திருவாய்மொழி பூர்வாசார்யர்களை பற்றிய குறிப்பு ..

 அழகியமணவாளச்சீயர் : இவர் பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணாக்கர்; திருவாய்மொழிக்குப் ‘பன்னீராயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; துறவறத்தை மேற்கொண்டவர்; பரசமயகோளரியாய் விளங்கினாராதலின், ‘வாதி கேசரி’ என்ற சிறப்புப்பெயரைச்சேர்த்து, ‘வாதி கேசரி அழகிய மணவாளச்சீயர்’ என்று இவர் வழங்கப்படுவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். வரதராஜர், சுந்தரஜாமாத்ருமுனி என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.

அனந்தாழ்வான் : இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; தம் ஆசாரியர் கட்டளைப்படி திருமலைக்குச் சென்று, அங்கு ஓர் ஏரியை வெட்டி, அதற்கு ‘இராமாநுசன் புத்தேரி’ என்ற பெயரை அமைத்து, ஒரு நந்தவனத்தை உண்டாக்கி, அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் புஷ்பகைங்கரியம் செய்து வந்தவர். ஒரு நாள், மலர் பறிக்கையில் நல்லபாம்பு ஒன்று இவர் கையிலே தீண்ட, அதற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாது மீண்டு, நீராடி, பின்னரும் சென்று மலர்களைப் பறித்து மாலை தொடுத்துத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார்; அவ்வளவில், இறைவனும் திருவாய் மலர்ந்து, ‘விஷந்தீர்க்க வேண்டா என்றிருந்தது என்னை?’ என்று கேட்டருள, இவரும் ‘கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கிறேன்; கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீவைகுண்டநாதனைச் சேவிக்கிறேன் என்றிருந்தேன்,’ என்று பதில் இறுத்த பரமயோகி; திருவாய்மொழிக்கு ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்ற தனியனை அருளிச்செய்தவர். கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் என்று இவரைக் கூறுவர்.

ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் : இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர், இராமாநுசருக்கு ஆசார்யர். இராமாநுசருக்குப் பெரியதிருமொழி மூலமும், திருவாய்மொழி மூலமும் கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானமும், துவயார்த்தமும் அருளிச்செய்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்; திருவரங்கத்து இறைவன் முன்னர்த் திவ்வியப்பிரபந்தத்தை இசையோடு பாடி,அபிநயித்துக் காட்டும் அரையர்களுள் தலைவர்; ‘திருவரங்கப் பெருமாளரையர்’ எனவும் வழங்கப்படுவர்.

ஆழ்வான் : இவர் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள கூரம் என்ற ஊரில் அவதரித்தவராய், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ‘ஆழ்வான்’ என்ற திருநாமத்தை வகித்தவராதலால், ‘கூரத்தாழ்வான்’என்று வழங்கப்பட்டார். ‘திருமறு மார்பன்’ என்றது இவரது திருப்பெயர். விழுமிய செல்வமும் உயரிய ஒழுக்கமும் சீரிய கல்வியும் படைத்தவர்; செல்வமனைத்தையுந்துறந்து, திருவரங்கத்தையடைந்து, தம் ஆசாரியரான இராமாநுசருடைய திருவடி நிழலில் ஒதுங்கி வாழ்ந்தவர்; இராமாநுசர் பிரமசூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்த காலத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்தவர்; விஹித விஷயத்தையும் துறந்தவர்; சோழவரசன் அவைக்களத்தில் ‘சிவத்துக்குமேற் பதக்கு உண்டு’ என்று தீட்டினவர்; தரிசனத்திற்காகத் தரிசனத்தைக் கொடுத்தவர்; சிஷ்யலட்சணத்திற்கும் ஆசாரிய லட்சணத்திற்கும் எல்லை நிலமானவர்; பட்டருக்கும் சீராமப் பிள்ளைக்கும் தமப்பனார்; அவர்கட்கு ஆசாரியருமாவார். ஆண்டாள் இவருடைய திருத்தேவியார். வானிட்ட கீர்த்தி வளர்கூரத்தாழ்வான்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். ‘மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடத்தும் நம் கூரத்தாழ்வான்’ என்பர் அமுதனார். ஒரு நாள் இவர் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியை அநுசந்தித்துக்கொண்டிருக்க, பட்டர், ‘ஐயா, ‘ஆழ்வார் ‘சிறுமாமனிசர்’ என்று சிறுமை பெருமையாகிற பரஸ்பர விருத்த தர்மங்களிரண்டும் ஒரு பொருளிலே கிடக்கும்படி அருளிச் செய்கிறாரே! இது என்?’ என்று கேட்டருள, இவரும், ‘நல்லீர், கேட்டபடி அழகிது! நீர் உபநயனம் ஆகாதவராகையாலே சாஸ்திரங்களைக்கொண்டு இசைவிக்கவொண்ணாது; கண்கூடாக உமக்குக் காட்டுகிறோம்; கேளீர்; திருமேனி சிறத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போல்வாரை காணும் ‘சிறு மா மனிசர்’ என்கிறது, என்று அருளிச்செய்தவர். இவர் அருளிச்செய்த நூல்கள்: வரதராஜ ஸ்தவம், சுந்தரபாஹூ ஸ்தவம், ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமாநுஷ ஸ்தவம், யமகரத்நாகரம், கத்யத்ரய வியாக்கியானம் என்பனவாம்.

ஆளவந்தார் : இவர், சிதம்பரத்தையடுத்த காட்டு மன்னார்கோவிலிலே ஆடி மாதத்திலே உத்திராட நக்ஷத்திரத்தில் ஈஸ்வர முனிகட்குப் புதல்வராய்த் தோன்றியவர். மணக்கால் நம்பிகள்தம் ஆசாரியருடைய நியமனத்தின்படியே சென்று, இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள் இவருக்குச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து, ‘யமுனைத்துறைவர்’ என்ற பெயரையும் வைத்து மீண்டனர். ஸ்ரீமந்நாதமுனிகட்குப் பௌத்திரர். இவர், இளமைப்பருவத்தில் மஹாபாஷ்யபட்டர் என்பவரிடத்தில் சாஸ்திராப்பியாசம் செய்தார். அக்காலத்தில், இராச புரோகிதனும் மகா வித்துவானுமான ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கிய போது இராசபத்தினியானவள், ‘இவர் தோற்கமாட்டார்’ என்று உறுதி கூற, அரசன் ‘நம் ஆக்கியாழ்வான் தோற்றால் இவருக்குப் பாதி ராச்சியந்தருவேன்.’ என்று சூளுறவு செய்ய, உடனே அங்கு நடந்த பல வகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய, அது கண்டு, தனது சூளுறவு நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சி கொண்ட அரசபத்தினி, ‘என்னை ஆள வந்தாரோ!’ என்று கொண்டாடியதனால், அதுமுதல் இவர் ‘ஆளவந்தார்’ என்ற திருப்பெயரால் வழங்கப்பட்டார். மணக்கால் நம்பிகளுடைய உபதேசத்தால் சரணாகதி தருமம் நெஞ்சிலே பட்டு ஆநுகூல்யம் மிகுந்து, அரசவாழ்வில் வெறுப்புற்று, அதனைத் துறந்து, துறவறத்தை மேற்கொண்டு, திருவரங்கத்திலேயே நித்தியவாசஞ்செய்தவர். இப்பெரியார்க்கு மாணாக்கர் பலர். அவர்களுள், திருமலையாண்டான், திருக்கோட்டி நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், திருமலை நம்பி, பெரிய நம்பி என்பவர்கள் தலைவர்கள். இவருடைய மாணாக்கர்களுள் ‘மாறனேரி நம்பி’ என்னுந் திருக்குலத்து அடியாரும் ஒருவராவர். ‘ஆம்முதல்வன்’ என்று இராமாநுசரை அபிமானித்தவர். அரசன் காரணத்தால் இராமாநுசர் மேற்கே எழுந்தருளின காலத்தில் அங்கு அவர் உபந்யசித்த கட்டளை கேட்டு’ ஆசார்யர்களெல்லாரும் ஆச்சரியப்பட, உடையவரும், ‘என் பரமாசாரியரான ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது; ஆளவந்தார் கோஷ்டியிலே ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேனாகில் பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும் படியும் கட்டிவிடேனோ?’ என்று அருளிச்செய்யும்படியான கல்வியின் பெருமை வாய்ந்த பெரியார். இவர் அருளிச்செய்த நூல்கள் ஆகமப் பிரமாண்யம், புருஷநிர்ணயம், ஆத்துமசித்தி, தோத்திரரத்நம், கீதார்த்த சங்கிரகம், சதுஸ்லோகி என்பன.

ஈஸ்வரமுனிகள் : இவர் ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருக்குமாரர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குத் தமப்பனார். திருவாய்மொழிக்குத் ‘திருவழுதி நாடென்றும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.எம்பார் : இவர், ஸ்ரீபெரும்பூதூருக்கு அண்மையிலுள்ள மழலைமங்கலம் என்ற தலத்தில் இராமாநுசருடைய சிற்றன்னையாரான பெரிய பிராட்டியார் என்பவருக்குப் புதல்வராய் அவதரித்தவர்; பெரிய திருமலை நம்பிகட்கு மருகர்; கோவிந்தப்பெருமாள் என்பது இவருடைய திருப்பெயர். இவர் இளம்பருவத்தில் இராமாநுசரோடு சேர்ந்து யாதவப்பிரகாசரிடம் வேதாந்த பாடம் கேட்டவர்; அக்காலத்து நிகழ்ந்து ஒரு நிகழ்ச்சியால் திருக்காளத்தி மலையிலுள்ள சிவபெருமானுக்கு அணுக்கத்தொண்டராய்ச் சில காலமிருந்தவர்; பின்னர், பெரியதிருமலை நம்பியால் திருத்திப் பணிகொள்ளப் பட்டவர்; பின்னர், இராமாநுசருடைய வேண்டுகோளின்படி உதகதாரா பூர்வமாகப் பெரியதிருமலை நம்பியால் இராமாநுசருக்குக் கொடுக்கப்பட்டவர்; அது முதல், இராமாநுசர் மெய்யில் பிறங்கிய சீரும் அவர் குணானுபவமுமே காலக்ஷேபமாகச் செல்லாநிற்க, ‘மாகாந்த நாரணனார் வைகும் வகையறிந்தோர்க்கு, ஏகாந்தமில்லை இருளில்லை’ என்கிறபடியே, வாழ்க்கை நடத்தி வந்தவர்; இராமாநுசருடைய திருவடி நிழலைப்போன்று அவரை நீங்காது சார்ந்து நிற்பவர். இராமாநுசர் இவருடைய வைராக்கியத்தைக் கண்டு, இவர்க்குச் சந்நியாச ஆச்சிரமத்தைத் தந்தருளித் தமது திருப்பெயர்களுள் ஒன்றான ‘எம்பெருமானார்’ என்ற பெயரை இவருக்குச் சார்த்த, இவர் அப்பெரும்பெயரைத் தாம் தாங்க விரும்பாதவராய்த் ‘தேவரீருக்குப் பாதச்சாயையாயிருக்கிற அடியேனுக்குத் தேவரீர் திருநாமச்சாயையே அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, இராமாநுசரும் அப்பெயரைச் சிதைத்து, ‘எம்பார்’ என்று பெயரிட்டருளினார். அது முதல் ‘எம்பார்’ என்ற திருப்பெயரே இவருக்கு வழங்கிவரலாயிற்று. இராமாநுசருடைய நியமனத்தின்படி சென்று பட்டர்க்குத் துவய உபதேசஞ்செய்து, ஆசாரியராகி அவர்க்குப் பஞ்ச சம்ஸ்காரங்களையும் திருவாய்மொழி முதலிய கிரந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் அருளினவர்.

எம்பெருமானார் : இவர் ஸ்ரீபெரும்பூதூரிலே ஆசூரிவமிசத்திலே சித்திரை மாதத்திலே திருவாதிரை நக்ஷத்திரத்தில் கேசவப் பெருமாள் தீக்ஷிதருக்கும் ஸ்ரீ பூமிப்பிராட்டியார் என்னும் காந்திமதியம்மையாருக்கும் புதல்வராய்த் தோன்றினார். இவர் பிறந்த பன்னிரண்டாநாள், மாதுலரான பெரியதிருமலை நம்பிகள் இவருக்கு ‘இளையாழ்வார்’ என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘எம்பெருமானார்’ என்பது ஆசாரியரான திருக்கோட்டியூர் நம்பிகளால் வைக்கப்பட்டபெயர். இவர் இளமைப்பருவத்தில் யாதவப்பிரகாசர் என்னும் ஏகதண்ட சந்யாசியாரிடம் வேதாந்த பாடம் கேட்டனர், பின்பு அவ்யாதவப்பிரகாசரே இவரிடம் திரிதண்ட சந்யாசாதிகளைப் பெற்றுக் ‘கோவிந்த ஜீயர்’ என்ற பெயரோடு இவருக்கு மாணாக்கராயினார். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்குப் பரமாசாரியர்; ‘தூய்நெறிசேர், எதிகட்கிறைவன் யமுனைத்துறைவ னிணையடியாம், கதிபெற்றுடைய இராமாநுசன்’ என்பர் அமுசனார். ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்களான பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டன், திருவரங்கப்பெருமாளரையர், திருமலை நம்பி என்னும் ஐவரும் இவருக்கு ஆசாரியர்கள். இவர்களுள், பெரிய நம்பி, இவர்க்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்தருளித் திருமந்திரம் துவயம் சரமஸ்லோகம் இவற்றையும் உபதேசித்து ‘இராமாநுசன்’ என்ற திருப்பெயரை வைத்து, முதலாயிரம், இயற்பா என்ற ஈராயிர மூலத்தையும் அருளிச் செய்தார். திருக்கோட்டியூர் நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரமஸ்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து, ‘எம்பெருமானார்’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானம் அருளிச்செய்து ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருவரங்கப் பெருமாளரையர், இவர்க்குப் பெரியதிருமொழி மூலம், திருவாய்மொழி மூலம், கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியானம், துவயார்த்தம் ஆகிய இவற்றை அருளிச்செய்து, ‘லக்ஷ்மணமுனி’ என்னும் திருப்பெயரை வைத்தனர். பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியானம் அருளிச்செய்து, ‘கோயில் அண்ணன்’ என்ற திருப்பெயரை வைத்தனர்.

இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்று குறைகளையும் தீர்த்தவர்; ‘பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்’ என்கிற ‘உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்’ என்று திருவரங்க நாதனால் தரப்பெற்றவர்; திருவரங்கன் செல்வ முற்றும் திருத்தினவர்; செல்வப் பிள்ளையைக் கொணர்ந்து திரு நாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்தவர்; உலகினருய்ய இவரால் செய்யப்பட்ட காரியங்கள் இன்னும் மிகப்பல. ‘பிடிக்கும் பரசமயக் குலவேழம் பிளிற வெகுண்டு, இடிக்கும் குரற்சிங்க ஏறனையான் எழுபாரு முய்யப், படிக்கும் புகழ் எம்மிராமாநுசன்’ என்பர் திவ்விய கவி ஐயங்கார். ‘பல்கலையோர் தாம் மனன் வந்த இராமாநுசன்’ என்பது அமுதனார் திருவாக்கு. இவர், தம் அந்திமகாலத்தில்

அருளிச்செய்தவை : (1) ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும், வாசிப்பித்தும் போருதல்; அதற்குத் தகுதியில்லாவிடில் (2) அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (3) உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி, சாத்துபடி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (4) திருநாராயண புரத்தே ஒரு குடில் கட்டிக் கொண்டிருத்தல்; அதற்கும் தகுதியில்லையாகில் (5) துவயத்தை அர்த்தாநுசந்தானம் பண்ணிப் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (6) என்னுடையவன் என்று அபிமானிப்பான் யாவனொரு பரம பாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப்போருதல். இவர் அருளிச்செய்த நூல்கள் :- ஸ்ரீ பாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்கிரகம், கத்யத்ரயம், உடையவர் நித்தியம், கீதாபாஷ்யம் என்பன. இப்பெரியார், இப்பூவுலகில் நூற்றிருபது வருடங்கள் பஞ்சபூதமயமான தம் திருமேனியோடு வாழ்ந்திருந்தனர்.

    குன்றத்துச்சீயர் : இவர் இராமாநுசர் காலத்திலிருந்தவர்; அவருடைய மாணாக்கராகவும் இருத்தல் கூடும். பக். 162இல் காண்க.

சொட்டை நம்பிகள் : ஸ்ரீ ஆளவந்தாருடைய திருக்குமாரர்; ‘என்னாச்சான்’ என்பவருக்குத் தமப்பனார். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; திருவாய்மொழிக்கு ‘மனத்தாலும் வாயாலும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் : இவர், பெரிய திருமலை நம்பியின் புதல்வர்; இராமாநுஜருடைய மாணாக்கர்; திருவாய் மொழிக்கு ‘ஆறாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச் செய்தவர்; ‘பிள்ளான்’ என்பது இவருடைய இயற்கைப்பெயர். திருக்குருகைப்பிரான் என்பது நம்மாழ்வாருடைய திருப்பெயர்; அவருடைய திருப்பெயரை, அவருடைய நினைவின்பொருட்டுத் தம்மாணாக்கரும் அபிமான புத்திரருமான இவருக்கு வைத்தனர் இராமாநுஜர். பின்னர், ‘திருக்குருகைப்பிரான் பிள்ளான்’ என்றே இவர் அழைக்கப்பட்டனர். தி்ருவரங்கத்தில் வாழ்ந்தவர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்.

திருக்கோட்டியூர் நம்பி : இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுஜருக்கு ஆசாரியர். இராமாநுஜர், இவரிடமே திருமந்திரார்த்தத்தையும், சரமஸ்லோகார்த்தத்தையுங் கேட்டனர். திருக்கோட்டியூரில் அவதரித்தமையால் திருக்கோட்டியூர் நம்பிஎனப் பெயர் பெற்றார். புதல்வர், தெற்காழ்வான். புதல்வியார், தேவகி பிராட்டியார். ‘சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் வேதாத்தியயனம் பண்ணினாற்போலேகாணும் உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறதும்; ஆளவந்தார் திருவுள்ளத்திலுள்ள அர்த்தமொழிய இவர்க்கு வேறே பிரகாசியாது என்றிரும்; இவர்க்கு நீர் அறிவின்மையைப் போக்குகிறோம் என்றிராதே கொள்ளும்,’ என்று திருமாலையாண்டானிடத்தில் இராமாநுசருடைய பிரபாவத்தை அருளிச்செய்தவர்.

திருமாலையாண்டான் : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருடைய ஆசிரியர் ஐவருள் ஒருவர். இவரிடமே திருவாய்மொழியைப் பாடங்கேட்டனர் இராமாநுசர். இவர் அவதரித்த ஊர் அழகர் கோவில்; வாழ்ந்த ஊர் திருவரங்கம். மாலாதரர், ஞான பூர்ணர் என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.

தெற்காழ்வான், கோளரியாழ்வான் : இவரிருவரும் பட்டர் காலத்தில் இருந்த அடியார்கள்; திருக்கோட்டியூரில் வாழ்ந்தவர்கள். (பக். 190 காண்க). நஞ்சீயர் : இவர், பட்டருடைய மாணாக்கர்; நம்பிள்ளையின் ஆசாரியர்; திருவாய்மொழிக்கு ‘ஒன்பதினாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; ‘வேதாந்தி’ என்ற சிறப்புப் பெயரையுடையவர். இருபெருஞ்செல்வங்களாலும் நிறைவுற்று அவற்றால் வீறுற்று மேல்நாட்டில் இருந்த இவர், பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டார். பின்னர்த் துறவறத்தை மேற்கொண்டதனால் ‘சீயர்’ என்றும் பட்டரால் ‘நம்முடைய சீயர்’ என்று அபிமானிக்கப்பெற்றமையால் ‘நஞ்சீயர்’ என்றும் வழங்கப்பட்டனர். இவர் திருவாய்மொழிக்கு நூறுரு பொருள் கூறியருளினார் எனின், இவருடைய ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் பிறிதொரு சான்றும் வேண்டுமோ? இவர் வாழ்ந்த ஊர் திருவரங்கம். இவர் அருளிச்செய்த வேறு உரைகள்; திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருவந்தாதிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு திருப்பல்லாண்டு இவைகட்கு வியாக்கியானம், இரஹஸ்யத்ரய விவரணமாக நூற்றெட்டுச் சரணாகதி கத்ய வியாக்கியானம் என்பன.

நம்பி திருவழுதிநாடு தாசர் : இவர் பட்டர் காலத்தவர். ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக்கிடப்பதே, இவன் அழகையும் இனிமையையும் விட்டு’ என்று கூறினவர். (பக். 272காண்க).நம்பிள்ளை : இவர் திருவரங்கத்திற்குத் தெற்கேயுள்ள நம்பூர் என்ற தலத்தில் அவதரித்தவர்; வரதராஜர் என்பது இவருடைய திருப்பெயர்; திருக்கலிகன்றி தாசர் என்பது ஆசாரியரால் இடப்பட்ட பெயர். கந்தாடை தோழப்பரால்‘லோகாசாரியர்’ என்ற திருப்பெயர் இடப்பட்டவர்; நஞ்சீயருடைய மாணாக்கர். நஞ்சீயர், இவருடைய குணாதியங்களைக் கண்டு மகிழ்ந்து ‘நம்பிள்ளையோ!’ என்று தழுவிக்கொண்டார்; அது முதல் ‘நம்பிள்ளை’ என்ற பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. இவர், தென்சொற்கடந்து வடசொற்கடற்கு எல்லை தேர்ந்தவர்; திருவாய்மொழிக்கு நூறுரு அர்த்தம் நிர்வகித்த தம் ஆசாரியரான நஞ்சீயருக்குச் சதாபிக்ஷேகம் செய்தவர்; ‘ஆத்துமாவிற்குச் சரீரவிஸ்லேஷம் பிறந்தால் பரமபதம் சித்தம்’ என்று அறுதியிட்டிருப்பது எவ்வர்த்தத்தாலே?’ என்று ஒருவர் கேட்க, ‘திருமகள் கேள்வனை உபாய உபேயம் என்று அறுதியிட்டிருப்பது, நெடுங்காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டித் தந்த ஆசாரியன் பக்கல் கனக்க விஸ்வாசமுண்டாயிருப்பது. அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யத்தின்படியே எம்பெருமானார் தரிசன ஸ்தாபனம் பண்ணுவது, ஆழ்வார்கள் அருளிச்செயல்களாலே போது போக்குவது ஆகிய இவை உண்டானால், ‘மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே’ என்கிறபடியே, பரமபதம் சித்தம்; சந்தேகிக்க வேண்டா,’ என்றருளினவர். பாண்டி நாட்டினின்றும் வைஷ்ணவர் சிலர் வந்து, ‘எங்கட்குத் தஞ்சமாக இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்யவேண்டும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, ‘கடற்கரைவெளியை நினைத்திருங்கோள்’ என்ன, அவர்களும், ‘மணற்குன்றையும் புன்னை மரங்களடர்ந்த காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பஞ்செய்ய, கேட்டுப் புன்முறுவல் செய்து, ‘சக்கரவர்த்தி திருமகன் கடற்கரையிலே ஓர் அமிர்தக் கடல் போலே பெரிய வானர சேனையோடே விட்டிருக்க, அக்கரையிலே பையல் இராவணன் இருக்க, எழுபது கோடி சேனைகளும் உணர்ந்து, பெருமாளைக் குறிக்கொண்டு நோக்கிக்கொண்டு போர, அவர்கள் பிரகிருதிமான்களாகையாலே கண்ணுறங்கிக் காலோய்ந்து கைசோர்ந்தவளவிலே, தாமும் தம் திருத்தம்பிமாருமாகத் திருவரையில் கட்டின கச்சும், சுருக்கிய சீராவும் நாணியும், முதுகிலே கட்டின அம்பறாத்தூணியும், கையிலே தரித்துப் பிடித்துப் பெருக்கின திருச்சரமும், தரித்த திருவில்லும் தாமுமாய், சில அண்டஜங்கள் முட்டையிட்டுத் தம் சிறகின்கீழே நோக்கியிட்டுவைக்குமாறு போன்று, எழுபது வெள்ளம் மஹா சேனையையும் நடையாடு மதில்கள் போலே ரக்ஷித்துக்கொண்டு ஓரிரவெல்லாம் சாரிகையாய் வந்த சக்கரவர்த்தி திருமகனுடையகையும் வில்லுமே தஞ்சம் என்று இரும்’ என்று அருளினவர். இப்பெரியாருடைய திவ்யசரிதம் விரிப்பின் பெருகும்.

நம்பியேறுதிருவுடையான் தாசர் : இவர், பட்டர் காலத்தவர். ‘நம்பியேறுதிருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்குற்று எழுந்துநின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும்படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்’ என்று பட்டரால் கூறப்படும் பெருமை வாய்ந்தவர்.  (பக். 204 காண்க) இவர் நாடார் மரபில் தோன்றியவரெனக் கருதப்படுகிறார்.

நாதமுனிகள் : ஆசாரிய பரம்பரைக்கு முதல்வர் இவரே. ‘நாதன்’ என்பது இவருடைய இயற்பெயர். நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மனனம் செய்துகொண்டு இருக்கின்ற அந்தணர் பெருமான் ஆதலின், ‘நாதமுனி’ என வழங்கப்பட்டார். முனி மனனசீலர். யோகமார்க்கத்தால் நம்மாழ்வாரை நேரிற்கண்டு, திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களை அவரிடம் பெற்று, அவற்றை இயலும் இசையுமாக வகுத்து உலகத்தில் பரவச்செய்தவர்; திருவாய்மொழிக்கு ‘பக்தாம்ருதம்’ என்ற தனியனை அருளிச்செய்தவர். இவரை, ‘ஆரப் பொழில் தென்குருகைப்பிரான் அமுதத் திருவாய், ஈரத் தமிழினிசையுணர்ந்தோர்கட்கு இனியவர்தம், சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனி’ என்பர் அமுதனார். இவர் யோகீஸ்வரர்; காட்டுமன்னார் கோவிலில் அவதரித்தவர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிதாமகர்; ஈஹ்வரமுனிகளுக்குத் தமப்பனார். அருளிச்செய்த நூல்கள்: நியாயதத்துவம், யோகரஹஸ்யம், புருஷநிர்ணயம் என்பன.

பட்டர் : இவர் கூறத்தாழ்வான் திருக்குமாரர்; திருவரங்கநாதனுடைய திருவருளாற்பிறந்தவர். வானிட்ட கீர்த்தி மகிழ் கூரத்தாழ்வான் மகிழ வந்த, தேனிட்ட தார் நம்பெருமாள் குமாரர்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். எம்பாருடைய மாணாக்கர்; பராசரபட்டர் என்பது இவருடைய திருப்பெயர். செய்ந்நன்றியறிதலுக்கு அறிகுறியாக இராமாநுசர் இத்திருப்பெயரை இவருக்கு வைத்தனர். இப்பெரியாருக்குத் தேவியர் இருவர். இவர் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களையும், தொல்காப்பியங்களான இலக்கியங்களையும் கற்றுத்துறை போயவர். வியாக்கியானத்திலஇவருடைய நிர்வாஹங்கள் மிகச்சிறப்புடையனவாயும் சுவை பயப்பனவாயும் இருக்கும். திருநெடுந்தாண்டகத்தில் ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்ற பாசுரத்திற்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. இராமாநுசருடைய நியமனத்தின்படியே சென்று, மேல் நாட்டிலிருந்து ‘வேதாந்தி’ என்பவரோடு ஒன்பது நாள் வாதஞ்செய்து, அவரை வென்று திருத்திப் பணி கொண்டவர். ‘இவ்விபூதியும் இவ்விபூதிமான்களும் பாக்கியமற்றவர்கள். ஆனால், அடியேன் செய்வது என? நாயுடலுக்கு நறுநெய் தொங்குமோ? இன்னம் சிலநாள் இங்கே அடிமைகொண்டருளில் பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும்படியுங் கட்டேனோ?’ என்று ராஜகுல மஹாத்மியத்தாலுண்டான செருக்குத் தோன்ற உரைத்தவர்; ‘ஆசனபதமத்திலே பொருந்தியிட்ட திருவடித்தாமரைகளும், அஞ்சலென்ற கையும், கவித்த முடியும், முறுவல் பூத்த சிவந்த திருமுகமண்டலமும், திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்தில் கண்டிலேனாகில் மூலையடியே முரித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்!’ என்று தம் அன்பெல்லாம் தோன்ற திருவரங்கநாதனைப் பார்த்துக் கூறின ஏற்றம் வாய்ந்தவர். இவர் அருளிச்செய்த நூல்கள் : அரங்கராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்நகோசம், ஸஹஸ்ரநாம்பாஷ்யம், கிரியா தீபம், அஷ்டஸ்லோகி, சதுஸ்லோகி, துவிஸ்லோகி, தனிஸ்லோகி என்பன.

பராங்குசநம்பி : இவர், எம்பாருடைய திருத்தம்பியாரான சிறிய கோவிந்தப் பெருமாளுடைய புதல்வர். ‘பராங்குசநம்பி’ என்னும் நம்மாழ்வாருடைய இத்திருப்பெயரை அவர் நினைவின் பொருட்டு, இராமாநுசர் இவருக்கு வைத்தனர். இவர் எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்.

பிள்ளை திருநறையூர் அரையர் : இவர், நஞ்சீயர் காலத்தவர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். (அவதாரிகை – திருமகள் கேள்வன் ஒன்று. பக். 14. வியாக. க். 191 காண்க.)

பிள்ளைப்பிள்ளையாழ்வான் : இவர், கூரத்தாழ்வானுடைய மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். பிள்ளை என்றும் இவரை வழங்குவர். கூரத்தாழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளும் போது, இவர் மடியிலே திருமுடியை வைத்துக்கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்பர். ‘பிள்ளைப்பிள்ளையாழ்வான் மடியிலே திருமுடியையும் ஆண்டாள் மடியிலே திருவடிகளையும் வைத்துக்கொண்டு, உடையவர் திருவடிகளைத் தியானித்துக்கொண்டு அன்றே திருநாட்டுக்கு எழுந்தருளினார்?’ என வருதல் காண்க.

பிள்ளையமுதனார் : (வியாக். பக். 233 காண்க). இவர் திருவரங்கத்தமுதனார் என்று கருதப்படுகின்றார் என்பர்.

பிள்ளையுறங்காவில்லி தாசர் : இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; சோழன் அவைக்களத்தில் அமர்ந்திருந்த வில்லிகள் மூவருள் ஒருவர்; அரசனிடத்துத் தமக்குக் கிடைக்கும் பொருளனைத்தையும் இராமாநுசர் திருவடிகளிலே சமர்ப்பித்தவர்; மடத்தில் அத்தாணிச்சேவகம் பெற்று வாழ்ந்தவர். இவர் தேவிகள் பொன்னாச்சியார். தேவிகளின் பேரழகில் ஈடுபட்டுத்துவக்குண்டிருந்த இவர், இராமாநுசருடைய திருவருளால் பெரிய பெருமாளைச் சேவித்த பின்னர், பிரபத்தி மார்க்கத்தை மேற்கொண்டவர். ஒரு நாள், உடையவர், ‘அபயப்பிரதானம்’ அருளிச்செய்யாநிற்க, அதனைக்கேட்டிருந்த இவர் எழுந்து வணங்கி நின்றனர்’ ‘பிள்ளாய்! இது என்?’ என்று உடையவர் கேட்டருள, ‘முற்றுந் துறந்து பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து விழுந்த விபீஷணாழ்வானையும் அகப்பட, ‘கொல்லுங்கள்’ என்று கல்லுந் தடியுங்கொண்ட இராமகோஷ்டிக்கு, அடியேன் பசு, பத்தினிகளோடு கூடினவன் ஆளாகப் புகுகிறேனா?’ என்றார். உடையவரும் ‘கேளும் பிள்ளாய்! அஞ்சாதே கொள்ளும் : நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்; பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன்; ஆளவந்தார் பெற்றாராகில் பெரியநம்பி பெறுகிறார்; மற்றுமுள்ளார் பெற்றார்களாகில் இவர்களும் பெறுகிறார்கள்; நம் சடகோபர் ‘அவாவற்று வீடு பெற்றேன்’ என்று தம் திருவாக்காலே அருளிச் செய்கையாலே அவர் பெற்றது சித்தம்; ஆனபின், நமக்கும் சித்தம் என்று இரும். கழுகு உண்ணில் வாழையும் உண்ணும் என்றிரும். ஆன பின்னர், நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர், அஞ்சாதே சுகமே இரும்,’ என்று அருளிச்செய்ய, ஆறியிருந்த பெரியார் இவர். பெருமாள் செய்ய திருநாள் கண்டருளித் திருக்காவேரியில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற போது எம்பெருமானார், முதலியாண்டான் திருக்கைத்தலம்பற்றி எழுந்தருளி நீராடி, மீண்டு எழுந்தருளும்போது இவருடைய திருக்கைத்தலம் பற்றி எழுந்தருள, சேவித்திருந்த முதலிகள் ‘இதற்கு அடி என்?’ என்று விண்ணப்பஞ்செய்ய உடையவரும், ‘ஜன்மம் உயர்ந்திருக்கச்செய்தே தாழ நில்லாநின்றோமே என்ற அபிமானம் உண்டே. அல்லாதார்க்கு, அக்கொத்தையும் இல்லாதவரன்றோ இவர்?’ என்று கூறியருளும்படியான ஞானச் செல்வர் இவர்.

பெரியதிருமலை நம்பி : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருக்கும் எம்பாருக்கும் மாதுலர்; இராமாநுசருக்கு ஆசாரியருமாவர், இவரிடமே ஸ்ரீ ராமாயணத்தின் பொருள் கேட்டனர் இராமாநுசர். நம்பி திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்துகொண்டு திருமலையிலேயே நித்தியவாசஞ் செய்தவர். இராமாநுசர் திருமலைக்கு எழுந்தருளிய காலத்தில் இவர் இராமாநுசரை எதிர்க்கொண்டு வந்து திருவேங்கடமுடையானுடைய தீர்த்தப் பிரசாதத்தை அவருக்குக் கொடுக்க, இராமாநுசரும் இவர் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்துத் ‘தேவரீர் எழுந்தருள வேண்டுமோ? வேறு சிறியவர் இலரோ?’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘நாலு திருவீதிகளிலும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னைக்காட்டிலும் சிறியவர்களைக் கண்டிலேன்! என்று விடை கூறிய பெரியார் இவர்.

பெரியவாச்சான் பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய மாணாக்கர்; அவர் திருவருளுக்குப் பூரண பாத்திரமானவர்; திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; திவ்வியப் பிரபந்தத்தில் மற்றை மூவாயிரங்கட்கும் வியாக்கியானம் அருளிச்செய்தவரும் இப்பெரியாரேயாவர். இவர் அவதரித்த ஊர், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள சேங்கநல்லூர் என்பது. இவர் திருவரங்கத்திலேயே வாழ்ந்தவர்; ஸ்ரீ கிருஷ்ணபாதர், அபயப்பிரதானர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவருக்கு உண்டு. இவர் அருளிச்செய்த வேறு நூல்கள்; தனி ஸ்லோகி, பரந்த ரகசியம், மாணிக்கமாலை, நவரத்நமாலை, சகல பிரமாண தாத்பரியம், அபயப் பிரதான வியாக்கியானம், சரமரஹஸ்யம், அநுஸந்தான ரஹஸ்யம், நியமனப்படி என்பன.

பெரியாழ்வார் : இவர் தென்பாண்டிநாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே, அந்தண வருணத்தில் வேயர் குலத்தில் அவதரித்து, விஷ்ணு சித்தர் என்ற திருநாமம் பெற்று விளங்கியவர்; ஆழ்வார்களுள் ஒருவர்; ஆண்டாளுக்குத் தமப்பனார். திருநந்தவனமுண்டாக்கித் திருமாலை கட்டுதல் முதலியதொண்டுகளைச் செய்து கொண்டு தம்மூர்த் திருமாலை இடையறாது வழிபட்டு வந்தவர். மதுரையில் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன் சமயவிசாரஞ்செய்வதில் பெருவிருப்புடையவனாய்ப் ‘பரமார்த்த தத்துவம் இன்னதென்பதைநிரூபிக்கும் பெரியார்க்கு உரியது’ என்று தன் அரண்மனையிற் கட்டிய பொற்கிழியைத் திருமால் திருவருளால் இவர் சமயவாதியர் பலரோடு வாதஞ்செய்து பரத்துவத்தை நிரூபணஞ்செய்து, வெற்றியடைந்து பெற்றவர்; அதனால், ‘பட்டர் பிரான்’ என்ற சிறப்புப் பெயரும் அடைந்தவர். பட்டர்பிரான்-வித்துவான்களுக்குத் தலைவர். இப்பெரியார் காலம், கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும். இவர் அருளிச் செய்த நூல்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி என்பனவாம்.

மணவாளமாமுனிகள் : இவர், பாண்டி நாட்டிலே திருநெல்வேலி ஜில்லாவில் சிக்கில் கிடாரம் என்ற தலத்தில், ஐப்பசி மாதம், சுக்கிலபக்ஷம், சதுர்த்தசி, வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில், திகழக்கிடந்தான் திருநாவீறுடைய அண்ணர் என்பவருக்குப் புதல்வராய்த் தோன்றினார். இவரை ஆதிசேடனுடைய அமிசம் என்றும், இராமாநுசருடைய புனர் அவதாரம் என்றும் கூறுவர் பெரியோர். திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெரியாரிடம் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களின் வியாக்கியானங்களையும், மற்றை ரஹஸ்ய கிரந்தங்களையும் காலக்ஷேபங்கேட்டு, அவற்றின் நுண் பொருளை அலகலகாக அறிந்தவர்; இராமா நுசரிடத்தில் பேரன்பு வாய்ந்தவராதலின், ‘யதீந்திரப்ரவணர்’என்ற திருப்பெயரைப் பெற்றவர். இவர்க்குப் ‘பெரிய ஜீயர்’ என்ற திருப்பெயர் பெரிய பெருமாளால் கொடுக்கப்பட்டது. முப்பத்தாறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தைத் திருவரங்கத்து எம்பெருமானும் அவனடியார்களும் கேட்கும்படி காலக்ஷேபஞ்சாதித்தவர்; முப்பத்தாராயிரப் பெருக்கர் என்ற திருப்பெயரையும் பெற்றவர்; சொந்த ஊராகிய ஆழ்வார் திருநகரியை விட்டு நீங்கித் திருவரங்கத்திலேயே நித்திய வாசஞ்செய்தவர்; தம் ஆசாரியருடைய நியமனத்தின்படி, அனைவரும் கேட்டு உய்யும்படி அருளிச்செயல்களின் ஆழ்பொருள்களை அள்ளிவழங்கியவர். இவர் அருளிச்செய்த நூல்கள்: தத்வத்திரயம், ரஹஸ்யத்திரயம், ஸ்ரீ வசன பூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், ஞான சாரம், பிரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழிக்கும் இராமாநுச நூற்றந்தாதிக்கும் வியாக்கியானங்கள், திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை, ஆர்த்திப்பிரபந்தம், எதிராஜவிம்ஸதி, திருவாராதனக் கிரமம் என்னும் நூல்களும் பிறவுமாகும்.

முதலாழ்வார்கள் : பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற இம்மூவரும் முதலாழ்வார்கள் என்று வழங்கப்படுவர். மற்றை ஆழ்வார்கட்கெல்லாம் முன்னே அவதரித்தமையால், முதலாழ்வார்கள் ஆனார்கள். இவர்களுள் பொய்கையார் காஞ்சியிலும், பூதத்தார் திருக்கடன்மல்லையிலும், பேயார் மைலாப்பூரிலும் அயோனிஜர்களாய் ஓரே மாதத்தில் அடுத்தடுத்த நக்ஷத்திரங்களில் அவதரித்தவர்கள். இவர்கள் காலம், கி. பி 5, 6 ஆம் நூற்றாண்டுகளின் பின் முன் பகுதிகளாகும். தனித்தனியே சஞ்சரித்து வந்த இவர்கள் திருக்கோவலூரில் நெருக்கமான இடை கழி ஒன்றில் மழை பெய்த ஒருநாளிரவு ஒதுங்குவதற்காகச் சந்திக்க நேர்ந்த போது, இறைவன் இவர்கட்கு அருள்புரிய விரும்பி இவர்கட்கிடையில் நான்காமவராய் இருந்து இருளில் நெருக்க, அதனையறிய வேறு விளக்கின்மையால் தங்கள் ஞானமாகிய விளக்கேற்றிப் பாட, அப்பெருமான் அங்கு இவர்கட்குக் காட்சி கொடுத்தனர் என்பது இவர்களது சரித்திரச் சுருக்கமாகும். ‘பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநா ளிரவில், மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு’ என்பது வில்லி பாரதம் தற்சிறப்புப்பாயிரம். இவர்களுள், பொய்கையாரைச் ‘சாவவுங் கெடவும் பாட வல்லவரும், முக்காலமும் உணர்ந்தவருமாகிய இருடி’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கூறுவர். அவ்விருத்திகாரர் ஆரிடமான கவிகட்கு உதாரணங்காட்டி வருமிடத்து, ‘அவை, உலகியற்செய்யட் கோதிய உறுப்புகளில் மிக்குங் குறைந்தும் வரும்,’ என்றும், அவ்வாரிடம் பாடுதற்குரியார், ‘ஆக்குதற்குங் கெடுத்தற்கும் ஆற்றலுடையோராய் முக்காலமுமுணர்ந்த இருடிகள்,’ என்றும், அவராவார், பொய்கையார், குடமூக்கிற்பகவர், பூதத்தார், காரைக்காற்பேயார், மூலர் முதலியோர்’ என்றும் கூறுவர். இதனால், இவர்கள் முக்காலமுமுணர்ந்த மகரிஷிகள் என்பது பெறப்படுகின்றது. இவர்கள் அருளிச்செய்த நூல்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந்திருவந்தாதி என்பனவாம்.

வடக்குத் திருவீதிப்பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய பூர்ணமான திருவருளுக்குப் பாத்திரமானவர்; ஈடு முப்பத்தாறாயிரப் படி என்னும் வியாக்கியானத்தை எழுதி உபகரித்தவர்; மகாவிரக்த சீலர்; அஷ்டாதச ரஹஸ்யத்தை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியரும், ஆசாரிய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் இவருடைய திருக்குமாரர்கள். கூரகுலோத்தம தாசர். இவருடைய மாணாக்கர் இவர் திருவரங்கத்தில் அவதரித்து, அங்கேயே வாழ்ந்தவர். திராவிட வேதாந்த தேசிகர், ஸ்ரீ கிருஷ்ணபாதர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவர்க்கு உண்டு.

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: