எந்தையே என்றும் எம்பெரு மான்என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெரு மான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.
பொ-ரை : ‘எந்தையே! எம்பெருமானே!’ என்று நித்தியசூரிகள் தங்கள் மனத்திலே வைத்துத் துதிக்கும்படியான செல்வனை, மிக்க தீயவினைகளையுடைய யானும் ‘எந்தையே!’ என்றும், ‘எம்பெருமானே!’ என்றும் மனத்திலே வைத்துத் தியானிப்பேன், வாயாலும் சொல்லுவேன்; இஃது என்னே!’ என்பதாம்.
வி-கு : எந்தை என்பது, என் தந்தை என்றதன் மரூஉ என்பர். வானவர் என்றது – நித்தியசூரியகளை.
ஈடு : ஏழாம் பாட்டு. 1மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது; ‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்.
எந்தையே என்றும் – என்னிடத்தில் அன்புடையவனே என்றும். எம்பெருமான் என்றும் – எனக்கு வகுத்த சுவாமியே என்றும். சிந்தையுள் வைப்பன் – எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்தநெஞ்சிலே வைத்தேன். சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன். பாவியேன் – 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே! சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், 2புரோடாசத்தை நாய் தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ? எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம் தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன் ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார். ‘
1. ‘மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது’ என்றது, ‘துஞ்சும்போதும்
விடாது தொடர்கண்டாய்’ என்றதனை நோக்கி.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply