மறப்பும் ஞானமும் நான்ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்றுசெந் தாமரைக் கண்ணொடு
மறப்ப றஎன்னுள் ளேமன்னி னான்தன்னை
மறப்ப னோஇனி யான்என் மணியையே?
பொ-ரை : மறப்பு என்பதனையும் ஞானம் என்பதனையும் நான் சிறிதும் அறிந்திலேன்; அறிவிற்கு அடைவு இன்றி இருந்த என் பக்கல் அறிவைப் பிறப்பித்தான்; பிறப்பித்தவன், நான் மறக்கக் கூடும் என்று நினைத்து, செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு ஒருநாளும் மறக்க ஒண்ணாதபடி என்னுள்ளே வந்து நிலைபெற்று நின்றான்; அவ்வாறு நின்றவனை, எனக்கு மணியைப் போன்றவனை யான் இனி எங்ஙனம் மறப்பேன்?
வி-கு : உணர்ந்திலன்: எதிர்மறை. ‘அற’ என்னும் எச்சத்தை ‘மன்னினான்’ என்னும் வினையாலணையும் பெயருடன் முடிக்க. என் மணியை மறப்பனோ?’ எனக் கூட்டுக.
ஈடு : பத்தாம் பாட்டு. ஆயினும், வருந்தியாகிலும் மறந்தாலோ?’ என்ன, ‘நெஞ்சில் இருளை அறுத்துக்கொண்டு எப்பொழுதும் வசிக்கின்றவனை மறக்க விரகு உண்டோ?’ என்கிறார்.
மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றை நான் அறிந்திலேன், ‘ஆயின், நான் ‘ஞானம் என்பது ஒன்றனை உணர்ந்திலேன்’ என்ற போதே ‘மறப்பும் உணர்ந்திலேன்’ என்பது தானே போதரும் அன்றே? அங்ஙனம் இருக்க, மறப்பும் ஒன்று உணர்ந்திலன்’ என்றது என்னை?’ எனின், 1‘நான் ஒரு சேதநனாய் நினைத்தேனாகில் அன்றே மறப்பது? நினைத்தேன் நான் ஆயின அன்று அன்றே மறந்தவனும் நான் ஆவேன்? அதாவது, ஞானத்திற்குப் பற்றுக்கோடாய் இருப்பது ஒன்றே அஞ்ஞானத்திற்கும் பற்றுக்கோடாய் இருக்கும்; ஆதலால் அறிவு அற்ற பொருளாய்க் கிடந்தேன்,’ என்பதனைத் தெரிவித்தபடி. மறக்கும் என்ற செந்தாமரைக் கண்ணொடு மறப்பு அற என்னுள்ளே
மன்னினான்தன்னை – 1இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும் 2நினைவையும் என் தலையிலே ஏறிட்டு, ‘பிறந்த ஞானத்துக்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று பார்த்து அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு, தன்னைப்பற்றி எனக்கு வரும் மறதி போம்படி என் மனத்திலே நித்தியவாசம் செய்கிறவனை. ‘புறம்பே வேறு ஒரு பொருளில் நோக்குள்ளவன்’ என்று தோற்ற இருந்திலன் ஆதலின், ‘மன்னினான்’ என்கிறார்.
மறப்பனோ இனி யான் என் மணியையே-மறவாமைக்குக் கருவி அவன் கையிலே உண்டாய் இருக்க, இனி மறக்க உபாயம் உண்டோ? மேல் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாமல் கழிந்தமை போன்று, இனி மேல் வருகின்ற காலமும் மறக்க விரகு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி. 3‘மறந்தேன் உன்னை முன்னம்’ என்கிறபடியே, அநாதி காலம் மறந்தே போந்தவர் ஆதலின், அது தோன்ற ‘யான்’ என்கிறார். ‘பெருவிலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்து புகழையுடைத்தான நீலமணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்கியமாம்படி செய்துவைத்தான்,’ என்பார் ‘என் மணியை’ என்கிறார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply