ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-7–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
தாயான யசோதை பிராட்டி -தனக்கு குழல் வாரின அநந்தரம் –
பூ சூட்டுவதாக இருக்கிற அளவிலே –
அவன் கன்றுகள் மேய்க்க போவதாக நினைத்து -அவை மறித்து மேய்க்கைக்கு ஈடான
கோல் தர வேணும் – என்று அபேஷிக்க-
அது தனக்கு அநிஷ்டமானது கொண்டு -அவள் கொடாது ஒழிகையாலே அவன் அழப் புக்க வாறே  –
அவனை அழுகை மருட்டுகைக்காக -அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று
பலகாலும் சொல்லி அவன் அழுகுகையை மாற்றி உகப்பித்த பின்பு –

அவனுக்கு பூ சூட்டுவதாக கோலி-
செண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி -தொடக்கமாய் –
நிறத்தாலும் மணத்தாலும் ஓன்று போல் ஓன்று அன்றிகே விலஷணமாய் இருக்கும் புஷ்பங்களை உண்டாக்கி –
அவற்றை தனி தனியே சொல்லி -உனக்கு இன்ன இன்ன பூ சூட்டும்படி வா என்று அனுவர்த்தித்து அழைத்து
பூ சூட்டின பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை குறித்து அவள் பேசினால் போலே பேசி அந்த  ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில்

———————————

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

ஆநிரை மேய்க்க நீ போதி -உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்
பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்

அரு மருந்து ஆவது அறியாய் -நீ உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

கானகம் எல்லாம் திரிந்து -காட்டிடம் எங்கும் திரிந்து -பசுக்கள் பச்சை கண்ட இடம் எங்கும்
பரந்து மேய்கையாலே -உனக்கும் அவை போன இடம் எங்கும் திரிய வேணும் இறே –

உன் கரிய திரு மேனி வாட –
கண்டவர்கள் கண் குளிரும்படி இருக்கும் உன்னுடைய ஸ்யாமளமான திரு மேனி யானது –
காட்டு அழல் பொறாமையாலே-வெக்கை தட்டின பூ போலே வாடும்படியாக –

பானையில் பாலைப் பருகி -கறந்த பானை யோடு இருக்கிற பச்சைப் பாலை -அந்த
பாத்ரத்தில் இருக்க செய்தே பருகி

பற்றாதார் எல்லாம் சிரிப்ப -உன்னை உகவாதார் எல்லாரும் -எங்கள் வீட்டில் கை பானையில்
பாலை குடித்துப் போந்தான் -என்று சிரிக்கும்படியாக

தேனில் இனிய பிரானே -தேனிலும் காட்டிலும் இனியனான உபகாரகன் ஆனவனே –

இத்தால் –
அனுபவிப்பாருக்கு ஒருகாலும் திருப்தி பிறவாதே மேன்மேல் என அனுபவிக்க
வேண்டும்படி இருப்பானாய் இருக்கிற தன்னை உபகரிப்பானும் தானே யாய் இருக்கும் அவன் என்கை –

செண்பகப் பூ சூட்ட வாராய் -கால புஷ்பமான செண்பகம் ஆனது செவ்வி குன்றாமல் சாத்த வாராய் –

தேனில் இனிய பிரானே -பற்றாதார் எல்லாம் சிரிப்ப -பானையில் பாலைப் பருகி
உன் கரிய திருமேனி வாட -கானகம் எல்லாம் திரிந்து -ஆநிரை மேய்க்க நீ போதி
அரு மருந்து ஆவது அறியாய் -செண்பக பூ சூட்ட வாராய் -என்று அந்வயம்–

——————————————

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –

கரு இத்யாதி-
கண்கள் -உன்னைக் கண்டால் -கரு உடை மேகங்கள் கண்டால் ஒக்கும் உரு உடையாய்
கண்கள் ஆனவை உன்னைப் பார்த்தால் -நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் போலே
குளிரும்படியான வடிவை உடையவனே –
அன்றிக்கே –
நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் உன்னைக் கண்டால் போலே இருக்கும் –
கண்கள் உருவு உடையாய் -அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின்
அழகை உடையவன் என்னவுமாம்

உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் –
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
திரு உடையாள் மணவாளா -கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
திருவரங்கத்தே கிடந்தாய் -அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி
ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே
மருவி இத்யாதி -பரிமளமானது நீங்காமல் நின்று கமழா நிற்கிற மல்லிகை பூ சூட்ட வாராய்

—————————————————

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

மச்சு இத்யாதி –
மச்சு -நடு நிலம்
மாளிகை -மேல் நிலம்
மச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி –
மாதர்கள் தம்மிடம் புக்கு -பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு
கச்சோடு பட்டை கிழித்து –
அவர்கள் முலைக் கச்சோடே அதற்க்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து
காம்பு துகில் அவை கீறி -பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து
காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை
நிச்சலும் தீமைகள் செய்வாய் –
நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே -வளர வளர தீம்பு கை ஏறி செல்லா நின்றது இறே
நீள் திருவேம்கடத்து எந்தாய் –
ஒக்கத்தை உடைத்தான வடக்கு திரு மலையிலே நிற்கிற என் ஸ்வாமி யானவனே
கானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்து கொண்டு நிற்கிறது ஸ்வாமித்வ ப்ராப்தி யாலே இறே
பச்சை இத்யாதி -பசுமை குன்றாத தமநகத்தோடே-அதுக்கு பரபாகமான நிறத்தை உடைய
பாதிரிப் பூவையும் சூட்டும்படி வர வேணும் –

————————————-

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

தெருவின் கண் நின்று-நான் மச்சிலும் மாளிகையிலும் ஏறினேனோ-
தெருவிலே அன்றோ நின்றேன் -என்னை நீ இப்படி சொல்லுவான் என் என்ன
அவ்விடத்தில் தானோ நீ தீமை செய்யாது இருக்கிறது –
தெரு இடங்களில் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே –
அவ்விடத்தில் விளையாடா நிற்கிற பருவத்தால் இளைய இடைப் பெண்களை
தீமை செய்யாதே -சிற்றில் சிதைக்கை-லீலா உபோகரனன்களை  பறிக்கை
அவர்களோடு கை பிணக்கு இடுகை முதலாக இவன் செய்யும் விஷயங்கள்
வாசாமகோசரம் ஆகையாலே -தீமை என்று ஒரு சொல்லாலே அடக்கி சொல்கிறார்

மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற –
மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன
உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை
புருவம் இத்யாதி –
உபமான ரஹீதமான புருவமும் -இருண்டு இருந்துள்ள குழலும் -இரண்டுக்கும் நடுவே
விளங்கா நிற்கிற திரு நெற்றியும் ஆகிற -இவ் அவயவ சோபையாலே உஜ்ஜ்வலமாய் இருப்பதொரு
முகில் ஈன்ற கன்று போலே வடிவால் அழகியனுமாய் சர்வ பிரகார பரி பூர்ணனுமாய் இருக்கிறவனே –
உகந்து இத்யாதி -உனக்கு சூட்டப் பெற்றோம் என்கிற உகப்புடன் மணம் கமழா நின்றுள்ள
இம்மாலைகளை நான் உனக்கு சூட்டும்படியாக வர வேண்டும்

————————————-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7 5- – –

புள்ளினை இத்யாதி –
கன்றுகள் மேய்க்கிற இடத்தில் -பள்ளத்தில்  மேயும் பறவை உருக் கொண்டு உன்னை நலிவதாக
வந்த பகாசுரனை -வாயைக் கிழித்து பொகட்டவனே
பொரு இத்யாதி -கல்யாணத்துக்கு -என்று அழைத்து விட்டு வழியில் நலிவதாக கம்சன்
நிறுத்தி வைத்ததாய் -உன் மேல் யுத்தோன்முகமாய்  வந்த குவலயாபீடத்தின் கொம்பை
அநாயாசேன பிடுங்கி பொகட்டவனே

கள்ளம் இத்யாதி –
சீதைக்கு நேராவேன் -என்று க்ரித்ரிம வேஷம் கொடு வந்த சூர்பணகை ஆகிற ராஷசி
மூக்கோடு-அவளுக்கு ரஷகனான ராவணன் தலையையும் அறுத்து பொகட்டவனே –
இவளுக்கு அவன் காவலன் ஆகையாவது –
இவளை ச்வரைசஞ்சாரம் பண்ணித் திரி -என்று விடுகை இறே
அன்றிக்கே-
பொதுவிலே காவலன் என்கையாலே ராஷச ஜாதிக்காக ரஷகன் என்னவுமாம்
இத்தால் பிரபல விரோதிகளை அநாயாசேநேப் போக்கி உன்னை அனுபவிப்பார்க்கு உன்னை
உபகரித்தவன் அன்றோ என்கை –

அள்ளி இத்யாதி –
இவன் வெண்ணெய் தானே அள்ளி விழுங்க வல்லவன் ஆவது எப்போதோ -என்று
பார்த்து இருந்த நான் -நீ வெண்ணெயை அள்ளி விழுங்கவும் -பெற்று வைத்து
உன் மார்த்வத்தை பார்த்து அஞ்சாமல் அடியேன் அடித்தேன்
யாவர் சிலரும் அனுதாபம் தலை எடுத்தால் -அடியேன் -என்று இறே சொல்லுவது –
இவள் தான் அது தன்னை முன்னே நினையாதே அடிக்க வேண்டிற்றும்
இவன் மற்றுமோர் இடத்தில் இது செய்யுமாகில் வரும் பழிச் சொல்லுக்கு அஞ்சி இறே –

தெள்ளிய இத்யாதி –
ஆன பின்பு நான் முன்பு செய்த அத்தை பொறுத்து -தெளிந்த நீரில்
எழுந்தது ஆகையாலே -நிறத்தாலும் பரிமளத்தாலும் விலஷணமாய் இருக்கிற
செங்கழு நீரை  செவ்வையிலே நான் சூட்டும்படி வாராய்

——————————————————-

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2 7-6 –

உலோபாய் -ஆசை அற்று இரா நின்றாய்
சிக்கென -நிரந்தரமாக
எருதுகளோடு பொருதி —
நப்பின்னை பிராட்டியை லபிக்கையில் உண்டான ஆசையாலே -உன் திருமேனியின்
மார்த்வம் பாராமல் அசூரா விஷ்டமான எருதுகளோடு பொரா நின்றாய் –
காலாந்தரமாக இருக்க செய்தேயும் -தத் காலம் போலே பிரகாசிக்கையாலே
பொருதி -என்று வர்தமானமாக சொல்லுகிறது –

ஏதும் உலோபாய் காண் நம்பீ-
ஒன்றிலும் லோபம் அற்று இரா நின்றாய் காண்
அதாவது -தேகத்தை பேணுதல் -பிராணனை பேணுதல் செய்யாது இருக்கை –

நம்பி -நப்பின்னை அளவிலே வ்யாமோகத்தால் பூரணன் ஆனவனே
கருதிய தீமைகள் செய்து –
கஞ்சன் உன் திறத்தில் செய்யக் கருதின தீமைகள் எல்லாவற்றையும்
அவன் திறத்திலே நீ செய்து –

கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் –
கம்சனை திருவடிகளால் உதைத்தாய் -அதாவது -துங்கமஞ்ச வ்யவஸ்த்தித  -என்கிறபடியே
அவன் இருந்த உயர்ந்த மஞ்சச்தலத்திலே சென்று குதித்து –
கேசேஷ் வாக்ர்ஷ்ய விகளத் கிரீட மவநீதலே சகம்சம் பாதயாமாச தச்யோபரி பபாதச -என்கிறபடியே
அபிஷேகத்தை பறித்து எறிந்து – மயிரைப் பிடித்து இழுத்து -மஞ்சச்தலத்தில் நின்றும் –
பூமியிலே விழ தள்ளி -அவன் மேலே குதித்து இறே அவனைக் கொன்றது –

தெருவின் கண் தீமைகள் செய்து –
தெரு -வழி
அவனை நிரசிப்பதாக போகிற போது வழியிலே அவனுடைய ஈரம் கொல்லியான –
ரஜகனைக் கொன்று – இது வண்ணானுடைய பெயர் -ஆயுத சாலையிலே புக்கு –
அவனுக்கு மறம் பிறக்கும்படி -வில் விழவுக்கு என்று அலங்கரித்து இருக்கிற வில்லை முறித்து –
அவனுக்கு அபிமதகஜமான குவலயாபீடத்தை கொன்று -செய்த இவை இறே –
தெருவின் கண் செய்த தீமைகள் ஆவன –

சிக்கென மல்லர்களோடு பொருது –
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லர் -என்கிறபடியே
கம்சன் ஏவினது செய்ய வேணும் என்று மல் பொருகையை ஏன்று கொண்டு
வந்தன சாணூர முஷ்டிகர் ஆகிற மல்லர்களோடு பிரதிக்ஜா பூர்வகமாக உறைக்க

பொருது அழித்து வருகின்ற பொன்னே –
இப்படி விரோதி வர்க்கத்தை நிரசித்து வருகிற போதை செருக்காலே பொன் போலே
உஜ்ஜ்வலமான வடிவை உடையவனே

முந்துற கம்ச நிரசனத்தை சொல்லி -அதுக்கு பூர்வத்தில் உள்ளவற்றை பின்பு
சொல்வான் என் என்னில் –
கம்ச நிரசனமே பிரதானமாய் -இவை அதுக்கு உறுப்பாக -போகிற வழியில் செய்த
வியாபாரங்கள் ஆகையாலே அதுக்கு முன்னாக சொன்ன இதில் விரோதம் இல்லை
புன்னை இத்யாதி –
உனக்கு பாங்கான புன்னை பூ சூட்டும்படியாக நீ வாராய்
பொன்னே புன்னை பூ சூட்ட வாராய் -என்கையாலே
பொன்னோடு பொன்னை சேர்ப்பாரைப் போலே பொன் போலே இருக்கிற
திரு மேனியில் -பொன் ஏய்ந்த தாதை உடைய புனை பூவை சூட்டப் பார்க்கிறாள் காணும்-

—————————————–

குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2 7-7

குடங்கள் இத்யாதி-
பிராமணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம்
விஞ்சினால் செருக்குக்கு போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து-
குடக்கூத்தாவது -உபய விபூத் ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இவனுக்கு இது –
இடையர்க்கு ஐஸ்வர்யம் தானாவது -கோ சம்ர்த்தி இறே அந்த சம்ர்த்தி குறை அற உள்ளது தனக்கே ஆகையாலே –
அத்தால் வந்த செருக்குக்கு போக்கு விட்டு குடக்கூத்து ஆடினபடி சொல்லுகிறது –
தலையிலே அடுக்கு குடம் இருக்க –
இரண்டு தோள்களிலும் குடங்கள் இருக்க –
இரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்தில் எறிந்து ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து –
குடக்கூத்தாவது -அத்தை சொல்லுகிறது -குடங்கள் எடுதேற விட்டு கூத்தாட வல்ல -என்று –

குடம் என்னாதே -குடங்கள் -என்கையாலே பல குடங்களையும் கொண்டு ஆடினதை சொல்லுகிறது –
எடுததேற  விட்டு என்கையாலே -அவற்றை திருக் கையிலே எடுத்து ஆகாசத்திலே உயர எறிவது –
ஏற்பது ஆனமையை சொல்லுகிறது
கூத்தாட வல்ல -என்கையாலே -மற்றும் இக்கூத்தாடுவார்  உண்டே ஆகிலும் -இவன் ஆடின
கட்டளை ஒருவருக்கும் ஆடப்போகாது என்னும் இடம் சொல்லுகிறது –
இவன் ஆடின வைசித்ரி -பரத சாஸ்திரத்திலும் காண அரிதாய் இருக்கை –

எம் கோவே -எங்களுக்கு நாயகன் ஆனவனே
மடம் கொள் இத்யாதி -இப்படி இருக்கிற சேஷ்டிதத்தாலே மடப்பத்தை உடையராய்
பூர்ண சந்த்ரனைப் போலே குளிர்ந்து ஒளிவிடா நின்ற முகத்தை உடையராய் இருக்கிற
ஸ்திரீகளை பிச்சேற்ற வல்ல என்னுடைய பிள்ளை யானவனே

இடந்திட்டு   இத்யாதி –  -நெஞ்சு என்று மார்வை சொலுகிறது
தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற ஹிரண்யன் உடைய மார்வை –
கொலை கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் -என்கிறபடியே
கூரிய திரு உகிர்களாலே உறைக்க ஊன்றி இடந்து இரண்டு கூறாம்படியாக முற்காலத்திலே கிழித்துப் பொகட்டவனே

இத்தால் –
சிறுக்கனுடைய ஆபத்திலே வந்து உதவினான் ஆகையாலே தளர்ந்தாரை நோக்குமவன் என்னும் இடம் சொல்லுகிறது –
குடந்தை இத்யாதி –
அவதாரங்களுக்கு பிற்பாடானவர்களுக்கும் உதவுகைக்காக திருக் குடந்தையில்
கண் வளர்ந்து அருளின என் ஆயன் ஆனவனே
குருக்கத்தி இத்யாதி –
உனக்கு என்று தேடி வைத்த குருக்கத்தி பூவை உன் திருக் குழலிலே சூட்டும்படியாக வாராய் –

———————————————

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-

சீமாலிகன் எனும் இடத்தில் சி -எனுமது ஒவ்பசாரிக சொல்
ஸ்ரீ என்னுமது சி என்றாய் கண்ணனோடு நடப்பு கொண்டதால் வந்த சீர்மையை சொலுகிறது என்பர்
சீமாலிகன் இத்யாதி –
மாலிகன் என்பான் ஒருத்தன் கிருஷ்ணனுக்கு சகாவாய்-பல ஆயுதங்களும்
பயிற்றுவிக்க கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆசக்தி பலத்தாலே ஒருவருக்கும் அஞ்சாமல்
லோகத்தில் உள்ள சாதுக்களை நலிந்து -திரியப் புக்கவாறே –
சகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்று திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம்
நடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது  கருக நியமித்தவாறே –
அவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்
ஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன
இது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –
எனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று
அவன் நிர்பந்தங்களை பண்ணினவாறே -இவனுடைய துஸ் ஸ்பாவங்கள் அடியாக
இவனை நிரசிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி தன்னுடைய சீர்மை குன்றாதபடி
ஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீசி
சுழன்று வருகிற திரு ஆழியை மீண்டும் திருக் கையிலே அநாயாசேன ஏற்க
அவன் இத்தை கண்டு -எனக்கு இது அரிதோ -என்று கை நீட்ட
உனக்கு இது அரிது காண் -என்ன செய்தேயும் -அவன் வாங்கி சுழற்றி மேலே விட்டு
மீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்க தன் விரலை
எடுத்து கொடு நிற்க -அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழலா இடம் போராதது கொண்டு
அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து பொகட்டது என்று இதிஹாசாதிகளிலே
சொல்லப்பட்டதொரு விருத்தாந்தத்தை இப்பாட்டில் பூர்வ அர்த்தத்தால் ஸங்க்ரஹேன சொல்லுகிறது  –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –
சி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே
உன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே
சாமாறு அவனை நீ எண்ணி –
சாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –
என்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து
அதாவது –
தோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடியாகவும்
தன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –
அவனை -என்கிற இடத்தில் ஐகாரம் அவ்யயம்

சக்கரத்தால் தலை கொண்டாய் –
நமக்கு அசாதாரணமான ஆயுதம் -உனக்கு இது ஆகாது காண் -என்ன செய்தேயும்
அவன் நிர்பந்தம் பண்ணினதுக்காக அவனை ஆழி பயிற்றுவிக்கிறானாக
உபாய ரூபேண திரு ஆழியாலே சிரசேதம் பண்ணிப் பொகட்டவனே

ஆமாறு அறியும் பிரானே –
சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

அணி அரங்கத்தே கிடந்தாய்
இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் –
நல்லவர்கள் வாழும் நளிர் அரங்கம் -என்கிறபடியே பரிவர்  உள்ள தேசத்திலே
பள்ளி கொள்ளுகையலே உன் சௌகுமார்யாதிகளை நினைத்து -உனக்கு என் வருகிறதோ –
என்று வயிறு எரியா நிற்கும் க்லேசத்தை போக்கினவனே
எமாற்றமாவது -துக்கம்
இருவாட்சி பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான இது செவ்வி அழிவதற்கு முன்னே உன்திருக் குழலிலே நான் சூட்டும்படி வாராய் –

——————————————-

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2 7-9 – –

அண்டத்துள் -ஸ்ரீ வைகுண்டத்தில்
உள் அங்கு இருந்தாய் -உள் இங்கு அந்வயித்து கிடக்கிறது
அத்தாணி -நித்ய சந்நிநிஹதர்களான
அண்டத்து இத்யாதி –
இறந்தால் தங்குமூர் அண்டமே -என்றும்
அண்டம் போயாட்சி அவர்க்கு -என்றும்
ஸ்ரீ பரமபதத்தை -அண்டம் -சொல்லக்  கடவது இறே –
அண்டத்துள் -அத்தாணி -அமரர்கள் சூழ -அங்கு இருந்தாய் –
ஸ்ரீ பரம பதத்தின் உள்ளே அருகு இருப்பை உடையரான நித்ய சூரிகள் சூழ சேவிக்க –
அவர்கள் நடுவே –
ஏழுலகம் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அருளினவனே –
அத்தாணி-அருகு இருப்பு

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் –
இந்த விபூதியில் முமுஷுக்களாய்-உன் பக்கல் பிரேம யுக்தர்களாய் இருக்கும்
அவர்களுடைய மனசினுள்ளே -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும் உகந்து நித்யவாசம் பண்ணுமவனே –
தூ மலராள் மணவாளா –
தூயதான தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டி யார்க்கு நாயகன் ஆனவனே
ஸ்ரியாசார்த்தம் -என்கிறபடியே ஸ்ரீ பரம பதத்திலும் -அரவிந்த பாவையும் தானும் –
என்கிறபடியே தொண்டர்களுடைய ஹ்ருதயத்திலும் ஸ்ரீ பிராட்டியும் தானும் கூட இறே எழுந்து அருளி இருப்பது –

உண்டிட்டு இத்யாதி –
பிரளயத்தில் அழியாதபடி சகல லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ஒரு பவனான ஆல் இலையிலே
கண் வளர்ந்து அருளினவனே
இந்த ஆபத்சகத்வதுக்கு ஹேதுகள் சொன்ன ஸ்ரிய பதித்வம் இறே
யஸ்யா வீஷ்யமுகம் ததிந்கித பராதீனோ விதத்தே கிலம் -என்கிறபடியே
சகலமும் அவளுடைய இங்கித பராதீனன் ஆயிறே செய்வது
கண்டு இத்யாதி –
மாலையும் மயிர்முடியுமாய் இருக்கிற உன்னைக் கண்டு
நான் உகக்கும்படி நீ உகக்கும் கருமுகை பூ சூட்ட வாராய் –

——————————————

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

என்பகர் -இன்னது இன்னது என்று எண்ணி சொல்லப்பட்ட
பகர் மண் கொண்டானை -தன்னது என்று சாஸ்திர சித்தமான பூமியை மகா பலி இடத்தில்
நீரேற்று அளந்து கொண்டவனை குறித்து
பண் -ராகம் –
பத்தே -ஒரு பத்தே -என்று இப்பத்தின் மேன்மையை
புகழ்ந்து -இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்ற அருளி செய்கிறார்

செண்பக மல்லிகையோடு இத்யாதி –
ப்ராதகால புஷ்பிதமான செண்பகமும்
சாயங்கால புஷ்பமான மல்லிகையும் -ஆகிய இவற்றோடே
ப்ராதகால புஷ்பங்களான செங்கழுநீர் இருவாட்சி முதலாக எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் எல்லாம் கொண்டு வந்தேன் –
அன்றிக்கே
எண்பகர் பூ என்றது -இன்னது இன்னது என்றி பரிகணிக்க படுமதாய் -சாஸ்திர சித்தமுமாகிற புஷ்பங்கள் என்னவுமாம் –
கொணர்ந்தேன் என்றது கொண்டு வந்தேன் -என்றபடி –

இன்று இவை சூட்ட வா என்று –
இப்போது இவற்றை உன் திருக் குழலிலே சூட்ட வர வேணும் என்று
மண் பகர் கொண்டானை
பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
பகர்தல்-மூவடிதா -என்ற இவனுடைய உக்தியாதல்
தந்தேன் என்ற மகா பலி யுக்தியாதல்
சாஸ்திர சித்தமான பூமியை எல்லாம் கொண்டவனை -என்னுதல்

ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த
இப்படி இருக்கிறவனைக் குறித்து இன்று இவை சூட்ட வா என்று யசோதை பிராட்டி உகந்து சொன்ன பிரகாரங்களை
செய்த என்றது செய்தவற்றை என்றபடி
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன இம்மாலை பத்தே
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த
இம்மாலையும் ஒரு பத்தே -என்று இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –
இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே
இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: