ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-10–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் -ஊரிலே ஸ்திரீகள் ஆனவர்கள் தந்தாம் அகங்களில் இவன் செய்த
தீம்புகளை சொல்லி -தாயாரான யசோதை பிராட்டிக்கு வந்து முறைபட்டு -உன் மகனை இங்கே
அழைத்து கொள்ள வேணும் -என்றபடியையும் -அதுக்கு ஈடாக அவள் அவனை அழைத்த
பிரகாரங்களையும் சொல்லுகையாலே -அவன் ஊரில் இல்லங்கள் தோறும் செய்த
நவநீத ஸௌர்யாதி க்ரீடா விசேஷங்களை அனுபவித்தாராய் நின்றார் –

ப்ராப்த யௌவநைகளான பெண்களொடே அவன் இட்டீடு கொண்டு -ஓன்று கொடுத்து
ஓன்று வாங்குகை-இது தானும் வார்த்த விஷயத்தில் -என கொள்க –
விளையாடுகையாலே அவனால் ஈடுபட்ட பெண்கள் -மாதாவான யசோதை பிராட்டி பக்கலிலே வந்து –
தங்கள் திறத்திலே அவன் செய்த தீம்புகள் சிலவற்றை சொல்லி –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித ரஷகனாய் –
ஆஸ்ரிதர் கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
ஆஸ்ரிதர்க்கு நல் சீவனான தன்னை –
பூதனை கையில் அகப்படாமல் நோக்கி கொடுத்தவனாய்–
ஆஸ்ரிதர்க்கு தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவனாய்-
ஆஸ்ரிதர் ஆர்த்தி அறிந்து சென்று உதவுமவனாய் –
நித்ய ஆஸ்ரிதையான பூமிப்பிராட்டிகாக நிமக்னையான பூமியை உத்தரித்தவனாய் –
இப்படி சர்வ விஷயமாக உபகாரங்களை பண்ணினவன் -எங்கள் திறத்தில் அபகாரங்களை செய்யா நின்றான் –
ஆன பின்பு இவன் கீழ் ஜீவிக்க போகாது -இவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் என்று பல காலும் சொல்லி
முறைப்பட்ட பிரகாரத்தை தாமும் அப்படியே பேசி -அவனுடைய அந்த லீலா வியாபார ரசத்தை
அனுபவிக்கிறார் இத்திருமொழியில் –

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்   -2 10-1 – –

இன்று முற்றும் -இது வயிறு எரிந்து சொல்லும் வார்த்தை-இரு கால் சொல்கிறது –ஆற்றாமையின் மிகுதி
ஆற்றிலிருந்து –
சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ -சர்வ சாதாரணமான
ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –
இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான
ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் அந்ய பரைகள் அன்றோ –
தன் இடையாட்டம் பட்டமோ –
நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-
தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ –
தன்னை இங்கு இட்டு எண்ணினார் இல்லை கிடீர் –
சேற்றால் எறிந்து-
சேற்றை இட்டு எறிந்து -பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ
இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறியவேணுமோ –
வளை துகில் கை கொண்டு –
நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப்பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது
காற்றில் கடியனாய் ஓடி –
துடா அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி –
தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் –
எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –
இவர்களுக்கு ஜீவனம் அவன் தன்னுடைய வடிவு இறே
அகம் புக்கு –
பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு
வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும்
சொல்லுகிறான் இல்லை -வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ
ஒரு வரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ –
இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் –
ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் –
தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்
முற்றதும் -என்ற இது -முற்றும் -என்று குறைந்து கிடக்கிறது
முற்றுதல் முற்றலாய் -அதாவது -முடிவாய் -முற்றும் என்றது -முடிவோம் என்றபடி –

————————————————

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு
விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ –
குண்டலம் -காதுப்பணி-அது திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து அசைய
திருக் குழல்களும் அதுக்கு பரபாகமாம்படி அத்தோடு ஒக்க தாழ்ந்து அசைய
திருக் கழுத்தில் சாத்தின விடு நாண் ஆனது திரு உந்தி அளவும் தாழ –
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த –
எட்டு திகிலும் உண்டான தேவ மனுஷ்யாதிகள் எல்லாம் –
இவ்வடிவு அழகையும் சேஷ்டித வைலக்ஷண்யத்தையும் கண்டு பக்ன அபிமானாராய் வணங்கி ஸ்தோத்ரம் பண்ண –
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு –
வண்டுகள் மாறாத பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்களுடைய
கரையிலே  இட்டு வைத்த பரியட்டங்களைக் கைகொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் –
இவர்களுக்கு எட்டாதபடி விண்ணிலே தோய வளர்ந்த குருந்த மரத்திலே இருந்தவனால் இன்று முடிவோம்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் –
துகிலைப் பணித்து அருளாய் -என்று அபேஷிக்கவும் கொடாதானாலே இன்று முடிவோம் –

—————————————————-

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-

தடமுடை –
இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு
பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –
நிபபாத  ஹ்ரதேதத்ர   சர்ப்பராஜச்ய வேகத தேநாதிபத தாதத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே
பெரியவிசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி விடும்படி நாகத்தை வால் பற்றி ஈர்த்து –
இப்படி கலக்கினவாறே க்ருதனாய் -விஷத்தை உமிழ்ந்து கொண்டு கிளர்ந்த
காளியனாகிற சர்ப்பத்தை ஒரு சரக்காக நினையாதே வாலைப் பிடித்து இழுத்து
படும்படி பைம் தலை மேல் எழப் பாய்ந்திட்டு
படத்தை உடைத்தாய் -கோபத்தாலே விஸ்தர்மான அதன் தலை மேலே -அதிர்த்தியாலே விஷத்தை கக்கும்படிகிளறக் குதித்து –
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் –
காளியனுடைய க்ரோதத்தையும்-கிளர்த்தியையும் -அவன் பணங்களிலே
இவன் சென்று குதித்த படியையும் கரையில் நின்று கண்டு
இப்பாம்பின் வாயிலே அகப்பட புகுகிறான் இத்தனை -எல்லாரும் முடிந்தோம் –
என்று படுகாடு பட்டு விழுந்து கிடக்கிற அனுகூலரான கோப கோபி ஜனங்கள்
தரித்து எழுந்து இருக்கும்படியாக -அங்கே நின்று திருமேனியை
அசைத்தாடினவனாலே இன்று முடிவுதோம்
உச்சியில் நின்றானால் -இன்று முற்றும் –
அவன் இளைத்து விழுந்து சரணம் புகுந்த அளவும் -அந்த பணத்தின் மேலே
நெருங்க மிதித்து நின்றவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
பிரதிகூலனை சமித்து -அனுகூலரானவர்களுடைய வயிற்று எரிச்சலை போக்கினவன்
ஸ்வ சேஷ்டிதங்களாலே எங்களை இப்படி வயிறு எரியும்படிபண்ணா நின்றான்
ஆனபின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை
இருகால் சொல்லுகிறது ஆற்றாமையின் உடைய அதிசயம்

———————————————–

தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர் கொன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் -2 10-4 – –

தேனுகன் இத்யாதி –
க்ர்ஹீத்வா பிரமனேனைவ சோம்பரே கத ஜீவிதம் தஸ்மின் னேவ சசிஷேப தேனுகம்த்ர்ணா ராஜினி
தத பலான்ய நேகானி தாளாக்ரான் நிபந்தர ப்ர்திவ்யாம் பாதயா மாச  மகாவோதா கனா நிவ –
என்கிறபடியே கழுதை யான வடிவைக் கொண்டு -தன்னை நலிவதாக வந்து நின்ற
தேனுகன் ஆகிற அசுரனனுடைய பிராணனை -ஆகாசத்திலே எடுத்து சுழற்றிய வேகத்தாலே முடித்து –
ஆசூரமான பனையினுடைய பழங்களும் உதிரும்படி தான் எறிந்திட்ட மிகவும் பெரிய திருத் தோளாலே
வானவர் இத்யாதி –
தனக்கு இடுகிற சோற்றை விலக்கி – மலைக்கு இடுவித்தது அடியாக மிகவும் குபிதனாய
தேவர்களுக்கு நிர்வாஹனான இந்த்ரன் ஆய்ப்பாடியில் உள்ள கோபர்களும் கோப
கோபீ ஜனங்களும் கடலிலே போம் புகும்படி வர்ஷிக்க சொல்லி -புஷ்கலா வர்ததாதி
மேகங்களை ஏவி விடுகையாலே அவற்றால் வந்த வர்ஷத்தை முன்பே -ரஷகம் -என்று
சொன்ன மலை தன்னையே குடையாக எடுத்து தடுத்து -உள்ளத்தில் தான் செய்யும்
உபகாரம் அறியும் பசுக்களை ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்
அவை இத்யாதி –
அம் மழையிலே ஈடுபடாத படி நோக்கி -அவற்றை உஜ்ஜீவிப்பத்தவனாலே இன்று முடிவுதோம் –
இத்தால்
ரஷ்ய வர்க்கத்துக்கு வந்த வர்ஷாபத்தை போக்கினவன் எங்களுக்கு விரஹா ஆபத்தை
விளைத்து நலியா நின்றான் -ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

———————————————

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்க பிடி உண்டு
வேய்த் தடம் தோளினார் வெண்ணெய் கொண் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடி உண்டு அழுதானால் இன்று முற்றும் – 2-10 -5-

அளை-மத்தை நாட்டி உடைத்த
ஆய்ச்சியர் சேரி -இடைச்சிகள் சேரியிலே
அளை தயிர் பால் உண்டு –
அவர்கள் கடைவதாக மத்து நாட்டி உடைத்த அளவிலே வைத்த தயிரையும் –
காய்ச்சுவதாக வைத்த பாலையும் அமுது செய்த
அன்றிகே –
அளை தயிர் என்றது –
அபிநிவேச அதிசயத்தாலே தன் கை  உள் அளவும் போக விட்டு அலையப்பட்ட தயிர் என்னவுமாம் –
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி உண்டு –
மீண்டு  ஒரு கால் வெண்ணெய் களவு காண -என்று புகுந்த அளவில்
அவர்கள் ஒளித்து இருந்து கண்டு பிடிக்க அவர்கள் கையிலே பிடி பட்டு –
வேய் இத்யாதி –
பசுமையாலும் சுற்றுடைமையாலும் -வேய் போல் இருப்பதாய் –
பெரிதாய் இருந்துள்ள தோளை உடையவர்களுடைய -வெண்ணெயை அபஹரிக்க மாட்டாதே –
அங்கு இத்யாதி –
அங்கு அவர்கள் கட்ட கட்டுண்டவன் ஆகையாலே இன்று முடிவுதோம் –
அடி உண்டு இத்யாதி –
கட்டுன அளவும் அன்றிக்கே -அவர்கள் அடிக்க -அவர்கள் கையாலே -அடி உண்டு இருந்து அழுதவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
அனுகூலான அபலைகளுக்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருந்தவன் –
எங்களுக்கு அபவ்யனாய் மிறுக்குகளைப் பண்ணா நின்றான்
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

————————————————–

தள்ளித் தடர் நடை இட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால்  இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும் -2 10-5 – –

தள்ளித் தடர் நடை இட்டு –
காலூன்றி நடக்கத் தரிப்பு இல்லாமையாலே தடுமாறித் தளர் நடை இட்டு –
இளம் பிள்ளையாய் –
முக்த சிசுவாய்
இத்தால் நடைக்கு கூட பலம் இல்லாத அதி பாலனாய் இருக்கச் செய்தே -என்கை
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி –
பிறர்க்கு தெரியாதபடி தன் மனசினுள்ளே -தன்னை நலிவதாக வருகிறவள் இவள் -என்று அவளை உறைக்கப் பார்த்து
கள்ளம் இத்யாதி –
தன் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு க்ரித்ரிமத்தாலே வந்த
பூதனை உடைய முலைப்பாலோடே அவள் உயிரையும் அவள் துடிக்கும்படி
பசையற உண்டவனாலே  இன்று முடிவுதோம்
துவக்கற இத்யாதி
அவள் நச்சு முலையை உண்ணா நிற்க செய்தே -அந் நெஞ்சிலே தனக்கு ஒரு ஸ்பர்சம் அற உண்டவனாலே இன்று முடிவுதோம் –
இத்தால்
ஆஸ்ரிதர்க்கு நல் ஜீவனான தன்னை பூதனை கையில் அகப்படாமல் நோக்கி
உபகரித்தவன் -எங்களுக்கு தன்னைத் தராமல் அருமைப் படுத்தா நின்றான் –
ஆன பின்பு -அவனால் நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை –

——————————————————–

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

மாவலி வேள்வியில் –
இந்திரனுடைய ஐச்வர்யத்தை பலத்தாலே அபகரித்து கொண்டு -கோவாகிய மாவலி –
என்கிறபடியே தன்னரசாய் -அழிக்க ஒண்ணாதபடி -ஒவ்தார்யம் என்பதொரு குணத்தை
உடையனாய் இருந்த மகா பலியினுடைய யாகத்திலே
மாண் உருவாய் சென்று –
கள்ளக் குறளாய் -என்றபடியே அவனை சர்வச்வாபஹாரம் பண்ணுகைக்காக வாமன வேஷத்தை கொண்டு
வடிவு அழகாலும் -நடை அழகாலும் -அவனை அபர்ஹசித்தனாய் தான் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று
மூவடி தா என்று இறந்த இம்மண்ணினை
அவன் சடக்கென இசைந்து தருகைக்காகவும் -பின்பு ஓரடிக்கு அவனை சிறை வைக்காகவும் -என் காலாலே மூவடி தா –    
என்று இரந்து பெற்ற இப்பூமியை மண் என்கிற இது மற்ற லோகங்களுக்கு எல்லாம் உப லஷணம்
ஓரடி இத்யாதி –
அளக்கிற அளவிலே பூமிப்பரப்பு அடங்கலும் தனக்குள்ளே ஆம்படி ஓரடி இட்டு இரண்டாம் படி தன்னிலே
தாவடி இத்யாதி –
ஊர்த்த லோகங்கள் அடங்கலும் தனக்கு உள்ளே ஆம்படி தாவி இட்டவனாலே இன்று முடிவுதோம்
தாரணி இத்யாதி
திருவடிகளின் மார்த்தவம் பாராதே ஓர் ஆஸ்ரிதனுக்காக இப்படி லோகத்தை அளந்தவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரித ரஷணம் செய்யும் அவன் எங்கள் அபேஷிதம்
செய்யாதே  ஈடுபடுத்தா நின்றான் -ஆன பின்பு அவனாலே நாங்கள் முடிவுதோம் -என்கை

——————————————————-

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –

வாதிப்பு உண்-வருந்தின -வாதிப்பு -பாதை
தாழை இத்யாதி –
கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் –
மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே
தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்
வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே
உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே -அத்ய ஆதரதோடே சென்று இழிந்தது
வாழு முதலை வலைப்பட்டு –
நெடும் காலம் எல்லாம் -நம் சாப மோஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ –
என்கிற நினைவோடு -அதினுள்ளே வர்த்திக்கிற முதலை யாகிற வலையிலே அகப்பட்டு –
வாதிப்புண் வேழம் துயர் கெட –
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே  ஜலே -என்கிறபடியே அது நீருக்கு இழுக்க தான் கரைக்கு இழுக்க –
திவ்யம் வர்ஷண ஹஸ்ரகம்-என்கிறபடியே நெடும்காலம் இப்படி பாதைப்பட்ட
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய – கையில் செவ்வி அழியாமல் திருவடிகளில்
சாத்தப் பெற்றிலோமே -என்கிற க்லேசம் தீரும்படி யாக
விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானமை தோற்ற -பெரிய திருவடியை மேல் கொண்டு சென்று
க்ராஹஞ்ச்சக்ரென-என்கிறபடியே திரு ஆழியாலே முதலையைத் துணித்து
அந்த சிறையை விடுத்து -அவன் கையில் பூவைத் தன் திரு வடிகாலில் இட்டுக் கொண்டு இப்படி ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்
அதற்கு இத்யாதி –
கைம்மாவுக்கு அருள் செய்த -என்கிறபடியே அந்த ஆனைக்கு அப்படி அருள் செய்தவனால் இன்று முடிவுதோம்
இத்தால்
ஆஸ்த்ரிதனுடைய ஆர்த்தி தீர சென்று ரஷித்தவன் -எங்களை ஆர்த்தைகளாய்
ஈடு படும்படி பண்ணா  நின்றன் -ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை

—————————————————-

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம்மண்ணை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

வானத்து எழுந்த மழை முகில் –
ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே -இத்தால்
திருமேனி யின் நிறத்தை சொல்கிறது
எங்கும் கானத்து மேய்ந்து –
காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து –
கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –
களித்து விளையாடி –
ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –
ஏனத் துருவாய் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹா வேஷத்தை உடையனாய்
இடந்த இத்யாதி –
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –
தரணி இத்யாதி
இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் -எங்களை விரஹ பிரளயத்தே
தள்ளா நின்றான் -ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

————————————————————-

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-

அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம்  வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு  ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

அங்கமலக் கண்ணன் தன்னை –
சிகப்பாலும் விகாசகத்தாலும் செவ்வையாலும் -அழகிய தாமரைப் பூ போல் இருக்கிற
திருக்கண்களை உடையவளைப் பற்ற
அசோதைக்கு
தாயாரான யசோதை பிராட்டிக்கு
மங்கை நல்லார்கள் தாம் –
பருவத்தால் இளையாய் -கிருஷ்ணன் அளவிலே ஸ்நேகிநிகளாய்  இருக்கிற பெண்களானவர்கள் தாங்கள்
அங்கு வந்து முறைப்பட்ட –
அவன் அகத்திலே வந்து தங்கள் ஈடுபாடு தோற்ற முறைப்பட்டு
அவர்   சொல்லை –
அவர்கள் சொல்லை
மங்கை நல்லார் ஆனவர்கள் தாம் -அங்கமல கண்ணன் தன்னைப் பற்ற
அங்கு வந்த அசோதைக்கு -முறைப்பட்ட சொல்லை -என்று அந்வயம்
புதுவைக் கோன் பட்டன் சொல் இவை –
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல்லான இவற்றை
இங்கு வல்லவர்க்கு
இந்த லோகத்தில் சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு
ஏதம் ஓன்று இல்லையே –
பொல்லாங்கு என்னப்பட்டவை ஒன்றும் இல்லாதபடி போம்

—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: