ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி-2-6–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை
யசோதை பிராட்டி அவனை திருக் குழல் வாருவதாக உத்யோகித்து அவன் –
ஒட்டேன் -என்று அழுதும் இறங்கி ஓடாமைக்காக –
அவனுடைய பால்யத்துக்கு அனுகுணமாம் படி -அக்காக்காய் குழல் வார வா என்று பலகாலும்
அவன் செவி கேட்க சொல்லி இருந்து
அவனை உகப்பித்து குழல் வாரினபடியை தாம் அனுபவிக்கையில் ஆசை உடையராய் –
பாவன பிரகர்ஷத்தாலே அவளான நிலையை அடைந்து –
தத் காலம் போலே அவனைக் குறித்து பாசுரங்களை பேசி அனுபவித்தாராய் நின்றார் கீழ் –

திருக் குழல் வாரின அநந்தரம் பூ சூட்டுவதாக தேடுகிற அளவிலே
ஜாதி உசிதமாக கன்று மேய்க்கப் போகிற பிள்ளைகளோடு தானும் போவானாக உத்யோகித்து –
கன்றுகள் மேய்த்து மறிக்கிற கோலைத் தா வென்ன அவள் இசைந்து கோலைக் கொடாமல் –
இவனை ஒப்பித்து காண வேணும் -என்னும் கருத்தாலே கோலை வாங்கித் தருகிறேன் என்று இவனை அழுகை மருட்டி –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று பலகாலும் சொன்ன பிரகாரத்தை தத்பாவ யுக்தராய் கொண்டு
அவளைப் போலே தாமும் அவனைக் குறித்து பேசி அந்த ரசத்தை அனுபவிக்கிறார் – இத் திரு மொழியில் –

———————————————

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
காலிப் பின் போவாற் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா 2-6-1-

தாலிக் கொழுந்தை –பனை யினுடைய வெண் குருத்தை பீலி தழையை  பிணைத்து
மயிலினுடைய தோகைகளை சேர்த்து பிறகு  இட்டு -திரு முதுகிலே தொங்க விட்டு
காலி பின் -கன்றுகள் பின்னே ஓர் கோல் கொண்டு வா -என்ற இதுவும்
அக்காக்காய்  விளித்து சொல்லும் பாசுரம் என்னுமது
ஏழாம் பாட்டாலும் கடைப் பாட்டாலும் விளங்கும் –

இவ்விடத்தில் கோலாவது கன்றுகள் மேய்த்து மறிக்கிற கோல் -அதை கொண்டு வா என்ற படி
கடல் வண்ணற்கு -அண்ணற்கு என்று பிரித்தால் ஸ்வாமிக்கு என்று பொருள்
வேலிக் கோல் வெட்டி -வேலிக் கால்களிலே வளர்ந்து நிற்கும் கோல்களை வெட்டி
அன்றிக்கே
வேலி என்று வளைவாய் -வளைந்த கோலை வெட்டி என்னவுமாம்
விளையாடு வில் ஏற்றி -லீலார்த்தமாக வில்லாக பண்ணி
நாண் ஏறிட்டு தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு -ஜாத் உசிதம் ஆகையாலே ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள
ஆமைத் தாலியை தடவிதான கழுத்திலே பூண்டு
அன்றிக்கே
தாலி என்றது -தாளி என்றபடியாய்-கொழுந்து என்றது -அதில் வெண் குருத்தாய் அது வெள்ளி போலே இருக்கையாலே –
அத்தை ஆபரணமாக தெற்றிப் பூண்பர்கள் இறே இடையர் -அத்தை சொல்லிற்றாகவுமாம்
பீலி  இத்யாதி -பிலிப் பிச்சங்களை சேர்த்து திரு முதுகிலே நாற்றி
காலி இத்யாதி -கன்று -காலியின் பின்னே அவற்றை மேய்க்கைகாக போமவனுக்கு
ஒரு கோல் கொண்டு வா கடல் இத்யாதி -கடலோடு ஒத்த நிறத்தை உடைய வடிவை உடையவனுக்கு

———————————————

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா -2 6-2 –

கொங்கும் குடந்தையும் –பரிமளத்தை உடைத்தான திருக் குடந்தையிலும்
கொங்குக் குடந்தை என்கிற வல் ஒற்று மெல் ஒற்றை கிடக்கிறது
சோலை களிலும் ஓடைகளிலும் உண்டான பரிமளமும் -உள்ளுக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருமேனியின் பரிமளமுமாய்க் கொண்டு  ஊர் அடங்கலும் பரிமளமுமாய் கிடக்கும் இத்தனை

கோட்டியூரும் -திருக் கோட்டியூரிலும்
பேரும் -திருப் பேரிலும் எங்கும் -அநுக்தமான திருப் பதிகளிலும் திரிந்து விளையாடும் என் மகன் –
வ்யாபரித்து விளையாடா நிற்கும் என் பிள்ளை உடைய சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு தக்க –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை  பிடிக்கும் பெரிய திருக் கைக்கு தகுதியான
நல் அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா -நல்ல வடிவை உடைத்தான தொரு கோல் கொண்டு வா
அரக்கு இத்யாதி -நிறம் உடைத்தாம் படி அரக்கு வழித்ததொரு கோல் கொண்டு வா

—————————————————–

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

நீங்க -ஓடுகிற வேகத்தாலே இரண்டு அருகும் நீங்கும் படியாக
கறுப்பு இத்யாதி -கறுமை -சீற்றம் -தன் மேல் குரோதத்தை உடையனாய் கொண்டு எதிரிட்டு நின்ற கம்சனை கொன்றவன்
பொறுத்து இத்யாதி -வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த
பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

நெறித்த இத்யாதி -நெறித்து முன்னே நாலா நின்ற குழல்கள் ஆனவை ஓடுகிற விசையாலே
இரண்டு அருகும் நீங்கும் படியாக கன்றுகளுக்கு முன்னே ஓடி
சிறுக் கன்று இத்யாதி -இளம் கன்றுகளை மேய்க்கிறவனுக்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு -ஆசுர ப்ரக்ருதிகளான கம்சாதிகளை அழிய செய்கையாலே தேவர்களுக்கு உபகாரகன் ஆனவனுக்கு

———————————————-

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கொள் கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2 6-4 –

துன்று -நவ ரத்னங்கள் அழுத்தின –
ஓன்று இத்யாதி –
பாண்டவர்களும் நாங்களும் கூடி ஜீவிப்பதில்லை -என்னும் ஓர் அர்த்தமே சொல்லுவானாய் –
கூடி ஜீவிப்பது இல்லையாகிலும் அவர்களுக்கும் ஏதேனும் சில கொடுக்க வேண்டாவோ –என்று
மத்தியஸ்தர் சொன்னால் –அவர்களுக்கு ஒரு கோற்குத்து நிலமும் கொடுப்பது இல்லை -என்னும்
ஒரு வசனமே சொல்லுவானாய் -இருக்கும் அவன் என்கை-
அன்றிக்கே –
ஆஸ்ரித விஷயத்தில் -மித்ரா பாவேன சம்ப்ராப்தம் -இத்யாதிபடியே ஒரு படியாலும்
அவர்களை கைவிடாமை ஆகிற ஒரு அர்த்தமே சொல்லுபவனாய் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -இத்யாதிபடியே -அவர்களுடைய ரஷணத்துக்கு உடலான வசனம்
ஒன்றுமே சொல்லா நிற்ப்பானாய் இருக்கும் அவன் என்று
பகவத் விசேஷணம் ஆகவுமாம்-

துன்று முடியான் –
நவரத்னங்களாலே நெருங்கின அபிஷேகத்தை உடையவன் –
அபிஷிக்த ஷத்ரியாலே நெருங்கி சேவிக்கப் படுமவன் என்னுதல்-
துரியோதனன் பக்கல்-ஏவம் பூதனான துரியோதனன் பக்கலிலே-
சென்று அங்கு பாரதம் கை எறிந்தானுக்கு -இரண்டு தலையும் பொருந்த விடலாமோ என்று
தூதனாய் சென்று -பொருத்தப் பார்த்த இடத்திலும் பொருந்தாமையாலும் -யுத்தத்தில் பொருந்துகையாலும்-
ஆனால் அது தன்னை செய்க என்று பாரத யுத்தத்துக்கு அங்கே கை தட்டிப் போந்தவனுக்கு  -என்னுதல்-
அன்றிக்கே –
ஆனால் அது தன்னை செய்வது என்று இசைந்து போந்து –
பாண்டவர்களுக்காக நின்று -பாரத யுத்தத்திலே கையும் அணியும் வகுத்தவனுக்கு -என்னுதல் –
எறிதல்-இடுதல் ஆகையாலே வேண்டின பொருள் கொள்ளலாம் இறே-

கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா -பசு மேய்க்கையிலும் அவன் விரும்பி இருப்பது-
கன்றுகள் மேக்கை ஆய்த்து-அதுக்கு தகுதியை இருப்பதோர் கோல் கொண்டு கோல் கொண்டு வா-
கடல் இத்யாதி -கடலோடு ஒத்த நிறத்தை உடைத்தான வடிவை உடையவனுக்கு –

——————————————

சீர் ஓன்று தூதாய் துரியோதனன் பக்கல்
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பாரதற்க்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு ஓர்    கோல் கொண்டு வா
தேவப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-5 –

சீர் ஓன்று தூதாய் -இன்னார் தூதன் என நின்றான் -என்கிறபடியே-
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஆகிற குணம் தனக்கு சேருகைக்கு உறுப்பான தூத கர்த்யத்திலே அதிகரித்து-
துரியோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டி-அதார்மிகனாய் -பந்துக்களை அடர்த்து-
பலத்தாலே ஜீவிக்க இருக்கிற துரியோதனன் பக்கலிலே சென்று -உங்களுக்கு உள்ள அங்கங்களை-
விபஜித்து இரண்டு தலையும் பொருந்தி ஜீவித்து இருங்கோள் -என்று முந்துற சொன்ன அளவில் –
அவன் -அது செய்யேன் -என்றவாறே –
ஆனால் பத்தூர் தன்னை கொடுக்கப் பார்ப்பது -என்ன – -அதுவும் செய்யேன் -என்றவாறே –
ஓரூர் தன்னையாலும் கொடு -என்றவாறே அவன் அதுக்கும் இசையாமல் –
அவர்களுக்கு தர்மம் உண்டு -தத் பலமான ஸ்வர்க்காதி லோகங்கள் உண்டு –
அத்தை அனுபவிக்க கடவர்கள் -எங்களுக்கு இத்தனையும் அன்றோ உள்ளது –
அதில் ஒன்றும் கொடுப்பது இல்லை -என்று வெட்டிதாக வார்த்தை சொல்ல –

பெறாத வுரோடத்தால் -ஓரூர் தானும் பெறாத ரோஷத்தாலே –
ஆனால் வீர போக்யை அன்றோ வசுந்தரை -யுத்தத்தை பண்ணி ஜெயித்தவர்கள் ஒருவர்
பூமியை ஆளுங்கோள் என்ன -அவன் அதுக்கு பொருந்தினவாறே
பாரொன்றி-திரு உள்ளம் உகந்து -பூமியிலே பரந்தகால் பாவி நின்று –
பாரதம் கை செய்து -பாரத யுத்தத்திலே பாண்டவர்களுக்குகாக நின்று கையும் அணியும் வகுத்து –
பார்த்தற்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்ககு -ஆயுதம் எடுக்க ஒண்ணாமையாலே
சாரத்யத்திலே அதிக்ரித்யனாய் -அர்ஜுனனை ரதியாக்கி -பிரதிபஷத்தை உருளி காலாலே
நெருக்கைக்கு உறுப்பாகையாலே-அத்வீதியமான தேரை நடத்தினவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –
தேவ பிரானுக்கு -இந் நீர்மைக்கு எதிர்தட்டாம் படி நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையை உடையவனுக்கு –
இத்தால் மனுஷ்யத்வே பரத்வத்தை  சொன்னபடி –

———————————

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –
பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தை கிடந்தாற்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6 6-

நீலம் கடலுள் -திரு மேனியின் நிழலீட்டாலே கறுத்து இரா நின்ற சமுத்ரத்தில்
நெடு காலம் -பிரளயம் வரும் அளவும்
ஆலத்து இலையான் -என்னுமத்தில் அத்தும் -அரவின் அணை மேலான் -என்னுமத்தில் இன்-இரண்டும் சாரியை –
ஆலத்து இலையான் -ஜகத் பிரளயம் வந்தபோது வடதளத்திலே கண் வளர்ந்து அருளினவன்
அரவின் அணை மேலான் -திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிறவன்
சகஸ்ரவதனோ தேவ பணாமணி விராஜித சேவ வடவர்ஷோபூ தனந்தோத்புதோ ரூபவான் -என்கிறபடியே
வடவர்ஷம் ஆனாலும் -திரு அனந்தாழ்வான் இறே
ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் -என்கையாலே அந்த அர்த்தமும் தோற்றுகிறது –

நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் -ஷீரம் ஆகையாலே வெளுத்த நிறமாய் இருக்கச் செய்தேயும் –
திருமேனியின் நிழலீட்டாலே நீலமான நிறத்தை உடைத்தாய் இருக்கிற கடலிலே
பிரளய அவதியாக கண் வளர்ந்து அருளினவன் –
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் –
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -என்கையாலே நீலக் கடல் என்று இந்த
லவன சமுத்ரம் தன்னை சொல்லிற்று  ஆகவுமாம்
அரவின் அணை மேலானாய் கொண்டு நீலக் கடலுள் நெடும்காலம் கண் வளர்ந்தான் என்று
மேலே அன்வயிக்க்கவுமாம்

பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த -இந்திரன் வந்து என்னுடைய புத்ரனான இவனை
ரஷித்து அருள வேணும் -என்று காட்டிக் கொடுக்கையாலே -பால்ய வயசிலே அர்ஜுனனுக்கு
அருள் செய்த பின்பு -இவன் -தன்னளவிலே ஸ்நேஹித்து வசவர்த்தியாய் போருகையாலும் –
எல்லாரளவிலும் போல் அன்றியே இவன் அளவில் தான் பஷபதித்து போருகையாலும்
அவ்வருள் மேன்மேல் என வளர்ந்து சென்ற இத்தனை இறே

கோலப் பிரானுக்கு -அழகிய உபகாரகனுக்கு என்னுதல் –
அத்வீதியமான விக்ரஹத்தை இவனுக்கு சஷூர் விஷயமாக்கி முன் நின்று
ரஷித்த உபகாரத்தை சொல்லுகிறது ஆதல் –

குடந்தை கிடந்தாற்க்கு -குடந்தையன் கோவலன் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதார சௌலப்யம் எல்லாம் தோற்றும்படி இறே ஸ்ரீ திருக் குடந்தையில்
கண் வளர்ந்து அருளுவது -அங்கும் கோலப் பிரான்  ஆனால் போலே இங்கும்
ஏரார் கோலம் திகழ இறே சாய்ந்து அருளுவது –

—————————————-

பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-7 –

பொன் -சோலைகள் சுனைகள் முதலியவற்றால் உண்டான பொலிவை உடைத்தாய் –
பொன் திகள் இத்யாதி –
ஸூபகஸ் சித்ரகூடோயம் கிரிராஜோபமோகிரி யச்மின்வசதி காகுஸ்த குபோ இவநன்தனே-என்கிறபடியே –
திரு அயோத்தியில் இருப்பிலும்  காட்டிலும் உகந்து அருளி இருக்கும்படி –
சோலைகளும் சுனைகளும் பாறைகளும் அருவிகளும் -முதலானவற்றால் வந்த
பொலிவை உடைத்தாய் விளங்கா நின்றுள்ள சித்ர கூட பார்ஸ்வத்திலே எழுந்து அருளி செய்தே இறே
காகம் வந்து  அபராதம் பண்ணிற்று -பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு
பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே –
பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்க செய்தே –
இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து
காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு
ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து
திருமேனியிலே புண் படுத்த -அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து
ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே –
ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம்
அர்த்தமாக  வந்து சரணம் புக -அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து
பிராணனோடு   போக விட்ட கதையை  சொல்லுகிறது

உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட என்று –
அதாவது -விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில்
ஒரு கண்ணைப் பறித்து விட்டவன் -என்கை-

அக்கற்றை குழலன் கடியன் -அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்-
குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்

விரைந்து இத்யாதி -ஆன பின்பு சொன்னது செய்யாமையாலே உன்னை சீறி
மற்றைக் கண்ணையும் பரியாதபடியாக விரைந்து  கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு -நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனாய் –
ஸ்வா தந்த்ர்யத்தில் பூர்ணனானவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –

——————————————

மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழத்
தன்னிகர் ஒன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைதாற்க்கு  ஓர் கோல் கொண்டு வா -2 6-8 –

மின் இத்யாதி -மின்னொடு ஒத்த இடையை உடையாள் ஆகையாலே
விரஹாசஹை அல்லாத -மிருது பிரக்ருதியாய்-அயோநிஜை ஆகையாலே
கர்ப்பவாச க்லேசமும் உட்பட அறியாத பிராட்டிகாக
இலங்கையர்  மன்னன் -இப்படி இருக்கிறவளைப் பிரித்துக் கொண்டு போய் சிறை வைத்தவனாய் –
இலங்கையில் உள்ளவர்களுக்கு எல்லாம் நிர்வாஹனாய் இருக்கிற ராவணனுடைய
மணி முடி பத்தும் உடன் வீழ -ரத்நாதிகளாலே அலங்க்ருதமான தலைகளை ஒரொன்றாக  அறுத்த
இடத்தில் -அவன் கொண்ட வர பலத்தாலே மீளவும் மீளவும் கிளருகையாலே -பத்தும் சேர
ஒரு காலே அற்று விழும்படியாக

தன்னிகர் இத்யாதி -தனக்கு உபமானம் ஆவது ஒன்றும் இல்லாதபடி இருக்கும் திரு வில்லை –
கால் வளையும் படி பண்ணின-வளைத்து இட்ட -வளைத்து எய்த -என்றபடி
மின்னு முடியற்க்கு -இப்படி ராவண வதம் பண்ணுகையாலே -விளங்கா நின்றுள்ள
வீர அபிஷேகத்தை உடையவனாய் நின்றவனுக்கு
வேலை அடைதாற்க்கு -சுரி குழல் கனி வாய் -இத்யாதி படியே
வேலை அடைத்ததும் பிராட்டிக்காக இறே

—————————————

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –

தென் இத்யாதி -துர்க்க த்ரய யுக்தம் ஆகையாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாதபடி இருக்கும் –
கட்டளைப் பட்ட இலங்கைக்கு நிர்வாஹனான ராவணனுடைய
தென் என்று அழகாய் -கட்டளைப் பட்டு இருக்கையை சொல்லுகிறது

சிரம் தோள் துணி செய்து -தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே அழிவு இல்லையாக
நினைத்து இருந்த -தலைகளையும் தோள்களையும் துணித்து பொகட்டு

மின் இத்யாதி -ஒளிவிடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு –
அந்தரிஷகத ஸ்ரி ஸ்ரீ மான் -என்கிறபடியே இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே
ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் -ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்-
ஆகையாலே -நம்பி என்கிறது

என் இலங்கு இத்யாதி -என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த
மின் இலங்காறர்க்கு-ஒளிவிடா நின்ற ஒப்பனை உடையாருக்கு- அலங்காரம்-ஒப்பனை
அன்றிகே
மின் இலங்கு ஆரர்க்கு-என்ற பாடம் ஆன போது-மின் போலே
விளங்கா நின்றுள்ள ஹாரத்தை உடையவனுக்கு என்று பொருளாக கடவது

வேம்கட வாணர்க்கு – மிடைந்த வெழ் மரங்களும் அடங்க வெய்து வேம்கடம் அடைந்த மால் என்கிறபடியே
அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

——————————————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களை பெற்று மகிழ்வர் இவ்வையத்தே -2 6-10 –

நம்பிக்கு -தீம்பில் கை வளர்ந்த இவனுக்கு
மிக்காள்-கண்ணனுடைய சைசவ சேஷ்டிதங்களை அனுபவிக்க பெறாத
தேவகி பிராட்டியில் காட்டில் தத் அனுபவத்தால் உண்டான மேன்மையை உடையளான யசோதை பிராட்டி
மக்களை -பகவத் அபிமுகர்களான சிஷ்ய புத்ரர்களை
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று  -கன்றுகள் மேய்க்க போம்படி கோல் தேடி தா என்று –
அழுகிறவனை அழுகை மருட்டுகைக்காக சொன்ன பாசுரம் ஆய்த்து இது –

கீழ் -அக்காக்காய் குழல் வார வா -என்றதோ பாதி இறே -இங்கு அக்காக்காய் கோல் கொண்டு வா -என்றதும்-
மிக்காள் உரைத்த சொல் -இருவரும் ஒக்க நின்பு நோற்க செய்தே -இவனைப் பெற்ற மாத்ரமேயாய்
இவனுடைய பால சேஷ்டிதங்கள் ஒன்றும் அனுபவிக்க பெறாமையாலே –
திருவிலேன் ஒன்றும் பெற்று இலேன் -என்ற ஸ்ரீ தேவகி பிராட்டியை போல் அன்றியே –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள் -என்னும்படி இவ் அவதாரத்தில் உள்ள ரசம் எல்லாம்
அனுபவிக்க பெற்ற பாக்யாதிகையான ஸ்ரீ யசோதை பிராட்டி சொன்ன சொல்லை –
வில்லிபுத்தூர் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் —
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் -அவளுடைய பாவ பந்தத்தை உடையவராய்
அவள் சொன்னால் போலே சொன்னதாய் -சர்வாதிகாரமான திராவிடமாய் இருந்துள்ள
பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக வல்லவர்கள் –
மக்கள் இத்யாதி –
பகவத் ஞான பிரேம பரி பூர்ணரான சிஷ்ய புத்ரர்களைப் பெற்று –
அவர்களும் தாங்களுமாய்க்  கொண்டு -இந்த சம்சார பூமியிலே ஆனந்திகளாய் இருக்கப் பெறுவர்-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: