந்த ப்ரீதி எப்போது உண்டாகக் கூடுமோ –
என்று அதி சங்கை பண்ணினவரைக் குறித்து -அதினுடைய சாஞ்சல்ய ஹேது இல்லாமையும் -கீழ் இரண்டு
பாட்டுக்களாலே அருளிச் செய்து -இதிலே -எம்பெருமானார் திருவவதரித்து அருளின பின்பு –வேதத்துக்கு உண்டான-சம்ர்தியையும் -துர்மதங்களுக்கும் கலி தோஷத்துக்கும் உண்டான விநாசத்தையும் அனுசந்தித்து -இனியராகிறார் –
வியாக்யானம்பூம் கமலத் தேன் நதி பாய் வயல் -அழகிய தாமரைப் பூக்களில் உண்டான தேனாகிற ஆறு விளைநீராக-பாயா நின்றுள்ள வயலாலே சூழப்பட்ட –தென்னரங்கன் -திரு மதிள்களும் திருக் கோபுரங்களும் – திருச் சோலை களுமான –
சமுதாய சோபையாலே -தர்சநீயமான கோயிலை இருப்பிடமாக இருக்கிற பெரிய பெருமாளுடைய -கழல் சென்னி வைத்து –
திருவடிகளை தம்முடைய சிரச்சிலே வைத்துக் கொண்டு -கொக்குவாயும் படு கண்ணியும்இசைந்தால்  போலே ஆய்த்து

திருவடிகளும் திரு முடியும் சேர்ந்த படி -அன்றிக்கே ராஜாக்கள் சிம்காசனத்தில் -ஆரோகிக்கும் போது-ஆதி ராஜ்ய சூசகமான அபிஷேகத்தை-தம் தாமுடைய சிரச்சுக்களில் வைத்துக் கொண்டால் போலே -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்னும்படி பரம ப்ராப்யமான -அவர் திருவடிகளை -தம்முடைய உபய விபூதி ஐஸ்வர்ய சூசகமாம்படி-திரு முடியிலே வைத்துக் கொண்டார் என்னவுமாம் –தான் அதில் மன்னும் -தாமும் அதே நிஷ்டையிலே-சூப்ரதிஷ்டராய் திருவடிகளிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணா நின்று உள்ள –இராமானுசன் -எம்பெருமானார் –இத் தலத்து உதித்த –வேதோக்த தர்மங்களுக்கு எல்லாம் சாங்கர்யம் வரும்படி வேத வ்ருத்தங்களான-ஷட் சமயங்களும்  வியாபித்து -காலியானது -சாம்ராஜ்யம் பண்ணிக் கொண்டு போருகிற இந்த மகா பிர்த்வியிலே -திரு வவதரிக்கவே –ஆனது செம்மை அற நெறி -அற நெறி செம்மை யானது -முன்பு அழிந்து போன வேதோக்தமான-சமீசீன தர்ம மார்க்கம் மீண்டும் உண்டானது -அல்ப ச்ருதராலே ப்ரதாரணம் பண்ணப்பட்ட  வேதம் எல்லாம் இவராலே ருஜூவாக திருந்தி -ததுக்தி தர்மபரமானது சமீசீனமாய் பிரதிஷ்டிதமாய் இரா நின்றது -ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாபநாசார்யார் இறே இவர் –பொய்மை யறு சமயம் போனது பொன்றி –வேத பாஹ்யம் ஆகையாலே அயதாவான-ஷட் சமயமும் முடிந்து போய்த்து –பொன்றுதல்-முடிதல் –பொன்மை யறு சமயம் -என்ற பாடம் ஆனபோது -பகவத் ஆக்ஜ்ஜாதி லங்கனம் பண்ணினவர்களை -ப்ரம பிரமாதங்களாலே நசிப்பிக்க கடவதான அப சித்தாந்தம் -என்றபடி –இறந்தது வெங்கலி -கீழ் சொன்னபடி அஞ்ஞா நத்தை விளவிப்பிக்குமதாகையாலே அதி க்ரூரமானது-நசித்து போய்த்து -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அருளிச் செய்தார் இறே நம் ஆழ்வாரும் .ஆசி நோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரான் ஸ்தாபயத்ய்பி-ஸ்வய மாசாரதேயஸ்து ச ஆசார்ய உதாஹ்ர்த -என்று இறே ஆசார்ய லஷணம் இருப்பது –  அது இவர் இடத்திலே காணும் நிறம் பெற்றது –புண்யம் போஜ விகாசாய  பாபத்வாந்த  ஷயாயச-ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர –என்னக்கடவது இறே –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
இரு வினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற-இருந்தான் -எனக்காரும் நிகரில்லையே -என்று எம்பருமானார் செய்த மகா உபகாரத்தை-அனுசந்தித்தனால் வந்த ப்ரீதியையும் –
இனி நாம் பழுதே யகலும் பொருள் என் -பயன் இருவோமுக்கும் ஆனபின்னே -என்று
அந்த ப்ரீதி குலைதலுக்கு காரணம் இல்லாமையின் நிலை நின்றமையையும்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே கூறினார் –
இதில்-எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை
கூறி இனியராகிறார் .
பத உரை –
பூம் கமலம் -அழகிய தாமரை மலர்களில் உண்டான
தேன் நதி -மதுவாகிய ஆறு
பாய்-நீராகப் பாய்கின்ற
வயல்-வயல்களை உடைய
தென்னரங்கன் -அழகிய திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் உடைய
கழல்-திருவடிகளை
சென்னி வைத்து -தலை மேல் கொண்டு
தானதில் மன்னும் -தாம் அத்திருவடிகளில் இடைவிடாது பொருந்தி இருக்கும்
இராமானுசன் -எம்பெருமானார்
இத்தலத்து -இவ்வுலகில்
உதித்து –அவதரித்து அருளி
செம்மை -நேர்மையான
அற நெறி -தர்ம மார்க்கம்
ஆனது -அமைந்தது
பொய்ம்மை -பொய்யான
அறு சமயம் -ஆறு மதமும்
பொன்றிப் போனது -அழிந்து போய் விட்டது
வெங்கலி -கொடிய கலியுகம்
இறந்தது-அழிந்தது
வியாக்யானம் –
ஆனது செம்மை அற நெறி –
அற நெறி -அறமாகிய நெறி
அறமாவது -நன்மை பயப்பதாக வேதத்தின்மூலமாகவே உணர்த்தப் பெறுவது -வைதிக மார்க்கம் என்றபடி
ஆனது -அழிந்து கிடந்தது மீண்டும் உண்டாயிற்று -செம்மை யானது என்னவுமாம் –
இவர் அவதரிப்பதற்கு முன்பு அற நெறி செவ்வி கேட்டு கிடந்தது -மேலே பொய்ம்மை அறு சமயம்-பொன்றிப் போனது -என்று கூறுவதால் அற நெறி என்பது போதரும் .
இராமானுசன் உதித்து ஆக்கினான் என்னாது ஆனது என்றமையால் அவருக்கு இதில் அருமை இன்மை-தோன்றுகிறது  –அற நெறி -வேதம் கூறும் மார்க்கம்
வேத மார்க்க பிரதிஷ்டாபனாசார்யார் அன்றோ இவர் –
பொய்ம்மை அறு சமயம் பொன்றிப் போனது –
புறச் சமயங்கள் கூறுவன பொய்யாய் இருத்தலின் அவை –பொய்ம்மை அறு சமயம் –எனப்பட்டன –
பொய் நூலை மெய் நூல் என்று ஒன்றும் ஓதி -என்றார் திரு மங்கை மன்னனும் –
பொன்மை யறு சமயம் -என்னும் பாடத்தில் -மறை நெறிக்குப் புறம்பாய் இருத்தலின் பொல்லாத-அறு சமயம் என்றபடி –
இறந்தது வெங்கலி
புற நெறியை ஆக்கி -அற நெறியை அளிக்க இடம் தந்தது பற்றி –வெங்கலி-என்கிறார்.
கலவ் சந்கீர்த்ய கேசவம் -கலி யுகத்தில் கேசவனைப் பாடி -என்றபடி நாம சங்கீர்த்தனத்துக்கு-இடம் தரின் நற் கலியாம் -இறந்தது என்கிறார் உயிர் உள்ளவன் போல் அது படுத்திய பாட்டை நினைத்து –
பூம் கமல –மன்னும் இராமானுசன்
தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவான அல்ல -அவை தம்மிடத்து தோன்றிய
தாமரை மலரில் இருந்து பெருகும் தேன் பாய விளைவான -அதாவது
தாமரையே தமக்கு தாரகமாகக் கொள்வான –
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானாரும் தென்னரங்கனது தேனே மலரும்
திருப்பாதத்தை தலை மேற்கொண்டு அவையே தாரகமாக மன்னி உள்ளார் –
கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது
சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரி யாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி -பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை -தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி இவர் சென்னியின் வைத்துக்-கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –
இத்தலத்து உதித்து
உதித்து என்றமையால் இவர் அவதாரம் -பகவத் அவதாரம் போலே காணும் என்கிறார் –
உதித்து ஆனது செம்மை அற நெறி –
சூரியன் உத்திது அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-
இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்

தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: