ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-7–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
தாயான யசோதை பிராட்டி -தனக்கு குழல் வாரின அநந்தரம் –
பூ சூட்டுவதாக இருக்கிற அளவிலே –
அவன் கன்றுகள் மேய்க்க போவதாக நினைத்து -அவை மறித்து மேய்க்கைக்கு ஈடான
கோல் தர வேணும் – என்று அபேஷிக்க-
அது தனக்கு அநிஷ்டமானது கொண்டு -அவள் கொடாது ஒழிகையாலே அவன் அழப் புக்க வாறே  –
அவனை அழுகை மருட்டுகைக்காக -அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று
பலகாலும் சொல்லி அவன் அழுகுகையை மாற்றி உகப்பித்த பின்பு –

அவனுக்கு பூ சூட்டுவதாக கோலி-
செண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி -தொடக்கமாய் –
(ஒன்பது பூக்களை இங்கு சொல்லி
அஹிம்சா பிரதமம் –அஷ்ட விதம் )
நிறத்தாலும் மணத்தாலும் ஓன்று போல் ஓன்று அன்றிக்கே விலஷணமாய் இருக்கும் புஷ்பங்களை உண்டாக்கி –
அவற்றை தனி தனியே சொல்லி -உனக்கு இன்ன இன்ன பூ சூட்டும்படி வா என்று அனுவர்த்தித்து அழைத்து
பூ சூட்டின பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை குறித்து அவள் பேசினால் போலே பேசி அந்த  ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில்

———————————

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

பதவுரை

தேனில்–தேனைக் காட்டிலும்
இனிய–போக்யனாயிருக்கிற
பிரானே–ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம்–பகைவரெல்லாரும்
சிரிப்ப–பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி–(கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து
(பின்பு)
உன்–உன்னுடைய
கரிய–ஸ்யாமமான
திருமேனி–அழகிய திருமேனி
வாட–வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து–காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை–பசுக்களின் திரளை
மேய்க்க–மேய்ப்பதற்கு
நீ போதி– ஸூ குமாரமான நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது–(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை
சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து
அறியாய்–அறிகிறாயில்லை;
(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)
செண்பகம் பூ–செண்பகப் பூவை–காலைப் பூவை
சூட்ட–(நான்) சூட்டும்படி
வாராய்–வருவாயாக

ஆநிரை மேய்க்க நீ போதி –
உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்
பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்

அரு மருந்து ஆவது அறியாய் –
நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

கானகம் எல்லாம் திரிந்து –
காட்டிடம் எங்கும் திரிந்து -பசுக்கள் பச்சை கண்ட இடம் எங்கும்
பரந்து மேய்கையாலே -உனக்கும் அவை போன இடம் எங்கும் திரிய வேணும் இறே –
(168 mile பிருந்தாவனம் )

உன் கரிய திரு மேனி வாட –
கண்டவர்கள் கண் குளிரும்படி இருக்கும் உன்னுடைய ஸ்யாமளமான திரு மேனி யானது –
காட்டு அழல் பொறாமையாலே-வெக்கை தட்டின பூ போலே வாடும்படியாக –

பானையில் பாலைப் பருகி –
கறந்த பானை யோடு இருக்கிற பச்சைப் பாலை -அந்த
பாத்ரத்தில் இருக்க செய்தே பருகி

பற்றாதார் எல்லாம் சிரிப்ப –
உன்னை உகவாதார் எல்லாரும் -எங்கள் வீட்டில் கை பானையில்
பாலை குடித்துப் போந்தான் -என்று சிரிக்கும்படியாக

தேனில் இனிய பிரானே –
தேனிலும் காட்டிலும் இனியனான உபகாரகன் ஆனவனே –

இத்தால் –
அனுபவிப்பாருக்கு ஒருகாலும் திருப்தி பிறவாதே மேன்மேல் என அனுபவிக்க
வேண்டும்படி இருப்பானாய் இருக்கிற தன்னை
உபகரிப்பானும் தானேயாய் இருக்கும் அவன் என்கை –

செண்பகப் பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான செண்பகம் ஆனது செவ்வி குன்றாமல் சாத்த வாராய் –

தேனில் இனிய பிரானே -பற்றாதார் எல்லாம் சிரிப்ப -பானையில் பாலைப் பருகி
உன் கரிய திருமேனி வாட -கானகம் எல்லாம் திரிந்து -ஆநிரை மேய்க்க நீ போதி
அரு மருந்து ஆவது அறியாய் -செண்பக பூ சூட்ட வாராய் -என்று அந்வயம்–

——————————————

கீழே ப்ராத கால பூ
இங்கு சாயங்கால பூ
மல்லிகையில் பல வகை உண்டே
குண்டு மல்லி
பூ இருந்த வல்லி –

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –

பதவுரை

கண்கள்–கண்களானவை
உன்னை கண்டால்–உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்–கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால்–பார்த்தால் (அதை)
ஒக்கும்–ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்–வடிவை யுடையவனே!
உலகு ஏழும்–ஏழுலகங்களும்
உண்டாக–ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய்–திருவவதரித்தவனே!
திரு உடையாள்–(உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–நாயகனே!
திரு அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்–வாஸனை
மருவி கமழ்கின்ற–நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ–மல்லிகைப் பூவை
சூட்ட வாராய்-.

கரு இத்யாதி-
கண்கள் -உன்னைக் கண்டால் -கரு உடை மேகங்கள் கண்டால் ஒக்கும் உரு உடையாய்
கண்கள் ஆனவை உன்னைப் பார்த்தால் -நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் போலே
குளிரும்படியான வடிவை உடையவனே –

அன்றிக்கே –
நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் உன்னைக் கண்டால் போலே இருக்கும் –

கண்கள் உருவு உடையாய் –
(திரு மேனி )அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின்
அழகை உடையவன் என்னவுமாம்

உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் –
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் –
உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
(நஷ்டம் ப்ராக் –பிராட்டி கடாக்ஷ அம்ருதம் பெற்று சத்தை பெற்றதே ஸமஸ்த லோகங்களும் –
அதே போல் இங்கும் )

திரு உடையாள் மணவாளா –
கஸ்ரீய ஸ்ரீ –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே

திருவரங்கத்தே கிடந்தாய் –
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி
ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

மருவி இத்யாதி –
பரிமளமானது நீங்காமல் நின்று கமழா நிற்கிற மல்லிகை பூ சூட்ட வாராய்

—————————————————

கீழே கோயில் –
இதில் திருவேங்கடம்
மந்தி பாய் -திருவேங்கடம் சொல்லி பின்பு திருவரங்கம்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி–நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு–பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு–(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை–பட்டாடைகளையும்
கிழித்து–கிழித்து விட்டு
காம்பு துகில் அவை–(மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி–கிழித்துப் போட்டு
(இப்படியே)
நிச்சலும்–ப்ரதி நித்யம்
தீமைகள்–துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய்–செய்பவனே!
நீள் திருவேங்கடத்து–உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்–ஸ்வாமியே!
பச்சை–பசு நிறமுள்ள
தமனகத்தோடு–மருக் கொழுந்தையும்
பாதிரிப் பூ–பாதிரிப் பூவையும்
சூட்ட வாராய்-.

மச்சு இத்யாதி –
மச்சு -நடு நிலம்
மாளிகை -மேல் நிலம்
மச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி –

மாதர்கள் தம்மிடம் புக்கு –
பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு

கச்சோடு பட்டை கிழித்து –
அவர்கள் முலைக் கச்சோடே
அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து

காம்பு துகில் அவை கீறி –
பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து
காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை
(பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் )

நிச்சலும் தீமைகள் செய்வாய் –
நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே –
வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே

நீள் திருவேம்கடத்து எந்தாய் –
ஒக்கத்தை உடைத்தான வடக்கு திரு மலையிலே நிற்கிற என் ஸ்வாமி யானவனே
கானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்து கொண்டு நிற்கிறது ஸ்வாமித்வ ப்ராப்தி யாலே இறே
(இங்கு நிற்பதாலேயே எனக்கு ஸ்வாமி
அங்கு நித்ய ஸூ ரிகளுக்கு )

பச்சை இத்யாதி –
பசுமை குன்றாத தமநகத்தோடே-
அதுக்கு பரபாகமான நிறத்தை உடைய பாதிரிப் பூவையும் சூட்டும்படி வர வேணும் –

————————————-

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

பதவுரை

புருவம்–புருவங்களையும்
கரு குழல்–கரு நிறமான கூந்தலையும்
நெற்றி–(இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த–விளங்குகின்ற
முகில் கன்று போலே–மேகக் கன்று போலே
உருவம் அழகிய–வடிவமழகிய
நம்பி–சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று–தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை–இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே–தீம்பு செய்யாமலிரு;
மருவும்–மருவையும்
தமனகமும்–தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை–அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற–வாஸனை வீசுகின்றன;
இவை–இவற்றை
உகந்து–மகிழ்ச்சி கொண்டு
சூட்ட நீ வாராய்-.

தெருவின் கண் நின்று-நான் மச்சிலும் மாளிகையிலும் ஏறினேனோ-
தெருவிலே அன்றோ நின்றேன் -என்னை நீ இப்படி சொல்லுவான் என் என்ன
அவ் விடத்தில் தானோ நீ தீமை செய்யாது இருக்கிறது –

தெரு இடங்களில் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே –
அவ் விடத்தில் விளையாடா நிற்கிற பருவத்தால் இளைய இடைப் பெண்களை தீமை செய்யாதே –
சிற்றில் சிதைக்கை-
லீலா உபோகரணங்களை  பறிக்கை
அவர்களோடு கை பிணக்கு இடுகை முதலாக
இவன் செய்யும் விஷயங்கள் வாசா மகோசரம் ஆகையாலே –
தீமை என்று
ஒரு சொல்லாலே அடக்கி சொல்கிறார்

மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற –
மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன
உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை

புருவம் இத்யாதி –
உபமான ரஹீதமான புருவமும் –
இருண்டு இருந்துள்ள குழலும் –
இரண்டுக்கும் நடுவே விளங்கா நிற்கிற திரு நெற்றியும் ஆகிற –
இவ் அவயவ சோபையாலே உஜ்ஜ்வலமாய் இருப்பதொரு
முகில் ஈன்ற கன்று போலே வடிவால் அழகியனுமாய்
சர்வ பிரகார பரி பூர்ணனுமாய் இருக்கிறவனே –

உகந்து இத்யாதி –
உனக்கு சூட்டப் பெற்றோம் என்கிற உகப்புடன் மணம் கமழா நின்றுள்ள
இம் மாலைகளை நான் உனக்கு சூட்டும் படியாக வர வேண்டும்

————————————-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7 5- – –

பதவுரை

புள்ளினை–பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய்–வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு–யுத்தோந்முகமான
கரியின்–குவலயாபீடத்தின்
கொம்பு–கொம்பை
ஒசித்தாய்–பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு–வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை–(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை–தலையையும்
கொண்டாய்–அறுத்தவனே!
நீ–(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்–வெண்ணெயை
அள்ளி விழுங்க–வாரி விழுங்க
அஞ்சாது–சிறிதும் பயப்படாமல்
அடியேன்–(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்–அடித்தேன்;
(அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய–தெளிவான
நீரில்–நீரிலே
எழுந்த–உண்டான
செங்கழுநீர்–செங்கழுநீரை
சூட்டவாராய்-.

புள்ளினை இத்யாதி –
கன்றுகள் மேய்க்கிற இடத்தில் –
பள்ளத்தில்  மேயும் பறவை உருக் கொண்டு உன்னை நலிவதாக
வந்த பகாசுரனை -வாயைக் கிழித்து பொகட்டவனே

பொரு இத்யாதி –
கல்யாணத்துக்கு -என்று அழைத்து விட்டு
வழியில் நலிவதாக கம்சன் நிறுத்தி வைத்ததாய் –
உன் மேல் யுத்தோன்முகமாய்  வந்த குவலயாபீடத்தின் கொம்பை
அநாயாசேன பிடுங்கி பொகட்டவனே

கள்ளம் இத்யாதி –
சீதைக்கு நேராவேன் -என்று
க்ரித்ரிம வேஷம் கொடு வந்த சூர்பணகை ஆகிற ராஷசி மூக்கோடு-
அவளுக்கு ரஷகனான ராவணன் தலையையும் அறுத்து பொகட்டவனே –
இவளுக்கு அவன் காவலன் ஆகையாவது –
இவளை ஸ்வரை சஞ்சாரம் பண்ணித் திரி -என்று விடுகை இறே

அன்றிக்கே-
பொதுவிலே காவலன் என்கையாலே
ராஷச ஜாதிக்காக ரஷகன் என்னவுமாம்

இத்தால்
பிரபல விரோதிகளை அநாயாசேநேப் போக்கி
உன்னை அனுபவிப்பார்க்கு உன்னை உபகரித்தவன் அன்றோ என்கை –

அள்ளி இத்யாதி –
இவன் வெண்ணெய் தானே அள்ளி விழுங்க வல்லவன் ஆவது எப்போதோ -என்று
பார்த்து இருந்த நான் –
நீ வெண்ணெயை அள்ளி விழுங்கவும் பெற்று வைத்து
உன் மார்த்வத்தை பார்த்து அஞ்சாமல் அடியேன் அடித்தேன்
யாவர் சிலரும் அனுதாபம் தலை எடுத்தால் –
அடியேன் -என்று இறே சொல்லுவது –
இவள் தான் அது தன்னை முன்னே நினையாதே அடிக்க வேண்டிற்றும்
இவன் மற்றுமோர் இடத்தில் இது செய்யுமாகில் வரும் பழிச் சொல்லுக்கு அஞ்சி இறே –

தெள்ளிய இத்யாதி –
ஆன பின்பு நான் முன்பு செய்த அத்தை பொறுத்து –
தெளிந்த நீரில் எழுந்தது ஆகையாலே –
நிறத்தாலும் பரிமளத்தாலும் விலஷணமாய் இருக்கிற
செங்கழு நீரை  செவ்வையிலே நான் சூட்டும்படி வாராய்

——————————————————-

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2 7-6 –

பதவுரை

நம்பி–சிறந்தோனே!
(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு–ஏழு ரிஷபங்களுடன்
பொருதி–போர் செய்யா நின்றாய்;
ஏதும்–எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்–விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
(தேகம் பிராணன் பேணாமல் -லோபம் வடமொழி சொல் )
கருதிய–(கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள்–தீம்புகளை
செய்த–(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை–அந்தக் கம்ஸனை
கால் கொடு–காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய்–பாய்ந்தவனே!
(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)
தெருவின் கண்–தெருவிலே
தீமைகள் செய்து–தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென–வலிமையாக
மல்லர்களோடு–(சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற–போர் செய்து வந்த
பொன்னே–பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய்-.

உலோபாய் -ஆசை அற்று இரா நின்றாய்
சிக்கென -நிரந்தரமாக

எருதுகளோடு பொருதி —
நப்பின்னை பிராட்டியை லபிக்கையில் உண்டான ஆசையாலே -உன் திருமேனியின்
மார்த்வம் பாராமல் அசூரா விஷ்டமான எருதுகளோடு பொரா நின்றாய் –
காலாந்தரமாக இருக்க செய்தேயும் -தத் காலம் போலே பிரகாசிக்கையாலே
பொருதி -என்று வர்தமானமாக சொல்லுகிறது –

ஏதும் உலோபாய் காண் நம்பீ-
ஒன்றிலும் லோபம் அற்று இரா நின்றாய் காண்
அதாவது –
தேகத்தை பேணுதல் -பிராணனை பேணுதல் செய்யாது இருக்கை –

நம்பி –
நப்பின்னை அளவிலே வ்யாமோகத்தால் பூரணன் ஆனவனே

கருதிய தீமைகள் செய்து –
கஞ்சன் உன் திறத்தில் செய்யக் கருதின தீமைகள் எல்லாவற்றையும்
அவன் திறத்திலே நீ செய்து –

கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் –
கம்சனை திருவடிகளால் உதைத்தாய் –
அதாவது –
துங்கமஞ்ச வ்யவஸ்த்தித )ஸ்ரீ விஷ்ணு புராணம் ) -என்கிறபடியே
அவன் இருந்த உயர்ந்த மஞ்சச்தலத்திலே சென்று குதித்து –
கேசேஷ் வாக்ர்ஷ்ய விகளத் கிரீட மவநீதலே ச கம்சம் பாதயாமாச தச்யோபரி பபாதச (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
அபிஷேகத்தை பறித்து எறிந்து – மயிரைப் பிடித்து இழுத்து -மஞ்சச்தலத்தில் நின்றும் –
பூமியிலே விழத் தள்ளி -அவன் மேலே குதித்து இறே அவனைக் கொன்றது –

தெருவின் கண் தீமைகள் செய்து –
தெரு -வழி
அவனை நிரசிப்பதாக போகிற போது வழியிலே அவனுடைய ஈரம் கொல்லியான –
ரஜகனைக் கொன்று – இது வண்ணானுடைய பெயர் –
ஆயுத சாலையிலே புக்கு –
அவனுக்கு மறம் பிறக்கும்படி -வில் விழவுக்கு என்று அலங்கரித்து இருக்கிற வில்லை முறித்து –
அவனுக்கு அபிமத கஜமான குவலயாபீடத்தை கொன்று -செய்த இவை இறே –
தெருவின் கண் செய்த தீமைகள் ஆவன –

சிக்கென மல்லர்களோடு பொருது –
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லர் ( 4-2-)-என்கிறபடியே
கம்சன் ஏவினது செய்ய வேணும் என்று மல் பொருகையை ஏன்று கொண்டு
வந்த சாணூர முஷ்டிகர் ஆகிற மல்லர்களோடு பிரதிக்ஜா பூர்வகமாக உறைக்க

பொருது அழித்து வருகின்ற பொன்னே –
இப்படி விரோதி வர்க்கத்தை நிரசித்து வருகிற போதை செருக்காலே பொன் போலே
உஜ்ஜ்வலமான வடிவை உடையவனே

முந்துற கம்ச நிரசனத்தை சொல்லி -அதுக்கு பூர்வத்தில் உள்ளவற்றை பின்பு
சொல்வான் என் என்னில் –
கம்ச நிரசனமே பிரதானமாய் -இவை அதுக்கு உறுப்பாக -போகிற வழியில் செய்த
வியாபாரங்கள் ஆகையாலே அதுக்கு முன்னாக சொன்ன இதில் விரோதம் இல்லை

புன்னை இத்யாதி –
உனக்கு பாங்கான-உகப்பான – புன்னை பூ சூட்டும்படியாக நீ வாராய்
பொன்னே புன்னை பூ சூட்ட வாராய் -என்கையாலே
பொன்னோடு பொன்னை சேர்ப்பாரைப் போலே பொன் போலே இருக்கிற
திரு மேனியில் -பொன் ஏய்ந்த தாதை உடைய புன்னை பூவை சூட்டப் பார்க்கிறாள் காணும்-

—————————————–

குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2 7-7-

பதவுரை

குடங்கள்–பல குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர்வெறிந்து
(இப்படி)
கூத்து ஆட–குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுடைய
எம் கோவே–எம்முடைய தலைவனே
மடம் கொள்–மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை–சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல–மயக்க வல்ல
என் மைந்தா–எனது புத்திரனே!
முன்–நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை–ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு–(திரு வுகிரால் ) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக-இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்–பிளந்தவனே!
குடந்தை–திருக் குடந்தையில்
கிடந்த–பள்ளி கொள்ளுகிற
எம் கோவே–எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய்.

குடங்கள் இத்யாதி-
பிராமணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமா போலே
இடையர் ஐஸ்வர்யம் விஞ்சினால் செருக்குக்கு போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து-
குடக்கூத்தாவது –
உபய விபூத் ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இவனுக்கு இது –

இடையர்க்கு ஐஸ்வர்யம் தானாவது -கோ சம்ர்த்தி இறே
அந்த சம்ர்த்தி குறை அற உள்ளது தனக்கே ஆகையாலே –
அத்தால் வந்த செருக்குக்கு போக்கு விட்டு குடக்கூத்து ஆடினபடி சொல்லுகிறது –

தலையிலே அடுக்கு குடம் இருக்க –
இரண்டு தோள்களிலும் குடங்கள் இருக்க –
இரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்தில் எறிந்து ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து –
குடக் கூத்தாவது –
அத்தை சொல்லுகிறது -குடங்கள் எடுதேற விட்டு கூத்தாட வல்ல -என்று –

குடம் என்னாதே -குடங்கள் -என்கையாலே
பல குடங்களையும் கொண்டு ஆடினதை சொல்லுகிறது –

எடுததேற  விட்டு என்கையாலே –
அவற்றை திருக் கையிலே எடுத்து ஆகாசத்திலே உயர எறிவது –
ஏற்பது ஆனமையை சொல்லுகிறது

கூத்தாட வல்ல -என்கையாலே –
மற்றும் இக்கூத்தாடுவார்  உண்டே ஆகிலும் –
இவன் ஆடின கட்டளை ஒருவருக்கும் ஆடப் போகாது என்னும் இடம் சொல்லுகிறது –
இவன் ஆடின வைசித்ரி -பரத சாஸ்திரத்திலும் காண அரிதாய் இருக்கை –

எம் கோவே –
எங்களுக்கு நாயகன் ஆனவனே

மடம் கொள் இத்யாதி –
இப்படி இருக்கிற சேஷ்டிதத்தாலே மடப்பத்தை உடையராய்
பூர்ண சந்த்ரனைப் போலே குளிர்ந்து ஒளிவிடா நின்ற முகத்தை உடையராய் இருக்கிற
ஸ்திரீகளை பிச்சேற்ற வல்ல என்னுடைய பிள்ளை யானவனே

இடந்திட்டு   இத்யாதி –  –
நெஞ்சு என்று மார்வை சொல்லுகிறது
தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற ஹிரண்யன் உடைய மார்வை –
கொலை கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் -என்கிறபடியே
கூரிய திரு உகிர்களாலே உறைக்க ஊன்றி இடந்து இரண்டு கூறாம்படியாக முற்காலத்திலே கிழித்துப் பொகட்டவனே

இத்தால் –
சிறுக்கனுடைய ஆபத்திலே வந்து உதவினான் ஆகையாலே
தளர்ந்தாரை நோக்குமவன் என்னும் இடம் சொல்லுகிறது –

குடந்தை இத்யாதி –
அவதாரங்களுக்கு பிற்பாடானவர்களுக்கும் உதவுகைக்காக திருக் குடந்தையில்
கண் வளர்ந்து அருளின என் ஆயன் ஆனவனே

குருக்கத்தி இத்யாதி –
உனக்கு என்று தேடி வைத்த குருக்கத்தி பூவை உன் திருக் குழலிலே சூட்டும்படியாக வாராய் –

———————————————

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7- 8-

பதவுரை

சீ மாலிகன் அவனோடு–மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும்–ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய்–வல்லவனாய்
அவனை–அந்த மாலிகனை
நீ-நீ
சாம் ஆறு எண்ணி–செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால்–சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய்–தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு–நடத்த வேண்டியவைகளை
அறியும்–அறிய வல்ல
பிரானே–ப்ரபுவே!
அணி–அழகிய
அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
என்னை-எனக்கு

சீமாலிகன் எனும் இடத்தில் சி -எனுமது ஒவ்பசாரிக சொல்
ஸ்ரீ என்னுமது சி என்றாய் கண்ணனோடு நட்பு கொண்டதால் வந்த சீர்மையை சொலுகிறது என்பர்

சீமாலிகன் இத்யாதி –
மாலிகன் என்பான் ஒருத்தன் கிருஷ்ணனுக்கு சகாவாய்-பல ஆயுதங்களும்
பயிற்றுவிக்க கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆசக்தி பலத்தாலே ஒருவருக்கும் அஞ்சாமல்
லோகத்தில் உள்ள சாதுக்களை நலிந்து -திரியப் புக்கவாறே –
சகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்று திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம்
நடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது  கருக நியமித்தவாறே –

அவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்
ஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன
இது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –
எனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று
அவன் நிர்பந்தங்களை பண்ணினவாறே -இவனுடைய துஸ் ஸ்பாவங்கள் அடியாக
இவனை நிரசிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி தன்னுடைய சீர்மை குன்றாதபடி
ஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீசி
சுழன்று வருகிற திரு ஆழியை மீண்டும் திருக் கையிலே அநாயாசேன ஏற்க

அவன் இத்தை கண்டு -எனக்கு இது அரிதோ -என்று கை நீட்ட
உனக்கு இது அரிது காண் -என்ன செய்தேயும் -அவன் வாங்கி சுழற்றி மேலே விட்டு
மீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்க தன் விரலை
எடுத்து கொடு நிற்க -அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழல வர இடம் போராதது கொண்டு
அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து பொகட்டது என்று இதிஹாசாதிகளிலே
சொல்லப்பட்டதொரு விருத்தாந்தத்தை இப் பாட்டில் பூர்வ அர்த்தத்தால் ஸங்க்ரஹேன சொல்லுகிறது  –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –
சி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே
உன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே

சாமாறு அவனை நீ எண்ணி –
சாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –
என்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து
அதாவது –
தோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடியாகவும்
தன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –

அவனை -என்கிற இடத்தில் -ஐகாரம் அவ்யயம்

சக்கரத்தால் தலை கொண்டாய் –
நமக்கு அசாதாரணமான ஆயுதம் -உனக்கு இது ஆகாது காண் -என்ன செய்தேயும்
அவன் நிர்பந்தம் பண்ணினதுக்காக அவனை ஆழி பயிற்றுவிக்கிறானாக
உபாய ரூபேண திரு ஆழியாலே சிர சேதம் பண்ணிப் பொகட்டவனே

ஆமாறு அறியும் பிரானே –
சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

அணி அரங்கத்தே கிடந்தாய்
இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் –
நல்லவர்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்கிறபடியே
பரிவர்  உள்ள தேசத்திலே பள்ளி கொள்ளுகையலே உன் சௌகுமார்யாதிகளை நினைத்து –
உனக்கு என் வருகிறதோ – என்று வயிறு எரியா நிற்கும் என் க்லேசத்தை போக்கினவனே
ஏமாற்றமாவது -துக்கம்

இருவாட்சி பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான இது செவ்வி அழிவதற்கு முன்னே
உன் திருக் குழலிலே நான் சூட்டும்படி வாராய் –

——————————————-

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்–பரத்வமும்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்-ஸுலப்யமும் –
தூ மலராள் மணவாளா-இவற்றுக்கு நிதானமும் –
உண்டிட்டு உலகினை ஏழும்-ரக்ஷகத்வமும் –
ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்-அகடிகடநா சாமர்த்தியமும் –
ஐந்தும் இதில் -பஞ்சாம்ருதம் –

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2 7-9 – –

பதவுரை

அத்தாணியுள்–அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்–தேவர்கள்
சூழ–சூழ்ந்திருக்க
அங்கு–அவர்கள் நடுவில்
அண்டத்து–பரம பதத்தில்
இருத்தாய்–வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்–அடியார்களுடைய
நெஞ்சில்–ஹ்ருதயத்தில்
உறைவாய்–வஸிப்பவனே!
தூ மலரான்–பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–கொழுநனே!
(பிரளய காலத்தில்)
உலகினை ஏழும்–ஏழு உலகங்களையும்
உண்டிட்டு–உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில்–ஒராவிலையில்
துயில் கொண்டாய்–யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்–நான்
உன்னை கண்டு–(நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க–மகிழும்படி
கருமுகைப் பூ–இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

அண்டத்துள் -ஸ்ரீ வைகுண்டத்தில்
உள் அங்கு இருந்தாய் -உள் இங்கு அந்வயித்து கிடக்கிறது
அத்தாணி -நித்ய சந்நிநிஹதர்களான

அண்டத்து இத்யாதி –
இறந்தால் தங்குமூர் அண்டமே -என்றும்
அண்டம் போயாட்சி அவர்க்கு -என்றும்
ஸ்ரீ பரமபதத்தை -அண்டம் -சொல்லக்  கடவது இறே –
(அண்டம் என்றால் ஸ்ரீ வைகுண்டம் காட்டுமோ -என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

அண்டத்துள் -அத்தாணி -அமரர்கள் சூழ -அங்கு இருந்தாய் –
ஸ்ரீ பரம பதத்தின் உள்ளே அருகு இருப்பை உடையரான நித்ய ஸூரிகள் சூழ சேவிக்க –
அவர்கள் நடுவே –
ஏழுலகம் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அருளினவனே –
அத்தாணி-அருகு இருப்பு

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் –
இந்த விபூதியில் முமுஷுக்களாய்-உன் பக்கல் பிரேம யுக்தர்களாய் இருக்கும்
அவர்களுடைய மனசினுள்ளே -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும்
உகந்து நித்யவாசம் பண்ணுமவனே –

தூ மலராள் மணவாளா –
தூயதான தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டி யார்க்கு நாயகன் ஆனவனே
ஸ்ரியாசார்த்தம் -என்கிறபடியே ஸ்ரீ பரம பதத்திலும் –
அரவிந்த பாவையும் தானும் – என்கிறபடியே தொண்டர்களுடைய ஹ்ருதயத்திலும்
ஸ்ரீ பிராட்டியும் தானும் கூட இறே எழுந்து அருளி இருப்பது –

உண்டிட்டு இத்யாதி –
பிரளயத்தில் அழியாதபடி சகல லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ஒரு பவனான ஆல் இலையிலே
கண் வளர்ந்து அருளினவனே
இந்த ஆபத் சகத்வதுக்கும் ஹேதுகள் சொன்ன ஸ்ரிய பதித்வம் இறே

யஸ்யா வீஷ்யமுகம் ததிந்கித பராதீனோ விதத்தே கிலம்-(ஸ்ரீ ஸ்தவம் ) -என்கிறபடியே
சகலமும் அவளுடைய இங்கித பராதீனன் ஆயிறே செய்வது

கண்டு இத்யாதி –
மாலையும் மயிர் முடியுமாய் இருக்கிற உன்னைக் கண்டு
நான் உகக்கும்படி நீ உகக்கும் கருமுகை பூ சூட்ட வாராய் –

——————————————

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

பதவுரை

செண்பகம்–செண்பகப் பூவும்
மல்லிகையோடு–மல்லிகைப் பூவும்
செங்கழுநீர்–செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி–இருவாட்சிப் பூவும்
(ஆகிய)
எண் பகர்–(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும்–மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன்–கொண்டு வந்தேன்;
இன்று–இப்போது
இவை சூட்ட–இப் பூக்களைச் சூட்டும்படி
வா–வருவாயாக,
என்று–என்று
பகர் மண் கொண்டானை–பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
(தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி–யசோதை
மகிழ்ந்து–மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த–சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர்–ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன-அருளிச் செய்த
இம் மாலை–இந்தச் சொல் மாலையும்
பத்தே–ஒரு பத்தே!

என்பகர் -இன்னது இன்னது என்று எண்ணி சொல்லப்பட்ட
பகர் மண் கொண்டானை -தன்னது என்று சாஸ்திர சித்தமான பூமியை மகா பலி இடத்தில்
நீரேற்று அளந்து கொண்டவனை குறித்து
பண் -ராகம் –
பத்தே -ஒரு பத்தே -என்று இப் பத்தின் மேன்மையை
புகழ்ந்து -இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்ற அருளி செய்கிறார்

செண்பக மல்லிகையோடு இத்யாதி –
ப்ராதகால புஷ்பிதமான செண்பகமும்
சாயங்கால புஷ்பமான மல்லிகையும் -ஆகிய இவற்றோடே
ப்ராத கால புஷ்பங்களான செங்கழுநீர் இருவாட்சி முதலாக எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் எல்லாம் கொண்டு வந்தேன் –
(காலைப் பூ மாலைப்பூ –தின பேதேந அவ்வவ கால பூக்களைக் கொண்டு வந்தவற்றை அருளிச் செய்கிறார் )

அன்றிக்கே
எண்பகர் பூ என்றது -இன்னது இன்னது என்றி பரிகணிக்க படுமதாய் -சாஸ்திர சித்தமுமாகிற புஷ்பங்கள் என்னவுமாம் –
கொணர்ந்தேன் என்றது கொண்டு வந்தேன் -என்றபடி –

இன்று இவை சூட்ட வா என்று –
இப்போது இவற்றை உன் திருக் குழலிலே சூட்ட வர வேணும் என்று

மண் பகர் கொண்டானை
பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
பகர்தல்-மூவடிதா -என்ற இவனுடைய உக்தியாதல்
தந்தேன் என்ற மகா பலி யுக்தியாதல்
சாஸ்திர சித்தமான பூமியை எல்லாம் கொண்டவனை -என்னுதல்

ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த
இப்படி இருக்கிறவனைக் குறித்து இன்று இவை சூட்ட வா என்று யசோதை பிராட்டி உகந்து சொன்ன பிரகாரங்களை
செய்த என்றது செய்தவற்றை என்றபடி

பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன இம்மாலை பத்தே
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த

இம் மாலையும் ஒரு பத்தே -என்று
இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –

இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே
இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: