ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-8–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
கீழே அவனை திருமஞ்சனமாட்டி -திருக் குழல் வாரின யசோதை பிராட்டி
அவன் திருக் குழலுக்கு அலங்காரமாக பூ சூட்ட வேணும் -என்று கோலி
ஓன்று போல் ஓன்று அன்றிக்கே விலஷனமான புஷ்பங்கள் பலவற்றையும் சம்பாதித்து –
இவை செவ்வி அழிவதற்கு முன்னே உனக்கு நான் சூட்டும்படி வர வேணும் -என்று
அவனை பல காலம் அழைத்து பூ சூட்டின அநந்தரம்-

அவன் அழகுக்கு திருஷ்டி தோஷம் வாராதபடி காப்பிட வேணும் -என்று நினைத்து
சாயம் காலத்திலே உன்னை சேவிபபதாக தேவ ஜாதி எல்லாம் வந்து நில்லா நின்றது
காலமும் சந்த்யை ஆயிற்று-
இக்காலத்தில் உக்ர  தேவதைகள் சஞ்சரிக்கும்- மன்று முதலான ஸ்தலங்களில் நில்லாதே
உனக்கு அந்திக் காப்பு இடும்படி வர வேணும் -என்று
பலகாலும் அனுவர்த்தித்து அழைத்து காப்பிட்ட பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு
உகந்து அருளின நிலமான ஸ்ரீ திரு வெள்ளறையிலே-அவன் நிற்கிற நிலையில் -அவனைக் குறித்து
யசோதை பிராட்டி உடைய சிநேகத்தையும் -பரிவையும் உடையராய் கொண்டு –
அவள் பேசினால் போல் பேசி
அவனுக்கு திரு அந்திக்காப்பு இடுகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –
இத் திருமொழியில்

——————————————–

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- –

சதுரர்கள் வெள்ளறை -மங்களா சாசன சமர்த்தரர்கள் வர்த்திக்கிற திரு வெள்ளறையிலே
இந்திரன் இத்யாதி –
த்ரை லோக்ய பாலகனான இந்திரனோடே-தச புவன ஸ்ரஷ்டாவான பிரம்மாவும் –
ஜகத் சம்கார கர்த்தாவான ருத்ரனும் -இவர்களுக்கு பரதந்த்ரராய் வர்த்திக்கும் மற்றும் உண்டான
தேவர்களும் எல்லாம்-இத்தால்-வாசி அற எல்லாரும் என்றபடி –
பிரம்மா ருத்ர இந்த்ரரர்கள் மூவரையும் சொல்லுகிற இடத்தில் இந்திரனை முந்துற
சொல்லிற்று -அவனோபாதி பிரம்மா ருத்ரர்களும் அதிகரித்த கார்யத்தால் வந்த இத்தனை ஒழிய
ஈஸ்வர கந்தம் இல்லை என்று தோற்றுகைக்காக
இவர்கள் தாம் தொட்டில் பருவமே பிடித்து இவ்விஷயத்திலே கிஞ்சித்கரித்து இறே போருவது –
ஆகையாலே கிண்கிணி தந்துவனாய் நின்ற இந்திரனோடே
வண்ண சிறு தொட்டில் வர விட்ட -பிரம்மாவும்
உடையார் கன மணி வரவிட்ட ருத்ரனும் –
வலம்புரி சேவடி கிண் கிணி வரவிட்ட மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம் என்கை

மந்திர மா மலர் கொண்டு
திரு மந்திர புஷ்பம் கொண்டு
மந்திரம் என்கிறது மறை கண்ட மந்த்ரமான புருஷ ஸூக்தாதிகளை
மா மலர் என்கிறது ஸ்லாக்கியமான கல்பக வ்ருஷாதிகளை சொல்லுகிறது

மறைந்து உவராய் வந்து நின்றார் –
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் -என்கிறபடியே இங்கு உள்ளாருடைய கண்ணுக்கு
விஷயம் ஆகாதவர்கள் ஆகையாலே -பிறருக்கு தெரியாத இயல்பாக -நீ அருள் பாடிட்டவாறே
வரும்படி உனக்கு அதூர விப்ர்க்ருஷ்டராய் வந்து நின்றார்கள்
மறைந்து வாரா -என்று பாடமானாலும் -உவரா -அதூர விபர்க்ருஷ்டர் என்று பொருள்

சந்தரன் இத்யாதி –
சந்திர பததளவும் செல்ல ஓங்கி இருக்கையாலே -சந்தரன் மாளிகைகளிலே வந்து
சேரும்படி இருப்பதாய் -உன் சௌகுமார்யாதிகளை அறிந்து -மங்களா சாசனம் பண்ணி நோக்க
வல்ல சமர்த்தரானவர்கள் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வெள்ளறையிலே நின்று அருளுபவனே
அந்தியம் போது இதுவாகும் –
இது சந்த்யா காலமாய் இருக்கும் -விளையாட்டு பராக்கில் அஸ்தமிதத்தும் அறிகிறாய் இல்லை –
அழகனே
த்ர்ஷ்டி தோஷ பயத்தாலே -அநவரதம் கொண்டாடும்படியான அழகை உடையவனே
அஸ்தமிதத்தை அறியாதா போலே உன் அழகு வாசியும் அறிகிறாய் இல்லையீ-
காப்பிட வாராய் –
உன்னுடைய ஸ்வாபாவிகமான சமுதாய சோபைக்கும் ஒப்பனை அழகுக்கும் ஒரு குறை
வாராதபடி யாக திரு வந்திக் காப்பிட வாராய்-

————————————————

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 –

நின்று ஒழிந்தேன் -நின்று விட்டேன் -நான் உன்னை அழைப்பதில் உற்று இருந்தமையால்
கன்றுகளை குடிக்க விடுவர் ஒருவர் இல்லாமல் போகவே பசுக்கள் கதறா நின்றன -என்று கருத்து
இப்போது இது சொல்கிறது சடக்கென காப்பிட வர வேணும் என்பதற்கு உறுப்பாக
என் தன் சொல்லு நன்று கண்டாய் -தாயான என்னுடைய சொல்லானது
உனக்கு பிரியமாய் இருக்கும் கிடாய் -ஆகில் என் செய்ய வேணும் என்று அவன் கேட்க
நான் உன்னை காப்பிட வாராய் -என்கிறாள் –
நேசமேல்-யேல் அசை –

கன்று இத்யாதி –
பசுக்களானவை  எல்லாம் கன்றுகள் நிற்கிற இடத்திலே வந்து புகுந்து -கன்றுகளை குடிக்க விடுதல் –
கறக்குதல் -செய்வார் இல்லாதது கண்டு முலைக் கடுப்பால் கதறா நின்றன –
அதவா –
கதறுகின்ற -என்றதை கீழும் மேலும் அன்வயித்து கன்றுகள் எல்லாம் தொழுவத்தில்
தாம்தாம் நிலைகளிலே புகுந்து நின்று முலை உண்ணப் பெறாமையாலே நாக்கொட்டிக் கதறுகின்றன –
பசுக்கள் எல்லாம் புறமே நின்று -கன்றுகள் குடித்தல்-கரத்தல் -செய்யப் பெறாமல்
முலைக்கடுப்பால் கதறா நின்றன என்னவுமாம் –
அவை அப்படி கதற வேண்டுகிறது -முன்போலே நீ கன்றுகளை விட்டு கறவாமையால் அன்றோ
அது செய்யாது ஒழிவான் என் என்ன

நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி –
நான் உன்னை அழைத்து நின்று விட்டேன் -பின்னை அங்கு யாரது செய்வார் –
அவை கன்றை நினைத்து கதருகிறாப் போலே அன்றோ -நானும் உன்னை அழைத்து நின்றுவிட்டபடி –
நேசமேல் ஒன்றும் இலாதாய் –
என்பக்கல் ஸ்நேகமாகில் ஒன்றும் இல்லாதவனே –
கதறுகிற தாய்கள் அளவில் கன்றுகளுக்கு உண்டான சிநேகம் என் பக்கல்
உனக்கு உண்டாக வேண்டாவோ -அது ஏகதேசம் இல்லாதவனாய் இருந்தாய் நீ –
நான் உன் பக்கல் சிநேகம் அற்று இருக்கிறேனோ -விளையாடி வருகைக்காக நின்றேன்- அத்தனை அன்றோ என்ன –

மன்றில் நில்லேல் வந்து இப்போது –
சந்த்யா காலத்திலே சூத்திர தேவதைகள் நிற்கும் இடமான நாள் சந்தியிலே நில்லாதே கொள்ளாய்
விளையாடுகைக்காக ஸ்தலமும் காலமும் அல்ல காண் இது  –
மதிள் திரு வெள்ளறை நின்றாய் –
மங்களா சாசன பரர்க்கு அஞ்ச வேண்டாதபடி -உனக்கு அரணாக போம்படியான
மதிளை உடைய ஸ்ரீ திரு வெள்ளறையில் நின்று அருளினவனே-
புறம்பே புறப்பட்டு வ்யாபரியாதே அவ்ரணுக்கு உள்ளே நின்றாயாகில் எனக்கு இப்படி வயிறு பிடிக்க வேண்டாவே

நன்று கண்டாய் என் தன் சொல்லு –
இப்படி சொன்ன இடத்திலும் தன் சொல் அவன் கை கொள்ளாமையாலே-
என் சொல்லு நன்று கிடாய் -அத்தை கைக்கொள் என்கிறாள்
தாயார் வாய்சொல் கருமம் கண்டாய் -என்றாப் போலே
நான் உன்னை காப்பிட வாராய் –
உன் பக்கல் ஸ்நேக யுக்தையாய் -மங்களா சாசன பரையாய் இருக்கிற நான்
அநவரதம் காப்பிட வேண்டும்படியான சௌகுமார்யாதிகளை உடைய உன்னை காப்பிடும்படி நீ வாராய் –

—————————————————

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3-

அப்போது நான் உரப்பப் போய்-
அவற்றை அழித்த அக்காலத்திலே -நான் உன்னை சீறி வார்த்தை சொல்ல 
அஞ்சி ஓடிப் போய்
நான் ஒன்றும் செய்யேன் –
நான் உன்னை பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்வது இல்லை
செப்பு இத்யாதி –
செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய்
இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய

சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு –
லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும் கொட்டகத்தையும் அழித்திட்டு
அப்போது நான் உரப்ப போய் –
பெண்களொடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே-நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன்
என்று என் முன் நிற்க அஞ்சி போய்
அடிசிலும் உண்டிலை-
உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை
ஆள்வாய்
என்னை ஆளப் பிறந்தவனே
இப்படியோ நீ என்னை ஆள தேடுகிறது
இவளை ஆளுகையாவது -இவள் சொல்வழி வந்து -இவள் கொடுத்தவற்றையும் விநியோகம் கொண்டு –
கோல் கீழ் கன்றாய் நடக்கை இறே

முப்போதும் இத்யாதி –
ஆதி நடு அந்தியாய் -என்கிறபடியே த்ரி சந்த்யமும் -ப்ரஹ்ம பாவனை தலை எடுத்த போதெல்லாம்
தேவர்களாலே துதிக்க படுபவனாய்-மங்களா சாசன பரராய் கொண்டு -உன்னுடைய ஸம்ருத்தியை எப்போதும்
மனநம் பண்ணா நிற்கும் அவர்களுடைய ஸ்ரீ திரு வெள்ளறையிலே நிற்குமவனே
இப்போது நான் ஒன்றும் செய்யேன் –
அப்போது ஹித ரூபமாக உன்னை கோபித்து வார்த்தை சொன்னேன் ஆகிலும்
இப்போது நான் உன்னை ஒன்றும் செய்யேன்
எம்பிரான் காப்பிட வாராய் –
என்னுடைய நாதனே -உனக்கு நான் காப்பிடும்படி வாராய் –

——————————————————–

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4- – –

கண்ணில் இத்யாதி –
கண் விழித்து விளையாட ஒண்ணாதபடி -கண்ணிலே மணலை கொடு வந்து தூவி
எங்கள் கண்ணிலே மணலை தூவுவான் என் -என்றவாறே
கோபித்து -காலாலே உதைத்தாய் என்று தனித் தனியே சொல்லி –
ஒருவர் இருவர் அன்றிக்கே -அசங்யதரான பிள்ளைகள் உன்னால் ஈடுபட்டமை தோற்ற வந்து
இவர்கள் முறைப்படா  நின்றபடி பாராய்
கண்ணனே வெள்ளறை நின்றாய் –
எல்லாருக்கும் சுலபனாய் கொண்டு திரு வெள்ளறையிலே நின்று அருளினவனே
கண்டாரோடே தீமை செய்வாய் –
உன்னோடு சம்பந்தமும் சிநேகமும் உண்டாய் -நீ செய்தது பொறுக்கத் தக்கவர்கள் அன்றிக்கே –
கண்டவர்களோடு எல்லாம் தீம்புகளை செய்யுமவனே –
இப்படி தீமை செய்யலாகாது காண்
வண்ணமே இத்யாதி –
நிறத்தால் சமுத்ரத்தோடு ஒக்கும் அவனே
வண்ணம் -நிறம்
ஏகாரம் -அவ்யயம்
வேலை-சமுத்ரம்
அது என்றது வேலையாகிற அது என்றபடி
இத்தால் தீம்பு செய்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் என்கை
வள்ளலே –
இவ்வடிவு அழகை எனக்கு உபகரித்தவனே -காப்பிட வாராய் –

———————————————————–

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 – –

பல்லாயிரவர் இத்யாதி
பஞ்ச லஷம் குடியான இவ்வூரில் தீமை செய்யுமவர்களான பிள்ளைகள் அநேகம் ஆயிரம் பேர் இறே –
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது –
தம் தாம் செய்த தீமைகளை நீ செய்தாய் என்று உன் மேல் வையா நின்றார்கள்
ஆகையால் அவர்கள் செய்த தீமைகள் எல்லாம் உன் மேலே ஏறுமது ஒழிய புறம்பு போகாது காண் –
எம்பிரான் நீ இங்கே வாராய் –
என் நாயகனே -உன் மேல் தோஷம் ஏறிடுவர்கள் இடத்தில் நின்றும் -அவர்கள் நினைவும் சொல்லும் பொறாதார்
வர்த்திக்கிற இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் –
உன் பக்கல் தோஷ கந்தம் சொல்லுமவர்களை சஹியாதே -உனக்கு ஸ்நேஹிகளாய் –
மங்களா சாசன பரராய் -இருக்கிறவர்கள் வர்த்திக்கிற திரு வெள்ளறையில் நின்று அருளினவனே
ஞானச் சுடரே
ஞான பிரபவையை உடையவனே
உன் மேனி
அந்த ஞானத்துக்கும் ஞான ஆஸ்ர்யமான ஸ்வரூபத்துக்கும் பிரகாசமான உன்னுடைய திருமேனியை

சொல்லார நின்று ஏத்தி –
சொல் நிறையும்படி நின்று ஸ்துதித்து- சர்வ சப்த வாஸ்யமான விஷயத்தில் இறே சொல் ஆருவது
கவிக்கு நிறை பொருளாய் நின்றான் -என்னக் கடவது இறே
வாழ்த்தி
மங்களா சாசனம் பண்ணி
சொப்படக் காப்பிட வாராய் -நன்றாக நான் காப்பிட வாராய்
சொப்பட -நன்றாக என்றபடி-

————————————————–

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2 8-6 – –

மஞ்சு-மேகங்கள் ஆனவை –
கஞ்சன் இத்யாதி –
அசரீரி வாக்கியம் கேட்ட அன்று தொடங்கி-அத்யந்தம் வைரஹ்ர்தனாய் அதி சங்கையாலே
மக்கள் அறுவரை கல்லிடை மோதி-சப்தம கர்ப்பம் நழுவப் போய்த்து என்று விட்டு –
அஷ்ட கர்ப்பமான இது எப்போதோ பிறப்பது -என்று ஹிம்சிப்பதாக பார்த்து கொண்டிரா நிற்கச் செய்தேயும் –
தாயும் தகப்பனும் ஒழிய அசலார் அறியாதபடி இருளிலே வந்து பிறந்து –
அவ்விருளிலே அங்கு நின்றும் திரு ஆய்ப்பாடியிலே போந்த இத்தை
துர்க்கா வசநாதிகளால் அறிந்த கம்சன் உன் விஷயத்திலே மிகவும் சீற்றத்தை உடையனாய் கொண்டு –
கறுப்பு என்கிற இது -கறு -என்று குறைந்து கிடக்கிறது
கறுப்பு -சீற்றம்

கரு நிறம் இத்யாதி
இருள் தான் ஒரு வடிவு கொண்டால் போலே -கருத்த நிறத்தையும்
அக்னி ஜ்வாலை  போலே சிவந்த தலை மயிரையும் உடையாளாய் இருக்கிற பேய்ச்சியை-
நேர் கொடு நேர் சென்றால் அவனை உன்னால் சாதிக்க போகாது –வஞ்சனத்தால் சென்று சதி –

என்று விட்டான் என்பதொரு வார்த்தையும் உண்டு காண் பிறக்கிறபோது –
இவ்வார்த்தை தான் ஸ்ரீ நந்தகோபர் வசுதேவர் பக்கல் கேட்டு வந்து சொன்னார் ஆதல் –
ஸ்ரீ மத் துவரையில் பாவை வழக்கம்-உலக வழக்கம் – இங்கே வந்து பிறந்தது ஆதல் –
மஞ்சு இத்யாதி –
மேகங்கள் தவளும்படியான உயர்த்தியை உடைத்தாய் -மணி மயமான மாடங்களையும் –
அரணாக போம்படியான மதிளையும் உடைத்தான – திரு வெள்ளறையிலே -நிலையார நின்றவனே

அஞ்சுவன் நீ அங்கு நிற்க –
பூதனை வந்து வஞ்சனத்தால் உன்னை நலிய தேடினதும் தன் வசமாய் அன்றிகே கம்ச ப்ரேரிதையாய்-
என்ற வார்த்தை பிறக்கையால்-அவன் இன்னம் யாரை வர விடும் -எது செய்யும் என்று தெரியாது -என்று
பய ஸ்தானமான அவ்விடத்தில் நீ நிற்கிற இதுக்கு நான் அஞ்சா நின்றேன்

அழகனே காப்பிட வாராய் –
ஆன பின்பு  அங்கு நில்லாதே  அதிலோகமான அழகை உடையவனே –
உன் அழகுக்கு த்ர்ஷ்டி தோஷம் வாராதபடியாகக் காப்பிட வாராய்

———————————————————

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 8-7 – –

கள்ளம் இத்யாதி –
கண் வளர்ந்து அருளச் செய்தே -உன்னை நலிவதாக அசூர விசிஷ்டமாய் வந்த கர்த்ரிம சகடத்தையும் –
தவழ்ந்து போகா நிற்கச் செய்தே -உன்னை நலிவதாக ஆசூர விசிஷ்டமாய் நின்ற யமளார்ஜுனங்களையும்
தன்னுடைய ரூபம் கட்டுக் குலைந்து சிதிலமாக விழும்படியாக –
காலால் சகடம் பாய்ந்தான் -என்றும் –
ஊரு கரத்தினோடு முந்திய –  என்றும் சொல்லுகிறபடியே
திருவடிகளாலும் -திருத்துடை -திருத்தோள்களாலும்  -தள்ளிப் பொகட்ட
பிள்ளை அரசே –
இந்த அதிப்ரவர்த்திகளை செய்யா நிற்க செய்தேயும் -பிள்ளைத் தனத்தில் புரை அற்ற இருந்த பெருமை உடையவனே
நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை –
நீ பேயைத் தாயாக நினைத்து முலை உண்ட பின்பு

உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை
அதாவது -இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –
ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை –

ஒளி உடை இத்யாதி –
மாடங்களும் மதிள்களுமான அழகை உடைய திரு வெள்ளறையில் நின்று அருளினவனே –
பள்ளி கொள் போது இதுவாகும் –
நீ கண் வளர்ந்து அருளுகிற போது ஆய்த்து இப்போது
சந்த்யா காலத்து அளவு அன்றிக்கே -மாலை வைகிற்று காண் என்றபடி
பரமனே காப்பிட வாராய் –
ஸௌந்தர்யாதிகளால்  உனக்கு மேற்பட்டார் இல்லாதவனே -உனக்கு ஒரு குறை வாராதபடி
நான் காப்பிட வாராய் –

———————————————

இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 8-

அங்கு கம்பக் கபாலி காண் –
அவ்விடத்தில் கண்டவர்களுக்கு நடுக்கத்தை தர கடவ கபாலத்தை உடைய
துர்க்கை சஞ்சரியா நின்றாள் காண் -ஆதலால் சூத்திர தேவதைகள் உலாவுகிற
அந்திப் பொழுதில் அங்கு நில்லாதே

இன்பம் அதனை உயர்த்தாய் –
உன்னுடைய அவதார குண சேஷ்டித அனுபவத்தால் வந்த சுகத்தை எனக்கு மேன்மேலும் அதிசயிப்பித்தவனே –
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் -என்னக் கடவது இறே
இமையவர்க்கு என்றும் அரியாய் –
தம் தாமுடைய ஞான சக்திகள் கொண்டு உன்னை லபிக்க பார்க்கும் தேவர்களுக்கு என்றும் ஒக்க
துஷ்ப்ராபான் ஆனவனே -இத்தால் கீழ் சொன்ன  நீர்மைக்கு  எதிர்தட்டான மேன்மையை சொல்லுகிறது –

கும்பக் களிறு அட்ட கோவே –
கும்ப மிகு மத யானை -என்கிறபடியே மச்தகத்தினுடைய உயர்த்தியை உடைத்தாய் இருக்கும்
குவலயா பீடத்தை நிரசித்த ஸௌர்யத்தை உடைய ராஜா ஆனவனே
கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே –
உன் பக்கல் என்றும் ஒக்க க்ரூரனாய் இருக்கும் கம்சனுடைய மனசில் கூற்றம் போலே
பயாவஹனாய் கொண்டு தோற்றுமவனே

செம் பொன் மதிள் வெள்ளறையாய் –
செம் பொன் போலே மிகவும் ஸ்பர்ஹநீயமான மதிளை உடைய ஸ்ரீ திரு வெள்ளறையை
வாசஸ்தானமாக உடையவனே
செல்வத்தினால் வளர் பிள்ளாய் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே பலர்க்கும் நியாம்யனாய் வளருகை அன்றிக்கே –
ஒருவர் நியமனத்தில் அடங்காமல் –
வேண்டினபடி செய்து –
வேண்டியதை புசித்து –
செல்வச் செருக்கோடு வளர்கிற பிள்ளை யானவனே

கம்பக் கபாலி காண் அங்கு –
கண்டவர்களுக்கு நடுக்கத்தை விளைக்கும் உக்ரமான மழுவையும் கபாலத்தையும் உடையளான
துர்க்கை சஞ்சரிக்கிற ஸ்தலம் காண் அவ்விடம்
அன்றிக்கே
கபாலி என்று ருத்ரனை சொல்லிற்று ஆகவுமாம்
கடி தோடி காப்பிட வாராய் –
அந்த சூத்திர தேவதைகள் சஞ்சரிக்கிற சந்த்யா காலத்தில் அங்கு நில்லாதே –
இக்காலத்தில் நான் உனக்கு காப்பிடும்படி சடக்கென ஓடி வாராய் –

————————————————-

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-

இருக்கு இத்யாதி –
வேதப் புனித ருக்கை -என்கிறபடியே புருஷ ஸூக்திகள் ஆன ரிக்குகளோடே  கூட
சுத்த ஜலத்தையும் சங்கிலே கொண்டு -உனக்கு ரஷை இடுகைக்காக விலஷணமான
பிராமணர்கள் வந்து நின்றார்கள் -அவர்களைக் கொண்டு ரஷை இடுவித்துக் கொள்ள வேணும் காண்
உங்கள் ஐயரும் அப்படி அன்றோ செய்வது -வாராய் என்ன -அது கேளாமல் கர்வித்து
சந்தியில் நின்று -விளையாடப் புக்கவாறே
தருக்கேல் நம்பி சந்தி நின்று -என்கிறாள்
தீம்பால் பூர்ணம் ஆனவனே -சூத்திர தேவதைகள் சந்நிதி பண்ணும் நால் சந்தியிலே நின்று
கர்வியாதே கொள் -அவர்கள் ரஷை இடுகைக்காக வந்திலை ஆகிலும்
அந்த ஸ்தலம் தன்னிலே நில்லாதே- வாராய்

தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் –
இன்னம் சில நாள் மாத்ரு வசன பரிபாலனம் செய்ய வேணும் காண்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த –
நான் உன்னை அழகியதான ரஷை இட
தேசுடை வெள்ளறை நின்றாய்
விலஷணம் ஆனவர்கள் வர்திக்கையால் வந்த தேஜசை உடைய திரு வெள்ளறையில் நின்று அருளினவனே
உருக்காட்டு அந்தி விளக்கு –
உன் திரு மேனியைக் காட்டும் திரு அந்திக் காப்பு
ஏற்றுவார் ஏற்றி எடுப்பது நிரதிசய போக்யமான திரு மேனி காண்கை புருஷார்த்தமாக இறே
ஆகையால் உருக்காட்டும் என்கிறது
இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் –
இப்பொழுது ஒளியை உடைத்தாம் படி எற்றா நின்றேன் -இத்தை கண்டு அருளும்படி கடுக வாராய் –
திருகாப்பு நான் உன்னைச் சத்த -உருக்காட்டும் அந்தி விளக்கு -இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் -என்று அந்வயம்-

—————————————

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –

போதமர் செல்வக் கொழுந்து –
தனக்கு பிறந்தகமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளாய் –
ஸ்ரீ யாகையாலே -சகல சம்பத் சமஷ்டி பூதையாய் –
பிரதான மகிஷியாய்-
இருந்துள்ள ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பங்கய செல்வி -என்று இறே திரு நாமம் –

புணர் திரு வெள்ளறையானை –
அவள் தாமரைப் பூவை மறந்து -அகலகில்லேன் -என்கிறபடியே
ஷண காலமும் பிரியமாட்டாதே நித்ய சம்ஸ்லேஷம் பண்ணும்படியாய் கொண்டு
ஸ்ரீ திரு வெள்ளறையில் நிற்கிறவனை
கோல் தேடி ஓடும் கொழுந்தது -என்கிறபடியே -கொழுந்தானது ஓன்று -உபக்நத்தை ஒழிய
தரிக்க மாட்டாதால் போலே ஆய்த்து -போதமர் செல்வக் கொழுந்தான இவளும்
திரு வெள்ளறையான் ஆகிற உபக்னத்தோடே புணர்ந்து அல்லது தரிக்க மாட்டாதபடி
உபக்நம்-கொள் கொம்பு – ஆதாரமாய் நிற்கும் மாத்ரமாய் -அதன் மேல் படர்ந்த கொடியே
பிரதானமாய் இருக்கும் போல் ஆய்த்து –
ஸ்ரீ செம்தாமரைக் கண்ணார் அப்ரதானமாய் -இவளே அவ்வூருக்கு பிரதானையாய் இருக்கும்படி –

மாதர்க்கு உயர்ந்த யசோதை –
என்ன நோன்பு நோற்றாள்  கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -என்றும் –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள்-என்றும் சொல்லும்படி இவனைப் பிள்ளையாக பெற்று –
இவனுடைய பால சேஷ்டிதாதிகளான சகல ரசங்களும் அனுபவிக்க பெற்றவள் ஆகையாலே
லோகத்தில் ஸ்திரீகள் எல்லாரிலும் உத்கர்ஷ்டையான ஸ்ரீ யசோதை பிராட்டி –

மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் –
ரூப குண சேஷ்டிதங்கள் எல்லா வற்றாலும் அநவரதம் காப்பிட வேண்டும்படியாய் இருக்கும் தன்னுடைய புத்திரன் ஆனவனை –
புத்திர சிநேகம் எல்லாம் தோற்ற ரஷை இட்ட பாசுரங்களை

வேதப் பயன் இத்யாதி –
பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுகையே வேத தாத்பர்யம் என்று அறிந்து –
கைக்கொள்ள வல்ல ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இத்திருமொழியில் –
பாதப்பயன்   இத்யாதி –
பாட்டுகள் தோறும் பின்னடியில் சொன்ன பிரயோஜனத்தை கைக்கொள்ள வல்ல
பக்திமான்களாய்  உள்ளவர்களுடைய மங்களா சாசன விரோதியாய் உள்ள பாபம் தன்னடையே விட்டு போம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: