அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-17-முனியார் துயரங்கள் முந்திலும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

பதினேழாம் பாட்டு –அவதாரிகை

இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த
செருக்கை உடையனாய் கொண்டு -திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி
பிரதிபாத்யார்த்த கௌரவத்தாலே சாம்சாரிக்க சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-எங்களுக்கு நாதரான –
எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் -துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும்
இது வந்ததே என்று வெறார்கள்–சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும்
பக்வபலம் போலே மனசு இளையார்கள் -ஆன பின்பு நீங்களும் இவற்றால்
வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து  அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —கண்ண மங்கையுள் நின்றான் -நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –
ஆடினவன் நின்றான் —

பெரும் புறக்கடல் -பிருஹத் பஹு சிந்து -திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த -முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி பத்தராவி -பெருமாள் -கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் -திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூ க துக்க சமம் -திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பராங்குச முகத்தாமரை ராமானுஜர் என்றாலே மலரும் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

வியாக்யானம் –
கலை பரவும்
-சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
-வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-
தனி யானையை
-த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் -சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –
கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
-அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -பத்தராவியை –
தண் தமிழ் செய்த
-நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -சரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின
நீலன் தனக்கு –
திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –
உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான -பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
எங்கள் இராமானுசனை
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின எம்பெருமானாரை –
வந்து எய்தினரே
-ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து -சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்
முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள் ..முனிவு -வெறுப்பு .
.இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே – மனசிலே ஏகாகாரங்களாய்
–மொய்த்தல் -திரளுதல் -ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே கீதாசார்யரும் .
-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது உரை
அவதாரிகை

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எளுந்துஅருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

வியாக்யானம் –
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் -எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப்
பெற்று களிப்புறலாகாது –விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது
இங்கு நினைவு உரத்தக்கது -ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து
அதனைப் பெற முயல்வானாய் -உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் -அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும்
அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த கீதா ஸ்லோகம் –
எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு
உரிமை பட்டு இருத்தலே ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே
ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும்
அறியாமையை விட்டு ஒழிந்து -ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -எங்க –இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –
கண்ண மங்கை நின்றானை –
திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள எம்பெருமானுக்கு
பத்தராவி -எனபது திரு நாமம்
கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி வேதம் அனைத்தும் துதிக்கும்
நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் -அவ் எம்பெருமான் திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து
இருக்கும் மதம் போன்று உள்ளது –வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8- -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -எனபது அதன்கருத்து –
கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் -வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத்
தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக காட்டுவது வியப்பூட்டுவதாக
இருந்தது அவ் எம்பெருமானுக்கு .வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில்
இறங்கினான் -தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை -வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும் கற்றே அறிய வேண்டும்படியாக
அமைந்து இருந்ததாம் இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –நின் தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார் -உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்
உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –
தமிழ் -தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவதுகவி வாணர் நோக்கம் –
திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் –
செய்து -சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –
வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் –
எய்தினர் -வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: