அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-15-சோராத காதல் பெரும் சுழிப்பால் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
பதினைந்தாம் பாட்டு –அவதாரிகை –
பெரியாழ்வார் திருவடிகளிலே பிரவண சித்தரான எம்பெருமானார் குணங்களில்
அனந்விதரைச் சேரேன் -எனக்கு என்ன தாழ்வு உண்டு -என்கிறார் –

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

அவ்யபிசாரினியான பக்தியினுடைய பிரவாஹத்தில் -பெரிய சுழியில் அகப்படுகையாலே
நித்யனாய் -ஸ்வ இதர சம்ஸ்த வஸ்துக்களுக்கும் ரஷகன் ஆகையாலே -வந்த பெருமை உடையவனை –
ஏக தேசமும் நிரூபியாதே –அநித்யராய் – ரஷ்ய பூதராய்-இருப்பார்க்கு -ஆயுரர்தமாக மங்களா சாசனம்
பண்ணுவாரைப் போலே அவனைக் குறித்து – பல்லாண்டு பல்லாண்டு -என்று காலத்தை பெருக்கி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -திருப் பல்லாண்டு – 1-என்று மங்களா சாசனம் பண்ணா நின்றுள்ள
இத்தையே தமக்கு ஸ்வபாவமாய் உடையரான பெரியாழ்வார் உடைய திருவடிகளை விட்டு
நீங்காத திரு உள்ளதை உடையரான எம்பெருமானார் உடைய நிரவதிக குணங்களை
தங்களுக்கு அபாஸ்ரயமாகப் பற்றி இராத மனுஷ்யரைச் சேரேன்
இந்நினைவு பிறந்த பின்பு எனக்கு என்ன குறை உண்டு –
பிறங்குதல்-மிகுதி –பிரகாசமுமாம்
சோராத காதல் என்றது அசங்குசிதமான காதல் என்னவுமாம் -அப்போதைக்கு சோர்தல் -வாடுதல்-அதாவது சங்கோசம் –சோராமை -அசங்குசிதமாய் இருக்கை
இத்தால் பரி பூர்ண பக்தி என்றபடி–

கோதாக்ரஜர்– கோயில் அண்ணன்-ஆண்டாள் -இவர்கள் இடம் தானே பெரியாழ்வார் சொத்து-
திருவந்திக்காப்பு -செய்து அருளி –
தயிர் சாதம் நாவல் பலம் சேர்ந்து அமுது செய்து -திரு முகம் வாட -கண்டு -கருட வாகன பண்டிதர் -தன வந்திரி- சந்நிதி கஷாயம் கொடுத்து அருளி -இவர் தான் திவ்ய ஸூரி வைபவம் அருளிச் செய்தவர் -திருவடி -காப்பு ஏற்படுத்தி அருளி-பய நிவர்த்தகங்களுக்கு பயப்பட்டு அஸ்த்தானே -உறகல்    – -உறகல் -கொடியார் மாடம் -காட்டிக் கொடுக்கும் -யசோதை மொசு மொசு வளர்க்க -நான்  சமர்ப்பித்ததை கொண்டு அருளால் –கண்டு அருளி -சோராத காதல் -கண்ணனுக்கே ஆம் அது காதல் என்றுமாம் -வினைச்சொல் இல்லாத பாசுரம் -இன்றும் பல்லாண்டு சொல்லிக் கொண்டே இருக்கிறார் –குணங்களை நினைக்க நினைக்க சீரும் பிறங்கி-பயம் நீங்கி- அவனை ஓக்க ஆக்கி அருளுவான்  -விட வேண்டியதை விட்டாலே பிராப்தி கிட்டும் -பகவத் -சேஷத்வம் விட அந்நிய சேஷத்வம் கழிவதே பிரதான்யம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
-கீழ்ப் பாட்டிலே குலசேகரப் பெருமாள் சம்பந்தத்தை இட்டு -தம்மாலே கொண்டாடப் பட்ட
எம்பெருமானார் -தம்மை பரிகிரகித்த வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே –
சர்வ பூத ஸூஹ்ர்த்தாய் சர்வ ரஷகனான சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய
ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே -பிரேம தசை தலை எடுத்து -அவனுக்கு என் வருகிறதோ
என்னும் அதி சங்கையாலே-திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட
பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

வியாக்யானம் –
சோராத காதல் –
சோராத -வாடாதே -சங்குசிதமாகாதே இருக்கிற பக்தி -பரி பூர்ண பக்தி
என்றபடி -புநர் விஸ்லேஷ பீருத்வா பரமாபக்தி ருச்யதே -என்னும்படியான பக்தி -என்றபடி –
அன்றிக்கே –சோராத காதல் -அவ்யபிசாரினியான பக்தி என்னவுமாம்
-பெரும் சுழிப்பால் –
அவர் பட்ட-சுழி தான் சங்குசிதம் அன்று காணும் –பெரும் சுழி -பரி பூரணையான பக்தி கரை புரண்டவோ பாதி
அதினுடைய மகா பிரவாகத்தின் நடுவே பிறந்தது ஆகையாலே -மகா வேக கர்த்தத்தோடு கூடி –
அதி விஸ்தாரமாய் இருக்கிற சுழியிலே அகப்பட்டு -ஆழம் கால் படுகையாலே –
தொல்லை மாலை –
நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –
ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-
அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே
சம்சாரமாகிற பெரும்கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக
நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீ ய பதியை
-ஒன்றும் பாராது –
மங்களா நாஞ்ச மங்களம் -என்றும் -ந வாசுதேவாத் பரமஸ்தி மங்களம் -என்றும் –
உயர்வற உயர்நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் -நிகரில் அமரர் முனிக் கணங்கள்
விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும் -ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்ரஷ்டாவாய் -சர்வேஸ்வரனாய் -சர்வ மங்களங்களையும் கொடுக்க கடவனான -அவனை
இப்புடைகளாலே ஏக தேசமும் நிரூபியாதே -தம்முடைய பிரேம பரவசராய்க் கொண்டு –இவை
ஒன்றும் விசாரியாதே -இவற்றில் ஒன்றிலும் கண் வையாதே -என்றபடி –
அவனை பல்லாண்டு என்னும் காப்பிடும் பான்மையன் தாள் –
லோகத்திலே பரிமித கால வர்த்தியான-சாதாரண ஜனங்களுக்கு ஆயுர் அர்த்தமாக -ஆயுராசாச்தே -என்கிறபடியே -தீர்க்கா யுஷ்மான் பவேத் –
என்று மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே -அந்த ஸ்ரீ ய பதியைக் குறித்து -பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத் தாண்டு -பல் கோடி நூறாயிரமும் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
என்றும் -நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு -சுடர் ஆழியும் பல்லாண்டு -அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –
-என்று அபரிமிதமான காலத்தை உண்டாக்கி -அது தன்னையே பெருக்கி -இப்படிப் பட்ட கால தத்வம்
உள்ளது அனையும் செவ்வி மாறாதே -நித்ய ஸ்ரீ யாக வாழ வேணும் என்று -இப்படி மங்களா சாசனம் பண்ணுகையே
தமக்கு ஸ்வபாவமாக உடையரான பெரியாழ்வார் திருவடிகளை –பான்மை -ஸ்வபாவம் -தாள்-திருவடிகள் –
பேராத உள்ளத்து இராமானுசன் தன் –
விட்டு நீங்காத திரு உள்ளத்தை உடையரான எம்பெருமானார் உடைய
பேருகை -நீங்குகை –பிறங்கிய சீர் -நித்ய அபிவ்ர்த்தமான கல்யாண குணங்களை
குதர்ஷ்டி குஹநாமுகே நிபதத பரப்ரமணா -கரக்ரஹா விசஷணோ ஜயதி லஷ்மனோயமுனி –
என்கிறபடியே -குதர்ஷ்டிகளால் அழிக்கப்பட்ட பகவத் வைபவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன வெளிப்படுத்தி –
இவ்வளவும் இனி மேல் உள்ள காலம் எல்லாம் -நித்ய அபிவ்ர்த்திதாம்படி பண்ணுகையாலே
இவருடைய கல்யாண குணங்களும் நித்ய அபிவ்ர்த்தமாய் காணும் இறே இருப்பது –பிறங்குதல் -மிகுதி –
சாரா மனிசரை –
அவற்றை தங்களுக்கு அபாஸ்ரயமாக பற்றி இராத மனுஷ்யரை –
ந்ர்தேக மாத்ய பிரதி லப்ய துர்லபம் -என்கிறபடியே -அதி துர்லபரான மனுஷ்ய தேகத்தை உடையராய் இருந்தும்
புவான் பவாப்த்தி நதரேத் ச ஆத்மாஹா -என்னும்படி நஷ்ட ப்ராயரான மனுஷ்யர் என்றபடி –
யோக்யதை இல்லாதே அகன்று போனார்கள் என்று ஆறி இருக்கப் போமோ
ஸ்ரவண மனனங்களுக்கு சாதனங்களை உடைத்தான மனுஷ்ய தேகத்தை பெற்றும் ஆஸ்ரயியாத-கர்ப்ப நிர்பாக்யரை
சேரேன் –
அப்படிப் பட்டவரை ஒருக்காலும் கிட்டாதே சவாசனமாக விட்டு இருந்தேன்
நாஸ்தி சங்கதி ரச்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் -என்கிற படியே குட நீர் வழித்துக் கொண்டு இருந்தேன் –
எனக்கு என்ன தாழ்வு இனியே
-இப்படியான பின்பு எம்பெருமானாருடைய க்ருபைக்கு விஷய பூதனான
அடியேனுக்கு என்ன தாழ்வு உண்டு -என்ன அவத்யம் உண்டு -ததேவ முஷ்ணா த்யசுபான்ய சேஷத -என்றும் –
சித்தே ததீய சேஷத்வே சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி -என்றும் சொல்லுகிறபடி -ஒரு குறைகளும்
இன்றிக்கே -சர்வமும் கரதலாமலகமாய் இருக்கும் என்றபடி .

————————————————————————–

-அமுது விருந்து

அவதாரிகை –
பெரியாழ்வார் திருவடிகளை விட்டு -நீங்காத திரு உள்ளம் படைத்த எம்பெருமானார் குணங்களை-தங்களுக்கு சார்பாக கொள்ளாதவர்களை சேர மாட்டேன் -இனி எனக்கு என்ன தாழ்வு இருக்கிறது -என்கிறார் –

பத உரை –
சோராத -விட்டு நீங்காத
காதல்-பக்தி வெள்ளத்தின்
பெரும் சுழிப்பால் -பெரிய சுழியினாலே-அதனில் அகப்பட்ட படியினாலே
தொல்லை -பண்டையோனான
மாலை -பெரியோனாகிய எம்பெருமானை
ஒன்றும் -அவன் பெருமையில் எதனையும்
பாராது -கவனியாமல்
அவனை -அப் பண்டைய பெரியோனைக் குறித்து
பல்லாண்டு என்று -பல்லாண்டு பல்லாண்டு என்று காலத்தை பெருக்கி –
காப்பு இடும் -ரஷை-மங்களா சாசனம் செய்யும்
பான்மையன் -ஸ்வபாவம் படைத்த பெரி யாழ்வார் உடைய
தாள்-திருவடிகளை
பேராத -விட்டு நீங்காத
உள்ளத்து -திரு உள்ளம் வாய்ந்தவரான
இராமானுசன் தன் -எம்பெருமானாரை சேர்ந்த
பிறங்கிய -மிகுதியான
சீர்-கல்யாண குணங்களை
சாரா -பற்றி நிற்காத
மனிசரை –அற்ப மானிடரை
சேரேன் -சேர மாட்டேன்
இனி -இந்நிலை எய்தியதற்கு பிறகு
எனக்கு என்ன தாழ்வு -எனக்கு என்ன குறை

வியாக்யானம் –
சோராத காதல் பெரும் சுழிப்பால்
காதல் -பக்தி -அது சோராதது-பகவானை விட்டு விலகாதது –
வேறு தெய்வத்தை பற்றாது -பகவானையே பற்றி ஸ்த்திரமாய் இருப்பது -என்றபடி –
இத்தகையே பக்தியே கீதையில் -மயிசாநத்ய யோகே ந பக்தி ரவ்ய பி சாரிணீ -என்று கூறப் பட்டு உள்ளது –
இனி சோர்வுறாத-அதாவது குறை வுறாதகாதல் என்னலுமாம்
காதலின் பெரும் சுழிப்புஎன்னவே பெருக்கு எடுத்தோடும் பெரு வெள்ளமாகக் காதல் உருவகம்-செய்யப் பட்டமை தெரிகிறது –
வெள்ளத்தில் பெரும் சுழிப்பில் அகப்பட்டவர் -ஒன்றும் தோன்றாது தப்ப வழி இன்றி -தத்தளிப்பது போல் –
பெரி யாழ்வாரும் காதல் வெள்ளப் பெரும் சுழியில் அகப்பட்டு ஒன்றும் பாராது தப்ப வழி இன்றி
தத்தளிக்கிறார் -அங்கனம் தத்தளித்தல் ஆவது -திரு மாலின் மீது அளவு கடந்த ப்ரேமம் மீதூர்ந்து –
அதிஸ்நேக பாபசங்கீ-அளவு கடந்த ச்நேஹம் தீங்கு நேருமா என்னும் சங்கையை உண்டு பண்ணும் –
என்றபடி தமக்கு புலனாய் -இவ் உலகில் தோன்றிக் காட்சி தரும் அவனுடைய திரு மேனி அழகு -மென்மை –
என்னும் இவற்றில் ஈடுபாடாகிய சுழியில் ஆழ்ந்து -யாராலே இவற்றுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று
தீங்கை சங்கித்து-எவராலும் தீங்கு இழைக்க ஒண்ணாத சூரத் தன்மை முதலிய வற்றைப் பாராது –
சங்கையில் இருந்து தப்ப வழி இன்றி அலமருதலே யாம் – அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும்
ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர்என்க-
தொல்லை மாலை ஒன்றும் பாராது –
பண்டைக் காலம் தொடங்கி இன்று காரும் எவராலும் எவ்வித தீங்கும் இழைக்க ஒண்ணாது இருந்தவனுக்கு
இன்று என்ன தீங்கு நேர்ந்து விடப் போகிறது –தொல்லை-அநாதி என்றபடி
இதனால் ஆதியந்தம் அற்ற நித்யதன்மை கருதப்படுகிறது
நித்தியமாய் இருக்கிற பகவத் தத்வத்தை யாராலே அளிக்க முடியும் –மால்-பெரியவன் -அனைவரையும்
காப்பதால் வந்தது அந்த பெருமை –அந்த மாலுக்கு தன்னை ப்பாத்து காத்துக் கொள்ளும் திறன் இல்லையா –
இவைகளில் ஒன்றையும் பார்க்கவில்லை பெரி யாழ்வார்
முகப்பில் தோற்றும் அழகையும் -மென்மையும் பார்த்தாரே அன்றி அழிக்க ஒண்ணாத அழியாப்
பொருள் அளித்துப் பெருமை யுறும் பொருள் அழிவுற்று சிறுமை உறாது என்பதை அவர் பார்த்திலர்-
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் –
தொல்லை மால் என்பதில் ஒன்றையும் பாராமையாலே -பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் -என்று காலத்தை பெருக்கி நீடூழி தீர்க்காயுசாய் வாழ வேண்டும்
என்று -அளவு பட்ட ஆயுள் உள்ளவர்களையும் -தன்னைக் காக்கும் திறன் அன்றி காக்கப் படவேண்டியவராய் இருப்பவர்களையும் ஆயுள் விருத்தி யடைய வேண்டும் என்று மங்களா சாசனம்பண்ணுவாரைப் போலே பல்லாண்டு பாடுகிறார் பெரி யாழ்வார் -என்க –
இங்கனம் பல்லாண்டு பாடி -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று காப்பிடுவது பெரி யாழ்வாருடைய
இயல்பு -அது தோன்ற அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -என்கிறார் –
தான் அழிவற்று -மற்ற அனைவரையும் அளிக்கும் பரம் பொருளை -அங்கனம் பாராமை அறியாமை அன்றோ –
மயர்வற மதி நலம் வாய்ந்த பெரி யாழ்வாருக்கு அது குறை யாகாதோ எனின் -ஆகாது என்க –
இவ்வறியாமை கன்மத்தால் வந்ததாயின் குறையாம்-
அன்பின் மிகுதியால் வந்தமையின் குறை ஆகாததோடு பெருமையுமாம் -என்க
இதனை சோராத காதல் பெரும் சுழிப்பால் பாராது -என்பதனால் உய்த்து உணர வைத்தார் அமுதனார் –
காதல் பெரும் சுழிப்பில் அகப்பட்டது -பாராது பல்லாண்டு பாடும் -பெருமையை இவர்க்கு அளிப்பது
ஆயிற்று என்க –ஆதல் பற்றியே இவர்க்கு பெரி யாழ்வார் என்னும் பெயர் ஏற்ப்பட்டது என்கின்றனர் ஆன்றோர் –
இங்கு மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றிப் பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
பெரி யாழ்வார் என்னும் பெயர் -என்று அருளி செய்த பாசுரத்தை நினைவு கூர்க-
இனி காதல் பெரும் சுழிப்பால் பாரா விடினும் இறைவன் தன் ஆற்றலை தானே காட்டி யாயினும் இவரைப் பெரும் சுழி யினின்றும்
தப்புவிக்கல் ஆகாதோ எனின் –இறைவனுக்கும் அது ஆகாததாய் ஆயிற்று என்க –
கண் உள்ளவர்கர்க்கு அன்றோ காட்ட இயலும் –அன்பினால் குருடரான ஆழ்வாருக்கு –
ப்ரேமாந்தருக்கு -எங்கனம் காட்டுவது -தன் ஆற்றலைப் பார்த்து அன்பினால் ஆன அச்சப் பெரும் சுழி யினின்றும்
வெளியேறட்டும் என்று இறைவன் வலிமை மிக்க தன் தோளைக் காட்டினான் -அது மேலும் இவரை அப் பெரும்
சுழி யில் ஆழ்த்தி சுழல செய்து விட்டது -வலிமை அச்சத்தை கெடுக்க வில்லை -அதனை மேலும் வலு வுறச்
செய்து விட்டது -வலிமையை உள்ளடக்கி அழகே விஞ்சித் தோற்றுகிறது இவருக்கு –
இவ்வலிமை கொண்டு எதிரிகளோடு பொருது என்ன தீங்கை விளைவித்துக் கொள்வானோ
என்று மீண்டும் அச்சமே தலை தூக்கி நிற்கிறது ஆழ்வாருக்கு -இதனை
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்னும் ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியில் காண்கிறோம் –காணவே இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு எனபது போதரும் –
துச்த்யஜா பிரக்குதிர் நாம -இயல்பு தவிர்க்க ஒண்ணாத தன்றோ-இக்கருத்துப் புலப்பட பான்மையன் -என்றார் அமுதனார் –
பான்மை -இயல்பு
தாள் பேராத உள்ளத்து இராமானுசன்
பெரி யாழ்வார் திருவடிகளை விட்டு மற்று ஒன்றை நினையாத திரு உள்ளம்
படைத்தவர் எம்பெருமானார் என்றபடி –
தாள் என்பது திரு மேனிக்கு உப லஷணமாய் பெரி ஆழ்வாரையே எப்பொழுதும் நெஞ்சில்
வைத்துக் கொண்டு இருப்பவர் எம்பெருமானார் –
விஷ்ணுவை சித்தத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் விஷ்ணு சித்தர் -பெரியாழ்வார் –அந்த விஷ்ணு இவரை  தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் எம்பெருமானார் –
அதனால் விஷ்ணு சித்த சித்தர் ஆகிறார் -அவர் –
விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஆழ்வார் -விஷ்ணு சித்த பிரவணர் எம்பெருமானார் –
எப்பொழுதும் பெரி ஆழ்வாரையே நெஞ்சில் வைத்துக் கொண்டமையால் பெரியாழ்வாரைப்
போன்றவர் ஆகி விடுகிறார் எம்பெருமானார் –
விஷ்ணு தன்னை த்யானம் செய்பவரை தன்னைப் போல் ஆக்குவது போல -விஷ்ணு சித்தரும்
எம்பெருமானாரை தன்னை போல் ஆக்கி விட்டார் -மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி பிரதி கூலரை
அநு கூலராக்க உபதேசிப்பது போலே -மங்களா சாசனத்துக்கு ஆள் தேட உபதேசிக்கும்படி எம்பெருமானாரையும்
அவர் செய்து அருளினார் -இங்கனம் பெரியாழ்வாரோடு எம்பெருமானாருக்கு ஒப்புமை
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்திலே தெளிவாக காட்டப் பட்டு உள்ளது -விரிவு அங்கு கண்டு கொள்வது –
பிறங்கிய சீர்
பிறங்குதல் -மிகுதல் -விளங்குதலும் ஆம் –சீர்-குணம்
சாரா மனிசரை சேரேன் –
எம்பெருமானார் உடைய மிக்க குணங்களை அனுசந்திப்பதே நமக்கு பற்றுக் கொடு –
அதனைக் கொளற்கு மானிடவர் எல்லோரும் உரியர் –
ஆயினும் அதனைக் கொள்ளாது நிற்கின்றனரே – என்று பேர் இரக்கம் தோற்றுகிறது-மனிசர் -என்னும் சொல்லாலே –
அத்தகையோரை சேர்ந்தேன் என்றிலர் –
அவர்கள் சேர்க்கையினும் -சாரா மனிசரை சேராமையின் முக்கிய தன்மை விளக்குதற்கு
நன்மை வராவிடினும் கேடில்லை–தீமை தொலைவது முக்கியம் அன்றோ –
இனி சீரை சார்ந்தோரை சேர்ந்து இருத்தல் என்னும் உயர் நிலையில் இருப்பவன் -அந்நிலையில் இருந்து
தவறி சாரா மனிசரை சேரேன் -உயர் நிலையினின்றும் விழுந்து -தாழ்வு உறுவது தப்பாது என்னும் அதன் கொடுமை
தோற்றற்கு அங்கனம் கூறினார் ஆகலுமாம் –
எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல் –

இங்கு ஸ்ரீ வசன பூஷணம் சூரணை களும் மணவாள மா முனிகள் வியாக்யானமும்
பெரியாழ்வார் பாஷ்யகாரர் உபதேசம் பற்றியும் மங்களா சாசனம் ஸ்வரூப அனுகுனம்
என்பதையும் தெளிவாக காட்டும் –

சூரணை-250

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர்
பெரியா ழ்வார்
இவ் ஆழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால்
தங்களில் ஒப்பார்களோ என்ன -அருளி செய்கிறார் மேல் –
அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும்
நெடுவாசி உண்டு என்கை-
சூரணை -251
அவர்களுக்கு
இது காதா சித்தம் –
இவர்க்கு
இது நித்யம்
அவர்களை பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது –
மயர்வற மதிநலம் அருள பெற்றமை ஒத்து இருக்க செய்தே -வைர உருக்காய்-
ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் -பாகவத விக்ரக வைலஷன்யத்தை அநு சந்தித்தால் –
உத்தோரத்தர அனுபவ காமராராக இருக்கும் -மற்ற ஆழ்வார்களுக்கு பர சம்ருத்தியே பிரயோஜநமான
இந்த மங்களா சாசனம் -எப்போதும் ஒக்க இன்றிகே -எங்கேனும் ஒரு தசையிலே தேடித் பிடிக்க
வேண்டும்படியாய் இருக்கும் -தத் வைலஷன்ய தர்சன அநந்தரம்-தத் அனுபவ பரராகை அன்றிகே –
அஸ்தானே பய சங்கை பண்ணி -திருப் பல்லாண்டு பாடும் -பிரேமா ச்வாபரான இவருக்கு இந்த
மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை –

சூரணை -252
அவர்களுடைய
ஆழம்கால் தானே
இவருக்கு மேடாய் இருக்கும் –
அதுக்கு ஹேது ஏன் என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது –
அனுபவபரரான அவர்களை -த்ருஷ்டி சித்த அபகாரம் பண்ணி –
ஆழம்கால் படுத்தும்-அவனுடைய சௌந்தர்யம் தானே -அதுக்கு என் வருகிறதோ
என்று அஞ்சி -மேன்மேலும் காப்பிடும்படி -மங்களா சாசனபரரான இவர்க்கு தரித்து
நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –
சூரணை -253
அவர்களுக்கு
உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

இவருக்கு பய
ஹேதுஎங்கனே -என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் –
அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி
இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்திய பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பீ
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வன்சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் -அழித்து –
பராதிசயகரத்வமே வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் எனபது -ஓன்று
அறியாதபடி -தன பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌ ந்த்ர்யம் -அந்த ஸௌ ந்தர்ய தர்சனத்தில்
-அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என்-வருகிறதோ என்று வயிறு எரிந்து காப்பிடும்வரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்சசன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கை யாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல்
மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –
ஆக –அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய
ஸௌ ந்த்ர்யம் -இவருக்கு இப்படி செய்கையாலே -அவர்களுடைய ஆழம் கால் தானே
இவர்க்கு மேடாய் இருக்கையாலே -அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிகே –மங்களா சாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –
சூரணை -256
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு
உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
பிராரப்த பலமும் இதுவே எனபது –
அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் –
என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் –மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதா சித்தமாக செய்தே -இவர்க்கு
நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளி
செய்கிறார் மேல் –
அதாவது –
தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிகரிகைக்காக -மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட -இந்த தோள் வலியை நினைத்து மதியாதே -அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாக கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம்
பண்ணுவது -உண்டான அவமங்களங்கள் போக்கைகும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைகும்
தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்-என்று நம்மை பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு
வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று –
லஷ்மீ சம்பந்தத்தை காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என்
என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
இந்தபயத்தை பரிகரிக்கைகாக -இச் சேர்த்திகு ஒரு தீங்கு வராதபடி -கல் மதிள்
இட்டால் போலே இருக்கிற இவர்களை பாரீர் என்று -இரண்டு இடத்திலும்
ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட -அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று
மங்களா சாசனம் பண்ணுவது –
அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை துணையாக
கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே-பிரயோஜனாந்தர பர தயா
பிரதிகூலரான கேவலரையும் -ஐஸ் வர்யார்த்திகளையும் திருத்தி -மங்களா சாசனத்துக்கு
ஆளாகும் படி அனுகூளர் ஆக்கிக் கொள்ளுவது –
இலங்கை பாழ் ஆளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு -பிற் காலத்திலேயே -சம
காலத்தில் போல் வயிறு எரிந்து -மங்களா சாசனம் பண்ணுவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று பகவத் பிராப்திக்கு பலமும்
அந்த மங்களா சாசனமே எனபது –
ச்நேஹாதஸ்த்தா நர ஷாவ்யச நிபிரபயம் சாரங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷாவ்யசநிகள் ஆகையாலே -அநிமிஷராய் இருக்கிற திவ்யாயூத ஆழ்வார்கள்
முதலானவரை பார்த்து -குண வித்தராய் -நஞ்சுண்டாரை போலே உந்தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே அழுந்து கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே –உணர்ந்து நோக்கும் கோள் என்று பலகாலும் சொல்லுவதாய் கொண்டு –
இவ் மங்களா சாசனமே விருத்தியாய் செல்லும் என்கை –

சூரணை-255
அல்லாதவர்களைப் போல்
கேட்கிற வர்களுடையவும்
சொல்லுகிற வர்களுடையவும்
தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடையதனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும்
உபதேசிப்பது –
இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர்
ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திரு பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ
உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில் -அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும்
வ்யாவிருத்தி என்கிற சங்கையில் அருளி செய்கிறார் –
அதாவது

பரோ உபதேசத்தில் வந்தால் -மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஞாநாத்தாலே-நல துணையான
பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் –
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில் -போதயந்த
பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் –
தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே -சௌகுமார்யா அநு சந்தானத்தாலே வயிறு
மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் -அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை -தம் வாசி அறிந்து நோக்க்குகைகும் -ஒரு ஆளும் ஆளுகிறிலர்- என்று
பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர
மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று -இதுவே பிரயோஜனமாக வாயிற்று –
பரம காருணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்ய காரரும் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்களில் –
இவ் ஆழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-
ஆகையால் –
இவ் ஆழ்வார் பிரதிகூலரை அனுகூலராக உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன
அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –
எம்பெருமானார் என்னாதே  பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த
தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

சூரணை-256
அல்லாதார்க்கு
சத்தா சம்ருத்திகள்
பகவத் தார்ச அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –
மயர்வற மதிநலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ
கைங்கர்யங்கள் லாலேயாக அன்றோ தோற்றுகிறது-அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப்போதைக்குமங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற
சங்கையிலே அருளி செய்கிறார் –

சத்தை யாவது -தாங்கள் உளராகை-இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான
மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் –
அவர் வீதி ஒருநாள் –
அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம்
சித்தம் இறே–
சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாதரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்புஅது அவர்களுக்கு
அந்தாமத்து அன்பு –
முடிச்சோதி-
துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் –
அன்றிகே –
தர்சன -அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் –
கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்யா கார்யமான அனுவம் இல்லாத போது குலையும் -என்று
இவர் தாமே கீழே அருளி செய்கையாலும் -நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில்
அழுகவும் கூட சத்தை இல்லை என்று -கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே
சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன்-என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாக தோற்றுகையாலும்-
சத்திக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து – மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் -அப்படி அவிச்சின்னமாக செல்லுகை தானே
தழை புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: