அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-19-உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும்-இத்யாதி ..

பெரிய ஜீயர் உரை

பத்தொன்பதாம் பாட்டு -அவதாரிகை –
ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய் மொழியே –என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்-
இருக்கையாலே -சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான
சர்வேஸ்வரனும் -ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி –
ச்வபாவங்களின் உடைய அடைவிலே -உபகரித்து அருளின -திராவிட வேதமான திருவாய் மொழியே
என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற எம்பெருமானார் எனக்கு
நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

மாறனுக்கு விளங்கிய -மயர்வற மதிநலம் அருளப்பட்டவர் என்றபடி -தேவார்த்தம் -திருவாய் மொழி -தீர்த்த சரணாகதி -நித்ய சிந்தையந்தி -அன்றோ இவர் –
வெறி தரு பூ -பூ மகள் -நாதன் -பரிமளம் வடிவு -திருத் துழாய் தரித்த நாதன் என்றுமாம் -நெறி தரும் -சாத்விக்க சாத்விக்க -தரும் செந்தமிழ் ஆரணம் -அறிதர நின்ற -அனைவரும் அறிந்த பின்பு தரித்த ராமானுஜர்-12–பாசுரங்களால் -12-ஆழ்வார் சம்பந்தம் சொல்லி -இந்த பிரகாரணம் முடிகிறது -உறு துணை -என்றவர் –ப்ரீதி காரித்த கைங்கர்யம் விட திருவாய்மொழி நிலை நிற்க எம்பெருமானார் திருவடி சேர்வோம் என்றதாயிற்று என்றுமாம் -கீழே தண் தமிழ் செய்த நீலன் என்று பெரிய திருமொழி முதலான திவ்ய பிரபந்தங்கள் சம்பந்தம் சொல்லி இதில் -செம் தமிழ் ஆரணவம் -இவையே ஆரமுது-ஸ்வாமிக்கும் நமக்கும் -உறு -உயர் -விசேஷணம் அனைவருக்கும் -அவனுக்கு இவற்றையே பூ மகள் -ஸ்தானத்தில் சொல்லி ஸ்ரீ யபதி என்றவாறு

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான
ஸ்ரீயபதியும் – நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை-அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

வியாக்யானம்
-உறு பெரும் செல்வமும்
-அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே
அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே -தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் -ஸாஹி ஸ்ரீ ர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –
ப்ராப்தமாய் –பெரும் -ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் -ஒரு நாயகம் ஓட வுலகுஉடன் ஆண்டவர்-கரு நாய்கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -என்றும்
சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே -கொள்ளக் குறைவற்று இலங்கி –
கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –செல்வமும் -சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –
தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே -வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம்
எல்லாரும் விரும்புவது -அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் -பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே பிரியத்தையே
நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே -வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –
என்னும் அளவும் ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்
தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –
உயர் குருவும் –
புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே
பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே -அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு
உபாதேய தமனாய் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது -உயர்த்தியை உடையனானதும் –
சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் -அந்தகார
நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –
வெறி தரு பூ மகள் நாதனும்
-வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசேஷணமாய்-பரிமளமான
புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான பெரிய பிராட்டியாருக்கு -பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே
வல்லபனான சர்வேஸ்வரன் -என்றபடி –அன்றிக்கே –வெறி தரு பூ மகள் -வெறி –என்கிற பதம் பிராட்டிக்கு
விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே -திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய பெரிய பிராட்டியார்
என்னவுமாம் -அன்றிக்கே –வெறி தரு பூ மகள் நாதனும் -வெறி –என்கிற பதம் ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –
இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
-மாறன் விளங்கிய சீர் நெறி
தரும் செந்தமிழ் ஆரணமே என்று –மாறன் -நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்ட
திரு நாமம் ஆய்த்து -இது -இப்படிப் பட்ட நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக
கிருபையாலே உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற –
நம் ஆழ்வாருக்கு -ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது அன்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி -ஆகையாலே இறே விளங்கிய –என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி -சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய் -நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே -மாறன் விளங்கிய சீர் நெறி தரும் -ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்குபிரகாசித்த
பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் -அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத்
சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்யமகாமுனே
சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத -லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது -எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது – நெறி -ஒழுக்கம் அதாவத்
ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி –தருகை -உடைத்தாகை –செந்தமிழ் ஆரணமே என்று -ஆதி மத்திய
அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் எம்பெருமானாருடைய பிரதி பத்தி
-எம்பெருமானார்
தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி –இந் நீணிலத்தோர் அறிதர நின்ற -இவ் அர்த்தத்தை விச்தீர்னையான
இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே -இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி -இராமானுசன் –எம்பெருமானார் –
எனக்கு ஆரமுதே -அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீ ய பதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி நின்ற எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-

பத உரை
உறு பெரும் செல்வமும் -சீரிய பெரிய சொத்தும்
தந்தையும் -பிதாவும்
தாயும் -மாதாவும்
உயர்குருவும் -மேன்மை தங்கிய ஆசார்யனும்
வெறி தரு -மனம் கமழுகிற
பூ மகள் -பூவில் பிறந்த பெரிய ப்ராட்டியாருடைய
நாதனும் -கேள்வனாகிய தெய்வமும்
மாறன்-நம் ஆழ்வார் உடைய
விளங்கிய -வெளிப்பட்டு தோன்றிய
சீர் -இயல்பான பர பக்தி முதலிய குணங்களினுடைய
நெறி -அடைவிலே
தரும்-அருளி செய்யும்
செம் தமிழ் ஆரணமே -செவ்விய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியே என்று
இம் நீள் நிலத்தோர் -இந்த நீண்ட உலகத்தவர்
அறிதர -தெரிந்து கொள்ளும்படியாக
நின்ற -பிரசித்தமாகும்படி எழுந்து அருளி இருந்த
இராமானுசன் -எம்பெருமானார்
எனக்கு ஆர் அமுது -எனக்கு அருமையான அமுதம் போன்று இனியராவார் –

வியாக்யானம் –
இது காறும்-ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு கூறப்பட்டது –
இதனில் நம் ஆழ்வார் உடைய திருவாய் மொழியையே உலகினர்க்கு இன்றியமையாத
சொத்தும் மாதா பிதா குரு தெய்வமுமாகக் கொள்ளுமாறு அதன் பெருமையை உணர்த்திப் பரப்பிய
பேருபகாரம் பேசப்படுகிறது -நம் ஆழ்வார் திருவாய் மொழியை தமது அனுபவ முறையில்
அருளி செய்தார் -எம்பெருமானார் அதன் மாண்பினை உலகில் உள்ள மாந்தர் அனைவரும் உணர்ந்து
மாந்தி மகிழும்படி செய்து சிரஞ்சீவியாக அதனை வளர்த்து அருளினார் என்பது கருத்து-
ஈன்ற முதல்த் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றனர் ஆன்றோரும் –
உறு பெரும் செல்வமும்
உலகில் வாழ்வதற்கு இன்றியமையாதது செல்வம்-அது இல்லாத போது தந்தை தாய் குரு தெய்வம் என்று
மேல் சொல்லுமவை யனைத்தும் இருந்தாலும் பயன்படாது -இல்லாதவை போல் ஆகி விடுதலின்
செல்வத்தை  முந்துற கூறுகிறார் -இழிகுலப் பிறப்பானும்-அறிவின்மையானும் -இன்னார் என்று ஒரு
பொருளாக மதிக்கபடாத வரையும் -மதிக்கப் படுபவராக செய்ய வல்லது செல்வம் -உயர் குலத்தாரும் –
அறிவுடையாரும் -குலமும் -அறிவும் இல்லாவிடினும் -செல்வம் படைத்தது இருப்பதை ஒன்றினையே கருதி –
அவர் பால் சென்று -அவர் அருள் நாடி நிற்பதை நாம் உலகினில் காண்கிறோம் -இதனையே வள்ளுவனாரும் –
பொருள் அல்லாதவரை பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் -என்கிறார் –
திருவாய் மொழியும் தன்னைக் கற்றவரை -உயர்குலமும் அறிவுடைமையும் இல்லாது இருப்பினும் –
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி -ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர்
குலத்தாரையும் -அறிவுடையாரையும் -அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின்
செல்வமாகப் போற்றப் படுகின்றது -என்க-
ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அந்தணர் செல்வம் வட மொழி யாரணம் –அந்தணர் மாடு -என்றார் திரு மங்கை மன்னன் –
செம் தமிழ் ஆரணம் -நீள் நிலத்தோர் அனைவருடையவும் செல்வம் .தந்தையும் ..பூ மகள் நாதனும் —
ஹிததை நாடும் பிதாவும் -பிரியத்தை கோரும் மாதாவும் -அறியாதன அறிவிக்கும் குருவும் –
பேறும் பெருவிப்பதும் ஆகிய தெய்வமும் -திருவாய் மொழியே -என்றபடி –
மாதா பிதா குரு தெய்வம் எனும் முறையை மாற்றி -பிதாவுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டு உள்ளது –
இதத்தால் ஹிதத்தை உணர்த்துதலே செம் தமிழ் ஆரணத்துக்கு முக்கிய நோக்கம் ஆகும் என்று தோற்றுகிறது –
அசேஷ ஜகத்தித அனுசாசன ச்ருதி நிகரசிர-என்று உலகு அனைத்துக்கும் ஹிதத்தை கற்ப்பிக்கும் வேதாந்தம் –
என்று வேதார்த்த சந்க்ரஹத்தில் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி உள்ளமையும் காண்க -ஹிதத்தை கற்ப்பிதலாவது –
உபாயத்தையும் -உபேயத்தையும் -பகுத்து உணர்த்துதல் –
பேற்றுக்கு உரிய நல் வழியே ஹிதம் என்க –
திரு நாரணன் தாள் சிந்தித்தல் உய்ய உபாயம் என்று ஹிதத்தை உணர்த்துதலின் செம் தமிழ் ஆரணம்
தந்தையாய் ஆயிற்று என்று உணர்க –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -என்றபடி பக்தாம்ருதமாய் -இனிமை பயப்பது பற்றி
செம் தமிழ் ஆரணம் இனிப்பு தரும் தாய் ஆயிற்று என்க –
தந்தையும் தாயும் –
மாதா பித்ரு சஹஸ்ரேப்யோ வத்சலதரம் ஹி சாஸ்திரம் –ஆயிரம் தாய் தந்தையிரினும் மிக்க வாத்சல்யம்
கொண்டதன்றோ சாஸ்திரம் -என்றபடி -மக்கள் இடம் உள்ள குறை பாராது தான் கண்ட நல்லதை சொல்லியே
தீர்த்து திருத்தி உய்வித்தலின் செம் தமிழ் ஆரணம் தந்தையும் தாயும் ஆயிற்று -என்க
உயர் குருவும் –
கீழ்ப் பேரின்பம் தரும் செல்வம் ஆதலின் ஏனைய செல்வத்திலும் வேறு பட்டது என்பது தோன்ற –
உறு பெறும் செல்வம் -என்று விசேடித்தது போலே -இங்கும் பேரின்பத்துக்கு இடையூறாய் நிற்கும்
அவித்யை என்னும் இருளை விலக்குதலின் -ஏனைய குருக்களினின்றும் வேறு பட்டவர் என்பது தோன்ற
உயர் குரு -என்று விசேடிக்கிறார்-ஏனைய குருக்கள் வீட்டு இன்பம் விழைவோருக்கு விடத் தக்கவர்களாய்
அன்றோ இருப்பது –இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை
உபதேசித்தவன் என்று அறிக –தானே தன்னை யறியகிலாது-யானே என் தனதே – என்கிற அஹங்கார மமகாரங்கள் என்னும்
செருக்கு உடையானுக்கு -உடல் மிசை உயிர் என இறைவன் உன்னை உடலாக கொண்டு உள்ளமையின்
உன் ஆத்ம ஸ்வரூபம் ஆகிய உடலை அந்த உயிர் தனக்கேயாக பயன்படுத்துவதே முறை-உயிர் தன் விருப்பபடி
உடலை பயன்படுத்த -அவ் உயிருக்கு அத்தகைய உடல் தனக்கொரு பயன் கருதாது -பயன்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுவது போலே
நீயும் இறைவன் விருப்பபடி பயன்படுத்தப்பட்டு -தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –
இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று முன்னம் முன்னம் மறந்த
ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின் திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –
இனி தாய் தந்தை யரினும் தெய்வத்தினும் உயர்வுடைமை பற்றி –உயர் குரு -என்றார் என்னலுமாம் –
தாய் தந்தையர் சரீரத்தையே உண்டு பண்ணுகின்றனர் -குருவோ வித்தையினால் ஆத்ம ஸ்வரூபத்தையேஉண்டு பண்ணுகிறான் –
என்றபடி -ஆத்மாவுக்கு ஞானப் பிறப்பை தரும் குரு -சரீரப் பிறப்பை தரும் தாய் தந்தை யரினும் உயர்ந்தவன் ஆகிறான் –
தெய்வம் தான் அருள் புரிவதற்கு குரு அருளை எதிர் பார்ப்பது -உயிர் இனங்கள் புரியும் வினைகளுக்கு ஏற்ப
நன்மை தீமைகளை விளைவித்து கருணை காட்டாது சட்டப் படி நடாத்துவது -மிக்க மாறுபாடு உடையவர்களை
தீ வினை புரிவித்து அவர்களை அதோகதிக்கு உள்ளாக்குவது –குருவோ அருள் புரிவதற்கு தெய்வத்தின் அருளை
எதிர் பார்ப்பவன் அல்லன் -வினைகளுக்கு ஏற்ப சட்டப்படி நடாத்தாது நன்மையே பயக்கும் -கருணை காட்டி
நடாத்துபவன் -எவரையும் அதோகதிக்கு உள்ளாக்காது நல் வினையே புரிவித்து மேலே கை தூக்கி விடுபவன் –
இத்தகைய வகைகளில் தெய்வத்தினும் உயர்ந்தவன் குரு என்க –வெறி தரு பூ மகள் நாதனும்
தெய்வம் என்பது திருமாலே யாதலின் பூ மகள் நாதன் என்கிறார் –
திருமங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திருவந்தாதி -57 – என்றதும் காண்க –மணம் தரும் பூ –திருமகளையும் தந்தது -மணமே வடிவு கொண்டு வந்தது போலே -மலரிலே தோன்றினவள்
பிராட்டி -என்க –திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு
தருவான் ஆகிறான் -பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்
பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –
இனி உறு பெறும் செல்வம் என்று தொடங்கி யதற்கு ஏற்ப –உயர் குரு -என்றது போலே –
உயர் தந்தைஉயர் தாய்உயர் நாதன் -என்று ஏனையவற்றையும் உயர்ந்தவைகளாக கருதலுமாம் –
ஏனைய தந்தையும் தாயும் போல் அல்லாமல் –தஞ்சமாகிய தந்தையும் தாயுமாகத் திருவாய் மொழி
உள்ளது என்றது ஆயிற்று –ஏனைய தாய் தந்தையர் இடர் நேர்ந்த போது விட்டுச் செல்வாரும் –
விற்றுப் பிழைப்பாரும் கர்மம் தீர்ந்தவாறே -பந்தம் அற்றாருமாய் இருப்பார்கள் அன்றோ –திருவாய் மொழி அங்கன் அன்றி -எக்காலத்திலும் ஞானப் பாலூட்டி -ஹிதமான நெறியிலே
-செலுத்திப் பாதுகாத்தலின் தஞ்சமாகிய தந்தையும் தாயுமாய் ஆயிற்று -என்க –
மலை மகள் நாதன் போன்ற ஏனைய இளம் தெய்வங்கள் பாணாசுரன் போன்றாரைக் காக்கும்
திறன் அற்று நின்றன -அங்கனம் அல்லால் தப்பாது –காப்பாற்றும் பெறும் தெய்வம் பூ மகள் நாதன் -ஆயிற்று என்க —
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணம் –
சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால்
நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன -அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ்
ஆரணத்தை தந்து அருளினார் -பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல்
மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு -பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு
முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் -பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது
அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு –
நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் –
சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்
முனியே நான் முகனில் பரம பக்தியும் இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம் -என்றபடி இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க
அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –
நீள் நிலத்தோர் அறிதர நின்ற –
கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும்
செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து –
கொள்ளும்படி எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி –
எனக்கு ஆரமுது –
செம் தமிழ் ஆரணத்தின் இனிமையை நுகர்ந்து நுகர்ந்து தொண்டர்க்கு அமுதான -அதனால் உயிர்
பெற்ற அமுதனார் -உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -என்றபடி -அவ்வமுது உணவினை
தமக்குத் தந்த எம்பெருமானார் திறத்து பேரன்பு பெருகி -அவ்வின்பத்திலே திளைத்து –
அவரையே அருமையான அமுதாகக் கூறுகிறார் -என்க-
ஆரமுது -அருமையான அமுது .
இதுகாறும் எம்பெருமானாருக்கு ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும்
உள்ள ஈடுபாடு கூறப் பட்டது -நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் -அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் -அவர்களிலும் திரு மங்கை
ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் -நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளி செய்தார் –
நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே -நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய
வீறுடைமையும் -பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளி செய்த திருவாய் மொழியினுடைய
சீர்மையையும் அருளி செய்து முடித்தார் –
ஆயின் ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அடி யொற்றி அமுதனார் இங்கு அருளி செய்து இலர் –
எந்த முறையை அடி யொற்றி அமுதனார் அருளி செய்து உள்ளார் எனபது நமக்கு இங்குப்
புலப்பட வில்லை-ஆயினும் ஒருவாறு வரிசைப் படுத்திக் கூறுகிறோம் –
முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
விளக்கு ஏற்றிய இருவரும் முதலிலும் -கண்டு நமக்கு காட்டியவர் பிறகும் பேசப்பட்டு உள்ளனர் –
தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர் -அதற்க்கு பிறகு மழிசைக்கு இறைவன் பேசப்படுகிறார் –
பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு பைம்தமிழ் பாட்டு கேட்க்கைகாக பின் தொடர்ந்து -தான் ஆட்செய்த நிலையை
வெளியிடுவதற்காக மீண்டதும் அப் பைந்நாகப் பாயில் மாறிப் படுத்த நிலையில் -சொன்ன வண்ணம் செய்த
பெருமாளாய் -அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –
மழிசைக்கு இறைவனுக்கு அடுத்து –துளவத் தொண்டர் பேசப்படுகிறார் –
அர்ச்சை நிலையில் அரங்கனால் தன் அழகைக் காட்டி ஆட்கொள்ளப் பட்டவர் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட்செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை
அடுத்து அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே -ஆட்செய்தான் அங்கே ஆட்கொண்டான் இங்கே –
பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார் -அரங்கனை வேட்கை மீதூர்தலினாலும்-ரசிக
மனப்பான்மையினாலும் -நேரே காட்டும் வண்ணம் வால்மீகி தீட்டிய கவிதை திறத்தினாலும் – ஸ்ரீ ராமாயணத்தில்
பதினாலாயிரம் அரக்கரோடு தனித்து இருந்து போராடும்ஸ்ரீ ராம பிரானாக கண்டு படையுடன் அவனுக்கு உதவி புரிந்து –
ஆட்செய்யப் புறப்பட்டவர் -அவர் அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட்செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –
பின்னர் பெரி யாழ்வார் பேசப்படுகிறார் -கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவனாம் -இராமபிரானுடைய ஆற்றலை அறிந்து இருந்தும்
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –
பெரி யாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –
பின்னர் திருமங்கை ஆழ்வாரும் நம் ஆள்வரும் பேசப்படும் பொது நம் ஆழ்வாரைத் தேவு மற்று
அறியாது பேசின மதுர கவி ஆழ்வாரும் பேசப்பட்டார் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: