அவதாரிகை –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்கிறபடியே அவதார சமயமே தொடங்கி-
இவ்வதார சேஷ்டித ரசம் எல்லாம் தானே முற்றூட்டாக அனுபவித்த யசோதை பிராட்டி –
அவனுடைய அவதாரத்தின் மெய்ப்பாட்டால் வந்த -பால்ய அனுகுணமாக அவனை அவள்
மஞ்சனம் ஆட நீ வாராய் -என்று அர்த்தித்து –
அவன் அதுக்கு இசையாமையாலே அநேக பிரகாரேன அனுசரித்தி உடன்படுத்தி மஞ்சனமாட்டித் தலைக் கட்டின
அநந்தரம்
அவனுக்கு திருக் குழல் வாருவதாக உத்யோகித்து -அவன் பிணங்கி ஓடாமல் இசைந்து நிற்க்கைக்காக
லோகத்தில் சிறுப் பிள்ளைகளை குழல் வாருவார் -அவர்களை வசப்படுதுக்கைகாக மருட்டி சொல்லுமா போலே
இவனுடைய பால்ய அனுகுணமாக -அக்காக்காய் குழல் வார வா -என்று பலகாலும் இவன் செவி கேட்கச் சொல்லி
சீராட்டிக் கொண்டு இருந்து -திருக் குழல் வாரின பிரகாரத்தையும் -தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
பாவன பிரகர்ஷத்தாலே தத் அவஸ்தா பன்னராய் கொண்டு -தத்காலம் போலே தாம் அவனைக் குறித்து
அப் பாசுரங்களைச் சொல்லி -திருக் குழல் வாருகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –
————————
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன்குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –
பின்னை மணாளனை -நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனானவனை –
இவ் அவதாரத்துக்கு பிரதான மகிஷி இவளே இறே
மேன்மைக்கு ஸ்ரீ யபதி போலே இறே நீர்மைக்கு இவளுக்கு வல்லபன் என்கிறதும் –
பேரில் கிடந்தானை -அதுக்கு மேலே ஒரு நீர்மை இறே இது
அவதார சௌலப்யம் போல் அன்று இறே அர்ச்சாவதார சௌலப்யம்
கொம்பினார் பின்னை கூடுவதற்கு ஏறு கொன்றான் -தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் –
என்கையாலே பின்னைக்கு மணாளன் ஆனதுக்கும் பேரில் கிடந்ததுக்கும் ஒரு சேர்த்தி உண்டு இறே –
நப்பின்னை பிராட்டியை திருமணம் புணர்ந்து -பின்னை அவளோடு கூட வந்து
கண் வளர்ந்து அருளிற்று திருப் பேரிலே போலே காணும்
முன்னை அமரர் இத்யாதி -கீழ் சொன்ன நீர்மைக்கு எதிர் தட்டான மேன்மையை சொல்லுகிறது –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே பகவத் அனுபவத்துக்கு முற்பாடரான நித்ய சூரிகளுக்கு
சேஷத்வேன பிரதானனாய் அவர்களுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் தானே ஹேதுவானவனை
என்னையும் இத்யாதி -தன்னைப் பரிந்து அன்றி உளன் ஆகாத என்னையும் –
ஏழாட்காலும் பழிப்பு இல்லாத எங்கள் குடியில் உள்ள எல்லோரையும் ஸ்வரூப அனுரூபமான அடிமையைக் கொண்ட
மன்னனை -ராஜாவானவனை
வந்து குழல் வாராய் அக்காக்காய் -இது சிறு பிள்ளைகளை குழல் வாருவார் சீராட்டாக சொல்லும் பாசுரம் –
மேலில்- உற்றன பேசி நீ யோடித் திரியாதே -என்றும் –
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்சோறு முண்டற்க்கு வேண்டி நீ யோடித் திரியாதே -என்றும்
அருளி செய்தமையால் -காகத்தை நோக்கி சொல்லும் பாசுரம் என்று கொள்ள வேணும் –
அக்காக்காய் எனபது வ்யவஹாரிக சொல்லு
மாதவன் இத்யாதி -நீர்மைக்கு பின்னை மணாளனைப் போலே மேன்மைக்கு ஸ்ரீ யபதி
யானவனுடைய குழல் வாராய் வந்து அக்காக்காய்-
—————————————————
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் -முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த
பூதனை உடைய முலையை -தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் –
இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் -பிரதி கூலித்து
கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –
மாயச் சகடும் மருதும் இறுத்தவன் -அதுக்கு பின்பு கண் வளர்ந்து அருளா நிற்க செய்தே –
அசூரா விஷ்டமாய் -நலிய வந்த க்ரித்ரிமமான சகடத்தையும் -தவழ்ந்து போகா நிற்க செய்தே –
நடுவே வந்து நலிவதாக நின்ற யமளார்ஜுனங்களையும் காலாலும் துடையாலும் தள்ளி முறித்து பொகட்டவன்
காயா மலர் வண்ணன்-ஆத்ம குணங்கள் மிகை யாம்படி அப்போது அலர்ந்த செவ்வி காயம் பூ போலே யாய் –
அனுகூலரை எழுத்து இடுவித்து கொள்ளும் வடிவு அழகு படைத்தவன் –
கண்ணன் -விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –
கரும் குழல் -குழலுக்கு ஒரு போலி காணாமையாலே வெறும் கரும் குழல் என்கிறாள் –
தூய்தாக வந்து குழல் வாராய் -நன்றாக வந்து குழல் வாராய் –
தூய்தாக வாருகையாவது -அகலகலாக செப்பம் கிடக்கும்படி வாருகை
தூ மணி வண்ணன் -பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவன்
காயாம்பூ போலே போது செய்யாதே ஒரு படி பட்டு இருக்கும் நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் என்கை–
————————————–
திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரையன் உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 3-
திரை -கயிறுகளால் பின்னப் பட்டு பெரிதாய் இருந்துள்ள –
அண்ணல் -சர்வ ஸ்வாமி யாய்
திண்ணக் கலத்து -சிக்கென்ற கலத்திலே-கோல்களாலே மாறி அடித்தாலும் ஈடுபடாத களம் என்கை –
திரை உறி மேல் வைத்த -பெரிய உறி மேல் வைத்த –
திரை உறி யாவது -கயிற்றை பின்னலாக கொண்டு சமைத்த பெரிய உறி –
வெண்ணெய் விழுங்கி -இப்படி சேமித்து வைத்த வெண்ணெயை வைத்த குறி அழியாமல் –
தைவம் கொண்டதோ -என்னும்படி விழுங்கி –
விரையன் உறங்கிடும் -உடையவர்கள் காண்பதற்கு முன்பே கடுகப் போந்து –
அறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நிற்கும் –
வெண்ணெய் விழுங்குகிற போதை பதற்றிலும் காட்டில் பதறி உறங்கப் புக்கால் -கண் உறங்குமோ –
குறு விழிக் கொண்டு -வந்தார் போனார் நிழல் ஆட்டம் பார்த்து கொண்டு -கிடக்கையாலே –
இது என்ன பொய் உறக்கம் -என்று பிடித்துக் கொள்ளும் அவர்கள் இறே-
அண்ணல் -ஸ்வாமி -இது நவநீத ஸௌர்ய வர்த்தாந்தத்தாலே அனுகூலரானவர்களை எழுதிக் கொள்ளும் அவன் –
அமரர் பெருமானை -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
மேன்மைக்கு இவ்வருக்கு சொல்லலாவது இல்லை இறே –
ஆயர் தம் கண்ணனை -அம் மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை சொல்லுகிறது –
இடக்கை வலக்கை அறியாத இடையருக்கு நிர்வாஹன் ஆனவனை
கண்ணன் -அவர்களுக்கு கண்ணன் ஆனவன் என்னவுமாம்
கார் முகில் வண்ணன் -வர்ஷு கவலாஹம் போலே இருக்கிற வடிவை உடையவன் –
இத்தால் அனுபவிப்பாருக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையவன் என்கை –
குழல் வாராய்-
—————————————–
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானை தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய்
பே முலை உண்டான் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 4- –
பொதுக்கோ -சடக்கென
பள்ளத்தில் இத்யாதி -நீர் தாழ்வுகளிலே இரை எடுத்து திரியா நிற்கும் -பகமாகிற
பஷியின் வடிவைக் கொண்டு
கள்ள அசுரன் -க்ரித்ரமான அசுரன் -தன்னுடைய ரூபத்தை மறைத்து பகரூபம் கொண்டு வந்தது –
க்ரித்ரமனாகையாலே இறே
வருவானை தான் கண்டு -இப்படி பிரசன்னனாய் கொண்டு தன்னை நலிய வருகிறவனை –
அந்ய பரனாய் கன்று மேய்த்து நின்று விளையாடுகிற தான் கண்டு
புள் இது என்று -அசுரன் என்று இத்தை பெருக்க நினையாதே -ஒரு பஷி என்று ஆபாசமாக நினைத்து
பொதுக்கோ வாய் கீண்டிட்ட -தன்னை நலிவதாக அங்காந்து வருகிற வாயை அதினுடைய நினைவுக்கு
இடம் அறும்படி சடக்கென கிழித்து பொகட்ட
பொதுக்கோ -என்கிறது பொதுக்கென என்றபடி -அதாவது சடக்கென என்கை –
பிள்ளையை -பிள்ளைத் தனத்தில் புரை இல்லாதவனை
இத்தனையும் செய்யா நிற்க செய்தே இது தானும் விளையாட்டாய் இருந்தபடி –
பேய் முலை உண்டான் -அவள் முலை உண்கிற இடத்தில் பிள்ளைத் தனத்தில் புரை
இல்லாதாப் போலே ஆயத்து இதுவும் –
———————————————–
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன குழல் வாராய் அக்காக்காய் – 2-5 5- –
கற்றினம் மேய்த்து-கன்றுகளினுடைய திரளை மேய்த்து
பால்யத்தில் கன்றுகள் மேய்த்து பின்பு இறே பசுக்களோ மேய்ப்பது
ஆகையால் இவனும் கன்றுகள் மேய்க்கத் தொடங்கினான் ஆயத்து –
கனிக்கு ஒரு கன்றினைப்பற்றி எறிந்த -இப்படி கன்றுகள் மேய்த்து திரியா நிற்கிற இடத்திலே –
தனை நலிகைக்காக கன்றான வடிவைக் கொண்டும் –
விளாவான வடிவைக் கொண்டும் -வந்து நின்ற சில அசுரர்களை
விளம் கனிக்கு இளம்கன்று விசிறி -என்கிறபடியே முள்ளாலே முள்ளைக் கலையுமா போலே
அசுரமயமான நின்ற தொரு கன்றை காலைப் பிடித்து தூக்கி எடுத்து -அந்த விளம் கனி
உதிருகைக்காக எறிந்து -இரண்டையும் சேர முடித்து பொகட்ட பரமன் திருமுடி –
தன்னை நலிய வந்த இவர்கள் கையில் தான் படாதே அவற்றை
நிரஸித்து ஜகத்துக்கு பரம சேஷியான தன்னை நோக்கித் தந்த -உபகாரகனுடைய திருமுடியை –
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே -உன்னுடைய ஜாதி உசிதமானவற்றை சொல்லிக் கொண்டு
ஓர் இடத்திலே நிலை இன்றிக்கே நீ பறந்து திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் -நாள்தோறும் வந்து குழல் வாராய்
ஆழியான் -திரு ஆழியை உடையவன் -அவிதேயரை நியமிக்க வல்ல பரிகரம் உடையவன் என்கை –
———————————————–
கிழக்கில் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்ட ஆழி அதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானை
குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய்
கோவிந்தன் தண் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –
கிழக்கில் குடி மன்னர்-ப்ராக்ஜ்யோதிஷா புரவாசிகளாய் நரகாசுர ப்ரப்ப்ரிதிகளான ராஜாக்களை
கேடு இலாதாரை -வர பல புஜ பலங்கள் உண்டாகையாலே நமக்கு ஒரு கேடு இல்லை என்று நினைத்தவர்களை
அழிப்பான் நினைந்திட்டு -ஆஸ்ரிதரான இந்த்ராதிகளை நலிகையாலே அழிக்கத் திரு உள்ளம் பற்றி –
அவ்வாழி அதனால் -கருதுமிடம் பொருதுமதாய்-அற முயலாழி-என்கிறபடியே தன்னிலும் காட்டில் –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் மிகவும் முயலா நிற்கும் ஏற்றத்தை உடைய திரு வாழியாலே
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானை -இமைத்து விழிக்கும் முன்னே கிழங்கு எடுத்து பொகட்டானை
அதவா
கேடிலாதாரை அழிப்பான் நினைந்திட்டு -கிழக்கில் முடி மன்னர் -விழிக்கும் அளவில் -ஆழி அதனால் வேர் அறுத்தானை –
என்று அந்வயம் ஆக்கி –
நமக்கு ரஷகனாக ஈஸ்வரன் உண்டு -என்று இருக்கையாலே -தங்களுக்கு ஒரு கேடு இன்றிக்கே இருக்கும்
இந்த்ராதிகளை அடர்த்து அழிப்பதாக கோலின ப்ராக்ஜ்யோதிஷா புரவாசிகளான நரக ப்ரபர்த்ய
அசுர ராஜக்களானவர்களை அழிக்க பார்க்கிற அளவிலே -அச்செய்தி இந்த்ரன் வந்து விண்ணப்பம் செய்த அநந்தரம்
பெரிய திருவடியை மேற்கொண்டு நரக புரத்திலே எழுந்து அருளி –
கருதுமிடம் பொருத வல்ல திரு ஆழியாலே அந்த நரகாதிகளை மறு கிளை உண்டாகாதபடி அறுத்துப் பொகட்டவனை
என்னவுமாம்
குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய் -திருக் குழல்களுக்கு அழகு பிறக்கும்படி குழல் வாராய்
கோவிந்தன் -பர ரஷணத்தில் தீர்ந்த வியாபாரங்களை உடையவன்
தண் குழல்-ஸ்லாக்கியமான குழல் –
———————————————
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்தஅமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
பிண்டத் திரளையும் -பித்ருக்கள் முதலானரை உத்தேசித்து இடும் பிண்டங்களாகிற திரளையும் –
பேய்க்கிட்ட நீர் சோறும் -பிசாசங்களை உத்தேசித்து இட்ட ஜலசஹிதமான சோறுகளையும்
உண்டற்கு வேண்டி -உண்கைக்கு ஆசைப்பட்டு
நீ ஓடித் திரியாதே -அது கிட்டும் இடம் தேடி நீ தட்டித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் -நித்ய விபூதியிலே ஸூரிகளுக்கு தாரகாதிகள் எல்லாம்
தானேயாய் இருக்கும் பெரியவனுடைய
அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் -அழகு பொருந்தி இருந்துள்ள வண்டு போலே
சுருண்டு இருண்டு இருக்கிற குழல்களை வாராய்
மாயவன் இத்யாதி -ஆச்சர்ய சக்தி உக்தன் ஆனவனுடைய குழலை வந்து வாராய் –
———————————————–
உந்தி எழுந்த வுருவமலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன் குழல்வாராய் அக்காக்காய் -2 5-8 – –
புளி குறந்து -புழுகு -புலுகு- வார்த்து
அட்டி-உறைக்கத் தடவி
உந்தி இத்யாதி -திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே
உருவம்-அழகு –
சந்தம் இத்யாதி -ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி
ஞான சக்திகளால் வந்த வைலஷன்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்
சந்தம் -அழகு
அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸாய் வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்
கொந்தக் குழலை குறந்து புளி அட்டி -திருமஞ்சனம் செய்கிற போது புளி குறந்து அட்டித்
திருமஞ்சனம் செய்கையாலே நெறிந்து இருக்கிற குழலை
கொந்தம்-நெறிப்பு
புளி அட்டி கொந்தக் குழல் என்றது -புளி அட்டின கொந்தக் குழல் என்றபடி –
திருக் குழல் வாருகிற காலத்தில் இது கூடாமையாலே திரு மஞ்சனம் காலத்தில் செய்தது என்னுமிடம் நிச்சிதம் இறே –
எண்ணெய்ப் புளிப் பழம் கொண்டு இறே திருமஞ்சனம் செய்தது
அதவா
கொந்தக் குழலை -நெறிந்து இருக்கிற திருக் குழலை
குறந்து புளி அட்டி -அகங்களில் வளர்ந்தது அதனால் ச்வைரமாக குறந்தது
புளி உண்டு -புழுகு-அதை தான் புலுகு என்பார்கள் -அத்தை வார்த்தது என்னவுமாம்
குறந்தது புளி என்கிற இடத்தில் -துகரம் கடை குறைத்தலாய் கிடக்கிறது
ஒண் சங்கதை வாள் போலே
புழுகட்டி-என்று பாடமாகில் புழுகை குறந்தட்டிஎன்று பொருளாக கடவது
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் -திருக் குழலினுடைய ஸ்லாக்யாத அனுகுணமாக
தந்தத்தால் பண்ணின சீப்பைக் கொண்டு குழல் வாராய்
தாமோதரன் இத்யாதி -அபலையான எனக்கு பிடித்துக் கட்டலாம்படி
சுலபனாய் இருக்கிறவனுடைய குழல் வாராய்-
—————————————–
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ வணை மேல் வைத்துப்
பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்
பேர் ஆயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய் 2-5 9- – –
பொன்னின் -என்கிற இடத்தில் -இன் -என்னுமது சாரியை -பொன் முடி -அழகிய திரு முடி –
மன்னன் இத்யாதி -புலன் கொள் மாணய்-என்கிறபடியே -சர்வேந்திரிய அபஹார ஷமமானவாமன ரூபமும் –
பொங்கு இலங்கு புரி நூலும் -இத்யாதிப் படியே அவ் அழகுக்கு மேலே கிளர்ந்து விளங்கா நின்றுள்ள யக்ஜோபவீதமும்
க்ருஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷமும் கொண்டு -மகா பலி யக்ஜா வாடத்திலே-
வல்லார் ஆடினாப் போலே நடந்து சென்று நின்ற நிலையும்
கொள்வான் நான் -இத்யாதிப் படியே சொன்ன -முக்த ஜல்பத்தையும் கண்டு அசுர ராஜனான
மகா பலி யினுடைய ஸ்திரீகள் ஆனவர்கள் ப்ரீதைகள் ஆம்படி முந்துற நின்று அர்த்தித்து
கையிலே நீர் விழுந்த சமந்தரம்-முன்பே தன்னதாய் இருக்கிற இந்த லோகத்தை எல்லாம்
இப்போது அபூர்வமாக பெற்றால் போலே அளந்து கொண்டவனுடைய
பொன்னின் முடியினை -அழகிய திரு முடியை
பொன் -அழகு இன் -சாரியை
பூ அணை மேல் வைத்து -திரு முடியை மார்த்தவத்துக்கு ஈடாக பூ போலே மிருதுவான அணை மேல் வைத்து
பின்னே இருந்து குழல் வாராய் -வாருகைக்கு அனுகுணமாக பின்னே இருந்து குழல் வாராய்
பேர் ஆயிரத்தான் -தன் வைலஷன்யத்தை கண்டு ஸ்துதிக்கும் அவர்களுக்கு இழிந்த இடம் எல்லாம்
துறையாம்படி -தேவோனாம் சஹஸ்ரவான் -என்கிறபடியே அநேகம் திருநாமங்களை உடையவன் உடைய
குழல் வாராய்
—————————————————-
நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –
கண்டார் பழியாமே யக்காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாட குருகா வினை தானே -2 5-10 – –
வினை தான் -வினை என்று பேர் பெற்றவை எல்லாம்
கண்டார் இத்யாதி -திரு மஞ்சனம் செய்து குழல் வாராது இருந்தால் கண்டவர்கள் பழிக்கக் கூடும்
அவர்கள் பழியாத படியாக –
அக்காக்காய் -கார்வண்ணன் இத்யாதி -போலே ச்யாமளமான வடிவை உடையவனுடைய
இருட்சியாலும் சுருட்சியாலும் வண்டு போல் இருக்கிற திருக் குழலை வாரும்படியாக வா என்று சொன்ன
யசோதை பிராட்டி யினுடைய சொல்லை
விண் தோய் இத்யாதி -ஆகாசத்தில் மிகவும் உயர்ந்த மதிளை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு
நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த இத்தை
கொண்டாடி இத்யாதி -சப்தார்த்த வைலஷண்யத்தை கொண்டாடி -ப்ரீதி ப்ரேரிதராய் கொண்டு பாட
வினை என்று பேர் பெற்றவை அடங்கலும் தானே அருகு வந்து கிட்டா –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply