செல்வ நாரணன் என்றசொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பக லும்இடை வீடுஇன்றி
நல்கி என்னைவி டான்நம்பி நம்பியே.
பொ-ரை : திருநாராயணன் என்னும் பெயரை வழியே செல்வான் ஒருவன் கூறக் கேட்ட அளவில் கண்கள் நீர் பெருகாநிற்கும்; யானும், ‘எங்குற்றாய் எம்பெருமான்!’ என்று தேடாநின்றேன். இது என்ன ஆச்சரியம்! எல்லாக் குணங்களும் நிறைந்த இறைவன், சிறந்த இராக் காலமும் சிறந்த பகற்காலமும் ஒழிவின்றி என்னைப் பெரியவனாக நினைத்து விரும்பி என்னை விட்டு நீங்காதவன் ஆகின்றான்.
வி-கு : திருவே செல்வமாதலின், திருநாரணனைச் ‘செல்வ நாரணன்’ என்கிறார். நாடுவன் என்ற முற்றிற்கு ‘யான்’ என்னும்எழுவாய் வருவிக்க. ‘நன்’ என்னும் அடையினை ‘அல்லு’க்கும் கூட்டுக. ‘நம்பி’ இரண்டனுள் ஒன்று பெயர்ச்சொல்; ஒன்று வினையெச்சம். ‘நம்பி விடான்’ என மாற்றுக.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று ‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய், ஒரு குட்டிச்சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக்கொண்டு கிடந்தார்; அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்; அச்சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே அன்புடைமையாகிறபடியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் கண் பனி மல்கும் நாடுவன் – திருநாரணன் என்ற சொல் செவிப்பட்ட அளவிலே, கண்ணானது என்றனை ஒழியவே நீர் மல்கப்புக்கது; நெஞ்சும் அவ்வளவிலே, ‘எங்குற்றாய்?’ என்று தேடப்புக்கது. 2ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’ என்கிறார். விஷத்தை நீக்கும் மந்திரம் போன்று, பொருள் உணர்வு வேண்டாதே அச்சொல்லே இவர் நோவுபடுகைக்குப் போதியதாய் இருத்தலின், ‘சொல் கேட்டலும்’ என்கிறார். மாயமே – ஈது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்? 3பொருள் உணர்வு இன்றியே சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் கண் பனி மல்குகின்றது; நெஞ்சு தேடுகின்றது. ஆதலின், ‘மாயமே’ என்கிறார். இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது, ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார் எனலுமாம்.
‘ஆயின், அவன் செய்கிறது என்?’ என்னில், அல்லும் நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி நம்பி என்னை நம்பி விடான் – இரவு பகல் என்னும் வேறுபாடு அற என்னிடத்தில் அன்பு வைத்து,குணங்களால் நிறைந்த இறைவன், என்னைத் தன்னுடையவனாக நினைத்து, என்னை நீங்குதற்கு மனம் இல்லாதவன் ஆகின்றான். மேல் 1‘வெந்நாள்’ என்பவர், ஈண்டு ‘அல்லும் நன்பகலும்’ என்கிறார்; தம்முடைய ஆசை எல்லாம் ஒழிய, தம்முடைய உறுப்புகளுக்குப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இறைவன் மேல் விழுகிற காலம் ஆதலின். தாம் ஒருகால் தேடி விடாநிற்க, இறைவன் இடைவிடாதே விரும்புகிறான் ஆதலின், ‘இடைவீடின்றி’ என்கிறார். இனி, ‘என்னை விடான் நம்பி நம்பியே’ என்பதற்கு, ‘என்னை – அபூர்ணனான என்னை, நம்பி – பெருமதிப்பனாக நினைத்து, விடான் – விடுகின்றிலன்’ என்று பொருள் கூறலுமாம். ‘சம்சாரி சேதனனைப்பெற்று, பெறாப்பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘நம்பி, அல்லும் நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி, நம்பி என்னைவிடான்; மாயமே!’ எனக் கூட்டுக
1. ‘கேட்டலும்’ என் கையாலே, அசம்பாவிதமான இடத்தில் இருத்தல் சித்தம்
என்று திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச் செய்கிறார்.
2. ‘வழியே செல்கின்றவன் ஸ்ரீமந்நாராயணன் என்பானோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக ‘ஆழ்வார் பரிசரத்திலே’ என்று தொடங்கும்
வாக்கியத்தை அருளிச்செய்கிறார். ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்
போல் அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற’ (6. 7 : 2,) என்ற
திருப்பாசுரம் ஈண்டு நினைவு கூர்க.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply